உக்ரேன் தொடர்பாக அலாஸ்காவில் ட்ரம்ப்-புட்டின் பேச்சுவார்த்தைகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

ஸ்கொட்லாந்தின் டர்ன்பெர்ரியில் உள்ள ட்ரம்ப் டர்ன்பெர்ரி கோல்ஃப் மைதானத்தில் அமெரிக்காவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தத்தை எட்டிய பின்னர், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஒரு கடிதத்தை படிக்கிறார், ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் அதைக் செவி சாய்க்கிறார். ஜூலை 27, 2025 ஞாயிற்றுக்கிழமை [AP Photo/Jacquelyn Martin]

உக்ரேனில் நேட்டோ-ரஷ்யா போர் குறித்த சமாதான பேச்சுவார்த்தைகளுக்காக, அலாஸ்காவில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டினை சந்திக்க இருப்பதாக வெள்ளிக்கிழமை ட்ரம்ப் திடீரென அறிவித்ததில் இருந்து, ஐரோப்பிய அதிகாரிகள் ரஷ்யாவுக்கு எதிராக ஒரு கடுமையான நிலைப்பாட்டைத் தொடர அழைப்பு விடுத்துள்ளதோடு, ஐரோப்பிய ஊடகங்கள் அந்த பேச்சுவார்த்தைகளைக் கண்டித்துள்ளன.

ஐரோப்பிய ஊடகங்கள் உக்ரேனில் சமாதானம் குறித்த எந்தவொரு பேச்சுக்கும் சளைக்காமல் விரோதமாக உள்ளன. இது “உக்ரேனிலும் ஐரோப்பா எங்கிலும் எச்சரிக்கை மணியை அடித்துள்ளது” என்று இலண்டனின் பைனான்சியல் டைம்ஸ் பத்திரிகை எழுதியது. அதேவேளையில், பாரிஸில் லூ மொன்ட் பத்திரிகை, அதை “ஒரு பொறி” என்று கண்டித்தது. ஜேர்மனியின் டெர் ஸ்பீகல் பத்திரிகையானது தீர்மானகரமான கேள்வியை எழுப்பி, “ஐரோப்பிய தலைநகரங்களில், மக்கள் இப்போது தங்களைத் தாங்களே கேட்டுக் கொள்கின்றனர்: பொறுமையற்ற ட்ரம்ப் இன்னும் ஐரோப்பிய நலன்களைப் புறக்கணிக்காமல் இருக்க வற்புறுத்த முடியுமா? என்று எழுதியது.

எவ்வாறிருப்பினும், ட்ரம்பின் சமீபத்திய கொள்கை மாற்றத்திற்கு விடையிறுப்பாக ஐரோப்பிய அரசாங்கங்கள் இப்போதைக்கு, உக்ரேனில் அவற்றின் நலன்களை எவ்வாறு பின்தொடர்வது என்பது குறித்து விவாதித்து வருகின்றன. கடந்த ஆண்டு, பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் உக்ரேனில் பிரெஞ்சு தரைப்படை துருப்புகளை நிலைநிறுத்துவதற்கு நிதியாதாரம் திரட்ட சமூக வெட்டுக்களைத் தீவிரப்படுத்த அழைப்பு விடுத்தார். இந்தாண்டு, பிரிட்டனும் பிரான்சும் அமெரிக்க உதவியின்றி உக்ரேனில் ரஷ்யாவை எதிர்த்துப் போரிட தயாராக இருப்பதாக கூறப்படும் ஐரோப்பிய அரசுகளின் “விருப்பமுள்ள கூட்டணியை” உருவாக்கிய பின்னர், ஜேர்மன் சான்சிலர் பிரெட்ரிக் மெர்ஸ் ரஷ்யா எங்கிலும் நீண்ட தூர குண்டுவீச்சுக்களை நடத்துவதற்காக அவரது டாரஸ் ஏவுகணைகளை உக்ரேனுக்கு அனுப்ப அழைப்பு விடுத்தார்.

ட்ரம்பின் சமீபத்திய அறிவிப்புக்குப் பின்னர், ஐரோப்பிய அதிகாரிகள் பாசாங்குத்தனமாக அமைதி மற்றும் அட்லாண்டிக்-கடந்த ஐக்கியம் குறித்து பேசி வருகின்றனர். நேற்று மாலை ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு அமைச்சர்களின் ஒரு உத்தியோகபூர்வமற்ற காணொளி மாநாட்டிற்குப் பின்னர், ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு கொள்கைத் தலைவர் காஜா கல்லாஸ் ஒரு சுருக்கமான அறிக்கையை வெளியிட்டார். அதில் அவர் கூறியதாவது:

உக்ரேன் விவகாரத்தில், அட்லாண்டிக் கடந்த ஒற்றுமை, உக்ரேனுக்கு ஆதரவு, ரஷ்யா மீதான அழுத்தம் ஆகியவை தான் இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வந்து ஐரோப்பாவில் எதிர்கால ரஷ்ய ஆக்கிரமிப்பைத் தடுக்கும் வழிகளாகும். ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு அமைச்சர்கள் ஒரு நியாயமான சமாதானத்திற்கு வழிவகுக்கும் அமெரிக்க நடவடிக்கைகளுக்கு ஆதரவைத் தெரிவித்தனர். அதே நேரத்தில், ரஷ்யாவிற்கு எதிராக கூடுதல் பொருளாதாரத் தடைகளை விதிக்கவும், உக்ரேனுக்கான இராணுவ ஆதரவை அதிகரித்து, அதன் நிதித் தேவைகளையும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கான செயல்முறைக்கு அதிக ஆதரவு ஆகியவற்றிலும் நாங்கள் பணியாற்றி வருகிறோம்.

உக்ரேனில் ஒரு தற்காலிக போர்நிறுத்தத்திற்கான அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் சக்திவாய்ந்த கன்னைகளின் முன்மொழிவுகளை கல்லாஸின் முன்மொழிவுகள் எதிரொலிக்கின்றன. இது, இதர போர்களுக்கு பணம் மற்றும் ஆதார வளங்களை விடுவிக்கவும், ரஷ்யாவிற்கு எதிரான மேலதிக நடவடிக்கைக்கு உக்ரேனை ஒரு இராணுவத் தளமாக மிகவும் திறம்பட தயார் செய்யவும் உதவுகிறது. இத்தகைய கடுமையான கொள்கைக்கான கோரிக்கைகள், ட்ரம்புக்கு முன்பிருந்த பைடெனின் கீழ் ரஷ்யாவுடனான போரை வழிநடத்திய ஜனநாயகக் கட்சியிடமிருந்து மட்டுமல்ல, மாறாக செனட்டர் லிண்ட்சே கிரஹாம் போன்ற அதி தீவிர வலதுசாரி குடியரசுக் கட்சியினரிடம் இருந்தும் வருகின்றன.

கடந்த ஞாயிறன்று, கிரஹாம், “புட்டினை சந்திக்க ட்ரம்ப் ஒரு வலுவான நிலையில் இருந்து செல்லப் போகிறார், இந்தப் போரை கௌரவமாக முடிவுக்குக் கொண்டுவர ஐரோப்பா மற்றும் உக்ரேனிய தேவைகளை அவர் கவனிக்கப் போகிறார்” என்று கூறினார். மேலும், “ஐரோப்பா கண்டத்தில் மிகவும் ஆபத்தான இராணுவத்தால் ரஷ்யா தடுக்கப்படும்” வகையில், உக்ரேனிய இராணுவத்தை ஆயுதபாணியாக்க கிரஹாம் அழைப்பு விடுத்தார். உக்ரேனில் எதிர்காலத்தில் ஏற்படும் எந்தவொரு மோதலும் நேட்டோவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே முழுமையான போரை விரைவாகத் தூண்டும் வகையில், உக்ரேனில் நேட்டோ துருப்புக்களை “பொறிகளாக” நிறுத்துவதையும் அவர் ஆதரித்தார்.

இந்தக் கருத்துக்கள், முதலில் பிற்போக்குத்தனமான அமெரிக்க மற்றும் ரஷ்ய ஜனாதிபதிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகளின் திவால்நிலையை வெளிப்படுத்துகின்றன. இவை எதையும் தீர்க்கப் போவதில்லை. ட்ரம்பும் புட்டினும் சந்திக்க தயாரிப்பு செய்து வருகின்ற நிலையில், நேட்டோவும் ரஷ்யாவும் ஓர் இராணுவ விரிவாக்கத்தின் விளிம்பில் தள்ளாடிக் கொண்டிருக்கின்றன. இது கடந்த மாதம் ரஷ்யாவின் காலினின்கிராட் பிராந்தியத்தைக் கைப்பற்றுவதாக அமெரிக்க ஜெனரல் கிறிஸ் டொனாஹூ விடுத்த அச்சுறுத்தலில் அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டது.

ட்ரம்பும் புட்டினும் ஒரு ஆட்டங்காணும் போர்நிறுத்தத்தில் கையெழுத்திட்டாலும் கூட, நேட்டோ ஏகாதிபத்திய சக்திகள் அதை, உக்ரேனிலோ அல்லது வேறு எங்காவது அடுத்த வல்லரசு போருக்கு மீண்டும் ஆயுதம் ஏந்துவதற்கான ஒரு சந்தர்ப்பமாகப் பயன்படுத்திக் கொள்ளும்.

ஐரோப்பிய ஒன்றியத்தைப் பொறுத்தவரை, அது ஒரு இராணுவவாதக் சதிக்குழுவாக செயல்பட்டு வருகிறது. இது, ஐரோப்பிய மக்களிடையே ரஷ்யாவுடனான போருக்கு மிகப்பெரிய எதிர்ப்பு இருந்து வருகின்ற போதிலும், மீண்டும் ஆயுதம் ஏந்தி அதன் இராணுவ வலிமையை நிலைநாட்டத் தீவிரமாக உள்ளது.

கிரெம்ளின் வசமுள்ள அனைத்து உக்ரேனிய பிராந்தியங்களையும் மீண்டும் கைப்பற்றுவதற்கான அவற்றின் வாக்குறுதிகளில் இருந்து ஐரோப்பிய ஒன்றிய சக்திகள் பின்வாங்கியிருப்பது, போரை நியாயப்படுத்த அவை கூறிய பொய்களை அம்பலப்படுத்துகிறது. ஐரோப்பியத் தொழிலாளர்கள் மீள்ஆயுதமயமாக்கலுக்காக நூற்றுக்கணக்கான பில்லியன் யூரோக்களை தியாகம் செய்ய வேண்டுமெனவும், உக்ரேனிய சுதந்திரத்திற்கான ஒரு சமரசமற்ற தார்மீக போராட்டம் என்ற பெயரில் ரஷ்யாவுடன் முழுமையான போரின் அபாயத்தை எதிர்கொள்ள வேண்டுமெனவும் அவர்கள் கோரினர்.

உண்மையில், அவர்கள் உக்ரேனைச் சூறையாடத் தொடங்கியுள்ளனர். வாஷிங்டனிடமிருந்து சுயாதீனமாக, பெரும் வல்லரசு போர்களை நடத்த முடியாமல், வாஷிங்டனுடன் சிக்கலான நேட்டோ “கூட்டணி” மூலம் அவர்கள் உக்ரேனில் தலையிட்டனர். இது ஒவ்வொரு அடியிலும் பொறிவதற்கு அச்சுறுத்துகிறது. உக்ரேனில் தேர்தல்களை இரத்து செய்து, அதி தீவிர வலதுசாரிகளைக் கொண்ட உளவுத்துறை மற்றும் பொலிஸ் சேவைகளின் ஒடுக்குமுறையின் அடிப்படையில் ஒரு சர்வாதிகாரியாக ஆட்சி செய்துவரும் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கியின் ஊழல்மிக்க, அதி தீவிர வலதுசாரிகளின் ஆட்சியை அவர்கள் ஆதரித்து வருகின்றனர்.

இது ஒரு பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. உக்ரேனில் போருக்கு பாரிய எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. அதேவேளையில், அங்கு இறப்பு எண்ணிக்கை நூறாயிரக்கணக்கில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று, உக்ரேனியர்களில் 65 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் இரத்தக்களரியை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யாவுடன் விரைவான சமாதானத்தை ஆதரிக்கின்றனர் என்று கருத்துக்கணிப்புகள் எடுத்துக் காட்டுகின்றன. மேலும் ஜெலென்ஸ்கி தனது சொந்த அதிகாரிகளை இலக்கு வைத்து ஊழல் விசாரணைகளை இரத்து செய்ததற்கு எதிராக உக்ரேன் எங்கிலும் பாரிய போராட்டங்கள் வெடித்துள்ளன.

அனைத்திற்கும் மேலாக, ஐரோப்பிய ஒன்றியம் ஜெலென்ஸ்கி ஆட்சியை ஆயுதபாணியாக்க நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்களை கொட்டிய பிறகும், உக்ரேனில் நேட்டோவின் தலையீட்டை இயக்குகின்ற முக்கிய பொருளாதார மற்றும் மூலோபாய நலன்களைப் பாதுகாக்க அது தவறி உள்ளது. துரதிர்ஷ்டவசமாக ஐரோப்பிய ஒன்றிய ஏகாதிபத்திய நலன்களுக்கு, இந்த இலக்குகள் முதன்மையாக உக்ரேனின் ரஷ்ய மொழி பேசும் பகுதிகளில் உள்ளன. அவை கிரெம்ளினால் கைப்பற்றப்பட்டுள்ளன. இன்று, கிரிமியாவில் செவஸ்டோபோலில் உள்ள கடற்படைத் தளமும், டொன்பாஸிலுள்ள அரிய மண் தாதுக்கள் மற்றும் பிற கனிம வளங்களின் முக்கிய இருப்புக்களும் ரஷ்யாவின் கைகளில் உள்ளன.

உக்ரேனில் வாஷிங்டன்-ஐரோப்பிய ஒன்றிய “ஐக்கியம்” என்பது ஒரு சிங்கத்திற்கும் கழுதைப்புலிக் கூட்டத்திற்கும் இடையிலான “ஐக்கியத்தை” ஒத்திருக்கிறது. இவை இரண்டும் ஒரே இரையைப் பின்தொடர்கின்றன. வாஷிங்டனால் கட்டவிழ்த்து விடப்பட்ட அதிகரித்து வரும் உலகளாவிய வர்த்தகப் போருக்கு மத்தியில், அவர்கள் முடிந்தவரை கொள்ளையடிக்க போட்டியிடுகிறார்கள். இது, உக்ரேனில் ட்ரம்ப் “ஐரோப்பிய நலன்களை புறக்கணிக்கக்கூடும்” என்ற டெர் ஸ்பீகல் பத்திரிகையின் கவலையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

வாஷிங்டனும் ஐரோப்பிய ஒன்றிய சக்திகளும் போருக்கு நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்களை ஒதுக்க ஓய்வூதியங்கள், சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் பிற அத்தியாவசிய சமூகத் திட்டங்களைக் வெட்டிக் குறைத்துள்ளன. 2023 இல் நேட்டோ-ரஷ்யா போர் தொடங்கியதில் இருந்து உக்ரேனுக்காக குறைந்தபட்சம் 212 பில்லியன் டாலர் செலவிட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் கூறுகின்ற அதேவேளையில், குறைந்தபட்சம் 175 பில்லியன் டாலர் செலவிட்டுள்ளதாக வாஷிங்டன் கூறுகிறது. உக்ரேனின் மக்கள் இரத்தம் தோய்ந்து, உக்ரேனின் நேட்டோ கைப்பாவை ஆட்சி தோல்வியை நோக்கிச் செல்லும்போது, வாஷிங்டனும் ஐரோப்பிய ஒன்றியமும் உக்ரேனிலிருந்து முடிந்தவரை பிடுங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

உக்ரேனிய சுரங்க வருவாய்களுக்கு வாஷிங்டனுக்கு முன்னுரிமை அளிக்க ஜெலென்ஸ்கியை வலுவாக வற்புறுத்திவரும் ட்ரம்ப், அமெரிக்க போர்க்கால உதவிக்கு அமெரிக்காவிற்கு 500 பில்லியன் டாலர்களை திருப்பிச் செலுத்த வேண்டும் என்றும் கோரியுள்ளார். இது முதலில், உக்ரேனில் எஞ்சியிருப்பதை கடன் பொறியில் சிக்க வைக்கும். இது, ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகளிடையே கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது, அவர்கள் உக்ரேனின் நலனில் அக்கறை கொண்டிருப்பதால் அல்ல, மாறாக உக்ரேனின் கனிம வளங்களை சுரண்டுவதற்கான அவர்களின் சொந்த திட்டங்களை வெட்டுவதால் ஏற்படுகிறது.

அமெரிக்காவும் முக்கிய ஐரோப்பிய அரசாங்கங்களும் தொழிலாள வர்க்கத்தை இலக்கில் வைத்து பல்லாயிரக்கணக்கான அல்லது நூற்றுக்கணக்கான பில்லியன் சிக்கன நடவடிக்கைகளைத் திட்டமிடும் அதே வேளையில், உக்ரேனில் போராட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், தொழிலாள வர்க்கத்தில் ஏகாதிபத்தியப் போருக்கு எதிராக ஒரு சர்வதேச இயக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கான நிலைமைகள் உருவாகி வருகின்றன. உக்ரேனிலோ அல்லது அங்கு ஒரு போர்நிறுத்தம் ஸ்தாபிக்கப்பட்டாலும், சீனா, ஈரான் போன்ற அமெரிக்க அல்லது ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தின் மற்றொரு இலக்குக்கு எதிராக, அல்லது உலகின் வேறெங்கிலும் ரஷ்யாவுக்கு மிக நெருக்கமாக இருப்பதாக அவை கருதும் ஏனைய சக்திகளுக்கு எதிராக, போர் மேலும் தீவிரமடைவதைத் தடுப்பதற்கான ஒரே வழி இதுவாகும்.

இது, சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்குள் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தைக் கட்டியெழுப்புவதைச் சார்ந்துள்ளது. 30 ஆண்டுகளுக்கும் மேலாக, ஸ்ராலினிசம் சோவியத் யூனியனைக் கலைத்து கிழக்கு ஐரோப்பா முழுவதும் முதலாளித்துவத்தை மீட்டெடுத்தது பேரழிவில் முடிந்தது. பிற்போக்குத்தனமான ரஷ்ய மற்றும் உக்ரேனிய முதலாளித்துவ ஆட்சிகள் ஏகாதிபத்தியத்தால் தூண்டப்பட்ட சகோதரத்துவப் போரில் மூழ்கியிருந்தாலும், கிழக்கு ஐரோப்பா நேட்டோ ஏகாதிபத்தியப் போருக்கான வறிய அரங்கமாக ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைக்கப்பட்டுள்ளது.

அடிப்படை சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதும், இன்னும் பேரழிவு தரும் போர்களைத் தவிர்ப்பதும், ஐரோப்பாவிலும் சர்வதேச அளவிலும் உள்ள தொழிலாளர்களை ஒரு முன்னோக்குடன் ஆயுதபாணியாக்குவதைச் சார்ந்துள்ளது. முதலாளித்துவ தன்னலக்குழுவின் கைகளில் இருந்து அதிகாரத்தைப் பறித்து, முதலாளித்துவ சுரண்டலை முடிவுக்குக் கொண்டு வந்து ஒரு சோசலிச சமுதாயத்தைக் கட்டியெழுப்புவதற்கு இது அவசியமாகும்.

Loading