முன்னோக்கு

கிரேக்க சர்வஜன வாக்கெடுப்புக்குப் பிந்தைய பத்து ஆண்டுகள்: சிரிசாவின் காட்டிக்கொடுப்பின் படிப்பினைகள்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

கிரேக்கப் பிரதமர் அலெக்சிஸ் சிப்ராஸ், ஏதென்ஸில் உள்ள கிரேக்கப் பாராளுமன்றத்தில் சிரிசா ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பில் கலந்து கொள்கிறார். புதன்கிழமை, ஜூலை 15, 2015. [AP Photo/Petros Karadjias]

கிரேக்கத்தில் பத்தாண்டுகளுக்கு முன்னர் இதே மாதத்தில், சிக்கன நடவடிக்கைகளை நிராகரித்த தேசிய சர்வஜன வாக்கெடுப்பின் பெருவாரியான முடிவை சிரிசா (”தீவிர இடதுகளின் கூட்டணி”) அரசாங்கம் தலைகீழாக மாற்றியது. ஜூலை 5, 2015 அன்று, கிரேக்கத் தொழிலாளர்கள் ஐரோப்பிய ஒன்றியம் கோரிய மேலதிக சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக ஒரு தீர்க்கமான வாக்கை அளித்தனர். மக்கள் நிராகரித்த அதே வெட்டுக்களை சிரிசா அரசாங்கம் திணிப்பதன் மூலம் இதற்கு பதிலளித்தது.

சர்வஜன வாக்கெடுப்பு சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு இன்றியமையாத அனுபவமாக இருந்ததுடன், தற்போதைய அரசியல் நிலைமையில் மிகவும் பொருத்தமான பிரமாண்டமான அரசியல் படிப்பினைகளைக் கொண்டிருக்கிறது.

ஐரோப்பிய ஒன்றியத்தால் திணிக்கப்பட்ட மிருகத்தனமான சிக்கன நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவருவதாக வாக்குறுதியளித்து 2015 ஜனவரியில் சிரிசா அதிகாரத்திற்கு வந்தது. அதற்கு முந்தைய ஆண்டுகளில், 2008 நிதியியல் பொறிவுக்குப் பிந்தைய காலத்தில் ஊதியங்கள், ஓய்வூதியங்கள் மற்றும் சமூக சேவைகள் மீதான ஓர் உலகளாவிய தாக்குதலின் குவிமையமாக கிரேக்கம் ஆகியிருந்தது. தேர்தலுக்கு முந்தைய ஆண்டுகளில், கிரேக்கத் தொழிலாளர்கள் டசின் கணக்கான பொது வேலைநிறுத்தங்களை நடத்தினர். இது சர்வதேச நிதியத்தின் உத்தரவின் பேரில் விதிக்கப்பட்ட முன்னெப்போதும் இல்லாத வெட்டுக்களுக்கு எதிரான ஒரு சக்திவாய்ந்த எதிர்ப்பின் வெளிப்பாடாக இருந்தது.

ஊடக சித்தரிப்புகளும், ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களின் கண்டனங்களும் மற்றும் சிரிசாவின் சொந்த வாய்வீச்சுக்களும் சிரிசா தலைவர் அலெக்சிஸ் சிப்ராஸ் மற்றும் அவரது நிதியமைச்சர் யானிஸ் வரூஃபாகிஸ் ஐரோப்பிய ஒன்றியம் விதித்த கட்டளைகளுக்கு எதிர்ப்பை அதிகரிப்பார்கள் என்ற பிரமைகளை வளர்த்தன. ஐரோப்பா எங்கிலும் மற்றும் சர்வதேச அளவிலும், போலி-இடது மற்றும் “முதலாளித்துவ-எதிர்ப்பு” கட்சிகள், சிரிசாவின் வெற்றியை இடதுக்கான ஒரு திருப்புமுனை என்றும் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பிற்கான ஒரு முன்மாதிரி என்றும் புகழ்ந்தன.

சிரிசா தனது தேர்தல் வாக்குறுதிகளை விரைவாகக் கைவிட்டது. வலதுசாரி தேசியவாத சுதந்திர கிரேக்கர்கள் (அனெல்) கட்சியுடன் ஒரு அரசாங்கத்தை அமைத்த பிறகு, கிரேக்கத்திலும் சர்வதேச அளவிலும் ஆளும் வர்க்கத்தின் நலன்களுக்கு எந்த அடிப்படை அச்சுறுத்தலையும் ஏற்படுத்தாது என்பதற்கான சமிக்ஞையாக, சிப்ராஸ் மற்றும் வரூஃபாகிஸ் கிரேக்க தொழிலாளர்களுக்கு விற்கக்கூடிய ஒரு சில துண்டுகளுக்காக ஐரோப்பா முழுவதும் பிச்சை எடுக்கச் சென்றனர். இவை நிராகரிக்கப்பட்ட போது, “சிக்கன நடவடிக்கைகளை திரும்பப் பெறுவதைத்” தவிர்ப்பதாகவும், அதன் “அனைத்து கடன் வழங்குநர்களுக்கும் அதன் நிதிக் கடமைகளை மதிக்கும்” என்றும் நிபந்தனை விதிக்கும் ஒப்பந்தத்தில் சிரிசா கையெழுத்திட்டது.

இதன் பின்னர், சோர்வடைந்த மற்றும் விரக்தியடைந்த மக்கள், ஒரு அவலட்சணமான சிடுமூஞ்சித்தனமான நடவடிக்கைக்கு, “ஆம்” என்று வாக்களிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பில், சிரிசா ஜூலை 2015 சர்வஜன வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுத்தது. இதனால் அரசாங்கத்திற்கு அதன் சரணடைதலுக்கான சாக்குப்போக்கை வழங்கியது. “இல்லை” என்ற வாக்களிப்பை உத்தியோகபூர்வமாக வழிமொழிந்த அதே வேளையில், அத்தகைய முடிவு முதலாளித்துவ ஐரோப்பாவின் முழு கோபத்தைத் தூண்டும் என்றும் - ஐரோப்பிய ஒன்றியம், ஐரோப்பிய மத்திய வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கைகளை எதிர்க்கும் எந்த திட்டமும் இல்லை, எந்த நோக்கமும் இல்லை என்றும் சிரிசா தெளிவுபடுத்தியது.

சர்வஜன வாக்கெடுப்புக்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக, ஜூலை 3, 2015 இல் “கிரேக்கத்தில் ஐரோப்பிய ஒன்றிய சிக்கன நடவடிக்கைகள் மீதான சிரிசாவின் சர்வஜன வாக்கெடுப்பின் அரசியல் மோசடி,” என்ற தலைப்பில் உலக சோசலிச வலைத் தளம் வெளியிட்ட ஒரு அறிக்கையில், அந்த சர்வஜன வாக்கெடுப்பு ஒரு அரசியல் பொறி என்று முன்கூட்டியே தொழிலாளர்களை எச்சரித்தது:

சிப்ராஸ் அவரது சர்வஜன வாக்கெடுப்பின் உள்ளடக்கத்தை உழைக்கும் மக்களுக்கு சுருக்கமாக விளக்கினால், அவரால் இவ்வாறு கூற முடியும்: ஐரோப்பிய ஒன்றியம் வெற்றி பெறுகிறது, வால்கள் நீங்கள் இழக்கிறீர்கள். ஐந்தாண்டு கால சிக்கன நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டு வருவதாக சூளுரைத்து சிரிசா தேர்தலில் வென்று வெறும் சில மாதங்களுக்குப் பின்னர் வந்துள்ள இந்த சர்வஜன வாக்கெடுப்பு, ஐரோப்பிய ஒன்றியத்திடம் சரணடைவதற்கு அரசியல் மூடுதிரையை வழங்குவதற்காக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சிரிசா போராட உத்தேசித்திருந்தால், கிரேக்க மக்களால் ஏற்கனவே நிராகரிக்கப்பட்டுள்ள ஐரோப்பிய ஒன்றிய சிக்கன நடவடிக்கைகள் மீது ஒரு சர்வஜன வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுக்க வேண்டிய அவசியம் அதற்கு இருந்திருக்காது.

இந்த மதிப்பீடு பின்னர் நடந்தவற்றில் நிரூபிக்கப்பட்டது. ஜூலை 5, 2015 அன்று, கிரேக்க தொழிலாள வர்க்கம் 61 முதல் 39 சதவீதம் வரை “Oxi”/இல்லை என்ற மிகப்பெரிய வாக்குகளை வழங்கியது. ஆத்திரமடைந்த ஆளும் வர்க்கம் இன்னும் கடுமையான சிக்கன நடவடிக்கைகளை கோரியது. சிப்ராஸ் உடனடியாக புரூசெல்ஸுக்கு திரும்பிச் சென்று, ஜூலை 13 அன்று, ஐரோப்பிய ஒன்றியத்தின் கட்டளைக்கு உடன்பட்டு, முன்னொருபோதும் இல்லாத படுமோசமான சிக்கன நடவடிக்கைத் தொகுப்பை நாடாளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பங்கிற்கும் அதிகமானவர்களின் வாக்குகளுடன் நிறைவேற்றினார்.

ஐரோப்பா எங்கிலும் மற்றும் சர்வதேச அளவிலும் பாரிய ஆதரவை வென்றிருக்கக் கூடிய இந்த துரோகிகளின் அரசாங்கத்தை தூக்கியெறிய கிரேக்க தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பை அணிதிரட்ட சிரிசாவின் ஒரேயொரு முன்னணி உறுப்பினர் கூட எந்த முயற்சியும் செய்யவில்லை. அதற்கு பதிலாக வாருஃபாகிஸ் ராஜினாமா செய்து, தனது ஆடம்பர தீவு வீட்டிற்கு பின்வாங்கினார்.

இந்த அபிவிருத்திகள் முழுவதிலும், உலக சோசலிச வலைத் தளமும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் இதன் அடிப்படை அரசியல் பிரச்சினைகளை விளக்கின. “போலி-இடது என்றால் என்ன,” என்று ஜூலை 30, 2015 இல் பிரசுரித்த ஒரு அறிக்கையில், உலக சோசலிச வலைத் தளம், ஒரு பரந்த சர்வதேச நிகழ்வுபோக்கின் பாகமாக சிரிசாவின் காட்டிக்கொடுப்பை திறனாய்வு செய்தது.

“நடுத்தர வர்க்கத்தின் தனிச்சலுகை கொண்ட மற்றும் வசதியான அடுக்குகளின் சமூகப் பொருளாதார நலன்களை ஊக்குவிப்பதற்காக ஜனரஞ்சகவாத சுலோகங்களையும் ஜனநாயக வாய்வீச்சுகளையும் பயன்படுத்துகின்ற” அரசியல் சக்திகளாக” போலி-இடதுகளை உலக சோசலிச வலைத் தளம் வரையறுத்தது. போலி-இடதுகள் “வர்க்கப் போராட்டத்தை எதிர்க்கிறது, தொழிலாள வர்க்கத்தின் மத்திய பாத்திரத்தையும் புரட்சியின் அவசியத்தையும் மறுக்கிறது... போலி-இடதுகளின் பொருளாதார வேலைத்திட்டம், அதன் அடிப்படையில், முதலாளித்துவ-சார்பு மற்றும் தேசியவாதமாகும்” என்று அது விளக்கியது.

2011 எகிப்திய புரட்சியின் போது, பாரிய புரட்சிகர எழுச்சியைத் தடம்புரளச் செய்வதற்கும் அதை மீண்டும் முதலாளித்துவ அரசியலுக்குள் திருப்பிவிடுவதற்கும் “இடது” சக்திகள் தலையீடு செய்த போது, முதன்முதலில் தெளிவாக தோன்றிய ஒரு பரந்த போக்கின் பாகமாக சிரிசா இருந்தது.

சிரிசாவின் காட்டிக்கொடுப்புக்குப் பிந்தைய ஆண்டுகளில், தொழிலாளர்களும் இளைஞர்களும் உலகெங்கிலும் இதேபோன்ற அனுபவங்களை எதிர்கொண்டனர்: இலத்தீன் அமெரிக்காவின் “இளஞ்சிவப்பு அலை” அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலன்களுக்கான எதிர்ப்பை அடிபணியச் செய்தது; ஸ்பெயினில் பொடெமோஸ் ஸ்பானிய சோசலிஸ்ட் கட்சி தலைமையிலான சிக்கன நடவடிக்கை அரசாங்கத்தில் இணைந்தது; பிரிட்டனில் ஜெர்மி கோர்பின் சிக்கன நடவடிக்கைகள் மற்றும் போருக்கு எதிரான பாரிய எதிர்ப்பைத் தணித்து, வக்கிரமான பிற்போக்குத்தனமான தொழிற் கட்சி வலது கட்டுப்பாட்டை மீண்டும் எடுக்க அனுமதித்தார்; அமெரிக்காவில் பேர்ணி சாண்டர்ஸ், அதிகரித்து வந்த அதிருப்தியை ஹிலாரி கிளிண்டன், ஜோ பைடென் மற்றும் ஜனநாயகக் கட்சிக்குப் பின்னால் திருப்பினார்.

அரசியல் கோட்பாட்டாளர்களான சாண்டல் மூஃப் மற்றும் எர்னஸ்டோ லாக்லாவ் ஆகியோர் இந்தப் போக்கிற்கான கருத்தியல் கட்டமைப்பை வழங்கினர். “இடது ஜனரஞ்சகவாதம்” குறித்த அவர்களின் கருத்துரு மார்க்சிசத்தையும் தொழிலாள வர்க்கத்தின் மத்திய பாத்திரத்தையும் நிராகரித்தது. அதற்கு பதிலாக எந்த சீர்திருத்தங்களையும் வழங்குவதற்கு இயலாத குட்டி-முதலாளித்துவ தேசியவாதம் சீர்திருத்தவாதத்தின் மறுமலர்ச்சியை ஆதரித்தது.

இந்த காட்டிக்கொடுப்புகள் கடந்த பத்தாண்டுகளில் தொழிலாள வர்க்கத்திற்கு பேரழிவுகரமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன. இது ஒரு பெரும் செல்வந்த தன்னலக்குழுவை மேலும் வளப்படுத்தவும், மில்லியன் கணக்கானவர்களை சமூக நெருக்கடியில் தள்ளவும் வழி வகுத்தது.

இந்த நிகழ்வுகளில் இருந்து முடிவுகளை எடுப்பது என்பது குறிப்பிட்ட தலைவர்கள் மற்றும் கட்சிகளின் தோல்விகள் அல்லது ஏமாற்றுத்தனங்கள் பற்றி புலம்பும் விடயமல்ல. மாறாக, அவர்களின் அரசியலின் திவால்தன்மையை புரிந்துகொண்டு அவர்களை நிராகரிப்பதாகும்.

அவர்கள் அனைவரும் தொழிலாள வர்க்கத்தை குறைந்தபட்ச சீர்திருத்தங்களின் திட்டத்திற்கு ஆட்சேர்ப்பு செய்ய முயன்றனர். மேலும், சமூக வர்க்கத்தை விட ஆளும் வர்க்கத்தின் தனிப்பட்ட அடையாளப் பிரச்சினைகளை மையமாகக் கொண்டிருந்தனர்.

முதலாளித்துவ அமைப்புமுறையைப் பேணுவதை அடிப்படையாகக் கொண்ட அவர்களது வேலைத்திட்டம், சொத்துடைமை, ஆளும் உயரடுக்கினரிடையே செல்வக் குவிப்பு, மலைப்பூட்டும் சமூக சமத்துவமின்மை மட்டங்கள் மற்றும் ஏகாதிபத்திய இராணுவவாதம் போன்ற முக்கிய பிரச்சினைகளை பெருமளவில் புறக்கணித்தது.

அற்ப சீர்திருத்தவாத அபிலாஷைகள் ஆளும் உயரடுக்குகள் மற்றும் அவற்றின் அரசாங்கத்திடம் இருந்து எதிர்ப்பை எதிர்கொண்டபோது, ஒரு சீர்திருத்தவாத வேலைத்திட்டத்தின் அனைத்து அடையாளங்களும் கைவிடப்பட்டன. மேலும் சிக்கன நடவடிக்கைகளின் மற்றொரு அரசாங்கம் திணிக்கப்பட்டது.

லியோன் ட்ரொட்ஸ்கி அவரது ரஷ்யப் புரட்சியின் வரலாறு என்ற நூலில் குறிப்பிட்டது போல:

நடைமுறையில் ஒரு சீர்திருத்தவாதக் கட்சி தான் சீர்திருத்த உத்தேசித்துள்ள அஸ்திவாரங்களை அசைக்க முடியாததாகக் கருதுகிறது. இவ்வாறு அது தவிர்க்கவியலாமல் ஆளும் வர்க்கத்தின் கருத்துக்களுக்கும் ஒழுக்கநெறிகளுக்கும் அடிபணிகிறது. பாட்டாளி வர்க்கத்தின் முதுகில் ஏறி எழுந்த சமூக ஜனநாயகவாதிகள் இரண்டாம் தர முதலாளித்துவக் கட்சியாக மட்டுமே ஆகிவிட்டனர்.

2010 களில் முன்வைக்கப்பட்ட அதே கேள்வியை வரலாறு மீண்டுமொருமுறை சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் முன் வைத்துள்ளது. ஆனால், இப்போது பணயம் இன்னும் அதிகமாக உள்ளது.

2020 இல் கோவிட்-19 தொற்றுநோயின் தோற்றம், முதலாளித்துவ சிக்கன நடவடிக்கைகள், இராணுவவாதம் மற்றும் சமூக எதிர்புரட்சியின் ஒரு தீவிரப்படுத்தலைத் தூண்டியது. பெருநிறுவன இலாபங்களைப் பாதுகாப்பதற்காக மில்லியன் கணக்கான உயிர்கள் வைரஸுக்கு தியாகம் செய்யப்பட்டன. பணவீக்கம் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரங்களை சீரழித்தது. ஐரோப்பாவில் போர் வெடித்தது, காஸாவில் ஒரு இனப்படுகொலை கட்டவிழ்த்து விடப்பட்டது, ஒவ்வொரு பிரதான ஏகாதிபத்திய சக்தியிலும் இராணுவ வரவு-செலவு திட்டக்கணக்குகள் வெடித்துச் சிதறின—இவை அனைத்துக்கும் 20 ஆம் நூற்றாண்டில் தொழிலாள வர்க்கம் வென்றெடுத்திருந்த சமூக தேட்டங்களில் எஞ்சியிருந்தவற்றை அழிப்பதன் மூலமாக நிதியளிக்கப்படுகிறது.

இந்த தாக்குதல்களுடன் சேர்ந்து, ஆளும் வர்க்கம் அதிகரித்தளவில் பாசிசம் மற்றும் சர்வாதிகாரத்தை நோக்கி திரும்பியுள்ளது. இது அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்பின் எழுச்சியிலும் உலகெங்கிலுமான முதலாளித்துவ அரசாங்கங்களின் அதிகரித்து வரும் எதேச்சதிகாரத்திலும் மிகவும் கூர்மையாக வெளிப்பட்டுள்ளது.

மீண்டுமொருமுறை, தொழிலாளர்கள் வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களின் அலையுடன் இதற்கு பதிலிறுத்தனர். 2022 மற்றும் 2023 ஆண்டுகளில் 1980 களில் இருந்து இங்கிலாந்தில் அதிக எண்ணிக்கையிலான வேலைநிறுத்த நாட்கள் காணப்பட்டன. அமெரிக்காவில், முந்தைய இரண்டு தசாப்தங்களில் எந்த நேரத்தையும் விட 2023 அதிக பெரிய வேலைநிறுத்தங்களைக் கண்டது. இந்த தொழில்துறை நடவடிக்கையானது, ஐக்கிய இராஜ்ஜியத்தில் காஸா இனப்படுகொலைக்கு எதிரான பாரிய ஆர்ப்பாட்டங்கள் மற்றும் அமெரிக்காவில் மில்லியன் கணக்கான மக்கள் பங்கேற்ற “மன்னர்கள் வேண்டாம்” போராட்டங்கள் உட்பட முன்னொருபோதும் இல்லாத எதிர்ப்பு இயக்கங்கள் இணைந்தன.

இந்த இயக்கங்களை அரசு ஒடுக்குவது, —எல்லாவற்றிற்கும் மேலாக, தொழிற்சங்க அதிகாரத்துவத்தால் தொடர்ந்து செய்யப்படும் நாசவேலைகள்— போராட்டக் களங்களிலும் தெருக்களிலும் போர்க்குணத்திற்கு அப்பால் அரசியல் பதில்களைத் தேட தொழிலாளர்களைத் தள்ளியுள்ளது. இந்த நிகழ்ச்சிப்போக்கு தான் அமெரிக்காவில் ஜோஹ்ரான் மம்தானி, இங்கிலாந்தில் ஜெரெமி கோர்பின், பிரான்சில் ஜோன்-லூக் மெலன்சோன் மற்றும் பிற இடங்களில் இதே போன்ற நபர்களை கவனத்தில் கொள்ள வைத்துள்ளது. வரூஃபாகிஸ் கூட தன்னை ஒரு இடதுசாரி நபராகக் காட்டிக்கொள்ளும் துணிச்சலைக் கொண்டுள்ளார்.

தொழிலாள வர்க்கத்தின் முன்னேறிய அடுக்குகள் தாங்கள் தற்போது ஆதரிக்கும் தலைவர்களின் திவாலான அரை சீர்திருத்தவாதத்தை நிராகரிக்கவும் எதிர்க்கவும் கற்றுக்கொண்டால் மட்டுமே தொழிலாளர்களின் சோசலிச அபிலாஷைகளை நிறைவேற்ற முடியும். இது இல்லாமல், தொழிலாள வர்க்கம் முன்பினும் அதிக பேரழிவுகரமான விளைவுகளுடன், சிரிசா அனுபவத்தை மீண்டும் செய்ய நிர்பந்திக்கப்படும்.

சீர்திருத்தவாதக் கட்சியின் தர்க்கத்தை விவரித்த பின்னர், ட்ரொட்ஸ்கி எல்லாவற்றுக்கும் மேலாக 1917 அக்டோபர் ரஷ்யப் புரட்சிக்கு தலைமை தாங்கிய, விளாடிமீர் லெனினால் கட்டியெழுப்பப்பட்ட போல்ஷிவிக் கட்சியை வேறுபடுத்திக் காட்டுகிறார்:

முதலாளித்துவ சித்தாந்தத்திலிருந்து தேவையான தூரத்துக்கு கட்சி விழிப்புடன் சமரசம் செய்ய முடியாத அளவிற்கு பராமரிக்கப்பட்டது… கட்சிக்கும் உத்தியோகபூர்வ சமூக அபிப்பிராயத்திற்கும் இடையில் ஒரு குட்டி-முதலாளித்துவ சூழலை உருவாக்கும் பிணைப்புகளை துண்டித்து தனது லான்செட்டைக் கொண்டு வேலை செய்வதில் லெனின் ஒருபோதும் சோர்வடையவில்லை... போல்ஷிவிக் கட்சி முதலாளித்துவ சமூகக் கருத்தில் இருந்து சுயாதீனமான, சமரசமற்ற முறையில் அதை எதிர்க்கும், தனக்கென ஒரு அரசியல் ஊடகத்தை மட்டுமின்றி, தார்மீக ஊடகத்தையும் உருவாக்கிக் கொண்டது.

உலகம் பூராவும் உள்ள சோசலிச சமத்துவக் கட்சிகள் இந்த பாரம்பரியத்திலேயே தொழிலாளர்களை புரட்சிகர சோசலிச சர்வதேசியவாத வேலைத்திட்டத்திற்கு வென்றெடுக்க முயற்சிக்கின்றன. தொழிலாள வர்க்கத்தின் ஒரு புதிய, சோசலிசக் கட்சியின் அவசியத்தைக் காணும் தொழிலாளர்களையும் இளைஞர்களையும் சிரிசாவின் அனுபவத்தையும் உலக சோசலிச வலைத் தளம் பிரசுரித்த அறிக்கைகளையும் படிக்குமாறு நாங்கள் ஊக்குவிக்கிறோம். சோசலிச சமத்துவக் கட்சியின் கோட்பாடுகளை படித்து, அதில் இணைவதற்கான முடிவை எடுங்கள்.

Loading