இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்
ஜூலை 31 அன்று, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பின் நிர்வாக உத்தரவு, இலங்கை மீது 20 சதவீத வரியை விதித்தது. இது, 0 முதல் 25 சதவீதம் வரை மாறுபடும் தற்போதைய வரிகளுக்கு மேலதிகமாகவே திணிக்கப்பட்டுள்ளது. இலட்சக்கணக்கான தொழில்களைப் பாதிக்கும் இந்த வரி உயர்வு, பிரதானமாக அமெரிக்க சந்தைக்கான ஏற்றுமதியை நம்பியுள்ள ஆடைத்துறை மற்றும் சுதந்திர வர்த்தக வலயங்கள், அதே போல் இரப்பர், தேயிலை மற்றும் பிற சிறிய தொழில்களை ஆபத்துக்குள்ளாக்கும்.
ஏப்ரல் தொடக்கத்தில், ட்ரம்ப் இலங்கைக்கும் ஏனைய நாடுகளுக்கும் 44 சதவீத வரியை அறிவித்தார். கடந்த மாத தொடக்கத்தில் அதை 30 சதவீதமாகக் குறைத்து பின்னர் அதைத் தொடர்ந்து தற்போதைய 20 சதவீத விகிதத்தை அறிவித்துள்ளார்.
இவ்வாறு குறைக்கப்பட்ட போதிலும், பரந்த அமெரிக்க உலகளாவிய வரிப் போரும் அதன் பொருளாதார விளைவுகளும் குறிப்பிடத்தக்க பூகோள ஆபத்துகளை தொடர்ந்து ஏற்படுத்துகின்றன. ஆகஸ்ட் 1 அன்று, உலக சோசலிச வலைத் தளத்தில் விளக்கப்பட்டுள்ளபடி, ட்ரம்பின் வரிகள் 'தீவிரமான பொருளாதார மோதலுக்கு விரைவாகச் சென்று, தவிர்க்க முடியாமல் போர் வெடிக்க வழிவகுக்கும்.'
சி.என்.என். செய்திகளில் தெரிவிக்கப்பட்டவாறு, யேலின் பாதீட்டு ஆய்வகத்தின்படி, ஒட்டுமொத்த அமெரிக்க வரி விகிதம் கடந்த ஆண்டு 2 சதவீதத்திலிருந்து 17 சதவீதமாக உயர்ந்துள்ளது – இது 1933 க்குப் பின்னரான மிக உயர்ந்த மட்டமாகும்.
பொருட்களுக்கு அமெரிக்க தொழிலாளர்கள் செலுத்தும் சராசரி விலை அதிகரிக்கும் அதே வேளை, உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்கள் கட்டண உயர்வுகளால் தங்கள் தொழில்கள், ஊதியங்கள் மற்றும் வேலை நிலைமைகள் மீது ஏற்படும் ஆழமான தாக்குதல்களை எதிர்கொள்வார்கள்.
2025 ஆகஸ்ட் 7 முதல் நடைமுறைக்கு வரும் இலங்கை ஏற்றுமதிகள் மீதான 20 சதவீத வரி, ஜனாதிபதி திசாநாயகவின் அரசாங்கத்தால், பங்களாதேஷ், வியட்நாம், மலேசியா, இந்தோனேசியா மற்றும் பாகிஸ்தான் போன்ற பிராந்தியத்தில் உள்ள ஏனைய பிரதான ஆடை ஏற்றுமதி நாடுகளை விட 'அதிக போட்டித்தன்மை வாய்ந்தது' என்று ஊக்குவிக்கப்படுகிறது.
நிதித்துறை செயலாளரும் முன்னாள் துணை நிதியமைச்சருமான ஹர்ஷன சூரியப்பெரும, இலங்கை 'மற்ற ஏற்றுமதி நாடுகளுடன் போட்டித்தன்மை வாய்ந்த நிலையைப் பேணுவதற்கான முதல் நோக்கத்தை' அடைந்துள்ளதாகக் கூறினார்.
சூரியப்பெரும தலைமையிலான திசாநாயக மற்றும் அவரது பேச்சுவார்த்தைக் குழுவை பகிரங்கமாகப் பாராட்டிய இலங்கை வர்த்தக சபை, இந்த ஒப்பந்தம் 'எங்கள் ஏற்றுமதியாளர்களுக்கு மிகவும் நிலையான மற்றும் போட்டித்தன்மை வாய்ந்த சந்தை வாய்ப்பை உறுதி செய்கிறது' என்று கூறியது. ஏப்ரல் மாதம் ஆரம்ப 44 சதவீத வரி அறிவிக்கப்பட்டதிலிருந்து இந்தக் குழுவின் 'நடைமுறைச் சாத்தியமான மற்றும் நிலையான ஈடுபாட்டிற்காக' ஆடை உற்பத்தியாளர் சங்கத்தின் கூட்டமைப்பும் (JAAF) அவர்களுக்கு நன்றி தெரிவித்தது.
திரைக்குப் பின்னால், அரசாங்கமும் பெருவணிகங்களும் வரி வதிப்பின் விளைவுகள் குறித்து கவலைகளை வெளிப்படுத்தியுள்ளன. மேலும் சலுகைகளைப் பெற, அமெரிக்க அதிகாரிகளுடனான கலந்துரையாடல் தொடரும் என்று அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. வணிக ஆலோசனை குழுக்கள் அரசாங்கத்தை மிகவும் சாதகமான நிபந்தனைகளைப் பெற வலியுறுத்தியுள்ளன.
இலங்கையின் ஆங்கில மொழி வார இதழான சண்டே டைம்ஸ், புதிய வரிகள் காரணமாக அமெரிக்காவிற்கான இலங்கையின் வருடாந்த ஏற்றுமதி 2023 இல் 2.97 பில்லியன் டொலர்களிலிருந்து 2026 இல் 1.82 பில்லியன் டொலர்களாகக் குறையும் என்று உலகளாவிய வர்த்தக தரவுத்தள மதிப்பீடுகளை மேற்கோள் காட்டி கூறியுள்ளது.
அமெரிக்காவானது இலங்கையின் மிகப்பெரிய ஏற்றுமதி சந்தையாகும். இலங்கை ஆண்டுதோறும் அதன் ஆடை ஏற்றுமதியில் 40 சதவீதத்தையும் ($1.9 பில்லியன்) அதன் மொத்த ஏற்றுமதியில் 25 சதவீதத்தையும் ($3 பில்லியன்) அமெரிக்காவுக்கே ஏற்றுமதி செய்கின்றது. 350,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை நேரடியாக வேலைக்கு அமர்த்தியுள்ள மற்றும் வேறு வழிகளில் மேலும் 600,000 பேரை வாழவைக்கும் ஆடைத் தொழில், குறிப்பாக அமெரிக்காவில் வரிகளால் ஏற்படும் விற்பனை வீழ்ச்சியால் பாதிக்கப்படக்கூடியது.
பொதுவாக சராசரியாக மாத ஊதியம் சுமார் 35,000 ரூபாய் (தோராயமாக $116) சம்பாதிக்கும் இந்தத் துறையில் உள்ள தொழிலாளர்கள், உற்பத்தி இலக்குகளை அடையவும் தங்கள் வருவாயை அதிகரிக்கவும் பெரும்பாலும் மேலதிக நேரம் வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். ஆடை நிறுவனங்கள், செலவுகளைக் குறைப்பதற்கும் இலாபத்தை அதிகரிப்பதற்கும், ஒப்பந்த நிறுவனங்களால் வழங்கப்படும் மலிவு-ஊதிய தொழிலாளர்களை அதிகளவில் நம்பியுள்ளன.
ஆடை ஏற்றுமதியில் ஏற்படும் சரிவானது தொழிற்சாலை மூடல்கள், பெருமளவிலான வேலை நீக்கங்கள், ஊதிய வெட்டுக்கள் மற்றும் வேலை நிலைமை வெட்டுக்களுக்கும் வழிவகுக்கும். தேயிலை, இரப்பர், இரத்தினக் கற்கள் மற்றும் கடல் உணவு போன்ற பிற ஏற்றுமதித் தொழில்களும் பாதிக்கப்படும்.
முன்னதாக, அமெரிக்காவின் உயர் வரிகள் இலங்கையின் ஏற்றுமதிகளைக் குறைத்து, அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியை, அடிப்படை கணிப்புகளுக்குக் கீழே 1.5 சதவீதம் வரை சுருக்கக்கூடும் என்றும் எச்சரித்த சர்வதேச நாணய நிதியம், வேலையின்மை அதிகரிப்பையும் முன்னறிவித்தது. தற்போதைய மக்கள் விடுதலை முன்னணி / தேசிய மக்கள் சக்தி (ஜே.வி.பி./தே.ம.ச.) அரசாங்கம் தொடர்ந்து செயல்படுத்தி வரும் சர்வதேச நாணய நிதியத்தின் கடுமையான சிக்கனத் திட்டத்திற்கு மேலதிகமாக குவியும் இந்த தாக்கங்கள், உழைக்கும் மக்களின் வாழ்க்கை நிலைமைகளை மேலும் சீரழிக்கின்றது.
ட்ரம்ப் ஆரம்ப வரி விதிப்பை அறிவித்தபோது, எதிர்க்கட்சிகளின் முழு ஆதரவுடன் 'தேசிய ஒற்றுமைக்கு' அழைப்பு விடுத்த ஜனாதிபதி திசாநாயக, உழைக்கும் மக்கள் 'எதிர்கால பொருளாதார சரிவின் சுமையை சுமக்க' வலியுறுத்தினார்.
இந்த சூழலில், தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் தொழிலாளர்களை அரசியல் ரீதியாக நிராயுதபாணியாக்கி, புதிய வரிகளால் அதிகரிக்கப்பட்ட நெருக்கடியின் சுமையை தொழிலாள வர்க்கத்தின் பக்கம் திருப்பிவிடுவதற்கு, அரசாங்கத்துடனும் முதலாளிகளுடனும் ஒத்துழைப்பதன் மூலம் ஒரு தீர்க்கமான மற்றும் துரோகப் பாத்திரத்தை வகித்துள்ளன.
தாக்குதல்களை எதிர்ப்பதற்குப் பதிலாக, சுதந்திர வர்த்தக வலயங்கள் மற்றும் பொது சேவைகள் ஊழியர் சங்கத்தின் அன்டன் மார்கஸ், இலங்கை வர்த்தக கைத்தொழில் பொதுத் தொழிலாளர் சங்கத்தின் (சி.எம்.யு) எஸ்.பி. நாதன் போன்ற தொழிற்சங்கத் தலைவர்கள், அரசாங்கத்துடன் தொடர்பு கொள்ள முயன்றதுடன் ஏப்ரல் அறிவிப்புக்குப் பிறகு சலுகைகளுக்காக ட்ரம்ப் நிர்வாகத்திடம் நேரடியாக வேண்டுகோள் விடுத்தனர்.
இந்த தொழிற்சங்க அதிகாரத்துவத்தினரும் ஏனைய தொழிற்சங்கங்களில் உள்ள அவர்களது சகாக்களும், இலங்கையின் மீது விதிக்கப்பட்ட புதிய வரி அதிகரிப்பானது தாம் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறிக்கொள்ளும் தொழிலாளர்களின் தொழில்கள் மற்றும் வேலை நிலைமைகளில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருந்த போதிலும், அது குறித்து முற்றிலும் அமைதியாக உள்ளனர்.
கடந்த காலத்தைப் போலவே, ஆடை மற்றும் பிற தொழில்களில் உள்ள ஊழியர்கள் மீது நெருக்கடியை எவ்வாறு சிறப்பாகத் திணிப்பது என்பது குறித்து அவர்கள் முதலாளிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவார்கள். தொழிலாள வர்க்கத்தின் இழப்பில் இலங்கைத் தொழில்துறைகளை -அதாவது முதலீட்டாளர்களின் இலாபத்தை- பாதுகாப்பதிலேயே அவர்கள் பிரதானமாக அக்கறைகொண்டுள்ளனர்.
2008 பூகோள நிதி நெருக்கடி மற்றும் 2020 இல் கோவிட்-19 தொற்றுநோய் போன்ற கடந்தகால நெருக்கடிகளின்போது, தொழிற்சங்கத் தலைவர்கள், தொழிற்சாலை மூடல்கள், பெருமளவிலான வேலை நீக்கங்கள் மற்றும் ஊதியக் குறைப்புகளை ஆதரித்து, சுமையை தொழிலாளர்கள் மீது மாற்றினர். தங்கள் உறுப்பினர்களின் எந்தவொரு சுயாதீனமான அணிதிரள்வையும் எதிர்த்த அவர்கள், 2022 பொருளாதார சரிவின் போது ஏற்பட்ட பெருமளவிலான வேலை நீக்கங்களை எதிர்த்துப் போராடத் தவறிவிட்டதுடன் சர்வதேச நாணய நிதியம் கட்டளையிட்டு அடுத்தடுத்த அரசாங்கங்களால் செயல்படுத்தப்பட்ட சிக்கன நடவடிக்கைகளுக்கு உறுதியுடன் ஆதரவளித்தனர்.
20 சதவீத வரி தொடர்பாக ட்ரம்ப் நிர்வாகத்துடன் எட்டப்பட்ட ஒப்பந்தத்தின் முழு விவரங்களையும் அரசாங்கம் வெளியிடவில்லை. ட்ரம்பின் நிர்வாக உத்தரவில் கூறப்பட்டுள்ளபடி, 'பொருளாதார மற்றும் தேசிய பாதுகாப்பு விஷயங்களில் அமெரிக்காவுடன் இணைந்து செயல்படுவது சம்பந்தமான இலங்கையின் குறிப்பிட்ட முயற்சிகள்' எனப்படும் வாக்கியத்தின் பிரதான அங்கம் என்னவென்று தெளிவாகத் தெரியவில்லை.
இது ட்ரம்பின் பொருளாதார மூலோபாயத்தில் ஒரு பரந்த போக்கை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இதில், நாடுகள் அமெரிக்க புவிசார் அரசியல் நலன்களுடன், -குறிப்பாக அமெரிக்க ஏகாதிபத்தியம் அதன் உலகளாவிய ஆதிக்கத்திற்கு பிரதான அச்சுறுத்தலாகக் கருதும் சீனாவிற்கு எதிரான அதன் தீவிரமான போர் தயாரிப்புகளுடன்- இணைந்து செயல்பட வேண்டும் எனும் கட்டளைகளாக இந்த வர்த்தக ஒப்பந்தங்கள் செயல்படுகின்றன.
புவிசார் அரசியல் பிரச்சினைகள் குறித்த நேரடிக் கருத்தைத் தவிர்த்த சூரியப்பெரும, 'வெளிப்படுத்தாத நிபந்தனைகள்' காரணமாக, இலங்கையால் கலந்துரையாடலில் உள்ள அனைத்து விவரங்களையும் உடனடியாக வெளியிட முடியவில்லை என்று கூறினார்.
வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி திசாநாயக கூறியதாவது: “இந்தச் செயல்முறையின் போது அமெரிக்கா எங்களுக்கு பல திட்டங்களை முன்வைத்தது. அந்த திட்டங்கள் குறித்து நாங்கள் இன்னும் கலந்துரையாடல் மட்டத்தில் இருக்கிறோம். இதுவரை, இறுதி ஒப்பந்தம் எதுவும் எட்டப்படவில்லை, எந்த ஒப்பந்தமும் கையெழுத்திடப்படவில்லை. இருப்பினும், இந்தப் பேச்சுவார்த்தைகளில் சில நிலைகளில் ஒருமித்த கருத்தை எட்டியுள்ளோம்”.
இந்த அமெரிக்க திட்டங்கள் என்ன என்பதை திசாநாயக வெளிப்படுத்தவில்லை. இருப்பினும், இலங்கையை அமெரிக்காவிலிருந்து எண்ணெய் மற்றும் வாகனங்களை இறக்குமதி செய்யுமாறு ட்ரம்ப் நிர்வாகம் கோரியுள்ளதாக இலங்கை ஊடக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.
ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் ஆயுதங்களை வாங்கியதற்காக இந்தியாவை விமர்சித்த ட்ரம்ப், அதன் மீது 25 சதவீத வரியை விதித்துள்ளார். இதேபோல், வர்த்தக உபரி இருந்தபோதிலும் அமெரிக்கா பிரேசிலுக்கு 50 சதவீத வரியை விதித்தமை, வாஷிங்டனின் வர்த்தகக் கொள்கைகளில் பொருளாதார தர்க்கத்தை விட அரசியல் விசுவாசம் பெரியதாக உள்ளது என்பதை எடுத்துக்காட்டுகிறது.
முந்தைய இலங்கை நிர்வாகங்களால் கையெழுத்திடப்பட்ட படைகள் நிலைநிறுத்தல் ஒப்பந்தம் மற்றும் கையகப்படுத்தல் மற்றும் குறுக்கு சேவைகள் ஒப்பந்தம் ஆகியவை உள்ளடங்களாக ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கம் அமெரிக்காவுடன் இராணுவ ஒப்பந்தங்களை முன்னெடுத்து வருகிறது.
எல்லாவற்றுக்கும் மேலாக, திசாநாயக அரசாங்கம் இராணுவ உறவுகளை வலுப்படுத்துதல், சிரேஷ்ட அமெரிக்க இராணுவ அதிகாரிகளை வரவேற்றல் மற்றும் விரிவுபடுத்தப்பட்ட ஒத்துழைப்பைப் பற்றி கலந்துரையாடுவதன் மூலம் அமெரிக்காவுடனான அதன் இணக்கத்தை நிரூபித்துள்ளது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் சமீபத்திய இலங்கை வருகை, வாஷிங்டனின் சீன-விரோத போர் உந்துதலை ஆதரிப்பதற்கானதாக இருந்தது. இந்த போர் உந்துதலில் இந்தியா ஒரு முக்கிய பங்கை வகிக்கின்றது.
அமெரிக்க சார்பு ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க.), புதிய வரியை வரவேற்றாலும், நிர்வாக ஆணையில் உள்ள விதிகளை மேற்கோள் காட்டி, அதனுடன் தொடர்புடைய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தெளிவான அறிக்கையை வெளியிடுமாறு அரசாங்கத்தை கோரியுள்ளது.
சுமார் 2,000 தொழில்துறை பொருட்கள் மற்றும் குறைந்த எண்ணிக்கையிலான விவசாயப் பொருட்களுக்கு இலங்கைக்கு சலுகைகள் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதற்கு ஈடாக, அமெரிக்காவிலிருந்து 500 மில்லியன் டொலர் மதிப்புள்ள கச்சா எண்ணெய் மற்றும் 300 மில்லியன் டொலர் எல்பிஜி வாயுவையும் கொள்வனவு செய்ய இலங்கை உறுதியளித்துள்ளது.
வரிப் போரும் அதன் ஆபத்தான விளைவுகளும் தனிமைப்படுத்தப்பட்ட சம்பவங்கள் அன்றி, ஆழமடைந்து வரும் உலகளாவிய முதலாளித்துவ நெருக்கடியை பிரதிபலிக்கின்றன. முதலாளித்துவத்தின் கீழ் அல்லது ஒரு தேசிய கட்டமைப்பிற்குள் தொழில்கள், ஊதியங்கள் மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க முடியாது.
இந்தத் தாக்குதல்களைத் தோற்கடிக்க, தொழிலாளர்கள் போராட்டத்தைக் தங்கள் கையில் எடுத்துக்கொள்ள வேண்டும். இதன் அர்த்தம், தொழிற்சாலைகள், பெருந்தோட்டங்கள், ஏனைய வேலைத் தளங்கள் மற்றும் கிராமப்புற சமூகங்களில் நடவடிக்கைக் குழுக்களைக் கட்டியெழுப்புவதன் மூலம் முதலாளித்துவக் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கத் தலைமைக்கு வெளியே போராட்டத்தை சுயாதீனமாக ஒழுங்கமைக்க வேண்டும் என்பதாகும்.
இந்தக் குழுக்கள் ஜனநாயக ரீதியாகச் செயல்பட்டு, சர்வதேச நாணய நிதியம் மற்றும் அமெரிக்கா தலைமையிலான வரிவிதிப்புப் போரின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக, கிராமப்புற ஏழைகளையும் அணிதிரட்டிக்கொண்டு, ஒரு சுயாதீனமான அரசியல் இயக்கத்தைக் கட்டியெழுப்புவதை நோக்கி தொழிலாள வர்க்கத்தை வழிநடத்த வேண்டும். அத்தகைய இயக்கம் பின்வரும் கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும்:
- தொழில் வெட்டுக்களை, ஊதிய வெட்டுக்களை அல்லது வேலை நிலைமை சீரழிப்புகளை செய்யாதே
- புதிய வேலைவாய்ப்பு கிடைக்கும் வரை முழு ஊதியம் வேண்டும்
- வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ப கன்னியமான ஊதியம் வேண்டும்
- மருத்துவ விடுமுறை, மலிவு விலை வீடுகள் மற்றும் இலவச சுகாதாரப் பராமரிப்பு வேண்டும்
இது வெறும் உள்ளூர் போராட்டம் அல்ல. சர்வதேச நாணய நிதிய சிக்கன நடவடிக்கையைப் போலவே, வரிவிதிப்புப் போரும் உலகளாவியதாக இருப்பதுடன் இலங்கைத் தொழிலாளர்கள் பங்களாதேஷ், இந்தியா, வியட்நாம், தெற்கு மற்றும் கிழக்கு ஆசியா முழுவதும் மற்றும் சர்வதேச அளவிலும் உள்ள தங்கள் வர்க்க சகோதர சகோதரிகளுடன் ஒன்றுபட வேண்டிய அவசியத்தை முன்வைக்கிறது. இந்த எல்லை தாண்டிய ஐக்கியம், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவால் தொடங்கப்பட்டுள்ள தொழிலாளர் நடவடிக்கை குழுக்களின் சர்வதேச கூட்டணியின் அபிவிருத்தியின் மூலம் கட்டியெழுப்பப்பட வேண்டும்.