மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
கடந்த செவ்வாய்க்கிழமை, அமெரிக்க செனட் சபை நிறைவேற்றிய டொனால்ட் ட்ரம்பின் வர்க்கப்-போர் வரவு-செலவுத் திட்ட மசோதா, இந்த வார இறுதியில் சமரசம் மற்றும் இறுதி நிறைவேற்றத்திற்காக பிரதிநிதிகள் சபைக்கு அனுப்பப்பட்டது.
இந்த மசோதா, அமெரிக்க வரலாற்றில் தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளிடமிருந்து தன்னலக்குழுவிற்கு செல்வத்தை மாற்றும் மிகப்பெரிய ஒன்றாகும். இது, மருத்துவ உதவி திட்டத்தில் 930 பில்லியன் டாலர் வெட்டுக்களுக்கு அழைப்பு விடுக்கிறது. இது, காங்கிரஸின் வரவு-செலவுத் திட்ட அலுவலக தகவல்படி, 11.8 மில்லியன் குறைந்த வருமானம் கொண்ட தொழிலாளர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு மருத்துவப் பராமரிப்பை இழக்கச் செய்கிறது.
இதில் உணவு மானிய முத்திரைகளுக்கான 285 பில்லியன் டாலர் வெட்டுக்களும் அடங்கும். இது 40 மில்லியன் அமெரிக்கர்கள் தங்களுக்கும் தங்கள் குடும்பங்களுக்கும் உணவளிக்க நம்பியிருக்கும் ஒரு திட்டத்தில் ஏற்பட்டுள்ள 20 சதவீத வெட்டாகும். இதனால், 4 மில்லியன் குழந்தைகள் உட்பட கிட்டத்தட்ட 11 மில்லியன் மக்கள் தங்கள் உணவு உதவியை இழக்க நேரிடும்.
கூடுதலாக, இது தூய்மையான எரிசக்திக்கான வரிச் சலுகைகளை நீக்குவதுடன், மாணவர் கடன் நிவாரணத்தை 320 பில்லியன் டாலர் வரை வெட்டுகிறது.
இந்தக் கொடூரமான வெட்டுக்கள், ட்ரம்பின் முதல் பதவிக்காலத்தில் நிறைவேற்றப்பட்ட மேலேயுள்ள 1 சதவீதத்தினருக்கு, 3.8 டிரில்லியன் டாலர் வரி குறைப்புகளை நிரந்தரமாக நீட்டிப்பதற்கான செலவை ஈடுசெய்ய உதவும். இது, பணக்காரர்களில் 0.1 சதவீதத்தினருக்கு தங்கள் வருமானம் ஆண்டுக்கு சராசரியாக 3.9 சதவீத ($389,000) அதிகரிப்பதைக் காண்பார்கள் என்றும், ஏழ்மையான 20 சதவீதத்தினர் 6.8 சதவீத வெட்டை அனுபவிப்பார்கள் என்றும் மதிப்பிட்டுள்ளது.
இந்த மசோதா, எல்லை மற்றும் தேசிய “பாதுகாப்புக்காக”, அதாவது, உலகெங்கிலும் உள்ள குடியேற்ற கெஸ்டபோ மற்றும் ஏகாதிபத்தியப் போரின் கருவிகளுக்காக கூடுதலாக 350 பில்லியன் டாலரை ஒதுக்குகிறது. இதில் ட்ரம்பின் எல்லைச் சுவரை நிறைவு செய்ய 46 பில்லியன் டாலரும், புலம்பெயர்ந்தோர் தடுப்புக்காவல் மையங்களை விரிவுபடுத்த 45 பில்லியன் டாலர்களும் அடங்கும். இந்த மசோதா, 10,000 புதிய குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்க (ICE) முகவர்கள் மற்றும் 3,000 புதிய எல்லை ரோந்து அதிகாரிகளை பணியமர்த்துகிறது.
அமெரிக்க ஏகாதிபத்தியம் சீனாவிற்கு எதிரான போருக்குத் தயாரிப்பு செய்து வருகின்ற நிலையில், இந்த சட்ட மசோதா 2025 க்கான அமெரிக்க இராணுவ செலவுகளை —ஏற்கனவே சாதனையளவாக 1 ட்ரில்லியன் டாலர்கள்— கூடுதலாக 150 பில்லியன் டாலர் வரை அதிகரிக்கிறது.
இந்த மசோதா கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக கட்டவிழ்ந்துள்ள ஒரு நிகழ்ச்சிப்போக்கில் ஒரு புதிய கட்டத்தைக் குறிக்கிறது. 1965 இல் நிறைவேற்றப்பட்ட மருத்துவ உதவி, லிண்டன் ஜோன்சனின் மாபெரும் சமூகம் மற்றும் “வறுமைக்கு எதிரான போர்” திட்டங்கள் மற்றும் அமெரிக்காவில் இயற்றப்பட்ட கடைசி குறிப்பிடத்தக்க சமூக சீர்திருத்தத்தின் ஒரு மைல்கல்லாக இருந்தது.
கடந்த 60 ஆண்டுகளில், ஆளும் வர்க்கம் இடைவிடாத சமூக எதிர்ப் புரட்சியை நடத்தி வருகிறது. வோல் ஸ்ட்ரீட் மற்றும் பெருநிறுவன ஆளும் உயரடுக்கின் தொடர்ச்சியான பிணை எடுப்புகளுக்கு பணம் செலுத்துவதற்காக சமூகத் திட்டங்களைக் குறைப்பதை ஜனநாயகக் கட்சியினரும் குடியரசுக் கட்சியினரும் மேற்பார்வையிட்டு வருகின்றனர். மருத்துவ உதவியை ஒழித்துக்கட்டுவது என்பது ஒரு திருப்புமுனையைக் குறிக்கிறது.
இந்தக் கொள்கைகள் பிரமாண்டமான மக்கள் எதிர்ப்பை உருவாக்கும். Fox News வெளியிட்ட ஒரு கருத்துக் கணிப்பில் கூட, அமெரிக்கர்கள் வரவுசெலவுத் திட்ட மசோதாவை 59 சதவீதம் முதல் 38 சதவீதம் வரை எதிர்க்கின்றனர் என்பதைக் காட்டுகிறது. இது, தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடையே அதிகரித்து வரும் கோபத்தை மேலும் தூண்டும். இது கடந்த மாதம் “மன்னர்கள் வேண்டாம்” நாளில் ஆர்ப்பாட்டம் செய்த 11 மில்லியன் மக்களிடையேயும், நியூ யோர்க் ஜனநாயக மேயர் முதன்மைத் தேர்தலில் தன்னை “ஜனநாயக சோசலிஸ்ட்” என்று அழைத்துக் கொள்ளும் ஜோஹ்ரான் மம்தானியின் குழப்பமான வெற்றியிலும் ஏற்கனவே வெளிப்பட்டது.
ட்ரம்பின் வர்க்கப் போர் மசோதா நிறைவேற்றப்பட்டமையானது சமூகப் புரட்சிக்கும் தன்னலக்குழுக்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்வதற்குமான மிகவும் சக்திவாய்ந்த வாதத்தை முன்வைக்கிறது. இது வர்க்க ஆட்சியின் அப்பட்டமான வெளிப்பாடாகும்: இது, அமெரிக்க சமூகத்தில் ஆதிக்கம் செலுத்தும் பில்லியனர்களால் கட்டளையிடப்பட்ட ஒரு பரந்த தாக்குதலாகும். இந்த சட்ட மசோதா, பாசிச ட்ரம்ப் நிர்வாகத்தில் உருவடிவம் பெற்ற பெருநிறுவன-நிதியியல் உயரடுக்கின் கொள்கையைப் பிரதிநிதித்துவம் செய்வதுடன், இரண்டு பெருவணிக கட்சிகள் உட்பட முதலாளித்துவ அரசு இந்த ஒட்டுண்ணி வர்க்கத்தின் செல்வ வளத்தையும் அதிகாரத்தையும் பாதுகாக்கவும் விரிவாக்கவும் மட்டுமே உள்ளது என்பதை மூர்க்கமான தெளிவுடன் எடுத்துக்காட்டுகிறது.
இந்த மசோதா அமெரிக்க மற்றும் உலகளாவிய முதலாளித்துவத்தின் பொருளாதார நெருக்கடியை மேலும் மோசமாக்கும். ஏற்கனவே 36 டிரில்லியன் டாலர்களையும் தாண்டிய அமெரிக்க தேசியக் கடனில், மேலும் 3.3 டிரில்லியன் டாலர்களை அதிகரிக்க செய்கிறது. மேலும், கடன் உச்சவரம்பை 5 டிரில்லியன் டாலர்கள் அளவுக்கு உயர்த்தும். உலகளாவிய இருப்பு நாணயமான டாலரின் நிலையை பலவீனப்படுத்தும் இந்த நெருக்கடி, ஆளும் வர்க்கத்தை தொழிலாள வர்க்கத்தின் சமூக நிலைமைகள் மீதான அதன் தாக்குதலை தீவிரப்படுத்த உந்தித் தள்ளும். இது, மருத்துவக் காப்பீடு மற்றும் சமூகப் பாதுகாப்பு உட்பட சமூகப் பாதுகாப்பு வலையமைப்பில் எஞ்சியுள்ள அனைத்தையும் அழிக்கத் தூண்டும்.
இந்தக் கொள்கைகள் ஜனநாயக உரிமைகளை அழிப்பதன் மூலமும் சர்வாதிகாரத்தைத் திணிப்பதன் மூலமும் மட்டுமே சுமத்தப்பட முடியும். குறிப்பிடத்தக்க வகையில், 50-50 என்ற சமநிலையை உடைப்பதற்கான தீர்மானகரமான வாக்கை துணை ஜனாதிபதி ஜேடி வான்ஸ் அளித்த நிலையில், செனட் ட்ரம்பின் மசோதாவை நிறைவேற்றிய அதே தருணத்தில், ஜனாதிபதி புளோரிடாவில் “முதலை அல்கட்ராஸ்” என்று பெயரிடப்பட்ட புலம்பெயர்ந்தவர்களுக்கான ஒரு புதிய சித்திரவதை முகாமைத் திறப்பதைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார்.
ஜனநாயகக் கட்சியோ அல்லது தொழிற்சங்க எந்திரமோ தொழிலாள வர்க்கத்தின் மீதான வரவுசெலவுத் திட்ட தாக்குதலை எதிர்க்க எந்த தீவிர நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. இவை, வேலைநிறுத்த நடவடிக்கையை ஆதரிப்பது ஒருபுறம் இருக்க, ஒரு போராட்டத்திற்கும் அழைப்பு விடுக்கவில்லை. முதலாளித்துவ அமைப்பு முறையை அச்சுறுத்தக்கூடிய ஒரு சமூக இயக்கத்திற்கு அஞ்சி, மக்கள் போராட்டத்தை ஊக்குவிக்கும் எந்தவொரு நடவடிக்கையையும் கண்டு இவை பீதியடைந்துள்ளன.
ஜனநாயகக் கட்சியினர் இந்த மசோதாவின் எதிர்ப்பாளர்களாக காட்டிக் கொள்ள தொடர்ச்சியான சிடுமூஞ்சித்தனமான சூழ்ச்சிகளில் ஈடுபட்டுள்ளனர். செனட் சபையில் கிட்டத்தட்ட 1,000 பக்க ஆவணத்தை முழுவதுமாகப் படிக்க கட்டாயப்படுத்துவதும், ஒருபோதும் நிறைவேற்றப்படாது என்று அவர்கள் அறிந்த திருத்தங்களை வாசிக்கும் 26 மணிநேர “வாக்கெடுப்பு” நிகழ்ச்சியும் இதில் அடங்கும். உண்மையில், ஜனநாயகக் கட்சியினர் சமூகநலத் திட்டங்களில் மிருகத்தனமான வெட்டுக்களுக்கு ஆதரவு கொடுக்கின்றனர். இவை இன்னும் விரிவடைந்து வரும் இராணுவ ஆக்கிரமிப்பிற்கு நிதியளிக்கவும், அமெரிக்க முதலாளித்துவத்தின் கடன் மற்றும் டாலர் நெருக்கடியை ஈடுகட்டவும் உதவும்.
தொழிலாள வர்க்கம், தனது நலன்களைப் பின்தொடர்வதில் முற்றிலும் இரக்கமற்ற ஒரு தன்னலக்குழுவை எதிர்கொள்கிறது. இந்த தன்னலக்குழுவானது தனது செல்வத்தையும் அதிகாரத்தையும் பாதுகாக்க எதையும் நிறுத்தாத ஒரு ஆளும் உயரடுக்காகும். ஜனநாயகக் கட்சியை இடது பக்கம் தள்ளுவதன் மூலம், மம்தானி மற்றும் அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்டுகள் போன்ற பிரமுகர்களால் முன்மொழியப்பட்ட குறைந்தபட்ச சீர்திருத்தங்கள் மூலம் தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாக்க முடியும் என்ற கருத்து ஒரு ஆபத்தான புனைகதையாகும்.
சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் வளர்ந்து வரும் எதிர்ப்பை ஒரு சோசலிச வேலைத்திட்டம் மற்றும் புரட்சிகர தலைமையுடன் ஆயுதபாணியாக்க போராடுகிறது. பெருநிறுவனங்கள் மற்றும் வங்கிகளைப் பறிமுதல் செய்து, அவற்றை தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து, அவற்றை தனியார் இலாபத்திற்காக அல்லாமல் மனிதயின தேவைக்கு சேவையாற்றும் பொது பயன்பாடுகளாக மாற்றுவதற்கு, இரண்டு முதலாளித்துவ கட்சிகளில் இருந்தும் சுயாதீனமான ஒரு பாரிய இயக்கத்தைக் கட்டமைப்பதில்தான் முன்னோக்கிய பாதை தங்கியுள்ளது.
இந்தப் போராட்டத்தை ஒழுங்கமைக்கவும் தலைமை கொடுக்கவும், தொழிற்சங்க அதிகாரத்துவம் மற்றும் ஜனநாயகக் கட்சியில் இருந்து சுயாதீனமாக, ஒவ்வொரு வேலையிடத்திலும் அண்டை அயலிலும் சாமானிய தொழிலாளர் குழுக்களைக் கட்டியெழுப்புமாறு சோசலிச சமத்துவக் கட்சி தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுக்கிறது. இத்தகைய குழுக்கள், ட்ரம்ப் நிர்வாகத்தை வீழ்த்துவதற்கும், சமூக சமத்துவம், உண்மையான ஜனநாயகம் மற்றும் சர்வதேசியவாதத்தின் அடிப்படையில் ஒரு தொழிலாளர் அரசாங்கத்திற்காக போராடுவதற்குமான ஒரு பொது வேலைநிறுத்தத்திற்கான அடித்தளமாக இருக்க வேண்டும். தொழிலாள வர்க்கம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றி, நிதியியல் தன்னலக்குழு தட்டுக்களைப் பறிமுதல் செய்து, சமூகத்தை தனியார் இலாபத்திற்காக அல்லாமல் மனிதயின தேவையின் அடிப்படையில் மறுகட்டுமானம் செய்ய வேண்டும்.