முன்னோக்கு

ட்ரம்பின் வரி விதிப்புகள்: தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான ஒரு போர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

கலிபோர்னியாவின் ஓக்லாந்தில் நவம்பர் 10, 2021 புதன்கிழமை அன்று ஓக்லாண்ட் துறைமுக முனையத்திற்குள் நுழைய டிரக்குகள் வரிசையாக நிற்கின்றன. [AP Photo/Noah Berger]

1930 களின் பேரழிவுகரமான ஸ்மூட்-ஹாவ்லி சட்டத்திற்குப் பின்னர் மிக உயர்ந்தளவில் அமெரிக்க சுங்க வரிகளை ட்ரம்ப் நிர்வாகம் திணித்திருப்பது, அமெரிக்கா மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான ஒரு யுத்தப் பிரகடனமாகும்.

“பில்லியன் கணக்கான டாலர்கள் வரி இப்போது அமெரிக்காவிற்குள் பாய்ந்து கொண்டிருக்கிறது” என்று ட்ரம்ப் கூறியுள்ளார். இது ஒரு அப்பட்டமான பொய் — வரிகள் உள்நாட்டிற்குரியவை, வெளிநாட்டில் இருந்து வரும் பணம் அல்ல.

அவை பொருட்களை இறக்குமதி செய்பவர் மீது விதிக்கப்படும் வரியாகும். அவை இறுதியில் அதிக விலைகளின் வடிவில் நுகர்வோர் மீது சுமத்தப்படுகிறது.

ட்ரம்பின் நடவடிக்கைகள் ஏற்கனவே அனைத்து நுகர்வோர் பொருட்களின் மீதும் அதிக விலைகளின் வடிவத்தில் தொழிலாளர்களால் செலுத்தப்பட்டு வருகின்றன. அவை துரிதமாக வேலை வெட்டுக்கள், மோசமடைந்து வரும் வேலையிட நிலைமைகள் —குறிப்பாக பாதுகாப்பு— மற்றும் முதலாளிகள் அமெரிக்க தொழில்துறையின் செலவினக் கட்டமைப்பில் ஏற்படும் அதிகரிப்புக்கு ஈடுசெய்ய முயல்வதால் ஊதியக் வெட்டுக்களையும் கொண்டுவரும்.

வரவு-செலவு திட்ட மசோதாவில் வரி வெட்டுக்கள் மூலமாக பெரும் செல்வந்தர்களுக்கும் நிறுவனங்களுக்கும் வழங்கப்படும் நன்கொடைகளுக்கு பணம் செலுத்துவதே இதன் மைய நோக்கமாகும்.

ஆனால், இதன் தாக்கங்கள் இந்த உடனடி நோக்கத்திற்கும் அப்பால் செல்கின்றன. வரலாறு மீண்டும் நிகழாது, ஆனால் அதிலிருந்து படிப்பினைகள் எடுக்கப்பட வேண்டும். 1930 களில் திணிக்கப்பட்ட வரிவிதிப்புகள் பெருமந்தநிலையைத் தூண்டுவதிலும் பின்னர் ஆழப்படுத்துவதிலும் ஒரு முக்கிய பாத்திரம் வகித்தன. இது, இறுதியில் இரண்டாம் உலகப் போருக்கு இட்டுச் சென்றது. இதே புறநிலை தர்க்கம் உலகிற்கு எதிரான ட்ரம்பின் பொருளாதாரப் போருக்குள்ளும் பதிவாகியுள்ளது.

வரலாற்றில் மிகப்பெரிய இரத்தக்களரிக்குப் பிறகுதான், அமெரிக்க முதலாளித்துவத்தின் பொருளாதார சக்தியின் அடிப்படையில் முதலாளித்துவ அமைப்புமுறை மீண்டும் கட்டமைக்கப்பட்டது.

ஆனால், அந்த அபிவிருத்தியே அமெரிக்காவின் பொருளாதார மேலாதிக்கத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தியது. இது, 1971 ஆம் ஆண்டு இந்த நாளில் அமெரிக்க ஜனாதிபதி நிக்சன் அமெரிக்க டாலரிலிருந்து தங்க ஆதரவை நீக்க முடிவு செய்ததில் அதன் ஆரம்ப வெளிப்பாட்டைக் கண்டது.

தங்கத்தின் உண்மையான மதிப்பு வடிவத்தில் எந்த அடிப்படையும் கொண்டிருக்காமல், டாலரை ஒரு ஃபியட் நாணயமாக (fiat currency) அடிப்படையாகக் கொண்டு ஒரு புதிய நாணய ஒழுங்கு நிறுவப்பட்டது. ஆனால், அமெரிக்க முதலாளித்துவத்தின் அடிப்படை வரலாற்று நெருக்கடி தொடர்ந்து ஆழமடைந்தது. இது, உலகின் தொழில்துறை சக்தியாக இருப்பதற்குப் பதிலாக, நிதி ஊகம் மற்றும் ஒட்டுண்ணித்தனத்தின் மையமாக மாற்றப்பட்ட சூழ்நிலைக்கு வழிவகுத்தது.

வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு 37 டிரில்லியன் டாலர் கடன் சுமையுடன் கூடிய நாடாக அமெரிக்கா இப்போது உள்ளது. அக்டோபர் 1987 பங்குச் சந்தை வீழ்ச்சி, அதைத் தொடர்ந்து 2008 நெருக்கடி மற்றும் 2020 இல் கோவிட் தொற்றுநோயின் தொடக்கத்தில் முழு நிதி அமைப்பும் கிட்டத்தட்ட சரிந்ததால், அது தொடர்ந்து ஆழமடைந்து வரும் தொடர்ச்சியான நிதி நெருக்கடிகளால் உலுக்கப்பட்டுள்ளது, மேலும் அடிவானத்தில் இன்னும் பல வரவிருக்கின்றன.

ட்ரம்ப் ஆட்சியின் கொள்கைகளின் சாராம்சம் என்னவென்றால், அதன் ஆதரவாளர்கள் “ஒரு புதிய உலகளாவிய வர்த்தக ஒழுங்கு” என்று அழைப்பதன் மூலம் இந்த இருத்தலியல் நெருக்கடியை சமாளிக்க முயல்கின்றனர். இதில் அமெரிக்க ஏகாதிபத்தியம் உலகப் பொருளாதாரத்தின் மீது ஒரு மேலாதிக்க நிலையைக் கொண்டுள்ளது. அது, கூட்டாளிகள் மற்றும் எதிரிகள் இருவருக்கும் அவர்கள் இணங்காவிட்டால், அவர்கள் பொருளாதார ரீதியாக நசுக்கப்படுவார்கள் என்ற அச்சுறுத்தலின் கீழ், உள்நாட்டில் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக சமமான இரக்கமற்ற நடவடிக்கைகளுடன் சேர்ந்து, அவர்களுக்கு கட்டளைகளை திணிக்கிறது.

ட்ரம்ப் ஆட்சியின் வரிவிதிப்பு நடவடிக்கைகள் இரண்டு வழிகள் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன.

நாடுகளுக்கு எதிரான முழுமையான வரிகள் —குறைந்தபட்ச அளவான 10 சதவீதம் முதல் 40 அல்லது 50 சதவீதம் வரை— 1977 ஆம் ஆண்டின் சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டத்தின் (IEEPA) கீழ் விதிக்கப்படுகின்றன. வர்த்தகப் பற்றாக்குறையின் விளைவாக ஏற்பட்டுள்ள “தேசிய அவசரநிலை” காரணமாக அத்தகைய நடவடிக்கை எடுக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் அளிப்பதாக ட்ரம்ப் கூறுகிறார்.

இந்த முடிவு சட்டவிரோதமானது என்று மே மாதம் சர்வதேச வர்த்தக நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டது. ஆனால் வரிகளை திரும்பப் பெறுவது பெருமந்தநிலைமைக்கு ஒத்த ஒரு பெரும் நிதியியல் நெருக்கடிக்கு இட்டுச் செல்லும் என்ற அடிப்படையில், ட்ரம்ப் நிர்வாகத்தால் மேல்முறையீடு செய்யப்பட்டு, முதலில் ஒரு பெடரல் நீதிமன்றத்திற்கும், சாத்தியமானால் உச்ச நீதிமன்றத்திற்கும் செல்வது குறித்து இப்போது சவால் செய்யப்பட்டு வருகிறது.

நிர்வாகம் எந்த வகையிலும் செயல்பட வேண்டும் என்ற உந்துதலை வெளிப்படுத்தும் கருவூலச் செயலர் ஸ்காட் பெசன்ட் கூறுகையில், “நாங்கள் அதிக ஒப்பந்தங்களை செய்துள்ளோம், பணம் வருகிறது, உச்ச நீதிமன்றம் “எங்களுக்கு எதிராக தீர்ப்பளிப்பது” கடினமாகி வருகிறது என்றார்.

IEEPA இன் கீழ் திணிக்கப்பட்ட வரிகளுக்கு கூடுதலாக, எஃகு, அலுமினியம், வாகனங்கள், தாமிரம், கணினி சில்லுகள், மற்றும் எதிர்காலத்தில் மருந்துகள் உள்ளிட்ட குறிப்பிட்ட பொருட்களுக்கு வரிகள் உள்ளன, இவற்றின் மீது ட்ரம்ப் 200 சதவீதம் வரி விதிப்பதாக அச்சுறுத்தியுள்ளார்.

உலகிற்கு எதிரான வரிவிதிப்புப் போரின் நோக்கங்கள், போருக்குப் பிந்தைய அமைப்புமுறையை அழிப்பதைத் தவிர வேறொன்றையும் நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை என்பதை ட்ரம்ப் தனது அறிக்கைகளிலும் நிர்வாக உத்தரவுகளிலும் கோடிட்டுக் காட்டியுள்ளார். இந்த அமைப்புமுறை அமெரிக்காவை “கிழித்தெறியவும்,” அதன் தொழில்துறை திறனை பலவீனப்படுத்தப்படவும், அதன் மூலம் அதன் இராணுவத் திறனைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தவும் அனுமதித்துள்ளதாக அவர் கூறுகிறார்.

சீனாவின் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி என்பது அதன் உயிர்பிழைப்புக்கான அச்சுறுத்தலாக இருப்பதாகவும், அது என்ன விலை கொடுத்தாவது நசுக்கப்பட்டாக வேண்டும் என்றும் ட்ரம்ப் நிர்வாகம், ஜனநாயகக் கட்சியினர் மற்றும் இராணுவ-உளவுத்துறை ஸ்தாபகத்திடம் இருந்து தொடர்ந்து அறிவிப்புகள் வந்துள்ள நிலையில், இந்த உத்தரவுகள் சீனாவை மைய இலக்காக அடையாளம் கண்டுள்ளன.

ஆகஸ்ட் 7 அன்று நியூ யோர்க் டைம்ஸில் “நாம் ஏன் உலகளாவிய ஒழுங்கை மறு உருவாக்கம் செய்தோம்” என்று தலைப்பிட்ட அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ஜேமிசன் கிரீர் எழுதிய ஒரு கட்டுரையில், ட்ரம்ப்பின் பொருளாதார போருக்கான நியாயப்படுத்தல் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது.

2ம் உலகப் போருக்குப் பிந்தைய உடனடி காலகட்டத்தில் தொடங்கப்பட்டு, 1995 இல் உலக வர்த்தக அமைப்பு உருவாக்கப்படும் வரையிலும் தொடர்ந்த முந்தைய அமைப்புமுறை, “ஏற்றுக்கொள்ள முடியாததாகவும் நீடித்திருக்க முடியாததாகவும்” இருந்தது. அதில் “மிகப்பெரிய வெற்றியாளர்” சீனா இருந்தது.

கடந்த ஜூலை இறுதியில் ஸ்காட்லாந்தின் டர்ன்பெர்ரியில் உள்ள ட்ரம்பின் கோல்ஃப் மைதானத்தில் அறிவிக்கப்பட்ட, ட்ரம்புக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான உடன்படிக்கை என்று அழைக்கப்படுவதை கிரேர் ஒரு “வரலாற்று ஒப்பந்தம்” என்றும் பின்பற்ற வேண்டிய ஒரு மாதிரி என்றும் பாராட்டினார்.

இங்கு எந்த ‘உடன்பாடும்’ ஏற்படவில்லை. அமெரிக்கா ஆணையிடும் நிபந்தனைகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் உடன்படவில்லை என்றால், அதன் ஏற்றுமதிகள் மீது 30 சதவீத வரி விதிக்கப்படும் என்று ஐரோப்பிய ஒன்றியத்திடம் கூறப்பட்டது. இது, ஏற்கனவே கிட்டத்தட்ட மந்தநிலை நிலைமைகளை அனுபவித்து வரும் அதன் பொருளாதாரத்திற்கு ஒரு பெரிய அடியை ஏற்படுத்தும்.

ஐரோப்பிய ஒன்றியம் 15 சதவீத வரிவிதிப்புக்கு இணங்கியதோடு மட்டுமல்லாமல், அமெரிக்கா தனது இராணுவ உபகரணங்கள் மற்றும் எரிசக்தி கொள்முதலை அதிகரிக்க ஒரு ஒப்பந்தத்தையும் பெற்றது. அதேவேளையில், இதற்கு பிரதிபலனாக எதையும் வழங்கவில்லை என்பதோடு, அமெரிக்கா மருந்துகள் உட்பட தனிப்பட்ட பண்டங்கள் மீது கூடுதல் வரிவிதிப்புகளுக்கான சாத்தியக்கூறையும் திறந்து வைத்தது.

பிற நாடுகளுடனான உடன்பாடுகள் என்றழைக்கப்படுவதை மறுபரிசீலனை செய்த கிரீர், கொடுக்கப்பட்ட உறுதிமொழிகள் “செயல்படக்கூடியவை” என்றும், அமெரிக்கா நிலைமையை “உற்றுநோக்கி கண்காணிக்கும்” என்றும், “தேவைப்பட்டால் இணங்காததற்கு விரைவாக அதிக வரி விகிதத்தை மீண்டும் திணிக்கும்” என்றும், வரிவிதிப்புகளை “வலிமையான குச்சி” என்றும் விவரித்தார்.

இந்த ஒப்பந்தங்கள் “குறிப்பிடத்தக்க முதலீட்டு உறுதிமொழிகளுடன்” வந்துள்ளன, இதில் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு 600 பில்லியன் டாலர்கள் மற்றும் தென் கொரியாவிற்கு 350 பில்லியன் டாலர்கள் அடங்கும் என்று அவர் வலியுறுத்தினார்.

“இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஐரோப்பாவை மீளக்கட்டியெழுப்பிய மார்ஷல் திட்டத்தின் பணவீக்கத்தால் சரிசெய்யப்பட்ட மதிப்பை விட 10 மடங்கு அதிகமான, இந்த முதலீடுகள் அமெரிக்க மறு தொழில்துறைமயமாக்கலை துரிதப்படுத்தும்” என்று அவர் எழுதினார்.

இந்த முன்னோக்கு யதார்த்தமாகும் வாய்ப்பு இல்லை என்றாலும், நோக்கம் தெளிவாக உள்ளது. பாரிய சுங்க வரிகளின் அச்சுறுத்தலுடன், அமெரிக்கா ஒரு மாபியா குண்டர் பாணியில் உலகின் பிற பகுதிகளிடம் இருந்து கப்பம் பெற முற்படும்.

புதிய உலக ஒழுங்கின் முக்கிய இலக்கு சீனா என்றாலும், அமெரிக்காவால் அதன் கட்டளைகளை அவ்வளவு எளிதாக செயல்படுத்த முடியவில்லை. 145 சதவீத வரி விதிப்பதாக அறிவித்து ஒரு முழு-நேரடித் தாக்குதலுக்கு அமெரிக்கா முயற்சித்த பின்னர், சீனா அரிய தாதுக்கள் மற்றும் அரிய பூமி காந்தங்கள் மீது ஏற்றுமதி கட்டுப்பாடுகளைத் திணித்ததன் மூலமாக பதிலடி கொடுத்தது. இவற்றில் அது கிட்டத்தட்ட ஏகபோக உரிமையையும் சீனா கொண்டுள்ளது. மேலும் இந்த கனிம வளங்கள், வாகனம் மற்றும் இராணுவத் தொழில்துறைகளின் பிரதான பிரிவுகளுக்கு இன்றியமையாததாகும்.

இந்த நடவடிக்கைகள் ட்ரம்பை ஒரு போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்க கட்டாயப்படுத்தின. இப்போது ஆகஸ்ட் முதல் வாரத்தில் இருந்து நவம்பர் வரையில் மேலும் மூன்று மாதங்களுக்கு இது நீட்டிக்கப்பட்டுள்ளது. எவ்வாறிருப்பினும், இந்த போர்நிறுத்தம் ஏதோவொரு தீர்வு நிகழ்முறையின் தொடக்கம் அல்ல, மாறாக முழு அளவிலான தாக்குதலை மீண்டும் தொடங்குவதற்கு தேவையான ஆதார வளங்களை சேகரிக்க அமெரிக்காவால் பயன்படுத்தப்படும்.

உள்நாட்டில் தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான தாக்குதலின் அளவு, இப்போது சுமத்தப்பட்டு வரும் வரிகளின் செலவுகளின் ஆரம்ப புள்ளிவிபரங்களால் சுட்டிக்காட்டப்படுகிறது.

முக்கிய நிறுவனங்கள் ஏற்கனவே கணிசமான அடிகளை வாங்கியுள்ளன. ஜெனரல் மோட்டார்ஸ் இரண்டாவது காலாண்டில் வாகன பாகங்கள் மீதான சுங்க வரிகளில் 1 பில்லியன் டாலருக்கும் அதிகமாக செலுத்தியுள்ளதாகக் கூறியுள்ளது. இறக்குமதி மீதான சுங்க வரிகள் அதன் நிகர வருமானத்தில் 350 மில்லியன் டாலர்களை குறைக்கும் என்று ஸ்டெல்லாண்டிஸ் கூறியது, மேலும் நைக் லாபத்தில் 1 பில்லியன் சரிவை அறிவித்தது.

சிறு தொழில்கள் பேரழிவு தரும் விளைவுகளை எதிர்கொள்கின்றன. ப்ளூம்பெர்க்கின் ஒரு அறிக்கையின்படி, 500 க்கும் குறைவான தொழிலாளர்களைக் கொண்ட சுமார் 236,000 சிறு வணிக இறக்குமதியாளர்கள் 2023 இல் சுமார் 868 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களை வாங்கியதாக அமெரிக்க வர்த்தக சபை மதிப்பிட்டுள்ளது. இந்த நிறுவனங்களுக்கான ஒருங்கிணைந்த வருடாந்திர வரி பாதிப்பு 202 பில்லியன் டாலராக இருக்கும் என்று வர்த்தக சபை கூறியது. இது, ஒவ்வொரு நிறுவனத்திற்கும் சராசரியாக 856,000 டாலர் ஆகும்.

இந்த வரி உயர்வுகளின் விளைவு ஒட்டுமொத்த பொருளாதாரத்தின் மீதும் பாய்ந்து, விலைவாசி உயர்வு மற்றும் அதிகரித்த வேலை அழிவுகளைக் கொண்டு வருகின்ற நிலையில், இந்த பாரிய தொகைகளும், வரவிருக்கும் இன்னும் பெரிய தொகைகளும், தொழிலாள வர்க்கத்தால் செலுத்தப்படும்—இதுவே முதலாளித்துவ இலாபகர அமைப்புமுறையின் தவிர்க்கவியலாத தர்க்கமாகும்.

வரி விதிப்புகள் வேலைகளை அதிகரிக்கின்றன என்று ட்ரம்ப் ஆட்சி கூறுகிறது — இது மற்றொரு பொய், இது உறுதியான தரவுகளால் மறுக்கப்படுகிறது. 2018 இல் அறிமுகப்படுத்தப்பட்ட எஃகு சுங்க வரிகள், இந்தத் துறையில் 1,000 வேலைகளை உருவாக்கியதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், விலை உயர்வு காரணமாக எஃகு பயன்படுத்தும் தொழில்களில் இழந்த வேலைகளின் எண்ணிக்கை 75,000 என மதிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் முன்னால் உள்ள பிரச்சினைகள் அப்பட்டமாக வெளிப்படுகின்றன. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் அதனுடன் இணைந்த சோசலிச சமத்துவக் கட்சிகளும் ட்ரம்பின் பொருளாதார மற்றும் வர்க்கப் போருக்கு எதிராக ஒரு சுயாதீனமான வேலைத்திட்டத்திற்காக போராட தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுக்கின்றன. “முக்கிய எதிரி நாட்டுக்குள் இருக்கிறான்” என்பதுதான் தாரக மந்திரமாக இருக்க வேண்டும்.

அதாவது, ட்ரம்பின் அழிவுகரமான பொருளாதார தேசியவாதத்திற்கு எதிரான சமரசமற்ற எதிர்ப்பு, உலகின் எஞ்சிய பகுதிகளில் உள்ள தொழிலாளர்கள் அவர்களின் “சொந்த” ஆளும் வர்க்கங்களின் பொருளாதார தேசியவாதத்திற்கு எதிரான உறுதியான எதிர்ப்போடு பொருந்த வேண்டும்.

இது, சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்திற்கும், உலகளாவிய முதலாளித்துவ அமைப்பு முறையின் வரலாற்று நெருக்கடியை எதிர்கொள்ள ஒரு சோசலிச வேலைத்திட்டத்தை அபிவிருத்தி செய்வதற்கும் அடித்தளமாகும். இதன் தீய வெளிப்பாடாக ட்ரம்ப்பின் பொருளாதாரப் போர் உள்ளது.

இந்த நெருக்கடியானது, கடந்த நான்கு தசாப்தங்களாக உற்பத்தியின் பூகோளமயமாக்கத்தால் மிகப்பெரிய அளவில் தீவிரமடைந்துவரும் முதலாளித்துவத்தின் உள்ளார்ந்த முரண்பாட்டில், குறிப்பாக உலகப் பொருளாதாரத்திற்கும், உலகம் போட்டி தேசிய-அரசுகள் மற்றும் ஏகாதிபத்திய சக்திகளாக பிளவுபட்டிருப்பதற்கும் இடையிலான முதலாளித்துவத்தின் உள்ளார்ந்த முரண்பாட்டில் வேரூன்றியுள்ளது.

அமெரிக்க ஏகாதிபத்தியம் வெளிநாட்டில் அதன் போட்டியாளர்களுக்கு எதிராகவும், உள்நாட்டில் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராகவும் போரை கட்டவிழ்த்து விடுவதன் மூலமாக இந்த முரண்பாட்டை “தீர்க்க” முனைகிறது. சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்திற்கான போராட்டத்தின் மூலமும், இந்த போராட்டத்திற்கு தலைமை கொடுக்க அவசியமான புரட்சிகர கட்சியை கட்டியெழுப்புவதன் மூலமும் தொழிலாள வர்க்கம் இதனைத் தீர்க்க வேண்டும். தொழிலாள வர்க்கத்துக்கு மூன்றாவது வழி கிடையாது.

Loading