மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
மத்திய கிழக்கு முழுவதும் காஸா இனப்படுகொலை மற்றும் அமெரிக்க-இஸ்ரேலியப் போரின் அடுத்த கட்டத்தை திட்டமிடுவதற்காக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திங்களன்று வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை சந்தித்துள்ளார்.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இருந்து செயலூக்கமான கைது ஆணையைப் பெற்றுள்ள நெதன்யாகு, இனப்படுகொலை, வேண்டுமென்றே பாரிய பட்டினியை திணித்தல் மற்றும் இனச்சுத்திகரிப்பு ஆகியவற்றின் ஒரு தொடர்ச்சியான தாக்குதலை நடத்தி வருகிறார். இதன் நோக்கம் காஸாவில் எஞ்சியிருக்கும் பாலஸ்தீனியர்களைக் கொல்வது அல்லது அவர்களை இடம்பெயரச் செய்வதாகும்.
இனப்படுகொலையில் இதுவரை குறைந்தபட்சம் 56,000 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் - அவர்களில் பெரும்பாலோர் அமெரிக்கா வழங்கிய குண்டுகளால் கொல்லப்பட்டுள்ளனர். வெள்ளை மாளிகையின் ஆதரவு மற்றும் பிற ஏகாதிபத்திய சக்திகளின் ஒப்புதலுடன், இஸ்ரேல் வேண்டுமென்றே பாரிய பட்டினிக் கொள்கையைத் தொடர்கிறது. இது ஏற்கனவே ஆயிரக்கணக்கான குழந்தைகளிடையே கடுமையான ஊட்டச் சத்து குறைபாட்டிற்கு வழிவகுத்துள்ளது. கடந்த வாரம் இஸ்ரேலிய செய்தித்தாள் Haaretz இஸ்ரேலிய துருப்புக்கள் நடத்திய பேட்டிகள் அடங்கிய ஒரு புலனாய்வை வெளியிட்டது. நிராயுதபாணியான உதவி கோருவோர் மீது துப்பாக்கிச் சூடு நடத்துமாறு பலமுறையும் தங்களுக்கு உத்தரவிடப்பட்டதாக அவர்கள் கூறினர்.
முன்னணி ஈரானிய படைத்துறைசாரா அதிகாரிகள், இராணுவத் தலைவர்கள் மற்றும் விஞ்ஞானிகளைப் படுகொலை செய்ய வெறும் சில மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்கா அறிவித்த இராஜாங்க பேச்சுவார்த்தைகளைப் பயன்படுத்தி, அமெரிக்காவும் இஸ்ரேலும் மே மாதம் ஈரானுக்கு எதிராக ஒரு சட்டவிரோத மற்றும் ஆத்திரமூட்டலற்ற போரைத் தொடங்கியது. இந்தப் போருக்குப் பின்னர் நெதன்யாகுவின் முதல் விஜயமாக இது இருக்கிறது. இந்த தாக்குதல்கள் நடந்ததற்குப் பிந்தைய வாரங்களில், ஈரானின் அணுசக்தி பொருட்களில் பெரும்பாலானவை தாக்குதலில் சேதமடையவில்லை என்பது தெளிவாகி உள்ளது, இது அமெரிக்க அரசியல் ஸ்தாபகத்திற்குள் இருந்து “வேலையை முடிக்க” கோரிக்கைகளைத் தூண்டியுள்ளது.
மார்ச் 18 அன்று, இஸ்ரேல் ஒருதலைப்பட்சமாக ஹமாஸுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டது. பின்னர் அது காஸாவிற்குள் அனைத்து உணவு, தண்ணீர் மற்றும் மின்சாரமும் செல்வதை முற்றிலுமாக தடுத்து, “உதவி விநியோக” மையங்களை அமைத்து, அதில் இஸ்ரேலிய துருப்புக்கள் குறைந்தபட்சம் 600 உதவி கோரிய மக்களை 20 க்கும் அதிகமான தனித்தனி சந்தர்ப்பங்களில் படுகொலை செய்தன.
நடந்து வரும் இனப்படுகொலையின் ஒட்டுமொத்த வரலாற்றையும் புறக்கணித்துவிட்டு, இந்த வார வெள்ளை மாளிகை கூட்டத்தை ட்ரம்ப் “வலியுறுத்துவதாகக்” கூறப்படும் “போர் நிறுத்தத்தை” உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டதாக அமெரிக்க ஊடகங்கள் சித்தரித்து வருகின்றன.
உண்மையில், காஸாவில் எந்தவொரு “போர்நிறுத்தமும்” ஒரு தற்காலிக இடைநிறுத்தமாகவே இருக்கும். இது மத்திய கிழக்கு முழுவதிலும் இனப்படுகொலை மற்றும் போரின் அடுத்த கட்டத்தை நடத்த இஸ்ரேலிய படைகளை மீள்ஆயுதபாணியாக்கவும் மீள்நிரப்பவும் உதவும் நோக்கில் இருக்கும். அமெரிக்க-இஸ்ரேலிய கொள்கையின் நிஜமான நோக்கம் ஒரு ஏகாதிபத்திய மேலாதிக்க “புதிய மத்திய கிழக்கை” தோற்றுவிப்பதாகும். இதில் பாலஸ்தீனியர்கள் கொல்லப்படுவார்கள் அல்லது அவர்களின் மண்ணில் இருந்து விரட்டப்படுவார்கள், மற்றும் ஈரான் மீண்டுமொருமுறை நேரடி ஏகாதிபத்திய மேலாதிக்கத்தின் கீழ் வைக்கப்படும்.
2003 ஈராக் படையெடுப்பு மற்றும் 2025 ஈரான் மீதான குண்டுவீச்சு ஆகிய இரண்டின் சித்தாந்தரீதியான சிற்பியான ஜோன் போல்டன், டெலிகிராப்பில் ஞாயிறன்று வெளியிட்ட ஒரு தலையங்க கட்டுரையில், ட்ரம்ப் மற்றும் நெதன்யாகுவுக்கு இடையிலான சந்திப்பின் நிஜமான நோக்கங்களை அப்பட்டமாக எடுத்துரைத்தார். “இரண்டு போர் முனைகளிலும், அதாவது காஸாவிலும் மற்றும் ஈரானுக்கு எதிராகவும் முக்கிய நோக்கங்களை எட்டுவதற்கு அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய இராணுவப் பலத்தை சாத்தியமான அளவுக்கு மேலதிகமாக பயன்படுத்துவது குறித்த முடிவுகளே திங்களன்று இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளில் மிக முக்கியமான விளைவாக இருந்துள்ளது.
ட்ரம்ப் மற்றும் நெதன்யாகு இருவருமே காஸாவில் அவர்களின் நோக்கங்கள் குறித்து மிகத் தெளிவாக உள்ளனர். கடந்த பிப்ரவரியில், ட்ரம்ப், “அமெரிக்கா காஸா பகுதியை கைப்பற்றும்,” “அதை சமப்படுத்தும்,” மற்றும் காஸாவில் உள்ள பாலஸ்தீன மக்களை “இதர நாடுகளுக்கு” சிதறடிக்கும் என்று அறிவித்தார்.
கடந்த மே மாதத்தில், இஸ்ரேலிய நிதி மந்திரி பெசலெல் ஸ்மோட்ரிச் “ஒரு வருடத்திற்குள், ... காஸா முற்றிலுமாக அழிக்கப்படும், பொதுமக்கள் வெளியேற்றப்படுவார்கள் ... தெற்கிலிருந்து மனிதாபிமான வலயம் வரை... அங்கிருந்து அவர்கள் பெரும் எண்ணிக்கையில் மூன்றாம் நாடுகளுக்குச் செல்லத் தொடங்குவார்கள்” அறிவித்தார்.
இந்த கொடூரமான பார்வைக்கான திட்டங்கள் ஏற்கனவே மிகவும் முன்னேறியுள்ளன. காஸாவில் இருந்து பாலஸ்தீனியர்களை “இடமாற்றம் செய்யும்” ஒரு பிரதான அமெரிக்க பெருநிறுவன ஆலோசனை நிறுவனமான போஸ்டன் கன்சல்டிங் குரூப் தயாரித்த ஒரு இரகசிய மூலோபாய ஆவணம் குறித்து கடந்த வாரம் பைனான்சியல் டைம்ஸ் செய்தி வெளியிட்டது. போஸ்டன் கன்சல்டிங் குழுமம் “ஒவ்வொரு பாலஸ்தீனியரும் இடம்பெயர்வதில் 23 ஆயிரம் சேமிப்பு” இருப்பதாக மதிப்பிட்டதாக பைனான்சியல் டைம்ஸ் அறிவித்தது. இந்த இன சுத்திகரிப்பு நடவடிக்கை “காஸாவின் மதிப்பை இன்றைய 0 டாலரில் இருந்து 324 பில்லியன் டாலராக உயர்த்தும்” என்று அந்த இரகசிய ஆவணம் நிறைவு செய்தது.
கடந்த ஞாயிறன்று பைனான்சியல் டைம்ஸ் ஒரு முதல் பக்க கட்டுரையில், இத்திட்டம் முன்னாள் இங்கிலாந்து தொழிற்கட்சி பிரதம மந்திரி டோனி பிளேயரின் ஊழியர்களின் ஈடுபாட்டுடன் உருவாக்கப்பட்டது என்பதை மேலும் வெளிப்படுத்தியது. “டோனி பிளேயர் பயிலகம் போருக்குப் பிந்தைய காஸா திட்டத்தை அபிவிருத்தி செய்யும் ஒரு திட்டத்தில் பங்கெடுத்தது, அது அப்பகுதியின் பொருளாதாரத்தை “ட்ரம்ப் ரிவியரா” மற்றும் “எலோன் மஸ்க் ஸ்மார்ட் உற்பத்தி மண்டலம்” ஆகியவற்றைக் கொண்டு உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டிருந்தது.
பைனான்சியல் டைம்ஸ் வெளிப்படுத்திய முன்மொழிவு, காஸாவில் இருந்து வெளியேற்றப்பட்ட ஒவ்வொரு பாலஸ்தீனியருக்கும், அல்லது கொல்லப்பட்ட ஒவ்வொரு பாலஸ்தீனருக்கும் அவர்கள் விலை நிர்ணயிக்கும் டாலர் மதிப்பு வரையில், ட்ரம்ப் மற்றும் நெதன்யாகுவுக்கு இடையிலான விரிவான விவாதங்களின் கருப்பொருளாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
பாரிய படுகொலைகாரன் நெதன்யாகுவுக்கு வாஷிங்டனில் சிவப்புக் கம்பளம் விரிக்கப்படுகின்ற அதேவேளையில், காஸா இனப்படுகொலையை எதிர்ப்பவர்கள் திட்டமிட்டு துன்புறுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர்.
இதுவரையில் போர்-எதிர்ப்பு குழுக்கள் மீதான மிகத் தீவிரமான தாக்குதலில், பாலஸ்தீனத்துக்கான நடவடிக்கை என்ற பிரிட்டனில் உள்ள குழு, ஐக்கிய இராச்சிய அரசாங்கத்தால் ஒரு பயங்கரவாத அமைப்பாக முத்திரை குத்தப்பட்டுள்ளது. இதன் அர்த்தம், இந்தக் குழுவில் உறுப்பினராக இருப்பது மட்டுமல்ல, மாறாக அதன் பதிவுகளை சமூக ஊடகங்களில் பகிர்வதும் சட்டவிரோதமானது என்பதாகும்.
பிரிட்டனின் வரலாற்றில் முதல் தடவையாக ஒரு ஒத்துழையாமை அமைப்புக்கு எதிராக பயங்கரவாத சட்டங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த குழுவின் உறுப்பினர்கள் தங்கள் கருத்து சுதந்திரத்தை பயன்படுத்தியதற்காக 14 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையை எதிர்கொள்கின்றனர். இது இங்கிலாந்து சட்டம் மற்றும் இங்கிலாந்து கையெழுத்திட்டுள்ள சர்வதேச சட்டங்களால் பாதுகாக்கப்படுகிறது. கடந்த ஞாயிறன்று, இந்தக் குழு ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கு பெற்றதற்காக, பிரிட்டிஷ் போலீசார் 20 பேரை பயங்கரவாத குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்தனர்
இனப்படுகொலையை எதிர்க்கும் அறிக்கைகளுக்காக நீகேப் மற்றும் பாப் வைலன் ஆகிய இசைக் குழுக்களை பயங்கரவாத குற்றச்சாட்டுகளின் கீழ் விசாரிக்க பிரிட்டிஷ் அரசாங்கம் முயல்கிறது. கடந்த மாதம் இங்கிலாந்தின் சோமர்செட்டில் நடந்த கிளாஸ்டன்பரி விழாவில் காஸா இனப்படுகொலையை எதிர்த்து கோஷங்களை எழுப்பிய பாப் வைலன் உறுப்பினர்களின் விசாக்களை ட்ரம்ப் நிர்வாகம் ரத்து செய்துள்ளது.
இந்த நடவடிக்கைகள் அனைத்தும் ஒரு எச்சரிக்கையாகும்: ஏகாதிபத்திய சக்திகள் அவற்றின் வெளியுறவுக் கொள்கை மீதான அனைத்து விமர்சனங்களையும், அது எவ்வளவு அப்பட்டமாக சட்டவிரோதமானதாக இருந்தாலும் சரி, குற்றகரமாக்க நகர்ந்து கொண்டிருக்கின்றன. இனப்படுகொலைக்கு எதிரான பாரிய எதிர்ப்பிற்கு அவர்களுடைய விடையிறுப்பு இனப்படுகொலையில் அவர்கள் உடந்தையாக இருந்ததை தடுக்கும் அல்லது கவனத்தை ஈர்க்கும் எந்த முயற்சியையும் குற்றமாக்குவதாகும்.
வாஷிங்டன் மற்றும் ஜெருசலேமில் இருந்து வழிநடத்தப்படும் பாலஸ்தீன மக்களின் திட்டமிட்ட இனப்படுகொலை மற்றும் இனச்சுத்திகரிப்பு, உண்மையில் அனைத்து ஏகாதிபத்திய அரசாங்கங்களாலும் ஆதரிக்கப்படுகிறது. ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவின் அனைத்து “ஜனநாயக” அரசாங்கங்களும் போர்க்குற்றவாளிகள் அல்லது போர்க்குற்றவாளிகளின் கூட்டாளிகளால் வழிநடத்தப்படுகின்றன.
காசா இனப்படுகொலையின் அனுபவத்திலிருந்தும், அதற்கு எதிரான எதிர்ப்பை குற்றமாக்குவதிலிருந்தும் திட்டவட்டமான முடிவுகளை எடுக்க வேண்டும்.
இனப்படுகொலை ஒரு உலகளாவிய போரின் ஒரு பகுதியாகும். அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளின் தலைமையிலான ஏகாதிபத்திய சக்திகள், முன்னாள் காலனித்துவ உலகமான ரஷ்யா மற்றும் சீனா மீது காலனித்துவ தளைகளை மீண்டும் திணிக்க புறப்பட்டுள்ளன. அவர்கள் பாரிய படுகொலைகள், இனச் சுத்திகரிப்பு மற்றும் பட்டினி ஆகியவற்றை கொள்கையின் கருவிகளாக இயல்பாக்கி வருகின்றனர். பாலஸ்தீனியர்களுக்கு எதிராக பயன்படுத்தப்படும் அதே காட்டுமிராண்டித்தனமான வழிமுறைகள் மற்ற இடங்களிலும் பயன்படுத்தப்படும்.
தீவிரமடைந்து வரும் ஏகாதிபத்திய போர் ஜனநாயக உரிமைகளுடன் பொருந்தாது. ஒவ்வொரு நாட்டிலும், ஆளும் வர்க்கம் சர்வாதிகாரத்திற்கு தயாரிப்பு செய்து வருகிறது. அமெரிக்காவில், பைடென் மற்றும் ஜனநாயகக் கட்சியினரின் கீழ் தொடங்கப்பட்ட இனப்படுகொலைக்கு எதிரான எதிர்ப்பை குற்றமாக்குவது, ட்ரம்பின் கீழ் ஜனாதிபதி சர்வாதிகாரத்தை நிறுவுவதில் இருந்து பிரிக்க முடியாதது.
தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. காஸா இனப்படுகொலைக்கு எதிரான போராட்டங்களில் மில்லியன் கணக்கான மக்கள் பங்கெடுத்துள்ளனர். ட்ரம்புக்கு எதிரான கடந்த மாத “மன்னர்கள் வேண்டாம்” என்ற போராட்டங்கள் அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய போராட்டங்களில் ஒன்றாக இருந்தன. போருக்கு எதிராகவும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவும் வளர்ந்து வரும் இயக்கத்தை, தொழிலாள வர்க்கம் அதன் சமூக மற்றும் பொருளாதார உரிமைகளைப் பாதுகாப்பதற்கான இயக்கத்துடன் ஐக்கியப்படுத்துவதும், இந்தப் போராட்டத்தை ஒரு சோசலிச முன்னோக்கைக் கொண்டு ஆயுதபாணியாக்குவதுமே இன்றியமையாத போராட்டமாகும்.