முன்னோக்கு

தபால் ஊழியர்களின் வேலைநிறுத்தத்தை நசுக்கும் இலங்கை அரசாங்கத்தின் திட்டங்களுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் பலத்தை அணிதிரட்டு!

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் (PTOU) மற்றும் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியைப் (JPTUF) பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்கள், ஆகஸ்ட் 17 நள்ளிரவு முதல் காலவரையறையற்ற வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. தபால், துணை தபால் மற்றும் செயல்பாட்டு அலுவலகங்களில் உள்ள கிட்டத்தட்ட 19,000 அஞ்சல் ஊழியர்கள் இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்க உள்ளனர்.

“பேச்சுவார்த்தை மேசையில் ஒப்புக் கொள்ளப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்றாமல் இருப்பதற்கும், தொழிற்சங்கங்களை ஒடுக்குவதற்கும் எதிராக” இந்த வேலைநிறுத்தத்துக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தொழிற்சங்கத் தலைமை தெரிவித்துள்ளது. அனைத்து தபால் ஊழியர்களையும் உள்ளடக்கிய அஞ்சல் சேவை யாப்பை அமுல்படுத்துதல், மேலதிக நேர ஊதியப் பிரச்சினைகளைத் தீர்ப்பது, அனைத்து தரங்களிலும் உள்ள அனைத்து பதில், தற்காலிக மற்றும் தொழிலாளர் பதவிகளை நிரந்தரமாக்குதல், தற்போதுள்ள பதவி வெற்றிடங்கள் மற்றும் பதவி உயர்வுகளை உடனடியாக நிரப்புதல், அஞ்சல் போக்குவரத்துத் துறையில் உள்ள சிக்கல்களைத் தீர்ப்பது மற்றும் முதல் வரிசை அதிகாரிகளுக்கு முன்மொழியப்பட்ட மூன்று சம்பள உயர்வுகளை வழங்குதல் உட்பட 19 கோரிக்கைகளுக்கு உடனடி தீர்வுகளை அவர்கள் கோருகின்றனர்.

ஆகஸ்ட் 7 அன்று தபால் மா அதிபர், அமைச்சின் அதிகாரிகள் மற்றும் தொழிற்சங்கத் தலைவர்களுக்கும் இடையே நடைபெற்ற கலந்துரையாடலின் போது, கோரிக்கைகள் குறித்து பொதுச் சேவைகள் ஆணைக்குழுவுடனும் ஆகஸ்ட் 14 ஆம் திகதிக்கு முன்னர் அமைச்சர் நலின் டி ஜயதிஸ்ஸவுடனும் கலந்துரையாடல்களை நடத்த ஒப்புக் கொள்ளப்பட்ட போதிலும், இந்த உடன்பாடுகள் மீறப்பட்டுள்ளதாக தொழிற்சங்க அதிகாரத்துவம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், மே 29-30 திகதிகளில் அடையாள வேலைநிறுத்தத்தில் இணைந்த தபால் ஊழியர்களின் வருடாந்த விடுமுறையில் இரண்டு நாட்கள் குறைக்கப்பட்டுள்ளன.

அறிவிக்கப்பட்ட வேலைநிறுத்தத்தை முறியடிக்க, ஆகஸ்ட் 16 முதல் அனைத்து தபால் ஊழியர்களின் விடுமுறையையும் தபால் மா அதிபர் இரத்து செய்தார். இது வேலைநிறுத்தத்தை சட்டவிரோதமானது என்று அறிவிப்பதற்கு சமமானது ஆகும். தபால் தொழிற்சங்கங்களின் கோரிக்கைகள் அரசாங்கக் கொள்கைகளுடன் முரண்படுவதால் அவற்றை நிறைவேற்ற முடியாது என்றும் தபால் மா அதிபர் கூறியுள்ளார். மக்கள் விடுதலை முன்னணி/தேசிய மக்கள் சக்தி (ஜே.வி.பி./தே.ம.ச.) அரசாங்கத்தின் கொள்கைகளை தோற்கடிப்பதற்கான அரசியல் போராட்டத்தின் மூலம் மட்டுமே தபால் ஊழியர்களின் உரிமைகளை வெல்ல முடியும் என்பதே இதன் அர்த்தமாகும்.

இது ஆச்சரியமானதோ அல்லது தற்செயலானதோ அல்ல. தற்போதைய அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கனத் திட்டத்தை அமுல்படுத்த உறுதிப்பாட்டுடன் செயல்படும் ஒரு வலதுசாரி அரசாங்கமாகும். தங்கள் ஊதியங்கள், தொழில்கள், வாழ்க்கை நிலைமைகள் மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள எந்தவொரு தொழிலாள வர்க்கப் பிரிவினரும் அரசாங்கத்தின் கொள்கைகளைத் தோற்கடிக்காமல் தங்கள் உரிமைகளைப் பாதுகாக்கவோ அல்லது வெல்லவோ முடியாது.

அதனாலேயே, சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.), தபால் ஊழியர்களின் வேலைநிறுத்தத்தைப் பாதுகாக்க தொழிலாள வர்க்கத்தின் தொழில்துறை மற்றும் அரசியல் பலத்தை அணிதிரட்ட வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறது. வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தபால் ஊழியர்கள் ஏனைய தொழிலாளர்களை நாடி, அவர்களின் செயலூக்கமான ஆதரவைக் கோர வேண்டும். ஒரு பகுதி தொழிலாளர்களின் போராட்டத்தின் தோல்வி அனைத்து பிரிவுகளுக்கும் ஒரு அடியாகும். வேலைநிறுத்தம் காரணமாக தபால் ஊழியர்களுக்கு ஏற்கனவே இரண்டு நாட்கள் சம்பளம் குறைக்கப்பட்டுள்ளது.

வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ள தங்கள் தொழிற்சங்கங்களின் தலைமைத்துவம் குறித்து அஞ்சல் ஊழியர்கள் எச்சரிக்கையாகவும் விழிப்புடனும் இருக்க வேண்டும். ஏனெனில்? அவர்கள் காலவரையறையற்ற வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ள அதே நேரம், அதை நிறுத்தவும் வாய்ப்புத் தேடுகின்றனர். இதை நாங்கள் காரணத்துடனேயே கூறுகிறோம்.

தொழிற்சங்கத் தலைவர்கள், ஆகஸ்ட் 12 நள்ளிரவு முதல் வேலை நிறுத்தம் செய்வதாக அறிவித்து, தபால்மா அதிபருக்கு அனுப்பிய கடிதத்தில், “வேலைநிறுத்தத்தால் வாடிக்கையாளர்களுக்கும் நிறுவனத்திற்கும் ஏற்படும் பாதிப்புகளைத் தடுத்து, சேவையைத் தொடர்ந்து பராமரிக்க கூடியவாறு” அமைச்சர் ஜயதிஸ்ஸவுடன் ஒரு கலந்துரையாடலை ஏற்பாடுசெய்து தருமாறு “பணிவுடன்” கேட்டுக் கொண்டனர். இருப்பினும், ஐந்து நாட்களுக்குப் பின்னரும் அவர்கள் எதிர்பார்க்கும் கலந்துரையாடலை வழங்காமல், அனைத்து ஊழியர்களதும் விடுமுறைகளை இரத்து செய்ததன் மூலம், அரசாங்கம் வேலைநிறுத்தத்தை கைவிடுமாறும், இல்லையெனில் அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விடுவதாக சமிக்ஞை செய்துள்ளது.  

இந்தக் கோரிக்கைகளை, அல்லது இதே போன்ற கோரிக்கைகளை முன்வைத்து, தொழிற்சங்க அதிகாரிகள் கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களாக, தபால் ஊழியர்களை வேலைநிறுத்தங்களுக்கும் பல்வேறு போராட்டங்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளனர். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், வலுவான அழுத்தத்தை கொடுப்பதன் மூலம் தபால்மா அதிபரிடமிருந்தும் அதிகாரத்தில் உள்ள அரசாங்கங்களிடமிருந்தும் தங்கள் கோரிக்கைகளை வென்றெடுக்க முடியும் என்று தொழிற்சங்கத் தலைவர்கள் கூறியுள்ளனர். கோரிக்கைகளின் பட்டியல் தொடர்ந்து நீண்டு வந்த போதிலும் எந்த தீர்வும் வரவில்லை.

இப்போது நடப்பது இந்த ஆண்டு நடக்கும் நான்காவது வேலைநிறுத்தம் ஆகும். தொழிற்சங்கத் தலைவர்கள் முன்னதாக மார்ச் மற்றும் மே மாதங்களில் இரண்டு நாள் அடையாள வேலைநிறுத்தங்களுக்கும், ஜூலை 15-16 திகதிகளில் மேலதிக நேர வேலைநிறுத்தத்திற்கும் அழைப்பு விடுத்திருந்தனர். அரசாங்கத்தினதும் தபால் திணைக்கள அதிகாரிகளதும் பொய் வாக்குறுதிகளுக்கு அடிபணிந்து தொழிற்சங்க அதிகாரிகள் இந்தப் போராட்டங்களை காட்டிக் கொடுத்துள்ளனர்.

அரசாங்கத்தின் அச்சுறுத்தலை முன்கூட்டியே வெளிப்படுத்தி, ஜூலை 15-16 மேலதிக நேர வேலைநிறுத்தத்தைக் கண்டித்த அமைச்சர் ஜயதிஸ்ஸ, ஊடகங்களுக்கு கூறியதாவது: “தற்போது காணப்படும் போட்டி காரணமாக, சில கோரிக்கைகளை தற்போது நிறைவேற்ற முடியாது... 24 மணி நேர மற்றும் 48 மணி நேர வேலைநிறுத்தங்களில் ஈடுபடுவதன் மூலம் நீங்கள் அஞ்சல் சேவையை அழித்து வருகின்றீர்கள். குறிப்பாக, சரியான பேச்சுவார்த்தைகள் நடத்தாமல் மேற்கொள்ளும் இந்த நடவடிக்கைகள் நியாயமானவை அல்ல. இந்த வேலைநிறுத்தங்களை அனுமதிக்க முடியாது. கடந்த காலங்களில், அடிக்கடி இடம்பெற்ற வேலைநிறுத்தங்களால் [அரசாங்கம்] விரும்பிய நிதி இலக்குகளை அடைவது தடுக்கப்பட்டது.”

அங்கத்தவர்களை பொய்யான பேச்சுவார்த்தை சுற்றுக்களில் சுழலவிட்டு, அவர்களின் கோபத்தை தணிப்பதே தொழிற்சங்கத் தலைவர்களின் வேலையாக இருக்க வேண்டும் என்றே ஜயதிஸ்ஸ கூறுகிறார்.

சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கனத் திட்டத்தை ஏற்றுக்கொண்டு, முதலாளித்துவ அமைப்பிற்குள்ளேயே தீர்வுகளைத் தேடும் தொழிற்சங்கத் தலைமைகள், அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராக அனைத்து தொழிலாளர்களின் பலத்தையும் இயக்குவதன் மூலம் அரசாங்கத்தின் தாக்குதலை சவால் செய்ய எந்த வகையிலும் தயாராக இல்லை. அவர்களின் கூட்டாளிகளான ஏனைய தொழிற்சங்கங்களின் அதிகாரிகளும், , அஞ்சல் ஊழியர்களின் கோரிக்கைகள் ஒருபுறம் இருக்க, தங்கள் உறுப்பினர்களின் கோரிக்கைகளை வெல்வதற்காகக் கூட அரசாங்கத்துடன் மோதிக்கொள்ளும் போராட்டத்தில் ஈடுபடத் தயாராக இல்லை என்பதை மீண்டும் மீண்டும் காட்டியுள்ளனர்.

தபால் ஊழியர்கள் என்ன செய்ய வேண்டும்?

அரசாங்கத்தினதும் தபால் அதிகாரிகளினதும் பொய் வாக்குறுதிகளை நம்பி வேலைநிறுத்தத்தை நிறுத்த அனுமதிக்காதீர்கள்! தொழிலாளர்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை, தலைவர்கள் அன்றி, தொழிற்சங்க உறுப்பினர்களே தீர்மானிக்க வேண்டும். முடிவுகளை எடுப்பதற்கு அனைத்து தொழிலாளர்களினதும் ஜனநாயக கலந்துரையாடல் ஒன்றை உடனடியாக நடத்த வேண்டும்!

தொழிற்சங்கத் தலைவர்கள், உறுப்பினர்களின் கருத்தை இவ்வாறு ஜனநாயக முறையில் ஆலோசனைக்கு உட்படுத்துவதற்கு எதிராக உள்ளனர். அவர்களின் எதேச்சதிகாரமான முடிவுகளுக்கு உட்பட்டு செயல்படுவதற்குப் பதிலாக, அனைத்து உறுப்பினர்களின் உரிமைகளையும் உறுதி செய்யும் வகையில் செயல்படுவதற்கு, ஒவ்வொரு பெரிய அஞ்சல் அலுவலகத்திலும் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட நடவடிக்கைக் குழுக்களை நிறுவுவது அவசியமாகும் என்று சோசலிச சமத்துவக் கட்சி கூறுகின்றது. சிறிய அஞ்சல் அலுவலகங்களின் ஊழியர்களும் இந்தக் குழுக்களில் ஒருங்கிணைக்கப்பட வேண்டும்.

தபால் ஊழியர்கள் இவ்வாறு ஒழுங்கமைவதன் மூலம், ஏனைய தொழிலாளர்களை நாடி, தங்கள் போராட்டத்தைப் பாதுகாக்க, செயலூக்கத்துடன் வர்க்க நடவடிக்கை மூலம், ஒத்துழைப்புத் தருமாறு கோர வேண்டும்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின்  அரசாங்கத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட சர்வதேச நாணய நிதியத்தின் கொடூரமான சிக்கனத் திட்டம், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் நிர்வாகத்தின் கீழ் தொடர்ந்தும் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. கூட்டுத்தாபனங்கள், சபைகள் மற்றும் அஞ்சல் மற்றும் ரயில் உட்பட அனைத்து அரசு நிறுவனங்களையும் வணிகமயமாக்கல் மற்றும் தனியார்மயமாக்கல் உட்பட மறுசீரமைப்பு மூலம், இலாபம் ஈட்டும் நிறுவனங்களாக மாற்றுவதே, சர்வதேச நாணய நிதியத்தால் உத்தரவிடப்பட்டு அரசாங்கத்தால் செயல்படுத்தப்படும் திட்டமாகும்.

தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான பொதுப் போராட்டத்தை ஏற்பாடு செய்வதன் மூலமே இந்தத் தாக்குதலைத் தோற்கடிக்க முடியும். தொழிலாள வர்க்கத்தின் ஒரு பொது வேலைநிறுத்தம் வரை செல்லும், தொழில்துறை மற்றும் அரசியல் போராட்டத்தை தயார் செய்ய வேண்டும்.

சோசலிச சமத்துவக் கட்சி முன்மொழிந்துள்ளபடி, இந்த ஒவ்வொரு நிறுவனத்திலும் வேலைத்தளத்திலும் தொழிலாளர்களின் சுயாதீனமான நடவடிக்கைக் குழுக்களை உருவாக்குவதில் முன்னணியில் நிற்குமாறு ஒவ்வொரு நனவான தொழிலாளிக்கும் நாங்கள் அழைப்பு விடுக்கின்றோம். இந்த நடவடிக்கை குழுக்களுக்குள் முதலாளித்துவக் கட்சிகள் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் பிரதிநிதிகளை சேர்க்கக்கூடாது.

  • *உண்மையான ஊதியத்தில் ஏற்படும் வீழ்ச்சியை சரிசெய்யும், அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ப அதிகரிக்கும் ஊதிய உயர்வு வேண்டும்! ஓய்வூதியங்களும் இதேபோல் அதிகரிக்கப்பட வேண்டும்.
  • *நிறுவனங்களை தனியார்மயப்படுத்துவதையும் தொழில் அழிப்பையும் நிறுத்து!
  • *தபால் அலுவலகம் உட்பட அரசு நிறுவனங்களில் உள்ள அனைத்து பதவி வெற்றிடங்களையும் உடனடியாக நிரப்பு! நல்ல வேலை நிலைமைகளை உறுதி செய்திடு!

முதலாளித்துவ அமைப்பிற்குள் தொழிலாளர்களோ ஏழைகளோ தேசிய அளவில் தங்கள் உரிமைகளைப் பாதுகாக்க முடியாது என்று சோசலிச சமத்துவக் கட்சி வலியுறுத்துகிறது. உலக முதலாளித்துவம் ஒரு ஆழமான நெருக்கடியில் மூழ்கியுள்ளது. ஒவ்வொரு நாட்டிலும், முதலாளித்துவ அரசாங்கங்களும் ஆளும் வர்க்கங்களும், தங்கள் இலாபம் ஈட்டும் அமைப்பைப் பாதுகாப்பதற்காக, தொழிலாளர்கள் மற்றும் ஏனைய ஒடுக்கப்பட்ட மக்கள் மீது நெருக்கடியின் சுமையை திணிப்பதன் மூலம் சர்வாதிகார ஆட்சிகளை பலப்படுத்தத் திரும்புகின்றன. சர்வதேச அளவில் தலைதூக்கும் இந்தத் தாக்குதல்களே, இலங்கையிலும் சர்வதேச நாணய நிதிய திட்டமாக செயல்படுத்தப்படுகிறது.

இதற்கு எதிரான போராட்டமானது சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்துடன் முன்னெடுக்கப்பட வேண்டிய போராட்டமாகும். இலங்கையில் ஏற்கனவே உருவாக்கப்பட்டு வரும், செயலில் உள்ள நடவடிக்கை குழுக்கள், தொழிலாளர் நடவடிக்கை குழுக்களின் சர்வதேச கூட்டணியுடன் இணைவது அவசியம்.

அதே நேரம், ஒவ்வொரு வேலைத் தளத்திலும் நிறுவனத்திலும் உருவாக்கப்பட்டுள்ள தொழிலாளர் நடவடிக்கைக் குழுக்களின் பிரதிநிதிகளதும் கிராமப்புற ஏழைகளின் நடவடிக்கைக் குழுக்களின் பிரதிநிதிகளதும் பங்கேற்புடன், தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற மக்களின் ஜனநாயகத்துக்கும் சோசலிசத்துக்குமான மாநாட்டைக் கட்டியெழுப்ப நாங்கள் முன்மொழிகிறோம். இது தங்களின் உரிமைகளுக்கான போராட்டத்திற்கான முடிவெடுக்கும் அமைப்பாக இருக்கும்.

இந்த வழியில், அனைத்து வங்கிகள், பெரும் நிறுவனங்கள், பெருந்தோட்டங்கள் மற்றும் ஏனைய பொருளாதார மையங்களை தொழிலாளர்களின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் தேசியமயமாக்குகின்ற, சோசலிச வேலைத்திட்டத்திற்காக அர்ப்பணித்துக்கொண்ட தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தை கட்டியெழுப்புவதற்கான போராட்டத்தில் முன்னணியில் நிற்குமாறு தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை சோசலிச சமத்துவக் கட்சி அழைக்கின்றது.

இந்த திட்டத்தைப் பற்றி உங்களுடன் கலந்துரையாட நாங்கள் தயாராக உள்ளோம். எங்களை அழைக்கவும் 077 356 2327.

Loading