இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் திருவொற்றியூரில் அமைந்துள்ள மெட்ராஸ் இரப்பர் தொழிற்சாலை (MRF) ஆலையில் 800 தொழிலாளர்கள் நடத்திய காலவரையற்ற வேலைநிறுத்தம், 19 நாட்களுக்குப் பின்பு செப்டம்பர் 30 அன்று, MRF ஊழியர் சங்கத்தால் (MEU) திடீரென முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.
MRF என்பது இந்தியா முழுவதும் பத்து உற்பத்தி ஆலைகளைக் கொண்ட ஒரு டயர் உற்பத்தி நிறுவனமாகும். பல்வேறு ஆலைகளில், குறிப்பாக தமிழ்நாட்டில், MRF தொழிலாளர்கள் முற்றிலும் சர்வாதிகார நிர்வாகத்திற்கு எதிராக வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர். கடந்த 25 ஆண்டுகளாக, தொழிற்சங்க அங்கீகாரம், தரமான ஊதியம் மற்றும் வேலை நிலைமைகளுக்காகப் போராடும் தொழிலாளர்களை நிறுவனம் தொடர்ந்து பழி வாங்கி துன்புறுத்தி வருகிறது.
திருவொற்றியூர் ஆலைத் தொழிலாளர்கள் குறைந்தபட்ச கோரிக்கைகளை முன்வைத்தனர்: நிரந்தரத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதற்குப் பதிலாக அடிமை ஊதியத்தில் பயிற்சித் தொழிலாளர்களை பணியமர்த்துவதை நிறுத்த வேண்டும், மற்றும் தொழிலாளர்களின் சார்பாக வருடாந்த சுகாதார காப்பீட்டு கட்டணங்களை முன்கூட்டியே செலுத்தும் நிறுவனத்தின் நீண்டகால நடைமுறையைத் தொடர வேண்டும். அதனை, தொழிலாளர்கள் ஆறு மாத காலத்திற்குள் தங்கள் சம்பளத்திலிருந்து பிடித்துக்கொள்ள அனுமதிப்பதன் மூலம் நிறுவனத்திற்குத் திருப்பிச் செலுத்துகிறார்கள்.
மாநிலத்தின் தீவிரமான வணிக-சார்பு திமுக (திராவிட முன்னேற்றக் கழகம்) அரசாங்கத்தின் ஆதரவுடன் தொழிற்சாலை முகாமையாளர்களால், MEU நிர்வாகிகளை கீழ்ப்படிய நிர்ப்பந்திக்க முடிந்தது. ஸ்ராலினிச இந்திய தொழிற்சங்கங்களுக்கான மையத்தின் (CITU) நிர்வாகிகளுடன், MEU, நெருக்கமாக இணைந்துள்ளதுடன் அனைத்து நடைமுறை நோக்கங்களுக்காகவும் அதன் ஆலோசனைகளைப் பெறுகிறது. தமிழ்நாட்டில் அதிக அளவில் அதன் கிளைகளைக் கொண்டுள்ள CITU, ஒப்பந்த மற்றும் பயிற்சித் தொழிலாளர்களை ஓரங்கட்டிவிட்டு, தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்களை ஒரே ஆலைக்குள் தனிமைப்படுத்தும் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளதுடன், தொழிலாளர் விரோத திமுக அரசாங்கத்திடமும் நீதிமன்றங்களிடமும் நல்லெண்ணத்தைக் காட்டுமாறு வீண் வேண்டுகோள்களை விடுக்கும் மட்டத்திற்கு தொழிலாளர்களை மட்டுப்படுத்தி வைத்திருக்கிறது.
CITU ஆனது, ஸ்ராலினிச இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அல்லது CPM இன் தொழிற்சங்கப் பிரிவாகும் என்ற விடயத்தில் இருந்தே அதன் அழுகிய மூலோபாயம் இயல்பாகவே பிறக்கிறது. திமுக அரசாங்கத்துடன் நெருக்கமாக இணைந்துள்ள CPM, அதை தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் நலனில் அக்கறை கொண்ட ஒரு முற்போக்கான பிராந்தியக் கட்சியாக தூக்கிப் பிடிக்கின்றது. பல தசாப்தங்களாக மாநிலத்தை தொடர்ந்து ஆட்சி செய்து வரும் திமுக, மாநிலத்தை பன்னாட்டு நிறுவனங்களுக்கு இலாபம் ஈட்டும் சொர்க்கமாக மாற்றியுள்ளது. இதன் விளைவாக, இந்த மாநிலம் பூகோள முதலீடுகளுக்கு விருப்பமான தேர்வாக மாறியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கத்தின் தேசிய பயிற்சி ஊக்குவிப்புத் திட்டத்தின் (NAPS) கீழ், பயிற்சித் தொழிலாளர்கள் என்று அழைக்கப்படுவோரை MRF நிர்வாகம் வேண்டுமென்றே பணியமர்த்தும் நடைமுறையை தொழிலாளர்கள் எதிர்த்ததைத் தொடர்ந்தே, செப்டம்பர் 11 அன்று வேலைநிறுத்தம் தொடங்கியது. பின்னர், நிர்வாகம் ஒப்பந்த மற்றும் தற்காலிக தொழிலாளர்களைப் பயன்படுத்தி உற்பத்தியைத் தொடர்ந்த அதேவேளை, வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்களை வெளியேற்றுவதாக அறிவித்தது.
'இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க வடிவமைக்கப்பட்டதாக சித்தரிக்கப்பட்ட ஒரு திட்டமான NAPS இன் கீழ், இளம் தொழிலாளர்கள் 5,000 முதல் 9,000 ரூபாய் வரை (US$57 முதல் $103 வரை), அடிமை ஊதியம் என்று விவரிக்கக்கூடியதை மட்டுமே பெறுகிறார்கள். இந்த தொகையின் அளவு, 5 ஆம் மற்றும் 9 ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் கல்லூரி பட்டம் வரை ஒரு தொழிலாளியின் கல்வித் தகுதியைப் பொறுத்து வழங்கப்படுகிறது. NAPS இன் கீழ், இந்த ஊதியத் தொகையின் 25 சதவீதம் வரை, ஒரு தொழிலாளிக்கு மாதம் அதிகபட்சம் 1,500 ரூபா (US$17) வரை குறித்த நிறுவனத்திற்கு நட்ட ஈடாக கொடுக்கின்றது.
NAPS இன் கீழ் பயிற்சி பெறுபவகளுக்கு MRF இல் பயிற்சி பெறுபவர் முன்பு பெற்றதை விட மிகக் குறைவாகவே ஊதியம் வழங்கப்படுகிறது. உயர்நிலைப் பள்ளி மற்றும் தொழில்நுட்பப் பள்ளிகளின் பட்டதாரிகளுக்கு MRF பயிலுனருக்கான மாதாந்த உதவித்தொகை ரூபா 16,500 (US$187) ஆகவும், கல்லூரி பட்டதாரிக்கு ரூபா 18,000 (US$206) ஆகவும் இருந்தது.
NAPS பணியமர்த்தலுக்கு தொழிலாளர்களின் எதிர்ப்பு பலத்த ஒலியுடன் அதிகரித்ததால், பழிவாங்கும் நிறுவன நிர்வாகம் தொழிலாளர்களின் வருடாந்த சுகாதார காப்பீட்டு கட்டணத்தை இனி செலுத்த மாட்டோம் என்று அறிவித்தது. MRF இற்கான அதன் மொத்த காப்பீட்டு செலவு 10 மில்லியன் ரூபா (சுமார் US$115,000) ஆகும். இது 31 மார்ச் 2025 இல் முடிவடைந்த நிதியாண்டில், அதன் அறிவிக்கப்பட்ட வரிக்குப் பிந்தைய இலாபமான 18.2 பில்லியன் ரூபா (US$208 மில்லியன்) மற்றும் அதன் ரொக்க இருப்பு ரூபா 185 பில்லியனை (US$2.1 பில்லியன்) விட அற்பத் தொகையாகும்.
எப்படியிருந்தாலும், ஒரு தொழிலாளிக்கான மொத்த வருடாந்த காப்பீட்டு கட்டணமான 12,000 ரூபா (US$136), ஆறு மாத தவணைகளில் அவர்களின் சம்பளத்தில் இருந்து கழிக்கப்படுவதால், முன்னர் குறிப்பிட்டதுபோல், சுகாதார காப்பீட்டுத் திட்டத்தின் முழுச் செலவையும் தொழிலாளர்களே ஏற்கிறார்கள்.
நிறுவனம் திடீரென சுகாதார காப்பீட்டு கட்டணத்தைக் குறைத்ததன் நோக்கம், அவர்களின் ஊதியத்தைக் குறைப்பதற்காக, NAPS திட்டத்தை ஏற்றுக்கொள்ளும்படி மிரட்டுவதை நோக்கமாகக் கொண்டது என்பதை தொழிலாளர்கள் புரிந்துகொண்டனர். இது தொழிலாளர்களின் எதிர்ப்பு மற்றும் போர்க்குணமிக்க மனநிலையை உக்கிரமாக்கிய நிலையில், CITU உடன் நெருக்கமான ஒருங்கிணைப்பில் MEU காலவரையற்ற வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டது.
ஆரம்பத்தில் ஒரு சுயாதீன தொழிற்சங்கமாக உருவாக்கப்பட்ட போதிலும், பொதுவாக நிரந்தர தொழிலாளர்களை விட அதிகளவானவர்களாக உள்ள ஒப்பந்த மற்றும் தற்காலிக தொழிலாளர்களுடன் நிரந்தர தொழிலாளர்களை ஒன்றிணைக்க MEU குறைந்தபட்ச நடவடிக்கைகளைக் கூட எடுக்கவில்லை. நிர்வாகம் வேலைநிறுத்தத்தை 'சட்டவிரோதமானதாக' அறிவித்து, உற்பத்தி வரிசைகளை தொடர்ந்து இயக்குவதற்கு மிகக் குறைந்த ஊதியம் பெறும் ஒப்பந்த மற்றும் தற்காலிக தொழிலாளர்களைப் பயன்படுத்திய நிலையில், இந்த ஒன்றிணைவை ஏற்படுத்தத் தவறியமை வேலைநிறுத்தத்தை பெரிதும் பலவீனப்படுத்தியது.
இதற்கும் மேலாக, MRF தொழிலாளர்கள் தனித்தனி தொழிற்சங்கங்களாகப் பிரிக்கப்பட்டு, நிறுவனம் முழுவதுமாக வேலைநிறுத்தத்தை நடத்துவதற்கான தொழிலாளர்களின் முயற்சிகள் பலவீனப்படுத்தப்பட்டது. திருவொற்றியூர் ஆலைக்கு மேற்கே சுமார் 95 கி.மீ தொலைவில் அமைந்துள்ள MRF அரக்கோணம் ஆலையில், தொழிலாளர்கள் தங்கள் MRF ஐக்கிய தொழிலாளர் சங்கத்திற்கு (MUWU) முறையான அங்கீகாரத்தைப் பெறுவதற்காக 2009 இல் 125 நாள் கடுமையான போராட்டத்தை நடத்தினர். இருந்தபோதிலும், அரக்கோணம் ஆலை நிர்வாகம் MUWUக்கு எதிராக ஒரு கைப்பாவை தொழிற்சங்கத்தை உருவாக்கியது.
MRF திருவொற்றியூரில் வேலைநிறுத்தம் வெடித்த பிறகு, தமிழ்நாட்டில் வேலைநிறுத்தங்களின் போது நிர்வாகத்தின் கட்டளையை சட்டப்பூர்வமாக செயல்படுத்தும் நிறுவனமாக மாறியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், தொழிலாளர்கள் தொழிற்சாலை வாயிலுக்கு அருகில் தங்கள் போராட்டங்களை நடத்த வேண்டாம் என்று உத்தரவிட்டது. இதற்கு பின்னர் போராட்டங்கள் நடைபெறும் இடத்தை அருகிலுள்ள விம்கோ நகரில் உள்ள CITU அலுவலகத்திற்கு அருகில் மாற்றுமாறு ஸ்ராலினிச CITU அதிகாரத்துவம் MEU நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியது.
வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்களுக்கு ஆற்றிய உரையில், CITU மாநிலத் தலைவர் ஏ. சௌந்தரராஜன், திமுக தலைமையிலான மாநில அரசாங்கத்திடம் 'உடனடியாக தலையிட வேண்டும்' என்று வேண்டுகோள் விடுத்தார், 'தொழிலாளர் அமைச்சரும் அதிகாரிகளும் நிர்வாகத்தை மேசைக்கு அழைக்க வேண்டும்' என்றும் கூறினார். பின்னர் அவர் வாய்ச்சவடாலாக கேட்டார்: 'நிர்வாகம் தொழிலாளர்களை வெளியேற்றும் போது ஏன் இந்த மௌனம்?'
உண்மையில், திமுக மாநில அரசாங்கம் செயலில் இறங்கியது! செப்டம்பர் 30 அன்று, மாநில கூடுதல் தொழிலாளர் ஆணையர், MEU தலைவர்களை ஆலை உற்பத்தி மற்றும் மனிதவள மேலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அழைத்தார். அது நிறுவனத்திற்கு முற்றிலும் ஆதரவாக ஒரு 'தீர்வை' விதிப்பதற்கானாதாக இருந்தது.
ஆணையர் இவ்வாறு உத்தரவிட்டார்: 'தொழிலாளர்கள் மற்றும் நிர்வாகம், இருதரப்பினரும் செப்டம்பர் 9 அன்று நடைமுறையில் இருந்த நிலையையே கடைப்பிடிக்க வேண்டும். தொழிலாளர்கள் இணக்கமாக வேலை செய்ய வேண்டும், வேலைநிறுத்த நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது. நிர்வாகம் எந்த பழிவாங்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபடக்கூடாது. இறுதியாக, இரு தரப்பினரும் இணக்கமாக செயல்பட்டு ஒரு தீர்வைக் காண வேண்டும்'.
'எனக்கு ரூபா 60,000 (US$686) மொத்த ஊதியம் கிடைக்கிறது, பிடித்தங்களுக்கு பின்னர், எனக்கு மாதம் ரூபா 40,000 (US$457)' கிடைக்கிறது, என்று MRF இல் 32 ஆண்டுகளாகப் பணியாற்றிக் கொண்டிருக்கும் செய்யும் நிரந்தர ஊழியரான ஆரியா உலக சோசலிச வலைத் தளத்திடம் தெரிவித்தார். 'என் மனைவி வீட்டையும் எங்கள் இரண்டு பெண் பிள்ளைகளையும் கவனித்துக்கொள்கிறார். அவர்கள் உயர் படிப்பை முடித்துவிட்டு இப்போது ஐடி நிறுவனங்களில் பணிபுரிகிறார்கள்.'
MEU வின் 'வேலைக்குத் திரும்புதல்' உத்தரவைப் பற்றி ஆரியா கோபமடைந்தார். 'இது பூஜ்யம் (zero), பூஜ்யம் மற்றும் பூஜ்ஜியம் தவிர வேறில்லை. தொழிற்சங்கத் தலைவர்கள் தற்போதைய நிலையைத் தக்கவைக்க ஒப்புக்கொண்டதில் பெரும்பாலான தொழிலாளர்கள் மகிழ்ச்சியடையவில்லை. தொழிலாளர்களின் போர்க்குணமிக்க மனநிலையால் அதிர்ச்சியடைந்த தொழிற்சங்கத் தலைவர்கள், தொழிற்சங்கத் தலைமைத்துவம் மற்றும் JCL [தொழிலாளர் கூட்டு ஆணையரும்] அவர்கள் மீது சுமத்திய துரோக விதிமுறைகளுக்கு அடிபணிந்தனர்.'
MRF திருவொற்றியூர் ஆலையில் தற்போது 61 பயிலுனர்கள் உட்பட 820 தொழிலாளர்கள் பணிபுரிவதுடன் மேலும் 300-400 பேர் வரை ஒப்பந்தத் தொழிலாளர்கள் அங்கு இருப்பதாக ஆரியா கூறினார்.
நிரந்தரத் தொழிலாளர்கள் ஓய்வு பெறும்போது, அவர்களின் இடம் NAPS பயிலுனர்களால் நிரப்பப்படும் என்பது தொழிலாளர்களிடையே காணப்படும் பரவலான நம்பிக்கை. 'நாங்கள் அதை எதிர்க்கிறோம், ஏனெனில் NAPS தொழிலாளர்கள் சரியான பயிற்சி பெறுவதில்லை, அவர்கள் உற்பத்தியில் ஈடுபடும்போது அவர்கள் மோசமாக காயமடையக்கூடும்,' என்று ஆரியா கூறினார்.
திருவொற்றியூர் மற்றும் பிற MRF ஆலைகளில் உள்ள தொழிலாளர்களைப் பொறுத்தவரை, அவர்கள் எதிர்கொள்ளும் முக்கிய கேள்வி போராட்டத்தை எவ்வாறு முன்னோக்கி எடுத்துச் செல்வது என்பதுதான். தொழிலாளர்கள் புதிய போராட்டக் கருவிகளை, அதாவது தாங்களே கட்டுப்படுத்தக்கூடிய தொழிலாளர் நடவடிக்கை குழுக்களை உருவாக்கி, அனைத்து MRF ஆலைகளிலும் உள்ள தொழிலாளர்களை ஒன்றிணைத்தால் மட்டுமே முன்நோக்கி செல்வது சாத்தியமாகும். நிர்வாகம், திமுக அரசாங்கம், நீதிமன்றங்கள் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தில் உள்ள அவர்களின் கூட்டாளிகளின் இடைவிடாத தாக்குதல்களை எதிர்கொள்ளும் தமிழ்நாட்டில் உள்ள பல்லாயிரக்கணக்கான தொழில்துறை தொழிலாளர்களுடன் MRF தொழிலாளர்கள் இணைவதற்கான வழிகளை இந்தக் குழுக்கள் வழங்கும்.