வட மாகாணம் முல்லைத்தீவில் வாழும் சுதந்திர ஊடகவிலாளரான கணபதிப்பிள்ளை குமணன், இலங்கை பயங்கரவாத தடுப்பு பிரிவினால் எதிர்வரும் ஆகஸ்ட் 17 ஞாயிற்றுக்கிழமை விசாரணைக்கு வருமாறு அழைக்கப்பட்டுள்ளார்.
இந்த பத்திரிகையாளர், வடக்கு மற்றும் கிழக்கில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் நடத்தி வரும் போராட்டங்கள் மற்றும் செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் குறித்த செய்திகளை வெளியிடுவதில் ஈடுபட்டுள்ளார். நில ஆக்கிரமிப்பு மற்றும் மணல் வியாபாரிகளினால் மேற்கொள்ளப்படும் சுற்றுச்சூழலைப் பாதிக்கும் மணல் அகழ்வு தொடர்பான பிரச்சினைகளையும் அவர் தனது செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மூலம் அம்பலப்படுத்தி வருகின்றார்.
இலங்கை அரசாங்கம் தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளும் பாரபட்சங்களை அம்பலப்படுத்தியதற்காக, அவர் தொடர்ந்து அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகி வருவதோடு அரசாங்கப் படைகளால் கண்காணிக்கப்படுகிறார்.
பொலிசாரால் பத்திரிகையாளருக்கு வழங்கப்பட்டுள்ள அழைப்புக் கட்டளையில் விசாரணைக்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும், குமணன் உலக சோசலிச வலைத் தளத்துடன் (WSWS) பேசும் போது, தனது சமூக ஊடகப் பதிவுகள், குறிப்பாக செம்மணி பற்றிய தனது பதிவுகள் குறித்து கேள்வி கேட்கவே பொலிஸ் அழைப்பு விடுத்ததாக தான் நம்புவதாகக் கூறினார். செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வாராய்ச்சி குறித்து பத்திரிகையாளர் விரிவாக செய்தி வெளியிட்டுள்ளார்.
கொடூரமான பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ், குமணன் விசாரிக்கப்படக்கூடிய அச்சுறுத்தல் உள்ளது.
பத்திரிகையாளர் குமணன் மீதான தொடர்ச்சியான பொலிஸ் அடக்குமுறைகள் மற்றும் மிரட்டல்களை உலக சோசலிச வலைத் தளமும் சோசலிச சமத்துவக் கட்சியும் (சோ.ச.க.) வன்மையாகக் கண்டிக்கின்றன. மக்கள் விடுதலை முன்னணி/தேசிய மக்கள் சக்தி (ஜே.வி.பி./தே.ம.ச.) அரசாங்கம், பொலிஸின் சுதந்திரமான நடவடிக்கைகளுக்கு அனுமதிக்காமல், இத்தகைய அடக்குமுறைகள் கட்டவிழ்த்துவிடபட முடியாது.
2019, 2020, 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில், அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த இலங்கை அரசாங்கங்கள் மற்றும் இராணுவத்தின் இனவெறி நடவடிக்கைகளைப் பற்றி செய்தி வெளியிட்ட போது, பலமுறை அவர் அச்சுறுத்தல், தாக்குதல், துன்புறுத்தல் மற்றும் குறுக்கீடுகளுக்கு ஆளானார்.
2009 மே மாதம் முடிவடைந்த, தமிழர்களுக்கு எதிரான 26 ஆண்டுகால போரின் போது, முல்லைத்தீவு மாவட்டம் கொடூரமான அழிவைச் சந்தித்தது. போரின் இறுதி வாரங்களில் பல்லாயிரக்கணக்கான தமிழ் பொதுமக்கள் இந்தப் பகுதியில் கொல்லப்பட்டதாகவும், ஆயிரக்கணக்கானோர் காணாமல் போனதாகவும் ஐ.நா. தெரிவித்துள்ளது. இந்த மாவட்டத்தில் இராணுவ ஆக்கிரமிப்பும் அடக்குமுறையும் தொடர்கிறது.
அவருக்கு எதிரான அச்சுறுத்தல்கள், இலங்கையில் தற்போதைய ஆளும் ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கமும், முந்தைய அரசாங்கங்களைப் போலவே, கருத்துச் சுதந்திரத்தை நசுக்குவதில் முன்னணியில் உள்ளது என்பதைக் காட்டுகிறது.
கடந்த அக்டோபரில், மாவனெல்லையைச் சேர்ந்த 21 வயது மாணவர் சுஹைல், பாலஸ்தீனியர்கள் மீதான இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு எதிரான ஸ்டிக்கரை ஒட்டியதற்காக பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
மார்ச் 22 அன்று, அதே குற்றச்சாட்டில் முகமது ருஸ்டி கைது செய்யப்பட்டார். பின்னர் இந்த இளைஞர்களுக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை என்பதை ஒப்புக்கொண்ட பொலிஸ், அவர்களை விடுவிக்கத் தள்ளப்பட்டது.
ஆளும் வர்க்கத்திற்கு எதிராகப் பேசுபவர்களுக்கும், தங்கள் தொழில்கள் மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கப் போராடுபவர்களுக்கும் எதிராக, திசாநாயக்க அரசாங்கம் கொடூரமான பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்துகிறது.
ஆகஸ்ட் 7, முல்லைத்தீவில் உள்ள இராணுவ முகாமுக்கு அழைக்கப்பட்ட இளைஞர்கள் மீது இராணுவம் ஒரு கொடூரமான தாக்குதலை நடத்தியது. இதன் போது, ஒரு இளைஞர் காணாமல் போனார். மறுநாள் அவரது சடலம் முத்தையன்கட்டு குளத்தில் கண்டெடுக்கப்பட்டது.
பொதுமக்களின் போராட்டத்திற்கு மத்தியில், முத்தையன்கட்டு இராணுவ முகாமில் ஐந்து சிப்பாய்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, அவர்களில் மூன்று பேர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த சூழ்நிலையிலேயே தனக்கு எதிராக அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டிருப்பதாக குமணன் உலக சோசலிச வலைத் தளத்திற்குத் தெரிவித்தார்.
'நான் வீட்டில் இல்லாதபோது பொலிசார் என் வீட்டிற்கு வந்து பொலிஸ் நிலையத்திற்கு வரச் சொல்லியிருகிறார்கள். எனக்கும் என் குடும்பத்தினருக்கும் மிரட்டல் விடுக்கும் வடிவத்தில் பொலிசாரும் புலனாய்வாளர்களும் அடிக்கடி என் வீட்டைச் சுற்றி வந்து என்னை கண்காணிக்கின்றனர்.
'என்னைப் போன்ற பல பத்திரிகையாளர்களுக்கு இதுபோன்ற மிரட்டல்கள் வருகின்றன. பயம் காரணமாக அவர்கள் வெளியே பேசுவதில்லை,' என்று அவர் கூறினார்.
இந்த அரசாங்கத்தைப் பற்றிப் பேசுகையில், 'புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும், பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் தமிழர்கள் மீதான அடக்குமுறை தொடர்கிறது. இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபோது, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்வதாக உறுதியளித்தது. நானும் அதை நம்பினேன். ஆனால் இந்த அரசாங்கம் கருத்துச் சுதந்திரத்தையும் ஜனநாயக உரிமைகளையும் நசுக்குவதற்கு அதைப் பயன்படுத்துகிறது.
'பயங்கரவாதத் தடுப்புத் பிரிவுதான் என்னை விசாரணைக்கு அழைத்துள்ளது. அந்தப் பிரிவின் விசாரணை ஜனநாயக விரோதமாக இருக்கும். அவர்கள் எனது தனிப்பட்ட தகவல்களையும் மற்றும் வங்கிக் கணக்கு விவரங்களையும் கூட கேட்பார்கள் என்பது எனக்குப் புரிகிறது,' என்று அவர் கூறினார்.
குமணனுக்கு எதிரான அரசாங்கத்தின் அச்சுறுத்தல்களை பல அமைப்புகள் கண்டித்துள்ளன.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது X தளத்தில் பின்வருமாறு கூறியுள்ளார்:
'இந்த அரசாங்கம், முந்தைய அனைத்து அரசாங்கங்களும் தமிழர்களுக்கு எதிராக இனவெறியை கொண்டிருந்ததாகவும் தாம் அதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டதாகவும் கூறுகிறது. அப்படியானால், இந்த அரசாங்கத்திலும் தமிழ் பத்திரிகையாளர்கள் ஏன் இன்னும் துன்புறுத்தப்படுகிறார்கள்?' என்று அவர் கேட்டார்.
குமணனின் பணிகளைப் பாராட்டிய இலங்கைத் தமிழ் அரசு கட்சி மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஆர். இராசமாணிக்கம் இந்த அச்சுறுத்தலை “வன்மையாகக் கண்டிப்பதாகக்” கூறுகிறார்.
எவ்வாறெனினும், இந்தக் கட்சிகள் அனைத்தும் வடக்கு மற்றும் கிழக்கில் அரசாங்கத்தின் தொடர்ச்சியான இராணுவ ஆக்கிரமிப்பை ஆதரிப்பவையாகும். முத்தையன்கட்டு கிராமத்தைச் சேர்ந்த இளைஞனின் மரணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், வடக்கு மற்றும் கிழக்கில் நிலை கொண்டிருக்கும் 'பெருமளவு இராணுவத்தை' குறைக்குமாறு அரசாங்கத்தைக் கேட்டும், திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒரு ஹர்த்தாலுக்கு அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
இந்த அமைப்புகள் மக்களின் ஜனநாயக உரிமைகள் குறித்து அக்கறை கொள்ளவில்லை, மாறாக வெகுஜன அதிருப்தியைப் பயன்படுத்திக் கொண்டு அதற்கு குழிபறிக்க முயல்கின்றன.