இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
ஷாங்காயில் நடைபெறும் உலக செயற்கை நுண்ணறிவு மாநாட்டுடன் (World Artificial Intelligence Conference) ஒத்துப்போகும் வகையில், மிக மேம்பட்ட அமெரிக்க அமைப்புகளுக்கு நிகரான இரு சீன செயற்கை நுண்ணறிவு (AI) மாதிரிகள் வெளியிடப்பட்டமையானது, வாஷிங்டனிலும் சிலிகான் பள்ளத்தாக்கிலும் பீதியை ஏற்படுத்தியுள்ளதுடன், முழு அமெரிக்க பங்குச் சந்தையும் தங்கியிருக்கும் ஊக வணிகக் குமிழியின் பலவீனத்தையும் அம்பலப்படுத்தியுள்ளது.
மாநாடு தொடங்குவதற்கு முந்தைய நாளான வியாழக்கிழமை, பெய்ஜிங்கை தளமாகக் கொண்ட மூன்ஷாட் AI (Moonshot AI) நிறுவனம் கிமி K3-ஐ (Kimi K3) வெளியிட்டது. இது, அமெரிக்க நிதி மூலதனத்தின் முதன்மைப் பத்திரிகையான வால்ஸ்ட்ரீட் ஜர்னலின் வார்த்தைகளில் கூறுவதானால், “உலகளாவிய சந்தைகளை அதிர வைத்தது” என்பதோடு “உலகின் மிகச் சிறந்தவற்றுக்கு நிகராக வரிசைப்படுத்தப்படுவதாகவும் காணப்படுகிறது.” மூன்று நாட்களுக்குப் பிறகு, அலிபாபா நிறுவனம் கிமி K3-ஐ விஞ்சிவிட்டதாகக் கூறி, க்வென் 3.8 மேக்ஸ் (Qwen 3.8 Max) மாதிரியை முன்னோட்டமாக வெளியிட்டது.
“சீனாவின் முக்கிய AI நிகழ்வு அமெரிக்காவுக்கு தெளிவான செய்தி கொடுத்தது: போட்டிக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.” என்று ஷாங்காயிலிருந்து வெளியான ஜர்னல் பத்திரிகையின் தலைப்புச் செய்தி அறிவித்தது. அமெரிக்க அமைப்புகளின் வெளியீடுகளைக் கொண்டு சீன நிறுவனங்கள் தங்கள் மாதிரிகளுக்குப் பயிற்சி அளிக்காமல் இருந்திருந்தால், அமெரிக்காவின் AI முன்னிலை 12 முதல் 18 மாதங்கள் வரை நீடித்திருக்கும் என்று ஆன்த்ரோபிக் (Anthropic) நிறுவனத்தின் தேசியப் பாதுகாப்புக் கொள்கைத் தலைவர் தருண் சாப்ரா கடந்த வாரம்தான் கூறியிருந்தார். ஆனால் இப்போது அந்த முன்னிலை வாரக் கணக்கில் மட்டுமே அளவிடப்படுகிறது: ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் வெளியிடப்பட்ட கிளாட் ஃபேபிள் 5 (Claude Fable 5) மற்றும் ஜிபிடி-5.6 சோல் (GPT-5.6 Sol) ஆகிய இரு மாதிரிகள் மட்டுமே இன்னும் கிமி K3-ஐ (Kimi K3) விட உயர் இடத்தில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நெருக்கடியைத் தூண்டியது புதிய மாதிரிகளின் திறந்த தன்மைதான். இரண்டும் “திறந்த-எடை” (open weight) [அதாவது, AI மாதிரியின் உட்புற அளவுருக்களை (weights) அனைவரும் இலவசமாகப் பதிவிறக்கித் தங்களின் சொந்தக் கணினிகளில் இயக்கும் வகையில் பகிரங்கமாக வெளியிடும்] தன்மையைக் கொண்டவை: மூன்ஷாட் (Moonshot) நிறுவனம் கிமி K3-இன் (Kimi K3) முழு எடைகளையும் ஜூலை 27-க்குள் வெளியிடும், அலிபாபாவும் அதையே செய்வதாக உறுதியளித்துள்ளது. இந்த எடைகள் வெளியிடப்பட்டதும், அமெரிக்க AI நிறுவனங்களுக்கு எந்தக் கடப்பாடும் இல்லாமல், எவரும் அவற்றைத் தங்களது சொந்த வன்பொருளில் (hardware) பதிவிறக்கம் செய்யவும், ஆய்வு செய்யவும், மாற்றியமைக்கவும், இயக்கவும் முடியும்.
இத்தொழில்நுட்பத்தைப் பணமாக்குவதும் ஏகபோகமாக்குவதுமே அமெரிக்க AI துறையின் முழுமையான இலக்காக இருந்து வருகிறது. தரவு மையங்களுக்காக முதலீடு செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்களும், திட்டமிடப்பட்டுள்ள டிரில்லியன் கணக்கிலான நிதியும், அதிநவீன AI ஆனது ஒரு சில பெருநிறுவனங்கள் மட்டுமே ஏகபோக இலாபத்தை உறிஞ்சக்கூடிய அரிய பொருளாகவே இருக்கும் என்ற ஊகத்தின் அடிப்படையிலேயே அமைந்துள்ளன. மிக உயர்தரமான AI மாதிரிகளை இலவசமாக மறுஉருவாக்கம் செய்ய முடியும் என்றால், அவற்றை இயக்குவதற்குத் தேவையான மின்சாரம் மற்றும் சிலிக்கானின் அடிப்படைச் செலவை நோக்கி அவற்றின் விலை வீழ்ச்சியடைய வேண்டும். இதனால் ஆவியாகிப்போவது அந்த ஏகபோக இலாபம்தான்; மேலும் அந்த இலாபமே, பகிரங்கப் பங்கு விற்பனைக்குத் தயாராகி வரும் ஓபன்ஏஐ (OpenAI) மற்றும் ஆன்த்ரோபிக் ஆகிய இரு பெருநிறுவனங்களின் சந்தை மதிப்பீடுகளைத் தாங்கி நிற்கும் ஒரே அடிப்படையாகும்.
அமெரிக்க நிறுவனங்கள் இந்த அதிநவீனத் தொழில்நுட்பத்தில் தங்களது பிடியைத் தக்கவைத்துக்கொள்ளும் என்ற முதலீட்டாளர்களின் நம்பிக்கையே “இந்த எழுச்சியின் மையமாக இருந்துள்ளதுடன், உள்கட்டமைப்பிற்காகப் பல டிரில்லியன் டாலர்களைச் செலவழிப்பதை நியாயப்படுத்தவும் உதவியுள்ளது” என்று ஜர்னல் எழுதுகிறது. இருப்பினும், இந்த ஒட்டுமொத்தக் கட்டமைப்பும் இலாபமற்றதாகவே உள்ளது. SEC (அமெரிக்கப் பங்குகள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம்) தாக்கல்கள் மற்றும் வருமான அறிக்கைகளிலிருந்து தொகுக்கப்பட்ட புள்ளிவிவரங்களின்படி, முக்கிய அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஏறத்தாழ 700 பில்லியன் டாலர் ஒட்டுமொத்த வருவாய்க்கு எதிராகச் சுமார் 1.4 டிரில்லியன் டாலரை AI-இல் கொட்டியுள்ளன; மற்ற நிறுவனங்கள் பயன்படுத்தும் வன்பொருளை விற்பனை செய்யும் என்விடியா (Nvidia) மட்டுமே இலாபத்தில் இயங்குகிறது.
AI-உடன் தொடர்புடைய பங்குகள் இப்போது S&P 500 குறியீட்டின் சந்தை மூலதனத்தில் சாதனை அளவாக 45 சதவீதத்தைக் கொண்டுள்ளன; மேலும், கடந்த மூன்று ஆண்டுகளில் அந்தக் குறியீட்டின் வருவாயில் ஏறத்தாழ முக்கால்வாசியை இவை வழங்கியுள்ளன. AI-ஐத் தவிர்த்துப் பார்த்தால், அமெரிக்கப் பங்குச் சந்தை சிறிதும் உயரவே இல்லை: சமீபத்திய ஆண்டுகளில் அதன் ஒட்டுமொத்த வளர்ச்சியும் AI ஏகபோகத்தின் நிரந்தரத்தன்மை மீதான ஒரு சூதாட்டமே ஆகும். இது ஒரு பிரம்மாண்டமான போலி மூலதனக் குவியலாகும்; அதாவது, எதிர்கால ஏகபோக இலாபங்கள் மீதான காகித உரிமைகோரல்கள் ஆகும். இவற்றுக்கு இணையான திறந்த மாதிரிகளின் வருகையானது இவற்றை இப்போது மதிப்பற்றதாக ஆக்கி வருகிறது.
AI குமிழி எந்தக் கணத்திலும் வெடிக்கக்கூடும்; மேலும், கடந்த வார நிகழ்வுகள் அந்தத் தருணம் தாமதிப்பதை விட விரைவாகவே வரக்கூடும் என்பதைக் காட்டுகின்றன. வெள்ளிக்கிழமையன்று நாஸ்டாக் (Nasdaq) 1.4 சதவீதம் சரிந்தது; இது ஆறு வாரங்களுக்கு முன்பு அமைத்த சாதனையை விட ஏறத்தாழ 6 சதவீதம் குறைவாகும். அதே வேளையில், பிலாடெல்பியா செமிகண்டக்டர் குறியீடு (Philadelphia Semiconductor Index) 12.5 சதவீதம் சரிந்து, 15 மாதங்களுக்கும் மேலான காலத்தில் தனது மிக மோசமான வாரத்தை நிறைவு செய்தது. தற்போதைய சரிவு வீழ்ச்சியின் தொடக்கத்தைக் குறிக்கிறதா அல்லது மற்றொரு அதிர்வா என்பதை முன்கூட்டியே கணிக்க முடியாது.
தனியார் சொத்துரிமையின் பாதுகாவலர்கள் தங்கள் வாதத்தை இவ்வளவு வெளிப்படையாகக் கூறுவது அரிது; ஆனால், ட்ரம்ப் நிர்வாகத்தின் முன்னாள் அதிகாரியும், தற்போது ஓபன்ஏஐ நிறுவனத்தின் “உத்திசார் எதிர்காலப் பிரிவுத் தலைவருமான” டீன் பால் அதையே செய்தார். திறந்த-எடை மாதிரிகள் ஆதிக்கம் செலுத்தும் ஒரு உலகம் “முழுமையான AI கம்யூனிசம்” ஆகிவிடும் என்று பால் எக்ஸ் (X) தளத்தில் அறிவித்தார். அத்தகைய உலகில் AI இனி “ஒரு சந்தைப் பொருளாக” இருக்காது; மாறாக, அது அரசால் வழங்கப்படும் ஒரு “பொது நலப் பொருளாக” மாறிவிடும் என்றும், இந்த எதிர்காலச் சாத்தியத்தை அவர் “ஒரு நரகக் கொடுங்கனவு” என்றும் திட்டவட்டமாகக் கண்டித்தார்.
இந்தக் கூற்று அறியாமலேயே செய்யப்பட்ட ஒரு ஒப்புதலாகும். AI ஏகபோகத்தைத் தக்கவைத்திருக்கும் தன்னலக்குழுக்களைப் பீதியடையச் செய்வது என்னவெனில், செயற்கை நுண்ணறிவானது தனியார் உடைமை என்ற பிடியிலிருந்து நழுவி, அது ஏற்கனவே தன் சாராம்சத்தில் என்னவாக இருக்கிறதோ அதுவாகவே மாறிவிடும் என்பதுதான்: அதாவது, மனிதகுலம் முழுவதினதும் அறிவு, மொழி மற்றும் உழைப்பிலிருந்து உருவாக்கப்பட்ட, உரிமையின்படி முழு மனிதகுலத்திற்கும் சொந்தமான ஒரு சமூக உற்பத்தியாக அது மாறிவிடும் என்பதாகும்.
இதனால்தான் தன்னலக்குழுக்கள் இப்போது திறந்த எடையுள்ள மாதிரிகளை குற்றமாக்க முயல்கின்றனர்; இந்த இயக்கப் பிரச்சாரம் ஏற்கனவே நன்கு முன்னேறியுள்ளது. ட்ரம்ப் நிர்வாகத்தின் பாதுகாப்பு அதிகாரிகள் வர்த்தகக் கருப்புப் பட்டியல்கள், கூட்டாட்சிப் பாதுகாப்பு எச்சரிக்கைகள் மற்றும் திறந்த-எடை மாதிரிகளை இலக்கு வைக்கும் நிர்வாக உத்தரவு ஆகியவற்றைப் பரிசீலித்துள்ளதாக ஜர்னல் மற்றும் ஆக்சியோஸ் (Axios) இதழ்கள் அறிக்கையிடுகின்றன; இருப்பினும், இதுவரை நிலவிய உள் முரண்பாடுகள் நடவடிக்கையைத் தடுத்துள்ளன. கிமி மாதிரியின் எழுச்சி இந்த முயற்சிகளுக்குப் புத்துயிர் அளித்துள்ளது; மேலும், தேசியப் பாதுகாப்புப் பிரிவினரின் கை ஓங்கி வருவதாகவும் தெரிகிறது. முறைப்படியான தடையைத் தவிர்த்து, சீன மாதிரிகள் மலிவானவை மற்றும் கிட்டத்தட்ட நிகரானவை என்பதால் அவற்றைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ள அமெரிக்க நிறுவனங்களையும் பொறியாளர்களையும் அதிலிருந்து விலக்குவதற்காகக் கொள்முதல் விதிகள் மற்றும் பொது அழுத்தப் பிரச்சாரங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. அவர்களின் சந்தை மதிப்புகளைத் தாங்கிப் பிடிப்பதற்காக, அமெரிக்க நிறுவனங்களின் மாதிரிகளுக்கே அவர்களை மீண்டும் கட்டாயப்படுத்தித் திருப்புவதே இதன் நோக்கமாகும்.
அரசு ஏற்கனவே ஓர் அமெரிக்க நிறுவனத்திற்கு எதிராக இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தியுள்ளது. ஜூன் மாதத்தில், வர்த்தகத் துறையின் ஏற்றுமதி உத்தரவு ஒன்று, ஆன்த்ரோபிக் நிறுவனத்தை அதன் மிகவும் சக்திவாய்ந்த மாதிரியான கிளாட் ஃபேபிள் 5 (Claude Fable 5) ஐ 19 நாட்களுக்குத் திரும்பப் பெற நிர்பந்தித்தது; இத்தொழில்நுட்பம் யாருக்குச் சொந்தமாக இருந்தாலும், முதலாளித்துவ அரசு இதன் மீது தனது நேரடிப் கட்டுப்பாட்டைச் செலுத்தும் என்பதையே இது காட்டுகிறது.
இந்தச் சூழ்ச்சிகளின் பாசாங்குத்தனத்திற்கு எல்லையே இல்லை: அமெரிக்க ஏகாதிபத்தியம் எஃகு முதல் விண்வெளித் துறை வரை, நியாயமற்ற வர்த்தக நடைமுறைகள் மற்றும் அரசு மானியங்களை வழங்குவதாகத் தனது போட்டியாளர்கள் மீது பல தசாப்தங்களாகக் குற்றம்சாட்டி வந்துள்ளது. ஆனால், அமெரிக்க AI பெருநிறுவனங்களே அரசாங்கத்தின் உருவாக்கங்கள்தான்; பல தசாப்தகாலப் பொது நிதியளிக்கப்பட்ட ஆராய்ச்சிகளின் மீது கட்டியெழுப்பப்பட்ட அவை, கூட்டாட்சி ஒப்பந்தங்கள், சிப் மானியங்கள் மற்றும் வரி விலக்குகள் மூலமே கொழுக்க வைக்கப்பட்டுள்ளன. ஓபன்ஏஐ, ஆன்த்ரோபிக் மற்றும் கூகிள் டீப்மைண்ட் ஆகியவற்றை வழிநடத்தும் சாம் ஆல்ட்மேன், டாரியோ அமோடேய் மற்றும் டெமிஸ் ஹசாபிஸ் ஆகியோர் கட்டுப்பாடற்ற சுதந்திரச் சந்தை பற்றிய கட்டுக்கதையின் மீதே தங்கள் சொத்துக்களைக் கட்டியெழுப்பினர்; ஆனால் இப்போது, தங்களால் தோற்கடிக்க முடியாத போட்டியாளர்களுக்கு எதிராகக் கடுமையான அரசுத் தலையீட்டைக் கோருகின்றனர். தன்னலக்குழுக்களின் அரசாங்கமான ட்ரம்ப் நிர்வாகம், பொதுமக்களைச் சூறையாடுவதற்கும் நிதித் தன்னலக்குழுக்களை மேலும் வளப்படுத்துவதற்கும் எழும் எந்தவொரு நடவடிக்கையையும் தன் விருப்பம்போல் வடிவமைக்கும்.
இந்த எச்சரிக்கைகள் தன்னலக்குழுக்களை பகிரங்கமாக ஒருவருக்கொருவர் எதிராக நிறுத்தியுள்ளன; வெள்ளை மாளிகையின் AI ஆலோசகரான டேவிட் சாக்ஸ் (David Sacks), பாலின் பதிவை ஒரு “ஒழுங்குமுறை பிடிப்பு உத்தியின்” ஒப்புதல் வாக்குமூலம் என்று கண்டித்துள்ளார். இந்த தகராறுக்குப் பின்னால், மூடப்பட்ட-மாதிரி நிறுவனங்களின் மதிப்பீடுகளுடன் செல்வம் பிணைக்கப்பட்டுள்ள பிரிவினருக்கும், அதன் தோற்றம் எதுவாக இருந்தாலும் மலிவான, ஏராளமான AI-யிலிருந்து இலாபம் பெறத் துடிக்கும் பிரிவினருக்கும் இடையிலான பொருள்சார் நலன்களின் முரண்பாடு உள்ளது.
இந்த நெருக்கடியை எதிர்கொள்ளும்போது, அமெரிக்க ஆளும் வர்க்கம் தனது ஆதிக்கத்திற்கு வரும் ஒவ்வொரு சவாலுக்கும் பதிலளிப்பது போலவே, பொருளாதாரத் தேசியவாதத்துடனும் போருக்கான ஆயத்தங்களுடனுமே பதிலளிக்கிறது. ஆனால், ஒரு திறந்த-எடை மாதிரியானது ஒரு கோப்பைப் பரிமாற்றம் செய்ய எடுக்கும் நேரத்தில் பூமியிலுள்ள ஒவ்வொரு எல்லையையும் கடந்துவிடும்; மேலும், அறிவின் பரவலுக்கு எந்தவொரு சுங்கவரியையும் விதிக்க முடியாது. சீனத் தொழில்நுட்பத்தைத் திறந்த போட்டியில் தோற்கடிக்க முடியாது என்பதாலேயே, அதற்கு எதிரான பிரச்சாரமானது ஏற்றுமதிக்கட்டுப்பாடுகள், வர்த்தகப் போர் மற்றும் பசிபிக் பிராந்தியத்திலான இராணுவக் குவிப்பு ஆகியவற்றிலிருந்து பிரிக்க முடியாத ஒன்றாக உள்ளது. இந்தப் பாதையானது, உலகின் அறிவியல் கலாச்சாரத்தைப் பகைமைப் பிரிவுகளாக உடைப்பதோடு, அதன் இறுதியில் அணுஆயுத வல்லரசுகளுக்கு இடையிலான போரிலும் கொண்டுபோய் நிறுத்தும்.
“AI கம்யூனிசம்” குறித்த தனது பீதியில், திரு. பால் அறியாமலேயே ஓர் அடிப்படை உண்மையை வெளிப்படுத்தியுள்ளார். இத்தொழில்நுட்பத்தைச் சொந்தமாக்கிக் கொள்ளவும், இலாபத்திற்காக அதன் நன்மைகளைப் பங்கீட்டு வழங்கிடவும், போருக்காக அதனை ஆயுதமாக்கவும் முயலும் ஒருசில பில்லியனர் தன்னலக்குழுக்களின் உரிமைகோருதலுக்கு எவ்வித வரலாற்றுச் சட்டபூர்வத்தன்மையும் இல்லை. பால் எதை ஒரு “நரகக் கொடுங்கனவு” என்று அழைக்கிறாரோ, அதுவே இப்போது முன்வைக்கப்படும் மாற்றாகும்: அதாவது, அனைவரின் நலனுக்காகவும் AI-ஐப் பொது உள்கட்டமைப்பாக மாற்றுவதாகும்.
பொது உள்கட்டமைப்பாக AI செயல்படும்போது, அது வரலாற்றில் முதன்முறையாக, தனியார் இலாபத்திற்குப் பதிலாக மனிதத் தேவையை நோக்கமாகக் கொண்டு, உலகளாவிய அளவில் உற்பத்தியைப் பகுத்தறிவுடனும் ஜனநாயக ரீதியிலும் திட்டமிடுவதைச் சாத்தியமாக்கும். கண்காணிப்பிற்கும் போருக்கும் இப்போது பயன்படுத்தப்படும் அதே அமைப்புகளை, நோய்களை வெல்வதற்கும், புதைபடிவ எரிபொருட்களைத் தாண்டிய ஆற்றல் மாற்றத்திற்கும், பில்லியன் கணக்கான மக்களைச் சலிப்பூட்டும் கொடூரமான உழைப்பிலிருந்து விடுவிப்பதற்கும் பயன்படுத்த முடியும்.
தனது சொந்த தேசிய நிகழ்ச்சி நிரலைப் பின்பற்றும் சீன முதலாளித்துவ அரசு அந்த எதிர்காலத்தை வழங்கப்போவதில்லை. சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தால் மட்டுமே அதைச் செய்ய முடியும். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI), தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் சோசலிசக் கல்வியை நோக்கியும், மார்க்சிச இயக்கத்தின் 150 ஆண்டுகளுக்கும் மேலான திரட்டப்பட்ட படிப்பினைகளை அவர்களுக்குக் கிடைக்கச் செய்யவும் AI-யைத் திருப்புவதற்காக, டிசம்பர் 12, 2025 அன்று உலக சோசலிச வலைத் தளத்தால் (World Socialist Web Site) தொடங்கப்பட்ட சோசலிசம் AI (Socialism AI) மூலம் இத்தொழில்நுட்பத்தின் புரட்சிகரப் பயன்பாட்டை ஏற்கனவே நிரூபித்துள்ளது.
கடந்த வாரத்தின் முக்கியத்துவம், ஒரு தேசிய முதலாளித்துவம் மற்றொரு தேசிய முதலாளித்துவத்தின் மீது பெற்ற வெற்றியில் இல்லை. உலகளவில் ஒருங்கிணைக்கப்பட்ட உழைப்பால் உருவாக்கப்பட்ட உற்பத்திச் சக்திகள், தனியார் உடைமையையும் தேச-அரசு அமைப்பையும் கடந்து வளர்ந்துவிட்டன. அமெரிக்கச் சந்தைகளின் கொந்தளிப்புகள் அந்த முரண்பாட்டைச் சந்தையின் மொழியில் பதிவு செய்கின்றன. இம்முரண்பாடு இரண்டு வழிகளில் ஒன்றில் மட்டுமே தீர்க்கப்படும்: முதலாளித்துவ வர்க்கங்களால் பொருளாதாரச் சரிவு, சர்வாதிகாரம் மற்றும் போர் மூலமாக, அல்லது சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தால் உலகளவில் பொருளாதார வாழ்க்கையை சோசலிச முறையில் மறுசீரமைப்பதன் மூலமாக. AI தன்னலக்குழுக்களை ஒரு பூதம் உலுக்கிக் கொண்டிருக்கிறது—அதுதான் “AI கம்யூனிசம்” என்னும் பூதம். அவர்களின் அச்சத்திற்குத் தகுந்த காரணங்கள் உள்ளன.
