இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் உட்பட தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர்கள் குழு, கடந்த வாரம் கொழும்பில் ஐரோப்பிய ஒன்றியத்தின் பொதுமைப்படுத்தப்பட்ட முன்னுரிமைத் திட்டக் (ஜி.எஸ்.பி. பிளஸ்) கண்காணிப்புக் குழுவைச் சந்தித்தது. அடுத்த ஆண்டு காலாவதியாகும் ஜி.எஸ்.பி.பிளஸ் சலுகையினை தொடர்வதற்கான நிபந்தனையின் ஒரு பகுதியாக, மட்டுப்படுத்தப்பட்ட ஜனநாயக மற்றும் மனித உரிமை நடவடிக்கைகளை முன்னெடுக்க இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்குமாறு தமிழ் முற்போக்கு கூட்டணி அந்தப் பிரதிநிதிகள் குழுவுக்கு வேண்டுகோள் விடுத்தது.
தேர்வுசெய்யப்பட்ட சில ஏற்றுமதிகளுக்கு வரி அறவிடாமல் பல்வேறு நாடுகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் வழங்கும் விருப்பத் தேர்வு வர்த்தக வாய்ப்பே ஜி.எஸ்.பி.பிளஸ் ஆகும். 2004 ஆசிய சுனாமிக்குப் பிறகு இலங்கைக்கு ஜி.எஸ்.பி.பிளஸ் சலுகை வழங்கப்பட்டது. இந்த சலுகை தொடருமா என்பதை மதிப்பிடுவதற்காகவே கடந்த வாரம் ஐரோப்பிய ஒன்றியக் குழு கொழும்புக்கு விஜயம் செய்தது.
இலங்கை பல்வேறு வகையான பூரணப்படுத்தப்பட்ட பொருட்களை, அதாவது ஆடைகள், தேயிலை மற்றும் ரப்பர் ஆகியவற்றை, ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஏற்றுமதி செய்து, 2024 ஆம் ஆண்டில் 2.9 பில்லியன் டொலர்களை ஏற்றுமதி மூலம் பெற்றது. எதிர்காலத்தில் ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச் சலுகைகளை இழப்பதானது அமெரிக்காவின் புதிய வரி அதிகரிப்புகளுடன் சேர்ந்து, இலங்கையின் ஏற்றுமதி வருவாய்க்கு பெரும் அடியாக இருப்பதோடு நாட்டின் தற்போதைய பொருளாதார நிலையை மோசமாக்குவது மட்டுமல்லாமல், மக்கள் விடுதலை முன்னணி / தேசிய மக்கள் சக்தி (ஜே.வி.பி./தே.ம.ச.) அரசாங்கம் முழு தொழிலாள வர்க்கத்தின் மீதும் அதன் தாக்குதல்களை தீவிரப்படுத்தும்.
தமிழ் முதலாளித்துவ அரசியல் அமைப்பான தமிழ் முற்போக்கு கூட்டணி, ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ், தொழிலாளர் தேசிய சங்கம், மலையக மக்கள் முன்னணி ஆகிய மூன்று தமிழ் பேசும் தோட்டத் தொழிலாளர் தொழிற்சங்கங்களைக் கொண்ட ஒரு தமிழ் முதலாளித்துவ அரசியல் அமைப்பாகும். இது இலங்கை தொழிலாள வர்க்கத்தின் ஏனைய பிரிவினரிடம் இருந்து தோட்டத் தொழிலாளர்களைப் பிரிக்க 2015 இல் உருவாக்கப்பட்டதாகும்.
மலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர்களை மலையகத் தமிழர்கள் என்று தமிழ் முற்போக்கு கூட்டணி வர்ணித்து, அவர்களை ஒரு தனி நிர்வாகப் பகுதியுடன் கூடிய தனி இன சமூகமாகக் கருத வேண்டும் என்று கோருகிறது.
இந்தப் பிரிவினைவாதக் கோரிக்கைகளுக்கும் தோட்டத் தொழிலாளர்களின் தொழில்கள், ஊதியங்கள் மற்றும் வேலை நிலைமைகளைப் பாதுகாப்பதற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. மாறாக அது தோட்டப் பகுதிகளில் உள்ள தமிழ் உயரடுக்கின் அரசியல் பதவிகளையும் சலுகைகளையும் வலுப்படுத்தவே உதவும். இலங்கையின் ஏனய தோட்டத் தொழிற்சங்கங்களும் இந்தப் பிற்போக்கு மற்றும் பிளவுபடுத்தும் கொள்கையை ஊக்குவித்து வருகின்றன.
தமிழ் முற்போக்கு கூட்டணியும் ஏனைய தோட்டத் தொழிற்சங்கங்கள் அனைத்தும் முதலாளித்துவ ஆதரவு மற்றும் ஏகாதிபத்திய ஆதரவு அமைப்புகள் ஆகும். அவை தோட்டத் தொழிலாளர்களின் நலன்களுக்காக முன் நிற்கவில்லை, மாறாக முதலாளித்துவ அரசையும் தோட்டக் கம்பனிகளையும் பாதுகாக்கின்றன.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கம் உடனடியாக நிறுத்தி வைக்கவும், தமிழ் உயரடுக்கினருக்கான அதிகாரப் பகிர்வு ஒப்பந்தத்திற்கான அரசியலமைப்பு திருத்த நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கவும் ஐரோப்பிய ஒன்றியக் குழு கோரிக்கை விடுக்க வேண்டும் என்று தமிழ் முற்போக்கு கூட்டணி விரும்புகிறது. மேலும், உண்மை அறியும் ஆணைக்குழு மற்றும் பொறுப்புக்கூறல் பொறிமுறையை ஸ்தாபிப்பதன் மூலம், நீண்ட காலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் விடுதலை செய்தல் மற்றும் மலையக தமிழ்ப் பெருந்தோட்ட சமூகத்ததையும் ஜி.எஸ்.பி.பிளஸ் ஏற்பாடுகளில் சேர்க்க வேண்டும் என்றும் அது கேட்டுக்கொள்கிறது.
இந்த முன்மொழிவுகளை சமர்ப்பிப்பதில், தோட்டத் தொழிலாளர்களின் ஜனநாயக மற்றும் சமூக உரிமைகள் குறித்து தமிழ் முற்போக்கு கூட்டணி கவலைப்படவில்லை, மாறாக ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச் சலுகைகளை இழந்தால் தோட்டக் கம்பனிகளும் இலங்கை அரசாங்கமும் எதிர்கொள்ளும் நிதிச் சிக்கல்களைப் பற்றியே கவலைப்படுகின்றது.
அதேநேரம், ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகளின் புவிசார் அரசியல் திட்ட நிரலை ஆதரிப்பதற்கும், அவர்களை மனித உரிமைகளுக்கான சிலுவைப் போராளிகளாக ஊக்குவிப்பதற்கும் பிரதியுபகாரமாக, பெருந்தோட்டப் பகுதிகளில் தமிழ் உயரடுக்கிற்கு சலுகைகளைப் பெறும் நம்பிக்கையில், ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒரு உறவை வளர்த்துக் கொள்ள தமிழ் முற்போக்கு கூட்டணி விரும்புகிறது.
தமிழ் முற்போக்கு கூட்டணி வெளியிட்ட அறிக்கையில், 'ஐரோப்பிய ஒன்றியத்தின் பங்கு இப்போது முன்னெப்போதையும் விட மிகவும் முக்கியமானது... மேலும் அது இலங்கையை பொறுப்புக்கூற வைக்கும் திறன் கொண்ட இறுதி சர்வதேச பங்காளியாகும்' என்று அறிவித்தது.
ஐரோப்பிய ஒன்றிய ஏகாதிபத்தியத்திற்கு வேண்டுகோள் விடுப்பது ஒரு பிற்போக்கு முட்டுச்சந்து ஆகும். தமிழ் முற்போக்கு கூட்டணியின் கூற்றுக்களுக்கு மாறாக, ஐரோப்பிய ஒன்றியமானது அதன் சொந்த தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக மற்றும் சமூக உரிமைகள் மீதான அதன் திட்டமிட்ட தாக்குதல்களுக்கும், காசாவில் இஸ்ரேலிய இனப்படுகொலையை எதிர்க்கும் புலம்பெயர்ந்தோர், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மீது கொடூரமான தாக்குதல்களை முன்னெடுப்பதிலும் பேர் போனதாக இருக்கின்றது.
ஏப்ரல் 2024 'குடியேற்ற ஒப்பந்தத்தின்' கீழ், ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர்கள் தங்கள் அகதிகள்-விரோத மற்றும் குடியேற்ற-விரோத நடவடிக்கைகளை வலுப்படுத்தி, தொழிலாளர்களுக்கு எதிராக இன்னும் அதிக அடக்குமுறை நடவடிக்கைகளை விதிக்கின்ற அதேநேரம், இராணுவ செலவினங்களை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரிக்கின்றன. இலங்கையில் மனித உரிமை மீறல்கள் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் முன்னர் மட்டுப்படுத்தப்பட்ட விமர்சனங்களைச் செய்திருந்தாலும், கொழும்பில் அதன் அரசியல் செல்வாக்கை அதிகரித்துக்கொள்ள ஜி.எஸ்.பி.பிளஸ் சலுகையை ஒரு நெம்புகோலாகப் பயன்படுத்த எதிர்பார்க்கின்றது.
தமிழ் முற்போக்கு கூட்டணி அதிகாரத்துவம், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் உட்பட ஏனய ஒவ்வொரு தோட்டத் தொழிற்சங்கமும், தோட்டத் தொழிலாளர்களின் சமூக நிலைமைகள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தோட்டக் கம்பனிகளின் தாக்குதல்கள் குறித்து முற்றிலும் மௌனம் காக்கின்றன.
1,350 ரூபா அற்ப தினசரி ஊதியம் பெறும் தோட்டத் தொழிலாளர்கள், இலங்கை தொழிலாள வர்க்கத்தின் மிகவும் ஏழ்மையான மற்றும் மிகவும் ஒடுக்கப்பட்ட பிரிவுகளில் அடங்குவர். அவர்கள் முதுகெலும்பை உடைக்கும் வேலை நிலைமைகளை எதிர்கொள்கின்றனர். 100 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான வரிசை அறைகளில் நெரிசலான வாழ்கின்றனர். தரமற்ற சுகாதார மற்றும் கல்வி வசதிகளை எதிர்கொள்கின்றனர்.
தோட்டத் தொழிலாளர்களின் மோசமான நிலை மற்றும் ஏனைய அனைத்துத் தொழிலாளர்களும் எதிர்கொள்ளும் மோசமான நிலைமைகளுக்கு தமிழ் முற்போக்கு கூட்டணியும் ஏனைய தொழிற்சங்க அதிகாரத்துவங்களும் நேரடிப் பொறுப்பாகும். தோட்டக் கம்பனிகள் மற்றும் அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த இலங்கை அரசாங்கங்களுடன் கைகோர்த்துச் செயல்படும் தொழிற்சங்கங்கள், தோட்டத் தொழிலாளர்களை சுரண்டுவதை தீவிரப்படுத்தி வருவதோடு அவர்களின் போராட்டங்களை செயலூக்கத்துடன் அடக்குகின்றன.
2021 மார்ச்சில், மஸ்கெலியாவில் உள்ள ஓல்டன் தோட்டத்தைச் சேர்ந்த 38 தொழிலாளர்கள் ஊதிய உயர்வுக்காகவும் நிர்வாகத்தின் துன்புறுத்தலுக்கு எதிராகவும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டமைக்காக, தோட்ட முகாமையாளர் மற்றும் உதவி முகாமையாலாளரை அடித்ததாக சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளின் பேரில், வேலைநீக்கம் செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டனர். தோட்டத் தொழிற்சங்கங்களின் ஆதரவுடன் நிர்வாகமும் பொலிசாரும் முன்னெடுக்கும் இந்த பழிவாங்கல் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது.
ஓல்டன் தோட்டத்தை நிர்வகிக்கின்ற ஹொரண பெருந்தோட்டக் கம்பனி, இந்தத் தொழிலாளர்களை மீண்டும் வேலையில் அமர்த்த மறுப்பதுடன், அவர்களின் வேலைகளை மீண்டும் பெறுவதற்கும், பழிவாங்கலுக்கு முடிவு கட்டவும் தொழிற்சங்கங்கள் எந்தவொரு போராட்டத்தையும் ஏற்பாடு செய்ய மறுக்கின்றன.
2009 ஆம் ஆண்டு பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான 26 ஆண்டுகால கொடூரமான இனவாதப் போர் முடிவடைந்ததிலிருந்து, அடுத்தடுத்து பதவிக்கு வந்த கொழும்பு அரசாங்கங்கள், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ஒழிப்பதாகவும், தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதாகவும், மனித உரிமை அமைப்புகள் மற்றும் ஐ.நா.வின் விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் விதமாக ஒரு உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை நிறுவுவதாகவும் பொய்யாக வாக்குறுதி அளித்துள்ளன.
கடந்த வார விஜயத்தின் போது, ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு, 'சர்வதேச தீர்மானங்களுக்கான உறுதிப்பாட்டை புதுப்பித்தமைக்கா” திசாநாயக்க அரசாங்கத்தை பாராட்டியது. ஜி.எஸ்.பி.பிளஸ் கண்காணிப்பு பணித் தலைவர் சார்லஸ் வைட்லி, 'சமீபத்திய முன்னேற்றத்தின் வெளிச்சத்தில் ஜி.எஸ்.பி. பிளஸ் மதிப்பாய்வை நேர்மறையாக பரிசீலித்து வருவதாக' அறிவித்ததோடு 'சர்வதேச தீர்மானங்கள், வெளிப்படைத்தன்மை மற்றும் சட்டத்தின் ஆட்சிக்கான இலங்கையின் புதுப்பிக்கப்பட்ட உறுதிப்பாடு ஊக்கமளிக்கிறது. பொறுப்பான வளர்ச்சிக்கான இந்தப் பாதையில் ஐரோப்பிய ஒன்றியம் ஒரு பங்காளியாக உள்ளது' என்று கூறினார்.
இந்தப் பொய்யான கூற்றுக்களுக்கு மாறாக, ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கம் பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் பிற அடக்குமுறைச் சட்டங்களை 'ஒழித்தல்', 'அரசியல் கைதிகளை' விடுவித்தல் மற்றும் இன்னும் பல உட்பட அதன் தேர்தல் வாக்குறுதிகளைக் கைவிட்டுள்ளது.
'சட்டம், ஒழுங்கு மற்றும் தேசிய பாதுகாப்பை' அமுல்படுத்துவதாக உறுதியளித்து, சர்வதேச நாணய நிதியம் கட்டளையிட்டுள்ள சிக்கனத் திட்டம் முழுவதையும் செயல்படுத்த திசாநாயக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்,
எளிமையான மொழியில், 'சட்டம், ஒழுங்கு மற்றும் தேசிய பாதுகாப்பை' பேணுவது என்பது, சர்வதேச நாணய நிதிய திட்டத்திற்கு எதிரான அனைத்து தொழிலாள வர்க்க எதிர்ப்பையும் அடக்குவதற்கு, தற்போதுள்ள அடக்குமுறை சட்டங்கள் மற்றும் ஜனாதிபதியின் அதிகாரங்களை கட்டுப்பாடில்லாமல் பயன்படுத்துவதாகும்.
தொழிற்சங்க அதிகாரத்துவம் தங்கள் தொழில்கள் மற்றும் சமூக உரிமைகளைப் பாதுகாக்க ஏதாவது செய்யும் என்ற நம்பிக்கையில் இலங்கைத் தொழிலாளர்கள் காத்திருக்க முடியாது. இது ஒரு மாயை ஆகும். தொழிலாள வர்க்கமானது தொழிற்சங்கங்களில் இருந்தும் அனைத்து முதலாளித்துவக் கட்சிகளிடம் இருந்தும் முறித்துக் கொண்டு, தங்கள் தொழில்கள், ஊதியங்கள் மற்றும் அடிப்படை ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டத்தை அதன் சொந்தக் கைகளில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
தோட்டத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் தற்போதைய சூழ்நிலைக்கு தொழிற்சங்க அதிகாரத்துவங்களே பொறுப்பாகும். ஓல்டன் தோட்டத் தொழிலாளர்கள் மீது தோட்ட நிர்வாகமும் பொலிசும் கட்டவிழ்த்து விட்டுள்ள வேட்டையாடலில் தொழிற்சங்கங்கள் தீவிரமாக பங்கேற்பதன் மூலம் இது நிரூபிக்கப்பட்டுள்ளது.
தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் தங்கள் வர்க்க எதிரிகள் என்பதை உணர்ந்து, தொழிலாளர்கள் தங்கள் நலன்களைப் பாதுகாக்க தோட்டங்கள், தொழிற்சாலைகள், வேலைத் தளங்கள் மற்றும் சுற்றுப்புறங்களில் தங்கள் சொந்த சுயாதீன நடவடிக்கைக் குழுக்களை உருவாக்க வேண்டும்.
அனைத்து அரச மற்றும் கம்பனிகளின் தாக்குதல்களுக்கு எதிரான போராட்டமும் இந்த நடவடிக்கைக் குழுக்கள் மூலம் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் இயக்கமாக ஒழுங்கமைக்கப்பட வேண்டும்.
தமிழ் முற்போக்கு கூட்டணித் தலைவர்களால் ஊக்குவிக்கப்படும் பிளவுபடுத்தும் அரசியலுக்கு எதிராக, சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் தொழிலாளர்களின் ஐக்கியப்பட்ட இயக்கம் முற்றிலும் அவசியமாகும்.
முதலாளித்துவ இலாப முறைமைக்கு முடிவுகட்டி, பிரதான வங்கிகள், தொழிற்சாலைகள் மற்றும் பெருந்தோட்டங்களை தேசியமயமாக்குவது உட்பட அவற்றை தொழிலாள வர்க்கக் கட்டுப்பாட்டின் கீழ் வைக்கும் சோசலிசக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துகின்ற, ஒரு தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்காக அத்தகைய இயக்கம் போராட வேண்டும்.