நாஜிசம், பெருவணிகம் மற்றும் தொழிலாள வர்க்கம்: வரலாற்று அனுபவமும் அரசியல் படிப்பினைகளும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

நாஜிசம், பெருவணிகம் மற்றும் தொழிலாள வர்க்கம்: வரலாற்று அனுபவமும் அரசியல் படிப்பினைகளும்

அக்டோபர் 16, 2025 அன்று, உலக சோசலிச வலைத் தளமானது (WSWS), நாஜிசம், பெருவணிகம் மற்றும் தொழிலாள வர்க்கத்திற்கு இடையிலான வரலாற்று உறவை ஆராய்ந்து ஒரு இணையவழிக் கருத்தரங்கை நடத்தியது. இந்தக் கருத்தரங்கு சமகாலத்து நிகழ்வுகளுக்கு பொருந்தக் கூடியதாக உள்ளது.

இந்தக் கலந்துரையாடலுக்கு, WSWS இன் சர்வதேச ஆசிரியர் குழு மற்றும் அமெரிக்காவில் சோசலிச சமத்துவக் கட்சியின் தலைவரான டேவிட் நோர்த் தலைமை தாங்கினார். அவருடன் மூன்று புகழ்பெற்ற வரலாற்றாசிரியர்களும் இணைந்திருந்தனர்: வெய்மர் குடியரசின் வீழ்ச்சி, அரசியல் பொருளாதாரம் மற்றும் நெருக்கடி என்ற புத்தகத்தின் ஆசிரியரான மியாமி பல்கலைக்கழகத்தின் சட்டப் பேராசிரியரான டேவிட் ஆபிரகாம்; கனேடிய வரலாற்றாசிரியரும் பெருவணிகமும் ஹிட்லரும் என்ற நூலின் ஆசிரியருமான ஜாக்ஸ் பாவெல்ஸ்; மற்றும் ஜேர்மனியின் போட்ஸ்டாமில் உள்ள சமகால வரலாற்று மையத்தின் மூத்த சக உறுப்பினரான மரியோ கீலர், ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் ஐரோப்பிய தொழிலாளர் இயக்கங்கள் மீது கவனம் செலுத்துகிறார்.

1980களில், வரலாற்றாசிரியர் ஆபிரகாமின் வாழ்க்கையை நாசமாக்கிய கடுமையான கல்வி பிரச்சாரம் குறித்த டேவிட் நோர்த்தின் விளக்கத்துடன் இந்த இணையக் கருத்தரங்கு தொடங்கியது. ஜேர்மன் முதலாளித்துவத்திற்குள் ஏற்பட்ட மோதல்கள் ஹிட்லரின் எழுச்சிக்கு எவ்வாறு உதவியது என்பது குறித்த மார்க்சிய பகுப்பாய்வை வெளியிட்ட பிறகு, பழமைவாத வரலாற்றாசிரியர்களான ஜெரால்ட் ஃபெல்ட்மேன் மற்றும் ஹென்றி ஆஷ்பி டர்னர் ஆகியோரின் தாக்குதலுக்கு ஆபிரகாம் உள்ளானார். அவர்கள் அவரை மோசடி செய்ததாக குற்றம் சாட்டினர். இந்த தாக்குதல் “சித்தாந்த விரோதம், தனிப்பட்ட வெறுப்பு மற்றும் அறிவுசார் நுண்ணறிவு” இல்லாமை ஆகியவற்றால் தூண்டப்பட்டவை என்று ஆபிரகாம் விளக்கினார்.

இந்தக் கலந்துரையாடலின் போது, ​​ஹிட்லரின் எழுச்சி தற்செயலானது அல்லது முதலாளித்துவ நலன்களுடன் தொடர்பில்லாதது என்ற கூற்றை ஜாக் பவெல்ஸ் தாக்கினார். “ஹிட்லர் அதிகாரத்தைக் கைப்பற்றியது என்பது வெறும் அதிகார பரிமாற்றம் அல்லது சரணடைதல் மட்டுமே” என்று அவர் கூறினார். மேலும், “தொழில்துறை மற்றும் நிதியத்தின் நிதி மற்றும் பிற ஆதரவு இல்லாமல், குறிப்பாக இதனை வேறு வார்த்தைகளில் கூறினால், பெருவணிகம், ஜேர்மன் அதிகார உயரடுக்கின் மற்ற பகுதியினரின் ஆதரவு இல்லாமல் ஹிட்லர் ஒருபோதும் அதிகாரத்திற்கு வந்திருக்க முடியாது” என்று அவர் விவரித்தார். பாவெல்ஸ் பாசிசத்தை “முதலாளித்துவத்தின் குச்சி, அது எல்லா நேரங்களிலும் பயன்படுத்தப்படாது, ஆனால் நிச்சயமாக எப்போதும் கதவின் பின்னால் அது தயாராக இருக்கும்” என்று விவரித்தார்.

சோசலிசத்தை நோக்கிய இடதுசாரி தீவிரமயமாதலைத் தடுத்த அதேவேளையில், மத்தியதர வர்க்கங்களை ஹிட்லர் அணிதிரட்டியது குறித்து மரியோ கீலர் உரையாற்றினார். நாஜிக் கட்சி “தொழிலாள வர்க்கத்திற்குள் தொடர்ச்சியான ஊடுருவல்களை ஏற்படுத்துவதில் ஒருபோதும் வெற்றி பெறவில்லை” என்றும், எந்தவொரு வைமர் தேர்தலிலும் “அறுதிப் பெரும்பான்மை வாக்குகளை ஒருபோதும் அடையவில்லை” என்றும் அவர் குறிப்பிட்டார். ஹிட்லரின் செயல்பாடு “வேலையற்றோரின் வாக்குகளை சேகரிப்பதும், அமைப்புமுறை என்று அழைக்கப்பட்டதை இழந்தவர்கள் என்று தங்களை கருதிய அனைவரின் அதிருப்தியும்” ஆகும். “ஹிட்லரும் ஜேர்மன் பாசிசவாதிகளும் யூதர்களை அழிப்பதற்கு முன்னர், அவர்கள் ஜேர்மன் மற்றும் ஐரோப்பிய தொழிலாளர் இயக்கத்தை அழிக்க வேண்டியிருந்தது” என்று கீலர் வலியுறுத்தினார்.

ஹிட்லர் தொழிலாளர்களின் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்தினார் என்ற கட்டுக்கதையை தகர்த்தெறிந்த பவெல்ஸ் “நாஜி ஆட்சியின் கீழ் ஜேர்மன் தொழிலாளர்களின் உண்மையான ஊதியங்கள் எவ்வாறு வியத்தகு முறையில் வீழ்ச்சியடைந்து பெருநிறுவன இலாபங்கள் உயர்ந்தன” என்பதையும் ஆவணப்படுத்தினார். 1933 இல் 930,000 சம்பவங்களாக இருந்த பணியிட விபத்துக்கள் மற்றும் நோய்கள் 1939 இல் 2 மில்லியனாக அதிகரித்ததாகவும், நாஜிக் கொள்கையை “அதிக லாபம் மற்றும் குறைந்த ஊதியம் கொண்ட ஒன்றாக” வகைப்படுத்தியதாகவும் அவர் வெளிப்படுத்தினார். ஜேர்மனி டாக்காவோவில் நிறுவப்பட்ட முதல் சித்திரவதை முகாம் முதன்மையாக யூதர்களுக்காக அமைக்கப்பட்டது அல்ல, மாறாக சிறைப்படுத்தப்பட்ட அரசியல் கைதிகளால், முக்கியமாக சமூக ஜனநாயகவாதிகள் மற்றும் கம்யூனிஸ்டு கைதிகளால், வழக்கமான சிறைச்சாலைகள் நிரம்பி வழிந்ததன் காரணமாக நிறுவப்பட்டது.

இந்தக் கலந்துரையாடல், பின்னர் சமகாலத்தில் இடம்பெறும் நிகழ்வுகளை நோக்கித் திரும்பியது. ஜேர்மன் வெய்மர் குடியரசின் வீழ்ச்சிக்கும் பாசிச ட்ரம்ப் நிர்வாகத்தின் கீழ் அமெரிக்காவின் தற்போதைய பாதைக்கும் இடையேயான வெளிப்படையான தொடர்புகளை டேவிட் நோர்த் வரைந்தார். 1971 இல், ஒரு அவுன்ஸ் ஒன்றுக்கு 35 டாலராக இருந்த தங்கத்தின் விலை இன்று 4,000ம் டாலருக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. இது, “அமெரிக்க பொருளாதார அமைப்புமுறையின் ஒரு உண்மையான நெருக்கடியின் புறநிலை அறிகுறியாகும்” என்று அவர் குறிப்பிட்டார். “புதைபடிவ எரிபொருள் துறையில் பழைய வலதுசாரிகள்” சிலிக்கான் பள்ளத்தாக்கிலிருந்து “அராஜக-சுதந்திரவாதிகளுடன்” வளர்ந்து வரும் கூட்டணியை ஆபிரகாம் விவரித்தார், பீட்டர் தியேல் சமீபத்தில் நாஜி சட்டக் கோட்பாட்டாளரான கார்ல் ஷ்மிட்டை அழைத்து விரிவுரைகளை வழங்கியுள்ளார். அதே நேரத்தில் தொழிலாளர்கள், இடதுசாரிகள், சிறுபான்மையினர் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களை நாகரிகத்திற்கு ஒரு “தடையாக” அவர் அடையாளம் காட்டுகிறார். அவர்களை ஆபிரகாம் “ஒரு வகையான புதிய யூத-போல்ஷிவிக்குகள்” என்று விவரித்தார்.

டேவிட் நோர்த், “புறநிலை நிலைமைகள் ஒரு புரட்சிகர நோக்குநிலைக்கான சாத்தியத்தை உருவாக்குகின்றனவா? பாசிசம் தவிர்க்க முடியாததா?” என்ற ஒரு முக்கியமான கேள்வியை முன்வைத்தார். முதலாம் உலகப் போரானது, பேரழிவு மற்றும் அக்டோபர் புரட்சி ஆகிய இரண்டையும் எவ்வாறு விளைவாக்கியது என்பதை மேற்கோள் காட்டி, அதே முரண்பாடுகள் எதிர்வினையை இயக்கும் புரட்சிகர சாத்தியக்கூறுகளையும் உருவாக்குகின்றன என்று அவர் வாதிட்டார்.

ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சியின் தலைவரான கிறிஸ்தோப் வான்ட்ரேயர், ஜேர்மன் கல்வித்துறைக்குள் ஹிட்லரையும் நாஜிக்களையும் புனர்வாழ்வு அளிப்பது குறித்து உரையாற்றினார். “ஹிட்லர் கொடூரமானவர் அல்ல” என்றும், “மனநோயாளி அல்ல” என்றும், “ரஷ்யாவில் உள்நாட்டுப் போரின் போது நடந்த துப்பாக்கிச் சூட்டு இன அழிப்பிலிருந்து அடிப்படையில் வேறுபட்டதல்ல” என்றும் கூறி, வரலாற்றாசிரியர் ஜோர்க் பாபெரோவ்ஸ்கி டெர் ஸ்பீகல் பத்திரிகையில் அறிவித்ததை அவர் விவரித்தார். “பாபெரோவ்ஸ்கி ஜேர்மனியில் கிட்டத்தட்ட முழு கல்வியாளர்களாலும் ஆதரிக்கப்பட்டார்” என்றும், அத்தகைய நிலைப்பாடுகள் இன்று “பிரதான நீரோட்டத்தின் ஒரு பகுதியாகும்” என்றும், இது ஜேர்மனியின் டிரில்லியன் யூரோ மறுஆயுதமயமாக்கல் திட்டத்துடன் ஒத்துப்போகிறது என்றும் வான்ட்ரீயர் குறிப்பிட்டார்.

வரலாற்று பொய்மைப்படுத்தலுக்கு எதிரான போராட்டம், அரசியல் போராட்டத்திலிருந்து பிரிக்க முடியாதது என்பதை வரலாற்றாசிரியர்கள் ஒப்புக் கொண்டனர். “வரலாறு புரட்சிகரமானது” என்றும், “இந்த சிக்கலில் நாம் எப்படி சிக்கினோம் என்பதை நாம் அறிய வேண்டும் என்று அதிகாரத்திலுள்ளவர்கள் உண்மையில் விரும்புவதில்லை” என்றும் பவுல்ஸ் வலியுறுத்தினார். பல தசாப்தங்களுக்குப் பிறகு “வலதுசாரிகள் வாஷிங்டனைக் கைப்பற்றினர், இடதுசாரிகள் ஆங்கிலத் துறையைக் கைப்பற்றினர்” என்ற அரசியல் பொருளாதார ஆய்வுகளின் ஒரு மிதமான மறுமலர்ச்சியை ஆபிரகாம் குறிப்பிட்டார்.

அதே அடிப்படை முரண்பாடுகளின் நிலைத் தன்மையை வலியுறுத்திய டேவிட் நோர்த், “நாங்கள் கடந்த காலத்தைப் பற்றி மட்டும் பேசவில்லை, ஆனால் உண்மையில் நிகழ்காலத்தைப் பற்றி கலந்துரையாடுகிறோம். அதே பிரச்சினைகள், அதே சமூக சக்திகள் இன்றும் உள்ளன” என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார். “தொழிலாள வர்க்கமும், இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்களின் மிகவும் முன்னேறிய பிரிவுகளும் மார்க்சியத்தை நோக்கி வெடிக்கும் திருப்பத்தை ஏற்படுத்துவர், மார்க்சிசம் மட்டுமே புறநிலை யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு அதன் அடிப்படையில் ஒரு புரட்சிகர இயக்கத்தை உருவாக்கக்கூடிய ஒரே தத்துவார்த்த கட்டமைப்பாகும்” என்று அவர் முன்கணித்துக் கூறினார்.

மெஹ்ரிங் புத்தகங்களிலிருந்து இலக்கியத்தை வாங்குவதற்கான இணைப்புகள்:

Loading