தலைமுறை Z அணிதிரட்டலை எதிர்கொண்டு, மடகாஸ்கார் இராணுவம் ஆண்ட்ரே ரஜோலினா ஆட்சியை கவிழ்த்துள்ளது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

மடகாஸ்காரில் அக்டோபர் 14, 2025 அன்று, ஜனாதிபதி ஆண்ட்ரே ராஜோலினாவின் ஆட்சி ஒரு பெரிய மக்கள் ஆர்ப்பாட்டத்தால் தூக்கியெறியப்பட்டதைத் தொடர்ந்து இராணுவத் தலையீடு ஏற்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாத இறுதியில் இருந்து தெருக்களில் சவால் செய்யப்பட்ட ஜனாதிபதி ரஜோலினா, தேசிய பாராளுமன்றத்தின் வாக்கெடுப்பின் மூலம் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அதே நேரத்தில், உயரடுக்கு இராணுவப் பிரிவான CAPSAT தலைநகர் அன்டனனரிவோவில் உள்ள ஜனாதிபதி மாளிகையின் முன் “அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளதாக” அறிவித்துள்ளது.

CAPSAT இன் தலைவரான கேர்னல் மைக்கேல் ராண்ட்ரியானிரினா, பாராளுமன்றத்தின் செயல்பாட்டைப் பராமரித்து, செனட் மற்றும் உயர் அரசியலமைப்பு நீதிமன்றத்தை கலைப்பதாக அறிவித்தார். மேலும், ஒரு சிவிலியன் அரசாங்கத்தை நிறுவும் வரை, இடைக்கால ஜனாதிபதியின் பங்கை ஏற்க ஒரு இராணுவக் குழுவை அமைப்பதாகவும் அவர் அறிவித்தார். 2009 ஆம் ஆண்டில், ரஜோலினாவை ஆட்சிக்கு கொண்டு வருவதில் முக்கிய பங்கு வகித்த இந்த இராணுவப் பிரிவு, இந்த முறை எதிர்ப்பாளர்களுடன் இணைந்திருப்பதானது மடகாஸ்காரின் முதலாளித்துவ அரசுக்குள் ஒரு ஆழமான பிளவு ஏற்பட்டுள்ளதைக் குறிக்கிறது.

பல ஆதாரங்களின்படி, ஜனாதிபதி ஆண்ட்ரே ராஜோலினா அக்டோபர் 12 அன்று பாரிஸுடன் ஒருங்கிணைக்கப்பட்டு, ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு நடவடிக்கையில் ஒரு பிரெஞ்சு இராணுவ விமானத்தில் மடகாஸ்கரை விட்டு தப்பி ஓடியுள்ளார். RFI மற்றும் பிரான்ஸ் 24 ஆகிய செய்தி ஸ்தானபங்களால் உறுதிப்படுத்தப்பட்ட இந்த வெளியேற்றமானது, பிரான்சின் முன்னாள் காலனியில் அதன் பொருளாதார மற்றும் இராணுவ இருப்பு வலுவாக இருக்கும் இடத்தில், அதன் மூலோபாய நலன்களைப் பாதுகாப்பதில், அதன் தீவிர பங்கை வெளிப்படுத்திக் காட்டுகிறது.

மடகாஸ்கர் இராணுவத்தின் அடக்குமுறையையோ அல்லது பங்கையோ ஒருபோதும் கண்டிக்காமல், “அரசியலமைப்பு ஒழுங்கை” பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை மக்ரோன் வலியுறுத்தினார். முன்னாள் காலனித்துவ சக்தியின் உடந்தையான மௌனம், சர்வதேச மூலதனத்தின் நலன்களைப் பாதுகாப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்ட அதன் தலையீட்டின் ஏகாதிபத்திய தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

இந்த இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு பல வாரங்களாக நடைபெற்று வந்த மக்கள் அணிதிரட்டல்களின் விளைவாக, Gen Z கூட்டமைப்பால் தொடங்கப்பட்டது. இது மடகாஸ்கர் இளைஞர்களின் கோபத்தை உறுதியான கோரிக்கைகளைச் சுற்றி வெளிப்படுத்தியது. அது, தண்ணீர் மற்றும் மின்சார வெட்டுக்களை முடிவுக்குக் கொண்டுவருதல், ஊழலுக்கு எதிரான போராட்டம், மேம்பட்ட வாழ்க்கை நிலைமைகள் மற்றும் ஜனாதிபதியின் ராஜினாமா ஆகும். மேலும், தொழிற்சங்க கூட்டமைப்புகள், அரசு ஊழியர்கள் மற்றும் அனைத்து வயது எதிர்ப்பாளர்களின் ஆதரவுடன் இந்த இயக்கம் விரைவாக விரிவடைந்தது.

இதற்கு துப்பாக்கிச் சூடுகள், கண்ணீர்ப்புகைக் குண்டுகள், பாரிய கைதுகள் என அரசின் எதிர்வினை கடுமையாக இருந்தது. ஆர்ப்பாட்டங்கள் தொடங்கியதிலிருந்து குறைந்தது 22 பேர் கொல்லப்பட்டதாகவும், 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் ஐ.நா. தெரிவித்துள்ளது.

அக்டோபர் 6 ஆம் தேதி, ஜெனரல் ஜாஃபிசம்போ பிரதமராக நியமிக்கப்பட்டதன் மூலம் தொடங்கிய அரசாங்கத்தின் இராணுவமயமாக்கல், நெருக்கடியை மேலும் அதிகப்படுத்தியுள்ளது. 75 சதவிகிதத்திற்கும் அதிகமான மக்கள் ஒரு நாளைக்கு 0.80 சென்டி யூரோவுக்குக் குறைவாக வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்ந்து வருகின்ற நிலையில், ஆட்சி சமூகக் கோரிக்கைகளை நிவர்த்தி செய்ய முடியாமல், அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டுள்ளது.

போராட்டங்கள் இளைஞர்களையும் தாண்டி விரைவாக பரவின. சுமார் ஐம்பது தொழிற்சங்கங்களின் ஒரு கூட்டமைப்பான மலகாசி தொழிற்சங்க ஒற்றுமை, ஜனாதிபதி ராஜோலினாவின் ராஜினாமாவையும் 2022 முதல் முடக்கப்பட்ட சம்பள உயர்வுகளையும் கோரி அக்டோபர் 1 முதல் பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தது. SEMPAMA (ஆசிரியர் சங்கம்) கல்வி வளங்கள் இல்லாததைக் கண்டித்து இந்தப் போராட்டங்களில் இணைந்து கொண்டது.

ஆனால் இவர்களின் பங்கு, உலகின் இதர இடங்களிலும் உள்ள தொழிற்சங்கவாதத்தின் வரம்புகளையே மடகாஸ்கரிலும் பிரதிபலிக்கிறது: சமூக வெடிப்புக்கு ஆதரவாக இவர்கள் தங்களை நிலைநிறுத்துவதாக காட்டிக்கொண்டு, எந்தவொரு புரட்சிகர ஆற்றலையும் தடுக்கும் பொருட்டு தேவாலயம் அல்லது இதர இடங்களிலிருந்து பிரபலங்களை “உரையாடலுக்கு” அழைக்கிறார்கள். வறுமைக்கு காரணமான இந்தக் கட்டமைப்பையும் (முதலாளித்துவ அமைப்புமுறை) தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன புரட்சிகர அமைப்பின் தேவையையும் எந்த வகையிலும் பூர்த்தி செய்யாத நிறுவன சமரசங்களுக்கான அழைப்பாக இவர்களின் நோக்குநிலை உள்ளது.

பல எதிர்க்கட்சிகள் ஜனாதிபதி ராஜோலினாவின் ஆட்சிக்கு மாற்றாக தங்களை நிலைநிறுத்த முயன்றன. குறிப்பாக, டைகோ இ மடகாஸ்கரா (Tiako i Madagasikara TIM) மற்றும் மடகாஸ்கர் மியாரா-மியாங்கா (Malagasy Miara-Miainga MMM) ஆகியவைகளாகும். ஆனால், இவர்களின் பங்கு முக்கியமாக சந்தர்ப்பவாதமாகவே உள்ளது. இவர்கள் முதலாளித்துவத்தின் அடித்தளங்களைப் பாதுகாத்துவரும் அதே வேளையில், நிறுவனப் பேச்சுவார்த்தைகளின் வரையறுக்கப்பட்ட கட்டமைப்பிற்குள் மக்களின் கோபத்தை திசைதிருப்ப முயல்கின்றனர்.

சமூகக் கோரிக்கைகளை முன்னெடுத்துச் செல்கின்ற பாரிய அணிதிரட்டல்கள் பூர்த்தி செய்யப்படுவதற்கு தொழிலாளர் அதிகாரத்திற்கும் சோசலிசத்திற்குமான போராட்டம் தேவை. அதே வேளையில், முதலாளித்துவ ஒழுங்கைப் பாதுகாப்பதும், ஏகாதிபத்தியம் மற்றும் தேசிய முதலாளித்துவத்தின் நலன்களைப் பாதுகாப்பதும், இராணுவத் தலையீட்டின் நோக்கமாக இருக்கிறது.

மக்கள் கிளர்ச்சிகளில் இராணுவத்தின் தலையீடு மக்களின் விருப்பங்களை பூர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை என்பதை கசப்பான அனுபவம் காட்டுகிறது. 2011 இல் எகிப்து மற்றும் துனிசியாவில், இராணுவத்தின் நடுநிலை என்று கூறப்படுவது அல்லது மக்களுக்கு ஆதரவளிக்கும் அவர்களின் நிலைப்பாடு என்பது, உழைக்கும் மக்கள் அணிதிரள்வதை குறைப்பதற்கும், முதலாளித்துவ ஒழுங்கை மீட்டெடுப்பதற்கும், முதலாளித்துவ அமைப்பு முறையின் தொடர்ச்சியை ஒரு புதிய முகப்பில் உறுதி செய்வதற்கும் உதவியது.

எகிப்தில், தொழிற்சங்கங்கள் மற்றும் போலி இடது அமைப்புகளால் தொழிலாளர் போராட்டங்கள் காட்டிக் கொடுக்கப்பட்டதானது, முதலாளித்துவ வர்க்கம் மீண்டும் அரசியல் கட்டுப்பாட்டைப் பெறுவதுக்கு அனுமதித்தது. இந்த சரணடைதல், தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் அனைத்து வகையான சமூக எதிர்ப்புகளுக்கும் எதிராக அடக்குமுறையை தீவிரப்படுத்துவதன் மூலம், நாட்டை ஆளும் அப்தெல் ஃபத்தா அல்-சிசியின் கீழ் இராணுவ சர்வாதிகாரத்தை மீண்டும் கொண்டு வருவதற்கு வழி வகுத்தது.

மடகாஸ்கரில் ஜனநாயக விரோத ஆட்சிகளுக்கு இடையே ஏற்கனவே ஏராளமான மாற்றங்களில் ஈடுபட்டுள்ள இராணுவப் பிரிவான CAPSAT இன் தலையீடு, அடிப்படையில் வேறுபட்ட வர்க்க இயல்புடையது அல்ல. ஏகாதிபத்திய சக்திகளால், குறிப்பாக பிரான்சால் ஆதரிக்கப்படும் மலகாசி இராணுவ ஆட்சி, இளைஞர்கள் மற்றும் தொழிலாள வர்க்கத்தினரிடையே எழுந்துள்ள எதிர்ப்புக்களை நசுக்க, அடக்குமுறை, பிரச்சாரம், ஒத்துழைப்பு போன்ற அனைத்து வழிகளையும் பயன்படுத்தும்.

ஜனாதிபதி ரஜோலினா ஆட்சியிலிருந்து தப்பிச் செல்வதற்கு பாரிஸ் வழங்கிய தளவாட ஆதரவானது, பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் பங்கை விளக்குகிறது. எரிசக்தி, தொலைத்தொடர்பு மற்றும் மடகாஸ்காரின் அரிய மண் வளங்களில், அதன் மூலோபாய நலன்களைப் பாதுகாக்க ஆர்வமாக உள்ள பிரெஞ்சு ஏகாதிபத்தியம், ஜனநாயகத்தைப் பாதுகாக்க முயற்சிக்கவில்லை. மாறாக, சமூகக் கிளர்ச்சியைக் கட்டுப்படுத்தி நசுக்கக்கூடிய ஒரு ஆட்சியை உறுதிப்படுத்த முயற்சிக்கிறது.

சமூக நிலைமைகள் மோசமடைந்து வருவது, சர்வாதிகார ஆட்சியின் எழுச்சி மற்றும் முதலாளித்துவ நெருக்கடியின் மோசமடைதல் ஆகியவற்றிற்கு எதிராக, உலகத் தொழிலாளர் மற்றும் மாணவர் அணிதிரட்டலின் ஒரு பகுதியாக மடகாஸ்கர் கிளர்ச்சி அமைந்துள்ளது. மொராக்கோவில் “Gen Z” இயக்கங்கள், பெருவில் நடந்த பாரிய வேலைநிறுத்தங்கள், ஐரோப்பாவில் தொழிலாளர் போராட்டங்கள் மற்றும் ஆப்பிரிக்கா முழுவதும் நடந்துவரும் அணிதிரட்டல்கள் அனைத்தும் சிக்கன நடவடிக்கைகள், இராணுவவாதம் மற்றும் நிறுவப்பட்ட சமூக ஒழுங்கை ஆழமாக நிராகரிப்பதை பிரதிபலிக்கின்றன.

ஆனால், புரட்சிகர சோசலிச தலைமை இல்லாமல், தன்னிச்சையான இயக்கங்கள் - எவ்வளவுதான் பெரியதாக இருந்தாலும் - திசைதிருப்பப்படும், அடக்கப்படும் அல்லது நிறுவன சமரசங்களில் மூழ்கடிக்கப்படும். “Gen Z” கூட்டமைப்பு, அதன் ஒருங்கிணைந்த வலிமை இருந்தபோதிலும், தெளிவான அரசியல் நோக்குநிலை இல்லாமல் உள்ளது. தொழிலாள வர்க்கம் சுயாதீனமாக, ஒரு சோசலிச மற்றும் சர்வதேசிய அடிப்படையில் ஒழுங்கமைக்கப்படாவிட்டால், இராணுவ ஆட்சி இறுதியில் மூலதனத்திற்கு சேவை செய்யும் ஒரு புதிய வடிவ சர்வாதிகாரத்தை திணிக்கும்.

இந்த சமூக வெடிப்பை முதலாளித்துவத்தின் உலகளாவிய நெருக்கடியின் ஒரு பகுதியாக மட்டுமே புரிந்து கொள்ள முடியும். தொடர்ச்சியான பணவீக்கம், பாரிய கடன், ஏகாதிபத்தியப் போர்கள் மற்றும் அதிகரிக்கும் சமத்துவமின்மை என்பன, இதர இடங்களைப் போலவே, மடகாஸ்கரிலும், சர்வதேச மூலதனத்துடன் நெருக்கமாக பிணைக்கப்பட்ட தேசிய முதலாளித்துவம், மக்களின் ஜனநாயக மற்றும் சமூக அபிலாஷைகளை பூர்த்தி செய்ய இலாயக்கற்றுள்ளது.

லியோன் ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சிக் கோட்பாடு, தற்போதைய நிலைமையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. ஏகாதிபத்தியத்தால் ஆதிக்கம் செலுத்தப்படும் நாடுகளில், தேசிய முதலாளித்துவம் அடிப்படை ஜனநாயகப் பணிகளான வறுமையை ஒழித்தல், பொது சேவைகளை அணுகுதல் அல்லது மக்களின் இறையாண்மை போன்றவற்றை தீர்ப்பதுக்கு இலாயக்கற்றுள்ளது என்பதைக் காட்டுகிறது. ஏனெனில், தேசிய முதலாளித்துவம் சர்வதேச மூலதனத்துடன் இயல்பாக இணைக்கப்பட்டுள்ளது. அனைத்து முதலாளித்துவ மற்றும் குட்டி முதலாளித்துவ சக்திகளிலிருந்தும் சுயாதீனமாக ஒழுங்கமைக்கப்பட்ட தொழிலாள வர்க்கத்தால் மட்டுமே, இந்தப் போராட்டங்களை வெற்றிக்கு கொண்டு செல்ல முடியும்.

அதிகாரத்தை கைப்பற்றும் போது, அது ஜனநாயகக் கோரிக்கைகளை ஒரு சர்வதேச சோசலிச வேலைத் திட்டத்துடன் இணைத்து, உலக முதலாளித்துவத்திற்கு எதிரான ஒரு பொதுவான போராட்டத்தில் சர்வதேச தொழிலாளர்களுடன் ஐக்கியப்பட வேண்டும்.

மடகாஸ்கர் தொழிலாளர்களின் போராட்டமானது, தொழிலாள வர்க்கத்தின் சர்வதேசப் போராட்டத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டால் மட்டுமே வெற்றிபெற முடியும். ஐரோப்பாவில் வேலைநிறுத்தங்கள், ஆப்பிரிக்காவில் அணிதிரட்டல்கள் மற்றும் லத்தீன் அமெரிக்காவில் கிளர்ச்சிகள் ஆகியவை சிக்கன நடவடிக்கைகள், சர்வாதிகாரம் மற்றும் போருக்கு எதிரான ஒரே உலகளாவிய இயக்கத்தின் ஒரு பகுதியாக உள்ளன. இது, சர்வதேச சோசலிச வேலைத் திட்டத்தின் அடிப்படையில் எல்லைகளைக் கடந்து தொழிலாளர்களின் நனவான ஐக்கியத்தைக் கோருகிறது.

மடகாஸ்கர் நெருக்கடி என்பது ஒரு தனித்துவமான நிகழ்வு அல்ல. இது உலக முதலாளித்துவத்தின் திவால்நிலையின் வெளிப்பாடாகும். மடகாஸ்கரின் இளைஞர்களும் தொழிலாளர்களும் கடந்த கால அனுபவங்களிலிருந்து பாடங்களைக் கற்றுக் கொண்டு தங்களைச் சுயாதீனமாக, சோசலிச மற்றும் சர்வதேச அடிப்படையில் ஒழுங்கமைத்துக் கொள்ள வேண்டும். தொழிலாளர்களுக்கு புரட்சிகர தலைமைத்துவத்தை வழங்குவதற்காக, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) பிரிவுகளை மடகாஸ்கர் மற்றும் ஆப்பிரிக்காவில் கட்டியெழுப்புவதே இன்றுள்ள மையப் பணியாக உள்ளது.

Loading