முன்னோக்கு

பாரிய படுகொலை மூலம் உலக அமைதி: அமைதிக்கான நோபல் பரிசுக்கு ட்ரம்பை பரிந்துரைக்கிறார் நெதன்யாகு

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இடது, வெள்ளை மாளிகையின் மேற்குப் பகுதியை விட்டு வெளியேறும்போது இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் கைகுலுக்குகிறார். வாஷிங்டன் ஏப்ரல் 7, 2025 திங்கட்கிழமை [AP Photo/Mark Schiefelbein]

1939 ஜனவரியில், சுவீடன் நாடாளுமன்ற உறுப்பினர் எரிக் பிராண்ட், நோர்வே நோபல் கமிட்டிக்கு ஜேர்மன் சான்சிலர் அடோல்ஃப் ஹிட்லரை அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைத்து ஒரு இருண்ட நையாண்டி கடிதத்தை அனுப்பினார்.

மார்ச் 1938 இல் ஆஸ்திரியா ஜேர்மனியுடன் இணைக்கப்பட்டு ஆறு மாதங்களுக்குப் பிறகு, செக்கோஸ்லோவாக்கியா பிரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஹிட்லர் இடைவிடாமல் போருக்குத் தயாராகி வருகிறார் என்பதை அறிந்துகொண்ட பின்பே, பிராண்ட் இந்தக் கடிதத்தை எழுதினார்.

ஹிட்லரின் “அமைதி மீதான தீவிர அன்பு” அவரது புகழ்பெற்ற புத்தகமான எனது போராட்டத்தில் (Mein Kampf) ஆவணப்படுத்தப்பட்டுள்ளது – இது, “பைபிளுக்கு அடுத்தபடியாக, உலகின் மிகச் சிறந்த மற்றும் மிகவும் பிரபலமான இலக்கியப் படைப்பாக இருக்கலாம்” என்று பிராண்ட் கிண்டல் நிறைந்த வார்த்தைகளில் எழுதினார். போர் வெறியர்களால் துன்புறுத்தப்படாமல், அமைதியில் விடப்பட்டால், ஹிட்லர் ஐரோப்பாவையும், ஒருவேளை முழு உலகத்தையும் நிச்சயம் அமைதிப்படுத்துவார் என்று பிராண்ட் எழுதினார்.

இது ஒரு வெளிப்படையான நையாண்டியாக இருந்தாலும், இந்தக் கடிதத்தின் அர்த்தத்தை உலகப் பொதுமக்கள் முற்றிலுமாகப் புறக்கணித்தனர். அவர்கள் அதை உண்மையில் எடுத்துக் கொண்டனர், கொலை வெறி பிடித்தவருக்கு பாராட்டு என்று கருதினர், இது ஸ்வீடன் மற்றும் உலகம் முழுவதும் உள்ள செய்தித்தாள் தலையங்க அலுவலகங்களில் சீற்றத்தைத் தூண்டியது.

கடந்த திங்களன்று, இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகு மற்றொரு கொலைவெறி பிடித்தவரான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைத்தபோது இரண்டு விடயங்கள் வேறுபட்டிருந்தன. முதலாவதாக, நெதன்யாகு முற்றிலும் இது தொடர்பாக தீவிரமாக இருந்தார். இரண்டாவதாக, இது தொடர்பாக பத்திரிகை அலுவலகங்களில் எந்த சீற்றமும் இல்லை.

வெள்ளை மாளிகையில் நடந்த இரவு விருந்தில் நெதன்யாகு தனது கடிதத்தை நோபல் கமிட்டிக்கு அனுப்பியதாக அறிவித்தார். இந்த நியமனத்தை விளக்குகையில், நெதன்யாகு ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய குண்டுவீச்சின் “வரலாற்று வெற்றியை” பாராட்டினார். அதில், இவ்விரு நாடுகளும் டசின் கணக்கான படைத்துறைசாரா தலைவர்கள், இராணுவ அதிகாரிகள் மற்றும் விஞ்ஞானிகளைப் படுகொலை செய்வதற்கும், குறைந்தபட்சம் அறுநூறு அப்பாவி மக்களைக் கொன்றதற்கும் இராஜாங்க சாக்குபோக்கைப் பயன்படுத்திக் கொண்டன. “நாம் பேசுவதைப் போல, ஒரு நாட்டில், ஒரு பிராந்தியத்தில் அடுத்தடுத்து மற்றொரு நாட்டில், ட்ரம்ப் அமைதியை உருவாக்கி வருகிறார்” என்று நெதன்யாகு கூறினார்.

இதற்கு பெருமிதத்துடன் புன்னகைத்த ட்ரம்ப், ஈரான் மீதான தாக்குதலில் “முன்னொருபோதும் இல்லாத மிகப்பெரிய குண்டுகளை, நாம் இதுவரை எவர் மீதும் வீசியதிலேயே மிகப்பெரிய குண்டுகளை” பயன்படுத்தியதற்காக, உலக அமைதிக்கான தனது பங்களிப்பை ட்ரம்ப் பாராட்டினார். அதன்பின் ட்ரம்ப், ஜப்பானிய நகரங்களான ஹிரோஷிமா மற்றும் நாகசாகிக்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி ஹாரி ட்ரூமன் அணுஆயுதங்களைப் பயன்படுத்தியதைப் பாராட்டினார். “அது நிறைய சண்டைகளை நிறுத்தியது,” என்று கூறி, ஈரான் மீது ட்ரம்ப் வீசிய குண்டுகளில் அணுஆயுத குண்டுகள் இருக்கவில்லை என்று அவர் வருத்தம் தெரிவிப்பதாகத் தெரிகிறது.

காஸாவில் ட்ரம்ப் “அழுத்தமளித்து” ஒரு “போர்நிறுத்த” உடன்படிக்கை மூலமாக “சமாதானத்தை” வளர்த்தெடுப்பதற்கான ஒரு முயற்சியை மேற்கொள்கிறார் என்று அமெரிக்க மற்றும் சர்வதேச ஊடகங்கள் நெதன்யாகு உடனான ட்ரம்பின் சந்திப்பை பாராட்டின. “சமாதானம்” குறித்த அவர்களின் பார்வை பாலஸ்தீனிய மக்களை இனச்சுத்திகரிப்பு செய்வதையும், இதனை எதிர்க்கும் எவரையும் கொல்வதையும் உள்ளடக்கியது என்று இருவரும் வெளிப்படையாக கூறியிருந்தனர் என்ற உண்மையை இந்த ஊடகங்கள் பொருட்படுத்தவில்லை. மக்களை “இடமாற்றும்” ட்ரம்பின் திட்டத்தை, இந்த பயணம் தொடர்பான ஊடக செய்திக்குறிப்புகளில் குறிப்பிடப்படவில்லை. நிச்சயமாக, “இனச் சுத்திகரிப்பு” மற்றும் “இனப்படுகொலை” என்ற வார்த்தைகள், அமெரிக்க-இஸ்ரேலிய கொள்கைகள், காஸா பற்றிய ஊடக செய்திகளில் தடைசெய்யப்பட்டுள்ளன.

பட்டினியை போர் ஆயுதமாகப் பயன்படுத்தி வருவது உட்பட, இனப்படுகொலையின் போது இழைக்கப்பட்டுவரும் போர்க்குற்றங்களுக்காக நெதன்யாகு தற்போது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இருந்து கைது ஆணையை எதிர்கொள்கிறார். ஆனால் பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் இத்தாலி ஆகியவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் கைது ஆணையை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளன. ஜேர்மன் சான்சிலர் பிரெட்ரிக் மெர்ஸ் இந்த உத்தரவை மீறி நெதன்யாகுவை நாட்டிற்கு அழைக்கும் அளவுக்குச் சென்றுள்ளார்.

இனப்படுகொலைக்கு காரணமானவர்களை தண்டிக்க முயற்சிப்பதற்குப் பதிலாக, ஏகாதிபத்திய சக்திகளின் தலைவர்கள் அதை எதிர்ப்பவர்களை தண்டிக்கவே செயல்பட்டு வருகின்றனர். பிரிட்டனில் உள்ள ஒரு குழுவான பாலஸ்தீன நடவடிக்கை குழு, இங்கிலாந்து அரசாங்கத்தால் பயங்கரவாத அமைப்பாக முத்திரை குத்தப்பட்டுள்ளது. காஸா இனப்படுகொலைக்கு எதிரான போராட்டங்களுக்கு தலைமை தாங்கிய நீகேப் (Kneecap) மற்றும் பாப் வைலன் (Bob Vylan) ஆகிய இசைக் குழுக்களுக்கு எதிராக பயங்கரவாத குற்றச்சாட்டுகளை சுமத்த இங்கிலாந்து அரசாங்கம் முயன்று வருகிறது.

ட்ரம்ப் மற்றும் நெதன்யாகு சந்திப்பின் முக்கிய நோக்கம், அடுத்த கட்ட “அமைதிக்கான” சதித்திட்டத்தை தீட்டுவதாகும் - அதாவது, பாலஸ்தீனத்தில் அவர்களின் “இறுதித் தீர்வு”: பாலஸ்தீன மக்களை வதை முகாம்களில் அடைத்து வைத்து, அவர்களை இதர நாடுகளுக்கு வலுக்கட்டாயமாக இடம்பெயர வைப்பதற்கு தயாராகுவதாகும்.

காஸா பகுதியை “சொந்தமாக்கிக் கொள்வது”, “சமப்படுத்துவது” மற்றும் பாலஸ்தீன மக்களை “பிற நாடுகளுக்கு” அனுப்புவது என்ற அவரது திட்டத்தை ட்ரம்ப் முதன்முதலில் முன்வைத்த போது, அது ஒருவித விநோதமான “கனவாக” அமெரிக்க மற்றும் சர்வதேச ஊடகங்களால் சித்தரிக்கப்பட்டது. இது “சாத்தியமற்றது” மற்றும் “நடைமுறைக்கு மாறானது” என்று நியூ யோர்க் டைம்ஸ் கூறியது. இந்த முன்மொழிவு வெறுமனே ஒரு பேச்சுவார்த்தை தந்திரோபாயமாக இருக்கலாம் என்று அது பரிந்துரைத்தது.

அவர் அதை அறிவித்த ஆறு மாதங்களில், ட்ரம்ப் மற்றும் நெதன்யாகு முன்வைத்த திட்டம் மிகவும் தீவிரமானது என்பது இப்போது தெளிவாகியுள்ளது.

கடந்த திங்களன்று, இஸ்ரேலிய பாதுகாப்பு மந்திரி இஸ்ரேல் காட்ஸ், ஒட்டுமொத்த பாலஸ்தீன மக்களையும் தங்க வைக்கும் தெற்கு காஸாவில் உள்ள ரஃபா நகரின் இடிபாடுகளின் மீது ஒரு “மனிதாபிமான நகரம்” என்று அவர் அழைத்த ஒன்றைக் கட்டமைக்கும் திட்டங்களை அறிவித்தார். முகாமின் கட்டுமானம் “புலம்பெயர்ந்தோர் திட்டத்துடன்” ஒருங்கிணைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இந்தத் திட்டங்கள் இஸ்ரேலில் செயல்படுத்தப்படும் அதே வேளையில், அரசியல் ஸ்தாபனத்தின் முழு வரம்பையும் உள்ளடக்கிய முக்கிய நாடுகடந்த பெருநிறுவனங்கள் மற்றும் சிந்தனைக் குழுக்கள் இவற்றில் பங்கேற்கின்றன.

காஸாவில் இருந்து பாலஸ்தீனியர்களை “இடமாற்றம் செய்யும்” ஒரு பிரதான அமெரிக்க பெருநிறுவன ஆலோசனை நிறுவனமான போஸ்டன் கன்சல்டிங் குரூப் தயாரித்த ஒரு இரகசிய மூலோபாய ஆவணம் குறித்து கடந்த வாரம் பைனான்சியல் டைம்ஸ் செய்தி வெளியிட்டது. அதைத் தொடர்ந்து வந்த கட்டுரையில், இந்தத் திட்டம் முன்னாள் இங்கிலாந்து தொழிற் கட்சி பிரதம மந்திரி டோனி பிளேயரின் ஊழியர்களின் ஈடுபாட்டுடன் உருவாக்கப்பட்டது என்பதை பைனான்சியல் டைம்ஸ் வெளிப்படுத்தியது.

ட்ரம்பும் நெதன்யாகுவும் “போர் என்பது சமாதானம்” என்ற ஓர்வெல்லியன் சுலோகத்தை அவர்களின் இலட்சியமாக எடுத்துக் கொள்கின்றனர். அவர்கள் அதிக மக்களைக் கொன்று வருவதால், அவர்கள் மிகப்பெரிய சமாதானம் செய்பவர்கள் என்று நம்புகிறார்கள். இந்த மனநிலை பிறழ்ந்த தர்க்கத்தின்படி, இந்த மனிதர்கள் செய்துவரும் இனப்படுகொலை உலக அமைதிக்கு அவர்களின் மிகப்பெரிய பங்களிப்பாகும்.

நிச்சயமாக, உலக மக்களின் பார்வையில், ட்ரம்பும் நெதன்யாகுவும் கொடுங்கோலர்கள் மற்றும் குற்றவாளிகள் ஆவர். ஆனால் அவர்கள் தனிநபர்களாக செயல்படவில்லை. மாறாக, இவர்கள் முதலாளித்துவ அமைப்பு முறையின் இலட்சியங்களின் முன்னணி பிரதிநிதிகளாக செயல்பட்டு வருகிறார்கள்.

ஏகாதிபத்தியத்திற்கு உள்நாட்டில் சர்வாதிகாரமும், வெளிநாடுகளில் பரந்த குற்றவியல் மற்றும் சூறையாடல்களும் தேவைப்படுகின்றன. இவை அனைத்தும் முதலாளித்துவ வர்க்கத்தின் செல்வத்திலும் அதிகாரத்திலும் ஏற்பட்ட அசுர வளர்ச்சியின் விளைவாகும் என்று விளாடிமிர் லெனின் 1916 இல் எழுதினார். இறுதியில், உலகளாவிய ஏகாதிபத்திய போரின் மிகவும் சூறையாடும் வெளிப்பாடாக, காஸா இனப்படுகொலையானது, முதலாளித்துவத்தால் மனிதகுலத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்டு வருகின்ற மனிதப்படுகொலை வன்முறையின் ஒரு அறிகுறியாகும்.

ட்ரம்பும் நெதன்யாகுவும் முதலாளித்துவ வர்க்கத்தின் கட்டளைகளை வெளிப்படுத்துகிறார்கள் என்பதையும், ஜனநாயகக் கட்சியிலிருந்தோ அல்லது அரசியல் ஸ்தாபனத்தின் எந்தவொரு பகுதியிலிருந்தோ எதிர்ப்பை எதிர்கொள்ள மாட்டார்கள் என்பதையும் நன்கு அறிந்திருப்பதால், அவர்கள் இவ்வளவு ஆத்திரமூட்டும் விதமாகவும் வெட்கம்கெட்ட முறையிலும் செயல்பட்டு வருகிறார்கள். ஆனால், உண்மையான எதிர்ப்பு தொழிலாள வர்க்கத்தால் முன்னெடுக்கப்படும் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஒரு பாரிய இயக்கத்தைக் கட்டியெழுப்புவதில் இருந்தே உருவாகும்.

Loading