முன்னோக்கு

அமெரிக்காவில் வளர்ந்து வரும் எதிர்ப்பை ஜனநாயகக் கட்சியின் முட்டுச்சந்திற்குள் ஜோஹ்ரான் மம்தானி திருப்பி விடுகிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

நியூ யோர்க் நகர ஜனநாயகக் கட்சி மேயர் வேட்பாளர் ஜோஹ்ரான் மம்தானி நியூ யோர்க்கில் இடம்பெற்ற ஒரு பிரச்சார பேரணியில் பேசுகிறார். அக்டோபர் 13, 2025, திங்கட்கிழமை [AP Photo/Ted Shaffrey]

இன்னும் மூன்று வாரங்களுக்குப் பிறகு, நவம்பர் 4 செவ்வாய்க்கிழமை, ஜனநாயகக் கட்சியின் ஜோஹ்ரான் மம்தானி நியூ யோர்க் நகரத்தின் அடுத்த மேயராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஜூன் மாதம் நடந்த ஜனநாயகக் கட்சி முதன்மைத் தேர்தலில் வெற்றி பெற்ற மம்தானி, கட்சி ஸ்தாபனத்தின் விருப்பமான முன்னாள் நியூ யோர்க் ஆளுநர் ஆண்ட்ரூ கியூமோவை வியக்கத்தக்க வகையில் தோற்கடித்தார். மம்தானியின் வெற்றி, மக்கள்தொகையில் பரந்த பிரிவுகள் இடது நோக்கிய குறிப்பிடத்தக்க மாற்றத்தை பிரதிபலிக்கிறது.

எவ்வாறு இருப்பினும், ஜனநாயகக் கட்சியின் முதன்மைத் தேர்தலில் வெற்றி பெற்ற நான்கு மாதங்களில், பொலிஸுக்கு “நிதியைக் குறைப்பதில்” இருந்து நகரத்தின் மீதான பெரும் செல்வந்தர்களின் கட்டுப்பாட்டை உடைப்பது, உலகம் முழுவதும் காஸாவில் இஸ்ரேலிய இனப்படுகொலைக்கு எதிரான மக்கள் எதிர்ப்பைத் திரட்டுவதற்கு ஒத்ததாக “இன்டிபாடாவை பூகோளமயமாக்குதல்” என்ற முழக்கத்தை ஆதரிப்பது வரை, முந்தைய நிலைப்பாடுகளை நிராகரித்துள்ள மம்தானி, ஒரு முறையான அரசியல் ஆடை அவிழ்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.

மம்தானி தொடர்ச்சியான மூடிய கதவுக்குள் கூட்டங்களை நடத்தி வருகிறார். அதில், அவர் ரியல் எஸ்டேட் அதிபர்கள், பங்குச் சந்தை மற்றும் பிரதான வங்கிகளின் பிரதிநிதிகளை கவர்ந்துள்ளார். மேலும், வெறுக்கப்பட்ட மோசடிக்காரரும், ட்ரம்பின் கைப்பாவையுமான முன்னாள் போலீஸ் கேப்டன் எரிக் ஆடம்ஸை மாற்றுவதுக்கு, நிர்வாகத்தில் தீவிரமான எதுவும் இருக்காது என்பதை உறுதிசெய்ய ஜனநாயகக் கட்சி ஸ்தாபனத்தின் முக்கிய ஆலோசகர்களை அவர் நியமித்துள்ளார்.

இந்த நடவடிக்கைகள் ஆளும் வர்க்கம் மற்றும் ஜனநாயகக் கட்சி ஸ்தாபகத்தின் பிரிவுகளின் அணுகுமுறையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை கடந்த ஜூன் மாதத்தில் “மம்தானியைத் தவிர வேறு யாராவது” என்ற தலைப்புக் கட்டுரையை வெளியிட்டதிலிருந்து இன்னும் தேர்தலைப் பற்றி அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டை எடுக்கவில்லை. ஆனால், அதன் செய்தி மற்றும் கருத்து பக்கங்கள் ஜனநாயகக் கட்சி வேட்பாளரை ஊக்குவிக்கும் ஒரு மெய்நிகர் பிரச்சார மையமாக மாறிவிட்டன.

கடந்த மூன்று நாட்களில் டைம்ஸ் மொத்தமாக 25,000 வார்த்தைகள் கொண்ட —ஒரு குறுகிய நாவலின் நீளம்— அரை டசின் கட்டுரைகள் மற்றும் பத்திகளை வெளியிட்ட நிலையில், மம்தானியை ஒரு புத்திசாலித்தனமான, கவர்ச்சிகரமான மற்றும் வரலாற்றை உருவாக்கும் நபராக சித்தரித்துள்ளது.

இந்தக் கட்டுரைகளில் மிக நீளமான கட்டுரைகளைப் பற்றிய சில குறிப்புகள் கவனிக்கத்தக்கவை. “ஜோஹ்ரான் மம்தானியின் சாத்தியமற்ற, துணிச்சலான மற்றும் (இதுவரை) தடுக்கமுடியாத எழுச்சியின் உள்ளே” என்ற பாராட்டுக்குரிய தலைப்புடன் ஆஸ்டெட் ஹெர்ன்டன் எழுதிய நியூ யோர்க் டைம்ஸ் பத்திரிகையின் அட்டைப்படக் கட்டுரையாகும்.

ஜனநாயகக் கட்சி ஸ்தாபகத்துடன் தன்னை இணைத்துக் கொள்ள மம்தானி மேற்கொண்ட முயற்சி பற்றிய விவரங்களை ஹெர்ண்டன் வழங்குவதுடன், நீண்டகால ஜனநாயகக் கட்சி நிதி திரட்டுபவரான ரோபர்ட் வொல்ஃப் இன் பதிலையும் அவர் மேற்கோள் காட்டுகிறார்:

“ஜோஹ்ரான், என்னைப் பொறுத்தவரை, ஒரு முற்போக்கான முதலாளித்துவவாதி,” என்று வொல்ஃப் என்னிடம் கூறினார். அவர்களது தனிப்பட்ட தொடர்புகளிலிருந்து மம்தானி, நியூ யோர்க்கில் தனியார் துறை செழித்து வளர்வதன் முக்கியத்துவத்தை எவ்வாறு சரியாகப் பயன்படுத்துவது என்பதைக் கண்டுபிடிக்க விரும்புபவர் என்று அவர் மேலும் கூறினார். “சமத்துவத்திற்கு உதவும் மற்றும் பின்தங்கியவர்களுக்கு உதவும் விஷயங்களில் அரசாங்கத்தை எவ்வாறு பொருத்தமான வழியில் பயன்படுத்துவது என்பதைக் கண்டுபிடிக்க அவர் விரும்பும் ஒருவராக இருக்கிறார்.”

இந்த அரசியல் மாற்றத்தின் போது மம்தானி தனது நிலைப்பாட்டை “மாற்றியமைத்துள்ளார்” என்று ஹெர்டன் தொடர்ந்து குறிப்பிடுகிறார். இது ஒரு மோசமான குறைத்து மதிப்பிடலாகும்:

மம்தானி, நில உரிமையாளர்களைத் தண்டிக்க அல்ல, குத்தகைதாரர்களை ஆதரிக்க விரும்புகிறார் என்பதை அவர் தெளிவுபடுத்தியுள்ளார். பொதுக் கல்வியை ஆதரிக்க விரும்புகிறார் ஆனால், உயரடுக்கினரின் மாணவர்களைச் சேர்க்கும் சிறப்புப் பள்ளிகளைத் தாக்க விரும்பவில்லை. பாலஸ்தீன உரிமைகளை ஆதரிக்கும் அவர் சியோனிச எதிர்ப்பாளர் அல்ல. பொலிஸ்துறை என்று வரும்போது அவர் முக்கிய சலுகைகளை அவர்களுக்கு வழங்கினார். முக்கியமாக, அவர் முன்மொழிந்த மில்லியனர்களின் வரி என்ற விஷயத்தில் சமரசம் செய்யத் தயாராக இருப்பதை தெளிவுபடுத்தினார். இதனை மம்தானி 2.0 என்று அழைக்கவும்.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், முதலாளித்துவ சமூகத்தில் அடிப்படைப் பிளவுகள் இல்லை, சமூக நலன்களுக்கு இடையே சமரசத்திற்கு இடமில்லாத மோதல்கள் இல்லை என்ற கட்டுக்கதையை மம்தானி ஊக்குவிக்கிறார். இது, தொழிலாளர்களை சுரண்டும் தன்னலக்குழுக்களை எதிர்க்காமல், அவர்களை ஆதரிக்க முடியும்; பாலஸ்தீனியர்களை படுகொலை செய்யும் அரசை எதிர்க்காமல் அவர்களை ஆதரிக்க முடியும்; புலம்பெயர்ந்தோரை சிறையில் அடைத்து, சித்திரவதை செய்து, நாடு கடத்தும் நிறுவனங்களை எதிர்க்காமல் அவர்களை ஆதரிக்க முடியும் என்பது போலாகும்.

சமூக நலன்களுக்கு இடையிலான மோதல்களை மம்தானி நிராகரித்திருப்பது என்பது, ஜனநாயகக் கட்சியின் பொறிமுறையின் மூலமாக தொழிலாள வர்க்கத்தை முதலாளித்துவ வர்க்கத்தின் நலன்களுக்கு தொடர்ந்து அடிபணிய வைப்பதையே அர்த்தப்படுத்துகிறது. இது வெறுமனே மம்தானி பிரச்சாரத்தின் மட்டுமல்ல, மாறாக பேர்ணி சாண்டர்ஸ், அலெக்ஸாண்ட்ரியா ஒகாசியோ-கோர்டெஸ் மற்றும் அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்டுகள் உட்பட ஜனநாயகக் கட்சியின் “இடதுகளின்” அத்தனை முயற்சிகளுக்கும் இன்றியமையாத பணியாக இருந்து வருகிறது.

ஜனாதிபதி சர்வாதிகாரத்தை நிறுவ ட்ரம்ப் மேற்கொண்டுள்ள சதித்திட்டத்திற்கு மம்தானி அளித்த பதில், அவரது “முற்போக்கான முதலாளித்துவ” வேலைத்திட்டத்திற்கு மிகவும் மோசமான மறுப்பாகும். ட்ரம்ப் ஏற்கனவே “கம்யூனிஸ்ட் நியூ யோர்க்” என்று குறிப்பிடத் தொடங்கியுள்ளார். மம்தானி மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், அவர் உடனடியாக கடுமையான தாக்குதலுக்கு உள்ளாவார். மம்தானி தேர்ந்தெடுக்கப்பட்டால் நியூ யோர்க்கிற்கு எதிராக நேரடித் தலையீடு செய்யப்படும் என்று ட்ரம்ப் அச்சுறுத்தியுள்ளார். மேலும், எந்தவொரு சூழ்நிலையிலும், உலக முதலாளித்துவத்தின் நிதியியல் மையத்திற்கு தலைமை தாங்க பெயரளவிற்கு இடது-தாராளவாத பிரமுகரை கூட நியமிப்பதை தன்னலக்குழு சகித்துக் கொள்ளுமா என்பதைப் பார்க்க வேண்டும்.

இந்த நிலைமைகளின் கீழ், காஸா போர் நிறுத்தம் நீடித்தால் ட்ரம்ப் “பாராட்டுக்கு தகுதியானவர்” என்று கூறி மம்தானி மிகவும் நனவாகவும் வேண்டுமென்றேயும் அறிவித்தார். பைடெனைத் தொடர்ந்து, இஸ்ரேலை ஆயுதபாணியாக்கி பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீனியர்களை படுகொலை செய்வதை மேற்பார்வையிட்ட ஒருவரான ட்ரம்பை பற்றி இது கூறப்பட்டுள்ளது. தற்போது அவர் “போர் நிறுத்தம்” என்ற பதாகையின் கீழ் இனச்சுத்திகரிப்பு மற்றும் ஏகாதிபத்திய மேலாதிக்கத்தின் ஒரு நவகாலனித்துவ திட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

சாண்டர்ஸ், ஒகாசியோ-கோர்டெஸ் மற்றும் ஜக்கோபின் பத்திரிகையை (அமெரிக்காவின் ஜனநாயக சோசலிஸ்டுகளின் அதிகாரப்பூர்வமற்ற பத்தரிகை) போலவே, அமெரிக்காவில் ஒரு போலீஸ்-இராணுவ சர்வாதிகாரத்தை நிறுவுவதற்கான ட்ரம்ப் நிர்வாகத்தின் நடவடிக்கைகள் குறித்து மம்தானி கிட்டத்தட்ட முழு மௌனத்தையும் கடைப்பிடித்து வருகிறார்.

கடந்த திங்களன்று இரவு வாஷிங்டன் ஹைட்ஸில் நடந்த ஒரு பிரச்சாரக் கூட்டத்தில், வரி மற்றும் சொத்து பதிவுகளை பொய்யாக்கியதற்காக ட்ரம்ப் குழுவினருக்கு எதிரான சிவில் வழக்கில் வெற்றி பெற்றதற்கு பழிவாங்கும் விதமாக, கடந்த வாரம் ட்ரம்ப் நிர்வாகத்தால் அடமான மோசடி குற்றச்சாட்டுகளில் குற்றம் சாட்டப்பட்ட நியூ யோர்க் மாநில அட்டர்னி ஜெனரல் லெட்டிடியா ஜேம்ஸுடன் மம்தானி அருகருகே தோன்றினார்.

தனது உரையின் போது, மம்தானி தன்னை ஒரு “ஜனநாயக சோசலிஸ்ட்” என்று வர்ணிக்கவில்லை அல்லது சோசலிசம் (அல்லது முதலாளித்துவம்) பற்றி எந்த குறிப்பையையும் கொடுக்கவில்லை. அவர் தொழிலாள வர்க்கத்தை ஒரு முறை மட்டுமே குறிப்பிட்டார். சிக்காகோ, லொஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் போர்ட்லேண்ட் போன்ற நகரங்களுக்கு ட்ரம்ப் இராணுவத்தை அனுப்பியது பற்றியோ அல்லது நியூ யோர்க் நகரத்திலும் அதையே செய்வதற்கான ட்ரம்பினது அச்சுறுத்தல்கள் குறித்தோ அவர் எதுவும் கூறவில்லை. கிளர்ச்சிச் சட்டத்தைப் பயன்படுத்துவதற்கான ட்ரம்பின் அச்சுறுத்தல்கள் அல்லது இடதுசாரி எதிர்ப்பை “பயங்கரவாதம்” என்று முத்திரை குத்துவதையோ அவர் குறிப்பிடவில்லை.

மற்ற சந்தர்ப்பங்களில் செய்தியாளர்களால் நேரடியாக கேட்கப்பட்டபோது, நியூ யோர்க் நகர மக்களுக்கு எதிராக துருப்புக்களை நிலைநிறுத்துவதற்கான அவரது விடையிறுப்பு, 200 வழக்கறிஞர்களை வேலைக்கு அமர்த்துவதும், வழக்குகளைத் தாக்கல் செய்வதும் ஆகும் என்று மம்தானி அறிவித்துள்ளார். இது, அனைத்து சாலைகளும் அதிதீவிர வலதுசாரிகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு உச்ச நீதிமன்றத்திற்கு இட்டுச் செல்லும் ஒரு நீதிமன்ற அமைப்பு முறையை நம்பியிருப்பதாகும். இந்த நீதிமன்றத்தில் உள்ள ஒன்பது பேரில் மூன்று பேர்கள் ட்ரம்பால் தனிப்பட்ட முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஆவர்.

மம்தானியின் அரசியல் என்பது ஜனநாயகக் கட்சியின் ஒரு பிரிவாக செயல்படும் அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்டுகளின் (DSA) அரசியலாகும். DSA இன் இடதுசாரி வாய்வீச்சு, அதன் உண்மையான செயல்பாட்டை மறைக்கிறது: இது, நவீன அமெரிக்க வரலாற்றில் ஜனநாயக உரிமைகளுக்கு மிகப்பெரிய ஆபத்தை எதிர்கொண்டுள்ள தொழிலாள வர்க்கத்தை நிராயுதபாணியாக்கி, அணிதிரள்வதை தடுக்கிறது.

கடந்த ஜூன் மாதம் மம்தானியின் முதன்மை வெற்றியின் முக்கியத்துவத்தை பகுப்பாய்வு செய்த உலக சோசலிச வலைத் தளம், சோசலிசம் அமெரிக்க தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு “நச்சுத்தன்மையானது” என்ற கட்டுக்கதையை அது தகர்த்தெறிந்தது என்றும், ட்ரம்ப் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது அமெரிக்க மக்களிடையே ஒரு வலதுசாரி மாற்றத்தைக் குறிக்கிறது என்றும் குறிப்பிட்டது. காஸாவில் இஸ்ரேலின் இனப்படுகொலை மீதான விமர்சனம் “யூத எதிர்ப்பு” அல்லது அரசியல் ரீதியாக தற்கொலைக்கு சமமானது என்ற கூற்றையும் இது மறுத்தது. ஏனெனில், மம்தானி இளைய யூத வாக்காளர்களிடையே பெரும்பான்மையை வென்றார்.  

எவ்வாறிருப்பினும், மம்தானி மீதான ஆர்வமானது, அரசியல் அப்பாவித்தனத்தையும் அடிப்படை வரலாற்று அறிவின்மையையும் இணைக்கிறது. இந்த பழமைவாத மற்றும் வசதியான நடுத்தர வர்க்க அரை சீர்திருத்தவாதியை “சோசலிஸ்ட்” என்று விவரிப்பது, மிகக் குறைந்த அளவிலான அரசியல் நனவின் பிரதிபலிப்பாகும்.

உண்மையில், 1960களின் சிறந்த சமூக ஜனநாயகக் கட்சியினர் மற்றும் முற்போக்கான குடியரசுக் கட்சியினரின் தரத்தின்படி கூட, மம்தானியின் வேலைத்திட்டம் பழமைவாதமானது மற்றும் நிச்சயமாக அவர் ஒரு “சோசலிசவாதி” அல்ல. தன்னலக்குழுக்கள் மற்றும் ரியல் எஸ்டேட் அதிபர்களுடனான அவரது பல்வேறு சூழ்ச்சிகள், தேர்தலுக்குப் பிறகு தவிர்க்க முடியாத வகையில் அவரது வாக்குறுதிகள் மற்றும் கொள்கைகளை கைவிடுவதற்கான களத்தை அமைக்கின்றன.

சர்வாதிகாரத்தை நோக்கி அமெரிக்க ஆளும் வர்க்கம் திரும்புவது, ஜனாதிபதி-இராணுவ ஆட்சிக்கான ட்ரம்பின் பகிரங்க உந்துதலிலும் ஜனநாயகக் கட்சியினர் அதை எதிர்க்க மறுத்ததிலும் பொதிந்துள்ளதுடன், பரந்த பெரும்பான்மையினரின் தேவைகளை நிதி மூலதனத்தின் நலன்களுடன் சமரசம் செய்வது சாத்தியமற்றது என்பதை அம்பலப்படுத்துகிறது. மம்தானியின் வேலைத்திட்டமும் முன்னோக்கும் அவர் பதவியேற்பதற்கு முன்பே திவாலாகிவிட்டது என்பதை நிரூபித்துள்ளது.

மம்தானியின் வெற்று ஜனரஞ்சகவாத வாய்வீச்சு, வோல் ஸ்ட்ரீட்டுக்கு தற்போதுள்ள ஒழுங்கிற்கு எந்த அச்சுறுத்தலையும் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்ற உத்தரவாதங்களுடன் இணைந்து, ட்ரம்ப் நிர்வாகம் ஜனநாயகத்திற்கு ஏற்படுத்தும் கொடிய அச்சுறுத்தல் குறித்து மௌனம் சாதிக்கிறது. இதுதான், ஸோஹ்ரான் மம்தானியின் பிரச்சாரமாகும். நியூ யோர்க் நகரத்திலும் அதற்கு வெளியேயும் உள்ள தொழிலாளர்களும் இளைஞர்களும், அனைத்து மாயைகளையும் உதறிவிட்டு, சோசலிச சமத்துவக் கட்சியால் பிரதிநிதித்துவம் செய்யப்படும் முதலாளித்துவத்திற்கு எதிரான, உண்மையான சோசலிச மாற்றீட்டிற்காக போராட தயாராக வேண்டும்.

Loading