மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
அமெரிக்க-இஸ்ரேலிய இனப்படுகொலையின் போது காஸாவில் ஊட்டச்சத்து குறைபாட்டால் குறைந்தது 66 குழந்தைகள் இறந்துள்ளனர் என்று காஸாவின் அரசாங்க ஊடக அலுவலகம் இந்த வார இறுதியில் தெரிவித்துள்ளது. மேலும், காஸாவில் முற்றுகையிடப்பட்ட பகுதியில் பாரிய பட்டினி தொடர்ந்து வேகமாக அதிகரித்து வருகிறது.
ஊட்டச்சத்து குறைபாட்டால் ஏற்பட்ட இறப்புக்களை அறிவித்த காஸாவின் அரசாங்க ஊடக அலுவலகம், இஸ்ரேல் “வேண்டுமென்றே பட்டினியை ஒரு ஆயுதமாக பயன்படுத்தி அப்பாவி மக்களை அழித்து வருகிறது” என்று குற்றஞ்சாட்டியது.
இந்த மாத தொடக்கத்தில், ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம் (UNICEF) காஸாவில் ஊட்டச்சத்து குறைபாடு “ஆபத்தான” விகிதத்தில் அதிகரித்து வருவதாகவும், 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து ஒவ்வொரு நாளும் 112 குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவதாகவும் தெரிவித்தது.
ஜூன் மாதத்தில் மட்டும், 6 மாதங்கள் முதல் 5 வயதுக்குட்பட்ட 5,000 க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது, மே மாதத்தில் இருந்து 50 சதவீத அதிகரிப்பையும், பெப்ரவரியில் இருந்து 150 சதவீத அதிகரிப்பையும் பிரதிபலிக்கிறது.
“கடந்த மே மாதத்தில் அனுமதிக்கப்பட்ட 5,119 குழந்தைகளில், 636 குழந்தைகளுக்கு கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு (SAM) இருப்பதாகவும், இது மிகவும் ஆபத்தான ஊட்டச்சத்து குறைபாடு என்றும் UNICEF குறிப்பிட்டுள்ளது. இந்தக் குழந்தைகளுக்கு நிலையான, மேற்பார்வையிடப்பட்ட சிகிச்சை, பாதுகாப்பான நீர் மற்றும் மருத்துவ பராமரிப்பு தேவை – இந்த தேவைகள் அனைத்தும் இன்று காஸாவில் அதிகரித்தளவில் பற்றாக்குறையாக உள்ளன” என்று அது மேலும் தெரிவித்துள்ளது.
“இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து மே மாத இறுதி வரை வெறும் 150 நாட்களில், காஸா பகுதியில் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக சிகிச்சைக்காக 16,736 குழந்தைகள் (ஒரு நாளைக்கு சராசரியாக 112 குழந்தைகள்) அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என்று யுனிசெஃப் பிராந்திய இயக்குனர் எட்வார்ட் பெய்க்பெடர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார். ... “இந்த சிகிச்சைகள் ஒவ்வொன்றும் தடுக்கப்படக் கூடியவை. அவர்களுக்கு மிகவும் தேவைப்படும் உணவு, தண்ணீர் மற்றும் ஊட்டச்சத்து சிகிச்சைகள் அவர்களை சென்றடைவது தடுக்கப்படுகிறது. மனிதனால் உருவாக்கப்பட்ட முடிவுகள் உயிர்களைப் பறிக்கின்றன” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இஸ்ரேலிய முற்றுகை நீக்கப்படாவிட்டால் ஊட்டச்சத்து குறைபாடு தொடர்ந்து அதிகரிக்கும் என்று யுனிசெஃப் எச்சரித்துள்ளது. காஸாவில் ஊட்டச்சத்து குறைபாடு 20 மாதங்களுக்கு முன்பு இருந்ததில்லை என்று யுனிசெஃப் குறிப்பிட்டுள்ளது.
“முற்றுகை மற்றும் கட்டாய பட்டினியால், காஸா முழுவதும் உள்ள குழந்தைகள் பலவீனமடைந்துள்ளனர்” என்று காஸா நகரத்தில் உள்ள நோயாளிகளின் நண்பர்கள் மருத்துவ சங்கத்தின் டாக்டர் சூசன் மரூஃப் அல் ஜசீராவிடம் கூறினார். “எங்களால் சில சம்பவங்களுக்கு உதவவும், அதன் தீவிரத்தின் அளவைக் குறைக்கவும் முடிந்தது. மற்றவை, சோகமாக, மிகவும் மோசமான நிலைமைகளை உருவாக்கின” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இஸ்ரேலிய இராணுவம் ஐக்கிய நாடுகள் சபை உட்பட காஸாவில் உள்ள சட்டபூர்வமான மனிதாபிமான அமைப்புகளுக்கு உணவு வழங்குவதை பெருமளவில் நிறுத்தியுள்ளது.
அதற்கு பதிலாக, அமெரிக்காவும் இஸ்ரேலும் “காஸா மனிதாபிமான அறக்கட்டளை” (GHF) என்றழைக்கப்படும் ஒரு போலி-மனிதாபிமான அமைப்பை உருவாக்கி உள்ளன. பசியால் வாடும் காஸா மக்களை உணவு விநியோக இடங்களுக்கு வரவழைத்து, அங்கு இஸ்ரேலிய துருப்புக்கள் தொடர்ச்சியாக அவர்களை படுகொலை செய்து வருகின்றது.
கடந்த மாதத்தில் குறைந்தது 19 தனித்தனி சம்பவங்களில், இஸ்ரேலிய துருப்புக்கள் GHF விநியோக மையத்தில் பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி 550 க்கும் மேற்பட்டவர்களைக் கொன்றுள்ளது. ஞாயிறன்று இஸ்ரேலியப் படைகள் உதவி வழங்கும் இடத்தில் மற்றொரு படுகொலையை நடத்தின. இதில் குறைந்தபட்சம் ஐந்து பேர் கொல்லப்பட்டனர்.
கடந்த வாரம், இஸ்ரேலிய துருப்புகளுடனான நேர்காணல்களை உள்ளடக்கிய ஒரு விசாரணையை ஹாரெட்ஸ் பத்திரிகை பிரசுரித்தது. நேர்காணல்களில், உதவி தேடுபவர்களின் நிராயுதபாணியான கூட்டத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்த பலமுறை உத்தரவுகளைப் பெற்றதாக படையினர் தெரிவித்தனர். இந்த நடவடிக்கையின் பெயர் கற்பனை தொலைக்காட்சி தொடரான ஸ்க்விட் கேம்ஸில் வரும் “சிவப்பு விளக்கு, பச்சை விளக்கு” என்ற கொடிய படுகொலை விளையாட்டைக் குறிக்கிறது.
காஸா மனிதாபிமான அறக்கட்டளையின் நடவடிக்கைகள் உண்மையான மனிதாபிமான அமைப்புகளால் கண்டிக்கப்பட்டு வருகின்றன. ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், “இது மக்களைக் கொல்கிறது. … தங்களுக்கும் தங்கள் குடும்பங்களுக்கும் உணவளிக்க முயலும் மக்கள் கொல்லப்படுகிறார்கள். உணவைத் தேடுவது ஒருபோதும் மரண தண்டனையாக இருக்கக்கூடாது” என்று தெரிவித்தார்.
எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு கடந்த ஞாயிறன்று ஓர் அறிக்கையை வெளியிட்டது. “காஸாவில் உள்ள மக்கள் ஒரு தாங்க முடியாத சங்கடத்துக்கு முகங்கொடுத்து வருகின்றனர்: அவர்கள் தங்கள் குடும்பத்தை பட்டினியால் வாடச் செய்யவேண்டும் அல்லது தங்கள் உயிரைப் பணயம் வைத்து இஸ்ரேலிய-அமெரிக்க விநியோக தளத்தில் உணவு பெற வேண்டும். ... இது மனிதாபிமான உதவி அல்ல. இது படுகொலை” என்று தெரிவித்தது.
ட்ரம்ப் நிர்வாகம் காஸா மனிதாபிமான அறக்கட்டளைக்கு 30 மில்லியன் டாலர் நிதியுதவி வழங்குவதாக அறிவித்ததைத் தொடர்ந்து ஹாரெட்ஸின் அறிக்கை வெளியிடப்பட்டது.
உண்மையில், காஸா மனிதாபிமான அறக்கட்டளையின் நடவடிக்கைகள் அனைத்தும் காஸா மீதான இனப்படுகொலை மற்றும் இனச்சுத்திகரிப்பை எளிதாக்கும் நோக்கம் கொண்டதாக உள்ளன. மேலும், உதவி தேடுபவர்கள் மீதான தினசரி படுகொலைகளுக்கு அப்பால், GHF தெற்கு காஸாவில் மட்டுமே செயல்படுகிறது. இந்த நடவடிக்கை வடக்கு காஸாவில் வசிப்பவர்களை தெற்கு காஸாவில் உள்ள பகுதிகளுக்கு ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இஸ்ரேல், ஆரம்பத்தில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்மொழிந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக, பாலஸ்தீன மக்களை காஸாவில் இருந்து வெளியேற்ற அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டு இணைப்பின் ஒரு பகுதியாக இந்த திட்டத்தை செயல்படுத்த முயல்கிறது.
சென்ற மாதம், இஸ்ரேலிய நிதி மந்திரி பெசலெல் ஸ்மோட்ரிச் இனச்சுத்திகரிப்பு நடவடிக்கையின் இலக்குகளை தெளிவுபடுத்தினார். “ஒரு வருடத்திற்குள் ... காஸா முற்றிலுமாக அழிக்கப்படும், பொதுமக்கள் ... தெற்கே ஒரு மனிதாபிமான மண்டலத்திற்கு அனுப்பப்படுவார்கள் ... அங்கிருந்து அவர்கள் மூன்றாம் நாடுகளுக்கு அதிக எண்ணிக்கையில் வெளியேறத் தொடங்குவார்கள்” என்று அவர் கூறினார்.
கடந்த வார இறுதியில், இஸ்ரேல் வடக்கு காஸா பகுதியில், காஸா நகரத்திற்கு கிழக்கே உள்ள பகுதிகளுக்கு புதிய வெளியேற்ற உத்தரவுகளை பிறப்பித்தது. இது, ஒரு பெரிய புதிய தரைவழி தாக்குதலின் ஒரு பகுதியாகும். இந்த அறிவிப்புகள் பல்லாயிரக்கணக்கான மக்களை தெற்கே தப்பி ஓடச் செய்தன.
இந்த புதிய கட்டாய இடம்பெயர்வுகளுடன் காஸா பகுதி முழுவதும் பாரிய குண்டுவீச்சுகளும் இடம்பெற்று வருகின்றன. கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் காஸா நகரத்தில் 47 பேர்கள் உட்பட குறைந்தது 72 பேர் கொல்லப்பட்டனர்.