முன்னோக்கு

டாலரின் வீழ்ச்சி அமெரிக்க மற்றும் உலக முதலாளித்துவத்தின் நெருக்கடியின் வெளிப்பாடாகும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

டெக்சாஸின் ஃபோர்ட் வொர்த்தில் உள்ள நாணயம் அச்சிடும் பணியகத்தின் மேற்கத்திய நாணய தொழிற்சாலையில் புதிதாக அச்சிடப்பட்ட அமெரிக்க டாலர் நோட்டுகளின் தாளை ஒரு தொழிலாளி எடுத்துச் செல்கிறார். [AP Photo/LM Otero]

1973 ஆம் ஆண்டுக்குப் பிறகு, இவ்வாண்டின் ஆரம்பம் அமெரிக்க டாலருக்கு இதுவரை இல்லாத வகையில் மிக மோசமானதாக அமைந்துள்ளது. 1971 ஆகஸ்ட் மாதம், ஜனாதிபதி நிக்சன் டாலரின் தங்க ஆதரவை நீக்கி, 1944 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட பிரெட்டன் வூட்ஸ் ஒப்பந்தத்தை இரத்து செய்தார். இந்த ஒப்பந்தம், 1930களின் நிதி அராஜகத்துக்குப் பின்னர் உருவாக்கப்பட்ட போருக்குப் பிந்தைய நாணய அமைப்பின் ஒரு முக்கிய தூணாக இருந்தது.

இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், ஆறு முக்கிய நாணயங்களுக்கு எதிராக 10 சதவிகிதத்திற்கும் மேலாக டாலர் சரிந்துள்ளது. இது நிதி நெருக்கடி மற்றும் அழுத்த காலங்களில் மேலாதிக்கம் செலுத்தும் நாணயமாகவும் பாதுகாப்பான புகலிடமாகவும் அதன் நிலை மீதான நம்பிக்கை இழப்பின் அறிகுறியாகும்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே டாலரின் மதிப்பு கீழ்நோக்கிய அழுத்தத்தில் இருந்து வந்தது. ஏப்ரல் 2 ஆம் தேதி ட்ரம்ப் பல்வேறு நாடுகளின் மீது பாரிய “பரஸ்பர சுங்க வரிகளை” விதிப்பதாக அறிவித்ததைத் தொடர்ந்து அதன் சரிவில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டது.

இந்த முடிவால் அடையாளம் காணப்பட்ட போருக்குப் பிந்தைய சர்வதேச வர்த்தக அமைப்பில் ஏற்பட்ட வீழ்ச்சி, நிதிக் கொந்தளிப்பைத் தூண்டியது. மேலும், அமெரிக்க பத்திர சந்தையில் ஏற்பட்ட ஒரு குறிப்பிடத்தக்க வீழ்ச்சி ஆதாயங்களை (வட்டி விகிதங்கள்) உயர்த்தியது.

ஆனால் “வழமையான” பிரதிபலிப்பாக கருதப்படும் டாலரை நோக்கி நகர்வதற்குப் பதிலாக, டாலர் விற்பனை அதிகரித்து,, நாணயச் சந்தைகளில் அதன் மதிப்பு வீழ்ச்சியடைந்தது. ஏனெனில் “அமெரிக்காவை விற்றுவிடு” என்பதுதான் மேலோங்கிய உணர்வாக இருந்தது.

பேச்சுவார்த்தைகளை அனுமதிக்கும் வகையில், சுங்க வரி உயர்வுகளுக்கு 90 நாள் இடைநிறுத்தம் வழங்க ட்ரம்ப் ஏப்ரல் 9 அன்று முடிவு செய்த போதிலும், இந்த கீழ்நோக்கிய சரிவு தொடர்ந்தது. பத்திரச் சந்தைகளில் ஏற்பட்ட விற்பனைக்கு பதிலளித்த ட்ரம்ப், இது சற்று “மோசமாகத்” தொடங்கியதாகக் கூறினார்.

அப்போதிருந்து, கிட்டத்தட்ட மூன்று மாத காலத்தில், பிரிட்டன் உடனான ஒரு ஒப்பந்தத்தைத் தவிர, எந்த ஒப்பந்தங்களும் அறிவிக்கப்படவில்லை, மேலும் இடைநிறுத்தத்தின் முடிவுக்கான ஜூலை 9 காலக்கெடு நெருங்கி வருவதால் பதட்டம் திரும்பி வருகிறது. இந்த கவலை வெறுமனே ஒட்டுமொத்த பரஸ்பர வரிவிதிப்புகள் மீது மட்டுமல்ல, மாறாக ட்ரம்ப் அறிவித்த ஏனைய நடவடிக்கைகள், குறிப்பாக ஜப்பான் மற்றும் ஜேர்மனியை இலக்காகக் கொண்ட வாகனங்கள் மீதான வரிவிதிப்பு உயர்வுகள் குறித்தும் கவலைகள் உள்ளன.

ஜப்பான் அதன் கார் தொழில்துறைக்கு பத்து பில்லியன் கணக்கான டாலர்கள் இழப்பை ஏற்படுத்த அச்சுறுத்தும் இந்த வரிவிதிப்பு உயர்வுகள் குறித்து ட்ரம்ப் நிர்வாகத்துடன் தொடர்ச்சியான கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளது, ஆனால் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை.

டாலரின் சரிவு குறித்து பைனான்சியல் டைம்ஸுக்கு கருத்துரைக்கையில், நேற்று அது இன்னும் 0.5 சதவீதம் வீழ்ச்சியடைந்த பின்னர், நிதியியல் நிறுவனமான ING இன் ஒரு அந்நிய செலாவணி மூலோபாயவாதி பிரான்செஸ்கோ பெசோல் சில காரணங்களை இவ்வாறு சுட்டிக்காட்டினார்.

“டாலர் ட்ரம்ப் 2.0 இன் ஒழுங்கற்ற கொள்கைகளின் சவுக்கடியாக மாறியுள்ளது,” என்று கூறிய அவர், வரிவிதிப்பு போர், அமெரிக்க கடன் அதிகரிப்பு மற்றும் அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்தின் மீதான தொடர்ச்சியான தாக்குதல்களை மேற்கோளிட்டார்.

பெடரல் விகிதத்தை அதன் தற்போதைய மட்டமான 4.5 சதவீதத்திலிருந்து 1 அல்லது 2 சதவீதத்திற்கு குறைக்க வேண்டும் என்ற அவரது கோரிக்கைக்கு இணங்க வட்டி விகித வெட்டுக்களைக் குறைக்க மறுத்ததற்காக பெடரல் வங்கியின் தலைவர் ஜெரோம் பவலை ஒரு “முட்டாள்” என்றும் “மடையன்” என்றும் ட்ரம்ப் முத்திரை குத்தியுள்ளார்.

ட்ரம்பின் நிகழ்ச்சி நிரலில் இருந்து விளைந்த கொந்தளிப்பு மற்றும் அவரது வரி-வெட்டு வரவு-செலவு திட்டக்கணக்கில் இருந்து பாயும் கடன் அதிகரிப்பு, இது அமெரிக்க கடன் மலையான 36 ட்ரில்லியன் டாலருடன் ஏறக்குறைய 3.2 ட்ரில்லியன் டாலர் கூடுதலாக சேர்க்கப்படலாம் என்பது, பைனான்சியல் டைம்ஸ் நடத்திய ஒரு கருத்துக்கணிப்பில், பொருளாதார வல்லுனர்களால் கருத்துக்களில் மேற்கோளிடப்பட்டன.

கருத்துக்கணிப்பு குறித்த தனது அறிக்கையில், ‘ட்ரம்பின் தலைசுற்ற வைக்கும் நிதிக் கொள்கை வரம்புமீறல்களும், பெடரல் ரிசர்வின் சுதந்திரத்தின் மீதான தாக்குதல்களும் இணைந்து, வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கான இறுதிப் புகலிடம் என்ற அமெரிக்காவின் தகுதியைக் குறைக்கும் அபாயத்தை ஏற்படுத்துகின்றன’ என்று ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.

ஆஸ்டினில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தின் சரோஜ் பட்டாராய் எழுதிய ஒரு விமர்சனம் பொதுவான உணர்வைச் சுருக்கமாகக் கூறுகிறது.

“பாதுகாப்பான புகலிடச் சொத்துக்களாக சுவிஸ் பிராங்கும் தங்கமுமே தற்போது தோன்றுகின்றன. உண்மையில், அமெரிக்கா ஒரு வளர்ந்து வரும் சந்தையைப் போல காட்சியளிக்கிறது; அங்கு நிலவும் கொள்கை நிச்சயமற்ற தன்மையானது, ஆபத்துக்கான கூடுதல் ஈட்டத்தை (risk premia) அதிகரிக்கச் செய்கிறது. இது நீண்ட காலப் பத்திரங்களின் வருவாயை உயர்த்தி, நாணயத்தின் மதிப்பைக் குறைக்க வழிவகுக்கிறது.”

ட்ரம்பால் “விடுதலை தினம்” என்று வர்ணிக்கப்பட்ட ஏப்ரல் 2 க்குப் பின்னர் என்ன நடந்தது என்பதை மேற்கோளிட்டு, ஒரு பிரதான மாட்ரிட் பல்கலைக்கழகத்தின் பொருளாதார நிபுணர் ஈவி பாப்பா இவ்வாறு கூறினார்: “அமெரிக்க கருவூலம் [பத்திரங்கள்] இனியும் ஒரு பாதுகாப்பான சொத்தாக இருக்காது.”

அமெரிக்க டாலர் மீதான நம்பிக்கையின்மை தங்கத்தின் விலையை புதிய உயரங்களுக்கு உந்தித் தள்ளுகிறது - இது இந்த ஆண்டு சுமார் 25 சதவீதம் உயர்ந்துள்ளது மற்றும் ஒரு கட்டத்தில் அவுன்ஸ் ஒன்றுக்கு 3500 டாலரை எட்டியது, நிக்சன் அமெரிக்க டாலரில் இருந்து தங்க ஆதரவை அகற்றியபோது அதன் விலையான 35 ஐ விட 100 மடங்கு அதிகம். இந்த உயர்வின் இயக்கிகளில் ஒன்று மத்திய வங்கிகளின் அதிகரித்த கொள்முதல் ஆகும்.

ஐரோப்பிய வரி செலுத்துவோர் சங்கம் (TAE) இத்தாலி மற்றும் ஜேர்மனியின் நிதி அமைச்சகங்களுக்கும் மத்திய வங்கிகளுக்கும் கூட கடிதங்களை அனுப்பியுள்ளது, மன்ஹாட்டனில் உள்ள பெடரலின் தங்க பெட்டகத்தில் உள்ள அவர்களின் தங்கத்தை வெளியே கொண்டு செல்லுமாறு வலியுறுத்தியுள்ளது.

TAE தலைவர் மைக்கேல் ஜாகர் பைனான்சியல் டைம்ஸ் பத்திரிகைக்கு கூறுகையில், “பெடரல் ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்தை ட்ரம்ப் சீர்குலைப்பது குறித்து நாங்கள் மிகவும் கவலை கொண்டுள்ளோம்,” என்றார்.

1971-ஆம் ஆண்டு அமெரிக்க டாலரின் தங்க ஆதரவு நீக்கப்பட்டதை நினைவுகூரும் போது, அந்த அச்சங்கள் தவறானவை அல்ல. ஏனெனில், அந்த முடிவு மற்ற சக்திகளுடன் எந்தவிதமான கலந்தாலோசனையும் இல்லாமல், ஒரு ஞாயிற்றுக்கிழமை இரவு தொலைக்காட்சியில் அறிவிக்கப்பட்டது மட்டுமே.

அதிகரித்து வரும் கடன்களுக்கு மத்தியில் டாலர் சரிவு தொடர்கையில், ட்ரம்ப் நிர்வாகம் எந்த கட்டத்திலும் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதற்கான ஒரு நிஜமான சாத்தியக்கூறு உள்ளது.

ட்ரம்ப் ஆட்சியின் பொருளாதார வட்டாரங்களில் சுற்றி வரும் ஒரு கருத்து என்னவென்றால், அமெரிக்க கருவூல பத்திரங்கள் நிரந்தர பத்திரங்களாக மாற்றப்படலாம். அதாவது, அவை தொடர்ந்து வட்டி செலுத்தும் அதேவேளையில், அசல் ஒருபோதும் திருப்பிச் செலுத்தப்படாது – இந்த நடவடிக்கை அமெரிக்காவால் அதன் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாததாகக் கருதப்படும்.

இது ஏப்ரல் மாதம் நிதி மந்திரி ஸ்காட் பெசன்டால் நிராகரிக்கப்பட்டது. ஆனால் குறைந்தபட்சம் தற்போதைக்காவது அவர் அதை அகற்ற வேண்டியிருந்தது என்பது கடன் நெருக்கடி ஆழமடைகையில் எத்தகைய நடவடிக்கைகள் விவாதிக்கப்படுகின்றன என்பதற்கான அடையாளம் ஆகும்.

ட்ரம்ப் நிர்வாகத்தின் நடவடிக்கைகள் டாலரின் சரிவுக்கு உடனடி காரணமாக இருந்தாலும், அவையே அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நீண்டகால பொருளாதார வீழ்ச்சியில் வேரூன்றிய வரலாற்று நெருக்கடியின் விளைபொருளாகும்.

போருக்குப் பிறகு, குறிப்பாக பிரெட்டன் வுட்ஸ் ஒப்பந்தத்தால், உலக முதலாளித்துவம் மீண்டும் நிலைநிறுத்தப்பட்டபோது, ​​அது உலகின் தொழில்துறை சக்தியாக இருந்தது. 1930களின் குழப்பத்திற்குப் பிறகு பொருளாதார ஒழுங்கை நிலைநாட்ட அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தியது.

இது அமெரிக்காவின் நல்லெண்ணத்தால் எழுந்ததல்ல. அதுபோன்றவொரு நடவடிக்கை இல்லையென்றால், உலகமும் அமெரிக்காவும் மீண்டும் பெருமந்தநிலை சகாப்த நிலைமைகளுக்குள் சரிந்து, அவற்றுடன் சமூக எழுச்சி மற்றும் புரட்சியின் அபாயத்தையும் சுமந்து செல்லும் என்ற புரிதலில் இருந்து அது எழுந்தது.

ஆனால், உலகப் பொருளாதாரத்தின் புத்துயிர்ப்பானது உலக வர்த்தகத்தில் அமெரிக்காவின் மேலாதிக்க நிலையை சீராக கீழறுத்தது, இது சென்மதி நிலுவை மற்றும் வர்த்தக பற்றாக்குறைகளுக்கு இட்டுச் சென்றது, இதன் அர்த்தம் அதனால் தங்கத்திற்கு டாலர்களை இனியும் மீட்க முடியாது என்பதாகும்.

நிக்சனின் முடிவுக்குப் பிறகு, டாலர் உலகின் முன்னணி நாணயமாக அதன் பங்கைத் தக்க வைத்துக் கொண்டது. ஆயினும், இது இப்போது புதிய அடித்தளங்களை அடிப்படையாகக் கொண்டிருந்தது: அது ஒரு ஃபியட் நாணயமாக மாறியது, அது இனியும் தங்க இருப்புக்களால் ஆதரிக்கப்படவில்லை, மாறாக அமெரிக்க அரசாங்கத்தின் அதிகாரம் மற்றும் அதன் நிதிச் சந்தைகளின் வலிமையால் ஆதரிக்கப்பட்டது.

(ஒரு ஃபியட் நாணயம் என்பது உள்ளார்ந்த மதிப்பு இல்லாத மற்றும் ஒரு சடப் பொருளால் (தங்கம் அல்லது வெள்ளி போன்றவை) ஆதரிக்கப்படாத பணமாகும். மாறாக, அதன் மதிப்பு அதை வெளியிடும் அரசாங்கத்தின் அதிகாரத்திலிருந்து மட்டுமே வருகிறது.)

ஆனால் அதையொட்டி ஏற்பட்ட நிதிய எழுச்சி தற்போதைய நெருக்கடிக்கு வழிவகுத்த நிகழ்ச்சிப்போக்குகளை தொடக்கி வைத்தது. கடந்த 50 ஆண்டுகளில், அமெரிக்கா நிதியியல் ஒட்டுண்ணித்தனம் மற்றும் ஊகங்களின் மையமாக மாறியுள்ளது. இதன் விளைவாக, தொடர்ச்சியான நிதிப் புயல்கள் ஏற்பட்டன - குறிப்பாக, அக்டோபர் 1987 பங்குச் சந்தை வீழ்ச்சி, 2001 இல் டாட்காம் குமிழியின் சரிவு, 2008 இன் சரிவு மற்றும் மார்ச் 2020 இன் கருவூல சந்தை முடக்கம், அவற்றில் சிலவற்றை இன்னும் குறிப்பிடலாம்.

இந்தக் காலகட்டம் முழுவதும், அரசாங்கக் கடன் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது, குறைந்தபட்சம் இராணுவச் செலவுகளின் அதிகரிப்பு மற்றும் பாரிய பெருநிறுவன பிணையெடுப்புகளால் ஏற்பட்டுள்ளது. இது, 2008 இல் சுமார் 5 ட்ரில்லியன் டாலராக இருந்ததில் இருந்து இன்று 29 ட்ரில்லியன் டாலராக அரசு கடன்கள் வாங்கப்பட்டு விற்கப்படும் கருவூல சந்தையின் வளர்ச்சியில் பிரதிபலிக்கிறது.

இலாப திரட்சிக்கான முக்கிய உந்துசக்தியாக ஒட்டுண்ணித்தனம் மற்றும் ஊகவணிகத்தின் எழுச்சி, நிதிய மூலதனத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு தன்னலக்குழுவின் எழுச்சிக்கு இட்டுச் செல்வது, நிதியச் சந்தை பரிவர்த்தனைகளில் வெறும் 15 சதவீதம் புதிய முதலீடுகளின் அபிவிருத்தியில் சம்பந்தப்பட்டுள்ளன என்ற உண்மையால் சுட்டிக்காட்டப்படுகிறது, 85 சதவீதம் நிதியியல் சொத்துக்களில் கொடுக்கல் வாங்கல்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது.

ஆனால் நிதி மூலதனம் கடனின் மூலம் காற்றிலிருந்து இலாபம் உருவாக்குவது போன்று தோன்றினாலும், அது முடிவில்லாமல் குவிந்து கொண்டிருக்க முடியாது. அனைத்து நிதி சொத்துக்கள்—பங்குகள், கடன்கள் மற்றும் பல்வேறு தெளிவற்ற நிதி உத்திகள்—இவை அனைத்தும் இறுதியில் தொழிலாளர் வர்க்கத்திடமிருந்து கறந்தெடுக்கப்பட்ட உபரி மதிப்பின் மீது உரிமை கோருகின்றன.

இதன் விளைவாக, முதலாளித்துவ ஒழுங்கின் கட்டமைப்பிற்குள் பெருகும் நெருக்கடிக்கு அமைதியான தீர்வு ஏதும் இல்லை. அமெரிக்காவைப் பொறுத்த வரையில், இதன் அர்த்தம், பொருளாதார மற்றும் இராணுவ முனையில், அது அதன் போட்டியாளர்கள், சீனா போன்ற எதிரிகளையும், அத்துடன் ஐரோப்பாவின் முன்னாள் கூட்டாளிகளையும் நசுக்க முனைகிறது, அத்துடன் உள்நாட்டில் தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான ஒரு போருடன் சேர்ந்து, ஒரு சர்வாதிகார ஆட்சியால் திணிக்கப்படுகிறது.

சீனா மற்றும் பெருகிய முறையில் ஐரோப்பாவால் முன்னெடுக்கப்படுவது போல், நாணயங்கள் ஒன்றிணைந்து அமைதியாக போட்டியிடும் பன்முக துருவ உலகம் என்றழைக்கப்படுவதற்கான சாத்தியக்கூறும் இல்லை. அந்தப் பாதை இரண்டாம் உலகப் போருக்கு இட்டுச் சென்ற 1930களின் பொருளாதார மோதல்களுக்குத் திரும்புவதாகும். இதனால்தான், ஆழமடைந்து வரும் பொருளாதார கொந்தளிப்பின் மத்தியில், உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் மீள்ஆயுதபாணியாகி வருகின்றன.

டாலர்-கடன் நெருக்கடி வெறுமனே ட்ரம்பின் ஆளுமை மற்றும் நடவடிக்கைகளில் வேரூன்றவில்லை, அவர் ஒட்டுமொத்தமாக முதலாளித்துவ அமைப்புமுறையின் வரலாற்று திவால்நிலையின் மிகவும் கொடூரமான வெளிப்பாடு மட்டுமே ஆவார்.

போர், பொருளாதார நெருக்கடி, இழப்புகள், பாசிசம் மற்றும் எதேச்சதிகார ஆட்சிகள் அடங்கிய இந்த அமைப்புமுறைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான அவசியத்தை சர்வதேச சோசலிசத்திற்கான அரசியல் போராட்டத்தில் மற்றும் சோசலிசப் புரட்சிக்கான உலகக் கட்சியான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவை கட்டியெழுப்புவதற்கான அவசியத்தை அது தொழிலாள வர்க்கத்தின் முன் வைக்கிறது.

Loading