இர்த ஆண்டு ஆகஸ்ட் 2 முதல் 9 வரை, சோசலிச சமத்துவக் கட்சி (அமெரிக்கா) அதன் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் கோடைக்காலப் பள்ளியை நடத்தியது. இதில், அமெரிக்காவில் உள்ள சோசலிச சமத்துவக் கட்சியின் உறுப்பினர்களும், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) அனைத்து பிரிவுகளிலிருந்தும் மற்றும் அதன் ஆதரவுக் குழுக்களிலிருந்தும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
2025 கோடைக்காலப் பள்ளியின் கருப்பொருள் பாதுகாப்பும் நான்காம் அகிலமும் என்பதாகும். இது, ஆகஸ்ட் 20, 1940 அன்று, ரஷ்யப் புரட்சியின் இணைத் தலைவரும், நான்காம் அகிலத்தின் நிறுவனருமான லியோன் ட்ரொட்ஸ்கி, ஸ்ராலினிச முகவரான ரமோன் மெர்கேடரால் படுகொலை செய்யப்பட்டது தொடர்பான, ICFI மே 1975 இல் தொடங்கிய பாதுகாப்பு மற்றும் நான்காம் அகிலத்தின் விசாரணை ஆகும். இந்த விசாரணையில், ஸ்ராலினிச உளவுப்படையான GPU, அமெரிக்காவில் சோசலிச தொழிலாளர் கட்சி உட்பட ட்ரொட்ஸ்கிச இயக்கத்திற்குள் தனது முகவர்களை முறையாக ஊடுருவ வைத்து, ட்ரொட்ஸ்கி மீதான படுகொலையைத் தயாரித்து ஒழுங்கமைத்தது என்பது தெரியவந்துள்ளது.
சோசலிச சமத்துவக் கட்சி (அமெரிக்கா) மற்றும் உலக சோசலிச வலைத்தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரான டேவிட் நோர்த் வழங்கிய “ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வரலாற்றில் பாதுகாப்புக்கான இடமும் நான்காம் அகிலமும்” என்ற அறிமுக அறிக்கையை உலக சோசலிச வலைத் தளம் வெளியிடுகிறது. வரவிருக்கும் வாரங்களில், பள்ளியில் வழங்கப்பட்ட அனைத்து விரிவுரைகளின் காணொளிகளையும் உரையையும் உலக சோசலிச வலைத் தளம் பிரசுரிக்கும்.
ஏழு நாட்கள் தொடர்ந்த இந்த கோடைகால பள்ளியானது, பாதுகாப்பும் நான்காம் அகிலமும் குறித்த விசாரணையை விரிவாக மதிப்பாய்வு செய்து, அதை ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வரலாற்றுப் பாதையில் நிலைநிறுத்தியது. இந்த மதிப்பாய்வுகள் 29 முக்கியமான விரிவுரைகளைக் கொண்டிருந்தன. இதில் பலவற்றை இயக்கத்தின் புதிய உறுப்பினர்கள் வழங்கினர். ஆரம்ப உரையில் டேவிட் நோர்த் கூறியதாவது: “நாம் ஒரு சவாலான வாரத்தை எதிர்கொள்கிறோம். இந்த விரிவுரைகள் வரலாறு, அரசியல் மற்றும் சட்டம் தொடர்பான ஏராளமான உள்ளடக்கங்களை கொண்டிருக்கும். ஆனால், நாம் கடினமான மற்றும் அபாயகரமான காலங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். புறநிலை நிகழ்வுகள் நமது காரியாளர்கள் மீது மாபெரும் கோரிக்கைகளை முன்வைக்கும்.”
ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சி தத்துவம், 1917 அக்டோபர் புரட்சியின் மூலோபாய அடித்தளங்கள் மற்றும் உலக சோசலிசப் புரட்சி வேலைத்திட்டம் மீதான விரிவுரைகளுடன் இந்த பள்ளி தொடங்கியது. இந்த விரிவுரைகள், அக்டோபர் புரட்சியை வெற்றிக்கு இட்டுச் சென்ற முன்னோக்கு, சோவியத் அரசில் தேசியவாதம் மற்றும் அதிகாரத்துவத்திற்கு எதிரான லெனினின் “கடைசி போராட்டம்”, மற்றும் ஸ்ராலினிசம் மற்றும் “தனியொரு நாட்டில் சோசலிசம்” என்ற தத்துவத்திற்கு எதிரான இடது எதிர்ப்பாளர்களின் போராட்டம் ஆகியவற்றை இணைக்கும் தொடர்ச்சியை ஸ்தாபித்தன. அங்கிருந்து, இந்த விரிவுரைகள் சர்வதேச சோசலிசத்தை ஸ்ராலினிச மறுதலித்ததன் பரந்த மற்றும் கொடூரமான பின்விளைவுகளை ஆராய்ந்தன. பிரிட்டனில் 1926 பொது வேலைநிறுத்தம், 1925-27ல் காட்டிக்கொடுக்கப்பட்ட சீனப் புரட்சி, 1933 இல் ஜேர்மன் தொழிலாள வர்க்கத்தின் பேரழிவுகரமான தோல்வி, மற்றும் 1930 களில் ஸ்பெயின் மற்றும் பிரான்சில் நடந்த காட்டிக்கொடுப்புகள் ஆகியவை ஐரோப்பாவில் பாசிசத்தின் வெற்றிக்கும் இரண்டாம் உலகப் போரின் வெடிப்புக்கும் பாதை வகுத்தது.
1930கள் வரை சோவியத் ஒன்றியத்திற்குள்ளாக ஸ்ராலினிச அதிகாரத்துவத்திற்கு ட்ரொட்ஸ்கிச எதிர்ப்பின் மகத்தான செல்வாக்கை ஆவணப்படுத்திய ஒரு விரிவுரை அசாதாரண முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.
இதன்பின்பு, இந்த கோடைப் பள்ளியானது, புரட்சிகர மார்க்சிச முன்னணிப் படைக்கு எதிரான ஸ்ராலினிச அரசியல் படுகொலை தாக்குதலை ஆய்வு செய்தது. 1937-38ல் கட்டவிழ்த்துவிடப்பட்ட மாஸ்கோ விசாரணைகளும் மாபெரும் பயங்கரமும், அக்டோபர் ரஷ்யப் புரட்சியில் எஞ்சியிருந்த ஒவ்வொரு பிரதிநிதியையும் ஒழித்துக்கட்டும் நோக்கம் கொண்ட ஒரு பரந்த களையெடுப்பின் மையப்புள்ளியாக இருந்தன. 1935 மற்றும் 1940 க்கு இடையில், சோவியத் ஒன்றியத்தில் அரசியல் குற்றச்சாட்டுக்களின் பேரில் கிட்டத்தட்ட 2 மில்லியன் பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 688,503 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். வானியலாளர்கள், உயிரியலாளர்கள், மருத்துவர்கள், வரலாற்றாசிரியர்கள், மெய்யியலாளர்கள், இசைக்கலைஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்கள் என ஆயிரக் கணக்கான சோசலிசத் தொழிலாளர்களும் புத்திஜீவிகளும் நிர்மூலமாக்கப்பட்டனர்.
அக்டோபர் புரட்சியின் இணைத்-தலைவரும் நான்காம் அகிலத்தின் ஸ்தாபகருமான லியோன் ட்ரொட்ஸ்கி, இந்த பயங்கரவாத தாக்குதலின் மைய இலக்காக இருந்தார். ஒரு தசாப்த கால இடைவிடாத துன்புறுத்தலுக்குப் பின்னர், ட்ரொட்ஸ்கியின் மகன் லெவ் செடோவ் (Lev Sedov) உட்பட அவரது நெருங்கிய ஒத்துழைப்பாளர்கள் பலரும் படுகொலை செய்யப்பட்டதற்குப் பின்னர், ட்ரொட்ஸ்கி 1940 ஆகஸ்ட் 20 அன்று, GPU முகவர் ரமோன் மெர்க்கடேரால் மெக்சிகோவில் வைத்து படுகொலை செய்யப்பட்டார்.
இந்த கோடைப்பள்ளியின் இரண்டாம் பகுதி பாதுகாப்பும் நான்காம் அகிலமும் குறித்த விசாரணையின் விரிவான அறிக்கையை வழங்கியது. “பாதுகாப்பும் நான்காம் அகிலமும் குறித்த விசாரணை தொடங்கப்பட்டதன் மூலம், ட்ரொட்ஸ்கிச இயக்கம் எதிர்ப் புரட்சிகர அதிகாரத்துவங்களுக்கு எதிரான தாக்குதலைத் தொடங்கியது” என்று டேவிட் நோர்த் தனது அறிமுக உரையில் விளக்கினார். ஸ்ராலினிசத்திற்கு வக்காலத்து வாங்குபவர்களிடம் இருந்து அவதூறுகள், ஆத்திரமூட்டல்கள் மற்றும் பொய்களுக்கு முன்னால் தொடங்கப்பட்ட இந்த விசாரணை, கவனமாக ஆவணப்படுத்தப்பட்ட உண்மைகளின் அடிப்படையில், அது முன்னெடுத்த குற்றச்சாட்டுக்களின் உண்மையை நிறுவியது.
ட்ரொட்ஸ்கியின் படுகொலைக்கு முன்னர் நான்காம் அகிலத்திற்குள்ளும் அதைச் சுற்றியும் செயல்பட்ட கொலையாளி மெர்கேடர் உட்பட GPU முகவர்களின் வலையமைப்பின் செயல்பாடுகள் குறித்த விசாரணையின் அம்பலப்படுத்தல்களை இந்த விரிவுரைகள் மதிப்பாய்வு செய்தன. எர்வின் வுல்ஃப் (Erwin Wolf), இக்னேஸ் ரெய்ஸ் (Ignace Reiss), செடோவ் (Sedov) மற்றும் ருடால்ஃப் கிளெமென்ட் (Rudolf Klement) உள்ளிட்ட பல முன்னணி ட்ரொட்ஸ்கிஸ்டுகளின் கொலைக்கு காரணமான மிக முக்கியமான GPU முகவரான மார்க் ஸ்போரோவ்ஸ்கி (Mark Zborowski), SWP தலைவர் ஜேம்ஸ் கனனின் செயலாளர் சில்வியா காலன் (Sylvia Callen); மற்றும் படுகொலை செய்யப்பட்ட நேரத்தில் ட்ரொட்ஸ்கியின் செயலாளர்களில் ஒருவராகவும் பின்னர் FBI இன் உளவாளியாகவும் மாறிய ஜோசப் ஹேன்சன் (Joseph Hansen) ஆகியோர்களும் இந்த வலையமைப்பில் அடங்குவர்.
பாதுகாப்பும் நான்காம் அகிலமும் குறித்து, பேச்சாளர்கள் முக்கியமான திருப்புமுனைகளைப் பற்றி பேசினர்: குறிப்பாக 1975 இல், இந்த விசாரணை தொடங்கப்படுவதற்கு இட்டுச் சென்ற பின்னணி; ட்ரொட்ஸ்கியைப் படுகொலை செய்வதற்கான சதியில் சம்பந்தப்பட்ட GPU முகவர்களின் நடவடிக்கைகளை அம்பலப்படுத்தும் முக்கிய ஆவணங்களின் பிரசுரம்; சோசலிச தொழிலாளர் கட்சியின் தலைவரான ஜோசப் ஹான்சனுக்கும் GPU மற்றும் FBI இரண்டிற்கும் இடையிலான சந்திப்புகள் குறித்த ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டமை; மற்றும் வேர்க்கர்ஸ் லீக்கின் (சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடி) உறுப்பினரான ரொம் ஹெனெஹன் (Tom Henehan) 1977ல் படுகொலை செய்யப்பட்டதும் அடங்கும்.
GPU மற்றும் FBI உடனான ஹான்சனின் உறவுகள் குறித்தும், சில்வியா காலென் GPU இன் ஒரு முகவராக இருந்த பாத்திரத்தை கட்சி மூடிமறைத்தது குறித்தும் கேள்விகள் கேட்டதற்காக சோசலிச தொழிலாளர் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட அலன் கெல்ஃபான்ட் (Alan Gelfand)1979 இல் தொடங்கி வைத்த கெல்ஃபான்ட் வழக்கின் (Gelfand Case) தோற்றுவாய்கள் மற்றும் அபிவிருத்தியை மூன்று விரிவுரைகள் விவரித்தன. SWP தலைமை மற்றும் அரசின் ஒருங்கிணைந்த எதிர்ப்பை எதிர்கொண்ட கெல்ஃபாண்ட், அரசாங்கத்தின் முகவர்களை வெளிப்படுத்தவும், கட்சியிலிருந்து அவர்களை வெளியேற்றவும் கட்டாயப்படுத்த முயன்றார். வழக்கின் போது எடுக்கப்பட்ட வாக்குமூலங்கள், SWP தலைமை அரசாங்க முகவர்களால் சமரசம் செய்யப்பட்டதற்கான உறுதியான ஆதாரங்களை வழங்கின. மேலும் காலன் ஒரு GPU முகவர் என்பதை உறுதிப்படுத்தும் நடுவர் மன்ற சாட்சியத்துடன் விசாரணை முடிந்தது.
பாதுகாப்பும் நான்காம் அகிலமும் என்ற விசாரணையானது ஸ்ராலினிச மற்றும் ஏகாதிபத்திய அரசின் செயல்பாடுகளை மட்டுமல்ல, அதைத் தடுக்கவும் இழிவுபடுத்தவும் முயன்ற அரசியல் சக்திகளையும் அம்பலப்படுத்தியது. நோர்த் தனது அறிமுக அறிக்கையில் விளக்கியது போல்:
அனைத்துலகக் குழுவின் உறுப்பினர்களைப் பயிற்றுவிப்பதற்கான அடிப்படையை உருவாக்கிய நான்காம் அகிலத்தின் வரலாற்று அனுபவம், அரசியல் கோட்பாடுகள் மற்றும் வேலைத்திட்ட அடித்தளங்கள் மீதான ஆர்வம் என்பன, சோசலிச தொழிலாளர் கட்சி மற்றும் பப்லோவாத ஐக்கிய செயலகத்திற்குள் நிலவிய முரட்டுத்தனமான நடைமுறைவாதம், சந்தர்ப்பவாதம் மற்றும் சிடுமூஞ்சித்தனமான வெறுப்புணர்வு ஆகியவற்றிற்கு நேர் எதிரானதாக இருந்தது. ... இந்த அமைப்புகளின் தலைவர்கள், அனைத்துலகக் குழுவால் வெளிக்கொணரப்பட்ட ஆதாரங்களால், எவ்வளவுதான் கண்டனத்திற்குரியவர்களாக இருந்தாலும், அவர்களால் அசைக்க முடியவில்லை.
பாதுகாப்பும் நான்காம் அகிலமும் என்ற விசாரணை தொடங்கப்பட்டு ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னர், அது காலத்தின் சோதனையை வெற்றிகரமாக எதிர்கொண்டு நிலைத்திருக்கிறது. சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்ட பின்னர் வெளியிடப்பட்ட தகவல்கள் உட்பட புதிய ஆதாரங்களால் அதன் முடிவுகள் உறுதிப்படுத்தப்பட்டு பலப்படுத்தப்பட்டுள்ளன. ஒரு காவலராக சேவையாற்ற மெக்சிகோவுக்கு அனுப்பப்பட்ட சோசலிச தொழிலாளர் கட்சியின் ஒரு அங்கத்தவரான ரோபர்ட் ஷெல்டன் ஹார்ட்டின் பாத்திரம் போன்ற படுகொலை சதியின் இன்றியமையாத விபரங்களை இந்த ஆவணங்கள் அம்பலப்படுத்தின, உண்மையில் அவர் ஒரு ஸ்ராலினிச முகவராக இருந்தார். கடந்த ஐந்து ஆண்டுகளில், பள்ளியில் மீளாய்வு செய்யப்பட்ட கூடுதல் ஆதாரங்கள், சில்வியா அகலோஃப் வகித்த பாத்திரத்தின் மீது புதிய வெளிச்சம் பாய்ச்சியுள்ளது, ரமோன் மேர்க்கடேர் உடனான சில்வியா அகலோவ்வின் (Sylvia Ageloff) தனிப்பட்ட உறவு ட்ரொட்ஸ்கியின் படுகொலைக்கு உதவுவதற்கு பயன்படுத்தப்பட்டிருந்தது.
பாதுகாப்பிற்கான போராட்டம் தற்போதைய அரசியல் நிலைமைக்கு நேரடியானதும் அவசரமானதுமாகும். அமெரிக்காவில் ஒரு பாசிச சர்வாதிகாரத்தை நிறுவ நடந்து வரும் சூழ்ச்சியில் ஒரு இன்றியமையாத கட்டமாக, வாஷிங்டன் டிசியிலுள்ள வீதிகளில் ட்ரம்ப் இராணுவத்தை நிலைநிறுத்துவதற்கு வெறும் ஒருசில நாட்களுக்கு முன்பாக சோசலிச சமத்துவக் கட்சியின் 2025 கோடைப் பள்ளி நிறைவடைந்தது. ஜனநாயக உரிமைகள் மீதான இந்த தாக்குதல், காஸாவில் நடந்து வரும் இனப்படுகொலை, ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போர் மற்றும் சீனாவுக்கு எதிரான போர் தயாரிப்புகள் தீவிரமடைந்து வருவது ஆகியவற்றுடன் சேர்ந்து கட்டவிழ்ந்து வரும் ஓர் உலகளாவிய போக்கின் பாகமாக உள்ளது. ஒவ்வொரு நாட்டிலும், ஆளும் தன்னலக்குழுக்கள், தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரங்களையும் உரிமைகளையும் அழிக்கும் நோக்கம் கொண்ட ஒரு சமூக எதிர்ப்புரட்சி வேலைத்திட்டத்தைப் பின்பற்றி வருகின்றன.
அதே நேரத்தில், முதலாளித்துவத்தின் ஆழமான நெருக்கடியினால் உந்துதல் பெற்று, தொழிலாள வர்க்கம் மற்றும் இளைஞர்களிடையே பாரிய எதிர்ப்பு வளர்ந்து வருகிறது. எவ்வாறாயினும், தீர்மானகரமான கேள்வியானது தலைமை பற்றியதாகும். அத்தகையதொரு தலைமையைக் கட்டியெழுப்புவதானது, பாதுகாப்பும் நான்காம் அகிலமும் என்ற விசாரணையின் மூலோபாய படிப்பினைகள் உட்பட, சோசலிச இயக்கத்தின் வரலாற்றை முன்னுக்குக் கொண்டுவருவதுடன் பிரிக்கவியலாமல் பிணைந்துள்ளது. ட்ரொட்ஸ்கி படுகொலை செய்யப்பட்டு 85வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையிலும், உண்மையை வெளிக்கொணர நடத்தப்பட்ட போராட்டத்தின் அரசியல் படிப்பினைகளை ஆழப்படுத்தவும் வரவிருக்கும் மாதங்களில் விரிவுரைகள் மற்றும் கூட்டங்களுக்கு, இந்த கோடைப் பள்ளியில் பரிசீலனை செய்யப்பட்ட சான்றுகளின் தொகுப்பு அடிப்படையாக அமையும்.
அமெரிக்காவிலும் உலகெங்கிலும் தற்போது நடைபெற்று வரும் அரசியல் போராட்டங்களுக்கு அத்தியாவசிய தயாரிப்பாக, வரும் வாரங்களில் வெளியிடப்பட உள்ள சோசலிச சமத்துவக் கட்சியின் 2025 கோடைக்காலப் பள்ளியின் விரிவுரைகளை கவனமாகப் படிக்குமாறு உலக சோசலிச வலைத் தளம் அனைத்து வாசகர்களையும் வலுவாக ஊக்குவிக்கிறது.