காஸாவில் உதவி கோருவோரை படுகொலை செய்யும் இஸ்ரேலிய கொள்கையை ஹாரெட்ஸ் அறிக்கை அம்பலப்படுத்துகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

கடந்த மாதத்தில், இஸ்ரேலிய படைகள் கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் அமெரிக்க/இஸ்ரேலிய ஆதரவு உணவு விநியோக அமைப்பான காஸா மனிதாபிமான அறக்கட்டளையிலிருந்து (GHF) உணவு உதவிகளை பெற வந்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி வருகின்றன. பத்தொன்பது தனித்தனி சம்பவங்களில் இதுவரை 549 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 4,000 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

காஸா நகரில் ஒரு குடியிருப்பு கட்டிடத்தின் மீது இஸ்ரேலிய தாக்குதலில் காயமடைந்த குழந்தையை ஒரு பாலஸ்தீனியர் சுமந்து செல்கிறார். ஜூன் 27, 2025 வெள்ளிக்கிழமை [AP Photo/Jehad Alshrafi]

தொடக்கத்திலிருந்தே, இது, நடந்துகொண்டிருக்கும் இனப்படுகொலையின் ஒரு பகுதியாகும். இது, உணவு விநியோக இடங்களை கொலைக் களங்களாக மாற்றும் நோக்கத்துடன், உதவி தேடிவரும் மக்களின் மீது நேரடியாக சிறிய ரக துப்பாக்கிகள், டாங்கிக் குண்டுகள் மற்றும் மோட்டார் குண்டுகளை பாவித்து, வேண்டுமென்றே நடத்தப்பட்டு வருகின்ற தாக்குதல் கொள்கையின் விளைவாகும் என்பது தெளிவாகத் தெரிகிறது.

கடந்த வெள்ளிக்கிழமையன்று, இஸ்ரேலிய செய்தித்தாளான ஹாரெட்ஸ் ஒரு முழுமையான அறிக்கையை வெளியிட்டது. அதில் நிராயுதபாணியான உதவி கோரும் மக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளுமாறு இஸ்ரேலிய படையினருக்கு கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டிருப்பதை அது உறுதிப்படுத்துகிறது. உள்நாட்டில், இந்தப் படுகொலைகள் கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் ஒரு வடிவமாக அதிகாரப்பூர்வமாக நியாயப்படுத்தப்படுகின்றன. படையினர் நிராயுதபாணியான மக்களை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு நகர்த்திச் சென்று அவர்களை நோக்கிச் சுடுகிறார்கள்.

ஹாரெட்ஸ் நேர்காணல் செய்த ஒரு சிப்பாய், இஸ்ரேலியப் படைகளின் உணவு விநியோகத்தை மேற்பார்வையிடுவது “உப்பு மீன் நடவடிக்கை” என்று குறிப்பிடப்படுவதாகக் கூறினார். இது குழந்தைகள் விளையாட்டான “சிவப்பு விளக்கு, பச்சை விளக்கு” என்ற இஸ்ரேலிய பதிப்பைக் குறிக்கிறது. எல்லா தோற்றங்களிலும், இந்த பெயர் கொரிய தொலைக்காட்சித் தொடரான ஸ்க்விட் விளையாட்டை அடிப்படையாகக் கொண்டது. இந்த கற்பனைத் தொடரில், போட்டியாளர்கள் “சிவப்பு விளக்கு, பச்சை விளக்கு” என்ற குழந்தைகளின் விளையாட்டை விளையாட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர், “பச்சை விளக்குக்கு” முன் நகர்பவர்கள் நேரடி தோட்டாக்களால் சுடப்படுகிறார்கள்.

ஒவ்வொரு நாளும், பெரும்பாலும் பின்னிரவில் அல்லது அதிகாலையில், பல்லாயிரக்கணக்கான மக்கள் காஸா மனிதாபிமான அறக்கட்டளை விநியோகத் தளங்களில் உணவைப் பெறுவதற்காக வரிசையில் நிற்கின்றனர். உணவு ஒரு மணி நேரத்திற்கு மட்டுமே கிடைக்கும். இதனால் பட்டினியால் வாடும் மக்கள் பெரும் குழப்பத்துக்கு ஆளாக்கப்படுகின்றனர்.

அறிக்கையின்படி, கூட்டத்தைக் கட்டுப்படுத்த நேரடியாக துப்பாக்கி ரவைகளைத் தவிர வேறு எந்த முறையும் இல்லை. தரையில் விடப்பட்ட உணவை, மிக விரைவாகவோ அல்லது மிகவும் தாமதமாகவோ சேகரிக்க முயற்சிப்பவர்கள் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள்.

ஹாரெட்ஸ நேர்காணல் செய்த ஒரு சிப்பாய், “இது ஒரு கொலைக்களம்” என்று குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், “நான் தங்கியிருந்த இடத்தில், ஒவ்வொரு நாளும் ஒன்று முதல் ஐந்து பேர் வரை கொல்லப்பட்டனர். அவர்கள் ஒரு விரோத சக்தியைப் போல நடத்தப்படுகிறார்கள். —கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் இல்லை, கண்ணீர் புகைக்குண்டுகள் இல்லை— கனரக இயந்திரத் துப்பாக்கிகள், கையெறி குண்டுகள், மோட்டார்கள் என கற்பனை செய்ய முடியாத ஒவ்வொரு ஆயுதங்களுடனும் வெறுமனே நேரடியான தாக்குதல் மக்கள் மீது நடத்தப்படுகின்றன. பின்னர், உணவு விநியோக மையம் திறந்தவுடன், துப்பாக்கிச் சூடு நின்றுவிடும், மேலும் அவர்கள் நெருங்க முடியும் என்பதை அவர்கள் அறிவார்கள். துப்பாக்கிச் சூடுதான் எங்கள் தொடர்பு வடிவம்” என்று அவர் குறிப்பிட்டார்.

இன்னொரு சிப்பாய் “நாங்கள் டாங்கிகளில் இருந்து இயந்திரத் துப்பாக்கிகளால் சுட்டோம், கையெறி குண்டுகளை வீசினோம்” என்று கூறினார்,

இந்த அறிக்கையின் ஆசிரியர்களில் ஒருவரான நிர் ஹாசன் அல் ஜசீராவிடம் “இதுதான் உண்மையில் இருக்கும் ஒரு நடைமுறை... கூட்டத்தை ஒரு இடத்திலிருந்து தப்பி ஓடச் செய்வது போல, துப்பாக்கிச் சூடு மூலம் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவது, அவர்கள் நிராயுதபாணிகள் என்பது உங்களுக்குத் தெரிந்திருந்தாலும், நீங்கள் அவர்களைச் சுடுகிறீர்கள்... மக்களை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு நகர்த்த நீங்கள் துப்பாக்கிகளைப் பயன்படுத்துகிறீர்கள்” என்று குறிப்பிட்டார்.

வேறுவிதமாகக் கூறினால், உணவு வினியோக மையங்களின் செயல்பாடுகள் ஒவ்வொன்றும், உதவி அளிக்கிறோம் என்ற போலிக்காரணத்தின் கீழ், நிராயுதபாணியான குடிமக்களைக் கொல்வதை நோக்கமாகக் கொண்டுள்ளன. செல்வந்தர்களின் பொழுதுபோக்கிற்காக ஒரு கொடூரமான இரத்தக்களரியாக சித்தரிக்கப்படும் ஸ்க்விட் விளையாட்டின் கதைக்களம் ஒரு “மனிதாபிமான நடவடிக்கை” என்று மறுவார்ப்பு செய்யப்பட்டது போல் உள்ளது.

ஐக்கிய நாடுகள் சபை மற்றும் எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு உட்பட அனைத்து பிரதான மனிதாபிமான முகமைகளும் விடுத்த எச்சரிக்கைகளின்படி, இந்த “உதவி மையங்கள்” வெறுமனே காஸாவில் இஸ்ரேலின் இனச் சுத்திகரிப்பு நடவடிக்கையின் ஒரு பாகம் மட்டுமே என்பதை ஹாரெட்ஸ் வெளியிட்ட அறிக்கைகள் உறுதிப்படுத்துகின்றன.

இஸ்ரேலிய துருப்புக்களால் கண்காணிக்கப்பட்டுவரும் சித்திரவதை முகாம்களுக்கு மக்களை மாற்றுவதற்கும் காஸாவில் இருந்து பாலஸ்தீனிய மக்களை வெளியேற்றுவதற்கும் வசதியாக அந்த நிலப்பகுதியின் தெற்கில் மக்களை குவிப்பதை அவர்கள் நோக்கமாகக் கொண்டுள்ளனர். இது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பால் கோடிட்டுக் காட்டப்பட்டு இஸ்ரேலிய பிரதம மந்திரி பென்ஜமின் நெதன்யாகுவால் தழுவப்பட்ட ஒரு இனச்-சுத்திகரிப்பு திட்டத்திற்கு ஏற்ப இடம்பெற்று வருகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு வெளியிட்ட ஒரு அறிக்கையில், GHF இன் நடவடிக்கைகள் “மனிதாபிமான உதவி என்ற போர்வையில் இடம்பெறும் படுகொலை” என்று அழைத்தது.

இந்த வார தொடக்கத்தில், யூரோ-மெட் மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு, “இந்த அறக்கட்டளையின் செயல்பாட்டு மாதிரியானது, இஸ்ரேலிய இராணுவத்துடன் ஒருங்கிணைந்த குறிப்பிட்ட இடங்களுக்கு பொதுமக்களை ஈர்ப்பதை உள்ளடக்கியுள்ளதுடன், அங்கு மக்கள் கொலை, காயம் மற்றும் கொடூரமான மற்றும் இழிவான சிகிச்சைக்கு உள்ளாக்கப்படுகின்றனர்” என்று எச்சரிக்கை விடுத்தது.

ஹாரெட்ஸ் அதன் வெளியீடுகளை வெளியிடுவதற்கு வெறும் ஒரு நாளுக்கு முன்னர், ட்ரம்ப் நிர்வாகம் GHF க்கு 30 மில்லியன் டாலர் நிதியுதவி வழங்கியிருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்தது. வெளியுறவுத்துறை துணை செய்தித் தொடர்பாளர் டோமி பிகோட், குழுவின் நடவடிக்கைகள் “முற்றிலும் நம்பமுடியாதவை” என்று குறிப்பிட்டு, அவை “பாராட்டப்பட வேண்டும் மற்றும் ஆதரிக்கப்பட வேண்டும்” என்று அறிவித்தார்.

ஹாரெட்ஸின் அறிக்கையை வெளிப்படையாக உறுதிப்படுத்தும் விதமாக, இஸ்ரேலிய இராணுவம் உதவி மையங்களில் நடந்த துப்பாக்கிச் சூடு தொடர்பாக ஒரு உள்நாட்டு போர்க்குற்ற விசாரணையைத் தொடங்கியுள்ளது. எப்பொழுதும் போல், இத்தகைய விசாரணைகள் மக்கள் தொடர்பு நடவடிக்கைகளைத் தவிர வேறொன்றுமில்லை. இவை போர்க்குற்றங்களைச் செய்த குற்றவாளிகள் தண்டிக்கப்படாமல் இருக்க அனுமதிக்கும் அதே வேளையில் மேற்பார்வையின் மாயையை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டவை.

கடந்த வெள்ளியன்று வெளிவந்த ஒரு அறிக்கையில், நெதன்யாகுவும் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸும், இஸ்ரேலிய இராணுவத்திற்கு எதிராக ஹாரெட்ஸ் ஒரு “இரத்த அவதூறு” பரப்புவதாக குற்றஞ்சாட்டினர். இஸ்ரேலிய இராணுவத்தை அவர்கள் “உலகின் மிகவும் ஒழுக்கமான இராணுவம்” என்று அழைத்தனர்.

மற்றொரு சம்பவத்தில், பாலஸ்தீனிய போலீசாரால் நடத்தப்பட்ட உதவி விநியோகத்தின் போது இஸ்ரேலிய இராணுவம் பதினெட்டு பேரைக் கொன்றது. பாதிக்கப்பட்டவர்களில் பலர் மாவு சேகரிக்க வந்த சாதாரண பொதுமக்கள் என்று சாட்சிகள் தெரிவித்தனர்.

கடந்த வெள்ளிக்கிழமை, காஸாவின் அதிகாரப்பூர்வ ஊடக அலுவலகம், GHF உதவி மையங்களில் விநியோகிக்கப்படும் மாவுப் பைகளில் சக்திவாய்ந்த மற்றும் கொடிய ஓபியேட் ஆக்ஸிகோடோன் அடங்கிய மாத்திரைகளை உதவி பெற வருபவர்கள் கண்டுபிடித்ததாகக் குற்றம் சாட்டியது. “மாவு பைகளுக்குள் இந்த மாத்திரைகளைக் கண்டெடுத்த குடிமக்களிடமிருந்து இதுவரை நான்கு சாட்சியங்களை நாங்கள் ஆவணப்படுத்தியுள்ளோம்” என்று கூறிய அறிக்கை, “இந்த போதைப்பொருட்களில் சில வேண்டுமென்றே அரைக்கப்பட்டிருக்கலாம் அல்லது மாவிலேயே கரைக்கப்பட்டிருக்கலாம்” என்று எச்சரித்தது.

காஸாவில் அமெரிக்க/இஸ்ரேலிய ஆதரவு உணவு விநியோக அமைப்பான காஸா மனிதாபிமான அறக்கட்டளையின் (GHF) நடவடிக்கைகள் “இயல்பாகவே பாதுகாப்பற்றவை” என்று ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் ஒரு அறிக்கையில் கூறினார்: “இது மக்களைக் கொல்கிறது... மக்கள் தங்களை மற்றும் தங்கள் குடும்பங்களுக்கு உணவளிக்க முயற்சிக்கும் போது கொல்லப்படுகிறார்கள். உணவைத் தேடுவது ஒருபோதும் மரண தண்டனையாக இருக்கக்கூடாது” என்று அவர் தெரிவித்தார்.

Loading