வட இலங்கையின் செம்மணியில் புதிய மனிதப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

செம்மணியில் புதிதாக திறக்கப்பட்ட புதைகுழிகளை அவதானிக்கும் அகழ்வுக் குழு [Photo: WSWS]

பல தசாப்தங்களாக நடந்த தமிழர் விரோத இனவாதப் போரின் உறைய வைக்கும் திடுக்கிடும் நினைவூட்டலாக, வட இலங்கையில் யாழ்ப்பாணத்தின் புறநகர் பகுதியில் உள்ள செம்மணி சிந்துபாத்தி மயானத்தில் புதிய மனித புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது சமீபத்திய ஆண்டுகளில் வடக்கின் பல்வேறு இடங்களில் தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்ட பல மனிதப் புதைகுழிகளில் ஒன்றாகும்.

இந்த புதைகுழிகள், அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த கொழும்பு அரசாங்கங்களால் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலட்சக்கணக்கான படையினரை அனுப்பி கட்டவிழ்த்துவிடப்பட்ட கொடூரமான இனவாதப் போரின் போது நிகழ்த்தப்பட்ட அட்டூழியங்களுக்கு மேலதிக சான்று ஆகும்.

2009 மே மாதம் விடுதலைப் புலிகளின் தோல்வியுடன் முடிவடைந்த 26 ஆண்டு காலப் போரில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அவர்களில் பெரும்பாலானோர் வடக்கு மற்றும் கிழக்கில் இருந்த தழிழ் மக்களே ஆவார். ஆயிரக்கணக்கானோர் பலவந்தமாக காணமல் ஆக்கப்பட்டனர். போரின் இறுதி மாதங்களின் போது சுமார் 40,000 பொது மக்கள் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை மதிப்பிட்டுள்ளது.

இந்த இரு மாகாணங்களும் கடுமையான இராணுவ கட்டுப்பாட்டின் கீழ் இருப்பதோடு மோதலின் வடுக்கள் அவ்வப்போது தோன்றுவது தொடர்கின்றன.

செம்மணி சிந்துபாத்தி இந்து மயானக் காணியில் மின் தகனசாலை கட்டுவதற்காக குழி தோண்டப்பட்டபோது பெப்ரவரி 20 அன்று மனித எலும்புத் துண்டுகளைக் கொண்ட இந்தப் புதைகுழி கண்டுபிடிக்கபட்டது. நீதிமன்ற உத்தரவின் கீழ் பேராசிரியர் ராஜ் சோமதேவாவின் தலையிலான தொல்பொருள் குழுவால் மே 15 அன்று உத்தியோகபூர்வமான அகழ்வு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.

ஜூன் 10 வரையான அகழ்வுப் பணியில் 65 மனித எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. செய்திகளின் படி முப்பத்து ஏழுக்கும் மேற்பட்ட முழுமையான மனித எலும்புக் கூட்டு எச்சங்கள் தோண்டியெடுக்கபட்டு தடயவியல் பகுப்பாய்விற்காக கவனமாக பாதுகாக்கப்பட்டுள்ளது.

செம்மனியில் அகழ்வின் போது கண்டுபிடிக்கப்பட்ட ஒரு எழும்புக்கூடு [Photo: WSWS]

கடந்த வாரம் அகழ்வுத் பணியாளர்கள் ஒரு ஆடை, பை, காலணி, ஒரு பொம்மை ஆகியவற்றை கண்டெடுத்துள்ளதாக சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. முன்னர், கண்டுபிடிக்கபட்ட பொருட்களில் ஆடை, சிறிய கண்ணாடி வளையல்கள் மற்றும் வடக்கு கிழக்கில் பாடசாலை பிள்ளைகளுக்கு ஒரு தொண்டு நிறுவனத்தால் வழங்கப்பட்டதாக அடையாளம் காணப்பட்ட நீல நிற பாடசாலை துணியும் புத்தகப் பையும் அடங்கும். அறிக்கைகளின் படி, இது வரையில் மூன்று எலும்புக் கூட்டு எச்சங்கள் பத்து மாதங்களுக்கும் குறைவான குழந்தைகளுடையவை என வகைப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த மனித எச்சங்கள், வழமையான ஆறு அடி ஆழ கிடங்கிற்கு முற்றிலும் மாறாக, வெறும் 1.6 அடி ஆழத்தில் புதைக்கபட்டுள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இந்த மனித எலும்புத் தொகுதிகளின் இறப்பிற்கான காரணத்தை கண்டறியும் முயற்சியின் இறுதியாக மருத்துவ நிபுணர்களால் பகுப்பாய்வு செய்யப்படும். பேராசிரியர் சோமதேவா, இந்த உடல்கள் புதைக்கப்பட்ட காலத்தை மதிப்பிடுவதற்காக பழைய பொலித்தீன்கள், துணிகள் போன்ற தடயப் பொருட்களை ஆராய்வார். அவர் இந்த மயானத்தினுள் இரண்டாவது சாத்தியமான புதைகுழிகளை அடையாளம் காண்பதற்கு, செயற்கைகோள் படங்கள் மற்றும் ட்ரோன்கள் மூலமான படங்கள் உதவியதாகவும் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், வடக்கு கிழக்கில் முன்னர் மனிதப் புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்ட போது என்ன நடந்தது என்பதை ஒருவர் கணக்கில் எடுத்துக்கொண்டால், முழுமையான விசாரணைகள் கைவிடப்பட்டு உண்மைகள் புதைக்கப்படும் என்றே தோன்றும்.

இதே செம்மணி பிரதேசத்தில் இதற்கு முன்னரும் ஒரு  மனிதப் புதைகுழி கண்டுபிடிக்கபட்டது. 1999 இல், இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர், 1995-96 காலப்பகுதியில் இலங்கையின் வடக்கில் சேவையாற்றிய இராணுவ சிப்பாயான சோமரட்ன ராஜபக்ஷவால் வழங்கப்பட்ட வாக்குமூலத்தை தொடர்ந்து 15 எலும்புக் கூட்டு எச்சங்களுடன் ஒரு மனிதப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டது.

காணமல் போன கிருசாந்தி குமாரசுவாமி என்ற பாடசாலை சிறுமியை துஷ்பிரயோகம் செய்து கொலை செய்தமைக்காவும் அச்சிறுமியை தேடிச் சென்ற குடும்ப உறுப்பினர்களையும் கொலை செய்தமைக்காகவும் அருடன் சேர்த்து நான்கு இலங்கை இராணுவ சிப்பாய்கள் மீது குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டணை வழங்கப்பட்டதை அடுத்தே ராஜபக்ஷ இதை அம்பலப்படுத்தினார்.

“விடுதலைப் புலி சந்தேக நபர்களாக” கைது செய்யப்பட்டவர்கள் அல்லது கடத்தப்பட்டவர்களை இராணுவத்தால் பிடிக்கப்பட்டு, எவ்வாறு சித்திரவதை செய்யப்பட்டு இறுதியில் கொலை செய்யப்பட்டனர் என்ற அதிர்ச்சியூட்டும் விபரத்தை அவர் வழங்கினார். அதே நேரம், இந்தச் சம்பவம் உலக சோசலிச வலைத் தளத்தில் விரிவாக வெளியிடப்பட்டது.1995-96 காலப்பகுதியில் சேகரிக்கப்பட்ட தகவல்களின் படி வடக்கில் அறுநூறுக்கும் மேற்பட்டவர்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.

இது ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவின் அரசாங்கம் விடுதலைப் புலிகளுடனான போலியான சமாதானப் பேச்சுவார்த்தைகளை முடிவுக்கு கொண்டு வந்து, 1995 ஏப்ரலில் போரை மீண்டும் தொடங்கிய போது நடந்தவை ஆகும்.

1999 இல் புதைகுழி கண்டுபிடிக்கபட்ட போது, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் யாழ்ப்பாண நீதிமன்றங்களில் வழக்குத் தாக்கல் செய்தனர். மனித உரிமைகள் மற்றும் அபிவிருத்தி மையத்தின் படி, யாழ்ப்பாண நீதி மன்றங்களில் நீதியை பெற முடியாது எனக் கூறிக்கொண்ட இராணுவம், அந்த வழக்குகளை வடமத்திய மாகாணத்தின் தலைநகரான அனுராதபுரத்திற்கு மாற்றுவதற்கு வேண்டுகோள் விடுத்தது.

இருப்பினும், பல நீதிமன்ற அமர்வுகளுக்கு சமூகமளித்த வழக்குத் தாக்கல் செய்தவர்கள், இராணுவத்தின் அடாவடிகளை காரணம் காட்டி, தொடர்ந்தும் வருகைத தர மறுத்தனர். இதனால் இந்த வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன.

செம்மணி புதைகுழியில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு பிள்ளையினுடையது என சந்தேகிக்கப்படும் எழும்புக் கூடு [Photo: WSWS]

செம்மணியில் உள்ள இந்தப் புதைகுழி, அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த கொழும்பு அரசாங்கங்களின் மேற்பார்வையில் தண்டணையில் இருந்து விலக்களிக்களிக்கபட்ட இராணுவத்தினரால் மேற்கொள்ப்பட்ட பரவலான போர்க் குற்றங்களின் ஒரு சிறு பகுதியே ஆகும்.

2013 இல் மன்னார் மாவட்டத்தில் திருக்கேதீஸ்வரத்திலும், 2018 இல் மன்னாரில் கூட்டுறவு மொத்த விற்பனை நிலைய வளாகத்திலும், 2021 இல் முல்லைத்தீவு மாவட்டத்தில் கொக்குத் தொடுவாயிலும் மற்றும் 2014 இல் மட்டக்களப்பு மாவட்டத்தின் களவாஞ்சிக்குடியிலும் கண்டுபிடிக்கபட்டவை உட்பட, வடக்கு கிழக்கு மாகாணங்களில் பல மனிதப் புதைகுழிகள் கண்டுபிடிக்கபட்டன.

இந்த இடங்களில் அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டாலும் எந்தவொரு மேலதிக விசாரணைகளும் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படவில்லை.

சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியானது காணாமல் ஆக்கப்பட்டோரின் கதி குறித்த கவலைகளை தீவிரப்படுத்தியுள்ளதோடு தமிழ் மக்கள் மத்தியில் எதிர்ப்பையும் துாண்டியுள்ளது. ஜூன் 5 அன்று, வடக்கு கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர் சங்கம் (ARED), அறிக்கை ஒன்றை வெளியிட்டு, செம்மணிப் புதைகுழிக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் செய்தனர்.

சர்வதேச தர நிலைகளுக்கு இணங்க சர்வதேச விசாரணை மேற்கொள்ள வேண்டும் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை தலையீடு செய்ய வேண்டும் உள்ளடங்களாக ஐந்து முக்கிய கோரிக்கைகளை போராட்டக்காரர்கள் முன்வைத்தனர்.

2011 இல் இருந்து ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணையகத்தில் அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, பிரான்ஸ் ஆகிய நாடுகளின் தலைமையிலான இலங்கையின் இணைத்தலமை நாடுகள் எனப்பட்டது, இலங்கையில் மோதலின் போது மனித உரிமைகள் மீறல் மீதான ஒர் தீர்மானத்திற்கு அனுசரணை அளித்தன.

எவ்வாறாயினும், போர்க் குற்றங்கள் குறித்து அக்கறைப்படுவதற்கு அப்பால், குறிப்பாக அமெரிக்கா, இலங்கை அரசாங்கங்களை சீனாவில் இருந்து துார விலக்கி வைக்கவும் சீனாவிற்கு எதிராக வாஷிங்டன்-தலைமையிலான இராணுவ தயாரிப்புகளோடு இணைத்துக் கொள்ளவும் இந்தத் தீர்மானத்தை சுரண்டிக் கொண்டது.

ட்ரம்பின் கீழ், இஸ்ரேலுக்கு எதிராக பாராபட்சம் காட்டுவதாக குற்றம் சாட்டி, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அமைப்பில் இருந்து அமெரிக்கா விலகியுள்ளது. தற்போது பிரித்தானியா இந்தக் குழுவிற்கு தலைமை வகிக்கின்றது.

2017 இல் இருந்து, இந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கம், இந்த சர்வதே சக்திகளுக்கு வேண்டுகோள் விடுத்து போராட்டம் செய்யவதில் ஈடுபட்டு வருகின்றது.

தமிழ் தேசிய மக்கள் முன்னனி, இலங்கைத் தழிழ் அரசுக் கட்சி மற்றும் பல்வேறுபட்ட தமிழ் தேசியக் குழுக்கள் மற்றும் வெளிநாட்டு தமிழ் புலம் பெயர் குழுக்களும், இந்த ஏகாதிபத்திய சக்கதிகள் நீதியைப் பெற்றுத் தருவதில் அக்கறை கொண்டுள்ளதாக மாயையை பரப்புவதற்குப் பொறுப்பாளிகள் ஆகும்.

அரசியல் ரீதியில் இது குற்றவியல் தனமானதாகும். இதே ஏகாதிபத்திய சக்திகளே போர்க் குற்றங்களுக்கு பொறுப்பானவை ஆகும். இவை தற்போது பாலஸ்தீன மக்களுக்கு எதிரான இஸ்ரேலின் இன அழிப்பை முழுமையாக ஆதரிக்கின்றன.

இந்த தமிழ் கட்சிகளின் “சர்வதேச சமூகத்திற்கான” வேண்டுகோளானது மனித உரிமை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கானது அல்ல. மாறாக, வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் உயர் அடுக்குகளுக்கு அதிக அதிகாரங்களையும் சலுகைகளையும் வழங்குமாறு கொழும்புக்கு அழுத்தம் கொடுப்பதற்கானதே ஆகும்.

சிங்கள பேரினவாத மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) தலைமையிலான தற்போதைய இலங்கை அரசாங்கம், தொடக்கத்தில் இருந்தே புலிகளுக்கு எதிரான இனவாதப் போரை ஆதரித்தது. இது இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட போர்க் குற்றங்கள் மீதான எந்தவொரு நேர்மையான விசாரணையையும் எதிர்ப்பதில் உறுதியாக உள்ளது.

2024 ஒக்டோபரில், ஜே.வி.வி. தலைமையிலான அரசாங்கம், அத்தகைய விசாரணைக்கு அழைப்புவிடுத்த ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக் குழுவின் தீர்மானத்தை நிராகரித்ததன் மூலம், போர்க் குற்றங்கள் மீதான எந்தவொரு சர்வதேச விசாரணைக்கும் தனது எதிர்ப்பை மீண்டும் உறுதிப்படுத்தியது.

ஜே.வி.பி., பாரம்பரிய முதலாளித்துவக் கட்சிகள் மீதான பரந்த எதிரப்புகளை சாதகமாக்கிக்கொண்டு, தமிழ் மக்களின் உரிமைகள் உட்பட ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதாக வாக்குறுதியளித்து, முதன் முதலாக கடந்த ஆண்டு ஆட்சிக்கு வந்தது. பின்னர் அதன் ஏனைய வெற்றுத் தேர்தல் வாக்குறுதிகளோடு சேர்த்து தனது கடமைகளை கைவிட்டது.

தமிழ் மக்கள், தங்களது ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க ஏகாதிபத்திய சக்திகள் மீது அல்லது இலங்கையில் உள்ள சிங்கள மற்றும் தமிழ் முதலாளித்துவ அரசியல்வாதிகள் மீது எந்த நம்பிக்கையும் வைக்க முடியாது.  தொடக்கத்தில் இருந்தே கொழும்பு அரசாங்கங்களின் இனவாத யுத்தத்தையும் அப்பட்டமான ஜனநாயக உரிமை மீறல்களையும் உறுதியாக எதிர்த்த ஒரே கட்சி சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே ஆகும்.

பல தசாப்தங்களாக, சோசலிச சமத்துவக் கட்சியும் அதன் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமும் மட்டுமே, வடக்கு கிழக்கில் இருந்து இராணுவத்தை நிபந்தனையின்றி வெளியேற்ற கோரியதோடு சோசலிச மற்றும் அனைத்துலகவாத வேலைத்திட்டத்தின் அடிப்படையில், தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதற்கான போராட்டத்தின் பாகமாக, தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளையும் பாதுகாக்க போராடி வந்துள்ளன.

ஒரு தசாப்பதற்கும் மேலாக, தமிழ் உழைக்கும் மக்கள் நீதியைக் கோரியும் தொடர்ச்சியான பாரபட்சங்களை நிறுத்தக் கோரியும் போராட்டங்கள் மற்றும் பிரச்சாரங்களை மேற்கொண்டனர். இதன் கசப்பான அனுபவம் என்னவெனில், பெரும் வல்லரசுகளோ, கொழும்பு அரசாங்கங்களோ, அதே போன்று ஏகாதிபத்திய-சார்பு தமிழ் கட்சிகளோ அவர்களின் எந்தவொரு கோரிக்கைகளையும் நிறைவேற்றாது என்பதே ஆகும்.

சோசலிச சமத்துவக் கட்சி, தமிழ் சிங்கள மற்றும் முஸ்லீம் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்தவும் தெற்காசியாவில் சோசலிச குடியரசுகளின் ஒன்றியத்தின் ஒரு பாகமாக, ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசிற்கான இந்தப் போராட்டத்தில், கிராமப்புற ஏழைகளை அணித்திரட்டவும் சளைக்காது போராடுகிறது. இது மட்டுமே இனவாத மோதலுக்கான சாத்தியான தீர்வாக இருப்பதோடு தொழிலாள வர்க்கம் மற்றும் ஒட்டுமொத்த ஒடுக்கப்பட்ட வெகுஜனங்களதும் அடிப்படை ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளுக்காக போராடுவதற்கான ஒரே அரசியல் மார்க்கமும் ஆகும்.

Loading