2022 இலங்கை வெகுஜன எழுச்சியின் படிப்பினைகள் பற்றி சோ.ச.க./IYSSE நடத்திய பிரச்சாரம்

தொழிலாளர்-விவசாயிகள் அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டுவந்திருக்க முடிந்திருந்தால் எங்கள் இலக்குகளை நிறைவேற்றியிருப்போம் என ஏகல தொழிலாளர்கள் கூறுகின்றனர்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

ஏகல விஷாகாவத்தையில் வசிப்பவர்களுடன் உரையாடும் எமது நிருபர்கள்.

சோசலிச சமத்துவக் கட்சியும் (சோ.ச.க.) சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் (IYSSE) அமைப்பும் “தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் 2022 வெகுஜன எழுச்சியின் படிப்பினைகள்” என்ற தலைப்பில் ஜூலை 26, ஞாயிற்றுக்கிழமை மாலை 7.00 மணிக்கு நடைபெறவுள்ள பகிரங்க நிகழ்நிலை கூட்டம் குறித்து தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு அறிமுகப்படுத்தும் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, சோ.ச.க./ஐ.வை.எஸ்.எஸ்.இ. உறுப்பினர்கள் கடந்த சில நாட்களாக ஜா-எல, ஏகல தொழிலாளர் குடியிருப்புகளிலும், இலங்கை புகையிரத திணைக்களத்துக்குச் சொந்தமான தெமட்டகொட குடியிருப்பு வளாகத்திலும் பிரச்சாரம் செய்தனர்.

இந்தப் பிரச்சாரத்தின் போது, “2022 இலங்கை வெகுஜெ எழுச்சியிலிருந்து நான்கு ஆண்டுகள்: அரசியல் படிப்பினைகள்” என்ற தலைப்பில் உலக சோசலிச வலைத் தளத்தில் (WSWS) வெளியிடப்பட்ட கட்டுரையை தொழிலாளர்கள் மத்தியில் விநியோகித்த சோ.ச.க./ஐ.வை.எஸ்.எஸ்.இ. உறுப்பினர்கள், தற்போதைய மக்கள் விடுதலை முன்னணி / தேசிய மக்கள் சக்தி (ஜே.வி.பி./தே.ம.ச.) அரசாங்கம் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீது நடத்திவரும் தாக்குதல்களுக்கு எதிராக தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் வளர்ந்து வரும் போராட்டங்களுக்கு, 2022 வெகுஜன எழுச்சியின் அரசியல் படிப்பினைகளை கிரகித்துக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை விளக்கினர்.

வெகுஜன எழுச்சியிலிருந்து நான்கு ஆண்டுகள் கடந்த நிலையில் பின்னோக்கிப் பார்க்கும்போது, தாங்கள் எதிர்பார்த்த எதுவும் நிறைவேறவில்லை என்றும், தற்போதைய ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கத்தின் கீழ் தங்களது வாழ்க்கை மேலும் கடினமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும், அவர்களில் பெரும்பாலானோர் தெரிவித்தனர்.

ஏகல ரவி தூரிகை உற்பத்தி தொழிற்சாலையில் பணிபுரியும், ஒரு பிள்ளையின் தாய், கலந்துரையாடலில் இணைந்துகொண்டு, வெகுஜன எழுச்சியின் பிரதான போராட்ட மையமாக இருந்த கொழும்பு காலி முகத்திடலில் தனக்குக் கிடைத்த அனுபவங்களை விளக்கினார்:

“காலி முகத்திடலில் நாங்கள் “கோட்டாபய (ராஜபக்ஷ) போக வேண்டும் என்று மட்டுமன்றி, நாடாளுமன்றத்தில் இருந்த 225 பேரும் வேண்டாம் போகவேண்டும்” என்றே முழக்கமிட்டோம். ஆனால் இறுதியில் அந்த 225 பேரில் ஒரு பகுதியினரையே கொண்ட அரசாங்கமே அமைந்தது. அதன் பிறகு இப்போது ஜே.வி.பி. அரசு வந்துள்ளது. பொருட்களின் விலை, மின்சார மற்றும் நீர்க் கட்டணங்கள் தொடர்ந்து உயர்கின்றன. எங்களுக்கு எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை.”

தொழிலாளர் வர்க்கத்தினதும் ஏனைய ஒடுக்கப்பட்ட பிரிவுகளினதும் அதிருப்தி எவ்வாறு அதிகரித்து வருகிறது என்பதை விளக்கிய அவர், “மக்கள் மீண்டும் வீதிக்கு இறங்கத் தயாராக இருக்கிறார்கள். ஒருவேளை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயகவும் அந்த நாற்காலியை விட்டு வெளியேற வேண்டிய நிலை வரும். எங்கள் வேலைத்தளத்தில் பலருடைய கருத்து அதுதான்,” என்றார்.

விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் பேசிய அவர் கூறியதாவது: “விவசாயிகள் எவ்வளவு துயரப்படுகிறார்கள் என்று தொலைக்காட்சியில் தினமும் காட்டுகிறார்கள். சிலர் தங்கள் வீடுகளையும் காணிகளையும் அடமானம் வைத்திருக்கிறார்கள். ஆனால் அவற்றை மீட்டெடுக்கத் தேவையான பணம்கூட அவர்களுக்கு கிடைப்பதில்லை. விவசாய மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் இந்த அரசாங்கம் நடந்து கொள்வது முந்தைய அரசாங்கங்களிலிருந்து எந்த விதத்திலும் வேறுபட்டதல்ல.”

இந்தக் கலந்துரையாடலிலும், ஏனைய கலந்துரையாடல்களிலும் 2022 வெகுஜன எழுச்சியின் போது தொழிலாளர்களும் ஒடுக்கப்பட்ட மக்களும் எதிர்பார்த்தவை ஏன் நிறைவேறவில்லை என்ற கேள்வியே மையமாக இருந்தது.

வெகுஜன எழுச்சியின் போதே ஒன்றுக்கொன்று முரண்பட்ட இரண்டு அரசியல் முன்நோக்குகள் முன்வைக்கப்பட்டன. ஒன்று, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஜே.வி.பி./தே.ம.ச. தலைமையிலான முதலாளித்துவக் கட்சிகள் முன்வைத்தபடி, அப்போது பாராளுமன்றத்தில் இருந்த அதே உறுப்பினர்களைக் கொண்ட ஓரு இடைக்கால அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டுவரும் வழியாகும். மற்றொன்று, தொழிலாளர் வர்க்கமானது முதலாளித்துவ அரசியல் கட்சிகளிலிருந்தும், முதலாளித்துவ அமைப்பின் பாதுகாவலர்களாகச் செயல்படும் தொழிற்சங்க அதிகாரத்துவத்திலிருந்தும், முன்னிலை சோசலிசக் கட்சி உட்பட போலி-இடது அமைப்புகளிலிருந்தும் அரசியல் ரீதியாக சுயாதீனமாக ஒழுங்கமைந்து, கிராமப்புற ஏழைகளைத் தனது பின்னால் அணிதிரட்டி, சோசலிசக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் தொழிலாளர்-விவசாயிகள் அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டுவர வேண்டும் என்று சோசலிச சமத்துவக் கட்சி முன் வைத்த முன்னோக்காகும்.

எவ்வாறாயினும், போலி-இடது கட்சிகளும் தொழிற்சங்க அதிகாரத்துவங்களும் இணைந்து வெகுஜன எழுச்சியை முதலாளித்துவ இடைக்கால அரசாங்கத் திட்டத்தின் பாதைக்குள் திருப்பிவிட்டதன் விளைவாக, சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கனத் தாக்குதல்களை நடைமுறைப்படுத்திய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கமும், அதன் பின்னர் அதே கொடூரமான தாக்குதல்களை இடையறாது முன்னெடுத்து வரும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக தலைமையிலான ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கமும் ஆட்சிக்கு வந்த விதத்தை சோ.ச.க./ஐ.வை.எஸ்.எஸ்.இ. உறுப்பினர்கள் விளக்கினர்.

“உண்மையில், நீங்கள் சொல்வது போல் ஒரு தொழிலாளர்-விவசாயிகள் அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டுவந்திருக்க முடிந்திருந்தால், எங்கள் இலக்குகளை நிறைவேற்றியிருக்க முடிந்திருக்கும் என்று எனக்குத் தோன்றுகிறது,” என்று மேலே குறிப்பிட்ட பெண் கூறினார்.

தெமட்டகொட புகையிரத குடியிருப்புத் தொகுதியில், கொழும்பு மற்றும் ஏனைய இரயில் நிலையங்களிலும் பணிமனைகளிலும் பணியாற்றும் நிலைய அதிபர்கள், இரயில் ஓட்டுநர்கள் மற்றும் தொழில்நுட்பப் ஊழியர்களை எமது நிருபர்கள் சந்தித்தனர்.

அவர்களில் சிலர் 2022 வெகுஜன எழுச்சியில் தன்னார்வமாகப் பங்கேற்றவர்கள். தங்களது தொழிற்சங்கங்கள் இரண்டு நாள் வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருந்த போதிலும், அதற்கேற்ப எந்தவிதமான எதிர்ப்புப் போராட்டத்தையும் ஒழுங்கமைக்கவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர். ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டுவர வாக்களித்ததாகக் கூறிய ஒரு தொழிலாளி, “இது ஒரு தொழிலாளர் அரசாக இருக்கும்” என்று நம்பியதால்தான் அவ்வாறு வாக்களித்ததாகக் கூறினார்.

அவர் உட்பட பெரும்பாலானோர், தேர்தலின்போது ஜே.வி.பி./தே.ம.ச. வழங்கிய எந்த வாக்குறுதியும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என்று தெரிவித்தனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய இராணுவத் தாக்குதல்கள் மற்றும் தீவிரமடைந்து வரும் உலகப் போர்நிலை காரணமாக இலங்கையின் பொருளாதார நெருக்கடி மேலும் ஆழமடைவதால், எந்த அரசாங்கத்தின் கீழும் தங்களது பிரச்சினைகளுக்கு எதிர்காலத்தில்கூட தீர்வு கிடைக்கப்போவதில்லை என்பதே அவர்களது கருத்தாக இருந்தது.

இரயில் சேவையைச் சீராக நடத்த சுமார் 20,000 பணியாளர்கள் தேவைப்பட்டாலும், தற்போது சுமார் 13,000 பேர் மட்டுமே பணியாற்றுவதாக மற்றொரு தொழிலாளி குறிப்பிட்டார். “கடுமையான ஊழியர் பற்றாக்குறையால், சோர்ந்து போகும் அளவுக்கு வேலை செய்ய வேண்டியுள்ளது,” என்று அவர் கூறினார். ஜே.வி.பி./தே.ம.ச. வாக்குறுதியளித்தபடி பேரிடர் கடன் கொடுப்பனவு அதிகரிக்கப்படவில்லை என்றும், மேலதிக நேரக் கொடுப்பனவுகள் குறைக்கப்படுகின்றன என்றும், உதிரிப்பாகங்கள் இல்லாததால் பராமரிப்புப் பணிகளை முறையாக மேற்கொள்ள முடியவில்லை என்றும் அவர்கள் மேலும் விளக்கினர்.

சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளைகளின் கீழ் அரசாங்கம் நடைமுறைப்படுத்தி வரும் சிக்கன நடவடிக்கைகளின் காரணமாக, இரத்மலானை பிரதான பணிமனையில் மேற்கொள்ளப்பட்ட சில பணிகள் புகையிரத ஊழியர்களிடமிருந்து அகற்றப்பட்டு தனியார் நிறுவனங்களுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தொழிலாளர்கள் தெரிவித்தனர். இலங்கை மின்சார சபை ஆறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு கூட்டுத்தாபனங்களுக்கு ஒப்படைக்கப்பட்டமை குறித்து அறிந்திருந்த அவர்கள், தங்களது துறையும் அதே நிலையை எதிர்கொள்ளும் என்று அச்சம் வெளியிட்டனர். தொழிற்சங்கங்கள் பற்றி கடும் வெறுப்புடன் பேசிய அவர்கள், இலங்கையில் அதிக எண்ணிக்கையிலான தொழிற்சங்கங்கள் உள்ள ஒரே நிறுவனம் புகையிரத திணைக்களமே என்றும் குறிப்பிட்டனர்.

இரயில் நிலைய அதிபர் ஒருவர், 2022 வெகுஜன எழுச்சிக்கு வழிவகுத்த பிரச்சினைகள் குறித்து விளக்குகையில், “அவற்றில் ஒன்றுகூட இன்னும் தீர்க்கப்படவில்லை. இந்தச் சுரண்டல் ஆட்சியை மாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் மக்கள் வீதிக்கு வந்தார்கள். அது நிறைவேறவில்லை,” என்றார். தாம் இரண்டு நாட்கள் தன்னார்வத்துடன் காலி முகத்திடல் போராட்டங்களில் பங்கேற்றதாகவும் அவர் கூறினார். “நாங்கள் சுயாதீனமாகவே போராட்டங்களுக்கு சென்றோம். தொழிற்சங்கங்கள் எங்களை அழைக்கவில்லை,” என்று கூறிய அவர், தாம் உறுப்பினராக இருந்த இரயில் நிலைய அதிபர்கள் சங்கம் அழைத்த வேலைநிறுத்தத்தில் மட்டும் “நான் பங்கேற்றேன்” என்றும் தெரிவித்தார்.

அனைத்து அரசியல் கட்சிகளையும் முழு அரசியல் ஸ்தாபனத்தையும் எதிர்த்த மக்களின் மனநிலையை வலியுறுத்திய அவர், “225 பேரும் வேண்டாம்; இந்த முறைமையே மாற வேண்டும்” என்ற கோஷங்களில் ஜே.வி.பி./தே.ம.ச.க்கு எதிரான எதிர்ப்பும் உள்ளடங்கியிருந்தது என்று கூறினார்.

ஜே.வி.பி. மற்றும் முன்னிலை சோசலிசக் கட்சி ஆகிய இரு கட்சிகளும் “இடைக்கால அரசாங்கம்” ஒன்றை அமைக்கவே பிரச்சாரம் செய்தன என்று குறிப்பிட்ட அவர், “நாங்கள் கோரிய முறைமை மாற்றம் அதில் இல்லை என்பதை இப்போது நன்றாகப் புரிந்துகொள்கிறோம்,” என்றார். பின்னர் ஜனாதிபதியாக பதவியேற்ற ரணில் விக்கிரமசிங்க, சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்துடன் தான் உட்பட தொழிலாளர்களையும் “கட்டிப்போட்டார்” என்றும், தற்போதைய அரசாங்கம் “அதே கொள்கையைத் தொடர்கிறது” என்றும் அவர் கூறினார்.

முதலாளித்துவத்தின் கீழ் தனியாருக்குச் சொந்தமான உற்பத்திச் சாதனங்களை, தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதன் மூலமும், முதலாளித்துவ இலாபத்திற்குப் பதிலாக மனிதத் தேவைகள் பூர்த்தி செய்யப்படும் வகையில் சர்வதேச அளவில் பொருளாதாரத்தை மறுசீரமைப்பதன் மூலமுமே ஒரு உண்மையான “முறைமை மாற்றம்” ஏற்படும் என்று பிரச்சாரகர்கள் விளக்கினர்.

இந்த வேலைத்திட்டத்திற்கு முற்றிலும் விரோதமாக இருந்த தொழிற்சங்க அதிகாரத்துவத்திலிருந்து சுயாதீனமான தொழிலாளர் நடவடிக்கைக் குழுக்களை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை பிரச்சாரகர்கள் வலியுறுத்தினர். முதலாளித்துவ முறைமையின் காலாவதியான தன்மையை உணர்ந்து, ஒரு சோசலிச அமைப்பின் தேவையை அங்கீகரித்து, அவர் கட்சி நிதிக்கு ஆதரவளித்தார்.

2022 வெகுஜனப் போராட்டங்களில் பங்கேற்ற ஒரு தொழில்நுட்பப் ஊழியர், அந்த வெகுஜன எழுச்சியால் மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்பட முடியாமல் போனதற்குக் காரணம், “சரியான தலைமைத்துவமும் சரியான வேலைத்திட்டமும் இல்லாமையே” என்றார். “போராட்டத்தின் தலைமையை கைப்பற்றிய பல்வேறு தலைவர்கள், ராஜபக்ஷ ஆட்சியை அகற்றி ஒரு “மக்கள் அரசாங்கத்தை” அமைக்க வேண்டும் என்று கூறி கொண்டு வந்த அரசாங்கம்தான் இன்று எங்கள் மீது இந்தத் தாக்குதல்களை நடத்துகின்றன,” என அவர் தெரிவித்தார்.

“நீங்கள் கூறியது போல், முன்னிலை சோசலிசக் கட்சி மற்றும் தொழிற்சங்கங்கள் உட்பட சக்திகள், “அரசியல் வேண்டாம்” என்று கூறி வெகுஜனர் போராட்டத்தை தவறான பாதைக்குத் திருப்பிவிட்டன,” என அவர் அங்கீகரித்தார்.

தொழிலாளர் வர்க்க அரசியலைத் தடுக்க முனைந்த இந்த பெயரளவில் கட்சிசார்பின்மை மற்றும் அரசியல் வேண்டம் என்ற வாதங்களுக்கு எதிராக, சர்வதேச சோசலிசக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் தொழிலாளர்-விவசாயிகள் அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டுவரும் வேலைத்திட்டத்தை முன்வைத்து, 2022 வெகுஜன எழுச்சியின் போது சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) மற்றும் ஐ.வை.எஸ்.எஸ்.இ. மேற்கொண்ட போராட்டத்தை விளக்கிய பின்னர், அவர் கட்சியின் அபிவிருத்தி நிதிக்கும் நன்கொடை வழங்கினார்.

புகையிரத திணைக்களம் உட்பட 400க்கும் மேற்பட்ட அரச நிறுவனங்களை வணிகமயமாக்கவும் தனியார்மயமாக்கவும் அரசாங்கம் தயாராகி வருவதாக விளக்கிய போது, “இந்த அரசாங்கமும் இதே பாதையில் சென்றால், 2022 போன்ற ஒரு நிலைமை மீண்டும் உருவாகலாம்,” என ஒரு தொழிலாளி கூறினார்.

சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கைகளுடன் நேரடியாக இணைந்து செயல்படும் அனைத்து தொழிற்சங்கங்களும் தொழிலாளர்களின் போர்க்குணத்தை அடக்குவதில் ஈடுபட்டு வருகின்றன. அதேவேளை, ஜே.வி.பி.யுடன் இணைந்துள்ள தொழிற்சங்கங்கள், அரசாங்கத்தின் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்திற்கு எதிராக எந்தவிதமான போராட்டத்தையும் ஒழுங்கமைப்பதை முற்றிலுமாகத் தவிர்த்து வருகின்றன. இந்த நிலையில், தொழிலாளர்கள் ஒவ்வொரு வேலைத்தளத்திலும் தொழிலாளர் நடவடிக்கைக் குழுக்களை அமைத்து, போராட்டத்தின் தலைமையைத் தமது கைகளில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று சோ.ச.க. மற்றும் ஐ.வை.எஸ்.எஸ்.இ. பிரச்சாரகர்கள் வலியுறுத்தினர். பல தொழிலாளர்கள் பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதாக உறுதியளித்தனர்.

கூட்டத்தில் பங்கேற்க இங்கே பதிவு செய்துகொள்ளுங்கள்.

Loading