இலங்கை அரசாங்கமும் சர்வதேச நாணய நிதியமும் சிக்கன நடவடிக்கைகளின் "வெற்றியை" கொண்டாடுகின்றன

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

ஜூன் 16 அன்று, இலங்கை அரசாங்கமும் சர்வதேச நாணய நிதியமும் கொழும்பில் உள்ள ஷாங்க்ரி-லா ஹோட்டலில் 'இலங்கையின் மீட்புப் பாதை: கடன் மற்றும் நிர்வாகம்' என்ற தலைப்பில் ஒரு உயர்மட்ட நிகழ்வை நடத்தின.

கலந்து கொண்ட அரசாங்க அமைச்சர்கள், சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் மற்றும் பெருநிறுவன உயரடுக்கினருமாக அழைப்பாளர்களுக்கு மட்டுமேயான இந்தக் கூட்டம், சர்வதேச நாணய நிதியத்தின் கொடூரமான சிக்கனத் திட்டத்தை - ஒரு 'வெற்றிக் கதை' என்றும் நெருக்கடியில் உள்ள மற்ற நாடுகளுக்கு ஒரு 'முன்மாதிரி' என்றும் வஞ்சத்தனமாக பாராட்டி- கொண்டாடுவதாக அமைந்திருந்தது.

ஷாங்க்ரி-லா ஹோட்டலில் மேடையில் அலங்கரிக்கப்பட்ட நம்பிக்கைக்குப் பின்னால், இந்த 'மீட்பு' எனப்படுவது சர்வதேச கடன் வழங்குநர்களுக்கும் இலங்கையின் முதலாளித்துவ உயரடுக்கிற்கும் சேவை செய்ய வடிவமைக்கப்பட்ட, கடன் திருப்பிச் செலுத்தும் ஆட்சியின் பேரழிவு விளைவுகளைத் தொடர்ந்தும் தாங்கிக் கொண்டிருக்கும் தொழிலாளர்கள், ஏழைகள் மற்றும் இளைஞர்களின் முதுகில் கட்டமைக்கப்பட்டுள்ளது என்ற கொடூரமான யதார்த்தம் உள்ளது.

16 ஜூன், 2025 அன்று கொழும்பில் நடைபெற்ற "இலங்கையின் மீட்புப் பாதை: கடன் மற்றும் நிர்வாகம்" என்ற சர்வதேச மாநாட்டில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக உரையாற்றினார். [Photo: President’s Media Division of Sri Lanka] [Photo by President’s Media Division of Sri Lanka]

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக மாநாட்டைத் தொடங்கி வைத்து அறிவித்ததாவது: 'நாம் இரண்டு சாத்தியமான பாதைகளை எதிர்கொண்டோம்: ஒன்று அதே தோல்வியுற்ற மற்றும் அழிவுகரமான பாதையில் தொடர்வது, அல்லது நமது தேசத்தை மீண்டும் கட்டியெழுப்பவும் மேம்படுத்தவும் உதவும் ஒரு புதிய பாதையைத் தேர்ந்தெடுப்பது.'

'தோல்வியுற்ற மற்றும் அழிவுகரமான பாதை' என்பது 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கம் வெளிநாட்டு இருப்புக்கள் தீர்ந்து இலங்கையின் முதல் வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறியதாக அறிவித்தபோது ஏற்பட்ட பொருளாதார சரிவைக் குறிக்கிறது. கோவிட்-19 மற்றும் உக்ரேன் போரின் உலகளாவிய தாக்கத்தால் தூண்டப்பட்ட இந்த நெருக்கடி, அத்தியாவசியப் பொருட்களின் பேரழிவு தரும் பற்றாக்குறை, தினசரி மின்வெட்டு மற்றும் அதிகரித்து வரும் பணவீக்கத்தை ஏற்படுத்தியது.

அந்த ஆண்டின் தீர்க்கமான அரசியல் நிகழ்வைப் பற்றி திசாநாயக்க நிச்சயமாக எதுவும் குறிப்பிடவில்லை: 2022 ஏப்ரல் முதல் ஜூலை வரை மில்லியன் கணக்கான தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகள் பங்கேற்ற முன்னெப்போதும் இல்லாத வகையில் நடந்த மக்கள் எழுச்சி அதுவாகும். தாங்கமுடியாத வாழ்க்கை நிலைமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கக் கோரி வெகுஜனங்கள் வீதிகளில் இறங்கினர். அந்த ஆர்ப்பாட்டங்கள் ராஜபக்ஷவையும் அவரது அரசாங்கத்தையும் இராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தியதுடன் இலங்கை முதலாளித்துவத்தின் அடித்தளத்தை உலுக்கின.

அந்த நேரத்தில் திசாநாயகவின் மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி (ஜே.வி.பி./தே.ம.ச.), வெகுஜன போராட்டத்தை 'அராஜகவாதத்திற்கு' ஒப்பிட்டது. அப்போதைய பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி (ஐ.ம.ச.) உடன் சேர்ந்து, அது ஒரு இடைக்கால முதலாளித்துவ நிர்வாகத்திற்கு அழைப்பு விடுத்தது. போலி இடதுசாரிகளின் உதவியுடன், தொழிற்சங்க அதிகாரத்துவங்கள், வெகுஜன இயக்கத்தை ஒரு பாராளுமன்ற முட்டுச்சந்தில் தடம் புரளச் செய்ய இந்த அழைப்பிற்கு பின்னால் அணிதிரண்டு அதைக் காட்டிக் கொடுத்தன.

இது, மதிப்பிழந்த பாராளுமன்றம், ஐக்கிய தேசியக் கட்சியின் (ஐ.தே.க.) ஒரே பாராளுமன்ற உறுப்பினரான ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதி பதவிக்கு உயர்த்தவும், சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தத்தை பேச்சுவார்த்தை நடத்தவும், அதை காட்டுமிராண்டித்தனமாக செயல்படுத்தவும் நிலைமைகளை உருவாக்கியது.

2023 மார்ச்சில் கைச்சாத்திடப்பட்டு கொடூரமான சிக்கனத் திட்டத்திற்கான அடித்தளத்தை அமைத்த அந்த ஒப்பந்தத்தையே, ஒரு ஸ்தாபன எதிர்ப்பு சக்தியாகக் காட்டிக் கொண்டு ஆட்சிக்கு வந்த ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கம் முழுமையாக ஏற்றுக்கொண்டு தற்போது செயல்படுத்துகின்றது. தேர்தல்களின் போது சிக்கனத் திட்டத்தின் மோசமான சமூக தாக்கங்களிலிருந்து தொழிலாளர்களையும் ஏழைகளையும் பாதுகாப்பதாக ஜே.வி.பி./தே.ம.ச. புழுகித்தள்ளியது.

இறுதி முடிவு, முந்தைய அரசாங்கங்களின் கொள்கைகளிலிருந்து விலகுவது அல்ல, மாறாக தனியார்மயமாக்கல், தொழில் அழிப்பு மற்றும் சமூக வெட்டுக்கள் போன்ற அதே திட்டத்தின் தடையற்ற தொடர்ச்சியாகும்.

அரசாங்கம் 'நிலையான பொருளாதாரத்தை கட்டியெழுப்ப' எதிர்பார்க்கின்றது என்று திசாநாயக்க கொழும்பு மாநாட்டில் கூறினார். இதன் விளைவு 'நமது தேசிய இறையாண்மை மற்றும் சுய-தங்கியிருத்தலை மீட்டெடுப்பதாக' இருக்க வேண்டும். தற்போதைய சர்வதேச நாணய நிதியத்தின் திட்டம் அதன் விரிவாக்கப்பட்ட நிதி அளிப்பின் கீழ் மேற்கொள்ளப்படும் இறுதி திட்டமாக இருக்கும் என்று அவர் கூறினார்.

திசாநாயகவின் முயற்சிகளின் ஒரு முக்கிய அம்சம், 'முதலீட்டாளர்களுக்கு ஊக்கத்தொகைகள்... [அவர்களுக்கு] மூலோபாய நிவாரணம் வழங்குதல்' மூலம் அதிக வெளிநாட்டு நேரடி முதலீட்டை ஈர்ப்பது அடங்கும், என்று அவர் கூறினார். அதாவது தொழிலாளர் செலவுகளைக் குறைத்து சர்வதேச நிதி நிறுவனங்கள் மற்றும் பிரதான பூகோள கூட்டுத்தாபனங்களின் நலன்களுக்காக சுரண்டலை அதிகரிப்பதாகும்.

16 ஜூன் 2025 அன்று கொழும்பில் நடைபெற்ற "இலங்கையின் மீட்புப் பாதை: கடன் மற்றும் நிர்வாகம்" மாநாட்டில் உரையாற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் முதல் துணை நிர்வாக இயக்குநர் கீதா கோபிநாத். [Photo: X/@GitaGopinath] [Photo by X/@GitaGopinath]

திசாநாயக்க மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் முதல் துணை நிர்வாக இயக்குநர் கீதா கோபிநாத் இருவரும் இலங்கை மக்களின் 'தைரியத்தையும் தியாகத்தையும்' பாராட்ட தங்கள் உரைகளைப் பயன்படுத்தினர்.

சீர்திருத்தங்கள், 'குறிப்பாக ஏழைகளுக்கு செலவானவை மற்றும் வேதனையானவை' என்று கோபிநாத் ஒப்புக்கொண்ட போதிலும், குறைந்த வரிவிதிப்பும் மானியங்கள் வழங்கப்படுவதுமே நெருக்கடிக்கான மூல காரணங்கள் என்ற பொய்யை மீண்டும் கூறியதன் மூலம், முதலாளித்துவ நலன்களுக்கு சேவை செய்ய பல தசாப்தங்களாக கடன் வாங்கியமையே நாட்டை படுகுழியில் தள்ளியது என்ற உண்மையை புறக்கணித்தார்.

இந்த ஆண்டு பெப்ரவரியில் நிதியமைச்சராக திசாநாயக அறிமுகப்படுத்திய 2025 பாதீடானது, மீட்பு என்று அழைக்கப்படுவதன் உண்மையான தன்மையைக் குறிக்கிறது.

அரச தொழில்களைக் குறைத்து, அரச நிறுவனங்களை தனியார்மயமாக்கும் அதேவேளை, அரசாங்கம் சுகாதாரச் செலவினங்களை -கடந்த ஆண்டு 410 பில்லியனில் இருந்து- 383 பில்லியன் ரூபாயாகக் குறைத்துள்ளதுடன் கல்விக்கு -குறைந்தபட்ச அதிகரிப்பு 29 பில்லியனுடன்- 271 பில்லியன் ரூபாயை மட்டுமே வழங்கியுள்ளது. ஏற்கனவே நெருக்கடியில் உள்ள இந்த இரண்டு துறைகளும், கடன் திருப்பிச் செலுத்துவதற்காக தொடர்ந்து சிதைக்கப்படுகின்றன. பொதுக் கல்விக்கான செலவு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெறும் 1.5 சதவீதமாகவே உள்ளது -இது உலகின் மிகக் குறைந்த அளவாகும்.

தங்கள் அற்பமான மாதாந்திர உதவித்தொகையை இரட்டிப்பாக்கக் கோரிய மாணவர்களுக்கு 5,000 ரூபாயிலிருந்து 7,500 ரூபாயாக ஒரு தற்காலிக அதிகரிப்பே கிடைத்தது -இது உயிர்வாழ போதுமானது அல்ல.

400க்கும் மேற்பட்ட அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களை மறுசீரமைப்பு செய்தல் அல்லது கலைப்பதன் மூலம் ஒரு மில்லியன் தொழில்களைக் குறைக்கும் திட்டங்களுடன், அரச துறையில் கைவைப்பதே ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கத்தின் அடுத்த பிரதான இலக்காகும். முக்கிய துறைகளான பெட்ரோலியம், மின்சாரம், தொலைத்தொடர்பு, காப்புறுதி போன்றவை வெளிநாட்டு நேரடி முதலீட்டை ஈர்த்தல் என்ற போர்வையில் முழு தனியார்மயமாக்கலுக்குத் தயாராகி வருகின்றன. இந்த நடவடிக்கைகள் 'வளர்ச்சியை' நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை, மாறாக இலங்கையை உலகளாவிய மூலதனத்திற்கான மலிவு உழைப்பு புகலிடமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

அதேநேரம், பெருநிறுவனத்துறை செழித்து வருகிறது. ஃபர்ஸ்ட் கேபிடல் ரிசர்ச் ஆய்வின் படி, இலங்கையின் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் 2025 மார்ச்சில் ஆண்டு வருவாய் அதிகரிப்பை 57.4 சதவீதமாக பதிவு செய்துள்ளன, இது தொடர்ச்சியாக ஆறு காலாண்டு இலாப வளர்ச்சியைக் குறிக்கிறது. பெருநிறுவனங்கள் மீதான வரி விகிதங்கள் 15 முதல் 30 சதவீதம் வரை குறைவாகவே உள்ளதுடன் முதலீட்டாளர்களுக்கு தாராளமான வரி விலக்களிப்புகள் மற்றும் ஊக்கத்தொகைகளும் வழங்கப்படுகின்றன.

நடந்துகொண்டிருக்கும் சமூகத் தாக்குதல்கள் ஒருபுறம் இருக்க, தொழிலாளர்கள் உறுதியான எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். 2023 முழுவதும் மற்றும் 2024 ஆம் ஆண்டின் முற்பகுதி வரை, ஊதிய உயர்வு மற்றும் தொழில் பாதுகாப்பு கோரியும் சிக்கன நடவடிக்கைகளை நிறுத்தக் கோரியும் இலட்சக்கணக்கானோர் வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களில் பங்கேற்றனர்.

வேலைநிறுத்தங்கள் அரசாங்கத்தை 'ஸ்திரமின்மைக்கு' உட்படுத்தக்கூடும் என்று கூறி, 2024 ஜூலை முதல் தொழில்துறை போராட்ட நடவடிக்கையைத் கைவிட்ட ஜே.வி.பி.யுடன் இணைந்தவர்கள் உட்பட, தொழிற்சங்க அதிகாரத்துவங்களால் இந்தப் போராட்டங்கள் திட்டமிட்டுக் காட்டிக் கொடுக்கப்பட்டன.

இலட்சக்கணக்கான தொழில்களை அழிப்பது, பொது சேவைகளை வெட்டுவது மற்றும் தொழிலாளர்களின் உரிமைகளை அரிப்பது போன்ற வழிகளில் ஜே.வி.பி./தே.ம.ச. அரசங்கம் சர்வதேச நாணய நிதிய கட்டளைகளை ஈவிரக்கமின்றி செயல்படுத்துகின்றமை ஒரு புதிய மற்றும் சக்திவாய்ந்த வெகுஜன போராட்டத்திற்கு களம் அமைக்கிறது.

தொழிலாள வர்க்கத்தால் முதலாளித்துவத்தின் கட்டமைப்பிற்குள்ளோ அல்லது தற்போதுள்ள தொழிற்சங்க கட்டமைப்புகள் மூலமாகவோ இந்தத் தாக்குதலை எதிர்த்துப் போராட முடியாது. ஒரு புதிய அரசியல் மற்றும் அமைப்பு ரீதியான உபாயம் அவசியமாகும்.

தொழிலாளர்களும் ஒடுக்கப்பட்டவர்களும் ஒவ்வொரு தொழிற்சாலை, பெருந்தோட்டம், பாடசாலைகள், மருத்துவமனை மற்றும் சுற்றுப்புறங்களிலும் சுயாதீனமான நடவடிக்கைக் குழுக்களை உருவாக்க வேண்டும். இந்தக் குழுக்கள் தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் மற்றும் முதலாளித்துவக் கட்சிகளின் கட்டுப்பாட்டிற்கு வெளியே தொழிலாளர்களை அணிதிரட்டுவதோடு பல்வேறு துறைகள் மற்றும் பிராந்தியங்களில் போராட்டங்களை ஒருங்கிணைக்கத் தொடங்க வேண்டும்.

நீண்டகாலமாக புறக்கணிக்கப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட கிராமப்புற மக்களும் தங்கள் வாழ்வாதாரங்களையும் சமூக உரிமைகளையும் பாதுகாக்க நடவடிக்கைக் குழுக்களை உருவாக்க வேண்டும்.

இந்தக் குழுக்கள், சிக்கன நடவடிக்கை, போர் மற்றும் சுரண்டலுக்கு எதிராக உலகளவில் தொழிலாளர்களின் போராட்டங்களை ஒன்றிணைக்கப் போராடும் ஒரு சர்வதேச வலையமைப்பான தொழிலாளர் நடவடிக்கை குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியுடன் இணைய வேண்டும்.

சோசலிச சமத்துவக் கட்சி (SEP), இந்த நடவடிக்கைக் குழுக்களின் பிரதிநிதிகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு ஜனநாயக மற்றும் சோசலிச மாநாட்டைக் கூட்ட அழைப்பு விடுக்கிறது. இந்த மாநாடு, வெளிநாட்டுக் கடனை நிராகரிப்பதற்கும், பிரதான தொழில்கள் மற்றும் வங்கிகளை தொழிலாளர் கட்டுப்பாட்டின் கீழ் தேசியமயமாக்குவதற்கும், இலாபத்திற்காக அன்றி மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய சோசலிசக் கொள்கைகளை செயல்படுத்துவதற்கும் உறுதிபூண்டுள்ள தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்கான அடித்தளமாக மாற வேண்டும்.

தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் (இலங்கை) சோசலிச சமத்துவக் கட்சியை தொடர்புகொள்ள 077 3562327  என்ற எண்ணில் குறுஞ்செய்தி அல்லது வாட்ஸ்அப் செய்தியை அனுப்புமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

Loading