மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
கடந்த சனிக்கிழமையன்று நடைபெற்ற “மன்னர்கள் வேண்டாம்” ஆர்ப்பாட்டங்கள், அமெரிக்க வரலாற்றில் இடம்பெற்ற மிகப்பெரிய வெகுஜன ஆர்ப்பாட்டங்களில், 7 மில்லியன் மக்களை அமெரிக்கா முழுவதும் வீதிகளில் அணிதிரட்டியது. இது, ட்ரம்ப் நிர்வாகத்தின் சர்வாதிகாரத்தை நிறுவுவதற்கான சதித்திட்டத்திற்கு வளர்ந்து வரும் மக்கள் எதிர்ப்புக்கு சக்திவாய்ந்த வெளிப்பாட்டை கொண்டிருந்தது. வெள்ளை மாளிகையிலிருந்து பாசிச துர்நாற்றம் வீசுகிறது. மில்லியன் கணக்கான மக்கள் அந்த துர்நாற்றத்தை உணர்கின்றனர்.
போராட்டங்களில் பங்கேற்றவர்களுக்கு அல்லது அதனை ஆதரித்தவர்களுக்கு, இப்போது ஒரு கேள்வி அவசரமாக எழுகிறது: அடுத்து என்ன?
பாரிய போராட்டங்கள், ட்ரம்ப் ஆட்சிக்கு எதிரான ஒரு விரிவடைந்து வரும் இயக்கத்தின் தொடக்கம் மட்டுமே ஆகும். ஆனால், இந்த இயக்கம் முன்னோக்கிச் செல்ல வேண்டுமானால், போராட்டங்கள் விமர்சன ரீதியாக மதிப்பீடு செய்யப்பட்டு ஒட்டுமொத்த அரசியல் சூழ்நிலைமையின் உள்ளடக்கத்திற்குள் வைக்கப்பட வேண்டும். ஆனால் ஆபத்து என்னவென்றால், ஒரு தெளிவான அரசியல் முன்னோக்கு குறித்த புரிதல் இல்லாமல், இந்த மகத்தான மக்கள் எதிர்ப்பு சிதறடிக்கப்படும் என்பதாகும்.
ஆர்ப்பாட்டங்கள் எவ்வளவுதான் பிரமாண்டமானதாக இருந்தாலும், சர்வாதிகாரத்தை நோக்கிய ட்ரம்பின் உந்துதலை இது நிறுத்திவிடாது என்பதை முதலில் புரிந்து கொள்வது அவசியமாகும். ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது மலம் கொட்டுவதை சித்தரிக்கும் செயற்கை நுண்ணறிவு உருவாக்கிய வீடியோக்களை ஊக்குவிப்பதில் ஜனாதிபதியின் சொந்த பதில், கொடூரமானதாகவும் வன்முறையாகவும் இருந்தது. இது, மக்கள் மீதான ஒரு குற்றவியல் ஆட்சியின் அவமதிப்பை வெளிப்படுத்தியது.
ட்ரம்ப் ஒரு தனிநபராக பேசவில்லை, மாறாக ஒரு வர்க்கத்தின், முதலாளித்துவ செல்வந்த தன்னலக்குழுவின் அரசியல் பிரதிநிதியாக பேசுகிறார். பெருகிவரும் பொருளாதார, புவிசார் அரசியல் மற்றும் உள்நாட்டு நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள ஆளும் உயரடுக்கு அதன் செல்வவளம் மற்றும் சலுகைகளை பாதுகாப்பது, ஜனநாயக ஆட்சி வடிவங்களுடன் பொருந்தாது என்ற முடிவுக்கு வந்துள்ளது.
போராட்டங்கள் இடம்பெற்ற இரண்டு நாட்களுக்குப் பின்னர், ஒன்பதாம் சுற்றுக்கான அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம், ஓரிகான் மாநிலம் போர்ட்லேண்டிற்கு தேசிய பாதுகாப்புப் படையினரை அனுப்புவதற்கு வெள்ளை மாளிகை அனுமதிக்கலாம் என்று தீர்ப்பளித்தபோது, இந்த உண்மை அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டது. இந்தத் தீர்ப்பு, ட்ரம்ப் சர்வாதிகாரத்தை நோக்கிச் செல்வது நீதிமன்றங்கள் மற்றும் இராணுவம் உள்ளிட்ட அரச அமைப்பின் செயலில் உள்ள ஒத்துழைப்பை அடிப்படையாகக் கொண்டது என்பதை தெளிவுபடுத்துகிறது.
போராட்டங்களில் மிகத் தெளிவாக இல்லாதது இந்த அரசாங்கத்தை எதிர்க்கக்கூடிய ஒரு வரையறுக்கப்பட்ட வேலைத்திட்டமாகும். “மன்னர்கள் வேண்டாம்” என்ற பிரகடனம் மிகவும் பரந்த அளவில் உணரப்படும் ஒரு ஜனநாயக உணர்வை வெளிப்படுத்துகிறது. ஆனால், சர்வாதிகாரத்திற்கான உந்துதல் எவ்வாறு நிறுத்தப்பட வேண்டும் என்பதை அது வரையறுக்காத வகையில், அது ஒரு சுருக்கமாகும். இந்தப் பலவீனம், மக்களின் பரந்த பிரிவுகளிடையே இன்னும் குறைந்த அளவிலான வரலாற்று மற்றும் அரசியல் நனவையும், போராட்டங்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் அதன் துணை நிறுவனங்களின் அரசியல் கட்டுப்பாட்டின் கீழ்தான் இருந்தன என்பதையும் பிரதிபலிக்கிறது.
இந்த இயக்கத்தை ஜனநாயகக் கட்சிக்கு அடிபணியச் செய்வது ட்ரம்பின் பாசிச சதிகளுக்கு எதிரான போராட்டத்திற்கு ஆபத்தானது (முற்றிலும் ஆபத்தானது) என்பதை வெளிப்படையாகக் கூற வேண்டும். ஜனநாயகக் கட்சி எப்போதுமே ஒரு முதலாளித்துவக் கட்சியாகத்தான் இருந்து வருகிறது. வரலாற்று ரீதியாக, அது சமூக இயக்கங்களின் கல்லறையாகவும், மக்கள் எதிர்ப்பை அவமதித்து புதைக்கும் இடமாகவும் செயல்பட்டு வருகிறது. ஜனநாயகக் கட்சியினர் ட்ரம்ப் நிர்வாகத்திற்கு எதிர்ப்பாளர்களாக அல்ல, மாறாக அதன் ஒத்துழைப்பாளர்கள் மற்றும் செயல்படுத்துபவர்களாக செயல்படுகையில், இது இன்று மிகவும் நிஜமாக வெளிப்படுகிறது.
ட்ரம்ப் நிர்வாகத்தின் வளர்ந்து வரும் சர்வாதிகார சதித்திட்டத்தை மூடிமறைக்க பல வாரங்களாக தன்னால் முடிந்த அனைத்தையும் செய்த பின்னர், நியூ யோர்க்கில் நடந்த ஒரு போராட்டத்தில் பங்கேற்ற வோல் ஸ்ட்ரீட் செனட்டரான செனட் சிறுபான்மைத் தலைவர் சக் ஷூமர் போன்றவர்களும் இதில் அடங்குவர். இந்த ஆண்டின் தொடக்கத்தில் ட்ரம்பின் அரசாங்கத்திற்கு நிதியுதவியை உறுதிப்படுத்தும் வரவு செலவுத் திட்டத் தீர்மானத்தை நிறைவேற்றுவதில் முக்கிய பங்கை வகித்தவர் சக் ஷுமர் ஆவர்.
எவ்வாறெனினும், வாஷிங்டன் டி.சி.யில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முக்கிய உரையை நிகழ்த்த அழைத்து வரப்பட்ட பேர்னி சாண்டர்ஸ் போன்ற தனிநபர்கள் அரசியல்ரீதியாக மிகவும் தீங்கு விளைவிக்கின்றனர். ட்ரம்பை எதிர்க்கும் எந்தவொரு உண்மையான வேலைத்திட்டமும் இல்லாததை வெற்று வாய்வீச்சுடன் மறைப்பதே சாண்டர்ஸ் உட்பட அலெக்ஸாண்ட்ரியா ஒகாசியோ-கோர்டெஸ், சோஹ்ரான் மம்தானி மற்றும் அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்டுகளின் ஏனைய உறுப்பினர்கள் பலரினதும், மாறுவேடமிட்ட தீவிர அரசியல் வஞ்சகம் ஆகும்.
சாண்டர்ஸ் தனது உரையில் தற்போதைய நெருக்கடிக்கான உண்மையான காரணங்களை எதனையும் குறிப்பிடவில்லை. பகுப்பாய்வின் ஒரு துளிகூட இல்லை, முதலாளித்துவம் அல்லது சோசலிசம் பற்றிய ஒரு குறிப்புக் கூட இல்லை, குற்றவியல் ட்ரம்ப் அரசாங்கம் எவ்வாறு பதவியில் இருந்து விரட்டப்பட வேண்டும் என்பது பற்றிய ஒரு வார்த்தை கூட இல்லை. இதுதான் அடிப்படைக் கேள்வியாகும். அதற்கு பதிலாக, அவர் தனது “குடியரசுக் கட்சி சகாக்களுக்கு” “பேச்சுவார்த்தைகளைத் தொடங்குமாறும்” “அமெரிக்க சுகாதார அமைப்பு அழிக்கப்படாமல் இருக்கவும்” வேண்டுகோள் விடுத்தார். வேறு ஒரு நேரத்தில், சமூகப் பாதுகாப்பை புறக்கணிக்க வேண்டாம் என்று அவர் தனது “நாஜி சகாக்களுக்கு” அழைப்பு விடுப்பாரா?
ஜனநாயகக் கட்சியின் மூலம் ட்ரம்பையும் பாசிசத்தின் வளர்ச்சியையும் எதிர்க்க முடியும் என்றும், மேலும் பாசிசத்தை உருவாக்கும் முதலாளித்துவ அமைப்பு முறையை எதிர்க்காமல் இருக்க முடியும் என்றும் கூறுவதே அடிப்படையில் ஏமாற்று வேலையாகும். ஆனால், இதுதான் அடிப்படைப் பிரச்சினை. சோசலிச சமத்துவக் கட்சி “மன்னர்கள் வேண்டாம்” போராட்டங்களுக்கு அதன் அறிக்கையில் விளக்கியதைப் போல, “1930 களின் ஒட்டுமொத்த வரலாற்று அனுபவமும் பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தை முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்தில் இருந்து பிரிக்க முடியாது என்பதை எடுத்துக்காட்டியது.”
ஜனநாயகக் கட்சியினர் மற்றும் அவர்களுடன் இணைந்த அமைப்புக்களின் நோக்கம், முதலாளித்துவத்தை அச்சுறுத்தும் ஒரு அரசியல் வேலைத்திட்டம் மற்றும் திசையை அபிவிருத்தி செய்வதில் இருந்து எந்தவொரு சமூக எதிர்ப்பு இயக்கத்தையும் தடுப்பதாகும். அவர்களின் இலக்கு நீராவியை தணித்து, மக்கள் எதிர்ப்பை அவர்களின் சொந்த ஏகாதிபத்திய-சார்பு அரசியல் திட்டநிரலுக்குப் பின்னால் திசை திருப்புவதாகும். போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் மற்றும் ட்ரம்பின் சதித்திட்டதை நிறுத்த ஒரு வழியைத் தேடுபவர்கள், இது நடப்பதை அனுமதிக்க கூடாது.
சோசலிச சமத்துவக் கட்சி அக்டோபர் 18 போராட்டங்களில் தலையிட்டு ஒரு சோசலிச வேலைத்திட்டம் மற்றும் அரசியல் முன்னோக்குக்காக போராடியது. அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் நடந்த போராட்டங்களில், அதன் ஆதரவாளர்கள் “மன்னர்கள் வேண்டாம், நாஜிக்களின் தலைவர்கள் வேண்டாம்! ட்ரம்பின் சர்வாதிகாரத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டு!” என்ற சோசலிச சமத்துவக் கட்சியின் அறிக்கையின் பல்லாயிரக்கணக்கான பிரதிகளையும், “ட்ரம்பின் பாசிச சதி மற்றும் அதை எவ்வாறு .எதிர்த்துப் போராடுவது: ஒரு சோசலிச மூலோபாயம்” என்ற கட்சியின் துண்டுப் பிரசுரத்தையும் விநியோகித்தனர்.
சோசலிச சமத்துவக் கட்சியின் தலையீடு, பாசிசம் மற்றும் முதலாளித்துவத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதற்கான ஒரு மூலோபாயத்துடன் ஆயுதபாணியாக்கப்பட்டு, தன்னெழுச்சியான கோபத்தை ஒரு நனவான அரசியல் இயக்கமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டிருந்தது.
சோசலிச சமத்துவக் கட்சியின் தலையீட்டுக்கான பிரதிபலிப்பானது, சந்தேகத்திற்கு இடமில்லாத ஒரு அரசியல் உண்மையை வெளிப்படுத்தியது: சர்வாதிகாரம், சமத்துவமின்மை மற்றும் போருக்கு மக்களிடையே ஒரு பிரமாண்டமான, ஆழமான எதிர்ப்பும், ஜனநாயகக் கட்சி மீதான பரந்த எதிர்ப்பும் உள்ளது. மேலும், ஒரு சோசலிச வேலைத்திட்டத்திற்கு வளர்ந்து வரும் வரவேற்பும் உள்ளது. சோசலிச சமத்துவக் கட்சியின் பிரச்சாரகர்களிடம் பேசிய தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இந்த நெருக்கடி ஏன் உருவாகியுள்ளது என்பதை மட்டுமல்லாமல், அதைத் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பதையும் புரிந்து கொள்ள விரும்பினர்.
இந்தக் கேள்விக்குத் திரும்புவோம்: அடுத்து என்ன? தொழிலாள வர்க்கத்தில் சோசலிசத்திற்கான ஒரு தாக்குதலை அபிவிருத்தி செய்வதே இதற்கான பதிலாகும். பல தொழிலாளர்கள் இந்தப் போராட்டங்களில் பங்கேற்றாலும், அவர்கள் முதன்மையாக தனிநபர்களாகவே பங்கேற்றனர். வர்க்கப் போராட்டத்தை அடக்குவதற்கான ஒரு பொறிமுறையாக, முற்றிலும் செயல்படும் தொழிற்சங்க எந்திரத்தால் ஆற்றப்பட்ட முற்றிலும் தீங்கு விளைவிக்கும் பங்கே இதற்குக் காரணமாகும்.
தொழிலாள வர்க்கம், இன்னமும் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட சக்தியாக, அதன் சொந்த வேலைத்திட்டத்துடன் போராட்டத்தில் தலையிடவில்லை. இந்த நிலைமை மாற வேண்டும். ட்ரம்ப் நிர்வாகத்தின் அனைத்து நடவடிக்கைகளின் மைய இலக்கு தொழிலாள வர்க்கமாகும். மத்திய கூட்டாட்சி ஊழியர்களின் பெருமளவிலான பணிநீக்கத்தால் வேலையின்மைக்கு தள்ளப்படும் தொழிலாளர்கள், முக்கியமான சமூகத் திட்டங்கள் அழிக்கப்படுவதை எதிர்கொள்கின்றனர். இவர்கள், கல்வித் துறை அகற்றப்படுவதாலும் ஆசிரியர்கள் மீதான தீவிரமடைந்து வரும் தாக்குதல்களாலும் மேலும் பாதிக்கப்படுவார்கள்.
பொது சுகாதாரம் தகர்க்கப்படுவது சுகாதாரப் பணியாளர்களுக்கான நிலைமைகளை முறிவு நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது. அதேவேளையில் ட்ரம்பின் வர்த்தகப் போர்க் கொள்கைகள், வாழ்க்கைத் தரங்களை துடைத்தெறிந்து, அதிகரித்து வரும் பணவீக்கத்திற்கு எரியூட்டி வருகின்றன. தொழிலாள வர்க்கம்தான் தீவிரமடைந்து வரும் உலகப் போரில் பீரங்கிகளுக்கு தீவனமாக பயன்படுத்தப்படும்.
ட்ரம்ப் “உள்ளே இருக்கும் எதிரி” பற்றி பேசுகையில், அவர் தொழிலாள வர்க்கத்தின் மீதான முதலாளித்துவ தன்னலக்குழுவின் அச்சங்களுக்கு குரல் கொடுத்து வருகிறார். அவர் “சோசலிசம்” மற்றும் “மார்க்சிசத்தை” முன்னெப்போதிலும் பார்க்க கூடுதலான வெறித்தனத்துடன் கண்டனம் செய்கையில், அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் பெருந்திரளான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் முதலாளித்துவ அமைப்புமுறையை ஒழிப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு புரட்சிகர வேலைத்திட்டத்தை நோக்கி நனவுபூர்வமாக திரும்புவார்கள் என்ற பில்லியனர்களின் பயங்கரத்தை அவர் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்.
அமெரிக்கா முழுவதிலும் மற்றும் சர்வதேச அளவிலும் சமூக எதிர்ப்பு மற்றும் எதிர்ப்பின் மனோநிலை அதிகரித்து வருகிறது. அடுத்த போராட்டத்திற்காக செயலற்ற முறையில் காத்திருப்பது அல்ல, மாறாக சோசலிசத்திற்கான, தொழிலாள வர்க்க இயக்கத்திற்கான போராட்டத்தில், இந்த எதிர்ப்பு போராட்டத்தை ஒரு நெம்புகோலாக பயன்படுத்துவதே இப்போதைய பணியாகும்.
சோசலிச சமத்துவக் கட்சி, சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியின் (IWA-RFC) பாகமாக ஒவ்வொரு வேலையிடத்திலும் சாமானிய தொழிலாளர் குழுக்களைக் கட்டியெழுப்புவதற்கும், தொழிலாள வர்க்கத்திற்குள் ஒரு நனவான சோசலிச இயக்கத்தை அபிவிருத்தி செய்வதற்கும், மற்றும் மூலோபாயரீதியில் இணைந்துள்ள மற்றும் உலகளாவிய தொழிலாள வர்க்கத்தின் அபிவிருத்திக்குமான போராட்டங்களுடன் அமைப்புரீதியாக இணைக்கப்பட்டு, அபிவிருத்தி செய்வதற்கும் போராட்டத்தை முன்னின்று நடத்தி வருகிறது.
சர்வாதிகாரத்திற்கு எதிரான எதிர்ப்பை, ஒரு சர்வதேசியவாத சோசலிச மூலோபாயத்தை அடிப்படையாகக் கொண்ட தொழிலாள வர்க்கத்தின் சமூக மற்றும் அரசியல் போராட்டங்களில் வேரூன்றியுள்ள அளவிற்குத்தான் முன்னோக்கிச் செல்ல முடியும். முதலாளித்துவத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவும், சமூகத்தின் செல்வ வளத்தை தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரவும், ஒரு சோசலிச இயக்கத்தை அபிவிருத்தி செய்யாமல் ஜனநாயகத்தைப் பாதுகாப்பது என்பது சாத்தியமற்றது.
இந்த வேலைத்திட்டத்துடன் உடன்படும் அனைவரையும் சோசலிச சமத்துவக் கட்சியில் இணையுமாறு நாம் அழைப்பு விடுக்கின்றோம்.