வெனிசுவேலாவுக்கு எதிரான CIA ஆட்சி மாற்ற நடவடிக்கைகளுக்கு ட்ரம்ப் அனுமதி

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

அமெரிக்க கடற்படையினர் தெற்கு கரீபியன் கடல் பகுதியில் “போர்-இயக்க நடவடிக்கைகள்” என்று பென்டகன் விவரிக்கும் நடவடிக்கையில் ஒத்திகை பார்க்கின்றனர் [Photo by @Southcom]

வெனிசுவேலாவில் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவின் அரசாங்கத்தை கவிழ்ப்பதை நோக்கமாகக் கொண்ட கொடிய, இரகசிய இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய புலனாய்வு முகமைக்கு (CIA) அதிகாரம் அளித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த புதன்கிழமை உறுதிப்படுத்தியுள்ளார். உலக சோசலிச வலைத் தளம் வெனிசுவேலாவை ஏகாதிபத்தியம் கைப்பற்றுவதற்கான இந்த குற்றவியல் திட்டங்களை கண்டனம் செய்கிறது.

வெள்ளை மாளிகையில் ட்ரம்ப்பிடம், நியூ யோர்க் டைம்ஸ் பத்திரிகையில் வெளியான அறிக்கை குறித்தும், ஆட்சி மாற்ற நடவடிக்கைகளுக்கான அங்கீகாரம் குறித்து பல அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டியும் நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது, இந்த உத்தரவை ஒப்புக்கொள்வதில் ட்ரம்ப் சாக்குப்போக்குடன் பேசவில்லை. இந்த அங்கீகாரமானது, வெனிசுவேலாவிற்கும், அதற்கு அப்பாலும் அமெரிக்க ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பின் ஒரு அசாதாரண விரிவாக்கத்தை குறிக்கிறது.

பத்திரிகையாளர் சந்திப்பின் போது, கடந்த செவ்வாய்க்கிழமை தெற்கு கரீபியனில் ஒரு வேகப் படகு மீது பென்டகன் மற்றொரு கொடிய தாக்குதலை நடத்தியதாகவும், அதில் ஆறு பேர்கள் கொல்லப்பட்டதாகவும் ட்ரம்ப் பெருமைபீற்றிக் கொண்டார். இது, எந்தவொரு ஆதாரமும் இல்லாமல், போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுக்கு உள்ளான, சிறிய படகுகளுக்கு எதிரான அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளில் கொல்லப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கையை குறைந்தது 27 ஆக உயர்த்தியுள்ளது.

டிரினிடாடிய செய்தி ஊடகம், சமீபத்தில் தாக்குதலுக்கு உள்ளான படகு டிரினிடாட் மற்றும் டொபாகோவிலிருந்து பல பயணிகளை ஏற்றிச் சென்றதாக செய்தி வெளியிட்டுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஒருவரின் உறவினர்கள், அவர் வீடு திரும்பிய ஒரு இளம், புலம்பெயர்ந்த தொழிலாளி என்று அறிவித்தனர்.

இந்த சட்டத்திற்கு அப்பாற்பட்ட பாரிய மரண தண்டனைகளுக்கு இணையாக, வெனிசுவேலா கடற்கரைக்கு அருகில் புதன்கிழமை அமெரிக்க B-52 மூலோபாய குண்டுவீச்சு விமானங்கள் கண்டறியப்பட்டன. மேலும், அவை டெக்சாஸில் இருந்து வெனிசுவேலாவுக்குச் செல்லும் ஒரு நாடுகடத்தப்பட்ட விமானம் புவேர்ட்டோ ரிக்கோவுக்கு திருப்பி விடப்பட்ட அளவுக்கு தீவிரமான சூழ்ச்சிகளை மேற்கொண்டன. வெனிசுவேலாவுக்கு எதிராக “நெருப்பையும் கோபத்தையும்” கட்டவிழ்த்து விடுவதாக கடந்த வாரம் ட்ரம்ப் விடுத்த அச்சுறுத்தலையும், அத்துடன் அக்டோபர் 2 அன்று வெனிசுவேலா வான்வெளியில் ஐந்து அமெரிக்க F-35 போர் விமானங்கள் ஊடுருவியதையும் தொடர்ந்து, இந்த அணுவாயுத திறன் கொண்ட குண்டுவீச்சு விமானங்கள் நிலைநிறுத்தப்படுகின்றன.

தற்போது, தெற்கு கரீபியன் கடற் பகுதியில் முக்கிய நடவடிக்கைகளுக்கான குறிப்பிடத்தக்க திறன் கொண்ட அமெரிக்கப் படைகளில், ஏறத்தாழ 10,000 துருப்புக்கள் மற்றும் மாலுமிகள் உள்ளனர். கடந்த புதன்கிழமை ட்ரம்ப் மீண்டும் வெனிசுவேலா மீது தரைவழித் தாக்குதல்களை விரிவுபடுத்தப் போவதாக அச்சுறுத்தினார்.

வாஷிங்டனின் நீண்டகால இரகசிய தலையீடுகளின் வரலாறு —ஆட்சிக் கவிழ்ப்பு சதித்திட்டங்கள், படுகொலைகள், ஊடகங்களை விலைக்கு வாங்குதல், தேர்தல் மோசடி மற்றும் தொழிற் சங்கங்களுக்கு இலஞ்சம் வழங்குதல்— இப்போது நம்பத்தகுந்த மறுப்பைத் தேடுவதற்கான ஒரு சிறிய பாசாங்கு கூட இல்லாமல் வெளிப்படுத்தப்படுகின்றன.

“மதுரோவை ஒழிப்பதுக்கு” CIA க்கு அதிகாரம் உள்ளதா என்று ட்ரம்ப்பிடம் நேரடியாகக் கேட்கப்பட்டபோது, “நான் பதிலளிப்பது ஒரு அபத்தமான கேள்விக்கு அல்லவா? ஆனால், வெனிசுலா வெப்பத்தை உணர்கிறது என்று நான் நினைக்கிறேன்” என்று கூறினார். இது CIA நடவடிக்கைகளின் நோக்கம் துல்லியமாக ஆட்சி மாற்றமாகும் என்பதற்கான தெளிவான ஒப்புதலாகும். ஒரு கற்பனையான அமைப்பான கார்டெல் ஆஃப் தி சன்ஸ் (Cartel of the Suns) என்று அழைக்கப்படுவதை வழிநடத்துவதாக குற்றம் சாட்டி, வாஷிங்டன் மதுரோவின் தலைக்கு சாதனை அளவில் 50 மில்லியன் டாலர்கள் பரிசுத்தொகையை நிர்ணயித்துள்ளது.

குண்டுவீச்சுக்கள், படையெடுப்புகள் மற்றும் அச்சுறுத்தல்கள் என்பன வெறும் போலித்தனமான போலிக் காரணங்கள் அல்ல. மாறாக, முற்றிலும் போலியான சாக்குப்போக்குகளின் அடிப்படையில் தயாரிக்கப்படும் உடனடி ஏகாதிபத்திய தலையீட்டின் பகிரங்கமான அறிவிப்புக்கள் ஆகும்.

வெனிசுலா அமெரிக்காவை போதைப்பொருளால் வெள்ளத்தில் மூழ்கடிக்கிறது என்ற கூற்று அப்பட்டமாக தவறானது. அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் உள்ள போதைப்பொருள் நிறுவனங்களின் ஏராளமான அறிக்கைகள் மிகக் குறைந்தளவிலான கோகோயின் மற்றும் ஃபென்டானைல்தான் (அமெரிக்காவில் அதிகப்படியான இறப்புகளுக்கு முக்கிய காரணம்) வெனிசுலா வழியாக செல்கின்றன என்பதை உறுதிப்படுத்தியுள்ளன.

உண்மையில், போதைப்பொருள் கடத்தல் மற்றும் இது தொடர்புடைய வன்முறைக்கு காரணமான அமைப்புகளில் CIAம் ஒன்றாகும். 1980 களில் சாண்டினிஸ்டா அரசாங்கத்தைத் தாக்க பயன்படுத்தப்பட்ட நிகரகுவா கொன்ட்ரா ஆயுததாரிகளுக்கு நிதியளிக்கும் சட்டவிரோத திட்டத்தின் ஒரு பகுதியாக, றேகன் நிர்வாகத்தின் கீழ் போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் CIA மற்றும் நீதித்துறைக்கு இடையில் இருந்த ஒத்துழைப்பை, CIA இன்ஸ்பெக்டர் ஜெனரல் பிரெடெரிக் ஆர். ஹிட்ஸ் 1998ல் வெளிப்படுத்தினார்.

மெக்ஸிகன் போதைப்பொருள் பிரபு குயின்டெரோ, வெராக்ரூஸில் உள்ள தனது பண்ணையில் கொன்ட்ரா ஆயுததாரிகளுக்கு பயிற்சி அளித்ததால், மெக்சிகோவின் முதல் பெரிய போதைப்பொருள் கும்பலான குவாடலஜாரா கும்பலுக்கு CIA எவ்வாறு நிதியுதவி அளித்தது, கொலம்பிய போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் அதன் கூட்டணியை எப்படி எளிதாக்கியது என்பதை Jesús Esquivel எழுதிய La CIA, Camarena and Caro Quintero என்ற புத்தகம் விரிவான ஆதாரங்களுடன் விவரிக்கிறது.

வெனிசுலா “சிறைச்சாலைகள் மற்றும் மனநல நிறுவனங்களை அமெரிக்காவிற்குள் நுழைத்துள்ளது” என்ற ட்ரம்பின் கூற்றுக்களும் ஒரு அவதூறாகும். உண்மையில், கடந்த தசாப்தத்தில் வெனிசுவேலாவின் பெரும்பாலான வெளியேற்றங்கள் அமெரிக்கத் தடைகளால் தூண்டப்பட்டு, வெனிசுலாவை பேரழிவிற்கு உட்படுத்தி, நாட்டில் 100,000 க்கும் மேற்பட்ட இறப்புகளை ஏற்படுத்தியுள்ளதே காரணமாகும்.

இறுதியாக, ட்ரம்ப் நிர்வாகம் ஜனநாயகத்தை ஆதரிக்கிறது என்ற வாதம், அமெரிக்காவில் ஒரு பொலிஸ்-அரசு ஆட்சியை ஸ்தாபிப்பதற்கான அதன் சொந்த முயற்சிகளால் வெடிக்கிறது. அனைத்திற்கும் மேலாக, வெனிசுவேலாவிலுள்ள அமெரிக்காவின் அரசியல் பினாமிகளை, அண்மையில் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மரியா கொரினா மச்சாடோ வழிநடத்துகின்றார். அவர் வெனிசுவேலா மக்களுக்கு எதிரான பாசிசத்தையும், போரையும் பகிரங்கமாக தழுவிக் கொள்கிறார். பாசிச மாட்ரிட் மன்றத்தின் உறுப்பினராக இருக்கும் கொரினா மச்சாடோ, நாட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி ஹியூகோ சாவேஸுக்கு எதிரான தோல்வியுற்ற 2002 இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பில் பங்கெடுத்திருந்தார்.

இத்தகைய சக்திகளால் வழிநடத்தப்படும் ஒரு ஆட்சி, மிருகத்தனமான சிக்கன நடவடிக்கைத் திட்டத்திற்கும், உலகின் மிகப்பெரிய எண்ணெய் இருப்புக்களை தனியார்மயமாக்குவதற்கும், அமெரிக்க எரிசக்தி நிறுவனங்களுக்கு இவற்றை ஒப்படைப்பதற்கும் எதிரான எதிர்ப்புக்களை நசுக்குவதற்கு, மக்களுக்கு எதிராக கொலைகார போலீஸ் அரசு பயங்கரத்தை கட்டவிழ்த்துவிடும்.

கடந்த புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, தெற்கு கரீபியன் கடலில் “மீன் பிடிக்க கூட மக்கள் செல்லவில்லை” என்று ட்ரம்ப் உணர்ச்சியற்ற முறையில் நகைச்சுவையாகக் கூறினார். இது அதிகாரிகளிடமிருந்து சிரிப்பைத் தூண்டியது. வெள்ளை மாளிகை, அப்பாவி பொதுமக்களை திட்டமிட்டு கொலை செய்யும் குண்டர் தலைவர்களால் வழிநடத்தப்படுகிறது என்பதை இந்தக் கருத்து உறுதிப்படுத்துகிறது.

வரலாற்று ரீதியாக, அமெரிக்க ஜனாதிபதி ரிச்சார்ட் நிக்சனும், அவரது வெளியுறவுச் செயலர் ஹென்றி கிஸ்ஸிங்கரும், 1973ல் இடது தேசியவாத சிலியின் ஜனாதிபதி சால்வடோர் அலெண்டேயை தூக்கியெறிந்ததில் CIA சம்பந்தப்பட்டதை பகிரங்கமாக மறுத்தனர். ஆனால், இப்போது ஒரு மலையளவில் உள்ள இரகசிய ஆவணங்கள் CIA மற்றும் பென்டகன், அவரை அகற்றி கொடூரமான பினோச்சேயின் இராணுவ சர்வாதிகாரத்தை நிறுவ திட்டமிட்டிருந்தன என்பதை நிரூபித்துள்ளன.

கடந்த புதன்கிழமை ட்ரம்பின் ஒப்புதல் வாக்குமூலம் ஒரு தெளிவான கணக்கீட்டை கட்டாயப்படுத்துகிறது: அமெரிக்க ஏகாதிபத்தியம் தியோடர் ரூஸ்வெல்ட் மற்றும் வூட்ரோ வில்சன் போன்றவர்களின் அப்பட்டமான தலையீட்டு கோட்பாடுகளுக்கு திரும்பியுள்ளது, வாஷிங்டன், அமெரிக்க கண்டத்தின் உரிமையாளர் என்று பகிரங்கமாக வலியுறுத்த மன்ரோ கோட்பாட்டை பயன்படுத்துகிறது. அந்தக் காலகட்டத்தில், மெக்ஸிகோ (1914), ஹைட்டி (1915), டொமினிகன் குடியரசு (1916), நிகரகுவா (1912-1933), கியூபா (1906, 1912) மற்றும் ஹோண்டுராஸ் (1911) உள்ளிட்ட நாடுகள் மீது பல படையெடுப்புகள் மற்றும் ஆட்சிக் கவிழ்ப்புகளை அமெரிக்கா ஏற்பாடு செய்தது அல்லது இவற்றில் பங்கேற்றது.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், அமெரிக்க ஏகாதிபத்தியம் உலக மேலாதிக்க சக்தி என்ற அந்தஸ்தை அடைந்த நிலையில், CIA லத்தீன் அமெரிக்காவில் இந்த இரத்தக்களரி மரபைத் தொடர்ந்தது. 1954 ஆம் ஆண்டு குவாத்தமாலாவின் ஜேக்கபோ அர்பென்ஸை —அமெரிக்க பெருநிறுவன நலன்களைப் பாதிக்கும் வரையறுக்கப்பட்ட நிலச் சீர்திருத்தங்களை நாடியவர்— வீழ்த்தியதிலிருந்து, 1990கள் முழுவதும் சோசலிச அல்லது ஏகாதிபத்திய எதிர்ப்பு அனுதாபிகள் என்று சந்தேகிக்கப்படும் பல்லாயிரக்கணக்கானோரின் மரணங்களுக்குப் பொறுப்பான கொலைகார இராணுவ ஆட்சிகளை நிறுவிய பல தசாப்தங்களாக இரகசியமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஆட்சிக் கவிழ்ப்புகள் வரை நீடித்தது.

ஸ்டாலினிச அதிகாரத்துவத்தால் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டமை, உலகளவில் அமெரிக்க இராணுவவாதத்தின் ஒரு பாரிய விரிவாக்கத்திற்கான கதவைத் திறந்தது. வளைகுடாப் போர் வெடித்த பிறகு, உலக சோசலிச வலைத் தளத்தின் ஆசிரியர் டேவிட் நோர்த் பிப்ரவரி 1991 இல் இடம்பெற்ற ஒரு விரிவுரையில் பின்வருமாறு விளக்கினார்:

உலக வரலாறு மீண்டும் ஒரு புதிய மற்றும் பயங்கரமான ஏகாதிபத்திய கொள்ளையடிப்புப் போர்களின் வெடிப்பையும், உலக மேலாதிக்கத்திற்காக ஏகாதிபத்திய சக்திகளுக்கிடையேயான போராட்டத்தையும் காணும் நிலைக்கு வந்துள்ளது. தொழிலாள வர்க்கம் இப்போது ஏகாதிபத்தியத்தை அது உண்மையில் என்னவென்று பார்க்கும். இது, நூற்றுக்கணக்கான மில்லியன் மக்களை அடிமைப்படுத்த முற்படுகிறது, இது அடுத்த சுற்று கொடூரமான உலக மோதல்களுக்கு களமிறங்குகிறது.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இந்த முன்கணிப்பு அமெரிக்கா தலைமையிலான மூன்று பேரழிவுகரமான தசாப்த கால போர்களால் வியத்தகு முறையில் ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளது என்பது மட்டுமல்ல, மாறாக காஸாவில் நடந்த இனப்படுகொலையும், இலத்தீன் அமெரிக்காவிற்கு எதிரான அச்சுறுத்தல்களும், இந்த மறுகாலனித்துவ நிகழ்ச்சிப்போக்கு ஒரு மூன்றாம் உலகப் போரின் ஆரம்ப கட்டங்களுக்கு மத்தியில், ஒரு புதிய மற்றும் ஆபத்தான திருப்புமுனையை எட்டியுள்ளது என்பதை தெளிவுபடுத்துகிறது.

“மத்திய கிழக்கு, ஆபிரிக்கா மற்றும் ஆசியாவில் உள்ள தொழிலாளர்களை முதலாளித்துவ அரசாங்கங்கள் அடிமைப்படுத்தும் போது, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் தொழிலாளர்கள் சுதந்திரமாக இருக்க முடியாது என்று இன்று நாம் கூற முடியும்,” 1991 இல் டேவிட் நோர்த் முன்கூட்டியே இதனை எச்சரித்தார். மேலும் அவர் கூறுகையில்:

காலனித்துவ மக்களை மீண்டும் அடிமைப்படுத்துவது, காலனித்துவத்திற்கு திரும்புவது, தவிர்க்கவியலாமல் அமெரிக்காவில் தொழிலாள வர்க்கத்தின் சமூக நிலைமையில் ஒரு கடுமையான வீழ்ச்சியுடன் இணைந்திருக்கும். அமெரிக்கத் தொழிலாள வர்க்கத்தின் போராட்டம், அதன் சொந்த நலன்கள், உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களின் போராட்டங்களில் இருந்து பிரிக்க முடியாதவை... மத்திய கிழக்கில் அமெரிக்க போர் எந்திரத்தின் தோல்வி, உலகின் அனைத்துப் பகுதிகளிலும், எல்லாவற்றிற்கும் மேலாக, இங்கே அமெரிக்காவில் தொழிலாள வர்க்கத்தின் விடுதலைக்கு ஒரு பெரும் அடித்தளமாக இருக்கும். இந்தப் போருக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டப் போராடுவதன் மூலம் நாம் அந்த தோல்விக்காக தீவிர செயலூக்கத்துடன் உழைக்கிறோம்...

இன்று, வாஷிங்டன், சிக்காகோ மற்றும் மெம்பிஸ் போன்ற நகரங்களில் இராணுவ நிலைநிறுத்தல்கள், உள்நாட்டில் ஒரு பாசிச சர்வாதிகாரத்திற்கான அடித்தளத்தை அமைக்கின்றன. இவை, லத்தீன் அமெரிக்காவில் போருக்கான சாக்குப்போக்குகளாகப் பயன்படுத்தப்படும் அதே ஜோடிக்கப்பட்ட அவசர நிலைகளுடன் நியாயப்படுத்தப்படுகின்றன.

அமெரிக்காவிலும் உலகெங்கிலும் இடம்பெற்றுவரும் ட்ரம்பின் சர்வாதிகாரக் உந்துதலுக்கு எதிரான “மன்னர்கள் வேண்டாம்” போராட்டங்கள், அமெரிக்க நகரங்கள், லத்தீன் அமெரிக்கா மற்றும் உலகெங்கிலும் உள்ள அனைத்து அமெரிக்க துருப்புக்களையும் திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையின் கீழ், கரீபியனில் இராணுவக் குவிப்பு மற்றும் ஆட்சி மாற்றத்திற்கு எதிராக தொழிலாளர்களை அணிதிரட்டுவதற்கான வாய்ப்பை வழங்குகின்றன.

கடந்த புதன்கிழமை, தென் அமெரிக்காவில் உள்ள கரீபியன் பிராந்தியத்தில் போரைத் தவிர்க்க அமெரிக்க சமூகத்தின் அனைத்துத் துறைகளும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ அழைப்பு விடுத்ததன் மூலம் ட்ரம்பிற்கு பதிலளித்தார். பின்னர் அவர் ஆங்கில மொழியில், “போர் அல்ல, அமைதி” என்று அறிவித்தார்.

ஆர்ஜென்டினாவின் பாசிச ஜனாதிபதி ஜேவியர் மிலேயின் ஆட்சிக் காலத்தில் நடந்ததை விடவும், வாழ்க்கைத் தரங்கள் மீதான தாக்குதல்களை சாவிஸ்டா நிர்வாகமே மேற்பார்வையிட்டுள்ளது. கடந்த வாரம் ட்ரம்ப் வெனிசுவேலாவுடனான அனைத்து இராஜதந்திர உறவுகளையும் முறித்துக் கொண்ட பிறகும், மதுரோ தொழிலாளர்களின் போராட்டங்களை மீண்டும் மீண்டும் அடக்கி, அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு முறையீடு செய்வதில் கவனம் செலுத்தி வருகிறார்.

ஏகாதிபத்தியத்தால் கட்டுப்படுத்தப்படும் முதலாளித்துவ சந்தைகளுடன் கையும் காலும் பிணைக்கப்பட்ட தேசிய முதலாளித்துவத்தின் ஒரு பிரிவை மதுரோ பிரதிநிதித்துவம் செய்கிறார். உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ அதன் சொந்த முதலாளித்துவ நலன்களுக்கு எதிராகத் திரும்பக் கூடிய எந்தவொரு தொழிலாளர் அணிதிரட்டலுக்கும் மீளமுடியாத விரோதப் போக்கை அவர் கொண்டுள்ளார்.

ஆளும் வர்க்கத்தின் அத்தனை பிரிவுகளுக்கும் எதிராக அமெரிக்க கண்டம் முழுவதிலும் உள்ள தொழிலாளர்களின் போராட்டங்களின் ஐக்கியத்திற்கான சாத்தியக்கூறு, பெருகிவரும் பாரிய போராட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்களின் அலைகளால் பெரு, ஈக்வடோர், ஆர்ஜென்டினா மற்றும் அமெரிக்காவிலும் எடுத்துக்காட்டப்படுகிறது. வாஷிங்டனின் கொடூரமான மற்றும் வெளிப்படையான கொலைகார நவ காலனித்துவத்துக்கான தாக்குதல், பெருகிவரும் முதலாளித்துவ எதிர்ப்பு மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வுகளின் தீப்பிழம்பை அதிகரிக்கும் மற்றும் பிராந்தியம் எங்கிலும் புரட்சிகர போராட்டங்களுக்கு வழிவகுக்கும்.

Loading