முன்னோக்கு

உக்ரேன்-ரஷ்யா போரை ட்ரம்ப் தீவிரப்படுத்தும்போது, ஜனநாயகக் கட்சியினரும் ஊடகங்களும் பாராட்டுகின்றன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

ஓக்லஹோமாவின் லாட்டனுக்கு அருகிலுள்ள ஃபோர்ட் சில் இராணுவ சாவடிக்கு வெளியே ஒரு பேட்ரியாட் ஏவுகணை மொபைல் லாஞ்சர் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மார்ச் 21, 2023 [AP Photo/Sean Murphy]

உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோ போர் குறித்த தனது நிர்வாகத்தின் கொள்கையை டொனால்ட் ட்ரம்ப் நடைமுறையளவில் மாற்றியுள்ளார். இந்த வார இறுதியில், பென்டகன் 10 பில்லியன் டாலர்கள் வரையிலான பாரிய ஆயுத ஏற்றுமதியை மீண்டும் தொடங்கும் என்று ட்ரம்ப் அறிவித்தார். இந்த விநியோகங்களில் பேட்ரியாட் வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் மாஸ்கோ மற்றும் பிற முக்கிய ரஷ்ய நகரங்களைத் தாக்கும் திறன் கொண்ட நீண்ட தூர ஏவுகணைகள் ஆகியவை அடங்கும்.

திங்களன்று, வெள்ளை மாளிகையில் ட்ரம்ப்பும், நேட்டோவின் பொதுச் செயலாளர் மார்க் ருட்டேவும், பாராட்டுகளையும் புதுப்பிக்கப்பட்ட ஒற்றுமைக்கான உறுதிமொழிகளையும் பரிமாறிக் கொண்டனர். பின்னர் ருட்டே காங்கிரஸின் மூத்த உறுப்பினர்களைச் சந்தித்தார். அதே நேரத்தில் ஜேர்மன் பாதுகாப்பு அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ் பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் மற்றும் கூட்டுப் படைத் தலைவர்களின் தளபதி ஜெனரல் டான் கெய்ன் ஆகியோரைச் சந்தித்து ஆயுத விநியோக விவரங்களை இறுதி செய்ய பேச்சுக்களை நடத்தினார்.

பொதுவாக ட்ரம்ப் விடயத்தில் நடப்பதைப் போலவே, அமெரிக்க நிறுவனங்களின் வெளிநாட்டு போட்டியாளர்களின் இழப்பில் லாபத்தை அதிகரிப்பது இந்த ஒப்பந்தத்திற்கான ஒரு முக்கிய விடயமாக இருந்தது. ஐரோப்பிய நாடுகள் இரண்டு பேட்ரியாட் ஏவுகணை அமைப்புகள் உட்பட பில்லியன் கணக்கான டாலர் மதிப்புள்ள அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களை வாங்கி உக்ரேனுக்கு அனுப்பும். இது கியேவில் நொறுங்கி வரும் ஜெலென்ஸ்கி ஆட்சியையும், ரேதியோன் மற்றும் லாக்ஹீட் மார்ட்டின் போன்ற இராணுவ ஒப்பந்தக்காரர்களின் நிதியையும் வலுப்படுத்தும்.

கடந்த திங்களன்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், உக்ரேனுடன் ஒரு போர்நிறுத்த உடன்படிக்கையை எட்ட ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டினுக்கு 50 நாட்கள் அவகாசம் அளிப்பதாக ட்ரம்ப் அறிவித்தார். இல்லையென்றால், ரஷ்ய எண்ணெய் மற்றும் எரிவாயுவை கொள்முதல் செய்யும் எந்தவொரு நாட்டின் மீதும் குறைந்தபட்சம் 100 சதவீத இறக்குமதி வரிவிதிப்பைத் திணிக்கப் போவதாக அவர் எச்சரித்தார்.

இந்த வரிவிதிப்புகள் சீனா, இந்தியா மற்றும் பிரேசில் ஆகியவற்றை இலக்கில் வைக்கும். இவை ரஷ்யாவுடன் சேர்ந்து, அமெரிக்க டாலருக்கு வெளியே வர்த்தக மற்றும் நிதி பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க அமைக்கப்பட்ட பொருளாதார கூட்டணியான BRICS இன் ஸ்தாபக உறுப்பினர்களாக உள்ளன. ட்ரம்பின் இறுதி எச்சரிக்கை, அமெரிக்க முதலாளித்துவத்தின் வெளிநாட்டு போட்டியாளர்களுக்கு எதிரான அவரது வர்த்தகப் போர் கொள்கைகளை, குறிப்பாக ட்ரம்பின் முன்னோடியான ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடெனால் தூண்டிவிடப்பட்ட ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போருடன் சீனாவை நேரடியாக இணைக்கிறது. பைடென், தொடர்ந்தும் ரஷ்யாவை கண்டனம் செய்து வந்துள்ளார்.

முன்னணி ஜனநாயகக் கட்சியினர் மற்றும் பெருநிறுவன ஊடகங்களில் உள்ள அவர்களது கூட்டாளிகளின் பிரதிபலிப்பு, எதிர்பார்த்தபடியே, இந்த மாற்றத்தைப் பாராட்டுவதாக இருந்தது. செனட் வெளியுறவுக் குழுவின் உயர்மட்ட ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த செனட்டர் ஜீன் ஷாஹீன், “ஜனாதிபதி அந்த அறிக்கைகளைப் பின்பற்றி, அவற்றைச் சரியாகச் செய்வதை உறுதிசெய்தால் அது நல்ல செய்தியாக இருக்கும்” என்றார். மேலும் அவர், நியூ யோர்க் டைம்ஸுக்கு அளித்த பேட்டியில், “இது வாய்வீச்சில் வரவேற்கத்தக்க மாற்றம்”, ஆனால் “அது மிக நீண்ட காலம் நீடிக்குமா ... என்பது தெளிவாகத் தெரியவில்லை” என்று கூறினார்.

ட்ரம்பின் முதல் நிர்வாகத்திலிருந்தே, ட்ரம்ப்புக்கு எதிரான ஜனநாயகக் கட்சியினரின் எதிர்ப்பு என்பது, எப்போதும் வெளியுறவுக் கொள்கை தொடர்பான பிரச்சினைகளில், குறிப்பாக ரஷ்யா மீதான போதுமான அளவு ஆக்ரோஷமான அணுகுமுறை இல்லாதது என்று அவர்கள் கருதியவற்றில் கவனம் செலுத்தி வருகிறது.

ஜனநாயகக் கட்சியினர் 2019 இல் ட்ரம்ப் மீது பதவிநீக்க குற்றவிசாரணை நடத்த நகர்ந்ததானது, அது புலம்பெயர்ந்தவர்களை காட்டுமிராண்டித்தனமாக துன்புறுத்தியது அல்லது குழந்தைகளை அவர்களின் பெற்றோர்களிடம் இருந்து பிரித்தமை, அல்லது சர்வாதிகாரத்திற்கான அவரது பகிரங்க தயாரிப்புகள் போன்ற தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான அவரது குற்றங்களுக்காக அல்ல. அதற்கு பதிலாக, ட்ரம்பின் மறுதேர்தல் பிரச்சாரத்தில் உதவுமாறு ஜனாதிபதி ஜெலென்ஸ்கிக்கு அழுத்தம் கொடுப்பதற்காக, உக்ரேனுக்கான அமெரிக்க இராணுவ உதவியை தாமதப்படுத்தியதற்காக ஜனநாயகக் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதிநிதிகள் சபை ட்ரம்ப் மீது பதவி நீக்க குற்றவிசாரணை நடத்தியது.

பைடென் வெள்ளை மாளிகைக்குள் நுழைந்ததும், ஜனவரி 6, 2021 இல் தோல்வியுற்ற ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சி குறித்த ட்ரம்பின் தூண்டுதலில் வெளிப்பட்ட பாசிச சர்வாதிகாரத்தின் அச்சுறுத்தலை அவர் விரைவாக ஒதுக்கி வைத்தார். அதற்கு பதிலாக, பிப்ரவரி 2022 இல் புட்டினின் படையெடுப்பைத் தூண்டுவதில் வெற்றி கண்ட அவரது ரஷ்ய-விரோத கொள்கையை ஆதரிக்க ஒரு “வலுவான” குடியரசுக் கட்சிக்கு அவர் அழைப்பு விடுத்தார்.

புலம்பெயர்ந்தோர், ஜனநாயக உரிமைகள் மற்றும் சமூக எதிர்ப்புரட்சி மீதான இரண்டாவது ட்ரம்ப் நிர்வாகத்தின் தாக்குதலுக்கு ஜனநாயகக் கட்சியினர் வசதி செய்து கொடுத்துள்ளனர் மற்றும் ஒத்துழைத்து வருகின்றனர். அவர்கள் அரசாங்கத்திற்கு நிதியாதாரம் வழங்குவதற்கு உறுதியளித்து, பதவிநீக்க குற்றவிசாரணையை எதிர்த்துள்ளனர். மேலும், ட்ரம்ப் ஒரு அரசியல் சர்வாதிகாரத்தை கட்டியெழுப்புகையில், வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். குடியரசுக் கட்சியைப் போலவே, ஜனநாயகக் கட்சியும் வோல் ஸ்ட்ரீட் மற்றும் இராணுவ-உளவுத்துறை எந்திரத்தின் ஒரு கட்சியாக இருப்பதுடன், உள்நாட்டில் இலாப அமைப்புமுறை மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலகளாவிய நலன்களை பாதுகாப்பதுக்கும் உறுதிபூண்டுள்ளன.

குறைந்தபட்சம் இப்போதைக்கு, சீனாவை மையமாகக் கொண்டு, ட்ரம்ப் ரஷ்யாவிற்கு எதிரான ஆக்கிரமிப்புக்கான கோரிக்கைகளுக்குப் பின்னால் நகர்ந்து கொண்டிருக்கிறார்.

ரஷ்யாவுக்கு எதிரான இருகட்சிகளின் போர் கொள்கையானது, குடியரசுக் கட்சி செனட்டர் லிண்ட்சே கிரஹாம் மற்றும் ஜனநாயகக் கட்சியின் செனட்டர் ரிச்சர்ட் புளூமென்தால் ஆகியோரால் ஞாயிறன்று காலை CBS இன் “தேசத்தை எதிர்கொள்” என்ற நேர்காணல் நிகழ்ச்சியில் கூட்டாகத் தோன்றியதில் மிக நேரடியாக உச்சரிக்கப்பட்டது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இலக்கு எதுவாக இருந்தாலும், கிரஹாம் ஒரு நுரை தள்ளும் போர் வெறியர் ஆவார். கடந்த வாரம் நேட்டோ கூட்டத்தில் புளூமென்தால் அவரது கூட்டாளியாக இருந்தார், அங்கு அவர்கள் உக்ரேனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கியை சந்தித்தனர்.

“ரஷ்யாவிற்கு உதவும் மற்றும் புட்டினின் போர் இயந்திரத்தை ஆதரிக்கும் எந்தவொரு நாட்டிற்கும் 500 சதவீத வரிகளை விதிக்க ட்ரம்பை அங்கீகரிக்கும்” சட்டத்தை நிறைவேற்றுவதற்கு தானும் புளூமெண்டலும் 85 இணை-அனுசரணையாளர்களைப் பெற்றுள்ளதாக கிரஹாம் பெருமைபீற்றினார். “இது உண்மையிலேயே ஜனாதிபதி ட்ரம்பிற்கு இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவரக் கிடைக்கும் ஒரு சுத்தியல்” (அதாவது, ரஷ்யாவின் தோல்வியையும் நசுக்கலையும் கொண்டு வருதல்) என்று அவர் மகிழ்ச்சியுடன் கூறினார்.

ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த புளூமெண்டால், “இந்தத் தடைகளுக்கு இது ஒரு முக்கியமான தருணமாக இருக்க வேண்டும், மேலும் இந்த நேரத்தில் இந்த சுத்தியலைக் கொண்டு வீழ்த்துவது ஐரோப்பாவில் செனட்டர் கிரஹாமும் நானும் கலந்து கொண்ட கூட்டத்தில் இருந்த அனைத்து ஐரோப்பிய நட்பு நாடுகளாலும் வலியுறுத்தப்பட்டது. அவர்கள் முற்றிலும் ஒற்றுமையுடன் உள்ளனர்” என்று கூறினார்.

“ஆனால், இந்த நேரத்தில் மிக முக்கியமானது நமது ஒற்றுமை என்று நான் நினைக்கிறேன். செனட்டர் கிரஹாமும் நானும், குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சியினரும், ஒன்றிணைந்து, பல்வேறு கருத்துக்களைக் கொண்ட ஐரோப்பிய தலைவர்களும், ஒற்றுமையுடன் ஒன்றிணைகிறோம்.” இந்த “ஐக்கியத்தில்” ஐரோப்பாவில் கணக்குகளில் முடக்கப்பட்டுள்ள 300 பில்லியன் டாலர் ரஷ்ய சொத்துக்களைப் பயன்படுத்தி, போருக்குச் செலவழிக்க உதவுவதற்கான பொதுவான உறுதிப்பாடு உள்ளதாகக் கூறப்படுகிறது, இதில் அமெரிக்காவிலிருந்து புதிய சுற்று பாரிய ஆயுதக் கொள்முதல்களும் அடங்கும்.

வட கொரியா, சீனா மற்றும் ஈரான் உடனான ரஷ்யாவின் கூட்டணிகளை முறிக்கும் இருகட்சி அமெரிக்க கொள்கையை புளூமென்தால் ஆதரித்ததுடன், ஈரானுக்கு எதிரான ட்ரம்பின் சமீபத்திய வான்வழித் தாக்குதல்களை “ஈரானின் அணுசக்தி திட்டத்திற்கு எதிரான வெற்றி” என்று பாராட்டுடன் குறிப்பிட்டார்.

ரஷ்யா மீதான ட்ரம்பின் மாற்றம், ஜனநாயகக் கட்சியுடன் இணைந்த ஊடகங்களின் தொனியில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை உருவாக்கியுள்ளது. ரஷ்யாவுக்கு எதிராக தொடர்ச்சியாக மிகவும் ஆக்ரோஷமாக இருந்து வருகின்ற, பில்லியனர் பெஸோஸுக்கு சொந்தமான வாஷிங்டன் போஸ்ட், உக்ரேன் மீதான ட்ரம்பின் நடவடிக்கைகளை ஆதரித்து, ரஷ்யாவுடனான மோதலில் இருந்து எந்தவொரு விலகலுக்கும் எதிராக எச்சரித்து திங்களன்று ஒரு தலையங்கத்தை வெளியிட்டது. “குறிப்பாக உக்ரேனுக்காகவும் மற்றும் பொதுவாக அமெரிக்க நம்பகத்தன்மைக்காகவும், ட்ரம்ப் பின்வாங்க முடியாது” என்று போஸ்ட் எழுதியது.

“போர் முன்னரங்கிற்கு பின்னால் உள்ள இலக்குகளைத் தாக்க அதிக தாக்குதல் ஆயுதங்களுக்கு” போஸ்ட்டின் தலையங்கம் அழைப்புவிடுத்தது. மேலும், ரஷ்யாவிற்கு எதிரான நேரடி உக்ரேனிய தாக்குதல்கள் அணுஆயுத சக்திகளுக்கு எதிராக பரந்த பிராந்திய மோதலைத் தூண்டும் என்று அஞ்சி, முந்தைய பைடென் நிர்வாகத்தின் கூச்ச சுபாவத்தை விமர்சித்தது. (ஆனால், அவர்கள் அவ்வாறு செய்யவில்லை) அணுஆயுத பேரழிவின் அபாயத்தை இவ்வாறு வெளிப்படையாக நிராகரித்த பிறகு, மாஸ்கோ மற்றும் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் உள்ளிட்ட முக்கிய ரஷ்ய நகரங்களைத் தாக்கும் திறன் கொண்ட நீண்ட தூர ATACMS பாலிஸ்டிக் ஏவுகணைகளை வழங்குவதை உள்ளடக்கிய, பைடென் இறுதியில் ஏற்றுக்கொண்ட கொள்கையைத் தொடர போஸ்ட் ட்ரம்பை வலியுறுத்தியது.

உக்ரேன் போரை ட்ரம்ப் தீவிரப்படுத்துவதை ஜனநாயகக் கட்சி முழுமையாக அரவணைத்திருப்பது, அது ஒரு எதிர்க்கட்சி அல்ல என்ற அடிப்படை அரசியல் யதார்த்தத்தை அம்பலப்படுத்துகிறது. அது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இன்றியமையாத நோக்கங்களையும், வோல் ஸ்ட்ரீட்டுக்கான ஆதரவையும், முதலாளித்துவ அமைப்புமுறையைப் பாதுகாப்பதையும் ட்ரம்புடன் பகிர்ந்து கொள்கிறது.

ட்ரம்பின் சர்வாதிகாரத்திற்கு எதிரான எதிர்ப்பு, புலம்பெயர்ந்தோருக்கு எதிரான இராணுவமயமாக்கப்பட்ட தாக்குதல் மற்றும் சமூகத் திட்டங்கள் மீதான அதிகரித்து வரும் தாக்குதல்கள் ஆகியவை பாரிய மற்றும் வளர்ந்து வரும் எதிர்ப்பை உருவாக்கி வருகின்றன. ஆனால், அதே ஆளும் வர்க்கத்தின் ஒரு கருவியாகச் செயல்படும் ஜனநாயகக் கட்சி மூலம் இந்த எதிர்ப்பை உணர முடியாது. முதலாளித்துவத்தை ஒழிப்பதற்கும், சமூகத்தை சோசலிச அடிப்படையில் மறுஒழுங்கமைப்பதற்கும் போராடும் தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான அரசியல் இயக்கத்தை அபிவிருத்தி செய்வது அவசியமாகும். இதுவே சோசலிச சமத்துவக் கட்சியின் வேலைத்திட்டமாகும்.

Loading