முன்னோக்கு

ஜூலை 4, 2025: ட்ரம்ப், தன்னலக்குழு மற்றும் அமெரிக்க எதிர்ப்புரட்சி

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாய்க்கிழமை, ஜூலை 1, 2025 அன்று புளோரிடாவின் ஓச்சோபியில் உள்ள டேட்-கோலியர் பயிற்சி மற்றும் இடைத்தங்கல் மையத்திலுள்ள புதிய வதை முகாமை பார்வையிடுகிறார். [AP Photo/Evan Vucci]

ஜூலை 4, 2025, சுதந்திரப் பிரகடனத்தில் கையெழுத்திட்டு 249 ஆண்டுகளைக் குறிக்கிறது. இந்தப் பிரகடனம், “வாழ்க்கை, சுதந்திரம் மற்றும் மகிழ்ச்சியைத் தேடுவதை அழிக்கும்” எந்தவொரு அரசாங்கத்தையும் “மாற்றவோ அல்லது ஒழிக்கவோ” மக்களின் உரிமையை உறுதிப்படுத்துகிறது.

அமெரிக்க சுதந்திர தினம் அணிவகுப்புகள், பார்பிக்யூக்கள், பிக்னிக் மற்றும் வாணவேடிக்கைகளுடன் கொண்டாடப்படுகிறது. இவை அனைத்திலும் எந்த குறைச்சலும் இல்லை. இருப்பினும், அமெரிக்கப் புரட்சியின் தலைவிதி மற்றும் நாட்டின் நிலை குறித்து தீவிரமாக சிந்திப்பதற்கு நேரம் ஒதுக்குவது அவசியமானது. அமெரிக்கா அதன் இருப்பின் 250வது ஆண்டைத் தொடங்குகின்ற நிலையில், அது ஒரு அரசியல், சமூக, புத்திஜீவித மற்றும் கலாச்சார எதிர்ப்புரட்சியின் கோர விளிம்பில் உள்ளது. ஜெபர்சனின் அழியாத ஆவணத்தில் பிரகடனப்படுத்தப்பட்டிருந்ததும், பிரிட்டிஷ் முடியாட்சிக்கு எதிரான போராட்டத்திற்கு மட்டுமல்ல, அடிமை முறையை ஒழித்த 1861-65 இன் இரண்டாம் அமெரிக்க புரட்சிக்கும் ஊக்கமளித்த அத்தனை மகத்தான ஜனநாயகக் கோட்பாடுகளும் இன்று வன்முறை தாக்குதலின் கீழ் உள்ளன.

1863ம் ஆண்டு கெட்டிஸ்பேர்க்கில் ஆற்றிய உரையில் லிங்கன் அனைத்து மனிதர்களும் சமமாகப் படைக்கப்பட்டுள்ளனர் என்ற கொள்கையின் அடிப்படையில் நிறுவப்பட்ட ஒரு நாடு “நீண்டகாலம் நிலைத்திருக்க முடியுமா” என்று கேட்டார். நூற்று அறுபத்திரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், வெள்ளை மாளிகையில் உள்ள பாசிசக் கும்பலும் ட்ரம்ப் பிரதிநிதித்துவப்படுத்தும் தன்னலக்குழுவும் “இல்லை, அது முடியாது, கூடாது மற்றும் செய்ய முடியாது” என்று  தமது பதிலைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

ட்ரம்ப்பின் ஆட்சி என்பது வலதுசாரி அரசாங்கத்தின் ஒரு மாறுபாடு மட்டுமல்ல, அரசியலமைப்பு அரசாங்கத்தின் “இயல்பான” போக்கிலான ஒரு தற்காலிக பிறழ்ச்சி ஆகும். இது முதலாளித்துவ ஜனநாயகத்தின் முறிவைக் குறிக்கிறது. இது ஒருபோதும் “இயல்புநிலைக்கு” திரும்பப் போவதில்லை. “அசாதாரணமானது” என்பது “புதிய இயல்பு” ஆகும். ஆளும் வர்க்கம் பாசிசம் மற்றும் சர்வாதிகாரத்தை நோக்கி திரும்பிக் கொண்டிருக்கிறது.

ஜூலை 4 க்கு முந்தைய நாட்களில் என்ன நடந்தது என்பதைக் கவனியுங்கள். வியாழக்கிழமை, அமெரிக்க பிரதிநிதிகள் சபை ஒரு வர்க்கப் போர் மசோதாவை நிறைவேற்றியது. இது, அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய செல்வம் மேல்நோக்கி மாற்றப்பட்ட ஒன்றாகும். இன்று இந்த மசோதாவில் கையெழுத்திடுவதன் மூலம், ட்ரம்ப் மருத்துவ உதவி, உணவு உதவி மற்றும் பல்லாயிரக்கணக்கான மக்களை ஆதரிக்கும் பிற சமூக நலத் திட்டங்களுக்கு நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர் வெட்டுக்களை கட்டவிழ்த்து விடுவார். இந்த மிருகத்தனமான வெட்டுக்கள் செல்வந்தர்களுக்கு டிரில்லியன் கணக்கான வரிச் சலுகைகளை வழங்குவதற்கான ஆரம்ப முன்பணம் ஆகும்.

வெள்ளை மாளிகையும் அதை உள்ளடக்கிய பாசிஸ்டுகளும் ஜோஹ்ரான் மம்தானியை அச்சுறுத்தும் மற்றும் கண்டனம் செய்யும் பிரச்சாரத்தை அதிகரித்து வருவதில் கவனம் செலுத்தி வருகின்றனர். மம்தானி அமெரிக்காவின் ஜனநாயக சோசலிஸ்டுகளின் உறுப்பினராக உள்ளார். அவர் நியூ யோர்க் ஜனநாயக கட்சி மேயர் முதன்மைத் தேர்தலில் மிகச் சிறிய சமூக சீர்திருத்தங்களுக்கு அழைப்பு விடுத்து வெற்றி பெற்றார்.

“இந்த கம்யூனிச பைத்தியம் நியூ யோர்க்கை அழிக்க நான் அனுமதிக்கப் போவதில்லை” என்று ட்ரம்ப் புதன்கிழமை கொந்தளித்தார். “உறுதியாக இருங்கள், என்னிடம் எல்லா நெம்புகோல்களும் உள்ளன, எல்லா அட்டைகளும் என்னிடம் உள்ளன” என்று அவர் தெரிவித்தார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், மம்தானிக்கு வாக்களித்த நூறாயிரக்கணக்கான மக்கள் அர்த்தமற்றவர்கள் ஆவர். யார் வெற்றி பெறுவார்கள் என்பதை ஜனாதிபதிதான் தீர்மானிப்பார். சிலியில் சால்வடோர் அலெண்டே தூக்கியெறியப்பட்டு படுகொலை செய்யப்படுவதற்கு இட்டுச் சென்ற அமெரிக்க ஆதரவிலான இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்கு முன்னதாக, “ஒரு நாடு அதன் மக்களின் பொறுப்பற்ற தன்மையின் காரணமாக கம்யூனிச நாடாக மாறுவதை நாம் ஏன் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்க வேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை” என்ற ஹென்றி கிஸ்ஸிங்கரின் இழிபுகழ்பெற்ற கருத்தை இது நினைவூட்டுகிறது.

புளோரிடா எவர்கிளேட்ஸில் ஒரு சித்திரவதை முகாம் திறக்கப்பட்டதைக் கொண்டாட ட்ரம்ப் புளோரிடாவுக்கும் சென்றார். சுற்றுப்பயணத்தைத் தொடர்ந்து நடந்த ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில், ட்ரம்ப் இந்த முகாமை ஆவணமற்ற புலம்பெயர்ந்தோருக்கு மட்டுமல்ல, மாறாக அமெரிக்க குடிமக்களுக்கும் பயன்படுத்தப் போவதாக அச்சுறுத்தினார். “அவர்களில் பலர் எங்கள் நாட்டில் பிறந்தவர்கள். நாம் அவர்களை இங்கிருந்து வெளியேற்ற வேண்டும் என்று நினைக்கிறேன். நீங்கள் உண்மையை அறிய விரும்புகிறீர்கள். அதனால் அடுத்த வேலை இதுவாக இருக்கலாம்” என்று ட்ரம்ப் அறிவித்தார்.

ட்ரம்ப் அவரது இரண்டாவது நிர்வாகத்தின் ஐந்து மாதங்களில், வரம்பற்ற நிறைவேற்று அதிகாரத்தை வலியுறுத்தும் தொடர்ச்சியான நிர்வாக உத்தரவுகளை பிறப்பித்தமை, நீதிமன்ற தீர்ப்புகளை மீறியமை, புலம்பெயர்ந்த தொழிலாளர்களை ICE கெஸ்டாபோ பாரியளவில் சுற்றி வளைத்தமை, லொஸ் ஏஞ்சல்ஸ் வீதிகளிலும் இப்போது புளோரிடாவிலும் இராணுவத்தை நிலைநிறுத்தியதில் இருந்து, ஒரு ஜனாதிபதி சர்வாதிகாரத்தை ஸ்தாபிப்பதற்கான சூழ்ச்சியை மேற்பார்வையிட்டுள்ளார். மேலும் அவர், காஸாவில் இடம்பெறும் இனப்படுகொலையை எதிர்ப்பவர்களை கைது செய்தல் மற்றும் நாடுகடத்த முயற்சித்தல் உள்ளிட்ட அதிருப்தியை குற்றமாக்கினார்.

எதிர்ப்புரட்சியானது, சமூக மற்றும் புத்திஜீவித வாழ்வு அனைத்திலும் விரிவடைகிறது. தொற்றுநோயால் பேரழிவிற்கு உள்ளான பொது சுகாதாரம் முற்றிலுமாக அகற்றப்பட்டு வருகிறது. தடுப்பூசி மறுப்பாளர்கள் மற்றும் சதிக் கோட்பாட்டாளர்கள் உயர் கூட்டாட்சி பதவிகளுக்கு உயர்த்தப்படுகிறார்கள். கடந்த புதன்கிழமை, ட்ரம்பால் நியமனம் பெற்ற, COVID-19 பெருந்தொற்றை குறைத்துக்காட்டும் முன்னணி டாக்டரான விஜய் பிரசாத், தடுப்பூசி ஒப்புதல்கள் குறித்த அதன் சொந்த விஞ்ஞானிகளின் பரிந்துரைகளை மீறியதாக உணவு மற்றும் மருந்து நிர்வாகம் வெளிப்படுத்தியது - இது அறிவியல் நெறிமுறைகளை முன்னொருபோதும் இல்லாத வகையில் மீறுவதாகும்.

உள்நாட்டில் நடத்தப்படும் அதே குற்றச் செயல், அதே வர்க்கப் போர், அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் உலகம் முழுவதும் நடத்தப்படுகிறது.

திங்களன்று, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, காஸாவில் நடந்து வரும் இனப்படுகொலையை மேற்பார்வையிடுவதற்காக வாஷிங்டனுக்கு பயணம் மேற்கொள்வார். ஒவ்வொரு நாளும், அமெரிக்க ஆயுதங்கள் மற்றும் அமெரிக்கப் பணத்தைக் கொண்டு, இஸ்ரேலிய இராணுவம் பாலஸ்தீனிய ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளை பகிரங்கமாகவும் தண்டனையிலிருந்து விலக்களிப்புடனும் கொல்கிறது. ட்ரம்ப் நிர்வாகத்தால் ஈரான் மீது குண்டுவீசப்பட்டதைத் தொடர்ந்து நெதன்யாகுவின் விஜயம் வருகிறது—இது சர்வதேச மற்றும் உள்நாட்டு சட்டத்தை முற்றிலுமாக மீறி நடத்தப்பட்ட ஒரு போர் நடவடிக்கையாகும்.

இந்நிகழ்வுகளின் வெளிச்சத்தில், அமெரிக்காவில் பண்புரீதியில் புதிய, ஆபத்தான ஏதோவொன்று நடக்கவில்லை என்ற பாசாங்குத்தனத்தை தக்க வைத்துக் கொள்ளுதல் என்பது ஒரு மாயையாகும். “அதை எதிர்கொள்வோம். ட்ரம்ப் ஒரு சாதாரண குடியரசுக் கட்சிக்காரர்” என்ற தலைப்பில், ஊடகங்கள் மற்றும் ஜனநாயகக் கட்சி வட்டாரங்களில் நிலவும் இந்த மெத்தனப்போக்கை நியூ யோர்க் டைம்ஸ் கட்டுரையாளர் ஜமெல்லே பௌயி சுருக்கமாகக் கூறினார்.

ட்ரம்ப் சில பொறுப்பற்ற செயல்களில் ஈடுபட்டாலும், “பல வழிகளில், ஒரு சாதாரண குடியரசுக் கட்சி ஜனாதிபதி” என்று பௌயி எழுதுகிறார். கடந்த இருபது ஆண்டுகளில் இரண்டு குடியரசுக் கட்சி ஜனாதிபதி பதவிகள் பேரழிவில் முடிந்துவிட்டன என்றும், “ட்ரம்பின் இரண்டாவது பதவிக்காலம் விதியை மீறும் விதிவிலக்காக இருக்கும் என்று நம்புவதற்கு எந்த காரணமும் இல்லை” என்றும் அவர் முடிக்கிறார்.

ட்ரம்ப் ஒரு “சாதாரண குடியரசுக் கட்சி ஜனாதிபதி” என்றால், அர்த்தமுள்ள பதில் தேவையில்லை. நனவாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், இத்தகைய அறிக்கைகளின் செயல்பாடு, மக்களை மயக்கமடையச் செய்வதையும், இந்த அடுக்குகள் வேறு எதையும் விட அதிகமாக அஞ்சுவதைத் தடுப்பதும் ஆகும். அதாவது, ட்ரம்ப் நிர்வாகம் மற்றும் அதன் அடிப்படையிலான சமூக அமைப்பு முறைக்கு எதிரான ஒரு பாரிய மக்கள் இயக்கத்தைத் தடுப்பதும் ஆகும்.

ட்ரம்ப் நிர்வாகம் அதிகாரத்தில் உள்ள அரசியல் பாதாள உலகமாகும் —ஆனால், இந்த அரசியல் பாதாள உலகம் அமெரிக்க ஆளும் வர்க்கமாகும். உலக சோசலிச வலைத் தளம், எட்டு ஆண்டுகளுக்கு முன்பாக, ஜனவரி 3, 2017 இல் வெளியிட்ட அதன் புத்தாண்டு அறிக்கையில், ட்ரம்பின் முதல் ஜனாதிபதி தேர்வின் முக்கியத்துவத்தை விளக்கியது:

வரவிருக்கும் ட்ரம்ப் நிர்வாகம், அதன் பணியாளர்களைப் போலவே அதன் நோக்கங்களிலும், தன்னலக்குழுக்களின் கிளர்ச்சிக் குணாம்சத்தைக் கொண்டுள்ளது. ஒரு அழிவிற்குட்பட்ட சமூக வர்க்கம் அதன் முடிவை நெருங்குகையில், வரலாற்றின் அலைகளை எதிர்ப்பதற்கான அதன் முயற்சிகள் பெரும்பாலும் அதன் அதிகாரம் மற்றும் சலுகையின் நீடித்த அரிப்பு என்று அது கருதுவதை மாற்றியமைக்கும் முயற்சியின் வடிவத்தை எடுக்கின்றன. சமூக மற்றும் பொருளாதார மாற்றத்தின் தவிர்க்கமுடியாத சக்திகள் அதன் ஆட்சியின் அடித்தளங்களை அரிக்கத் தொடங்குவதற்கு முன்பு, நிலைமைகளை அவை ஒரு காலத்தில் இருந்த நிலைக்கு (அல்லது அவை இருந்ததாக கற்பனை செய்வது போல) திரும்பப் பெற முயல்கிறது...

“அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக்குவோம்” என்ற ட்ரம்பின் சூளுரையின் அர்த்தம், நடைமுறையில், தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்திய பல தசாப்த கால பாரிய போராட்டங்களின் மூலமாக சாதிக்கப்பட்ட முற்போக்கான சமூக சீர்திருத்தங்களில் என்னவெல்லாம் எஞ்சியிருக்கிறதோ அவற்றை ஒழித்துக்கட்டுவதாகும்...

இந்தப் பகுப்பாய்வு முழுமையாக நிரூபிக்கப்பட்டுள்ளது. ட்ரம்பின் முதல் பதவிக்காலம் ஒரு சர்வாதிகாரத்தை நிறுவும் செயல்முறையைத் தொடங்கியது, ஆனால் அதை முடிக்க முடியவில்லை என்பதை நிரூபித்தது. இந்த பதவிக்காலம் ஜனவரி 6, 2021 அன்று தேர்தலை ரத்து செய்யும் நோக்கில் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் உச்சக்கட்டத்தை அடைந்தது.

இதற்குப் பொறுப்பானவர்களைப் பொறுப்பாக்குவதற்குப் பதிலாக, ஜனநாயகக் கட்சி அடுத்த நான்காண்டுகளை ட்ரம்ப் மீண்டும் பதவிக்கு வருவதற்கான நிலைமைகளைத் தயாரிப்பதில் செலவிட்டது. பரந்த பெருந்திரளான மக்களின் நலன்களுக்கு ஜனநாயகக் கட்சியினரின் விரோதமும், உயர்மட்ட நடுத்தர வர்க்கத்தின் தனிச்சலுகை கொண்ட பிரிவுகளது இனவாத மற்றும் அடையாள அரசியலை அவர்கள் வெறித்தனமாக ஊக்குவித்தமையும், மோசடிக்காரரும் பாசிசவாத வாய்வீச்சாளருமான ட்ரம்ப் அரசியல் ஸ்தாபகத்தின் ஒரு எதிர்ப்பாளராக காட்டிக் கொள்ள அனுமதித்தது.

ஜனநாயகக் கட்சி அமெரிக்க தாராளவாதத்தின் பொறிவின் இறுதி வெளிப்பாடாகும். அது வோல் ஸ்ட்ரீட் மற்றும் இராணுவ-உளவுத்துறை எந்திரத்தின் ஒரு கட்சியாகும். இது கோழைத்தனம், உடந்தைத்தனம் மற்றும் ட்ரம்ப் ஆட்சியுடனான அப்பட்டமான ஒத்துழைப்பு ஆகியவற்றை ஒருங்கிணைக்கிறது. வெறும் இரண்டு வாரங்களுக்கு முன்னர், அரசியல் ரீதியாக மண்டியிடும் செயலில், ஜனநாயகக் கட்சித் தலைமை குடியரசுக் கட்சியினருடன் சேர்ந்து ட்ரம்பை பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானத்தை அழிக்க வாக்களித்தது.

ஆனால், ஆழமான மற்றும் வளர்ந்து வரும் மக்கள் எதிர்ப்பு உள்ளது. புலம்பெயர்ந்தவர்கள், மாணவர்கள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான ட்ரம்பின் தாக்குதல்களுக்கு விடையிறுப்பாக நாடெங்கிலும் பாரிய போராட்டங்கள் வெடித்ததை இந்தாண்டு ஏற்கனவே கண்டுள்ளது. அமெரிக்க வரலாற்றிலேயே மிகப் பெரிய அரசாங்க-எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில், “மன்னர்கள் வேண்டாம்” என்ற பதாகையின் கீழ், கடந்த மாதம் மில்லியன் கணக்கானவர்கள் ஆர்ப்பாட்டங்களில் பங்கெடுத்தனர்.

அமெரிக்க புரட்சியில் உருவடிவம் பெற்ற ஜனநாயக பாரம்பரியங்கள், ஆளும் வர்க்கத்தில் அல்ல, மாறாக தொழிலாள வர்க்கத்தில் ஒரு சக்திவாய்ந்த எதிரொலிப்பைத் தக்க வைத்துக் கொண்டுள்ளன. சர்வாதிகாரம், இனப்படுகொலை மற்றும் போரின் அதிர்ச்சிகளுக்கு இடையே, மில்லியன் கணக்கானவர்கள் தீவிரமயப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

ஒரு புரட்சிகரத் தலைமையைக் கட்டியெழுப்புவதே இன்றியமையாத கேள்வியாகும். சர்வாதிகாரத்தையும் போரை நோக்கிச் செல்லும் ஆளும் வர்க்கத்தை எதிர்கொண்டு, முதலாளித்துவத்தின் அடித்தளங்களையே சவால் செய்யாமல் “தன்னலக்குழு” பற்றிப் பேசுபவர்களையும், மெத்தனத்தை ஆதரிப்பவர்களையும், பேர்னி சாண்டர்ஸ், அலெக்ஸாண்ட்ரியா ஒகாசியோ-கோர்டெஸ் மற்றும் மம்தானி போன்றவர்களையும் நிராகரிக்க வேண்டியது அவசியமாகும்.

அமெரிக்காவிலும் உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் தன்னலக்குழுவின் எதிர்ப்புரட்சியை தொழிலாள வர்க்கத்தின் புரட்சியின் மூலம்தான் எதிர்கொள்ள முடியும் என்பதைக் காண வேண்டும், மேலும் காண்பார்கள்.

அமெரிக்கப் புரட்சியின் இந்த ஆண்டு நிறைவில், சோசலிச சமத்துவக் கட்சி, ஒரு புதிய புரட்சியை நடத்த ஒரு பாரிய சோசலிச இயக்கத்தைக் கட்டியெழுப்ப அழைப்பு விடுக்கிறது - அது ஒரு தன்னலக்குழுவின் ஆட்சியைத் தூக்கியெறிந்து, சமத்துவம், ஜனநாயகம் மற்றும் சமூகத் தேவையின் அடிப்படையில் சமூகத்தை மறுசீரமைக்கும். உலக சோசலிச வேலைத்திட்டத்தால் வழிநடத்தப்பட்டு, தொழிலாள வர்க்கத்தின் நனவான தலையீட்டின் மூலம், குற்றவியல் ட்ரம்ப் நிர்வாகம் வீழ்த்தப்பட வேண்டும்.

Loading