இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
இலங்கை ஜனாதிபதியும் நிதியமைச்சருமான அனுரகுமார திசாநாயக, தற்போது நவம்பர் 7 அன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள தனது அரசாங்கத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தைத் தற்போது தயாரித்து வருகிறார். கடந்த வாரம், இலங்கைக்கு வருகை தந்த சர்வதேச நாணய நிதியத்தின் குழு, இலங்கையின் அடுத்த பாதீடு, நிதியத்தின் சிக்கன நடவடிக்கை கோரிக்கைகளுக்கு முழுமையாக இணங்க வேண்டும் என்று உறுதியாக அறிவித்துள்ளது.
அரசாங்கம் அதன் கடந்தகால இலக்குகளை அடைந்ததா என்பதையும், புதிய பாதீட்டு திட்டங்கள் எவ்வாறு தயாரிக்கப்படுகின்றன என்பதையும் மதிப்பாய்வு செய்ய, செப்டம்பர் 24 முதல் அக்டோபர் 9 வரை சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் கொழும்பு வந்திருந்தனர்.
அக்டோபர் 9 அன்று, ஊடகங்களுக்கு உரையாற்றிய சர்வதேச நாணய நிதிய குழுத் தலைவர் இவான் பாபஜெர்ஜியோ, 'சர்வதேச நாணய நிதியமானது அரசாங்க செலவினங்களின் அளவு மற்றும் தரம் இரண்டையும் கண்காணிக்கும்,' என்றார்.
சர்வதேச நாணய நிதியம் அதன் 3 பில்லியன் டொலர் பிணை எடுப்புக் கடனின் ஐந்தாவது தவணையான 347 மில்லியன் டொலர்களை விடுவிப்பதற்கான அதிகாரிகள் மட்ட ஒப்பந்தத்தை எட்டியிருந்தாலும், 2026 வரவு-செலவுத் திட்டத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றுவதிலேயே சர்வதேச நாணய நிதிய நிர்வாகக் குழு இந்த தொகைக்கு ஒப்புதல் அளிப்பது 'தங்கியிருக்கின்றது' என்று பாப்பகேர்ஜியோ எச்சரித்தார்.
அடுத்த ஆண்டுக்கான பாதீடானது, 'பலதரப்பு பங்காளர்களின் நிதி பங்களிப்புகளை உறுதிப்படுத்தவும் கடன் மறுசீரமைப்பில் போதுமான முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்கும் ஏற்றவகையில், திட்ட பரிமாணம் மற்றும் நிறைவுசெய்யப்பட்ட நிதி உத்தரவாத மதிப்பாய்வுடன் இணங்க வேண்டும்,” என்று அவர் மேலும் கூறினார்.
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.3 சதவீத முதன்மை கணக்கு உபரியைக் காட்ட, நிதிப் பற்றாக்குறையைக் குறைப்பதும், 2022 இல் நாடு தவறவிட்ட வெளிநாட்டுக் கடன்களைத் திருப்பிச் செலுத்துவது 2028 இல் தொடங்கும் என்பதை உறுதி செய்வதும் இந்த 'பரிணாமங்களில்' அடங்கும். 2021 இல், இலங்கையின் பற்றாக்குறை அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதமாக இருந்தது.
'வரி இணக்கத்தை மேம்படுத்துதல், வரி தளத்தை விரிவுபடுத்துதல்... மற்றும் வினைத்திறனான பொதுச் செலவினங்களை உறுதி செய்தல்' போன்ற நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துமாறு சர்வதேச நாணய நிதிய ஊழியர்களின் மதிப்பாய்வு, அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தது.
நடைமுறையில், இதன் அர்த்தம் புதிய வரி அதிகரிப்புகள், அரசு மானியங்களைக் குறைத்தல், சுமார் 400 அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களை 'மறுசீரமைப்பு செய்தல்' அல்லது தனியார்மயமாக்குதல் மற்றும் பிற சிக்கன நடவடிக்கைகளைத் திணித்தல் மூலம் உழைக்கும் மக்களிடமிருந்து அதிக வருவாயைப் பெறுவதாகும்.
கடந்த வாரம் ஒரு உத்தியோகப்பூர்வ அறிக்கை, இலங்கை 2028 தொடங்கி அடுத்த தசாப்தத்தில் 37 பில்லியன் டொலர் வெளிநாட்டுக் கடன்களை, ஆண்டுக்கு 4 பில்லியன் டொலர் என்ற தொகையில், திருப்பிச் செலுத்தத் ஆரம்பிக்க வேண்டும், என்று பாராளுமன்றக் குழுவிடம் தெரிவித்தது.
கடந்த ஆண்டு ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களின் போது, திசாநாயகவும் அவரது மக்கள் விடுதலை முன்னணி / தேசிய மக்கள் சக்தியும் (ஜே.வி.பி./தே.ம.ச) முந்தைய அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளைத் தளர்த்துவதாக வாக்காளர்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை அளித்தனர். தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் திசாநாயக இந்த வாக்குறுதிகளை விரைவாகக் கைவிட்டார்.
அக்டோபர் 7 அன்று, சர்வதேச நாணய நிதியக் குழுவைச் சந்தித்த திசாநாயக, தனது அரசாங்கம் 'சர்வதேச நாணய நிதய ஆதரவை வெறும் வெளிப்புற உதவியாக மட்டுமல்லாமல், அதன் விரிவான மூலோபாயத்தின் ஒருங்கிணைந்த அங்கமாகவும்' கருதுவதாகக் கூறினார்.
'நிதி ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார மீட்சி நிலையை நோக்கிய இலங்கையின் தொடர்ச்சியான பயணத்தில் சர்வதேச நாணய நிதியம் ஒரு முக்கிய மூலோபாய பங்காளியாக' இருந்தது என்றும், 'சர்வதேச நாணய நிதியம் நிர்ணயித்த இலக்குகளை இலங்கை கடப்பது கட்டாயமானது' என்றும் அவர் மேலும் கூறினார். மேலும் கொடூரமான சமூகத் தாக்குதல்கள் கட்டவிழ்த்துவிடப்படும் என்பதே இதன் அர்த்தமாகும்.
சர்வதேச நாணய நிதியத்தின் செலவு வெட்டு திட்டத்தின் ஒரு முக்கிய அம்சம் பொதுத்துறையை கலைப்பதும் ஆயிரக்கணக்கான தொழில்களை அழிப்பதும் ஆகும். சர்வதேச நாணய நிதியத்தின் குழுத் தலைவர் பாபஜெர்ஜியோ, 'முறைமையின் நிதி அபாயங்களைக் கட்டுப்படுத்த' அரச நிறுவனங்கள் 'மறுசீரமைப்பு' செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இந்த திட்ட நிரலின் கொடூரமான தன்மையை, சுமார் 22,000 தொழிலாளர்களைக் கொண்ட இலங்கை மின்சார சபையின் தொடர்ச்சியான மறுசீரமைப்பில் காண முடியும். இது நான்கு நிறுவனங்களாகப் பிரிக்கப்பட்டு, கொழும்பு பங்குச் சந்தையில் தங்கள் பங்குகளை பட்டியலிட திட்டமிட்டுள்ளது.
'மின்சார நிறுவனம் ஒரு தனியார் நிறுவனத்தை போலவே வணிக அடிப்படையில் செயல்படுவதையும், நிதி ரீதியாக நல்ல மற்றும் செயல்பாட்டு ரீதியாக சிறந்த முடிவுகளை எடுப்பதையும்' உறுதி செய்வதற்கு இந்த நடவடிக்கைகள் அவசியம், என்று பாபஜெர்ஜியோ கூறினார்.
எரிசக்தித் துறை சீர்திருத்தம் மற்றும் செலவு மீட்பு விலை நிர்ணயம் செய்தலும் நிதி ஒழுக்கத்தை உறுதி செய்வதற்கு மிக முக்கியமானவை என்று அவர் மேலும் கூறினார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், மின்சார கட்டணத்தை அதிகரிப்பதாகும். சர்வதேச நாணய நிதியத்தின் அழுத்தத்தின் கீழ், அரசாங்கம் வரும் நாட்களில் மின்சார செலவை 7 சதவீதம் உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாபஜெர்ஜியோவின் கருத்துக்கள், செப்டம்பர் 4 முதல் தங்கள் தொழில்கள், ஊதிய நிலைகள், ஓய்வூதியங்கள் மற்றும் பிற உரிமைகளும் புதிய நிறுவனங்களின் கீழ் தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்யக் கோரி தொழில்துறை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இலங்கை மின்சார சபை (இ.மி.ச.) ஊழியர்களுக்கு எதிரான மறைமுக அச்சுறுத்தலாகும்.
செப்டம்பர் 21 அன்று, திசாநாயக இ.மி.ச. ஊழியர்களின் அனைத்து தொழிற்சங்க நடவடிக்கைகளையும் தடைசெய்து அத்தியாவசிய சேவைகள் விதிகளை அமுல்படுத்தினார். இந்தக் கொடூரமான சட்டங்கள், அதற்கு இணங்காத தொழிலாளர்களுக்கு சிறைத்தண்டனை உட்பட கடுமையான தண்டனைகளை விதிக்க வழியமைக்கின்றன.
கடந்த மாதம் அரசாங்கம் மிஹின் லங்கா, லங்கா சிமென்ட் பிஎல்சி மற்றும் மாகம்புர துறைமுக முகாமைத்துவ நிறுவனம் உட்பட 33 'செயல்படாத மற்றும் நிதி ரீதியாக நீடிக்க முடியாத' அரசு சார்ந்த நிறுவனங்களை கலைக்க முடிவு செய்தது. இந்த கலைப்புகள் 'நிதி ஒழுக்கத்தை மேம்படுத்துதல்' மற்றும் 'விரயத்தை தவிர்த்தல்' என்ற போர்வையில் நியாயப்படுத்தப்படுகின்றன. இந்த நிறுவனங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலைநீக்கம் செய்யப்பட்டு அவர்களுக்கு மிகக் குறைந்த இழப்பீடு வழங்கப்படும்.
உலக வங்கியும் இலங்கையின் அரச செலவைக் குறைக்க அழைப்பு விடுத்துள்ளது. அதன் இலங்கை பொது நிதி மதிப்பாய்வு 2025, நாட்டின் 1.21 மில்லியன் அரச ஊழியர்கள் 'சரியான அளவில்' இருக்க வேண்டும் என்று கூறியுள்ளதுடன், அரசாங்கம் 'நன்கு இலக்கு வைக்கப்பட்ட வெளியேற்றக் கொள்கைகள் மூலம் அதன் பெருத்துள்ள அரச துறையைக் குறைக்க வேண்டும்' என்று வலியுறுத்துகிறது.
சர்வதேச நாணய நிதியம் 'நிதி ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார மீட்பு நிலைமைக்கான' இலங்கையின் 'மூலோபாய கூட்டாளி' என்ற திசாநாயகவின் கூற்றுகள், பெரிய வணிகங்கள் மற்றும் சர்வதேச முதலீட்டாளர்களின் காதுகளுக்கு இசையாக ஒலிக்கும் அதேவேளை, அது தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளுக்கு மேலும் துயரத்தைத் தரும்.
தற்போதைய சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகள் ஏற்கனவே உழைக்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை சீரழித்துவிட்டன. உலக வங்கியின் அறிக்கையின்படி, மக்கள் தொகையில் 22 சதவீதம் பேர் மாதத்திற்கு 16,397 ரூபாய் (54 டாலர்) வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழ்வதுடன், மேலும் 10 சதவீதம் பேர் இந்த எண்ணிக்கையை விட சற்று அதிகமாக உள்ளனர். 55 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் உணவுப் பாதுகாப்பின்மையால் போராடுகின்றனர்.
ஆகஸ்ட் 7 அன்று, நாடு இந்த ஆண்டு அதன் வருவாய் இலக்கான 4.5 டிரில்லியன் ரூபாயை தாண்டும் என்று பாராளுமன்றத்தில் சுட்டிக் காட்டி, பொருளாதார மீட்சி குறித்த திசாநாயக்கவின் வாய்ச்சவடால்கள் இருந்தபோதிலும், மற்ற எல்லா நாடுகளையும் போலவே, இலங்கையும் ஆழமடைந்து வரும் சர்வதேச பொருளாதார நெருக்கடி மற்றும் வர்த்தகப் போரை எதிர்கொள்கிறது.
ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கை மீதான அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் 20 சதவீத வரிகள் ஏற்றுமதிகளை 'அரிக்கத்' தொடங்கியுள்ளதாக செப்டம்பர் 30 அன்று அறிவித்தது. தீவில் ஒட்டுமொத்த சராசரி கட்டண விகித அதிகரிப்பு -1930களின் பெரும் மந்தநிலைக்குப் பிறகு மிக அதிகமாக- 17.4 சதவீதமாக இருப்பதாக இது மதிப்பிடப்பட்டுள்ளதுடன், இது 634 மில்லியன் டொலர் ஏற்றுமதி இழப்புகளை ஏற்படுத்துவதோடு 16,000 தொழில்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கும், முக்கியமாக பெண் ஆடைத் தொழிலாளர்கள் மத்தியில் பாதிப்பை ஏற்படுத்தும்.
சமீபத்திய சர்வதேச நாணய நிதிய பேச்சுவார்த்தைகள் குறித்து பாராளுமன்ற எதிர்க்கட்சிகள் மௌனம் காக்கின்றன. அரச ஊழியர்கள் மீதான கடுமையான தாக்குதல்களுக்கு அவர்களின் அசைக்க முடியாத ஆதரவு, செப்டம்பர் 25 அன்று பாராளுமன்றத்தில் அத்தியாவசிய சேவைகள் ஒழுங்குமுறைக்கு அவர்கள் ஒருமனதாக ஒப்புதல் அளித்ததில் காணப்பட்டது.
அதேபோல், இ.மி.ச. தொழிற்சங்க அதிகாரத்துவங்களும், ஏனைய அரச வேலைத் தளங்கள் மற்றும் நிறுவனங்களில் உள்ள அவர்களின் தொழிற்சங்க சகாக்களும், சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கைகளை முழுமையாக ஆதரிப்பதுடன் திசாநாயக அடக்குமுறை அத்தியாவசிய சேவைகள் ஒழுங்குமுறையைப் பயன்படுத்துவது குறித்து வெளிப்படையாக மௌனமாக உள்ளனர்.
தொழிலாள வர்க்கம், தொழில்கள், ஊதியங்கள் மற்றும் வேலை நிலைமைகள் மீது திசாநாயக முன்னெடுக்கும் சர்வதேச நாணய நிதியம் கட்டளையிட்டுள்ள தாக்குதல்களை தோற்கடிப்பதற்கான ஒரே வழி, முதலாளித்துவ வர்க்கத்தின் ஒவ்வொரு பிரிவிலிருந்தும் பிரிந்து, அனைத்து வெளிநாட்டுக் கடன்களையும் நிராகரித்து, அனைத்து பிரதான நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் பெருந்தோட்டங்களை தேசியமயமாக்கி, அவற்றை தொழிலாளர்களின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் வைக்கும் ஒரு சோசலிச வேலைத்திட்டத்திற்காகப் போராடுவதே ஆகும்.
இதற்கு, சர்வதேச சோசலிசத்திற்கான போராட்டத்தின் ஒரு பகுதியாக, தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தை அதிகாரத்திற்குக் கொண்டுவருவதற்கான வேலைத்திட்டத்தையும் மூலோபாயத்தையும் உருவாக்குவதன் பேரில், ஜனநாயகத்துக்கும் சோசலிசத்துக்குமான மாநாட்டிற்கான அடித்தளத்தை அமைப்பதற்கு, ஒவ்வொரு வேலைத் தளத்திலும் கிராமப்புற மக்கள் மத்தியிலும் நடவடிக்கைக் குழுக்களைக் கட்டியெழுப்புவது அவசியமாகும்.