தனியார்மயமாக்கலுக்கு எதிரான சுத்திகரிப்புத் தொழிலாளர்களின் போராட்டத்தை அடக்குவதற்கு தமிழகத்தின் திமுக அரசு பொலிஸ் வன்முறையைப் பயன்படுத்துகிறது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணாலம்

சென்னை மாநகராட்சி தலைமையகம் அமைந்துள்ள கட்டிடத்திற்கு வெளியே சுத்திகரிப்புத் தொழிலாளர்கள் முகாம் அமைத்திருந்த போது [Photo: People's Archive of Rural India]

ஸ்ராலினிச இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) நெருக்கமான கூட்டணி வைத்துக்கொண்டுள்ள தமிழ்நாடு திமுக (திராவிட முன்னேற்றக் கழகம்) மாநில அரசு, குப்பை சேகரிப்பு மற்றும் தெருச் சுத்திகரிப்புச் சேவைகளை தனியார்மயமாக்கும் பெருநகர சென்னை மாநகராட்சியின் முடிவை எதிர்த்து போராடும் சுத்திகரிப்புத் தொழிலாளர்கள் மீது பலமுறை போலீஸ் வன்முறை தாக்குதல்களை கட்டவிழ்த்து விட்டது.

சென்னை நகராட்சி அரசாங்கமான பெருநகர சென்னை மாநகராட்சி, 2024 ஜூலையில் 15 நகராட்சி மண்டலங்களில் இரண்டில் -மண்டலம் 5 (ராயபுரம்) மற்றும் மண்டலம் 6 (திரு வி கா நகர்)- சுத்திகரிப்புத் சேவைகளை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் முடிவை அறிவித்த உடனேயே தொழிலாளர்கள் தங்கள் போராட்டங்களைத் தொடங்கினர். சென்னையின் பெரும்பகுதியில் சுத்திகரிப்புச் சேவைகளை தனியார்மயமாக்குவதை பெருநகர சென்னை மாநகராட்சி ஏற்கனவே முன்னெடுத்துள்ளது.

மிகவும் ஏழ்மையான, 'தாழ்த்தப்பட்ட சாதி'யைச் சேர்ந்த, தலித்துகள் (முன்னர் 'தீண்டத்தகாதவர்கள்') சமூகத்தைச் சேர்ந்த பெண்களான 2,000 சுத்திகரிப்புத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏற்கனவே மோசமாக உள்ள தங்களின் வேலை நிலைமைகள் தனியார் ஒப்பந்ததாரரின் கீழ் மிகவும் சீரழியும் என்பதை அவர்கள் நன்கு அறிந்திருக்கிறார்கள். அரசாங்கம் அவர்களின் போராட்டத்தை அடக்க பலமுறை முயற்சித்த போதிலும், தொழிலாளர்கள் ஒரு வருடத்திற்கும் மேலாக தனியார்மயமாக்கலுக்கு எதிரான தங்கள் எதிர்ப்பை விடாமுயற்சியுடன் தொடர்ந்தனர். கடந்த ஆகஸ்ட் 1 முதல் 13 வரை இரண்டு வாரங்களாக, அவர்கள் ஒரு போர்க்குணமிக்க வேலைநிறுத்தத்தை நடத்தினர்.

செப்டம்பர் 4 வியாழக்கிழமை நண்பகல் அளவில், தொழிலாள வர்க்கத்தை கௌரவிப்பதற்காகப் பெயரிடப்பட்ட ஒரு பூங்காவான சென்னையின் 'மே தினப் பூங்காவிலேயே' சமீபத்திய போலீஸ் தாக்குதல் நடந்தது. போராட்டத்திற்கு தலைமை தாங்கும் இடது தொழிற்சங்க மையம் (LTUC), உழைப்போர் உரிமை இயக்கம் ஆகிய இரண்டு தொழிற்சங்கங்களால் அழைப்பு விடுக்கப்பட்ட கூட்டத்திற்காக நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் பூங்காவில் கூடியிருந்தனர். சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் திமுக அரசாங்கத்தின் தனியார்மயமாக்கல் இயக்கத்திற்கு ஒரு உறுதியான ஒப்புதலை வழங்கிய பின்னர், மேலும் என்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதைப் பற்றி கலந்துரையாட அவர்கள் கூடியிருந்தனர்.

கூட்டத்துக்கு 'அனுமதியளிக்கப்படவில்லை' என்று கூறி, ஏராளமான போலீசார் உள்ளே நுழைந்து, மேலும் தொழிலாளர்கள் உள்ளே நுழைவதைத் தடுக்க பூங்காவின் வாயில்களை மூடினர். பெரும்பாலும் பெண் தொழிலாளர்கள் உள்ளிருப்புப் போராட்டத்திற்காக வாயில்களுக்கு முன்னால் அமர்ந்தபோது, ​​பெண் போலீஸ் அலுவலர்கள் அவர்கள் மீது வன்முறையை பிரயோகித்த பின்னர் குறைந்தபட்சம் 300 பேரைக் கைது செய்தனர். தொழிலாளர்களை வெவ்வேறு இடங்களுக்கு கொண்டு செல்ல ஐந்துக்கும் மேற்பட்ட போலீஸ் வாகனங்கள் மற்றும் ஒரு பஸ்ஸை போலீசார் பயன்படுத்தினர். கைது செய்யப்பட்டவர்கள் போலீஸ் வாகனங்கள் மற்றும் பேருந்துகளில் வேகமாக அழைத்துச் செல்லப்பட்டபோது அவர்கள் கோஷங்களை எழுப்பினர். பல தொழிலாளர்கள் காயமடைந்தனர், அவர்களில் குறைந்தபட்சம் ஒருவருக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டது.

இருப்பினும், ஆகஸ்ட் 13 அன்று, மாநிலத்தின் உச்ச நீதித்துறை அமைப்பான சென்னை உயர் நீதிமன்றமானது, பெருநகர சென்னை மாநகராட்சி அமைந்துள்ள இடமான ரிப்பன் கட்டிடத்தின் முன் தொழிலாளர்களின் போராட்ட முகாமை அகற்றுமாறு திமுக அரசாங்கத்திற்கு உத்தரவு பிறப்பித்த பின்னர், மிக மோசமான போலீஸ் தாக்குதல் நடந்தது. டி. தேன்மொழி என்பவர் தாக்கல் செய்த பொதுநல வழக்கு மனுவுக்கு பதிலளிக்கும் விதமாகவே இந்த நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் தங்கள் போராட்ட முகாமை காலி செய்யுமாறு போலிஸ் அனுப்பிய கட்டளையை அமுல்படுத்தக் கோரியே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. ஒரு சாதாரண குடிமகனாக இருப்பதற்குப் பதிலாக, தேன்மொழி ஆளும் திமுகவுடன் நெருங்கிய உறவுகளைக் கொண்டுள்ளார் என்று தெரியவருகின்றது.

இந்தத் தொழிலாளர்களுக்கு மிகவும் விரோதமாக இருக்கும் திமுக மாநில மற்றும் நகர அரசாங்கங்கள், இந்த நீதிமன்ற ஆதரவுடன், அதன் உத்தரவை ஆர்வத்துடன் செயல்படுத்தத் தொடங்கின.

ஆகஸ்ட் 13-14 அல்லது இரவு பெருநகர சென்னை மாநகராட்சி தலைமையகத்திற்கு வெளியே இருந்த முகாமை கொடூரமாக உடைத்து, போலீசார் சென்னை சுத்திகரிப்புத் தொழிலாளர்களை ஒரு பேருந்தில் ஏற்றிச் சென்றபோது [Photo: People's Archive of Rural India]

ஆகஸ்ட் 1 முதல் ரிப்பன் கட்டிடத்தின் முன் 2,000 தொழிலாளர்கள் அமைதியாகப் போராட்டம் நடத்தி வந்தனர். பகல் நேரத்தில் ஒரு பதட்டத்தை உருவாக்க விரும்பாத அரசாங்கம், முகாமை வன்முறையைப் பயன்படுத்தி அகற்றுவதற்காக நூற்றுக்கணக்கான போலீசாரை அனுப்ப நள்ளிரவு வரை வேண்டுமென்றே காத்திருந்தது. பெரும்பாலான தொழிலாளர்கள் முகாமில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது அல்லது தூங்கிக் கொண்டிருந்தபோதே போலீஸ் தாக்குதல் நடந்தது.

போராட்டக்காரர்களை கொடூரமாக கையாண்ட போலீசார், பலரை அடித்தனர். இந்த திடீர் போலீஸ் தாக்குதலால் ஏராளமான தொழிலாளர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். வேலைநிறுத்தம் செய்த நூற்றுக்கணக்கான தொழிலாளர்களை மேலும் மிரட்டவும் துன்புறுத்தவும் போலீசார் பேருந்துகளில் இழுத்துச் சென்றனர். ஒரு கொடூரமான இரவை காவலில் கழித்த பிறகு, மறுநாள் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

ஆகஸ்ட் 13-14 இரவு சென்னை சுத்திகரிப்புத் தொழிலாளர்கள் மீது போலீசார் நடத்திய தாக்குதல் குறித்து, மக்கள் கிராமப்புற இந்திய ஆவணக் காப்பகம் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளது [Photo: Facebook/People's Archive of Rural Indiaia]

சுத்திகரிப்புத் தொழிலாளர்களுக்கு ஆதரவளித்து வரும் வழக்கறிஞர் நிலவுமொழி செந்தாமரை மற்றும் சட்ட மாணவி வளர்மதி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். நிலவுமொழி வெளியிட்ட ஒரு வீடியோவில், அவர்கள் இருவரும் சிந்தாதிரிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டு, அங்கு தாக்கப்பட்டு, அவர்களின் தொலைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறினார்.

ஆகஸ்ட் 13-14 இரவு தாக்குதலின் போது, ​​மொத்தத்தில், நான்கு வழக்கறிஞர்கள் மற்றும் இரண்டு சட்டக் கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஆகஸ்ட் 14 அன்று அவர்களின் கைது சட்டவிரோதமானது என்று அறிவித்த சென்னை உயர் நீதிமன்றம் அவர்களை விடுவிக்க உத்தரவிட்ட போதிலும் அவர்கள் 'ஊடகங்களுக்கு நேர்காணல்கள் வழங்கக்கூடாது' என்ற அப்பட்டமான எதேச்சதிகார மற்றும் ஜனநாயக விரோத உத்தரவை ஒரு நிபந்தனையாக விதித்தது.

தமிழ்நாட்டின் மூன்றாவது பெரிய நகரமான மதுரையில் நூற்றுக்கணக்கான துப்புரவுத் தொழிலாளர்கள் ஆகஸ்ட் 18 முதல் ஐந்து நாட்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு, இதேபோன்ற தனியார்மயமாக்கல் எதிர்ப்புப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.

'சமூக நீதிக்காக' நிற்கும் ஒரு முற்போக்கான கட்சியாக திமுகவை விளம்பரப்படுத்தும் ஸ்ராலினிச இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), பெருவணிகர்-சார்பு திமுகவுக்கு ஒரு மெல்லிய வேண்டுகோளை விடுத்துள்ளது. அவர்களின் அதிகாரப்பூர்வ தீக்கதிர் பத்திரிகையில் ஒரு ஆசிரியர் தலையங்கத்தில், தமிழ்நாடு சிபிஎம் மாநிலச் செயலாளர் பி. சண்முகம், 'வேலையை வெளியாரிடம் ஒப்படைத்தல் என்ற கருத்து சமூக நீதிக்கு எதிரானது என்று, அதைக் கைவிடுமாறு மாநில அரசை வலியுறுத்தினார்' என திமுகவுக்கு மெதுவாக நினைவூட்டினார்.

துப்புரவுத் தொழிலாளர்களைச் சந்தித்ததாக சண்முகம் கூறினாலும், சிபிஎம், அதன் தொழிற்சங்கப் பிரிவான சிஐடியு அல்லது இந்திய தொழிற்சங்க மையத்தில் உறுப்பினர்களாக உள்ள பல்லாயிரக்கணக்கான தொழில்துறை மற்றும் பிற தொழிலாளர்களை, துப்புரவுத் தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்காக அணிதிரட்ட மறுத்துவிட்டது. தமிழ்நாட்டில் சாம்சங், பிஒய்டி மற்றும் ஃபாக்ஸ்கான் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் போன்ற நிறுவனங்களில் தான் ஏற்பாடு செய்த தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்களை சிஐடியு நீண்ட காலமாக காட்டிக் கொடுத்து வருகிறது.

தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு ரூபா 761 வழங்க -அதாவது மாதத்திற்கு 30 நாட்கள் தொடர்ச்சியாக வேலை செய்தால் 22,830 ரூபா வறுமை ஊதியம் வழங்க- சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட போதிலும், தனியார் ஒப்பந்த நிறுவனம் அவர்களின் ஊதியத்தை நாளொன்றுக்கு 565 ரூபாவாகக் குறைத்துள்ளது.

இந்த மிகப்பெரிய ஊதிய வெட்டு கவலைக்குரிய பிரதான பிரச்சினையாகும். உலக சோசலிச வலைத் தளத்திற்கு (WSWS) தொழிலாளர்கள் கூறியது போல், முன்மொழியப்பட்ட ஒப்பந்த சம்பளம் 'அற்பமானதும்' 'அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை சமாளிக்கப் போதுமானதல்ல, இதனால் எங்கள் குடும்பங்கள் சாப்பிடுவதே கடினம்.'

போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் பெருநகர சென்னை மாநாகராட்சியில் நிரந்தரத் தொழிலாளர்களாக நியமிக்கப்படவில்லை. மாறாக, ஒப்பந்தத் தொழிலாளர்களாகவோ அல்லது நகர்ப்புறங்களில் வறிய மக்களிடையே 'பொருளாதார நடவடிக்கைகளை' உருவாக்குவதற்கான பாரதீய ஜனதா கட்சியின் தேசிய அரசாங்கத்தின் திட்டமான தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் (NULM) கீழ் தற்காலிகத் தொழிலாளர்களாகவோ வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். சுத்திகரிப்புத் தொழிலாளர்கள் நீண்ட காலமாக NULM அமைப்பின் மூலம் நிரந்தர வேலைவாய்ப்பு மற்றும் ஊதியத்துடன் கூடிய விடுமுறைகள், பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் மருத்துவ விடுமுறை போன்ற சலுகைகளை கோரி வருகின்றனர்.

ஒப்பந்தத் தொழிலாளர்களாக, அவர்கள் 'எந்த நேரத்திலும் பணிநீக்கம் செய்யப்படக் கூடிய' நிலை உட்பட, எந்தவொரு வேலைப் பாதுகாப்பும் இல்லாதது குறித்தும், ஊதியத்துடன் கூடிய விடுமுறை, கூடுதல் நேர ஊதியம் அல்லது வேலையோடு சம்பந்தப்பட்ட காயங்களுக்கான இழப்பீடு போன்ற அத்தியாவசிய சலுகைகள் இல்லாதது குறித்தும் தொழிலாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

பல தொழிலாளர்கள் பல தசாப்தங்களாக அடிக்கடி ஆபத்தான நிலைமைகளின் கீழ் சேவை செய்ததை விவரித்தனர். உத்தியோகபூர்வ விடுமுறை நாட்களில் கூட விடுமுறை இல்லாமல் வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக அவர்கள் WSWS நிருபர்களிடம் விவரித்தனர். 'மழை, வெள்ளம் மற்றும் கோவிட்-19 தொற்றுநோய்' காலத்திலும் வேலை செய்துள்ளனர். பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல், அவர்கள் 'குப்பைகள், இறந்த பூனைகள் மற்றும் நாய்களை தங்கள் வெறும் கைகளால் அப்புறப்படுத்த வேண்டும்'.

15 ஆண்டுகளாக பெருநகர சென்னை மாநாகராட்சி ஊழியராக இருக்கும் ஒரு தொழிலாளி, வருகைக்கும் ஊதியத்திற்கும் இடையிலான நேரடி தொடர்பை ஊடகங்களுக்கு குறிப்பிட்டார்: 'நாங்கள் வந்தால், எங்களுக்கு ஊதியம் கிடைக்கும்; இல்லையென்றால், எதுவும் இல்லை.'

11 மண்டலங்களில் குப்பை அகற்றுதல் மற்றும் துப்புரவு சேவைகள் முன்னதாகவே தனியார் ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் முழுமையாக தனியார்மயமாக்கப்படாத 5 மற்றும் 6 வது மண்டலங்களில் உள்ள சுத்திகரிப்புத் தொழிலாளர்கள், பெருநகர சென்னை மாநாகராட்சியில் எஞ்சியிருப்பவர்களாவர். அவர்களது தொழில் இன்னமும் தனியார்மயமாக்கப்படவில்லை.

ஆகஸ்ட் 20 அன்று, சென்னை உயர்நீதிமன்றமானது, தனியார்மயமாக்கல் திமுக அரசாங்கத்தின் கொள்கை ரீதியான முடிவு என்று அறிவித்து அதை உறுதிசெய்தது. 'தற்காலிகத் தொழிலாளர்கள் தங்கள் கடைசி ஊதியத்திற்கு சமமான அல்லது அதற்கு அதிகமாக ஊதியம் பெறுவதை' உறுதிப்படுத்த வேண்டும் என்று மட்டுமே அது நகராட்சிக்கு உத்தரவிட்டது. நிரந்தர வேலைவாய்ப்புக்கான தொழிலாளர்களின் அடிப்படைக் கோரிக்கையை நீதிமன்றம் தெளிவாகக் கவனிக்கவில்லை.

போராட்டத்திற்கு திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசின் பிரிபலிப்பு, அதன் தனியார்மயமாக்கல் செயற்பாடுகள் மற்றும் நிலையற்ற ஒப்பந்த வேலைவாய்ப்பை ஊக்குவித்தலும் தொழிலாளர்கள் சுரண்டப்படுவதை தீவிரமாக்கி, சிக்கன நடவடிக்கையை அமுல்படுத்துவதோடு பொது நிதியை பெருமளவில் பெருநிறுவன இலாபங்களுக்காக திருப்பிவிடுதல் மற்றும் இந்தியாவின் இராணுவ வலிமையை விரிவுபடுத்துவது போன்ற ஆளும் வர்க்க திட்ட நிரலுக்கு அதன் முழு உறுதிப்பாட்டை வெளிப்படுத்துகிறது.

கடந்த மாநிலத் தேர்தலின் போது, ​​திமுக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மாநில துப்புரவுத் தொழிலாளர்களுக்கு 'நிரந்தர தொழில்கள்' வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார். எதிர்பார்த்தபடி, இது ஒரு தந்திரம் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. அவரது அரசாங்கம் திடக்கழிவு மேலாண்மையை இடைவிடாமல் வெளியாரிடம் ஒப்படைப்பதில் ஈடுபட்டுள்ளது.

வேலைநிறுத்தம் செய்த சென்னை தொழிலாளர்கள் மீதான கொடூரமான தாக்குதல் நடத்தப்பட்ட அடுத்த நாள், ஆகஸ்ட் 14 அன்று, ஒரு இழிவான சேதக் கட்டுப்பாட்டு நடவடிக்கையில் இறங்கிய, திமுக முதல்வர் ஸ்டாலின் அவரது X பதிவில், தனது 'திராவிட மாதிரி அரசாங்கம் சாமானிய மக்களின் கண்ணியத்தை ஒருபோதும் குறைக்காமல், தொடர்ந்து ஆதரித்து பாதுகாக்கிறது' என்று வலியுறுத்தினார்.

தற்போது, தமிழ்நாடு அமைச்சரவையானது இலவச காலை உணவு, மருத்துவ சிகிச்சை, வீட்டுவசதி, 'தொழில்முனைவோர் மானியங்கள்' மற்றும் அவர்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவி உட்பட சுத்திகரிப்புத் தொழிலாளர்களுக்கான அற்ப அளவான ஆறு நலத்திட்டங்களை அங்கீகரித்துள்ளது.

இந்த அற்பமான நல திட்டங்களானவை, அவர்களின் வறுமை ஊதியங்கள், நிலையற்ற வேலைவாய்ப்பு, கடுமையான போலீஸ் தாக்குதல்கள் மற்றும் தொழிலாளர்களின் மனித கண்ணியத்தின் மீது சுமத்தப்பட்ட அவமானங்களை சமாளித்துக்கொள்ள வைக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளன.

மாவோயிஸ்ட் கட்டுப்பாட்டில் உள்ள தொழிற்சங்கமான இடது தொழிற்சங்க மையம் (LTUC) தலைமையிலான போராட்டம், சுத்திகரிப்புத் தொழிலாளர்களின் போராட்டத்தை மட்டுப்படுத்தி தனிமைப்படுத்தியுள்ளது. ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தையும் அணிதிரட்டுவது ஒருபுறம் இருக்க, சென்னை முழுவதும் உள்ள ஏனைய துப்புரவு மற்றும் கழிவுநீர் அமைப்பு தொழிலாளர்களை அணிதிரட்டுவதற்குக் கூட தொழிற்சங்கம் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. LTUC, திமுக அரசாங்கத்திடம் வீண் வேண்டுகோள்களை முன்வைப்பதோடு மட்டும் தன்னை மட்டுப்படுத்திக் கொண்டுள்ளது.

சென்னையில் நடந்த நிகழ்வுகள், பொது சேவைகளை திட்டமிட்டு தனியார்மயமாக்குதல் மற்றும் இந்தியா முழுவதும் தொழில்களை ஒப்பந்தமயமாக்குதல் போன்ற பரந்த போக்கை பிரதிபலிக்கின்றன. கல்வி, சுகாதாரம், நிலக்கரி சுரங்கம், ரயில் போக்குவரத்து மற்றும் இந்தியாவின் உலகளவில் இணைக்கப்பட்ட வான உற்பத்தி தொழில் போன்ற துறைகளும் இதேபோன்ற அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றன. தொழிலாளர்கள் தங்கள் தொழில்களைப் பாதுகாக்கவும், சிறந்த ஊதியம் மற்றும் வேலை நிலைமைகளைப் பெறவும் பலமுறை விடாமுயற்சியுடன் போராட்டங்களை நடத்தியிருந்தாலும், அவர்கள் எப்போதும் சிபிஎம் சார்ந்த CITU மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) தலைமையிலான அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் (AITUC) உட்பட தற்போதைய தொழிற்சங்கங்களின் நாசவேலைகளை எதிர்கொண்டுள்ளனர். அவை அவர்களின் போராட்டங்களை திட்டமிட்டு தனிமைப்படுத்தி, திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி போன்ற பல்வேறு வலதுசாரி முதலாளித்துவக் கட்சிகளுடன் கட்டிவைத்து விடுகின்றன.

மேகவதினி என்ற தொழிலாளி WSWS நிருபர்களிடம் வளர்ந்து வரும் வர்க்க உணர்வை வெளிப்படுத்தினார். 'ஒப்பந்தக்காரர்களும் முதலாளிகளும் ஒன்றிணைந்து நம்மை சுரண்டினால், தொழிலாளர்களாகிய நாம் அவர்களுக்கு எதிராக ஒன்றுபட வேண்டும்' என அவர் அறிவித்தார்.

இந்தியா முழுவதும் உள்ள சுத்திகரிப்புத் தொழிலாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் அனுபவம், முதலாளித்துவத்திற்கு எதிரான ஒருங்கிணைந்த மற்றும் அரசியல் ரீதியாக உணர்வுள்ள தொழிலாள வர்க்க இயக்கத்தை கட்டியெழுப்ப வேண்டியதன் தேவையை தொடர்ச்சியாக எடுத்துக்காட்டுகிறது. அத்தகைய இயக்கத்தின் வளர்ச்சியில் ஒரு முக்கிய அங்கம், அனைத்து முதலாளித்துவக் கட்சிகள் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்திலிருந்து சுயாதீனமாக, ஒவ்வொரு வேலைதை தளத்திலும் தொழிலாளர் நடவடிக்கைக் குழுக்களைக் கட்டியெழுப்புவதாகும்.

Loading