இலங்கை: வெலிக்கடை சிறைச்சாலை கைதியின் மரணம் பாரதூரமான கேள்விகளை எழுப்புகிறது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

முன்னாள் பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரளவின் கொலை தொடர்பாக மரண தண்டனை விதிக்கப்பட்ட 12 பேரில் ஒருவரான சுபுன் தரிந்து சுனில் ரத்னவின் மரணத்தைச் சுற்றி பாரதூரமான சந்தேகங்கள் எழுந்துள்ளன.

சுபுன் தரிந்து [Photo by Facebook/Supun Tharindu]

சிறைச்சாலை வட்டாரங்களின் தகவலின்படி, மே 11 அன்று கொழும்பிலுள்ள வெலிக்கடை சிறைச்சாலைக் கட்டிடத்தின் மேல்தளத்திலிருந்து கீழே விழுந்ததில் அந்தக் கைதி படுகாயமடைந்தார். அவர் உடனடியாக சிறைச்சாலை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், அனுமதிக்கப்படும்போதே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

பிரேதப் பரிசோதனையில் 'வெளிப்படைத் தீர்ப்பு' வழங்கப்பட்டிருந்தாலும், மேலதிக விசாரணைக்காக உடல் மாதிரிகள் அரசாங்க பகுப்பாய்வுத் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. சிறைச்சாலைகள் ஆணையாளர் (நடவடிக்கைகள், புலனாய்வு மற்றும் ஊடகம்) ஏ.சி. கஜநாயகவை மேற்கோள்காட்டி சண்டே டைம்ஸ் வெளியிட்ட செய்தியின்படி, நஞ்சூட்டப்பட்டிருக்கக்கூடிய சாத்தியக்கூறு உட்பட விடயங்களை ஆராய மேலதிக இரசாயனப் பகுப்பாய்வுக்காக உடல் மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளன. இறுதி அறிக்கை அடுத்த வாரத்தின் தொடக்கத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முழுமையான அறிக்கை இன்னும் சமர்ப்பிக்கப்படாத நிலையிலும், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு. வூட்லர், இது 'தற்கொலை எனப் பொலிஸார் உறுதியாக சந்தேகிக்கின்றனர்' என்று சண்டே டைம்ஸ் பத்திரிகைக்குத் தெரிவித்தார். சுபுன் கட்டிடத்திலிருந்து குதித்ததைத் தாங்கள் கண்டதாகக் கூறிய ஏனைய கைதிகளின் வாக்குமூலங்களையும் அவர் சுட்டிக்காட்டினார். விசாரணையாளர்கள் மோதல் அல்லது குற்றச்செயல் இடம்பெற்றதற்கான எந்த அறிகுறியையும் கண்டறியவில்லை என்றும் அவர் கூறினார். கஜநாயகவும் வூட்லரும், மரண தண்டனை விதிக்கப்பட்டதன் விளைவாக ஏற்பட்ட 'தனிப்பட்ட மனஅழுத்தம் அல்லது மனச்சோர்வு' காரணமாக இந்தச் சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் எனக் குறிப்பிட்டனர்.

மரணமடைந்தவர், ஏனைய கைதிகளைப் போலன்றி, மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த காரணத்தால் தொடர்ச்சியான கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படும் நிலையில், அவரைக் காவலில் பாதுகாக்கும் பொறுப்பு மற்றும் கைதிகளின் பாதுகாப்பு தொடர்பாக தீர்க்கமான கேள்விகள் எழுகின்றன. தீர்ப்புக்குப் பின்னர் சுபுன் கடுமையான உளவியல் நெருக்கடிக்கு ஆளாகியிருந்தால், இடையறாத கண்காணிப்பின் கீழிருந்த மனரீதியாகப் பாதிக்கப்படக்கூடிய கைதியொருவருக்குத் தேவையான பராமரிப்புப் பொறுப்பு எவ்வாறு நிறைவேற்றப்பட்டது? அதனைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் ஏன் எடுக்கப்படவில்லை?

சிறைச்சாலை நிர்வாகத்தின் ஊடாக வெளிப்படுத்தப்படும் சக கைதிகளின் கூற்றுகளை, இந்த வழக்கில் சுயாதீனமான சான்றாகக் கருத முடியுமா? இவ்வாறான மரணம் தொடர்பான எந்த விசாரணையிலும் தவிர்க்க முடியாமல் எழும் கேள்விகள் இவை.

உலக சோசலிச வலைத் தள செய்தியாளர்களுடன் பேசிய அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் கிராமவாசிகள், சுபுன் தற்கொலை செய்துகொண்டார் என்ற கூற்றை ஏற்க முடியாது என்று தெரிவித்தனர். அவரது மரணத்தைச் சூழ்ந்துள்ள சூழ்நிலைகள் குறித்து முறையான, சுயாதீனமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

2022 ஆம் ஆண்டில், அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு எதிராக இலங்கையில் வெடித்த வெகுஜன எழுச்சியின் போது பாராளுமன்ற உறுப்பினர் அத்துகோரள கொல்லப்பட்டார். அந்த எழுச்சியின் போது, நாடு முழுவதும் மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகள் பங்கேற்ற நிலையில், ஆயிரக்கணக்கானோர் 2022 ஏப்ரல் தொடக்கத்திலிருந்து கொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் முகாமிட்டிருந்தனர்.

அந்த ஆண்டு மே 9 அன்று நண்பகல் அளவில், அரசாங்க ஆதரவு குண்டர்கள் போராட்டத் தளத்தை ஆக்கிரமித்திருந்த மக்களை கொடூரமாகத் தாக்கினர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, நாடு முழுவதும் ஆக்கிரமிப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுக்கு ஆதரவாகவும், அரசாங்கத்தின் வன்முறைக்கு எதிராகவும் வெகுஜன எதிர்ப்புப் போராட்டங்கள் வெடித்தன.

ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி பாராளுமன்ற உறுப்பினரான அதுகோரள, கொழும்பில் நடைபெற்றதாகக் கூறப்பட்ட கட்சிக் கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு திரும்பிச் சென்றபோது, கொழும்பிலிருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவிலுள்ள நிட்டம்புவையில் நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்களால் சூழப்பட்டார். அத்துகோரளவின் பாதுகாப்பு அதிகாரிகள் கூட்டத்தினரை நோக்கிச் சுட்டதில் ஒருவர் உயிரிழந்தார். அதன் பின்னர் அவர்கள் அருகிலிருந்த கட்டிடமொன்றுக்குள் தப்பிச் சென்றனர். பின்னர் அத்துகோரள மற்றும் அவரது பாதுகாப்பு அதிகாரியின் சடலங்கள் அங்கு கண்டுபிடிக்கப்பட்டன.

கொலை, சட்டவிரோதக் கூட்டத்தில் பங்கேற்றமை உட்பட குற்றச்சாட்டுகளில் 12 பேரை நீதிமன்றம் குற்றவாளிகளாகத் தீர்ப்பளித்தது. எனினும், அந்தத் தீர்ப்பு ஒருமனதாக வழங்கப்படவில்லை. மூன்று நீதிபதிகள் கொண்ட மேல் நீதிமன்ற அமர்வின் தலைமை நீதிபதியான சஹானா மாப்பபண்டார, 'வழக்குத் தரப்பு வலுவான வழக்கை முன்வைக்கத் தவறியுள்ளது' என்று கூறி, 'எதிரிகள் மீது சுமத்தப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் அவர்களை விடுவித்து நிரபராதிகள் என அறிவிக்கிறேன்' என்ற முரண்பட்ட தீர்ப்பை வழங்கினார். ஏனைய நீதிபதிகள், கொலை சம்பவத்திற்கு நேரடி சாட்சிகளோ, காணொளிச் சான்றுகளோ இல்லாதபோதிலும், சூழ்நிலைச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு, 12 பேருக்கும் மரண தண்டனை விதித்தனர்.

இந்த வழக்கின் அரசியல் தாக்கங்களும், விதிக்கப்பட்ட தண்டனைகளின் கடுமையும் காரணமாக, அந்தத் தீர்ப்பு ஏற்கனவே பரவலான எதிர்ப்பைத் தூண்டியுள்ளது.

சுபுன் உயிரிழந்த நேரத்தில், குற்றவாளிகளாகத் தீர்ப்பளிக்கப்பட்டவர்களின் சட்டத்தரணிகள், குற்றவியல் தீர்ப்புகளையும் மரண தண்டனையையும் எதிர்த்து மேல்முறையீடுகளைத் தாக்கல் செய்திருந்தனர்.

மே 13 அன்று உலக சோசலிச வலைத் தள நிருபர்கள் பஸ்யாலையிலுள்ள ரணவிருகமவில் அமைந்துள்ள சுபுனின் வீட்டிற்குச் சென்றனர். கொழும்பிலிருந்து சுமார் 45 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்தக் குடியிருப்புத் திட்டம், பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடைபெற்ற இனவாதப் போரில் காயமடைந்த ஆயுதப்படையினருக்காக 2002 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. ஓய்வுபெற்ற இராணுவ வீரரான சுபுனின் தந்தை, நீண்டகாலமாக படுக்கையில் இருந்து வருகிறார்.

துயரத்தில் ஆழ்ந்திருந்த அயலவர்கள், சுபுனின் புகைப்படம் மற்றும் இரங்கல் செய்திகளைக் கொண்ட பதாகைகளையும் வெள்ளைக் கொடிகளையும் கட்டியிருந்தனர். அன்றைய தினம் சுபுனின் உடல் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டபோது, கொழும்பு–கண்டி பிரதான வீதியிலிருந்து அவரது வீட்டுக்குச் செல்லும் பாதையின் இருபுறமும் மக்கள் அணிவகுத்து நின்று இறுதி அஞ்சலி செலுத்தினர்.

எமது செய்தியாளர்களிடம் பேசிய அரசாங்கப் பாடசாலை ஆசிரியையான சுபுனின் தாயார், அதிகாரப்பூர்வ விளக்கத்தின் மீது தனக்குள்ள சந்தேகத்தை வெளிப்படுத்தினார்.

'பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு, உயரத்திலிருந்து விழுந்ததால் தலையில் ஏற்பட்ட காயங்களே என் மகனின் மரணத்துக்குக் காரணம் என்று அவர்கள் கூறினார்கள். ஆனால், அவன் அங்கிருந்து வெறுமனே விழுந்துவிட்டான் என்பதை நம்புவது மிகவும் கடினம். இந்த மரணம் குறித்து எங்களுக்கு பலத்த சந்தேகம் இருக்கிறது,' என்று அவர் கூறினார். அவரது கணவரும் இதே கவலையை வெளிப்படுத்தினார்.

சுபுன் வாடகை வாகன சேவையை நடத்திவந்ததுடன், தனது தந்தையின் நீண்டகால மருத்துவச் செலவுகளைச் சுமந்த குடும்பத்தின் பிரதான வருமானம் ஈட்டுபவராக இருந்ததாக உறவினர்கள் விளக்கினர். அயலவர்கள் அவரை அனைவராலும் விரும்பப்பட்ட, சமூகச் செயற்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்ட இளைஞராக வர்ணித்தனர்.

கிராமவாசி ஒருவர் கூறுகையில், 'சுபுன் எங்கள் கிராமத்தில் அனைவராலும் நேசிக்கப்பட்டவர். கிராமத்தில் நடைபெற்ற ஒவ்வொரு சமூக நடவடிக்கையிலும் அவர் முனைப்புடன் பங்கேற்றார். அந்த நாடாளுமன்ற உறுப்பினரின் கொலையில் அவர் சம்பந்தப்பட்டிருந்தார் என்பதை எங்களால் ஒருபோதும் நம்ப முடியாது,' என்றார்.

கிராமத்தைச் சேர்ந்த வயதான பெண் ஒருவர், அரசாங்கத்தின் மௌனத்தைக் கடுமையாகக் கண்டித்து, அதற்கு நேரடியான பொறுப்பைச் சுமத்தினார்.

'இந்தப் பிள்ளையின் மரணத்திற்கு ஜனாதிபதி திசாநாயக அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும்,' என்று அவர் கூறினார். 'இந்த அநீதியான மரண தண்டனைக்கு பின்னால் அரசாங்கமே இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். இந்தத் தீர்ப்பைப் பற்றி அரசாங்கம் ஒரு வார்த்தைகூட பேசவில்லை. எங்கள் பையனின் மரணத்துக்கு ஒரு அனுதாபச் செய்தியைக்கூட அவர்கள் வெளியிடவில்லை.'

மே 15 அன்று சுபுனின் உடல் அவரது சொந்த கிராமத்தின் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. குடும்பத்தினர், அயலவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்துகொண்ட அந்த இறுதி நிகழ்வு, ஆழ்ந்த துயரத்துடனும், அதேவேளையில் கோபமும் பதிலளிக்கப்படாத கேள்விகளும் நிறைந்த சூழலிலும் நடைபெற்றது.

அங்கு கலந்துகொண்ட ஒருவர், பிரதான ஊடகங்களும் சமூக ஊடகங்களும் குற்றம் சாட்டப்பட்ட 12 பேரையும் வெறுமனே 'கொலையாளிகள்' எனச் சித்தரித்ததோடு, சிலர் சுபுனின் மரணத்தைக் கூட வெளிப்படையாகக் கொண்டாடியதாகக் குறிப்பிட்டார்.

'இந்தப் பொய்களை முறியடிக்க, உங்கள் (உலக சோசலிச வலைத் தளம்) கட்டுரை முடிந்தவரை பரவலாகப் பகிரப்பட வேண்டும்,' என்று அவர் கேட்டுக்கொண்டார். மரண தண்டனைகள் தொடர்பாக உலக சோசலிச வலைத் தளம் வெளியிட்ட கட்டுரையையே அவர் குறிப்பிட்டார்.

இந்தக் கருத்துக்கள், இவ்வழக்கு தொடர்பான ஊடகச் செய்தி பங்களிப்பு குறித்தும், சுபுனின் மரணத்தைச் சூழ்ந்துள்ள சூழ்நிலைகள் குறித்து தீவிரமான விசாரணை எதுவும் மேற்கொள்ளப்படாதது பற்றியும் மக்களிடையே நிலவும் பரவலான கவலையை பிரதிபலிக்கின்றன.

சுபுனின் மரணம், இலங்கையில் கைதிகள் நடத்தப்படும் விதம் மற்றும் மரண தண்டனை தொடர்ந்து நடைமுறையில் இருப்பது சம்பந்தமான பரந்தளவிலான கவலைகளையும் மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. அதிகாரபூர்வமற்ற இடைநிறுத்தம் காரணமாக பல தசாப்தங்களாக மரண தண்டனை நிறைவேற்றப்படவில்லை என்றாலும், நீதிமன்றங்கள் தொடர்ந்து மரண தண்டனைகளை விதித்து வருகின்றன.

பொலிஸ் நிலையங்கள், சிறைச்சாலைகள் மற்றும் தடுப்புக் காவல் நிலையங்களில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் நபர்கள் உயிரிழப்பது, நீண்டகாலமாகவே இலங்கையில் மிகக் கடுமையான கவலைக்குரிய பிரச்சினையாக இருந்து வருகிறது. இத்தகைய மரணங்கள் மற்றும் சித்திரவதை குற்றச்சாட்டுகள் தொடர்பாக சுயாதீனமான விசாரணைகளை நடத்த வேண்டும் என்று மனித உரிமை அமைப்புகள் தொடர்ந்து போராடி வந்த போதிலும், இந்த நடைமுறை தொடர்கிறது. மக்கள் விடுதலை முன்னணி / தேசிய மக்கள் சக்தி (ஜே.வி.பி./தே.ம.ச.) அரசாங்கத்தின் கீழும் இதே போக்கு தற்போது மேலும் தீவிரமடைந்து வருகிறது.

உலக சோசலிச வலைத் தளம் ஏற்கனவே எடுத்துக்காட்டியுள்ளபடி, இந்தத் தீர்ப்புகள் மிகவும் பலவீனமான சான்றுகளின் அடிப்படையில் அமைந்திருப்பதுடன் அவை வர்க்கப் பழிவாங்கல் நடவடிக்கையாகும் -தனது சிக்கன நடவடிக்கைத் திட்டத்திற்கு எதிராக வளர்ந்துவரும் எதிர்ப்பை திசாநாயக அரசாங்கம் எதிர்கொள்ளும் நிலையில், இவை தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் விடுக்கப்பட்ட திட்டமிட்ட அரசியல் எச்சரிக்கையாகும்.

சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.), முதலாளித்துவ வர்க்கத்தின் பலிகடாக்களாகிய இந்த நபர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனைகளை எதிர்க்கிறது. அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுகளும் கைவிடப்பட வேண்டும் என்றும், எந்த நிபந்தனையும் இன்றி அவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும் அது வலியுறுத்துகிறது.

Loading