முன்னோக்கு

அமெரிக்காவில் கொந்தளிப்பு: நடப்பது என்ன ?

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

அமெரிக்காவில் தீவிரமடைந்து வரும் அரசியல் நெருக்கடியானது முதலாளித்துவத்தின் ஆழமடைந்து வரும் வீழ்ச்சியில் வேரூன்றியதாகும். இது இராணுவ மற்றும் பாசிச சக்திகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு சர்வாதிகாரத்தை நோக்கி ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் துரிதமாக முன்னேறுவதன் மூலம் பண்புமயப்படுத்தப்படுகிறது.

ட்ரம்ப் ஆட்சி, அமெரிக்க அரசியலமைப்பு உட்பட அனைத்து சட்டங்களையும் மீறுகின்ற, ஜனநாயக உரிமைகளை நசுக்குகின்ற நடவடிக்கைகள் பற்றிய செய்திகள் இல்லாமல் ஒரு நாள் கூட இல்லை. மில்லியன் கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீதான கொடூரமான ஒடுக்குமுறை, பேச்சு சுதந்திரத்தை அடக்குதல், அரசியல் எதிரிகளை குறிவைத்தல் மற்றும் நகரங்களிலும் மாநிலங்களிலும் இராணுவத்தை நிலைநிறுத்துதல் ஆகியவை அது எடுத்துள்ள சில நடவடிக்கைகளாகும். சர்வதேச அளவில் எடுத்துக்கொண்டால், ட்ரம்ப் ஆட்சியானது வரிப் போரை முன்னெடுப்பது, காசா மீதான இஸ்ரேலின் இனப்படுகொலை ஆக்கிரமிப்பை ஆதரிப்பது உட்பட உலகை தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரும் போர் முயற்சிகளையும் வெனிசுலாவில் போல் ஆட்சி மாற்ற முயற்சிகளையும் துரிதப்படுத்தியுள்ளது.

அக்டோபர் 18 அன்று, மில்லியன் கணக்கான அமெரிக்க தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் ஏனைய மக்களும் 'மன்னர்கள் வேண்டாம்' என்ற முழக்கத்தின் கீழ் ட்ரம்பின் தாக்குதல்களுக்கு எதிராக வீதிகளில் இறங்கிப் போராட உள்ளனர்.

உலக முதலாளித்துவத்தின் மையமாக அமைந்துள்ள அமெரிக்கவில் நெருக்கடி அந்தளவுக்கு கொந்தளிப்பானதாக இருந்தாலும், இலங்கையில் ஆளும் மக்கள் விடுதலை முன்னணி / தேசிய மக்கள் சக்தி (ஜே.வி.பி./தே.ம.ச.) மற்றும் இலங்கையின் ஏனைய அனைத்து முதலாளித்துவக் கட்சிகளும், அவற்றைச் சுற்றி சுழலும் போலி இடது அமைப்புகள், ஊடகங்கள் மற்றும் ஆய்வுகளை எழுதும் பண்டிதர்கள் கூட, இதைப்பற்றி மிகவும் மௌனம் காக்கின்றனர்.

இந்த மௌனத்தின் மூலம், ட்ரம்ப் நிர்வாகத்தின் சர்வாதிகார குண்டர் கொள்கைகளுக்கு அவர்களின் ஆதரவும் ஒப்புதலும் மட்டுமல்லாமல், சர்வதேச நாணய நிதியத்தால் இலங்கையின் உழைக்கும் மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள கொடூரமான சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக வளர்ந்து வரும் தொழிலாள வர்க்க தலைமையிலான ஒடுக்கப்ட்ட மக்களின் எழுச்சிகளை நசுக்குவதற்காக சர்வாதிகாரக் கொள்கைகளை கையில் எடுத்துக்கொள்ள அதிலிருந்து உந்துதல் பெறுவதைப் பற்றி கணக்கிடுவதும் வெளிப்படுகிறது.

கடுமையான சிக்கன நடவடிக்கைகளுக்கு ஆளான இந்த நாட்டின் உழைக்கும் மக்களை, அவர்களின் சர்வதேச வர்க்க சகோதர சகோதரிகளிடமிருந்து பிரித்து, அவர்களை முதலாளித்துவ-தேசியவாத புதைகுழியில் மூழ்கடிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, முதலாளித்துவ ஸ்தாபனமும், போலி இடதுசாரிகளும், இந்த வீழ்ச்சியை இந்த நாட்டு மக்களிடமிருந்து தொடர்ந்து மூடி மறைத்து வருகின்றனர். தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் ஜனநாயக உரிமைகளை மதிக்கும் அனைவரும் இதை நிராகரிக்க வேண்டும்.

இதற்கு நேர்மாறாக, சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.), சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் (IYSSE) அமைப்பு மற்றும் உலக சோசலிச வலைத் தளமும் (wsws.org) இலங்கையில் உழைக்கும் மக்களையும் இளைஞர்களையும் அமெரிக்காவில் வேகமாக வளர்ந்து வரும் போக்கை உன்னிப்பாகக் கவனிக்குமாறு வலியுறுத்துகின்றன. அமெரிக்காவில் ஏற்படும் முன்னேற்றங்கள் அனைத்து நாடுகளையும் பாதிப்பது மட்டுமல்லாமல், ஜனநாயக உரிமைகளை மிதித்து சர்வாதிகார, பாசிச ஆட்சிகளை நிறுவ ஏனைய நாடுகளின் ஆளும் வர்க்கங்களும் திரும்புவதையும் பிரதிபலிக்கின்றன.

இரண்டாம் உலகப் போரின் பின்னர், பேரழிவிற்கு உள்ளான ஐரோப்பா மற்றும் ஜப்பான் உட்பட உலகளாவிய முதலாளித்துவ அமைப்பு, அமெரிக்க பொருளாதார பலத்தின் அடிப்படையில் மீண்டும் உயிர்ப்பிக்க முடிந்தது. கடந்த ஐந்து தசாப்தங்களாக, உலக முதலாளித்துவ அமைப்பிற்குள்ளேயான உள்ளார்ந்த முரண்பாடுகள் காரணமாக அமெரிக்க பொருளாதார பலம் அதற்கு நேர்மாறாக மாறியுள்ளது. இன்று, அந்த நாடு 37 டிரில்லியன் டொலருக்கும் அதிகமான கடன் குவியலுடன் உலகின் மிகப்பெரிய கடனாளி நாடாக மாறி வெடிக்கும் விளிம்பில் உள்ளது.

நாட்டில் மிகப்பெரிய சமூக சமத்துவமின்மை காணப்படுகின்றது. பணக்காரர்கள் 1 சதவீதம் பேர் அமெரிக்காவின் மொத்த செல்வத்தில் மூன்றில் ஒரு பங்கை அல்லது 49 டிரில்லியன் டொலர்களை தம்வசம் வைத்திருக்கிறார்கள்.

டொனால்ட் ட்ரம்ப் இந்த மிகப்பெரிய பணக்காரர்களின் இலட்சியங்களையே பிரதிநிதித்துவப்படுத்துகிறார். உழைக்கும் மக்கள் மீதான ட்ரம்பின் கொடூமான தாக்குதல்கள் அவரது தனிப்பட்ட துஷ்டத்தனத்தின் விளைவு அல்ல. சமூகத்தின் உச்சியில் உள்ள செல்வந்தர்களின் இலட்சியங்களை நிறைவேற்றுவதால், இந்த ஆளும் வர்க்கத்தால் தனக்குக் கீழே உள்ள பரந்த தொழிலாள வர்க்கத்தின் எந்தவொரு சமூக அல்லது ஜனநாயக உரிமைகளையும் விட்டுவைக்க முடியாதுள்ளது. இந்தச் சூழலில்தான், தனது உரிமைகளுக்காகப் போராடும் தொழிலாள வர்க்கத்தை நசுக்க ட்ரம்ப் வர்க்கப் போரை அறிவித்துள்ளார்.

அதே போல், உலகின் வல்லரசாக, சுமார் 10 ட்ரில்லியன் டொலர்கள் வருடாந்திர இராணுவ செலவுக்கு நிதி ஒதுக்கி, அதை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை முன்மொழிந்து, சீனா, ரஷ்யா, மத்திய கிழக்கு மற்றும் லத்தீன் அமெரிக்கா உட்பட உலகம் முழுவதும் தனது இராணுவ ஆதிக்கத்தை பலப்படுத்த ட்ரம்ப் நிர்வாகம் செயல்பட்டு வருவதுடன் மூன்றாம் உலகப் போரின் பேரழிவுடன் உலக சமூகத்தை அச்சுறுத்தி வருகிறது. இந்த இராணுவச் செலவு தொழிலாள வர்க்கத்திடமிருந்து பிழிந்தெடுக்கப்படுகிறது.

செப்டம்பர் 23 அன்று, 'அமெரிக்கா முதலில்' என்று பிரகடனம் செய்து, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில், போர் மற்றும் ஆக்கிரமிப்புகளை நடத்த அச்சுறுத்தல் விடுத்து, அவரது நிர்வாகத்தின் குற்றவியல் நடவடிக்கைகளை பெருமையாகக் கூறி, ட்ரம்ப் ஆற்றிய உரை ஒரு பாசிச முழக்கமாக இருந்தது. ஈரானிய இராணுவத் தளபதிகளைப் படுகொலை செய்வதாகவும், வெனிசுலாவிலிருந்து போதைப்பொருட்களைக் கடத்துபவர்களை அழிப்பதாகவும் அவர் அச்சுறுத்தினார்.

ஜனநாயகக் கட்சியானது ட்ரம்ப்பின் தன்னலக்குழு ஆட்சிக்கு ஜனநாயக உரிமைகளை நசுக்குவதற்கு சுதந்திரமளித்து அரசாங்க சதியில் பங்காளியாக உள்ளது. தொழிலாள வர்க்கத்தின் வெகுஜன இயக்கமொன்று சோசலிச மற்றும் புரட்சிகர பணிகளை நோக்கி நகரும் என பீதியடைந்துள்ளதால், ட்ரம்ப்பின் சர்வாதிகாரத்திற்கு எதிரான வெகுஜன எதிர்ப்பை அணிதிரட்டுவதற்கு ஜனநாயகக் கட்சியும் தொழிற்சங்க அதிகாரத்துவமும் அஞ்சுகின்றன.

பூகோள பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியால் பாதிக்கப்பட்டு பொருளாதாரம் பலவீனமடைந்துள்ள இலங்கையில், 2022 இல் அடிப்படை வாழ்க்கை நிலைமைகள் நசுக்கப்படுவதற்கு எதிராக மில்லியன் கணக்கான தொழிலாளர்கள், ஏழைகள் மற்றும் இளைஞர்களும் பங்குபற்றிய வெகுஜனப் போராட்டத்துக்கு குழிபறிக்க, ஏனைய முதலாளித்துவக் கட்சிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் போலி இடது முன்னிலை சோசலிசக் கட்சியுடனும் இணைந்து ஜே.வி.பி./தே.ம.ச. திட்டமிட்டு செயற்பட்டது. முதலாவதாக, ரணில் விக்கிரமசிங்க ஆட்சிக்கு வருவதற்கான வழியைத் ஏற்படுத்தி, அவரிடமிருந்து பதவியைப் பெற்றதன் மூலம், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக அரசாங்கம், சர்வதேச நாணய நிதியத்தின் கொடூரமான திட்டத்தை தொழிலாளர்கள் மற்றும் ஏழைகள் மீது திணிக்கிறது.

ஜனநாயக உரிமைகளை நசுக்குவதற்கு, அத்தியாவசிய சேவை சட்டங்கள், நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டங்கள் உட்பட அடக்குமுறைச் சட்டங்களை அமுல்படுத்துவதோடு போராட்டங்களை அடக்குவதற்கு இராணுவம் மற்றும் பொலிசையும் பயன்படுத்தும் திசாநாயக அரசாங்கத்தைப் போலவே, சீரழிந்த முதலாளித்துவக் கட்சிகள் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவங்களும் ட்ரம்பின் நடவடிக்கைகளை நிச்சயமாக விழிப்புடன் பார்த்துக் கொண்டிருக்கின்றன.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் அனுரகுமார திசாநாயக [Photo by President’s Media Division]

​​திசாநாயக, ஜனாதிபதியாக அமெரிக்காவிற்கான தனது முதல் விஜயத்தின் போது, ஜனாதிபதி ட்ரம்புடன் ஒரு ஒளிப்படத்திற்கு காட்சி கொடுத்தார். சில காலத்துக்கு முன்னர் அமெரிக்க எதிர்ப்பு வார்த்தை ஜாலத்தில் உரத்து பேசிய திசாநாயகவுக்கு, உலகத்துக்கு அச்சுறுத்தல் விடுத்து, இஸ்ரேல் செய்த இனப்படுகொலைகளை அனுமதித்து, பாசிச வார்த்தை ஜாலங்களை உளறிய ட்ரம்புடன் ஒன்றாக நிற்பதில் எந்த தயக்கமும் இருக்கவில்லை. சர்வாதிகார ஆட்சியை நோக்கி திரும்பியுள்ள திசாநாயகவுக்கு அமெரிக்காவில் ட்ரம்ப் மற்றும் பிராந்தியத்தில் பிரதமர் மோடி போன்ற பிற்போக்கு ஆட்சிகளிடமிருந்து ஆசீர்வாதம் தேவைப்படுகிறது

அமெரிக்காவில் சர்வாதிகாரத்திற்கு எதிரான போராட்டத்தை அரசியல் ஸ்தாபனத்தின் கைகளில் விட்டுவிட முடியாது. அதற்கு, சர்வாதிகாரத்தை நிறுத்தக் கூடிய ஒரே சமூக சக்தியான தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான சர்வதேச அரசியல் இயக்கத்தை அணிதிரட்ட வேண்டும்.

அதற்காகவே, அமெரிக்காவில் சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) போராடுகிறது. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் அமெரிக்க கிளையான சோ.ச.க., இலங்கையில் சோ.ச.க.யின் சகோதரக் கட்சியாகும். இந்த மூலோபாயத்திற்காகப் போராடுவதில், தொழிலாள வர்க்கமானது ஜனநாயகக் கட்சி போன்ற முதலாளித்துவக் கட்சிகள், அதன் துணை நிறுவனங்கள், டிமோக்கிரடிக் சோசலிஸ்ட் அலயன்ஸ் மற்றும் பேர்னி சண்டர்ஸ் உட்பட போலி இடதுகள் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்திடமிருந்தும் முற்றிலுமாக முறித்துக்கொள்ள வேண்டும்.

அக்டோபர் 18 அன்று அமெரிக்காவில் ட்ரம்ப் நிர்வாகத்திற்கு எதிரான பொது போராட்டத்திற்காக, 'மன்னர்களும் வேண்டாம், நவ நாஜிக்களின் தலைவரும் வேண்டாம்! ட்ரம்பின் சர்வாதிகாரத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டு!' என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட முன்னோக்கு ஒரு சோசலிச வேலைத்திட்டத்தை விரிவுபடுத்தி பின்வரும் கோரிக்கைகளை முன்வைக்கிறது:

*ட்ரம்ப் நிர்வாகத்தை ஆட்சியில் இருந்து அகற்றுதல் மற்றும் அதன் பாசிச ஆட்சியை கலைத்தல் *அமெரிக்க நகரங்களில் இருந்து அனைத்து துருப்புக்களையும் விலக்கொள்ளல் மற்றும் பொது வாழ்க்கையில் இராணுவமயமாக்கலை நிறுத்துதல். *புலம்பெயர்ந்த தொழிலாளர்களை நாடுகடத்துவதையும் துஷ்பிரயோகம் செய்வதையும் நிறுத்து. *குடியேற்றம் மற்றும் சுங்க அமுலாக்கம் மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்பு நிறுவனத்தை ஒழித்தல். *வெனிசுலா மற்றும் பிற நாடுகளுக்கு எதிரான ஆக்கிரமிப்பு அச்சுறுத்தல்களை உடனடியாக நிறுத்துதல் மற்றும் அமெரிக்க போர் இயந்திரத்தை அகற்றுதல். *மிரட்டல் அல்லது தணிக்கை இல்லாமல் அரசாங்கத்திற்கு எதிராக எதிர்ப்பு தெரிவிக்க, ஒழுங்கமைக்க மற்றும் பேசுவதற்கான உரிமை உட்பட, கருத்து வெளியிடும் சுதந்திரத்தையும் அனைத்து ஜனநாயக உரிமைகளையும் பாதுகாத்தல். *வேலை நீக்கங்கள், சமூக நலத்திட்ட வெட்டுக்கள் மற்றும் வாழ்க்கை நிலைமைகளை அழித்தல் ஆகியவற்றை முடிவுக்குக் கொண்டுவருதல்.

* ஆளும் வர்க்கத்திடமும் அதன் பிரதிநிதிகளிடமும் மன்றாடுவதன் மூலம் இந்தக் கோரிக்கைகளை வெல்ல முடியாது என்று கூறும் இந்த முன்னோக்கு, தொழிலாள வர்க்கம் ஒரு நனவான, ஒருங்கிணைந்த அரசியல் சக்தியாக தலையீடு செய்வது வெற்றிக்கு அவசியமாகும் என்பதை வலியுறுத்துகிறது. தொழிலாள வர்க்கத்தை வழிநடத்தவும் போராட்டத்தை ஒன்றிணைக்கவும் ஒவ்வொரு வேலைத் தளத்திலும் சுற்றுப்புறத்திலும் தொழிலாளர் நடவடிக்கைக் குழுக்களை உருவாக்க இது அழைப்பு விடுக்கிறது. ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டம், ட்ரம்ப் ஆட்சியைத் தூக்கியெறியும் ஒரு பொது வேலைநிறுத்தத்தை ஏற்பாடு செய்வது வரை நீண்டுசெல்வது அவசியமாகும்.

இந்த முன்னோக்கு மேலும் கூறுவதாவது: “அமெரிக்காவில் சர்வாதிகாரத்திற்கு எதிரான போராட்டத்தில், அதன் சர்வதேச பரிமாணத்தைப் புரிந்துகொள்வது அவசியமாகும். அனைத்து வகையான குறுகிய தேசியவாத அமைப்பிலிருந்தும் விலகிக்கொள்வது அவசியமாகும். தொழிலாள வர்க்கத்தின் மகத்தான பலம் அதன் சர்வதேச தன்மையிலேயே உள்ளது. அமெரிக்க தொழிலாள வர்க்கம், தன்னை உலகளாவிய தொழிலாள வர்க்கத்தின் ஒரு பகுதியாக அடையாங்கண்டுகொண்டு, ட்ரம்பிற்கு எதிரான போராட்டத்தை உலகத் தொழிலாள வர்க்க இயக்கத்துடன் ஒன்றிணைக்க பாடுபட வேண்டும். உற்பத்தி செயல்முறையின் ஒவ்வொரு அம்சமும் உலகளாவிய வலையமைப்பால் கட்டுப்படுத்தப்படும் சூழ்நிலையில், தொழிலாள வர்க்கத்தின் மூலோபாயம் சர்வதேசமயமாக இருக்க வேண்டும்.”

அந்த போராட்டத்தின் மூலம், சோசலிச கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதையம் உலகளவில் சோசலிச உற்பத்திக்கான அடித்தளத்தை ஸ்தாபிப்பதையும் விளக்கப்படுத்தியுள்ள அமெரிக்க சோ.ச.க., இருபதாம் நூற்றாண்டின் தொழிலாள வர்க்கத்தின் மூலோபாயப் படிப்பினைகளை அடிப்படையாகக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளது,

இலங்கையிலும் தெற்காசியாவிலும் உள்ள தொழிலாள வர்க்கம், அமெரிக்காவின் முன்னேற்றங்களையும், அதன் போராட்டத்தை அபிவிருத்தி செய்வதற்காக ட்ரொட்ஸ்கிசக் கட்சி முன்னெடுக்கும் போராட்டத்தையும் புரிந்துகொள்வது மிகவும் முக்கியமாகும். ட்ரம்பின் தன்னலக்குழு சர்வாதிகாரத்திற்கான உந்துதலுக்கு எதிராக அமெரிக்காவில் உள்ள தொழிலாளர்கள் நடத்தும் போராட்டம், பிராந்திய மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் போராட்டத்தின் ஒரு பகுதியாகும்.

அமெரிக்காவில் அரசியல் அபிவிருத்திகள் குறித்த மார்க்சிய பகுப்பாய்வு, நான்காம் அகிலத்தின் உலக வெளியீடான உலக சோசலிச வலைத் தளத்தால் (wsws.org) வெளியிடப்படுகிறது. இதை தினமும் படித்து, மார்க்சிய-ட்ரொட்ஸ்கிச முன்னோக்குகளைப் பற்றி எங்களுடன் கலந்துரையாடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Loading