இலங்கை அரசாங்கம் கல்வியியலாளர் சேவை விரிவுரையாளர்களின் சம்பளம் மற்றும் சேவை முரண்பாடுகளை தொடர்ந்து அலட்சியம் செய்கின்றது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்

ஜூலை 14 அன்று இசுருபாயவில் உள்ள கல்வி அமைச்சின் முன் போராட்டம் நடத்திய இலங்கை தேசிய கல்வி பீடம், ஆசிரியர் கல்லூரிகள் மற்றும் ஆசிரியர் தொழில் மேம்பாட்டு மையங்களைச் சேர்ந்த விரிவுரையாளர்கள் உட்பட ஆசிரியர் கல்வியியளர்களை அச்சுறுத்துவதற்காக அரசாங்கம் நூற்றுக்கணக்கான பொலிசாரை நிறுத்தியது. இந்த போராட்டத்திற்கு இலங்கை கல்வியியலாளர் சேவை விரிவுரையாளர்கள் சங்கம் (SLTESA) அழைப்பு விடுத்திருந்தது.

போராட்டக்காரர்களையும் அவர்களின் பதாகைகளையும் பொதுமக்களால் பார்க்க முடியாதவாறு அவர்களுக்கு முன்னால் பொலிசார் வரிசையாக நிறுத்தப்பட்டனர். ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) தலைமையிலான தேசிய மக்கள் சக்தி (தே.ம.ச.) அரசாங்கம் அதன் சிக்கன நடவடிக்கை திட்டத்திற்கு எதிரான எந்தவொரு எதிர்ப்பையும் அடக்குவதற்குத் தயாராக இருப்பதை இந்த பொலிஸ் நடவடிக்கை நிரூபித்தது.

திங்கட்கிழமை 'மக்கள் பார்வை தினம்' என்பதால், பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய நிச்சயமாக அமைச்சுக்கு வருவார் என்று தொழிற்சங்கத் தலைவர்கள் உறுப்பினர்களிடம் கூறியிருந்த போதிலும், அமரசூரியவோ அல்லது அமைச்சின் செயலாளரோ அங்கு வரவில்லை.

ஆட்சிக்கு வந்த சில மாதங்களில் -தோராயமாக ஒரு மாதத்திற்கு ஒரு முறை- அமரசூரிய மற்றும் பிற அதிகாரிகளுடன் தாம் ஏழு முறை பலனற்ற பேச்சுவார்த்தைகளை நடத்தியதாக இலங்கை கல்வியியலாளர் சேவை விரிவுரையாளர்கள் சங்கத்தின் தலைமை முந்தைய நாள் ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தது. தொழிற்சங்கத்தின் கோரிக்கைகள் குறித்து மேலும் கலந்துரையாட தான் தயாராக இல்லை என்று அமரசூரிய சுட்டிக்காட்டியிருந்தார்.

ஜூலை 14 அன்று பத்தரமுல்லவில் உள்ள கல்வி அமைச்சின் முன் போராட்டம் நடத்திய கல்வி விரிவுரையாளர்களின் போராட்டத்தை தடுத்து நிற்கும் பொலிஸ்.

தொழிற்சங்கத் தலைமையானது கோபமடைந்த உறுப்பினர்களை சமாதானப்படுத்த, 'பாரிய போராட்டத்தை' தொடர்ந்து நடத்துவதாக ஊடகங்களுக்குத் தெரிவித்தது. அந்த மிகப்பெரிய போராட்டம் என்ன என்பதை தொழிற்சங்கத் தலைவர்கள் விளக்கவில்லை. சர்வதேச நாணய நிதியம் விதித்துள்ள வரம்புகளுக்குள்ளேயே அரசாங்கம் பணத்தைச் செலவிடுவதால் வேறு எந்த வகையான போராட்டமும் கல்வி அமைச்சரை உந்தும் என்று நினைப்பது ஒரு மாயை ஆகும்.

பொலிஸ் முற்றுகையிட்ட போதிலும், விரிவுரையாளர்கள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அமைச்சின் முன் நின்று கோஷங்களை எழுப்பினர். அவர்கள் காட்சிப்படுத்திய பதாகைகளில், 'உண்மையான சம்பளத்தை இழந்து 43 மாதங்களுக்குப் பிறகு, தீர்வுகள் எங்கே?', 'ஆசிரியர்களை மதிக்காமல் தரமான கல்வி இல்லை', 'இது ஆசிரியர் கல்வியின் அழிவா?', 'தடையற்ற பதவி உயர்வுகள் எங்களுக்கு கிடையாதா?' போன்ற சுலோகங்கள் எழுதப்பட்டிருந்தன.

ஆசிரியர் பயிற்றுனர்கள் மற்றும் ஆசிரியர் விரிவுரையாளர்கள் நீண்ட காலமாக கற்பித்தல் சேவையில் பணியாற்றி, ஒரு தேர்வின் மூலம் நிர்வாக நிலை பதவிகளுக்கு நியமிக்கப்படுகிறார்கள். நாடு முழுவதும் உள்ள 20 தேசிய கல்வி பீடங்கள், 8 ஆசிரியர் கல்லூரிகள் மற்றும் 112 ஆசிரியர் தொழில் மேம்பாட்டு மையங்களில் 1,500 விரிவுரையாளர்கள் குழு தற்போது பணியாற்றி வருகிறது.

போராட்டக்காரர்களின் கோரிக்கைகளில் இரண்டு பிரதான கோரிக்கைகள் உள்ளன. முதலாவதாக, தடையற்ற பதவி உயர்வு செயல்பாட்டில் ஆசிரியர் கல்வி சேவையைச் சேர்க்க நடவடிக்கை எடுக்காமை. ஒரு பொது நிர்வாக தர அதிகாரி (பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வை அனுமதிக்கும்) முதல் தரத்தில் சேர்வதற்கு 12 ஆண்டுகள் ஆகும் அதே வேளை, ஆசிரியர் கல்வி சேவை விரிவுரையாளர்களுக்கு 17 ஆண்டுகள் ஆகும் என்று போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டினர். பொது நிர்வாக தரத்தைப் போலவே அதை 12 ஆண்டுகளாகக் குறைக்க வேண்டும் என்று  அவர்கள் கோரினர்.

கல்வி அமைச்சின் முன் கல்வி விரிவுரையாளர்கள் போராட்டம் நடத்திய போது

இரண்டாவது கோரிக்கையானது ஆசிரியர் சம்பள முரண்பாட்டை தீர்ப்பதாகும்: கோவிட்-19 தொற்றுக்கு மத்தியில் ஆசிரியர்கள் முன்னெடுத்த போராட்டங்கள் காரணமாக அரச பாடசாலைகளில் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட அற்ப சம்பள உயர்வுகள், அதே போல் 2025 ஆம் ஆண்டில் ஆசிரியர்கள் உட்பட அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட அற்ப சம்பள உயர்வுகள், ஆசிரியர் கல்வியியல் விரிவுரையாளர்களுக்கு வழங்கப்படவில்லை. அதாவது, இந்தக் குழுவினருக்கு அவர்கள் பெறும் பதவி உயர்வுகளுக்கு ஏற்ப சம்பள உயர்வு கிடைக்கவில்லை.

சர்வதேச நாணய நிதியத்தின் கொடூரமான சிக்கனத் திட்டத்தை செயல்படுத்தும்  திசாநாயக்க-அமரசூரிய அரசாங்கம், கல்வித் துறையில் நிர்வாக ஊழியர்களின் சம்பளம் மற்றும் சேவை சம்பந்தமான நியாயமான கோரிக்கைகளைத் தொடர்ந்து புறக்கணிப்பதன் மூலம், தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கத் தயாராக இல்லை என்பதைக் காட்டுகிறது. பல தசாப்தங்களாக பல்வேறு ஆளும் வர்க்கங்களால் தொழிலாளர்களின் ஊதியங்கள் மற்றும் வேலை நிலைமைகள் நசுக்கப்பட்டு வந்துள்ளன. இப்போது இந்த வேலையை ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கம் நிபந்தனையின்றி பொறுப்பேற்றுக்கொண்டுள்ளது.

இந்த துன்பகரமான உண்மையை உறுப்பினர்களுக்கு மூடி மறைக்கும் தொழிற்சங்கத் தலைவர்கள், அதற்கு பதிலாக, தர அடிப்படையிலான மோதல்களைத் தூண்டி விடுவதன் மூலம் தொழிலாளர்களின் ஒன்றிணைந்த போராட்டத்தைத் தடுக்க செயற்படுகின்றனர். ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டுவருவதற்காக லட்சக்கணக்கான ஆசிரியர்கள் மற்றும் கல்வித் தொழிலாளர்களின் ஆதரவைத் திரட்டுவதில் இந்தத் தொழிற்சங்கங்கள் பெரும் பங்காற்றின.

இப்போதும், தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குக் கல்வி அமைச்சரின் அல்லது பிற அதிகாரிகளின் தனிப்பட்ட திறமையின்மையே காரணம் என்றும், மாறாக, ஜனாதிபதி மற்றும் பிரதமர் உட்பட அரசாங்கம் முன்னெடுக்கும் சர்வதேச நாணய நிதிய கொள்கைகள் காரணம் அல்ல, என்றே அவர்கள் தங்கள் உறுப்பினர்களை நம்ப வைக்க முயற்சிக்கின்றனர்.

27 ஆண்டுகளாக நிர்வாகப் பணியில் இருக்கும், பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு கல்வி நிர்வாகி, உலக சோசலிச வலைத் தள நிருபரிடம் பேசும் போது, தானும் ஏராளமான மக்களும் ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டுவருவதற்கு மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வாக்களித்ததாகக் கூறினார். 'இப்போது அரசாங்கம் எங்களை நடத்தும் விதத்தைப் பாருங்கள், இன்று கல்வி அமைச்சர் எங்கள் கோரிக்கைகளைப் பற்றி கலந்துரையாடக் கூட வரவில்லை. அவர்கள் இப்படித்தான் எங்களை நடத்துகிறார்கள்,' என்று அவர் கூறினார்.

பிள்ளைகளின் கல்விக்காக ஒரு பெரிய தொகை செலவிடப்படுவதாகவும், சுகாதாரம் உட்பட பொருட்கள் மற்றும் சேவை கட்டண விலைகள் உயர்ந்து வரும் சூழ்நிலையில், சம்பள உயர்வு வழங்கப்படாததால் தான் ஒரு கடினமான சூழ்நிலையில் இருப்பதாகவும் அவர் விளக்கினார்.

'முந்தைய அரசாங்கங்களால் வெறுப்படைந்த பின்னர், இந்த அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டுவர நாங்கள் வாக்களித்தோம். இது ஒரு சோசலிச அரசாங்கம் என்ற மாயை எனக்கு இல்லை என்றாலும், முந்தைய அரசாங்கங்களை விட இது மக்களுக்கு அதிகமாக வேலை செய்யும் என்று நினைத்தேன். ஆனால் இப்போது அதெல்லாம் பொய் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது,' என்று  அந்த ஆசிரியர் பயிற்றுவிப்பாளர் சோகத்துடன் கூறினார்.

2025 ஜூலை 14 அன்று கல்வி அமைச்சின் முன் பதவி உயர்வு கோரும் பதாகையுடன் கல்வியியல் விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்றி போது

ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தை செயல்படுத்தி வருவதாகவும், இந்த சிக்கன நடவடிக்கைகள், உலகின் ஏனைய ஆளும் வர்க்கங்களால் அந்தந்த நாடுகளில் தொழிலாள வர்க்கத்தின் மீது நடத்தப்படும் தாக்குதலின் ஒரு பகுதியாகும் என்றும் உலக சோசலிச வலைத் தள நிருபர் விளக்கினார்.

சர்வதேச நாணய நிதியத்தின் கடுமையான சிக்கன நடவடிக்கை உத்தரவுகளின் பேரில் செயல்படும் அரசாங்கம், நிரந்தர வேலைவாய்ப்பு கோரி இசுருபாயவில் கல்வி அமைச்சுக்கு முன் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மீது பொலிசார் தாக்குதல் நடத்தியே கடந்த ஆண்டு தனது பணியைத் தொடங்கியது. அவர்களில் நான்கு பேர் பொய் குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டனர். 2021 இல், சுமார் 16,000 பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆசிரியர்களாக பணியில் அமர்த்தப்பட்டதுடன், அவர்களின் மாத ஊதியம் நிரந்தர ஆசிரியர்களை விட 6,500 ரூபா குறைவு ஆகும்.

நாட்டின் தெற்கிலும் வடக்கிலும் தற்போது 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேலையற்ற பட்டதாரிகள் இருப்பதோடு தேர்தலுக்கு ஆதரவைப் பெறுவதற்காக திசாநாயக்கவும் ஜே.வி.பி./தே.ம.ச.யும் பட்டதாரிகளுக்கு வேலை வழங்குவது உட்பட ஒரு தொகை பொய் வாக்குறுதிகளை வழங்கின. ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கம் இப்போது இந்த வாக்குறுதிகளை சாக்கடையில் வீசியுள்ளது. நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளில் 40,000 ஆசிரியர் காலியிடங்கள் இருப்பதாகவும், அவற்றை நிரப்ப தேவையான நிதியை ஒதுக்குவதைப் பற்றி அரசாங்கம் அக்கறைப்படவில்லை என்றும் சமீபத்தில் தெரியவந்தது.

கடந்த டிசம்பரில், சிரேஷ்ட ஜனாதிபதி ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ, தற்போது 1.3 மில்லியனாக இருக்கும் அரச ஊழியர்களின் எண்ணிக்கையை 7.5 இலட்சமாக குறைக்க வேண்டும் என்றும், 5.5 மில்லியன் தொழில்கள் குறைக்கப்பட வேண்டும் என்றும் எச்சரித்தார். இது அரசாங்கத்தின் நிலைப்பாடாகவும் ஆகியிருப்பதை குறிக்கும் வகையில், சமீபத்தில் அமைச்சர் லால் காந்த, அனைவருக்கும் அரச தொழில் வழங்க அரசாங்கம் கடமைப்பட்டிருக்கவில்லை என்று கூறினார்.

மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் வாழ்வா சாவா பிரச்சினையாக இருக்கும் சுகாதாரத் துறையில் ஏற்பட்டுள்ள கொடூரமான சிக்கல்களில், மருத்துவர்கள் உட்பட சுகாதாரப் பணியாளர்களின் பாரிய பற்றாக்குறையும் அடங்கும். கோவிட்-19 தொற்றுநோய், சிக்குன்குனியா மற்றும் டெங்கு உட்பட கொடிய நோய்கள் வேகமாகப் பரவி, மக்களில் பெரும் எண்ணிக்கையிலானவர்களை நோய்வாய்ப்படுத்தும் நேரத்திலேயே இந்த பற்றாக்குறை நிலவுகிறது. வட மாகாணத்தில் மட்டும் ஒரு தாதி கூட இல்லாத 33 மருத்துவமனைகள் இருப்பதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ சமீபத்தில் அம்பலப்படுத்தினார். சுமார் 500 பொது சுகாதார பட்டதாரிகள் அரசு மருத்துவமனைகளில் துணை மருத்துவப் பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்யக் கோரி சமீபகாலமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

மக்களின் வாழ்க்கையுடன் நேரடியாக தொடர்புடைய இந்தத் துறைகளை சர்வதேச நாணய நிதிய சிக்கன நடவடிக்கைகள் பாதிக்காது என்ற ஒரு கட்டுக்கதை உள்ளது. இந்த அரசாங்கம் வருவதற்கு முன்பே சர்வதேச நாணய நிதிய திட்டம் நடைமுறையில் இருந்தது தானே? என்று ஒரு ஆசிரியர் கேள்வி எழுப்பினார். சர்வதேச நாணய நிதிய கடன் விதிமுறைகளை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவதாக வாக்குறுதியளித்து ஆட்சிக்கு வந்த ஜே.வி.பி./தே.ம.ச. தலைவர்கள், அந்தப் பொய் வாக்குறுதிகளை குப்பையில் வீசிவிட்டு, சிக்கனத் திட்டம் ஒரு தடங்களும் இல்லாமல் செயல்படுத்தப்படும் என்று பகிரங்கமாக அறிவித்து வருவதாக உலக சோசலிச வலைத் தள நிருபர்கள் சுட்டிக்காட்டினர்.

நிதி மூலதனத்தின் தேவைகளுக்காக தொழிலாள வர்க்கத்தின் மீது வரி விதிக்க திசாநாயக்க முழுமையாக உறுதிபூண்டுள்ளார். முதலாளித்துவத்தின் உலகளாவிய நெருக்கடிக்கு அமெரிக்கா உட்பட ஏகாதிபத்திய நாடுகளின் பதில், ஏனைய நாடுகளை கைப்பற்றுவதற்கான நவ-காலனித்துவப் போர்களைத் தீவிரப்படுத்துவதாகவும், அதே நேரம், அந்தப் போருக்கு நிதியளிக்க, உள் நாட்டுக்குள் தொழிலாளர் வர்க்கத்திடமிருந்து சம்பளம் மற்றும் கடந்த காலப் போராட்டங்களில் வென்ற அனைத்து உரிமைகளையும் பறிப்பதாகவும் உள்ளது. ஏனைய நாடுகளின் ஆளும் வர்க்கங்களைப் போலவே, திசாநாயக்க அரசாங்கமும் இதே தாக்குதல்களை கட்டவிழ்த்துவிட்டுள்ளன.

Loading