மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
ஹேக்கில் இந்த வாரம் நடைபெற்ற நேட்டோ உச்சிமாநாடு உலக அரசியலில் ஓர் அபாயகரமான திருப்புமுனையைக் குறிக்கிறது. 32 அங்கத்துவ நாடுகளின் ஏகாதிபத்திய கூட்டணியானது, அது ஸ்தாபிக்கப்பட்டு எழுபத்தி ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர், இராணுவத்திற்கு அவற்றின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறைந்தபட்சம் 5 சதவீதமாவது செலவிட சூளுரைத்துள்ளன. இந்தத் தயார்படுத்தலானது ரஷ்யா மற்றும் சீனாவுக்கு எதிராக மட்டுமல்ல, இது ஒவ்வொரு நாட்டிலும் உள்ள தொழிலாள வர்க்கத்தை இலக்கில் வைக்கிறது.
இந்த உச்சிமாநாடு, ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய சட்டவிரோத குண்டுவீச்சு தாக்குதலுக்கு வெறும் சில நாட்களுக்குப் பின்னர், காஸாவில் நடந்து வரும் இனப்படுகொலைக்கு மத்தியில் நடந்தது. இது உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிராக நேட்டோவின் தீவிரப்படுத்தப்பட்ட பினாமிப் போருடனும் மற்றும் சீனாவுடன் இராணுவ மோதலுக்கான தயாரிப்புகள் அதிகரித்து வருகின்ற நிலையிலும் பொருந்தி இருந்தது. “பாதுகாப்பு” மற்றும் “தடுப்பு” என்ற சிடுமூஞ்சித்தனமான வாய்வீச்சுக்குப் பின்னால், நேட்டோ உலகளாவிய போருக்கும் மற்றும் உலகின் வன்முறையான மறுபங்கீட்டிற்கும் தயாரிப்பு செய்து வருகிறது என்ற யதார்த்தம் உள்ளது.
5 சதவீத இராணுவத்திற்கான இலக்கு என்பது ஒரு பண்பு ரீதியான மாற்றமாகும். அனைத்து நேட்டோ உறுப்பு நாடுகளும் இப்போது இந்த அளவுகோலுக்கு பொறுப்பேற்றுள்ளன, இது கூட்டணியை ஒரு நிரந்தர போர் பொருளாதாரமாக நடைமுறையளவில் மாற்றுகிறது. அடுத்த தசாப்தத்திற்குள் இராணுவம் தொடர்பான செலவுகளை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இப்போதைய 2 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக அதிகரிப்பதே இலக்காகும். இதில், 3.5 சதவீதம் துருப்புகள் மற்றும் ஆயுதங்கள் போன்ற பாரம்பரிய இராணுவ செலவினங்களுக்கு ஒதுக்கப்படும், அதேவேளையில் கூடுதலாக 1.5 சதவீதம் இணையப் பாதுகாப்பு, உள்கட்டமைப்பு மற்றும் இராணுவ வசதிகளின் கட்டுமானம் போன்ற பரந்த முன்முயற்சிகளுக்கு திருப்பி விடப்படும்.
இந்த மீள்ஆயுதமயமாக்கல் உந்துதல் நேட்டோவின் கூட்டு இராணுவச் செலவை 2024 இல் 1.5 ட்ரில்லியன் டாலரில் இருந்து 2.8 ட்ரில்லியன் டாலருக்கு உயர்த்தியிருக்கிறது — இது பணவீக்கம் அல்லது பொருளாதார வளர்ச்சியைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், போர் செலவுகள் இரட்டிப்பாகும் அளவுக்குச் உயர்த்தப்படுகின்றன. இந்த அளவு மட்டுமே கனடா அல்லது இத்தாலி போன்ற நாடுகளின் முழு ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட அதிகமாக இருக்கிறது.
தற்பொழுது சுமார் 60 பில்லியன் பவுண்டுகள் இராணுவ வரவு-செலவு திட்டக்கணக்கைக் கொண்டுள்ள பிரிட்டனைப் பொறுத்த வரையில், இந்த 5 சதவீத வரையறை என்பது ஆண்டுக்கு சுமார் 140 பில்லியன் பவுண்டாக அதிகரிப்பதை அர்த்தப்படுத்தும்—இது பாதுகாப்பு செலவினங்களை இரட்டிப்பாக்குவதை விட அதிகமாகும்.
ஜேர்மனியைப் பொறுத்த வரையில், இதன் தாக்கங்கள் இன்னும் நீண்டகால தாக்கம் கொண்டவையாக இருக்கின்றன. ஆளும் வர்க்கம் இராணுவச் செலவுகளை 2029 க்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 2 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக உயர்த்தவும், ஆண்டுக்கு 225 பில்லியன் யூரோவை எட்டவும் தயாரிப்பு செய்து வருகிறது. 2022 இல் நிறைவேற்றப்பட்ட 100 பில்லியன் யூரோ “சிறப்பு நிதி” மற்றும் இந்தாண்டு 1 ட்ரில்லியன் யூரோவுக்கும் அதிகமான கூடுதல் இராணுவ தொகுப்புகள் ஆகியவற்றைக் கொண்டு, ஜேர்மன் ஏகாதிபத்தியம் உலக அரங்கில் ஒரு “தலைமைப் பாத்திரத்தை” மீண்டும் தொடங்க தீர்மானகரமாக உள்ளது.
சான்சிலர் பிரெட்ரிக் மெர்ஸ் அந்த உச்சிமாநாட்டிற்கு முன்னதாக அவர் வெளியிட்ட அரசாங்க அறிக்கையில், ஜேர்மனியின் இராணுவமயமாக்கல் வெறுமனே ட்ரம்பின் உத்தரவின் பேரில் செயல்படவில்லை, மாறாக அதன் “அதன் சொந்த நம்பிக்கைகள் மற்றும் கோட்பாடுகளின்” அடிப்படையில் செயல்பட்டு வருவதாக வலியுறுத்தினார். “நமது அளவு, நமது பொருளாதார சக்தி மற்றும் நமது புவியியல் இருப்பிடம் ஆகியவற்றைக் கொண்டு பார்க்கையில்” சரியாக எதிர்பார்க்கப்பட்டதைப் போல, ஜேர்மனி “இராணுவத்தை ஐரோப்பாவின் மிக வலிமையான மரபுவழி இராணுவமாக மாற்றும்” என்று அவர் அறிவித்தார். ஜேர்மனி இப்போது “செயலூக்கத்துடனும் நேரடியாகவும் நமது நலன்களைப் பிரதிநிதித்துவம் செய்ய” வேண்டும் என்றும் “நாம் வாழும் புவிசார் அரசியல் சூழலை வடிவமைக்க” வேண்டும் என்றும் மெர்ஸ் சேர்த்துக் கொண்டார்.
வெளிப்படையான மொழியில் கூறுவதானால்: அதாவது முதலாம் மற்றும் இரண்டாம் உலகப் போர்களில் அதன் வரலாற்று குற்றங்களுக்கு இடையே, ஜேர்மனியன் இராணுவவாதம் மற்றும் பெரும் சக்திக்கான அரசியலின் ஒரு கொள்கைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறது.
இத்தகைய போர் திட்டங்கள் மற்றும் வரவு-செலவு திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தொழிலாள வர்க்கத்திடம் இருந்து முதலாளித்துவ செல்வந்த தட்டுக்களுக்கும் இராணுவ-தொழில்துறை கூட்டுக்கும் செல்வ வளத்தைப் பாரியளவில் மறுபகிர்வு செய்வது அவசியமாகும். ட்ரில்லியன் கணக்கான யூரோக்களும் டாலர்களும் ஆயுதங்களுக்குள் பாய்ச்சப்பட்டு வருகின்றன, அதேவேளையில் பொதுச் சேவைகள் திட்டமிட்டு அகற்றப்படுகின்றன. சுகாதாரப் பராமரிப்பு, கல்வி, ஓய்வூதியங்கள், வீட்டுவசதி மற்றும் ஏனைய அடிப்படை சமூகப் பாதுகாப்புகள் போருக்கு செலவிடுவதற்காக அழிக்கப்பட உள்ளன.
இந்த நிகழ்ச்சி நிரலை ஆளும் வர்க்கம் ஜனநாயக ரீதியில் முன்னெடுக்க முடியாது. தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடம் இருந்து தவிர்க்கவியலாத எதிர்ப்பை ஒடுக்க, அனைத்து நேட்டோ அங்கத்துவ நாடுகளிலும் சர்வாதிகார ஆட்சி வடிவங்கள் தயாரிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
பாசிசவாத அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு இந்தக் கூட்டணி அடிபணிந்திருப்பது ஹேக்கில் முழு அளவில் வெளிப்பட்டது. ஐரோப்பிய தலைவர்கள் ட்ரம்ப் மற்றும் அமெரிக்காவிற்கான அவர்களின் விசுவாசத்தை உறுதிப்படுத்த பின்னோக்கி வளைந்தனர். குறிப்பாக, நேட்டோ பொதுச் செயலர் மார்க் ருட்டே, ட்ரம்ப் மீது ஏராளமாக புகழ்ந்தார்—அவரை “டாடி” என்றும் கூட குறிப்பிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஐரோப்பிய ஒன்றிய சக்திகள் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எச்சரிக்கையான அல்லது குறைந்த ஆக்கிரோஷ எதிர்பலங்களாக செயல்படவில்லை. மாறாக, அவர்கள் இராணுவவாதம், அடக்குமுறை மற்றும் காட்டுமிராண்டித்தனத்தின் ஒரு பூகோள வேலைத்திட்டத்தில் முழு விருப்பத்துடன் செயற்படும் பங்காளிகள் ஆவர்.
எவ்வாறிருப்பினும், ஐக்கியம் என்ற கூட்டுக் குரலுக்கு மத்தியில், ஏகாதிபத்திய முகாமிற்குள்ளான ஆழமான பிளவுகளும் மேலெழுந்து வருகின்றன. நேட்டோ சக்திகள் ஒன்றாக மீள்ஆயுதபாணியாகிக் கொண்டிருக்கின்றன—ஆனால் அவை ஒன்றோடொன்று மோதலுக்கும் தயாரிப்பு செய்து கொண்டிருக்கின்றன. முதலாம் உலகப் போர் மற்றும் இரண்டாம் உலகப் போருக்கு முன் இருந்ததைப் போலவே, சந்தைகள், வளங்களின் இருப்புக்கள் மற்றும் பூகோளரீதியான செல்வாக்கிற்கான போட்டி தீவிரமடைந்து வருகிறது. ரஷ்யா மற்றும் சீனாவிற்கு எதிரான நேட்டோ கூட்டணியை போருக்குள் உந்தித் தள்ளும் அதே முரண்பாடுகள், நேட்டோவைக் கிழித்தெறிய அச்சுறுத்தும் ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான போட்டிகளுக்கும் எரியூட்டுகின்றன.
வெளிநாட்டில் போருக்கான முனைவு என்பது உள்நாட்டில் தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான போருடன் பிரிக்கவியலாதவாறு பிணைந்துள்ளது. 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் போலவே, முதலாளித்துவ ஆளும் வர்க்கங்கள் உள்நாட்டு நெருக்கடிகளுக்கு —பொருளாதார மந்தநிலை, சமூக அமைதியின்மை மற்றும் வீழ்ச்சியடைந்து வரும் அரசியல் சட்டபூர்வத்தன்மை— போர் மற்றும் சர்வாதிகாரத்தை நோக்கி திரும்புவதன் மூலமாக விடையிறுத்து வருகின்றன.
ஆனால் முதலாளித்துவ அமைப்புமுறை ஒரு மூன்றாம் உலகப் போரை நோக்கி பாய்ந்து கொண்டிருக்கையில், ஏகாதிபத்திய மோதலுக்கு வழிவகுக்கின்ற அதே அடிப்படை முரண்பாடுகள்தான் சோசலிசப் புரட்சிக்கான புறநிலை அடித்தளத்தையும் உருவாக்குகின்றன. பூகோள ரீதியாக ஒருங்கிணைக்கப்பட்ட பொருளாதாரத்திற்கும் தேசிய-அரசு அமைப்புமுறைக்கும் இடையே உள்ள முரண்பாடும், நவீன உற்பத்தியின் சமூகத் தன்மைக்கும் அது தனியார் இலாபத்திற்கு அடிபணிந்து நிற்பதற்கும் இடையே உள்ள முரண்பாடும் முதலாளித்துவ கட்டமைப்பிற்குள் தீர்க்கப்பட முடியாது.
இதுதான் தற்போதைய நிலைமையை மிகவும் வெடிப்பார்ந்ததாக ஆக்குகிறது. உலகெங்கிலும் எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. காஸாவில் இனப்படுகொலைக்கு எதிரான பாரிய போராட்டங்கள் ஒவ்வொரு கண்டத்திலும் பரவிச் சென்றுள்ளன. சிக்கன நடவடிக்கைகள் மற்றும் ஊதிய ஒடுக்குமுறைக்கு எதிராக தொழிலாளர்கள் சாதனையளவிலான எண்ணிக்கையில் வேலைநிறுத்தப் போராட்டங்ளைச் செய்து வருகின்றனர். அமெரிக்காவில், ட்ரம்புக்கான எதிர்ப்பு மற்றும் சர்வாதிகாரத்தை நோக்கிய திருப்பம் முன்னொருபோதும் இல்லாத மட்டங்களை எட்டியுள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன்னர் ட்ரம்புக்கு எதிரான போராட்டங்களில் 15 மில்லியனுக்கும் அதிகமானோர் பங்குபற்றியிருந்தனர், இது அமெரிக்க வரலாற்றிலேயே மிகப் பெரிய பாரிய ஆர்ப்பாட்டங்களாக இருந்தது.
இந்த எதிர்ப்பை ஒரு புரட்சிகர சோசலிச வேலைத்திட்டத்தால் ஆயுதபாணியாக்கப்பட்ட தொழிலாள வர்க்கத்தின் ஒரு நனவான அரசியல் இயக்கமாக மாற்றுவதே அவசர அவசியமாகும். இராணுவவாதம் மற்றும் போருக்கு எதிரான போராட்டம் மற்றும் ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளைப் பாதுகாப்பது என்பது முதலாளித்துவ அமைப்புமுறையைத் தூக்கியெறிவதற்கான போராட்டத்தில் இருந்து பிரிக்கவியலாததாகும்.
உலகப் போருக்கான முனைவை நிறுத்துவது என்பதன் அர்த்தம், நேட்டோவை ஒழிப்பதற்கும், ஏகாதிபத்திய போர் இயந்திரத்தைக் கலைப்பதற்கும், சமூகத்தின் பரந்த செல்வவளம் மற்றும் உற்பத்தி சக்திகளை தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக கட்டுப்பாட்டின் கீழ் வைப்பதற்கும் போராடுவதாகும். இதுவே நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) வேலைத்திட்டமாகும். உலகெங்கிலும் ICFI இன் பிரிவுகளான சோசலிச சமத்துவக் கட்சிகள் இப்போதே சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் புதிய புரட்சிகர தலைமையாக கட்டியெழுப்பப்பட வேண்டும்.