முன்னோக்கு

மன்னர்களும் வேண்டாம், நாஜிக்களின் தலைவர்களும் வேண்டாம்! ட்ரம்பின் சர்வாதிகாரத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டு!

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

லொஸ் ஏஞ்சல்ஸ் நகர மையத்தில் நடந்த போராட்டத்தின் போது ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் “மன்னர்கள் வேண்டாம்” பதாகையை ஏந்தியுள்ளனர். சனிக்கிழமை, ஜூன் 14, 2025. [AP Photo/Richard Vogel]

அக்டோபர் 18 அன்று, அமெரிக்கா முழுவதிலும் உள்ள ஒவ்வொரு முக்கிய நகரத்திலும், பல சிறிய நகரங்களிலும், பிற நாடுகளிலும் 2,500 க்கும் அதிகமான “மன்னர்கள் வேண்டாம்” ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுகின்றன. சோசலிச சமத்துவக் கட்சி இந்த ஆர்ப்பாட்டங்களை ஆதரிப்பதுடன், இயன்றளவு பரந்த அளவில் பங்கேற்க அழைப்பு விடுக்கிறது. கடந்த ஜூன் 14 ஆம் தேதி நடந்த “மன்னர்கள் வேண்டாம்” ஆர்ப்பாட்டங்கள், 10 மில்லியன் மக்களை ஈர்த்தது. இது, அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய ஒரு நாள் அரசியல் போராட்டமாக கருதப்படுகிறது.

இந்த ஆர்ப்பாட்டங்கள் ஒரு ஜனாதிபதி சர்வாதிகாரத்தை ஸ்தாபிப்பதற்கான ட்ரம்ப் நிர்வாகத்தின் அதிகரித்து வரும் சதித்திட்ட நிலைமைகளின் கீழ் நடைபெறுகின்றன. அக்டோபர் 18 க்கு முந்தைய நாட்களில், ட்ரம்ப் நிர்வாக அதிகாரிகளும் முன்னணி குடியரசுக் கட்சியினரும் போராட்டங்களை ஒரு “வெறுப்பு அமெரிக்க பேரணி” என்று கண்டனம் செய்தனர். ஆர்ப்பாட்டக்காரர்களை “பயங்கரவாதிகள்” என்று அவர்கள் முத்திரை குத்தியதுடன், இவற்றை ஒழுங்கமைப்பவர்களுக்கு எதிராக விசாரணைகளைத் தொடங்குவதாக அச்சுறுத்தினர். வெள்ளை மாளிகை கிளர்ச்சிச் சட்டத்தைப் பயன்படுத்த தயாரிப்புக்களை செய்து வருகிறது. இது, ட்ரம்புக்கு அவரது நேரடி கட்டளையின் கீழ், அமெரிக்கா முழுவதும் இராணுவத்தை நிலைநிறுத்த பெரும் அதிகாரங்களை வழங்கும்.

தேசிய காவலர் துருப்புக்கள் ஏற்கனவே வாஷிங்டன் டி.சி., சிக்காகோ, லொஸ் ஏஞ்சல்ஸ், போர்ட்லேண்ட் மற்றும் மெம்பிஸ் உட்பட முக்கிய அமெரிக்க நகரங்களில் நிறுத்தப்பட்டுள்ளன. நாட்டின் மூன்றாவது பெரிய நகரமான சிக்காகோவில் வாழும் குடியிருப்பாளர்கள் மீது பொலிஸ், குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத்துறை (ICE) மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை முகவர்களின் அன்றாட தாக்குதல்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளன. அதே நேரத்தில் தேசிய காவலர் படைகள் மேலதிக நடவடிக்கைக்கான தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன.

வெள்ளை மாளிகையில் இருந்து வரும் மொழி, உள்நாட்டுப் போரின் மொழியாகும். “உள்ளே இருக்கும் எதிரிக்கு” எதிராக இராணுவம் பயன்படுத்தப்பட வேண்டும் என்று ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.  வெள்ளை மாளிகையின் துணைத் தலைமை அதிகாரி ஸ்டீபன் மில்லர், ஜனநாயகக் கட்சியைக் கூட ஒரு “உள்நாட்டு தீவிரவாத அமைப்பு” என்று வர்ணித்துள்ளார். ஜனநாயக உரிமைகளை ஒழித்துக் கட்டுவதற்கு பகிரங்கமாக சதி செய்து வரும் நவ-நாஜிக்கள், கிறிஸ்தவ தேசியவாதிகள் மற்றும் அதிதீவிர வலதுசாரிகளின் பிரச்சாரகர்களுக்கு ட்ரம்ப் வெள்ளை மாளிகையைத் திறந்து விட்டுள்ளார்.

கட்டவிழ்ந்து வருவது ஒரு தற்காலிக பிறழ்வு அல்லது கடந்து செல்லும் அத்தியாயம் அல்ல. “இயல்பு நிலைக்குத் திரும்புதல்” இருக்காது. ட்ரம்ப் நிர்வாகத்துடன் இணைந்து அமெரிக்க ஆளும் வர்க்கம் அரசியலமைப்பு ஆட்சி வடிவங்களில் இருந்து முறித்துக் கொண்டிருக்கிறது.

தீர்க்கமான கேள்வி: என்ன செய்ய வேண்டும்? ட்ரம்பின் ஆட்சிக்கவிழ்ப்பு சதியை எவ்வாறு தோற்கடிக்க முடியும்?

அக்டோபர் 18 ம் திகதி இடம்பெறும் ஆர்ப்பாட்டங்கள், அமெரிக்காவில் ஒரு பாசிச சர்வாதிகாரத்தை ஸ்தாபிப்பதற்கான ட்ரம்ப் நிர்வாகத்தின் முயற்சிகளுக்கு ஆழமான குரோதத்தை வெளிப்படுத்துகின்றன. மைய முழக்கமான “மன்னர்கள் வேண்டாம்” என்பது, எதேச்சதிகாரத்திற்கு ஒரு பரந்த வெகுஜன விரோதத்தை வெளிப்படுத்துகிறது. (இருப்பினும், ட்ரம்ப் ஆட்சியின் நவ-நாஜி வேலைத்திட்டத்தின் இன்றைய உள்ளடக்கத்தில், “நாஜிக்களின் தலைவர் பியூரர் வேண்டாம்”) இருப்பினும், சர்வாதிகாரத்தை தடுத்து நிறுத்த கோபமும் சீற்றமும் மட்டும் போதாது. தேவைப்படுவதும், மிக முக்கியமானதும், இந்தப் போராட்டத்தை வழிநடத்த ஒரு தெளிவான வேலைத்திட்டமும் அரசியல் மூலோபாயமும் ஆகும்.

ட்ரம்ப், தன்னலக்குழு மற்றும் போர்

ட்ரம்பை தோற்கடித்து வரலாற்றின் குப்பைத் தொட்டிக்குள் அனுப்புவதற்கு, இந்த குண்டர் எதை பிரதிநிதித்துவப்படுத்துகிறார் என்பதைப் புரிந்துகொள்வது முதலில் அவசியமாகும். ட்ரம்ப் ஒரு போக்கிரி தனிநபர் அல்ல, மாறாக அமெரிக்க முதலாளித்துவ தன்னலக்குழுவின் அரசியல் பிரதிநிதி ஆவர். நிதிய ஊக வணிகம், ஒட்டுண்ணித்தனம் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் தொடர்ச்சியான வறுமை ஆகியவற்றின் மூலம் பல தசாப்தங்களாக தன்னை வளப்படுத்திக் கொண்டுள்ள ஒரு ஆளும் வர்க்கத்தின் உருவகமாக அவர் இருக்கிறார்.

ஹிட்லர், அவரது காலத்தில், ஜேர்மன் ஆளும் வர்க்கத்தின் மிகவும் சக்திவாய்ந்த பிரிவுகளால் அதிகாரத்தில் அமர்த்தப்பட்டார். ட்ரம்ப்பைப் பொறுத்த வரையில், ஆர்வமுள்ள பியூரராக (நாஜித் தலைவர் - Führer) இருக்கிறார். அவர், கடந்த மாதம் முன்னணி தொழில்நுட்ப பில்லியனர்களுடன் ஒரு சந்திப்பை நடத்தினார். அதில், அவர் அவர்களின் செல்வவளத்தை மேலும் விரிவுபடுத்துவதை “மிகவும் எளிதாக்குவதாக” சூளுரைத்தார். மைக்ரோ சொப்டின் பில் கேட்ஸ், ஆப்பிளின் டிம் குக், ஆல்பாபெட்டின் (கூகுள்) சுந்தர் பிச்சை மற்றும் செர்ஜி பிரின், மெட்டாவின் (பேஸ்புக்) மார்க் ஜுக்கர்பேர்க் மற்றும் ஓபன் ஏஐ இன் சாம் ஆல்ட்மேன் உட்பட தன்னலக்குழுக்கள் அவரது “நம்பமுடியாத தலைமையை” மிகுந்தளவில் பாராட்டினர்.

“மன்னர்கள் வேண்டாம்” போராட்டங்களுக்கு முன்னதாக, கடந்த புதன்கிழமை ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் டசின் கணக்கான தன்னலக்குழுக்களின் மற்றொரு கூட்டத்தை நடத்தினார். நியூ யோர்க் டைம்ஸில் வெளிவந்த ஒரு அறிக்கையின்படி, வெள்ளை மாளிகையில் இடம்பெறும் எதிர்கால நிகழ்வுகளில் பில்லியனர்களுக்கு மது அருந்தவும், உணவருந்தவும், நடன விருந்துகளை நடத்துவதற்கும் ஒரு சிறப்பு அறையை கட்டுவதுக்கு அவர்கள் வழங்கிய “மிகப்பெரிய தொகைக்கு” ட்ரம்ப் அவர்களுக்கு நன்றி தெரிவித்தார். “இன்றிரவு எங்கள் அறையில் நிறைய ஜாம்பவான்கள் இருக்கிறார்கள், அதனால்தான் உங்களைக் கொண்டாட நாங்கள் இங்கே இருக்கிறோம், ஏனென்றால் நீங்கள் கொடுத்துள்ளீர்கள்” என்று திரு. ட்ரம்ப் தன்னலக்குழுக்களிடம் கூறினார்.

ரியல் எஸ்டேட் மோசடியாளராக இருந்த காலத்தில், ட்ரம்ப் அவர்களின் ஆளாக இருந்து, வங்கிகளால் நிதியளிக்கப்பட்ட ஊழல் நடவடிக்கைகளுக்கு நிதியளித்திருந்தார். அவரது ஊழல், ஈவிரக்கம் இல்லாத தன்மை மற்றும் வன்முறையில் நாட்டம் ஆகியவை அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்தன. எந்தவொரு வழக்கமான, சட்ட, அரசியலமைப்பு மற்றும் வன்முறையற்ற தீர்வுகள் எதுவும் இல்லாத, அதிகரித்து வரும் தொடர்ச்சியான பொருளாதார, சமூக மற்றும் பூகோள அரசியல் நெருக்கடிகளைச் சமாளிக்க ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். முன்னெப்போதும் இல்லாத கடன் மற்றும் உலக சந்தைகளில் டாலரின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவது ஆகியவற்றால் அமெரிக்கப் பொருளாதாரத்தின் அடித்தளங்கள் சிதைந்துள்ளன. எல்லாவற்றிற்கும் மேலாக, சமூகத்தின் ஒரு சிறிய பிரிவில் செல்வம் ஆபாசமாகக் குவிந்து கிடப்பதற்கு அதிகரித்து வரும் மக்கள் எதிர்ப்பால் அவர்கள் பீதியடைந்துள்ளனர்.

400 பணக்கார அமெரிக்கர்கள் இப்போது 6.6 ட்ரில்லியன் டாலருக்கும் அதிகமான செல்வத்தைக் கட்டுப்படுத்துகின்றனர். அதேவேளையில், மக்களில் மிகப் பெரும்பான்மையினர் அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் வீழ்ச்சியடைந்துவரும் வாழ்க்கைத் தரங்களை எதிர்கொள்கின்றனர். அமெரிக்க வீட்டுக் கடன் 18.39 டிரில்லியன் டாலர்களை எட்டியுள்ளது, இதில் 1.2 டிரில்லியன் டாலர்களுக்கும் அதிகமான கடன் அட்டைக் கடனும் 1.6 டிரில்லியனுக்கும் அதிகமான மாணவர்களின் கடனும் அடங்கும். இத்தகைய சமூக சமத்துவமின்மையின் அளவுகள் ஜனநாயக ஆட்சி வடிவங்களுடன் ஒருபோதும் இயைந்திருக்க முடியாது.

ட்ரம்பின் முட்டாள்தனமான கருத்துக்கள் எவ்வளவு அபத்தமானதாகவோ, விசித்திரமானதாகவோ, பொருத்தமற்றதாகவோ, முட்டாள்தனமாகவோ தோன்றினாலும், அவரது கொள்கைகளின் அனைத்து அம்சங்களையும் இணைக்கும் ஒரு தர்க்கம் உள்ளது: அவை அமெரிக்க முதலாளித்துவத்தின் திவாலான விளைவுகளை அமெரிக்காவிலும், சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கத்தின் மீது திணிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

எடுத்துக்காட்டாக, நடந்து கொண்டிருக்கும் அரசாங்க பணிநிறுத்தம், நூறாயிரக்கணக்கான வேலைகளை அழிப்பதற்கும், சமூக வேலைத்திட்டங்களை தகர்ப்பதற்கும், மில்லியன் கணக்கான தொழிலாளர்களின் சுகாதாரம், வீட்டுவசதி மற்றும் ஓய்வூதிய நலன்களை பறிப்பதற்கும் ஒரு தாக்குதல் கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது. சமூகப் பாதுகாப்பு, மருத்துவக் காப்பீடு மற்றும் மருத்துவ உதவி ஆகியவற்றைக் வெட்டிக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே தயாரிக்கப்பட்டு வருகின்றன.

ஜனநாயக உரிமைகள் மீதான போர் வெளிநாடுகளில் ஏகாதிபத்திய வன்முறை வெடிப்பதில் இருந்து பிரிக்க முடியாதது. ட்ரம்ப் நிர்வாகம் வெனிசுலாவில் இரகசிய நடவடிக்கைகளை மேற்கொள்ள CIA-க்கு ரகசியமாக அங்கீகாரம் அளித்துள்ளதுடன், நிக்கோலஸ் மதுரோவின் அரசாங்கத்தை கவிழ்க்கும் நோக்கில் படுகொலைகள் மற்றும் ஆட்சி மாற்ற முயற்சிகளின் தாக்குதலையும் விரிவுபடுத்துகிறது. சமீபத்திய வாரங்களில், அமெரிக்க இராணுவப் படைகள் வெனிசுலா கடற்கரையில் கப்பல்களைத் தாக்கி, “போதைப்பொருள் எதிர்ப்பு” நடவடிக்கைகள் என்ற சாக்குப்போக்கின் கீழ் 27 பேர்களை கொன்றுள்ளன.

காஸாவில் ட்ரம்பின் “போர் நிறுத்தம்” என்றழைக்கப்படுவது, பல பத்தாயிரக்கணக்கான பாலஸ்தீனியர்களின் எலும்புகள் மற்றும் தரைமட்டமாக்கப்பட்ட கட்டிடங்களின் இடிபாடுகளின் மீது ஒரு புதிய காலனித்துவ குடியேற்றத்தைத் தவிர வேறில்லை.

இந்தக் குற்றங்கள், மத்திய கிழக்கு, கிழக்கு ஐரோப்பா, இலத்தீன் அமெரிக்கா மற்றும் பசிபிக் பகுதிகளை உள்ளடக்கிய உலகப் போரின் ஆரம்ப கட்டங்களில் நுழைந்துள்ள, பல தசாப்தங்களாக நீடித்த ஏகாதிபத்திய போரின் விரிவாக்கத்தில் ஒரு புதிய கட்டத்தைக் குறிக்கின்றன. முதலாளித்துவ வர்க்கம் உள்நாட்டில் ஜனநாயகத்தைப் பாதுகாத்துக்கொண்டு வெளிநாடுகளில் உலகப் போரை நடத்த முடியாது; சர்வாதிகாரம் என்பது ஏகாதிபத்தியத்தின் உள்நாட்டு முகமாகும்.

ஜனநாயகக் கட்சியின் பாத்திரம்

அரசியல் ஸ்தாபனத்திற்குள் கடுமையான எதிர்ப்பு இல்லாதது ட்ரம்ப் தனக்காக மட்டும் பேசவில்லை என்பதை நிரூபிக்கிறது. அமெரிக்க முதலாளித்துவத்தின் ஒவ்வொரு நிறுவனமும் அவரது சர்வாதிகார நிகழ்ச்சி நிரலுக்கு ஒப்புதல் அளித்துள்ளன அல்லது அதற்கு ஏற்றவாறு தங்களை தகவமைத்துக் கொண்டுள்ளன.

இரண்டாவது ட்ரம்ப் நிர்வாகத்தின் ஒன்பது மாதங்கள், ஜனநாயகக் கட்சி எதிர்ப்பின் ஒரு சக்தி அல்ல, மாறாக ஒத்துழைப்பு மற்றும் உடந்தையின் சக்தி என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்துள்ளது.

2024 தேர்தலுக்கு முன்னதாக, ட்ரம்ப் ஒரு சர்வாதிகாரியாக ஆட்சி செய்ய திட்டமிட்டுள்ளார் என்று ஜனநாயகக் கட்சியினர் எச்சரித்தனர். அவர்கள், அவரை ஒரு பாசிசவாதி என்று வெளிப்படையாக குறிப்பிட்டனர். ஆனால் இப்போது, அரசியலமைப்பை வெளிப்படையாக மீறும் ஒரு குற்றவியல் அரசாங்கத்தை எதிர்கொண்டுள்ள ஜனநாயகக் கட்சியினர், ட்ரம்ப்பை பதவியில் இருந்து அகற்றுவதற்கான மூலோபாயம் ஒருபுறம் இருக்கட்டும், அதற்கான எந்தவொரு அழைப்பையும் முன்னெடுக்கத் தவறிவிட்டனர். கிளர்ச்சிச் சட்டத்தை செயல்படுத்த ட்ரம்ப் தயாராகி, ஜனநாயகக் கட்சியினர் உட்பட எதிர்க்கட்சிகளை குற்றமாக்க முயலும் நிலையில், செனட் சிறுபான்மைத் தலைவர் சக் ஷூமரும், பிரதிநிதிகள் சபையின் சிறுபான்மைத் தலைவர் ஹக்கீம் ஜெஃப்ரிஸும் “இரு கட்சிகளுக்கும்” வேண்டுகோள்களை விடுத்து வருகின்றனர். சர்வாதிகாரத்திற்கான அதிகரித்து வரும் சதி குறித்து எதுவும் கூறாத அதேவேளையில், அரசாங்க பணிமுடக்கத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும், சுகாதார சேவையை மிகவும் மலிவானதாக மாற்றுவதற்கும், “ஒன்றாகச் சேர்ந்து பணியாற்றுமாறு” அவர்கள் ட்ரம்பையும் குடியரசுக் கட்சியினரையும் கெஞ்சுகிறார்கள்.

குறிப்பாக, ஜனநாயகக் கட்சியின் “இடது” பிரிவின் பிரதிநிதியான வெர்மான்ட் செனட்டர் பேர்ணி சாண்டர்ஸ், கோழைத்தனமான பாத்திரத்தை வகித்து வருகிறார். இந்தப் போராட்டத்தை வழிநடத்துவதற்கு எந்தவித மூலோபாயத்தையும் முன்னெடுக்காமல் “தன்னலக்குழுவை எதிர்த்துப் போராடுவது” பற்றி அவர் பேசுகிறார். ட்ரம்ப் வெற்று வார்த்தைப் பிரயோகங்களால் தோற்கடிக்கப்பட மாட்டார். சாண்டர்ஸ் பாரிய எதிர்ப்புக்கு அழைப்பு விடுக்கவில்லை அல்லது ட்ரம்ப் நிர்வாகத்தை அகற்றுவதற்கான எந்தக் கோரிக்கையையும் விடுக்கவில்லை. அமெரிக்க ஜனநாயகக் சோசலிஸ்ட் கட்சி உறுப்பினர் அலெக்ஸாண்ட்ரியா ஒகாசியோ-கோர்டெஸ் மற்றும் இப்போது நியூ யோர்க் நகர மேயர் வேட்பாளர் ஜோஹ்ரான் மம்தானி போன்ற பிரமுகர்களுடன் சேர்ந்து, அவரது ஒட்டுமொத்த பாத்திரமும் போராட்ட எதிர்ப்புக்களை ஜனநாயகக் கட்சிக்குப் பின்னால் திசைதிருப்பி விடுவதாக உள்ளது.

ஜனநாயகக் கட்சியினரின் முரண்பாடான அறிக்கைகளிலிருந்து எந்தவொரு மூலோபாயத்தையும் ஊகிக்க முடிந்தால், அது முற்றிலும் 1) ட்ரம்பை நிராகரிக்க உச்சநீதிமன்றத்தில் முறையிடுவது மற்றும் 2) 2026 தேர்தல்களில் காங்கிரஸின் கட்டுப்பாட்டை மீண்டும் வென்றெடுப்பது ஆகியவற்றைக் கொண்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தை நம்பியிருப்பதன் அபத்தம் வெளிப்படையானது. 2026 தேர்தல்களின் முடிவுக்காகக் காத்திருப்பதைப் பொறுத்தவரை, அவை நடந்தால், அது அமெரிக்க நகரங்களின் தெருக்களில் ரோந்து செல்லும் பாசிச இராணுவம் மற்றும் துணை இராணுவப் படைகள் மற்றும் வாக்குச் சாவடிகளுக்கு வெளியே வாக்காளர்களை அச்சுறுத்தும் குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத்துறை (ICE) கெஸ்டபோக்களின் (நாஜி ஆட்சியின் கீழ் இருந்த கொடூரமான இரகசிய பொலிஸ் படை) கீழ் இருக்கும் என்று நம்புவதற்கு நல்ல காரணம் உள்ளது.

ஜனநாயகக் கட்சியினரின் இயலாமை அவர்களின் வர்க்க நலன்களில் வேரூன்றி உள்ளது. ஜனநாயகக் கட்சியினருக்கும் குடியரசுக் கட்சியினருக்கும் இடையே எத்தகைய தந்திரோபாய மோதல்கள் இருந்தாலும், இரு கட்சிகளும் முதலாளித்துவ செல்வத்தைப் பாதுகாப்பதிலும், ஏகாதிபத்திய போரை முன்னெடுப்பதிலும், வெகுஜன எதிர்ப்பை நசுக்குவதிலும் ஐக்கியப்பட்டுள்ளன. ஜனநாயகக் கட்சியினர் முதலாளித்துவ ஆட்சியின் அஸ்திவாரங்களுக்கு சவால் விடும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் ஒரு பாரிய இயக்கத்தின் எழுச்சியைத் தவிர வேறெதற்கும் அஞ்சவில்லை. ட்ரம்ப் உடனான அவர்களின் வேறுபாடுகள் எப்போதுமே ஜனநாயக உரிமைகள் மீதான அவரது பாசிச தாக்குதலை மையமாகக் கொண்டிருக்கவில்லை. மாறாக, அமெரிக்க ஏகாதிபத்திய கொள்கையின் அம்சங்களில், குறிப்பாக உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போரின் அம்சங்களை மையமாகக் கொண்டுள்ளன.

தொழிற்சங்க எந்திரங்களைப் பொறுத்த வரையில், ட்ரம்ப் நிர்வாகம் தொழிலாள வர்க்கத்தின் மீது ஒரு போரை நடத்தி வருகின்ற நிலையில், அது எதுவும் செய்யவில்லை. AFL-CIO தொழிற்சங்கத்தின் முதுகெலும்பற்ற தன்மையைக் கருத்தில் கொண்டு, தொழிற்சங்கங்கள் முதலில் முதலாளித்துவ சுரண்டல் மற்றும் அரசியல் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்ட அமைப்புகளாகவே எழுந்தன என்பதை எவரும் ஒருபோதும் அறிந்திருக்க மாட்டார்கள். AFL-CIO மற்றும் அதனுடன் இணைந்த அமைப்புக்கள் தொழிலாள வர்க்கத்தைப் பாதுகாப்பதற்கான எந்த சுயாதீனமான கொள்கையையும் கொண்டிருக்கவில்லை.

தொழிற்சங்க அதிகாரத்துவமானது “இருகட்சிகள்” மற்றும் “சமரசத்திற்கான” புலம்பல் முறையீடுகளுடன் பதிலளிக்கிறது, அதே நேரத்தில் எந்த எதிர்ப்பையும் ஏற்பாடு செய்ய மறுக்கிறது. ஐக்கிய வாகனத்துறை தொழிலாளர்கள் சங்கம் மற்றும் டீம்ஸ்டர்ஸ் உள்ளிட்ட இந்த தொழிற்சங்க எந்திரங்களின் பிரிவுகள், ட்ரம்பின் பொருளாதார தேசியவாதம் மற்றும் வர்த்தகப் போர்க் கொள்கைகள் திட்டத்துடன் தங்களை வெளிப்படையாக இணைத்துக் கொண்டுள்ளன.

ட்ரம்பின் சர்வாதிகாரத்தை நிறுத்துவதற்கான சோசலிச வேலைத்திட்டம்

ட்ரம்பின் சர்வாதிகாரத்திற்கு எதிரான எதிர்ப்பை அணிதிரட்டுவதற்கான தெளிவான மற்றும் அவசர கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும் என்று சோசலிச சமத்துவக் கட்சி “மன்னர்கள் வேண்டாம்” ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்கும் அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறது. இவற்றில் பின்வருவனவற்றை உள்ளடக்கியிருக்க வேண்டும்:

  • ட்ரம்ப் நிர்வாகத்தை அதிகாரத்திலிருந்து அகற்றி, அதன் பாசிச எந்திரத்தை அகற்றுதல்.
  • அமெரிக்க நகரங்களில் இருந்து அனைத்துத் துருப்புக்களும் உடனடியாக திரும்பப் பெறுதல் மற்றும் பொது வாழ்க்கையை இராணுவமயமாக்குவதற்கு முற்றுப்புள்ளி வைத்தல்.
  • புலம்பெயர்ந்த தொழிலாளர்களை துன்புறுத்துதல் மற்றும் நாடு கடத்துதல் ஆகியவற்றை முடிவுக்குக் கொண்டு வருதல், குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத்துறை (ICE) மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையை (DHS) ஒழித்துக்கட்டுதல்.
  • வெனிசுலா மற்றும் பிற நாடுகளுக்கு எதிரான அனைத்து அச்சுறுத்தல்கள் மற்றும் ஆக்கிரமிப்பு செயல்களையும் உடனடியாக முடிவுக்குக் கொண்டுவருதல், அமெரிக்க போர் இயந்திரத்தை அகற்றுதல்.
  • அச்சுறுத்தல் அல்லது தணிக்கை இல்லாமல் அரசாங்கத்திற்கு எதிராக எதிர்ப்பு தெரிவிக்க, ஒழுங்கமைக்க மற்றும் பேசுவதற்கான உரிமை உட்பட, கருத்துச் சுதந்திரம் மற்றும் அனைத்து ஜனநாயக உரிமைகளையும் பாதுகாத்தல்.
  • பெருமளவிலான பணிநீக்கங்கள், சமூகத் நலத் திட்டங்களில் வெட்டுக்கள் மற்றும் வாழ்க்கைத் தரத்தில் வீழ்ச்சி ஆகியவற்றை முடிவுக்குக் கொண்டுவருதல்.

இந்தக் கோரிக்கைகளை ஆளும் வர்க்கத்திடமோ அல்லது அதன் அரசியல் பிரதிநிதிகளுக்கோ அழைப்பு விடுப்பதன் மூலமாக அடைய முடியாது. இதற்கு, ஐக்கியப்பட்ட மற்றும் நனவான அரசியல் சக்தியாகச் செயல்படும் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான தலையீடு தேவைப்படுகிறது. ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலை எதிர்க்கவும், ட்ரம்பின் சர்வாதிகாரத்தை வீழ்த்துவதுக்கு ஒரு பொது வேலைநிறுத்தத்திற்கு தயாரிப்பு செய்யவும் தொழிலாளர்கள் கூட்டாக அணிதிரள வேண்டும்.

சோசலிச சமத்துவக் கட்சி இந்தப் போராட்டத்தை ஒருங்கிணைக்க ஒவ்வொரு வேலையிடத்திலும், தொழிற்சாலையிலும், சுற்றுப்புறத்திலும் சாமானிய தொழிலாளர் குழுக்களை அமைக்க அழைப்பு விடுக்கிறது. ஆசிரியர்கள் மற்றும் செவிலியர்கள், வாகனத்துறை மற்றும் பொருட்களை ஏற்றிச் செல்லும் தொழிலாளர்கள், பொது ஊழியர்கள், இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் என தொழிலாள வர்க்கத்தின் ஒவ்வொரு பிரிவையும் இந்தக் குழுக்கள் ஒரே சக்திவாய்ந்த இயக்கமாக ஒன்றிணைக்க வேண்டும். ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதை வேலைகள், ஊதியங்கள், சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் சமூக சமத்துவத்திற்கான போராட்டத்துடன் இணைக்கும் ஒரு எதிர்த் தாக்குதலுக்கு இவை அடித்தளமாக மாற வேண்டும்.

அமெரிக்காவில் சர்வாதிகாரத்திற்கு எதிரான போராட்டத்தின் வளர்ச்சியில், அதன் சர்வதேச பரிமாணங்களை புரிந்துகொள்வது இன்றியமையாததாகும். அனைத்து வகையான தேசியவாத குறுகிய மனப்பான்மை வாதத்திலிருந்தும் முறித்துக் கொள்வது அவசியமாகும். தொழிலாள வர்க்கத்தின் மிகப் பெரிய பலம் அதன் சர்வதேசத் தன்மையில் தங்கியுள்ளது. அமெரிக்க தொழிலாளர்கள் தங்களை ஒரு உலகளாவிய தொழிலாள வர்க்கத்தின் பாகமாக பார்க்க வேண்டும். அத்துடன், ட்ரம்புக்கு எதிரான தங்கள் போராட்டத்தை உலகளாவிய அளவில் தொழிலாள வர்க்கத்தின் இயக்கத்துடன் இணைக்க நனவுடன் முயற்சிக்க வேண்டும். உற்பத்தி நிகழ்முறையின் அனைத்து அம்சங்களும் உலகளாவிய பொருளாதார வலையமைப்புகளால் ஆளப்படும் ஒரு சகாப்தத்தில், தொழிலாள வர்க்கத்தின் மூலோபாயம் சர்வதேசரீதியாக இருக்க வேண்டும்.

சர்வாதிகாரம், சமத்துவமின்மை மற்றும் முதலாளித்துவ சுரண்டலுக்கு எதிரான ஒரு உலகளாவிய போராட்டத்தில் கைத்தொழில்கள் மற்றும் தேசிய எல்லைகளைக் கடந்து தொழிலாளர்களை ஐக்கியப்படுத்துவதற்காக சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியை (IWA-RFC) கட்டியெழுப்புவதற்கு சோசலிச சமத்துவக் கட்சி தலைமை தாங்குகிறது. அமெரிக்காவில் சர்வாதிகாரத்தை ஸ்தாபிப்பது எல்லா இடங்களிலும் ஜனநாயக உரிமைகளுக்கு சாவு மணி அடிக்கப் போகிறது. ஏகாதிபத்திய போர் மற்றும் சமூக பிற்போக்குத்தனத்திற்கு எதிரான ஒரு பொதுப் போராட்டத்தில், ஒவ்வொரு கண்டத்திலும் உள்ள தொழிலாளர்களை ஐக்கியப்படுத்தி, சர்வதேசரீதியில் பதிலடி கொடுக்க வேண்டும்.

1930 களின் ஒட்டுமொத்த வரலாற்று அனுபவமும், பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தை முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டம் மற்றும் சோசலிசத்திற்கான போராட்டத்தில் இருந்து பிரிக்க முடியாது என்பதை நிரூபித்துள்ளது. ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கு, நிதியியல் செல்வந்த தன்னலக்குழுக்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்வதும், பெருநிறுவனங்கள் மற்றும் வங்கிகளை ஜனநாயக தொழிலாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் பொதுப் பயன்பாடுகளாக மாற்றுவதும் அவசியமாகும். ஒரு சிலரின் கைகளில் குவிந்துள்ள அளப்பரிய செல்வம் தனியார் இலாபத்திற்காக அல்லாமல், மனித தேவைகளை பூர்த்தி செய்ய பயன்படுத்தப்பட வேண்டும்.

கடந்த “மன்னர்கள் வேண்டாம்” போராட்டத்தில் பங்கேற்றவர்களில் பலர் அமெரிக்கப் புரட்சியிலிருந்து உத்வேகம் பெற்றனர். 1775 இல், அமெரிக்க குடியேற்ற மக்களின் மாபெரும் எழுச்சி, பிரிட்டிஷ் மன்னர் பொஸ்டன், நியூ யோர்க் மற்றும் பிலடெல்பியாவில் கொடுங்கோன்மைக்கு எதிரான எதிர்ப்பை அச்சுறுத்தவும், அடக்கவும் துருப்புக்களை அனுப்பியதன் மூலம் தூண்டப்பட்டது என்பதை நினைவுபடுத்துவது அவசியமாகும். இப்போது, சுதந்திரப் பிரகடனத்தின் 250வது ஆண்டு நிறைவை நாம் நெருங்கிக் கொண்டிருக்கையில், மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கான புரட்சிகர உறுதிப்பாட்டின் உணர்வு புதுப்பிக்கப்பட வேண்டும். உண்மையில், மாபெரும் அறிஞர் தோமஸ் பெயின் மிகவும் மறக்கமுடியாத வகையில் எழுதியது போல், “மனிதர்களின் ஆன்மாக்களை சோதிக்கும் நேரங்கள்” இவை.

ஆளும் வர்க்கம், அமெரிக்கப் புரட்சியில் நிறுவப்பட்ட அனைத்து ஜனநாயக உரிமைகளையும், 1861 மற்றும் 1865 க்கு இடையில் ஆபிரகாம் லிங்கனால் வழிநடத்தப்பட்ட அடிமைத்தனத்தை ஒழித்துக்கட்டுவதுக்கான பெரும் போராட்டத்தில் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்ட அனைத்து ஜனநாயக உரிமைகளையும் நிராகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்த உரிமைகளைப் பாதுகாப்பது என்பது, இப்போது அதன் சமூக உரிமைகளை அடைவதற்கான தொழிலாள வர்க்க இயக்கத்தின் வளர்ச்சியிலிருந்து பிரிக்க முடியாதது: அது, வேலை மற்றும் வாழ்வதற்கு உகந்த வருமானம், உணவு, வீட்டுவசதி, சுகாதாரம் மற்றும் கல்விக்கான உரிமைகளாகும். இந்த உரிமைகள் முதலாளித்துவ இலாப அமைப்புமுறையுடன் ஒருபோதும் இயைந்திருக்க முடியாது.

இந்த உரிமைகளை அடைவதற்கும் பாசிசம் மற்றும் காட்டுமிராண்டித்தனத்திற்குள் ஆளும் வர்க்கம் இறங்குவதை நிறுத்துவதற்கும், தொழிலாள வர்க்கம் அதிகாரத்தை அதன் சொந்தக் கைகளில் எடுத்து, சோசலிச அடித்தளங்களில் பொருளாதார வாழ்வை மறுஒழுங்கு செய்து, சமூக சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட உண்மையான ஜனநாயகத்தை நிறுவ வேண்டும்.

சோசலிச சமத்துவக் கட்சியும் அதன் இளைஞர் அமைப்பான சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பும் (IYSSE), தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் ஜனநாயக உரிமைகளையும், சமூக சமத்துவத்தையும் பாதுகாப்பதில் அர்ப்பணித்துள்ள அனைவரையும் இந்தப் போராட்டத்தை முன்னெடுக்குமாறு அழைப்பு விடுக்கின்றன: தொழிற்சாலைகள், அனைத்து வேலை இடங்கள், பள்ளிகள் மற்றும் சுற்றுப்புறங்களில் சாமானிய தொழிலாளர் குழுக்களை கட்டியெழுப்புங்கள்.

இந்த மூலோபாயத்துடன் உடன்படும் அனைவரையும் சோசலிச சமத்துவக் கட்சியில் இணையுமாறும், தொழிலாள வர்க்கத்தின் பிரமாண்டமான சமூக சக்தியை சோசலிசத்துக்கான ஒரு நனவான இயக்கமாக மாற்றுமாறும் நாம் அழைப்பு விடுக்கின்றோம்.

Loading