இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) மற்றும் சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் (IYSSE) அமைப்பும், சமீபத்தில் கொழும்பு, யாழ்ப்பாணம் மற்றும் பேராதனை பல்கலைக்கழக மாணவர்களிடையே அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானுக்கு எதிராக முன்னெடுக்கும் போர் மற்றும் வளர்ந்து வரும் உலகப் போர் குறித்து ஒரு கலந்துரையாடலை நடத்தின.
சோ.ச.க./ஐ.வை.எஸ்.எஸ்.இ.யும் முன்னெடுக்கும் போர் எதிர்ப்பு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, “ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய போரை எதிர்த்திடு!” என்ற தலைப்பில் ஜூலை 6 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணிக்கு சூம் ஊடாக நிகழ்நிலை கூட்டம் ஒன்றையும், ஜூலை 8 அன்று யாழ்ப்பாணத்தில் வீரசிங்கம் மண்டபத்தில் ஒரு பொதுக் கூட்டத்தையும் ஏற்பாடு செய்துள்ளன.
அமெரிக்காவும் அதன் பிராந்திய நட்பு நாடான இஸ்ரேலும் ஈரானால் ஆத்திரமூட்டப்படாமலேயே அதற்கு எதிராக மேற்கொண்டுள்ள ஆக்கிரமிப்பு ஏகாதிபத்தியப் போருக்கும், பாலஸ்தீனத்தில் நடத்தப்பட்டுவரும் இனப்படுகொலைப் போருக்கும் பல்கலைக்கழக மாணவர்கள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர். அத்துடன், ஈரான் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ள போர் நிறுத்தம் ஒரு போலியானது என்றும், மீண்டும் போர் கட்டவிழ்த்துவிடப்படும் என்றும் அவர்கள் கூறினர்.
உக்ரைன் மீது ரஷ்யாவிற்கு எதிராகவும், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பாலஸ்தீனம் மற்றும் ஈரானுக்கு எதிராகவும் அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்கள் முன்னெடுக்கும் போர்கள் மற்றும் சீனாவிற்கு எதிரான அவற்றின் போர் தயாரிப்புகளுடன், ஒரு உலகப் போர் ஏற்கனவே மூன்று முனைகளில் வெடித்துள்ளது. அது அணு ஆயுதப் போராக வெடிக்கும் அபாயம் அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் நேட்டோ உச்சிமாநாட்டில் ஐரோப்பாவின் ஏகாதிபத்திய சக்திகள் தங்கள் மொத்த தேசிய உற்பத்தியில் 5 சதவீதத்தை இராணுவச் செலவுகளுக்கு ஒதுக்கத் தீர்மானித்திருந்தன என்பது இந்த ஆபத்தை எடுத்துக்காட்டுகிறது.
போரானது உலக முதலாளித்துவ நெருக்கடியின் விளைவாகும் என்றும், உலகம் முழுதும் இருந்து முதலாளித்துவத்தை தூக்கியெறியாமல் அதை நிறுத்த முடியாது என்றும் சுட்டிக்காட்டிய சோ.ச.க./ஐ.வை.எஸ்.எஸ்.இ. உறுப்பினர்கள், சர்வதேச சோசலிச முன்னோக்கின் அடிப்படையில் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் போர் எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டியெழுப்புவதன் அவசரம் குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடினர்.
கொழும்பு பல்கலைக்கழக விஞ்ஞானப் பீடத்தில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவரான அஜித் கூறிதாவது: “போர் நிறுத்தம் என்பது ஒரு பொய். தாக்குதல்கள் ஒரு கட்டத்தில் மீண்டும் நிகழும். ஒரு போரின் கீழ் நம்மில் யாரும் சாதாரண வாழ்க்கையை வாழ முடியாது. காசா, உக்ரேன் மற்றும் இப்போது ஈரானில் நாம் அதைக் காண்கிறோம். பெரிய நாடுகளுக்கு இடையே ஒரு போர் மூண்டால் தோல்வியைத் தவிர்க்க அணு ஆயுதங்களைப் பயன்படுத்தக் கூடும். ஈரானிய ஆக்கிரமிப்பை நான் கண்டிக்கிறேன். ஒரு உலகப் போர் நிறுத்தப்பட வேண்டும்.”
பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் மாணவி தெவ்மி தெரிவித்ததாவது: “இளைஞர்களாகிய நாங்கள் இப்போதுதான் எங்கள் வாழ்க்கையைத் தொடங்கினோம். இது நாங்கள் மட்டுமல்ல, உயிர்களும் சொத்துக்களும் அழிக்கப்படுவதை யாரும் விரும்பவில்லை. இந்தப் போர் எண்ணெய் விலை உயர்வு உட்பட பல பொருளாதார சிக்கல்களை ஏற்படுத்துகிறது. ஒவ்வொரு நாளும் சோகமான செய்திகளைப் பார்க்கிறோம்.”
கலந்துரையாடலில் ஈடுபட்ட அனைத்து மாணவர்களும் போருக்கு எதிர்ப்பு தெரிவித் போதிலும், அதன் தோற்றம் மற்றும் அதை எவ்வாறு நிறுத்துவது என்பது குறித்து அவர்களுக்கு வேறுபட்ட மற்றும் முரண்பட்ட கருத்துக்கள் இருந்தன.
'மக்கள் பேராசையில் மூழ்கிப் போயிருப்பதால்' போர்கள் ஏற்படுகின்றன என்று இந்திக கூறிய அதே நேரம் 'ட்ரம்ப், நெதன்யாகு, கொமெய்னி போன்ற தலைவர்கள் இளைய தலைமுறையினர் வயதானவர்கள் என்பதால் அவர்களுக்கு எதிராக போரின் மூலம் அழிவைக் கொண்டுவர வேலை செய்கிறார்கள்' என்று தெவ்மி கூறினார்.
போரின் மூலத்தை முதலாளித்துவ ஆட்சியாளர்களின் 'பேராசையில்' தேடுவதற்குப் பதிலாக, அவர்களைப் போருக்குத் தள்ளும் காரணங்களை புறநிலை உலகிலேயே தேட வேண்டும் என்று சோ.ச.க./ஐ.வை.எஸ்.எஸ்.இ. செயற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டினர்.
உலகளாவிய பொருளாதார நெருக்கடியின் பகுதியாக, அமெரிக்கா எதிர்கொள்ளும் பாரிய அரச கடன், உலக சந்தையில் அதன் பங்கில் ஏற்பட்டுள்ள பாரிய சரிவு காரணமாக, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உட்பட அமெரிக்க ஆளும் வர்க்கம், தனது இராணுவ சக்தியைப் பயன்படுத்தி மற்ற நாடுகளை அடிபணியச் செய்து, அவற்றின் வளங்களைக் கொள்ளையடிப்பதன் மூலம் அதன் பொருளாதார ஆதிக்கத்தை மீண்டும் உறுதிப்படுத்திக்கொள்ளத் தள்ளப்பட்டுள்ளது. இவற்றின் விளைவாக, நாட்டிற்குள் வளர்ந்து வரும் முன்னெப்போதும் இல்லாத சமூக சமத்துவமின்மை மற்றும் தொழிலாள வர்க்கத்தின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கு எதிராக வளர்ந்து வரும் வர்க்கப் போராட்டத்தை நசுக்க இராணுவத்தைப் பயன்படுத்துகிறது.
இந்த பூகோள பொருளாதார நெருக்கடியால் ஏனைய ஏகாதிபத்திய நாடுகளின் ஆளும் வர்க்கங்களும் போரை நோக்கித் தள்ளப்படுகின்றன.
உலக முதலாளித்துவ முறைமையின் உள் முரண்பாடுகள் -அதாவது, உலகப் பொருளாதாரத்திற்கும் ஒன்றுக்கொன்று விரோதமான முதலாளித்துவ தேசிய அரசு அமைப்புக்கும் இடையிலான முரண்பாடுகள், மற்றும் சமூகமயமாக்கப்பட்ட உற்பத்திக்கும் உற்பத்தி சாதனங்களின் (பெரும் வங்கிகள், தொழிற்சாலைகள்) தனியார் உரிமைக்கும் இடையிலான முரண்பாடுகள்- ஆழமடைவதே இந்த நெருக்கடிக்கான மூல காரணம் என்று சோ.ச.க./ஐ.வை.எஸ்.எஸ்.இ. உறுப்பினர்கள் விளக்கினர்.
'அமெரிக்கா ஏன் ஈரானுடன் போரில் ஈடுபட்டுள்ளது? இந்த போர் நிறுத்தம் எவ்வளவு காலம் நீடிக்கும்?' என்று இந்திக கேட்டார். சீனா அதன் பொருளாதார உறவுகளை விரிவுபடுத்துவதை தனது உலகளாவிய மேலாதிக்கத்திற்கு அச்சுறுத்தலாகக் கருதும் அமெரிக்க ஏகாதிபத்தியம், ஈரானை அடிபணியச் செய்வதன் மூலம், சீனாவின் விநியோக வழிகளைக் கட்டுப்படுத்த முயற்சிப்பதாக, பிரச்சாரகர்கள் சுட்டிக்காட்டினர்.
ஈரானின் எண்ணெய் உற்பத்தியில் 90 சதவீதத்தை சீனா வாங்குவதோடு ஈரானிய கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஹார்முஸ் ஜலசந்தி, காஸ்பியன் கடலை ஐரோப்பா, மத்திய கிழக்கு, ரஷ்யா மற்றும் ஆசியாவுடன் இணைக்கும் புவிசார் மூலோபாய இடத்தில் அது அமைந்துள்ளது. அதன்படி, ஈரானுக்கு எதிரான படையெடுப்பு சீனாவிற்கு எதிரான போருக்கான ஒரு தயாரிப்பு ஆகும். அது மட்டுமன்றி, ஈரான் மீதான அமெரிக்காவின் ஆக்கிரமிப்பின் பின்னணியில் முழு மத்திய கிழக்கு பிராந்தியத்தின் எண்ணெய் மற்றும் மதிப்புமிக்க கனிம வளங்களை கொள்ளையடிப்பதும் அடங்கும்.
குண்டுவீச்சு தற்போது நிறுத்தப்பட்டிருந்தாலும், ஜூன் 3 அன்று இஸ்ரேலிய இராணுவத் தளபதி, 'ஈரான் நடவடிக்கையின் ஒரு முக்கிய கட்டத்தை நாங்கள் முடித்துவிட்டோம். ஆனால் ஈரான் மீதான தாக்குதல்கள் இன்னும் முடிவடையவில்லை' என்று கூறினார். அதன்படி, இந்த போர்நிறுத்தம் விரைவில் முடிவடையக் கூடும்.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கம், கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவில் மோடி ஆட்சியுடன் கையெழுத்திட்ட போர் ஒப்பந்தங்கள் குறித்தும் மாணவர்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்தனர். 'இந்த அரசாங்கத்தில் எந்த வேறுபாடும் இல்லை. ரணில் விக்கிரமசிங்க செயல்படுத்திய அதே வேலைத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அந்த ஒப்பந்தங்கள் சீனாவிற்கு எதிரான அமெரிக்காவின் போர்த் திட்டங்களுடன் தொடர்புடையவை என்ற உங்கள் விளக்கம், அதைப் பற்றி ஒரு புதிய வழியில் சிந்திக்க என்னைத் தூண்டியுள்ளது. உங்கள் வேலைத் திட்டத்தைப் படிக்க விரும்புகிறேன். சோசலிசத்திற்காக நீங்கள் முன்னெடுக்கும் போராட்டத்தை நான் பாராட்டுகிறேன். நிகழ்நிலை கூட்டத்தில் நான் பங்கேற்பேன்,' என்று இந்திக கூறினார்.
கலை பீடத்தில் மூன்றாம் ஆண்டு படிக்கும் பஹான், போரின் மூலங்கள் குறித்து பின்வருமாறு கூறினார்: 'அமெரிக்காவிடம் உள்ள ஆயுதங்களை விற்பனை செய்வதற்காக போர்கள் தொடங்கப்படுகின்றன என்று நான் நினைக்கிறேன். ஆயுத உற்பத்தி அமெரிக்காவில் ஒரு முக்கிய தொழில் ஆகும்.'
இத்தகைய வாதங்கள், மேலே விளக்கப்பட்ட போரின் உண்மையான மூலங்களை மூடிமறைத்து, போரை நிறுத்துவதற்கான உண்மையான போராட்டத்திலிருந்து, அதாவது சர்வதேச சோசலிசத்திற்கான போராட்டத்திலிருந்து தொழிலாள வர்க்கத்தையும் இளைஞர்களையும் திசைதிருப்ப, போலி இடதுகள், கல்விமான்கள் எனப்படுவோர் மற்றும் முதலாளித்துவ ஊடகங்களால் புனையப்பட்டவை ஆகும் என்று பிரச்சாரகர்கள் விளக்கினர்.
வேலையில்லாத இளம் பட்டதாரியான லக்ஸான், போர் தொடர்பாக, “இலங்கையின் வெளியுறவுக் கொள்கை என்னவாக இருக்க வேண்டும்?” என்று கேட்டார்.
“இலங்கையின் வெளியுறவுக் கொள்கை” என்பது அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கையையே குறிப்பதுடன், அது முதலாளித்துவ வர்க்கத்தின் நலன்களால் தீர்மானிக்கப்படுகிறது என விளக்கிய பிரச்சாரகர்கள், ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கையானது சீனாவிற்கு எதிரான அமெரிக்க மூலோபாய திட்ட நிரலுடன் அதிகளவில் இணைந்திருப்பதை அவருக்கு சுட்டிக்காட்டினர்.
தொழிலாள வர்க்கத்திற்கு அதன் சொந்த வெளியுறவுக் கொள்கை உள்ளது. அது தொழிலாள வர்க்க அனைத்துலகவாதமாகும்.
எவ்வாறெனினும், முன்னிலை சோசலிசக் கட்சி போன்ற போலி இடது கட்சிகள், தொழிலாளர்களையும் இளைஞர்களையும் தொழிலாள வர்க்க அனைத்துலகவாதத்தில் இருந்து அந்நியப்படுத்துவதற்காக, 'அணிசேரா' கொள்கை எனப்படுவதை ஏற்றுக்கொள்ளுமாறு முதலாளித்துவ அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள அதே நேரம், அதில் இணைந்துகொள்ளுமாறு 'மக்களை' வலியுறுத்துகின்றனர்.
முதலாளித்துவ ஏகாதிபத்திய அமைப்பை போரை நோக்கித் தள்ளும் முரண்பாடுகள், எவ்வாறு சமூகப் புரட்சிக்கான நிலைமைகளையும் உருவாக்குகின்றன என்பதை சோ.ச.க./ஐ.வை.எஸ்.எஸ்.இ. உறுப்பினர்கள் அவருக்கு சுட்டிக்காட்டினர். ஒவ்வொரு நாட்டின் இளைஞர்களும் போருக்கு இரையாக்கப்பட்டு வருகின்றனர். போரின் செலவுகளை ஈடு செய்வதற்கு பொதுக் கல்வி, சுகாதாரம் மற்றும் நலன்புரி செலவினங்கள் கடுமையாக வெட்டப்படுகின்றன. ஏற்கனவே வெடித்துள்ள போர்களின் விளைவாக, எரிபொருள், உரம் மற்றும் தானியங்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் உட்பட உற்பத்தி மற்றும் விநியோகச் சங்கிலிகள் சீர்குலைந்துள்ளதன் விளைவுகளை சர்வதேச தொழிலாள வர்க்கம், ஏழைகள் மற்றும் இளைஞர்கள் எதிர்கொள்கின்றனர்.
2022 இலங்கை வெகுஜன எழுச்சி, கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் உக்ரைன் போரினால் இலங்கையின் ஏற்றுமதி வருவாய் சரிவடைந்தமை உட்பட உலகளாவிய நெருக்கடியின் ஒரு பகுதியாக இருக்கும் அதே நேரம், இதுபோன்ற சக்திவாய்ந்த வர்க்கப் போராட்டங்கள் இப்போது உலகம் முழுவதும் தலைதூக்கி வருகின்றன. கடந்த வாரம், புலம்பெயர்ந்த மக்களுக்கு எதிராக இராணுவத்தை நிறுத்துவது உட்பட ட்ரம்பின் சர்வாதிகார நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்டங்களில் சுமார் 15 மில்லியன் மக்கள் பங்கேற்றனர். வளர்ந்து வரும் போருக்கு எதிராக அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கிலும் இதேபோன்ற போராட்டங்கள் வெடித்தன.
தொழிலாள வர்க்கத்தை அந்தந்த நாடுகளில் உள்ள தேசிய முதலாளித்துவத்துடன் கட்டிவைக்கும் போலி இடது கட்சிகள் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் பிடியிலிருந்து தொழிலாள வர்க்கத்தை விடுவிப்பதும், சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையிலான தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான போர் எதிர்ப்பு இயக்கத்தை உலக அளவில் கட்டியெழுப்பி, போரின் மூலவேரான உலக முதலாளித்துவத்தை தூக்கியெறியும் போராட்டத்திற்குத் தயார் செய்வதும் அவசரத் தேவையாக உருவெடுத்துள்ளது.
இந்தப் போராட்டத்தையே சோ.ச.க./ஐ.வை.எஸ்.எஸ்.இ. மற்றும் அதன் உலகக் கட்சியான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் உலக சோசலிச வலைத் தளமும் அபிவிருத்தி செய்து வருகின்றன.
ஜூலை 6 அன்று நடைபெறும் நிகழ்நிலை கூட்டத்தில் இவை பற்றி தெளிவாக கலந்துரையாடப்படும். அனைத்து தொழிலாளர்களையும் இளைஞர்களையும் இதில் கலந்துகொள்ளுமாறு நாங்கள் அழைப்புவிடுக்கிறோம். அதற்காக இங்கே பதிவுசெய்துகொள்ளுங்கள்.
மேலும் படிக்க
- இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சி/IYSSE பகிரங்கக் கூட்டங்கள்: ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேல் போரை எதிர்த்திடு!
- இலங்கை அரசாங்கம் ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல்களை கண்டிக்க மறுத்துவிட்டது
- இலங்கையின் தமிழ் கட்சிகள் ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேல் போரை ஆதரிக்கின்றன
- இந்தியாவின் மோடி அரசாங்கம் ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலியப் போரை மறைமுகமாக ஆதரிக்கிறது
- ஈரானுக்கு எதிரான போரை நிறுத்து!