இலங்கையின் தமிழ் கட்சிகள் ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேல் போரை ஆதரிக்கின்றன

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்

அமெரிக்க தூதர் ஜூலி சங் (நடுவில்), தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுடன் நிற்கிறார்: (இடமிருந்து) கவீந்திரன் கோடீஸ்வரன், இளையதம்பி ஸ்ரீநாத், சாணக்கியன் ராசமாணிக்கம், துரைராசா ரவிகரன், சிவஞானம் ஸ்ரீதரன், பி. சத்தியலிங்கம், ஞானமுத்து ஸ்ரீநேஷன், கே.எஸ். குகதாசன் [Photo by X/Julie Chung]

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் நெதன்யாகு அரசாங்கம் ஈரானுக்கு எதிராக நடத்தும் குற்றவியல் போர், இலங்கையில் உள்ள தமிழ் முதலாளித்துவ தேசியவாதக் கட்சிகளின் ஏகாதிபத்திய சார்பு தன்மையை மீண்டும் ஒருமுறை அம்பலப்படுத்தியுள்ளது.

ஜூன் 12 அன்று இஸ்ரேல் ஈரானுக்கு எதிராகப் போரைத் தொடங்கி, அதன் அணுசக்தி நிலையங்கள், இராணுவ முகாம்கள் மற்றும் நாடு முழுவதும் உள்ள பொருளாதார இலக்குகளைத் தாக்கி, உயர் இராணுவ மற்றும் சிவில் அதிகாரிகளைக் கொன்றது. நிர்வாகம் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை முழுமையாக ஆதரிக்கும் ட்ரம்ப் நிர்வாகம், ஜூன் 22 அன்று, பிரதான ஈரானிய அணுசக்தி தளங்கள் மீது குண்டுவீச்சு நடத்தி நேரடியாகப் போரில் இணைந்துகொண்டது.

குழந்தைகள் உட்பட அறுநூறுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு, 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதுடன் ஏராளமான சிவில் உள்கட்டமைப்புகள் இடிந்து விழுந்துள்ளன. ட்ரம்ப் முன்மொழிந்துள்ள ஒரு பலவீனமான போர்நிறுத்தம் இப்போது அமுலில் உள்ளபோதும், அது வாஷிங்டனின் அடுத்த நடவடிக்கை வரை மட்டுமே நீடிக்கும்.

ஈரானுக்கு எதிரான அதன் ஆக்கிரமிப்புக்கு மத்தியில், இஸ்ரேலிய சியோனிச ஆட்சி காசாவில் அதன் இன அழிப்பு தாக்குதலை தொடர்ந்து தீவிரப்படுத்தி, உணவு தேடுபவர்கள் மற்றும் அவர்களுக்கு சேவை செய்ய முயற்சிக்கும் தொண்டு ஊழியர்கள் உட்பட நூற்றுக்கணக்கானவர்களைக் கொன்று வருகிறது.

சிஐஏ ஆதரவு பெற்ற, ரெசா ஷா பஹ்லவி 1979 புரட்சியில் வீழ்த்தப்பட்டதை அடுத்து, 45 ஆண்டுகளுக்கு முன்பு இழந்த ஈரான் மீதான நேரடி நவ-காலனித்துவ ஆதிக்கத்தை மீண்டும் ஸ்தாபிப்பதில் அமெரிக்க ஏகாதிபத்தியம் உறுதியாக உள்ளது. இது, எண்ணெய் வளம் மிக்க மத்திய கிழக்கின் மீது கட்டுப்பாட்டைப் பேணுவதற்கும் ரஷ்யா மற்றும் சீனாவிற்கு எதிரான போருக்குத் தயாராவதற்குமான ஒரு பரந்த மூலோபாயத்தின் பகுதியாகும்.

ஈரான் மீதான போர் மற்றும் காசாவில் நடந்துவரும் இனப்படுகொலைக்கும் எதிராக சர்வதேச அளவில் இலட்சக்கணக்கான தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்கள் தெருக்களில் இறங்கி தங்கள் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

இருப்பினும், கடந்த இரண்டு வாரங்களாக, இலங்கையில் உள்ள தமிழ் முதலாளித்துவ அரசியல் கட்சிகளில் எதுவும் இந்த சட்டவிரோத ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புப் போரை கண்டிக்கவோ விமர்சிக்கவோ இல்லை. பெரும்பாலும் அவர்கள் எதுவுமே சொல்லவில்லை.

இதில், இலங்கை தமிழ் அரசு கட்சி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் ஈழ மக்கள் விடுதலை கழகம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி உட்பட இன்னும் பல தமிழ் கட்சிகள் அடங்கும்.

இது ஆச்சரியத்துக்குரியது அல்ல. குறிப்பாக, 2009 மேயில் முடிவடைந்த பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த கொழும்பு அரசாங்கங்கள் நடத்திய 26 ஆண்டுகால இனவாதப் போரின் முடிவில் இருந்து, இந்த கட்சிகள் அனைத்தும் அமெரிக்கா உட்பட ஏகாதிபத்திய சக்திகளுடன் நெருங்கிய உறவுகளை வளர்த்துக் கொண்டுள்ளன.

தமிழ் குழுக்கள் வாஷிங்டன் மற்றும் ஏனைய சக்திகளின் உலகளாவிய புவிசார் மூலோபாய நலன்களை -குறிப்பாக சீனாவிற்கு எதிராக- ஆவலுடன் ஆதரிப்பதோடு தீவின் வடக்கு மற்றும் கிழக்கிற்கான அதிகாரப் பகிர்வு ஏற்பாட்டின் ஒரு பகுதியாக, தமிழ் உயரடுக்கிற்கு சலுகைகளை வழங்க கொழும்பு ஆட்சிக்கு அழுத்தம் கொடுக்குமாறு அவர்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றன.

ஜூன் 19 அன்று பாராளுமன்றத்தில் ஒரு கருத்தை வெளியிட்ட தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன், 'உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டத்தில் இரு நாடுகளும் இலங்கை அரசாங்கத்தை ஆதரித்தன. இப்போது ஈரானும் அதே நிலைமையை அனுபவித்து வருகிறது' என்று அறிவித்தார்.

கவீந்திரன் கோடீஸ்வரன் [Photo by Facebook/Kaveendiran Kodeeswaran]

இரு நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பதன் மூலம், அமெரிக்க ஏகாதிபத்தியமும் அதன் பினாமி இஸ்ரேலும் வரலாற்று ரீதியாக ஒடுக்கப்பட்ட ஒரு தேசத்திற்கு எதிராக அதனால் ஆத்திரமூட்டப்படாமலேயே ஒரு ஆக்கிரமிப்புப் போரை நடத்தியது என்ற உண்மையை கோடீஸ்வரன் வேண்டுமென்றே முடிமறைக்கிறார். மறைமுகமாக, ஈரானிய ஆட்சியின் சந்தர்ப்பவாத முடிவுகளை, போரின் சுமையைத் தாங்கும் ஈரானிய மக்களுடையதாக சமப்படுத்தி, 'நிலைமைக்கு' ஈரான் தான் பொறுப்பு என்று அவர் மறைமுகமாகக் குறிப்பிடுகிறார்.

இலங்கை முதலாளித்துவத்தின் குறுகிய நலன்களில் கவனம் செலுத்துவதன் மூலம், கோடீஸ்வரன் இந்த முற்றிலும் கொள்கையற்ற நிலைப்பாட்டைப் பின்பற்றுகிறார். 'போரை நிறுத்துவதற்கு ஆதரவளிக்க” கொழும்பு அரசாங்கம் “மற்ற நாடுகளுடன்' இணைய வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார். அது ஏன்? அது மோதலின் குற்றவியல் ஏகாதிபத்திய தன்மை காரணமாகவா? இல்லை. மாறாக, 'இலங்கையின் பொருளாதாரம் ஒரு பலவீனமான சூழ்நிலையில் உள்ளதால்' அது பாதுகாக்கப்பட வேண்டும், என்ற நிலைப்பாட்டில் இருந்தே கூறுகிறார்.

ஜூன் 22 அன்று தமிழ் கார்டியனில் 'இஸ்ரேல், ஈரான் மற்றும் இலங்கை' என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரை, ஈரான் மீதான போரின் சாத்தியமான பொருளாதார தாக்கத்தைப் பற்றி பேச முழுமையாக அர்ப்பணிக்கப்பட்டிருந்ததுடன், தமிழ் முதலாளித்துவம் இலங்கையில் தனது நலன்களை மேம்படுத்திக்கொள்ள இந்த சூழ்நிலையைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று முன்மொழிகிறது. இங்கிலாந்தை தளமாகக் கொண்ட இந்த வலைத்தளம், தமிழ் புலம்பெயர்ந்தோரின் வசதி படைத்த அடுக்குகளின் குரலாகும்.

'கொழும்பைப் பொறுத்தவரை, இதன் விளைவு நீண்டகால பொருளாதார மற்றும் அரசியல் விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்” என்று அறிவித்த அந்தக் கட்டுரை, 'பூகோள ஸ்திரமின்மையானது கொழும்பை பொருளாதார உயிர்பிழைப்புக்காக வெளியாரை எதிர்பார்த்திருக்க நிர்ப்பந்திக்கப்படுவதால், சர்வதேச பங்காளிகள் இந்த தருணத்தைப் பயன்படுத்தி நீண்டகாலமாக நிலுவையில் உள்ள சீர்திருத்தங்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்,' என மேலும் கூறியது.

'சர்வதேச பங்காளிகள்' என்று தமிழ் உயரடுக்கு குறிப்பிடுவது, மத்திய கிழக்கிலும் உக்ரைனில் ரஷ்யாவிற்கு எதிராகவும், போர்களை நடத்தி வருகின்ற, சீனாவிற்கு எதிராக இந்தோ-பசிபிக் பகுதியில் போருக்குத் தயாராகி வருகின்ற அமெரிக்கா உட்பட ஏகாதிபத்திய சக்திகளையே ஆகும். எல்லாவற்றுக்கும் மேலாக, இந்த ஏகாதிபத்திய சக்திகள், இந்தியாவுடன் சேர்ந்து, இறுதி மாதங்களில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களைப் படுகொலை செய்த கொழும்பின் இனவாதப் போரை முழுமையாக ஆதரித்தன.

ஈரானுக்கு எதிரான போர் பூகோள மோதலாக மாறக்கூடும் என்று எச்சரித்தாலும், தமிழ் கார்டியன், இலங்கையில் உள்ள தமிழ் முதலாளித்துவத்தின் நலன்களைப் பற்றி மட்டுமே, எல்லாவற்றிற்கும் மேலாக 'தமிழ் தாயகத்திற்கான அர்த்தமுள்ள சுயாட்சி' - அதாவது, தமிழ் தொழிலாள வர்க்கத்தையும் ஒடுக்கப்பட்ட மக்களையும் சுரண்டுவதற்கான அதிக வாய்ப்பைப் பற்றி மட்டுமே அக்கறை கொண்டுள்ளது,

இலங்கையில் தமிழ் ஒடுக்கப்பட்ட தொழிலாளர்களும் ஏழைகளும் பல தசாப்தங்களாக கொழும்பு ஆட்சிகளால் முன்னெடுக்கப்படும் பாரபட்சம் மற்றும் வன்முறையை எதிர்கொண்டுள்ளனர். இது தற்போதைய மக்கள் விடுதலை முன்னணி/தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் தொடர்கிறது. தமிழ் உயரடுக்குகள் ஈரானில் ஒடுக்கப்பட்ட மக்களையும் காசாவில் பாலஸ்தீனியர்களையும் அவமதிப்புடன் நடத்துவது போலவே, தமிழ் மக்களையும் அதே அவமதிப்புடன் கருதுகின்றன.

தமிழ் உயரடுக்குகள் இஸ்ரேலிய இனப்படுகொலை தொடர்பாக கொண்டிருப்பதைப் போலவே, ஈரான் மீதான அமெரிக்கா/இஸ்ரேல் குண்டுவீச்சு சம்பந்தமாகவும் அதே நயவஞ்சகமான மற்றும் பிற்போக்கு வாதத்தை பரப்புகின்றன. அதாவது, புலிகளுக்கு எதிரான 26 ஆண்டுகால இனவாதப் போரை யாரும் எதிர்க்கவில்லை, எனவே தமிழர்கள் மத்திய கிழக்கில் மக்களின் அவலநிலையைப் பற்றி எதுவும் சொல்லக்கூடாது செய்யக் கூடாது, என வாதிடுகின்றன.

இது மற்றொரு பொய் ஆகும். போரின் இறுதி மாதங்களை மட்டும் எடுத்துக் கொண்டாலும், தமிழ் பொதுமக்கள் அடுத்தடுத்து படுகொலைகளைச் சந்தித்தபோது, ​​இலங்கையில் இனவாதப் போருக்கு எதிராக இலட்சக்கணக்கான மக்கள் ஏகாதிபத்திய நாடுகளின் பிரதான நகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கொழும்பு அரசாங்கத்தின் இரத்தக்களரி தாக்குதலுக்கு அரசியல் மற்றும் இராணுவ ஆதரவை வழங்கிய அதே சக்திகளிடம் சமாதானத்திற்கான பயனற்ற வேண்டுகோள்களை விடுத்தது புலிகள் உட்பட தமிழ் கட்சிகளின் தலைவர்களே ஆவர்.

இராணுவத்திடம் சரணடைந்த தங்கள் அன்புக்குரியவர்களுக்கும் காணாமல் போனவர்களுக்கும் என்ன நடந்தது என்ற உண்மையைக் கண்டறியக் கோரியும், போர்க்குற்றங்களுக்கு நீதி கோரியும் தமிழ் மக்கள் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

தமிழ் முதலாளித்துவக் கட்சிகளின் நிலைப்பாடு ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கம் மற்றும் கொழும்பு அரசியல் ஸ்தாபனத்தின் ஏனைய பிரிவுகளின் நிலைப்பாட்டில் இருந்து சிறிதும் வேறுபட்டதல்ல.

ஜூன் 23 அன்று, வெளியுறவு அமைச்சு வெளியிட்ட கவனமாக வடிவமைக்கப்பட்ட மூன்று வாக்கிய அறிக்கையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் பற்றி குறிப்பிடுவதையும், ஈரானால் ஆத்திரமூட்டப்படாமலேயே அதற்கு எதிராக அவை சட்டவிரோத போரை முன்னெடுப்பதை பற்றி விமர்சிப்பதையும் தவிர்த்துக்கொண்டது. அது 'கடுமையான கவலை' வெளியிடுவதும் 'போர் பதற்றத்தை தணிப்பதற்கும்' 'பேச்சுவார்த்தை' நடத்துவதற்கும் அழைப்பு விடுப்பதும், எல்லாவற்றிற்கும் மேலாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தை அந்நியப்படுத்தக்கூடாது என்ற அக்கறையினாலும் மோதலின் பொருளாதார தாக்கம் பற்றிய கவலையினாலுமே உந்தப்பட்டன.

தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் தமிழ் மற்றும் சிங்கள முதலாளித்துவக் கட்சிகளின் வஞ்சத்தனமான, வங்குரோத்தான மற்றும் ஏகாதிபத்திய சார்பு நிலைப்பாடுகளை நிராகரிப்பதோடு ஏகாதிபத்திய குற்றவியல் போர் உந்துதலுக்கு எதிராக தைரியமான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்.

உலகளாவிய மோதல் விரிவடைந்து வரும் நிலையில், இலங்கையில் உள்ள தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் தொழிலாளர்களும் ஈரான், காசா மற்றும் இஸ்ரேல் உட்பட மத்திய கிழக்கு முழுவதும், சர்வதேச அளவில் உள்ள தங்கள் வர்க்க சகோதரர்களைப் போலவே ஒரே ஆபத்தை எதிர்கொள்கிறார்கள். ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்திலும் மனிதகுலத்துக்கு பேரழிவை ஏற்படுத்த அச்சுறுத்தும் அணு ஆயுத சக்திகளுக்கு இடையிலான பூகோள மோதலே வெளிப்பட்டுள்ளது.

சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் அதன் சகோதரக் கட்சிகளும், தொழிலாள வர்க்கம் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களின் ஒருங்கிணைந்த போராட்டத்தின் மூலம் ஏகாதிபத்தியத்தின் தாக்குதலில் இருந்து ஒடுக்கப்பட்ட நாடுகளைப் பாதுகாப்பது என்ற சர்வதேச மற்றும் மார்க்சியக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டுள்ளன.

ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தின் ஒரு சர்வதேச போர் எதிர்ப்பு இயக்கத்தை கட்டியெழுப்புவதன் மூலம் மட்டுமே உலகப் போரின் பேரழிவைத் தடுக்க முடியும்.

இலங்கையில், அனைத்து வகையான பாரபட்சங்கள் மற்றும் இனவாதத்தை எதிர்க்கவும், வடக்கு மற்றும் கிழக்கிலிருந்து அனைத்து துருப்புக்களையும் விலக்கிக்கொள்ளக் கோரவும், ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கவும் தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்த சோசலிச சமத்துவக் கட்சி போராடுகிறது. இந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக, ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிசக் குடியரசுக்கான போராட்டத்திற்காக அணிதிரளுமாறு தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளுக்கு நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்.

சோசலிச சமத்துவக் கட்சியும் சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் (IYSSE) அமைப்பும், 'ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் போரை எதிர்த்திடு!' என்ற கருப்பொருளில் பொதுக் கூட்டங்களை ஏற்பாடு செய்துள்ளன.

அமெரிக்க போர் உந்துதல் மற்றும் ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேல் ஆக்கிரமிப்பு மற்றும் அதை எவ்வாறு எதிர்த்துப் போராடுவது என்பது பற்றி கலந்துரையாடும் இந்தக் கூட்டங்களில் கலந்து கொள்ளுமாறு நாங்கள் உங்களை வலியுறுத்துகிறோம்.

நிகழ்நிலை கூட்டம்: ஜூலை 6 ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணிக்கு

இங்கே பதிவு செய்துகொள்ளுங்கள்: https://us06web.zoom.us/meeting/register/vgd37er4T7WeEj_VFXQBvw#/registration

யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபம்: ஜூலை 8 செவ்வாய்கிழமை பிற்பகல் 3 மணிக்கு

Loading