முன்னோக்கு

அக்டோபர் 18 அன்று நடந்த "மன்னர்கள் வேண்டாம்" ஆர்ப்பாட்டங்களும் ட்ரம்பின் சர்வாதிகாரத்திற்கு எதிரான போராட்டமும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

இண்டியானாபோலிஸில் “மன்னர்கள் வேண்டாம்” போராட்டத்தின் ஒரு பகுதி, ஜோர்ஜ் வாஷிங்டனின் சிலை அரச மாளிக்கைக்கு முன்னால் தெரிகிறது. [Photo: WSWS]

அக்டோபர் 18 சனிக்கிழமையன்று, “மன்னர்கள் வேண்டாம்” ஆர்ப்பாட்டங்களின் இரண்டாவது அலை இடம்பெற்றது. இதில் இளைஞர்கள், தொழிலாளர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்கள் ஆகியோர் ட்ரம்ப் நிர்வாகத்தின் சர்வாதிகார இயக்கத்தை எதிர்த்துப் போராடுவதற்கும், இந்த சர்வாதிகார ஆட்சியின் உயர் அதிகாரிகளால் தங்களுக்கு எதிராக வீசப்படும் கம்யூனிச விரோத களங்கங்கள் மீதான வெறுப்பை வெளிப்படுத்துவதற்கும் வீதிகளில் இறங்கினர்.

அமெரிக்கா முழுவதிலும் மாநகரங்கள் மற்றும் நகரங்களில் இடம்பெற்ற 2,700 க்கும் மேற்பட்ட தனித்தனி ஆர்ப்பாட்டங்கள், ஒட்டுமொத்தமாக நாட்டின் வரலாற்றில் இடம்பெற்ற மிகப்பெரிய அரசியல் ஆர்ப்பாட்டங்களில் ஒன்றாகும். அமைப்பாளர்கள் ஏழு மில்லியன் மக்கள் இதில் பங்கேற்றதாக மதிப்பிட்டுள்ளனர். ஜூன் மாதம் நடந்த “மன்னர்கள் வேண்டாம்” பேரணிகளின் முதல் சுற்றில் பங்கேற்றதை விட, இதில் இரண்டு மில்லியன் மக்கள் அதிகமாக பங்கேற்றனர்.

நியூ யோர்க், பொஸ்டன், சிக்காகோ, லொஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் வாஷிங்டன் டி.சி. உட்பட பல முக்கிய நகரங்களில் நூறாயிரக்கணக்கான மக்கள் பேரணிகளில் கலந்து கொண்டனர். அதே நேரத்தில், நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான மற்றும் பல்லாயிரக்கணக்கானோர் நாடு முழுவதிலும் உள்ள சிறிய நகரங்கள் மற்றும் நகரங்களில் அணிவகுத்தனர். ஐரோப்பாவில், லண்டன், பாரிஸ், பேர்லின், மாட்ரிட், ஸ்டாக்ஹோம், ரோம் மற்றும் டசின் கணக்கான சிறிய நகரங்களில் நடந்த இதற்கு இணையான ஆர்ப்பாட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

ட்ரம்ப் ஒரு சவால் செய்ய முடியாத அரசியல் பிரமுகர் என்று பெருநிறுவன ஊடகங்களும், ஜனநாயகக் கட்சியும் ஊக்குவித்துவந்த அதிகாரப்பூர்வமான கதையை, போராட்டத்தில் பங்கேற்ற மக்களின் அளவும், வீச்சும் தகர்த்தெறிந்தது. அக்டோபர் 18 அன்று, வீதிகளில் வெளிப்படுத்தப்பட்ட உண்மை என்னவென்றால், ட்ரம்ப் மற்றும் அவரது பாசிச அமைச்சரவை பிரமுகர்கள், பாரிய மற்றும் வளர்ந்து வரும் எதிர்ப்பை எதிர்கொள்கின்றனர் என்பதாகும்.

பேரணிகளில் பங்கேற்றவர்கள், வீட்டில் தயாரிக்கப்பட்ட பல பதாகைகளுடன், ஜனநாயக உரிமைகள் அழிக்கப்படுவதையும், புலம்பெயர்ந்தோர் மீதான தாக்குதல்களையும், நகரங்களுக்கு துருப்புக்களை அனுப்புவதையும், மத்திய கூட்டாட்சி தொழிலாளர்களை பெருமளவில் பணிநீக்கம் செய்வதையும், சமூகத் திட்டங்களை ஒழிப்பதையும் கண்டனம் செய்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட எதிர்ப்பாளர்கள், நடந்துவரும் காஸா இனப்படுகொலை, பாரிய வறுமைக்கு மத்தியில் செல்வந்தர்களை வளப்படுத்துதல், சர்வாதிகாரம் மற்றும் போரை நோக்கிய விரைவான உந்துதலையும் எதிர்த்தனர்.

ட்ரம்ப், துணை ஜனாதிபதி ஜேடி வான்ஸ், சபாநாயகர் மைக் ஜோன்சன் மற்றும் வெள்ளை மாளிகையின் செய்தி ஊடகச் செயலாளர் கரோலின் லீவிட் ஆகியோர், போராட்டங்களை முன்கூட்டியே இழிவுபடுத்தியதானது, சனிக்கிழமை வீதிகளில் இறங்கியவர்களை கோபப்படுத்தியதே ஒழிய அவர்களை பயமுறுத்தவில்லை. ஆர்ப்பாட்டக்காரர்களை இவர்கள் “ஹமாஸ் ஆதரவாளர்கள்”, “பாசிச எதிர்ப்பு பயங்கரவாதிகள்”, “சட்டவிரோத வெளிநாட்டவர்கள்” மற்றும் “கடுமையான குற்றவாளிகள்” என்று வெறித்தனமாகக் கண்டனம் செய்ததால், ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற மக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்தது.

இந்த ஆர்ப்பாட்டங்களை ஊக்குவிக்கும் உணர்வுகள், ஜனநாயகக் கட்சியினுள் வெளிப்படுத்தப்படும் எதையும் விட, மிகவும் இடதுசாரித்தனமானவையாக இருந்தன. ஏராளமான மக்கள் பாசிச ட்ரம்ப் நிர்வாகத்துடன் மட்டுமல்லாமல், முதலாளித்துவ தன்னலக்குழுவின் மற்றொரு பிரிவை பிரதிநிதித்துவப்படுத்தும் ஜனநாயகக் கட்சியுடனும் மோதலுக்கு வருகிறார்கள்.

சனிக்கிழமை இடம்பெற்ற போராட்டங்களுக்கு, மறுநாள் ஞாயிற்றுக்கிழமை ட்ரம்ப் தனது பதிலை அளித்தார். பொக்ஸ் நியூஸுடன் முன்கூட்டியே பதிவு செய்யப்பட்ட ஒரு கலந்துரையாடலில், “மறந்துவிடாதீர்கள்: நான் கிளர்ச்சிச் சட்டத்தைப் பயன்படுத்த முடியும்” என்று ட்ரம்ப் அறிவித்தார். மூத்த நிர்வாக அதிகாரிகளால் உடனடியாக அறிவிக்கப்பட்ட இந்தச் சட்டம், ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் செயலில் உள்ள இராணுவப் படைகளைப் பயன்படுத்துவதற்கு அங்கீகாரம் அளிக்கும். ஜனநாயகக் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள மாநிலங்களை நேரடியாக அச்சுறுத்திய ட்ரம்ப், தேசிய காவலர் படைகளை சான் பிரான்சிஸ்கோவுக்குள் அனுப்ப திட்டமிட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.

ஆர்ப்பாட்டம் நடந்த நாளில், ட்ரம்ப், தனது நாஜி வளர்ப்பு மற்றும் புத்திஜீவித சீரழிவுக்கு உண்மையாக, அசுத்தமாக பதிலளித்தார். அவர் தனது சமூக ஊடக கணக்கில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அதில், அவருக்கு விருப்பமான நாஜித் தலைவரின் கிரீடம் அணிந்து, “மன்னர் ட்ரம்ப்” என்ற வார்த்தைகளால் பொறிக்கப்பட்ட ஒரு விமானத்தை இயக்கி, டைம்ஸ் சதுக்கத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது மலத்தை வீசும் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அதில், துணை ஜனாதிபதி வான்ஸ் வெளியிட்ட மற்றொரு செயற்கை நுண்ணறிவு வீடியோவில், ஜனநாயகக் கட்சி அரசியல்வாதிகள் அவருக்கு முன்னால் தலைவணங்கும்போது, முடிசூட்டப்பட்ட ​​ட்ரம்ப், வாளை சுழற்றுவதாக சித்தரித்தார்.

பாராளுமன்ற சபாநாயகர் மைக் ஜோன்சன், அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் ஆழமான பீதிகளுக்கு குரல் கொடுத்து, ABC நியூஸின் “இந்த வாரம்” நேர்காணல் நிகழ்ச்சியில், ஒவ்வொரு வாரமும் “மார்க்சிசம் மற்றும் சோசலிசத்தின் ஆபத்துகள் குறித்து உங்களுடன் பேசுவேன்” என்று கூறினார். “இது ஒரு ஆபத்தான சித்தாந்தம், இது அமெரிக்காவுக்கு எதிரானது. இது, நாம் ஆதரிக்கும் அனைத்திற்கும் எதிரானது” என்று அவர் மேலும் கூறினார். நியூ யோர்க்கின் மேயராக ஜோஹ்ரான் மம்தானி தேர்ந்தெடுக்கப்படுவதற்கான சாத்தியக் கூறுகளைப்பற்றி அவர் குறிப்பிடுகையில், விரைவாக நிராகரித்து வரும் வரையறுக்கப்பட்ட சீர்திருத்தங்களின் திட்டத்தின் கீழ், “ஜனநாயகக் கட்சியில் மார்க்சியத்தின் எழுச்சி” குறித்து ஜோன்சன் எச்சரித்தார்.

அக்டோபர் 18 அன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களை ட்ரம்ப் மற்றும் குடியரசுக் கட்சி பாசிஸ்டுகள் வன்முறையில் கண்டனம் செய்திருப்பது, வன்முறை அச்சுறுத்தல்களுடன் சேர்ந்து, மக்களின் வளர்ந்து வரும் எதிர்ப்பு மற்றும் அரசியல் தீவிரமயமாக்கல் குறித்து முதலாளித்துவ தன்னலக்குழுக்களின் பயங்கரத்தை வெளிப்படுத்துகிறது. அவர்கள் போராட்டத்தின் ஒவ்வொரு வெளிப்பாட்டிலும் ஒரு சோசலிசப் புரட்சியின் பேயைக் காண்கிறார்கள். அவர்களின் பாசிச உலகக் கண்ணோட்டத்தில், அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் பழமையான முதலாளித்துவக் கட்சியான ஜனநாயகக் கட்சியின் பல் இல்லாத சீர்திருத்தவாத முறையீடுகள் கூட, கிளர்ச்சியைத் தூண்டுவதாகவும், சோசலிசத்தை நியாயப்படுத்துவதாகவும் பார்க்கப்படுகின்றன.

நிச்சயமாக, உண்மைக்கு அப்பால் எதுவும் இருக்க முடியாது. கடந்த சனிக்கிழமை எழுச்சிபெற்ற பாரிய எதிர்ப்பை, ஜனநாயகக் கட்சி கடுமையாக எதிர்க்கிறது மற்றும் அதன் முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிட முயற்சிக்கிறது. இந்தக் கட்சி, ட்ரம்பின் பொருளாதார மற்றும் சமூக இலக்குகளை பரவலாகப் பகிர்ந்து கொள்கிறது மற்றும் அவருக்கு எதிரான எந்தவொரு பாரிய இயக்கத்தையும் எதிர்க்கிறது.

ஜனநாயகக் கட்சிக்கு நெருக்கமான முக்கிய பத்தரிகையான நியூ யோர்க் டைம்ஸ், கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை அதன் வலைத் தளத்தின் முதல் பக்கத்தில் சிறிய எழுத்துக்களில் இரண்டு மேலோட்டமான கட்டுரைகளை வெளியிட்டதன் மூலம் இதை மிகத் தெளிவாகக் கூறியது. அதன் அச்சுப் பதிப்பின் A17 பக்கத்தில், “இனி ட்ரம்ப் இல்லை!: நாடு முழுவதும் ஜனாதிபதியை ஒன்றிணைக்கும் எதிர்ப்பாளர்கள்” என்று வெளியான முதல் கட்டுரை, கூட்டத்தின் அளவுகள் குறித்த எந்த மதிப்பீட்டையும் வழங்குவதைத் தவிர்த்தது மற்றும் ஆர்ப்பாட்டங்களின் மகத்தான நோக்கத்தை வெளிப்படுத்த எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இரண்டாவது கட்டுரை, “ஆயிரக்கணக்கானோர் ட்ரம்பின் நிகழ்ச்சி நிரலை எதிர்க்கும்போது வான்ஸ் கடற்படையினரின் வலிமையை வளைக்கிறார்,” நம்பமுடியாத அளவிற்கு, “நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான மக்கள் ஒரு ஜனாதிபதியை ஒரு மன்னரைப் போல தனது அதிகாரத்தைப் பயன்படுத்துவதாகக் குற்றம் சாட்டினர்” என்று எழுதியது (வலியுறுத்தல் சேர்க்கப்பட்டது). ஞாயிற்றுக்கிழமை மாலைக்குள், இந்த இரண்டு கட்டுரைகளும் கூட டைம்ஸின் முதல் பக்கத்திலிருந்து நீக்கப்பட்டன.

அக்டோபர் 18 போராட்டங்களுக்கு முன்னதாக, உயர்மட்ட ஜனநாயகக் கட்சியினர் இவை நடக்கின்றன என்பதையே புறக்கணித்தனர். போராட்டங்களுக்கு முன்னதாக, அவை எவ்வளவு பெரியதாக இருக்கும் என்பது தெளிவாகத் தெரிந்தவுடன், கட்சித் தலைவர்கள் ஆதரவு தெரிவித்த மந்தமான அறிக்கைகளை வெளியிட்டனர். செனட் பெரும்பான்மை தலைவர் சக் ஷூமர், நியூ யோர்க் நகரில் தொழிற்சங்க அதிகாரிகளுடன் அணிவகுத்துச் செல்லும் புகைப்படங்களை வெளியிட்டு, “அமெரிக்காவில் எங்களுக்கு சர்வாதிகாரிகள் இல்லை” என்று அப்பட்டமாக அறிவித்தார். ஆனால், ஜனநாயகக் கட்சியின் உடந்தையுடன் ட்ரம்ப் ஒரு சர்வாதிகாரியாக செயல்படுகிறார் என்ற உண்மையுடன் இந்த அறிக்கை முரண்படுகிறது.

ஜனநாயகக் கட்சியினரின் தலையீடு முற்றிலும் எதிர்ப்பைத் தணிப்பதையும், மில்லியன் கணக்கானவர்களின் ஆழமான கோபத்தை கட்சியின் சொந்த பிற்போக்குத்தனமான, போர்-சார்பு மற்றும் முதலாளித்துவ-சார்பு திட்டநிரலின் பின்னால் திசை திருப்புவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இது அடுத்த நாள் இன்னும் தெளிவாகியது, முன்னணி ஜனநாயகக் கட்சியினர் அமெரிக்க வரலாற்றில் மிகப் பெரிய எதிர்ப்பு இயக்கம் ஒருபோதும் நடக்காதது போல் செயல்பட்டனர்.

ஜோன்சனைத் தொடர்ந்து, ABC யின் “இந்த வாரம்” நிகழ்ச்சியில் பிரதிநிதிகள் சிறுபான்மை தலைவர் ஹக்கீம் ஜெஃப்ரிஸ், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் ட்ரம்பின் AI பிரச்சார வீடியோக்கள் அல்லது ஜனாதிபதி சர்வாதிகாரத்தை ஸ்தாபிப்பதற்காக நடந்து வரும் சதித்திட்டம் குறித்து எதுவும் குறிப்பிடவில்லை. அதற்குப் பதிலாக, அரசாங்க பணிமுடக்கத்தை முடிவுக்குக் கொண்டுவர குடியரசுக் கட்சியினருடன் “இருகட்சிவாதம்” மற்றும் “பேச்சுவார்த்தை” ஆகியவற்றுக்கான முறையீடுகளில் அவர் முற்றிலும் கவனம் செலுத்தினார். “நாங்கள் உட்கார விரும்புகிறோம், செலவின ஒப்பந்தத்தை இயற்றுவதற்கு ஒரு இருகட்சி பாதையைக் கண்டுபிடிக்க விரும்புகிறோம்,” என்று ஜெஃப்ரிஸ் கூறினார். அதே நேரத்தில், மலிவு பராமரிப்பு சட்ட மானியங்கள் குறித்து ட்ரம்ப்புடன் ஒரு “ஒப்பந்தம்” ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளையும் அவர் வெளிப்படுத்தினார்.

ஜனநாயகக் கட்சிக்குள் “இடது” என்று காட்டிக் கொள்பவர்கள் — எல்லாவற்றிற்கும் மேலாக, செனட்டர் பேர்ணி சாண்டர்ஸ்— குறிப்பாக ஒரு மோசமான பாத்திரத்தை வகிக்கின்றனர். முன்னதாக வெர்மான்ட்டில் ஒரு சிறிய நிகழ்வில் உரையாற்ற திட்டமிட்டிருந்த பின்னர், வாஷிங்டன் டி.சி.யில் பிரதான பேரணியில் பாராசூட் மூலம் நுழைவதற்கான சாண்டர்ஸின் கடைசி நிமிட முடிவு, மில்லியன் கணக்கானவர்களின் வளர்ந்து வரும் தீவிரமயமாதலை மீண்டும் ஜனநாயகக் கட்சியின் பாதுகாப்பான எல்லைக்குள் திருப்பி விடுவதை நோக்கமாகக் கொண்ட ஒரு திட்டமிட்ட தலையீடாக இருந்தது.

சாண்டர்ஸின் உரை அதன் தூய்மையான வடிவத்தில் வெற்று வாய்வீச்சாக இருந்தது—எந்தவொரு அரசியல் உள்ளடக்கமும் இல்லாத பில்லியனர்களின் தார்மீக முறையீடுகள் மற்றும் கண்டனங்களின் ஒரு தொகுப்பாக இருந்தது. “சுதந்திரம்”, “ஜனநாயகம்” மற்றும் எதேச்சாதிகாரத்தின் ஆபத்து ஆகியவற்றுக்கு அழைப்பு விடுத்த அதேவேளையில், அவர் ஒரு முறை கூட முதலாளித்துவம் அல்லது சோசலிசத்தைக் குறிப்பிடவில்லை. சாண்டர்ஸ் “உழைக்கும் குடும்பங்களுக்காக போராடுவது” பற்றி பேசினார். ஆனால், அவர் எந்த வகையான போராட்டத்தை முன்மொழிந்தார் என்பது குறித்து எந்த விளக்கத்தையும் வழங்கவில்லை. ஏனென்றால், அவர் அதை முன்மொழியவில்லை.

சாண்டர்ஸ் வெளியிட்ட மிக முக்கியமான அறிக்கையில், “எனது குடியரசுக் கட்சி சகாக்களுக்கு நான் சொல்கிறேன், உங்கள் ஒரு மாத கால விடுமுறையிலிருந்து திரும்பி வாருங்கள், பேச்சுவார்த்தைகளைத் தொடங்குங்கள், அமெரிக்க சுகாதார அமைப்பு அழிக்கப்பட அனுமதிக்காதீர்கள். இந்த பணிநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வாருங்கள்” என்று அறிவித்தார். இவர் குறிப்பிட்ட “சகாக்கள்” ட்ரம்பின் பாசிச சக சதிகாரர்கள் ஆவர். அரசாங்கம் கிளர்ச்சிச் சட்டத்தைப் பிரயோகிக்கவும் மக்களுக்கு எதிராக இராணுவத்தை நிலைநிறுத்தவும் தயாராகி வருகின்ற நிலைமைகளின் கீழ், அவர்களை “பேச்சுவார்த்தையில்” பங்காளிகளாக அழைப்பது வெறுமனே அப்பாவித்தனம் அல்ல, இது அரசியல் உடந்தையின் செயலாகும்.

பல தொழிலாளர்கள் தாங்களாகவே போராட்டத்தில் முன்வந்து பங்கேற்ற போதிலும், இப்போராட்டங்களுக்கு முறையாக ஆதரவளித்த தொழிற்சங்கங்கள் மத்தியில் கூட, அதன் உறுப்பினர்களை அணிதிரட்ட எந்த முயற்சியும் எடுக்காத தொழிற்சங்க எந்திரமும் உள்ளது.

நியூ யோர்க் நகரில், பெரிய அளவில் ஒழுங்கமைக்கப்பட்ட தொழிற்சங்கக் குழு எதுவும் இல்லை. அருகிலுள்ள “தொழிற்சங்கப் பேரணியில்” மிகக் குறைந்த எண்ணிக்கையிலானோரே போராட்டத்தில் கலந்து கொண்டனர். மேலும், அதில் சாமானியத் தொழிலாளர்கள் அல்ல, அதிகாரிகளே ஆதிக்கம் செலுத்தினர். அமெரிக்க வாகனத் துறையின் வரலாற்று மையமான டெட்ராய்டில் நடந்த ஆர்ப்பாட்டத்தை ஐக்கிய வாகனத் தொழிலாளர்கள் சங்கத்தின் (UAW) தொழிற்சங்கம் ஆதரிக்கவில்லை அல்லது அதன் உறுப்பினர்களை அணிதிரட்டவில்லை. ஷான் ஃபைனின் கீழ் உள்ள UAW தொழிற்சங்க எந்திரமானது, ட்ரம்ப் நிர்வாகத்தின் பொருளாதார தேசியவாதம் மற்றும் வர்த்தகப் போரின் திட்டத்துடன் வெளிப்படையாக தன்னை இணைத்துக் கொண்டுள்ளது.

“மன்னர்கள் வேண்டாம்” ஆர்ப்பாட்டங்கள் ஒரு குறிப்பிடத்தக்க அரசியல் திருப்புமுனையை பிரதிநிதித்துவம் செய்கின்றன. கடந்த ஜூன் மாதம் நடந்த கடைசி ஆர்ப்பாட்டங்களுக்குப் பின்னர், ஒரு சர்வாதிகாரத்தை ஸ்தாபிப்பதற்கான ட்ரம்பின் சதி தீவிரமடைந்துள்ளது. இது, நாடு முழுவதும் பாரிய எதிர்ப்பை உருவாக்கியுள்ளது. வாஷிங்டனில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் இருந்து வந்த ஒரு அறிக்கையில், “எனக்கு இப்போது ஜனநாயகக் கட்சி மீது அதிக நம்பிக்கை இல்லை” என்று ஒரு கட்டுமானத் தொழிலாளி கூறியதாக NBC குறிப்பிட்டது. அதேபோல, ட்ரம்ப் மீதான விரோதம், ஜனநாயகக் கட்சியில் உள்ள அவரது கூட்டாளிகள் மீதும் விரைவாக விரிவடைந்து வருகிறது. இன்னொரு தொழிலாளி கருத்துத் தெரிவிக்கையில், “பெருநிறுவன நலன்களால் ஜனநாயகக் கட்சியும் விலைக்கு வாங்கப்படுகிறது, மேலும் அது சராசரி உழைக்கும் மக்களுக்காக நிற்கத் தவறிவிட்டது” என்று குறிப்பிட்டார்.

கார்ப்பரேட் ஊடகங்கள் இத்தகைய உணர்வுகள் குறித்து செய்தி வெளியிடுவது மிகவும் அசாதாரணமானது. பிரிட்டிஷ் செய்தித்தாளான தி கார்டியனின் அமெரிக்க பதிப்பில் வெளிவந்த அறிக்கை இன்னும் அசாதாரணமானது. “இடதுசாரிக் குழுக்கள் ஒரு தெளிவான அரசியல் வேலைத்திட்டம் மற்றும் ஸ்தூலமான கோரிக்கைகளை முன்வைக்க அழைப்பு விடுத்துள்ளன” என்று அது குறிப்பிட்டது.

அக்டோபர் 15 அன்று வெளியிடப்பட்ட “மன்னர்களும் வேண்டாம், நாஜிக்களின் தலைவர்களும் வேண்டாம்! ட்ரம்பின் சர்வாதிகாரத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டு!” என்ற அறிக்கையில், சோசலிச சமத்துவக் கட்சி, “மன்னர்கள் வேண்டாம்” என்ற மைய முழக்கம், சர்வாதிகாரத்திற்கு எதிரான பரந்த மக்களின் விரோதத்தை வெளிப்படுத்துகிறது என்று கூறியது. ஆனால், “சர்வாதிகாரத்தை நிறுத்த கோபமும் சீற்றமும் மட்டும் போதாது” என்று அது எச்சரித்தது.

பெரும் பார்வையாளர்களுக்கு முன்னால் “ஒரு தெளிவான அரசியல் வேலைத்திட்டம் மற்றும் ஸ்தூலமான கோரிக்கைகளை” முன்வைத்த ஒரே அமைப்பு சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே என்பது ஒரு புறநிலை உண்மையாகும். சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினர்களும் ஆதரவாளர்களும், அதேபோல் சமூக சமத்துவத்துக்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பின் உறுப்பினர்களும், அமெரிக்கா பூராவும் டசின் கணக்கான இடங்களில் பத்தாயிரக்கணக்கான துண்டுப் பிரசுரங்களை போராட்டத்தில் விநியோகித்தனர்.

கார்டியன் பத்திரிகை மேலே மேற்கோள் காட்டிய அறிக்கையை மறுபதிப்பு செய்து விநியோகிக்கப்பட்ட இந்த துண்டுப்பிரசுரங்கள், அமெரிக்காவின் ஒரு கரையிலிருந்து அடுத்த கரைவரை பேரணி சென்றவர்களிடமிருந்து உற்சாகமான வரவேற்பைப் பெற்றன. “ட்ரம்பின் பாசிச சதி மற்றும் அதை எவ்வாறு எதிர்த்துப் போராடுவது: ஒரு சோசலிச மூலோபாயம்” என்ற தலைப்பில் வெளியான சோசலிச சமத்துவக் கட்சியின் சமீபத்திய அறிக்கைகள் அடங்கிய புதிய துண்டுப்பிரசுரத்தின் நூற்றுக்கணக்கான பிரதிகள் விநியோகிக்கப்பட்டன.

காஸாவில் நடந்துவரும் இனப்படுகொலைக்கு எதிரான பாரிய எதிர்ப்புக்களின் அனுபவம், ஒரு முக்கியமான படிப்பினையை வழங்குகிறது. உலகெங்கிலும் பல பத்து மில்லியன் கணக்கானவர்கள் பங்கபற்றிய இந்த ஆர்ப்பாட்டங்களின் அளவு பெரிதாக இருந்தபோதிலும், அவை படுகொலைகளை நிறுத்தத் தவறிவிட்டன. ஏனென்றால், அவை அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சி உட்பட ஆளும் வர்க்கத்தின் கட்சிகளுக்கு அரசியல்ரீதியாக அடிபணிந்திருந்தன.

ட்ரம்ப் மற்றும் பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தில், ஜனநாயகக் கட்சிக்கு அடிபணிவது முற்றிலும் ஆபத்தானது. பேரணியில் ஒட்டுமொத்தமாக விநியோகிக்கப்பட்ட சோசலிச சமத்துவக் கட்சியின் அறிக்கை விளக்குவதைப் போல, ட்ரம்பின் ஆட்சி ஒரு பிறழ்வு அல்ல, மாறாக ஒரு நோயுற்ற சமூக ஒழுங்கின் விளைபொருளாகும். இது தன்னலக்குழுவின் அரசாங்கம். “ட்ரம்ப், எந்தவொரு வழக்கமான, சட்ட, அரசியலமைப்பு மற்றும் வன்முறையற்ற தீர்வுகளும் கையில் இல்லாத, அதிகரித்து வரும் பொருளாதார, சமூக மற்றும் புவிசார் அரசியல் நெருக்கடிகளைச் சமாளிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்” என்று நாங்கள் எழுதினோம்.

தற்போதைய நெருக்கடியின் விளைவு, ஒரே உண்மையான புரட்சிகர சமூக சக்தியான தொழிலாள வர்க்கமாகும். அது, சுயாதீனமாக, நனவுபூர்வமாக, அதன் சொந்த வேலைத்திட்டத்துடன் அரசியல் சூழ்நிலைக்குள் தலையீடு செய்கிறதா என்பதைப் பொறுத்தது. மில்லியன் கணக்கானவர்கள் வீதிகளில் இறங்கினர். அதில் பல தொழிலாளர்கள் பங்கேற்றனர். ஆனால், தொழிலாள வர்க்கம் வர்க்கப் போராட்ட வழிமுறைகள் மூலம் இன்னும் சுயாதீனமாக தலையிடவில்லை.

சோசலிச சமத்துவக் கட்சி ஒவ்வொரு பணியிடத்திலும், பள்ளியிலும், சுற்றுப்புறத்திலும் சாமானிய தொழிலாளர் குழுக்களை கட்டியெழுப்புவதற்காக போராடுகிறது. இந்தக் குழுக்கள், ட்ரம்ப் அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பொலிஸ் அரசு நடவடிக்கைகளுக்கு எதிராக, தொழிலாளர்களின் பொருளாதார மற்றும் சமூக நலன்களை மட்டுமல்ல, மாறாக அவர்களின் மிக அடிப்படையான ஜனநாயக உரிமைகளையும் பாதுகாக்க போராடி வருகிறது. அனைத்து தொழில்துறைகள் மற்றும் எல்லைகளைக் கடந்து தொழிலாளர்களின் போராட்டங்களை ஐக்கியப்படுத்த, சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணி (IWA-RFC) மூலமாக, அவர்களை தேசிய மற்றும் சர்வதேச அளவில் ஒருங்கிணைக்க வேண்டும்.

தொழிலாள வர்க்கம் அதன் சொந்த, சுயாதீனமான அடிப்படையில் அரசியல் போராட்டத்திற்குள் நுழைவது ஒட்டுமொத்த நிலைமையையும் மாற்றிவிடும். சர்வாதிகாரத்தையும் போரையும் எதிர்த்துவரும், ஆனால் ஒரு தெளிவான அரசியல் மாற்றீடு இல்லாத மில்லியன் கணக்கான மக்களுக்கு, இது ஒரு புரட்சிகர ஈர்ப்பு துருவத்தை வழங்கும்.

சோசலிச சமத்துவக் கட்சி, வளர்ந்து வரும் தொழிலாளர் மற்றும் இளைஞர் இயக்கத்தை, வரலாற்று, அரசியல் மற்றும் வர்க்க சக்திகள் பற்றிய தெளிவான புரிதலுடன் ஆயுதபாணியாக்க போராடி வருகிறது. அமெரிக்காவில் சர்வாதிகாரத்திற்கு எதிரான போராட்டம், ஏகாதிபத்தியப் போர், சமூக சமத்துவமின்மை மற்றும் முதலாளித்துவ சுரண்டலுக்கு எதிரான உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களின் போராட்டத்திலிருந்து பிரிக்க முடியாதது. சோசலிசத்திற்கான பொதுப் போராட்டத்தில், சர்வதேச தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதே முன்னோக்கிச் செல்லும் பாதையாகும்.

Loading