அதன் உண்மையான முகத்தை காட்டி

இந்தியாவின் மோடி அரசாங்கம் ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலியப் போரை மறைமுகமாக ஆதரிக்கிறது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

இந்தியாவின் நரேந்திரமோடி தலைமையிலான பாஜக அரசாங்கம் ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புப் போரை பல வழிகளில் ஆதரித்துள்ளது.

இதில் பின்வருவன அடங்கும்:

  • இஸ்ரேலின் குற்றவியல் தன்மை அல்லது அமெரிக்காவும் அதன் இஸ்ரேலிய பினாமியும் யுத்தத்தை முன்னெடுப்பதில் செய்த ஏராளமான போர்க்குற்றங்கள் பற்றி, கோழைத்தனமாகவோ அல்லது சாந்தமாகவோ, எந்த விமர்சனத்தையும் செய்ய மறுத்து, நேரடியாக அன்றி, மற்ற எல்லா வகையிலும் ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதலை அங்கீகரிப்பது;
  • 'பதட்டத்தைக் குறைத்தல்' என்ற பெயரில் ஈரானின் தற்காப்பு உரிமையை கைவிடுமாறு அழுத்தம் கொடுப்பது;
  • புதிய அமெரிக்க-இஸ்ரேலிய மத்திய கிழக்குப் போரின் மத்தியில், இந்திய-அமெரிக்க உறவுகளையும், அமெரிக்கா தலைமையிலான, இந்தோ-பசிபிக் சக்திகளின் சீன எதிர்ப்பு கூட்டணியான குவாட்டையும் வலுப்படுத்த முயல்வது.

இருப்பினும், புவிசார் அரசியல் மற்றும் உள்நாட்டு காரணங்களுக்காக, ஈரான் மீதான ஏகாதிபத்திய தாக்குதலுக்கு மோடி அரசாங்கம் தனது உடந்தையை மூட மறைக்க முயற்சிக்கிறது.

புது தில்லியானது ஈரானின் நட்பு நாடாகக் கூறிக் கொள்வதுடன் ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய ஆசியாவுடனான இந்தியாவின் செல்வாக்கையும் வர்த்தக உறவுகளையும் இன்னும் பரந்த அளவில் விரிவுபடுத்தும் நோக்கத்துடன், ஈரானின் தென்கிழக்கு கடற்கரையில் உள்ள சபாஹரில் துறைமுக வசதிகளை மேம்படுத்த முயன்று வருகிறது. மேலும் மிக முக்கியமாக, இந்தியா தனது எண்ணெய் தேவையில் பெரும்பகுதியை வழங்கும் மற்றும் 10 மில்லியன் வெளிநாட்டு இந்திய தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் வளைகுடா நாடுகளுடனான உறவுகளுக்கு எந்த வகையிலும் தீங்கு விளைவிக்க விரும்பவில்லை.

மோடியின் இந்து மேலாதிக்க பாஜக, சியோனிச தீவிர வலதுசாரிகளுடனான அதன் அரசியல்-சித்தாந்த உறவை அங்கீகரிப்பதுடன், மேலும் அதனை ஓரளவிற்கு ஆதரிக்கின்றது. ஆனால் இந்தியாவின் தொழிலாளர்கள் மற்றும் உழைப்பாளிகள் பெருமளவில் பாலஸ்தீன மக்கள் மீது அனுதாபம் கொண்டுள்ளதுடன் ஏகாதிபத்தியத்திற்கும் வாஷிங்டனின் உலகளாவிய மிரட்டல் மற்றும் ஆக்கிரமிப்புக்கும் விரோதமாக உள்ளனர் என்பதையும் அரசாங்கம் அறிந்திருக்கிறது.

உலக சோசலிச வலைத் தளம் விளக்கியுள்ளபடி, ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலியப் போரானது உலகின் மிக முக்கியமான எண்ணெய் ஏற்றுமதி பிராந்தியத்தின் மீது ஆக்கிரமிப்பு மற்றும் போர் மூலம், கட்டுப்பாடற்ற அமெரிக்க ஏகாதிபத்திய ஆதிக்கத்தை திணிப்பதற்கான வாஷிங்டனின் பல தசாப்த கால உந்துதலில் இருந்து எழுவதுடன் அதன் ஒரு பகுதியாகவும் இருக்கின்றது.

இந்த உந்துதல் 2023 அக்டோபர் முதல் வியத்தகு முறையில் அதிகரித்துள்ளது. இஸ்ரேல், காசாவில் பாலஸ்தீனியர்கள் மீது இனப்படுகொலை தாக்குதலை நடத்தி, மத்திய கிழக்கு முழுவதும் வன்முறையில் ஈடுபட்டு, பிராந்தியத்தில் அமெரிக்க-இஸ்ரேலிய ஆதிக்கத்தை எதிர்க்கும் அரசுகள் மற்றும் போராளிக் குழுக்களைத் தாக்கி வரும் நிலையில், கடந்த 20 மாதங்களாக அதன் இஸ்ரேலிய ஆட்சியாளருக்கு அமெரிக்கா தடையற்ற அரசியல் மற்றும் இராணுவ ஆதரவை வழங்கி வருகிறது.

ட்ரம்ப் பெருமையாகக் கூறியது போல், ஜூன் 12 இரவு, வெள்ளை மாளிகை மற்றும் பென்டகனதும் நெருக்கமான ஒத்துழைப்புடன், ஈரானால் ஆத்திரமூட்டப்படாமலேயே அதன் மீது இஸ்ரேல் தாக்குதலைத் தொடங்கிய பின்னர், ஈரானின் சிவில் அணுசக்தி நிலையங்கள் மீது வாஷிங்டன் சட்டவிரோத மறைவியக்க விமானத் தாக்குததலை நடத்தி, அமெரிக்க ஏகாதிபத்தியம் முழு பிராந்தியத்தையும் உலகையும் பேரழிவின் விளிம்பிற்கே கொண்டு வந்துள்ளது.

திங்கட்கிழமை இரவு ட்ரம்ப் அறிவித்த போர் நிறுத்தம் நீண்ட காலம் நீடிக்குமா என்பது ஒருபுறம் இருக்க, அது பகைமையை முடிவுக்கு கொண்டுவருவதற்கான உத்தரவாதம் அல்ல. வாஷிங்டனும் டெல் அவிவும், தெஹ்ரானுடனான வெள்ளை மாளிகையின் பேச்சுவார்த்தை வாக்குறுதிகளை, மீண்டும் மீண்டும் அதிகரித்து வரும் ஆக்கிரமிப்புக்கு ஒரு மூடு திரையாகப் பயன்படுத்தி வருகின்றன. ட்ரம்பின் வார்த்தைகளில் கூறுவதெனில் 'நிபந்தனையற்ற சரணடைதல்' என்பதைக் கோருவதற்கு, எந்தவொரு சந்தர்ப்பத்திலும், அடுத்துவரும் பேச்சுவார்த்தைகளில் அவர்கள் ஈரானின் பலவீனமான இராணுவ நிலைமையையும், அதன் சீன மற்றும் ரஷ்ய நட்பு நாடுகள் எந்தவொரு அர்த்தமுள்ள நடவடிக்கையையும் எடுக்கத் தவறியதையும், முழுமையாகப் பயன்படுத்திக்கொள்வர்.

மிகவும் அடிப்படையில், ஈரான் மீதான ட்ரம்பின் நேரடித் தாக்குதலும், தெஹ்ரானில் ஆட்சி மாற்றத்திற்கான இடைவிடாத உந்துதலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலக மேலாதிக்க நிலையில் ஏற்பட்ட விரைவான சரிவுடன் பிணைந்தவை ஆகும். ஷா ரெசா பஹ்லவி காலத்தில் அது நடைமுறைப்படுத்திய நவ-காலனித்துவ அடிமைத்தனத்தின் வகையை ஈரான் மீது மீண்டும் திணிக்கவும், அதன் மூலம் மத்திய கிழக்கில் சவால் செய்ய முடியாத ஏகாதிபத்திய ஆதிக்கத்தை நிறுவவும் வாஷிங்டன் உறுதியாக உள்ளதால், அதன் மிக முக்கியமான மூலோபாய எதிரிகளான சீனா மற்றும் ரஷ்யாவை எதிர்கொள்ளவும், தேவைப்பட்டால், அவற்றுக்கு எதிராக முழுமையான போரை நடத்தவும் தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறது.

இவை அனைத்தையும் எதிர்கொண்டுள்ள மோடி அரசாங்கம், இந்திய-அமெரிக்க 'உலகளாவிய மூலோபாய கூட்டாண்மையை' தொடர்ந்து விரிவுபடுத்துவதிலேயே முதன்மையாக அக்கறை காட்டுகின்றது. அதன் கீழ், இந்திய முதலாளித்துவத்தின் வல்லரசு அபிலாஷைகளை அடைவதில் வாஷிங்டனின் ஆதரவைப் பெறுவதற்கு பிரதியுபகாரமாக, சீனாவிற்கு எதிரான அமெரிக்க இராணுவ-மூலோபாய தாக்குதலில் புது தில்லி தன்னை முழுமையாக ஒருங்கிணைத்துக் கொண்டுள்ளது.

இந்த கட்டமைப்பிற்குள், இந்து பலசாலியாக இருக்கப்போகும் மோடியின் கீழ், இந்தியாவானது, இஸ்ரேலுடனும் அதன் தீவிர வலதுசாரி அரசாங்கத்துடனும் முக்கியமான அதிகரித்துவரும் இராணுவ-மூலோபாய உறவுகளை வளர்த்துக் கொண்டுள்ளது.

ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீதான அமெரிக்காவின் தாக்குதலுக்கு இந்தியாவின் பதில் மௌனமாக இருப்பதாகும். அது வெளிப்படையாக சட்டவிரோதமானதாகவும் மிகவும் ஆத்திரமூட்டும் வகையிலானதாகவும் மற்றும் இதுவரை பயன்படுத்தப்பட்டவற்றிலேயே மிக சக்திவாய்ந்த குண்டுகளைப் பயன்படுத்தி நடத்தப்பட்டதாகவும் இருந்த போதிலும், புதுதில்லி இந்த தாக்குதலை கண்டிக்கவோ, விமர்சிக்கவோ தவறிவிட்டது.

பிரதமர் மோடி ஞாயிற்றுக்கிழமை ஈரானிய ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, போலியான கவலை மற்றும் அனுதாப வெளிப்பாடுகளுக்கு மத்தியில், எதையும் செய்ய வேண்டாம் என்று தெஹ்ரானை வலியுறுத்தினார்.

X (முன்னர் ட்விட்டர்) தளத்தில் வெளியிடப்பட்ட ஒரு பதிவில், அமெரிக்க ஆக்கிரமிப்பு பற்றி குறிப்பிடுவதை முற்றிலும் கவனமாகத் தவிர்த்த மோடி, ஈரான் அரசாங்கத் தலைவருடனான தனது உரையாடலில் 'உடனடியாக பதற்றத்தைக் குறைத்தல், முன்னோக்கிய பாதையாகவும் பிராந்திய அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை விரைவாக மீட்டெடுப்பதற்கான வழிமுறையாகவும் பேச்சுவார்த்தை மற்றும் இராஜதந்திர நடவடிக்கைகளை எடுப்பதற்கான எமது அழைப்பை மீண்டும் வலியுறுத்தினேன்' என்று விளக்கினார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஈரானின் சுய பாதுகாப்பிற்கான எந்தவொரு நடவடிக்கையையும் 'தீவிரப்படுத்தல்' என்று வரையறுத்து அறிக்கைகளை வெளியிட்டு அமெரிக்க-இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை எதிர்கொண்டு தெஹ்ரான் அடிபணிய வேண்டும் என்று கோரும் ஏகாதிபத்தியத் தலைவர்களுடன் அவர் இணைந்துகொண்டார்.

முன்னதாக, ஜூன் 13 அன்று, ஈரான் மீதான இஸ்ரேலின் இராணுவத் தாக்குதல்களை கடுமையாகக் கண்டித்ததுடன், அவை சர்வதேச சட்டம் மற்றும் ஐ.நா. சாசனத்தை அப்பட்டமாக மீறிய நடவடிக்கையாக கண்டனம் செய்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) தீர்மானத்தை ஏனைய ஒன்பது உறுப்பு நாடுகளும் ஆதரித்தபோதும், இந்தியா அதை வெளிப்படையாக எதிர்த்தது. சீனா மற்றும் ரஷ்யாவின் முன்முயற்சியால் 2001 இல் உருவாக்கப்பட்ட ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பானது பாகிஸ்தான், இந்தியா, பல மத்திய ஆசிய நாடுகள், பெலாரஸ் மற்றும் 2023 முதல் ஈரானையும் உள்ளடக்கிய ஒரு பிராந்திய அரசியல், பொருளாதார மற்றும் பாதுகாப்பு கூட்டணியாகும்.

அதைத் தொடர்ந்து, தீர்மானம் குறித்து முறையாக ஆலோசிக்கப்படவில்லை என்று தனது எதிர்ப்பை விளக்கிய இந்தியா, வெளியுறவு அமைச்சக அறிக்கை ஒன்றை சுட்டிக்காட்டியது. அதில், ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலை விமர்சிக்கும் எந்த வார்த்தையும் இருக்கவில்லை.

13 பெப்ரவரி 2025 வியாழக்கிழமை, வாஷிங்டனில் வெள்ளை மாளிகையின் கிழக்கு அறையில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது, ​​இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கைகுலுக்குகிறார். [AP Photo/Alex Brandon]

ஜூன் 17 அன்று, ஈரான் மீது போர் தொடுக்க ட்ரம்ப் சதிசெய்துகொண்டிருந்த போது, அவருடன் மோடி தொலைபேசியில் பேசியதை, ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலியப் போருக்கு இந்திய அரசாங்கம் அளித்த மிகவும் உண்மையான மற்றும் குறிப்பிடத்தக்க ஆதரவாக வாதிடலாம். வாஷிங்டனுக்குத் திரும்பி தனது பாதுகாப்புக் குழு மற்றும் பென்டகன் உயர் அதிகாரிகளைச் சந்தித்து ஈரான் மீதான தாக்குதலுக்கான திட்டங்களை இறுதி செய்யக் கூடியவாறு, அதற்கு முந்தைய நாள் மாலை, கனடாவில் நடந்த G7 உச்சிமாநாட்டில் பங்கேற்பதை ட்ரம்ப் குறைத்துக் கொண்டார். ட்ரம்ப் இதை வெளிப்படையாகவே அறிவித்தார்.

மோடியின் அழைப்பை ஏற்றுக்கொள்வதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, ட்ரம்ப் ஈரானுக்கு எதிராக அச்சுறுத்தும் ட்வீட் பதிவுகளை வெளியிட்டார். அது அன்றைய தினம் பிற்பகுதியில், ஈரான் 'நிபந்தனையற்று சரணடைய வேண்டும்' என்ற கோரிக்கையில் உச்சக் கட்டத்தை அடைந்தது.

இந்தச் சூழ்நிலையிலேயே, அமெரிக்க ஏகாதிபத்தியத்துடனான இந்தியாவின் கொள்ளையடிக்கும் கூட்டாண்மையின் வலிமையை அடிக்கோடிட்டுக் காட்ட, மோடி, இந்த ஆண்டு இறுதியில் குவாட் அரசாங்கத் தலைவர்களின் உச்சிமாநாட்டில் பங்கேற்க இந்தியாவுக்கு வருமாறு ட்ரம்புக்கு அழைப்பு விடுத்தார். இந்த மாநாடு, இந்தியா மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பிரதான ஆசிய-பசிபிக் நட்பு நாடுகளான ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா உள்ளடங்கிய, வாஷிங்டன் தலைமையிலான சீன எதிர்ப்பு 'பாதுகாப்பு கலந்துரையாடல்' ஆகும்.

ரஷ்யா மீதான அமெரிக்க-நேட்டோ போரை ஆதரிக்க மோடி அரசாங்கம் தவறியமை, பனிப்போர் காலத்திலிருந்தே மொஸ்கோவுடனான இந்தியாவின் நீண்டகால நெருக்கமான இராணுவ-மூலோபாய உறவுகளைப் பாதுகாப்பதில் அதன் வலியுறுத்தல், அத்துடன் அதிக அளவு ரஷ்ய எண்ணெயை தள்ளுபடி விலையில் பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் ஆகியவையும் இதில் அதிகம் பேசப்படவுள்ளன.

நிச்சயமாக, இது வாஷிங்டன் மற்றும் ஏனைய நேட்டோ சக்திகளை எரிச்சலடையச் செய்துள்ள போதிலும், சீனா விடயத்தில், இந்தியா அமெரிக்காவுடன் இன்னும் முழுமையாக இணைந்துகொள்வதன் மூலம் பதிலளித்துள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக, காசா மற்றும் பரந்த மத்திய கிழக்கின் மீதான இஸ்ரேலின் போரின் போது, ​​ இந்தியாவும் இஸ்ரேலும் குற்றத்தில் அதிகளவில் பங்காளிகளாக செயல்படுமளவுக்கு, மோடி அரசாங்கம் நெதன்யாகு ஆட்சியுடனான தனது உறவுகளை விரிவுபடுத்தியுள்ளது.

இந்தச் சூழலில், பைடன் நிர்வாகத்தால் ஊக்குவிக்கப்பட்டு நெதன்யாகுவால் ஆதரிக்கப்படும் 'புதிய மத்திய கிழக்கு'க்கான அமெரிக்கத் திட்டத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக, இஸ்ரேலிய ஹைஃபா துறைமுகம் வழியாகச் செல்லும் இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடம் இருந்தது என்பது நினைவுகூரத்தக்கது.

20 மாத காலப் போரின் போது, ​​காசாவில் இஸ்ரேலின் படுகொலை மற்றும் இன அழிப்பு பிரச்சாரத்தை கண்டிப்பதை புது தில்லி தொடர்ந்து தவிர்த்து வருகிறது. இஸ்ரேல் ஈரானை தாக்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, ஜூன் 12 அன்று நடைபெற்ற உயர்மட்ட ஐ.நா. பொதுச் சபை வாக்கெடுப்பில், காசாவில் பாலஸ்தீனியர்கள் மீதான இஸ்ரேலிய தாக்குதலுக்கு தங்கள் உடந்தையை மூடிமறைக்க முயன்ற கனடா மற்றும் பிரான்ஸ் போன்ற பல ஏகாதிபத்திய சக்திகள் உட்பட, 149 நாடுகள், 'உடனடி, நிபந்தனையற்ற மற்றும் நிரந்தர போர்நிறுத்தம்' மற்றும் முற்றுகையிடப்பட்ட பகுதிக்கு கட்டுப்பாடற்ற மனிதாபிமான உதவி வழங்குவதற்கும் ஆதரவாக வாக்களித்தன. அவற்றில் இந்தியா இருக்கவில்லை. 2023 டிசம்பர் மற்றும் 2024 டிசம்பரிலும் இதே போன்ற தீர்மானங்களில், தான் எடுத்த நிலைப்பாட்டை மாற்றிக்கொண்ட இந்தியா, வாக்களிப்பை புறக்கணித்தது.

இஸ்ரேல் இந்தியாவிற்கு ஒரு பிரதான ஆயுத வழங்குபவராக மாறியுள்ளதுடன் சமீபத்திய அல் ஜசீரா அறிக்கை அம்பலப்படுத்தியபடி, காசா போரின் போது இந்தியா ராக்கெட் என்ஜின்கள் மற்றும் வெடிபொருட்கள் உட்பட ஆயுதங்களை இஸ்ரேலுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. அவை சென்னையில் இருந்து அனுப்பப்பட்டுள்ளதோடு, காசாவில் சிதறிக்கிடக்கும் ஏவுகணை துண்டுகளும் 'இந்தியாவில் தயாரிக்கப்பட்டது' என்று குறிக்கப்பட்டுள்ளன.

இவை அனைத்தும் முக்கியமானவை என்றாலும், மே 7 அன்று ஒரு தொகை விமானங்களைப் பயன்படுத்தி இந்தியா பாகிஸ்தானை சட்டவிரோதமாகத் தாக்கி தெற்காசியாவின் அணு ஆயுத சக்திகளுக்கு இடையே முழுமையான போரை ஏற்படுத்தும் அளவிற்கு நான்கு நாட்கள் மோதலைத் தூண்டியபோது, இஸ்ரேல் புது தில்லிக்கு உறுதியான ஆதரவு தந்தமை, ஐ.நா. தீர்மானத்தில் இந்தியா வாக்களிக்காமல் இருந்தமைக்கு தீர்க்கமான காரணியாக ஆகும். இந்திய நடவடிக்கையை ஆதரிப்பதில் உலகத் தலைவர்களில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கிட்டத்தட்ட தனியாக இருந்திருந்தாலும், இந்திய விமானத் தாக்குதல்களுக்கு சில மணி நேரங்களுக்குள் அவர் இதைச் செய்தார்.

ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலியப் போரில் இந்தியாவின் உடந்தை, இந்திய-அமெரிக்க கூட்டணிக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்ட வேண்டியதன் அவசரத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. சீனாவிற்கு எதிரான வாஷிங்டனின் போர் இயக்கத்தில் இந்தியாவை ஒரு முன்னணி நாடாக அது ஏற்கனவே மாற்றியுள்ள அதே நேரம், ஆக்கிரமிப்பு மற்றும் போர் மூலம் பிராந்திய மேலாதிக்கமாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ள இந்திய ஆளும் வர்க்கத்தை தைரியப்படுத்தியுள்ளது.

குறிப்பாக, உத்தியோகப்பூர்வ எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி, ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலைக் கண்டிப்பதன் மூலம் சில அரசியல் மூலதனத்தைப் பெற முயன்றாலும், வாஷிங்டன் போரில் நுழைவதை அது கண்டிக்கத் தவறிவிட்டது. ஏனென்றால், ஆளும் வர்க்கத்தின் அனைத்துப் பிரிவுகளும், இந்தியாவை சீனாவிற்கு மாற்றான ஒரு மலிவு உழைப்பு உற்பத்தி மையமாக மாற்றுவதற்கான முயற்சிகள் உட்பட, தங்கள் பூகோள மூலோபாயத்திற்கு, இந்திய-அமெரிக்க கூட்டணியை தீர்க்கமானதாகக் கருதுகின்றன.

ஜூன் 22 அன்று, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) உட்பட ஐந்து ஸ்ராலினிச மற்றும் மாவோயிசக் கட்சிகள், ஈரான் மீதான அமெரிக்காவின் குண்டுவீச்சைக் கண்டித்த போதிலும், எந்தவொரு தொழிலாள வர்க்க அணிதிரட்டலுக்கும் அழைப்பு விடுப்பதைத் தவிர்த்தன. காங்கிரஸ் கட்சியின் கூட்டாளிகளும் காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிக் கூட்டமைப்பான இந்திய தேசிய மேம்பாட்டு உள்ளடக்கிய கூட்டணியும் (இந்தியா), 'அமைதியை விரும்பும் மக்களுக்கு' வேண்டுகோள் விடுத்ததுடன், தனது அமெரிக்க-ஆதரவு, இஸ்ரேல்-ஆதரவு நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளுமாறு மோடி அரசாங்கத்தை வலியுறுத்தின.

ஏகாதிபத்தியத்தின் இந்த அரசியல் கூட்டாளிகளுக்கு மாறாக, வர்க்கப் போராட்ட வழிமுறைகள் மற்றும் தொழிலாளர்களின் அதிகாரத்திற்கும் சோசலிசத்திற்குமான போராட்டத்தின் மூலம், ஈரான் மீதான ஏகாதிபத்திய தாக்குதலையும் வளர்ந்து வரும் பூகோளப் போரையும் எதிர்க்குமாறு உலக சோசலிச வலைத் தளம் இந்திய மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்துக்கு அழைப்புவிடுக்கின்றது.

Loading