மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
“அநேகமாக இதுதான் சமாதானத்தின் கடைசி கோடைகாலமாக இருக்கலாம்” என்று வலதுசாரி ஜேர்மன் வரலாற்றாசிரியர் சோங்க நெய்ட்செல் மார்ச் மாதம் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தெரிவித்தார். இது, தற்போது ஜேர்மனியில் ஊடக வருணனைகளின் கருப்பொருளாக உள்ளது.
நெய்ட்செல் இந்த அறிக்கையை தவிர்க்கப்பட வேண்டிய ஒரு பேரழிவு பற்றிய எச்சரிக்கையாக வழங்கவில்லை. மாறாக, ரஷ்யாவுடனான போருக்குத் தயாராகும் வகையில், ஜேர்மன் மீள்ஆயுதமயமாக்கலை விரைவுபடுத்துவதற்கான ஒரு இராணுவவாத வாதமாக இந்த அறிக்கையை அவர் வெளியிட்டார்.
ஜேர்மனிக்கு “இராணுவ கலாச்சாரத்தைப்” (Soldatenkulturen) புதுப்பிக்க வேண்டிய அவசியம் இருப்பதாகவும், அடால்ஃப் ஹிட்லரின் கீழ் இருந்த ஜேர்மன் இராணுவம் அதற்கு ஒரு முக்கிய எடுத்துக்காட்டாக இருந்ததாகவும் நீட்செல் பின்னர் ஒரு நேர்காணலில் கூறினார். “இராணுவக் கலாச்சாரம்” எவ்வளவு முக்கியமானது என்பதை ஜேர்மன் இராணுவம் புரிந்து கொண்டது. அது “பாடல்கள், சீருடைகள், விருதுகள், பேட்ஜ்களுடன்” “அடையாளம், ஒத்திசைவு மற்றும் உந்துதல்” ஆகியவற்றை வெளிப்படுத்தியது.
இரண்டாம் உலகப் போர் முடிந்து எழுபத்தி ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர், “சமாதானத்தின் கடைசி கோடை” குறித்த நெய்ட்செல் இன் பிரகடனம், முதலாம் மற்றும் இரண்டாம் உலகப் போர்களுக்கு முந்தைய ஏகாதிபத்திய கிளர்ச்சியின் தொனியை எதிரொலிக்கிறது. ஜேர்மன் ஜெனரல் பிரெட்ரிக் வொன் பேர்ன்ஹார்டியின் இழிபுகழ்பெற்ற 1911 ஆய்வுரையான ஜேர்மனியும் அடுத்த போரும் “ஒரு உயிரியல் அவசியமாகும்” என்றும் அது மனித முன்னேற்றத்தின் உந்துசக்தி என்றும் வாதிட்டது. பேர்ன்ஹார்டியின் கருத்துப்படி, ஐரோப்பாவில் போர் “தவிர்க்கவியலாததாக” இருந்தது.
ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் ஸ்தூலமான, சூறையாடும் திட்டங்களை, பேர்ன்ஹார்டி மூடிமறைக்க முற்பட்டார். போர் மனிதகுலத்தின் நிபந்தனை என்ற பொதுக் கருத்துக்களுடன், ஜேர்மன் ஏகாதிபத்தியத்திம் ஐரோப்பாவை இரண்டு முறை வெற்றி கொள்ள முயற்சித்தது. 15 முதல் 24 மில்லியன் மக்களைக் கொன்ற பூகோள மோதலுக்கு முன்னதாக ஐரோப்பாவில் ஆளும் வர்க்க வட்டாரங்கள் முழுவதிலும் நிலவிய போர் காய்ச்சலின் வெளிப்பாட்டை பேர்ன்ஹார்டி வழங்கிக் கொண்டிருந்தார்.
அதேபோல, “சமாதானத்தின் கடைசி கோடை” குறித்த நெய்ட்செல் இன் பேச்சு, அனைத்து ஏகாதிபத்திய சக்திகளின் இரத்தவெறி சதித்திட்டத்தை வெளிப்படுத்துகிறது.
முதலில் நாம் நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டும்: இது “சமாதானம்” என்றால், போர் எப்படி இருக்கும்? இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சக்திகளின் ஆதரவுடன், பாலஸ்தீனிய மக்களை அழித்தொழிக்கிறது; இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய மிகப்பெரிய தரைவழிப் போர் ஐரோப்பாவில் நடந்து வருகிறது; அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஈரான் மீது குண்டுவீசித் தாக்கியுள்ளார்.
ஆனால், இதையும் விட மிகப் பெரிய ஏதோவொன்று திட்டமிடப்பட்டு வருகிறது. ஆளும் வர்க்கங்கள் இதை நிறைவேற்ற ஆயுதங்களைத் திரட்டிக் கொண்டிருக்கின்றன. இந்தாண்டின் தொடக்கத்தில், ஜேர்மன் அரசாங்கம் அடுத்த தசாப்தத்தில் அதன் இராணுவச் செலவுகளை இரட்டிப்பாக்க சூளுரைத்தது. ஞாயிறன்று, ஜேர்மன் ஜனாதிபதி பிராங்க்-வால்டர் ஸ்ரைன்மையர் கட்டாய இராணுவ சேவையை மீண்டும் அறிமுகப்படுத்த அழைப்புவிடுத்தார். அதேவேளையில் கடந்த வாரம், ஜேர்மன் நாடாளுமன்றம் ஒரு வரவு-செலவு திட்ட விவாதத்தை நடத்தியது. அதில் சான்சிலர் பிரெடெரிக் மெர்ஸ் ரஷ்யா சம்பந்தமாக “இராஜாங்க நடவடிக்கைகளின் கருவிகள் தீர்ந்துவிட்டன” என்று அறிவித்தார்.
ஜேர்மனி ஐரோப்பிய மீள்ஆயுதமயமாக்கலுக்கான வேகத்தை அமைத்து வருகின்ற அதேவேளையில், ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகள் அனைத்தும் அவற்றின் இராணுவ செலவுகளை பாரியளவில் விரிவுபடுத்தி வருகின்றன. ஹேக்கில் கடந்த மாதம் நடந்த நேட்டோ உச்சி மாநாட்டில், இந்தக் கூட்டணி மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 சதவீதமாக இராணுவ செலவினங்களை அதிகரிக்க பொறுப்பேற்றது.
அட்லாண்டிக் கடந்து, ஏகாதிபத்திய போர் திட்டமிடல் களஞ்சியத்தில், ட்ரம்பின் கீழ் அமெரிக்கா, மத்திய கிழக்கு எங்கிலும் போரைத் தீவிரப்படுத்தி வருகின்ற நிலையிலும், சமீபத்தில் உக்ரேனுக்கான புதிய ஆயுத தளவாடங்களுக்கான திட்டங்களை அறிவித்துள்ள நிலையிலும் கூட, சீனாவை இலக்கில் வைத்து, பசிபிக்கில் போருக்கான அதிகரித்தளவில் நேரடியான திட்டங்களை உருவாக்கி வருகிறது.
வார இறுதியில், தாய்வான் தொடர்பாக அமெரிக்காவுடன் சேர்ந்து சீனாவுடன் போருக்குச் செல்வதாக ஜப்பானும் ஆஸ்திரேலியாவும் உறுதிமொழி அறிக்கைகளை வெளியிட வேண்டும் என்று பென்டகன் முறையாகக் கோரியுள்ளது என்று பைனான்சியல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. “தாய்வானுக்கு நேரடியாகப் பொருந்தக்கூடிய உறுதியான செயல்பாட்டுத் திட்டங்களும் பயிற்சிகளும் ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவுடன் முன்னேறி வருவதாக” ஒரு அதிகாரி பைனான்சியல் டைம்ஸிடம் தெரிவித்தார்.
ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் பசிபிக் ஆகிய நாடுகளில் உள்ள இந்த அனைத்து போர் முனைகளும் ஒரு புதிய உலகப் போரின் தொடக்கங்களாக ஊடகங்களில் அதிகளவில் சித்தரிக்கப்படுகின்றன. நியூ யோர்க் டைம்ஸில் ரோஸ் டௌதட் எழுதிய ஒரு கட்டுரை “உலகப் போரை வெல்வது யார்?” என்று கேட்கிறது. “அமெரிக்காவும் சீனாவும் இறுதியில் ஒரு அழிவுகரமான போருக்குள் வீழ்ந்தால், உக்ரேன் மற்றும் மத்திய கிழக்கில் நடக்கும் போராட்டங்கள் மூன்றாம் உலகப் போரின் வரலாறுகளுக்குப் பின்னோக்கிச் செல்லும்” என்று டௌதட் எழுதுகிறார்.
மேலும் அவர், “ரஷ்யாவும் ஈரானும் சீனாவும் நமது ஏகாதிபத்திய சக்தியை சோதிக்கும் ஒரு திரிபுவாத கூட்டணியாக இருப்பதால், உலகளாவிய ரீதியில் நமது நிலைமையைப் பற்றி அமெரிக்கர்கள் சிந்திப்பது பயனுள்ளதாக இருக்கும்” என்று கூறுகிறார்
அமெரிக்கர்கள் நமது ஏகாதிபத்திய சக்தியின் தலைவிதியைப் பற்றி ஏன் கவலைப்பட வேண்டும் என்று ஒருவர் கேட்கலாம்? சீனா மற்றும் ரஷ்யாவின் “திரிபுவாத கூட்டணிக்கு” எதிராக மட்டுமல்லாமல், ஐரோப்பாவில் அதன் முந்தைய நட்பு நாடுகளுடன் தொடர்புடையதாகவும் உலகம் முழுவதும் அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் நிகரற்ற மேலாதிக்கத்தில் —இயற்கை வளங்கள், தொழில்நுட்பங்கள், மூலப்பொருட்கள் மற்றும் சந்தைகள் மீதான அதன் கட்டுப்பாடு— அவர்களுக்கு என்ன ஆர்வம் இருக்கிறது?
உலகப் போருக்கு அழுத்தம் கொடுக்கும் அதே ஆளும் வர்க்கம் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக ஒரு போரை நடத்துகிறது. அதில் சமூக நலத் திட்டங்கள், ஊதியங்கள் மற்றும் அடிப்படை ஜனநாயக உரிமைகள் “நமது ஏகாதிபத்திய சக்தியின்” பெயரில் தியாகம் செய்யப்பட உள்ளன என்பதே உண்மை.
ஏகாதிபத்தியவாதிகளின் போர்த் திட்டங்களை இயக்கும் அடிப்படை சக்திகளை டௌதட் இன் கருத்து சுட்டிக்காட்டுகிறது. ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போர் “ரஷ்ய ஆக்ரோஷத்திற்கு” எதிராக உக்ரேனைப் பாதுகாப்பதாக விளம்பரப்படுத்தப்பட்ட அதேவேளையில், காஸா இனப்படுகொலை இஸ்ரேலால் “தற்காப்பு” என்று விற்கப்பட்ட அதேவேளையில், ஒவ்வொரு ஏகாதிபத்திய சக்திகளும் அவற்றின் உலகளாவிய மேலாதிக்கத்தைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளே உலகளாவிய போர் உந்துதலுக்கான நிஜமான காரணங்களாகும்.
சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதற்குப் பின்னர், அமெரிக்க ஏகாதிபத்தியம், ஏனைய ஏகாதிபத்திய சக்திகளுடன் சேர்ந்து, தசாப்த கால போர்களின் மூலமாக ஏகாதிபத்திய வன்முறை மூலமாக உலகை மறுபங்கீடு செய்ய தொடங்கியது. இந்த மோதல்கள் இப்போது உலகளாவிய போராக ஒன்றிணைந்து வருகின்ற நிலையில், ரஷ்யா, ஈரான் மற்றும் சீனா ஆகியவை மைய இலக்குகளாக உருவாகின்றன.
இரண்டாம் உலகப் போர் வெடிப்பதற்கு முன்னதாக 1938 இல் எழுதப்பட்ட நான்காம் அகிலத்தின் ஸ்தாபக ஆவணமான “முதலாளித்துவத்தின் மரண ஓலமும் நான்காம் அகிலத்தின் பணிகளும்” என்பதில் லியோன் ட்ரொட்ஸ்கி விளக்கியவாறாக:
முதலாளித்துவ சிதைவின் அதிகரித்து வரும் பதட்டத்தின் கீழ், ஏகாதிபத்திய விரோதங்கள் ஒரு முட்டுச்சந்தை அடைகின்றன. அதன் உச்சத்தில் தனித்தனி மோதல்களும் இரத்தந்தோய்ந்த உள்ளூர் குழப்பங்களும் (எத்தியோப்பியா, ஸ்பெயின், தூர கிழக்கு, மத்திய ஐரோப்பா) தவிர்க்கவியலாமல் உலகப் பரிமாணங்களிலான ஒரு மோதலாக ஒன்றிணைந்தாக வேண்டும். முதலாளித்துவ வர்க்கம், நிச்சயமாக, ஒரு புதிய போரால் அதன் மேலாதிக்கத்திற்கு ஏற்படவிருக்கும் மரண அபாயத்தைக் குறித்து நன்கறிந்துள்ளது. ஆனால், அந்த வர்க்கம் 1914 இன் சமயத்தில் இருந்ததை விட இப்போது போரைத் தவிர்ப்பதற்கு அளவிடவியலாதவாறு குறைந்த தகைமையைக் கொண்டுள்ளது.
உலகின் அனைத்து ஏகாதிபத்திய நாடுகளும் வளர்ந்து வரும் மக்கள் எதிர்ப்பையும், ஏராளமான சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளையும் எதிர்கொள்கின்றன. இவற்றுக்கு அவை போர் மற்றும் சர்வாதிகாரத்தை மட்டுமே தீர்வுகளாகக் கருதுகின்றன. அமெரிக்காவில், ட்ரம்ப் நிர்வாகம் பாரிய போராட்டங்களுக்கு முன்னால் ஒரு ஜனாதிபதி சர்வாதிகாரத்தை ஸ்தாபிக்க முனைந்து வருவதுடன், மேலும் உத்தரவாணைகள் மூலம் ஜனாதிபதி அதிகாரத்தை விரிவுபடுத்துவதற்கான ஒரு வழிமுறையாக போரை காண்கிறது.
ஏகாதிபத்திய சக்திகளின் போர்த் திட்டங்களின் அளவு மற்றும் தாக்கங்கள் குறித்து தொழிலாள வர்க்கத்திற்குள் விழிப்புணர்வு இல்லாமையே தற்போதைய சூழ்நிலையின் மிகவும் அபாயகரமான அம்சமாகும். பத்து மில்லியன் கணக்கானவர்கள் காஸா இனப்படுகொலை மற்றும் ஜனாதிபதி சர்வாதிகாரத்தை நோக்கிய ட்ரம்ப் நிர்வாகத்தின் முனைவை எதிர்த்து போராடியுள்ள நிலையில், பரந்த உலகளாவிய போர் உந்துதல் மற்றும் அதன் அடித்தளத்தில் இருக்கும் காரணங்கள் குறித்த ஒரு புரிதல் அங்கே இல்லை.
போர், சமத்துவமின்மை மற்றும் சர்வாதிகாரத்திற்கு ஆதாரமான முதலாளித்துவத்தை தூக்கி வீசுவதற்கான ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில், தொழிலாள வர்க்கத்தின் ஒரு புதிய சர்வதேச போர்-எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டியெழுப்ப சோசலிச சமத்துவக் கட்சி போராடி வருகிறது. ஏகாதிபத்திய போர் இயந்திரத்தை கலைப்பதற்கும், நிதியியல் தன்னலக்குழுவின் அதிகாரத்தை தூக்கியெறிவதற்கும், சமத்துவம், அமைதி மற்றும் பொருளாதார வாழ்க்கையின் ஜனநாயகக் கட்டுப்பாட்டை அடிப்படையாகக் கொண்ட, ஒரு புதிய சமூகத்தின் அடித்தளமாக தொழிலாளர் அதிகாரத்தை நிறுவுவதற்கும், அனைத்து நாடுகளின் தொழிலாளர்களையும் ஒரு நனவான அரசியல் போராட்டத்தில் ஐக்கியப்படுத்துவதே இதன் அர்த்தமாகும்.