மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
இஸ்ரேலிய இராணுவத்தின் தலைமைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் இயல் ஜமீர் செவ்வாயன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில், “நாங்கள் ஒரு குறிப்பிடத்தக்க அத்தியாயத்தை முடித்துவிட்டோம். ஆனால், ஈரானுக்கு எதிரான தாக்குதல் இன்னும் முடிவடையவில்லை. நாங்கள் ஒரு புதிய கட்டத்திற்குள் நுழைகிறோம். இது, தற்போதைய நடவடிக்கையின் சாதனைகளை அடிப்படையாகக் கொண்டது” என்று தெரிவித்தார்.
இந்தப் புள்ளிகளை மீண்டும் வலியுறுத்தி, இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகு கூறுகையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கடந்த திங்களன்று அறிவித்த ஈரானுடனான போர்நிறுத்தத்திற்கு இஸ்ரேல் கட்டுப்படும் என்றும், ஆனால் ஈரான் யுரேனியத்தை செறிவூட்டுவதைத் தொடர முனைந்தால், அது மீண்டும் தாக்குலை தொடுக்கும் என்றும் தெரிவித்தார்.
“ஈரானின் அணுசக்தி திட்டத்தை நாங்கள் முறியடித்துள்ளோம். ஈரானில் யாராவது அதை மீண்டும் கட்டியெழுப்ப முயற்சித்தால், எந்தவொரு முயற்சியையும் முறியடிக்க அதே உறுதியுடன், அதே தீவிரத்துடன் நாங்கள் செயல்படுவோம்” என்று நெதன்யாகு கூறினார்.
அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதலின் விளைவைப் பாராட்டிய நெதன்யாகு, “நாங்கள் பல மூத்த அதிகாரிகளை ஒழித்துக்கட்டியதுடன், புரட்சிகர காவல்படை தளங்களையும் தாக்கினோம். இது அதன் வரலாற்றில் மிகக் கடுமையான அடியாகும். ஒரு நசுக்கும் தாக்குதலில் நூற்றுக்கணக்கான ஆட்சி செயல்பாட்டாளர்களை நாங்கள் ஒழித்துக்கட்டினோம். ஜனாதிபதி ட்ரம்பின் அசைக்க முடியாத ஆதரவிற்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அவர் தெரிவித்தார்.
அமெரிக்காவும் இஸ்ரேலும் பாலஸ்தீன மக்களுக்கு எதிராக இனப்படுகொலை செய்து வரும் காஸா பக்கம் தனது கவனத்தைத் திருப்புவதாக நெதன்யாகு உறுதியளித்தார். “ஹமாஸை அழிப்பதன் மூலம் ஈரானிய தீமை அச்சுக்கு எதிரான பணியை நாம் முடிக்க வேண்டும்” என்று கூறினார்.
தன்னுடைய பங்கிற்கு ஈரான் இஸ்ரேலிய தாக்குதலுக்குப் பின்னரும் தன்னுடைய அணுச்செறிவூட்டல் திட்டத்தை தொடர உறுதியளித்துள்ளது. “இந்த தொழில்நுட்பத்தைப் பெற நாங்கள் பெரும் முயற்சி எடுத்துள்ளோம். இந்த இலக்கிற்காக எங்கள் விஞ்ஞானிகள் பாரிய தியாகங்களைச் செய்தனர், மேலும் தங்கள் உயிரையும் இழந்தனர்” என்று ஈரானிய வெளியுறவு மந்திரி அப்பாஸ் அரக்சி அல்-அராபி அல்-ஜதீத்திடம் கூறினார். இதற்காக எமது மக்கள் சவால்களை எதிர்கொண்டுள்ளனர். இந்த விடயம் தொடர்பில் எமது தேசத்தின் மீது யுத்தமொன்று திணிக்கப்பட்டுள்ளது. ஈரானில் யாரும் இந்த தொழில்நுட்பத்தை விட்டுக்கொடுக்கப் போவதில்லை என்பது உறுதி” என்றார்.
கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலையில், மத்திய கிழக்கில் அமெரிக்காவின் வாடிக்கை நாடான இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா குண்டுவீசிய ஈரான் ஆகிய இரண்டு நாடுகளுக்கு எதிராகவும் மூர்க்கமாக வசைமாரி பொழிந்த ட்ரம்ப், “அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று அவர்களுக்குத் தெரியவில்லை” என்று அறிவித்தார்.
இராஜதந்திரம் என்ற போர்வையைப் பயன்படுத்தி, இஸ்ரேல் ஜூன் 13 அன்று ஈரான் மீது முழு அளவிலான குண்டுவீச்சை நடத்தியது. இதில் 20 மூத்த ஈரானிய இராணுவ அதிகாரிகள் மற்றும் குடிமக்கள் ஒரு மறைமுக தாக்குதலில் கொல்லப்பட்டனர். ஈரான் மீதான 12 நாள் அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதலின் போது, 600 க்கும் மேற்பட்ட ஈரானியர்கள் கொல்லப்பட்டனர், ஆயிரக்கணக்கானோர் காயமுற்றனர். ஞாயிறன்று, அமெரிக்கா ஈரானின் அணுசக்தி செறிவூட்ட தளங்களுக்கு எதிராக நீண்ட தூர குண்டுவீச்சு விமானங்கள் மற்றும் குரூஸ் ஏவுகணைகளைப் பயன்படுத்தி ஒரு குண்டுவீச்சு தாக்குதலை தொடங்கியது.
ட்ரம்ப் திங்களன்று போர்நிறுத்தத்தை அறிவித்தார், இது செவ்வாய்க்கிழமை அமுலுக்கு வந்ததாகத் தெரிகிறது.
செவ்வாயன்று அவரது போர்நிறுத்த அறிவிப்பைத் தொடர்ந்து, ட்ரம்ப் புரூசெல்ஸில் நடக்கவிருக்கும் நேட்டோ உச்சிமாநாட்டிற்கு பயணித்தார். அங்கு அனைத்து நேட்டோ உறுப்பினர்களாலும் இராணுவ செலவினங்களில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ட்ரூத் சமூக வலைத்தள பதிவில், ஈரான் மீதான சட்டவிரோத அமெரிக்க தாக்குதலைப் பாராட்டிய நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ருட்டேவின் தொடர்ச்சியான உரைகளை ட்ரம்ப் பகிர்ந்து கொண்டார். “திரு ஜனாதிபதி, அன்புள்ள டொனால்ட், ஈரானில் உங்கள் தீர்க்கமான நடவடிக்கைக்கு வாழ்த்துக்கள் மற்றும் நன்றி, அது உண்மையிலேயே அசாதாரணமானது, வேறு யாரும் செய்யத் துணியாத ஒன்று. இது நம் அனைவரையும் பாதுகாப்பாக ஆக்குகிறது” என்று ரூட்டே எழுதினார்.
ஈரானின் “அணு ஆயுத” திட்டம் என்று எதை அவர் அழைத்தாரோ அதை அழித்து விட்டதாக ட்ரம்ப் தற்பெருமையுடன் கூறினாலும், அந்தத் திட்டத்திற்கு ஏற்பட்ட உண்மையான சேதம் குறைவாகவே இருப்பதாகத் தெரிகிறது.
கடந்த செவ்வாயன்று, C.NN, நியூ யோர்க் டைம்ஸ் மற்றும் பிற ஊடகங்கள், இந்தத் தாக்குதல் ஈரானின் அணுசக்தித் திட்டத்தை சில மாதங்கள் மட்டுமே பின்னுக்குத் தள்ளியதாகக் குறிக்கும் ஒரு ரகசிய அமெரிக்க உளவுத்துறை அறிக்கையை வெளியிட்டன.
ஈரானின் பெரும்பாலான செறிவூட்டப்பட்ட யுரேனிய இருப்புக்கள் அமெரிக்கத் தாக்குதல்களுக்கு முன்னரே அங்கிருந்து நகர்த்தப்பட்டன என்று அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. இதன் பொருள் அவற்றில் சிறிதளவே அமெரிக்க தாக்குதலில் அழிக்கப்பட்டன என்பதாகும்.
பாதுகாப்பு புலனாய்வு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், ஈரான் அணு ஆயுதத்தை உருவாக்க முடிவு செய்தால், மூன்று மாதங்களுக்கு முன்பு மதிப்பிடப்பட்டதற்கு மாறாக, ஆறு மாதங்களில் அதைச் செய்ய முடியும் என்று மதிப்பிட்டுள்ளது.
கடந்த செவ்வாயன்று காங்கிரசுக்கு எழுதிய கடிதத்தில், அமெரிக்க உளவுத்துறை அமைப்புகள் அத்தகைய திட்டம் இல்லை என்று முன்னர் கூறிய போதிலும், அமெரிக்காவால் குண்டுவீசப்பட்ட தளங்கள் “அணு ஆயுத மேம்பாட்டுத் திட்டத்தின்” ஒரு பகுதியாகும் என்று ட்ரம்ப் கூறினார். “ஈரானிய இஸ்லாமிய குடியரசின் அணு ஆயுத மேம்பாட்டுத் திட்டத்திற்காக ஈரான் அரசு பயன்படுத்திய மூன்று அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கப் படைகள் துல்லியமான தாக்குதலை நடத்தின” என்று ட்ரம்ப் எழுதினார்.
இது, ஈரான் தனது அணு ஆயுதத் திட்டத்தை மீண்டும் தொடங்க உத்தரவிடவில்லை, 2003 இல் அதை ஈரான் நிறுத்தியுள்ளது என்று மார்ச் மாதத்தில் ட்ரம்ப் நிர்வாகம் முன்வைத்த மதிப்பீட்டிற்கு முரணானது
அமெரிக்க அரசியல் ஸ்தாபனத்திற்குள் உள்ள மேலாதிக்கம் செலுத்தும் பிரிவுகள் ஏற்கனவே அமெரிக்காவையும் இஸ்ரேலையும் ஈரானிடம் இருந்து இன்னும் விட்டுக்கொடுப்புகளைக் கோருமாறு அழைப்பு விடுத்துள்ளன. செவ்வாயன்று வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலில் வெளியிடப்பட்ட ஒரு தலையங்கம், ஈரானின் “அணுசக்தித் திட்டத்தில் எஞ்சியிருப்பதைக் கலைத்து, பிராந்தியம் முழுவதும் அதன் பினாமிப் போரை முடிவுக்குக் கொண்டுவர கட்டாயப்படுத்த, இந்த மாதப் போரை ஒரு ஊக்கியாக பயன்படுத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்தது.
இதற்கிடையில், இஸ்ரேல் காஸாவில் தினசரி படுகொலைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. மேலும், இஸ்ரேலிய ஆதரவு பெற்ற காஸா மனிதாபிமான அறக்கட்டளை (GHF) நடத்தும் உணவு மையங்களில் 56 உதவி கோருவோர் உட்பட 85 பாலஸ்தீனியர்களை அது கொன்றுள்ளது. அமெரிக்கா இந்த அறக்கட்டளைக்கு 30 மில்லியன் டாலர்களை நன்கொடையாக வழங்குவதாக அறிவித்த அதே நாளில், விநியோக மையங்களில் இஸ்ரேலிய படைகள் நூற்றுக்கணக்கான பொதுமக்களைக் கொன்றுள்ளன. ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பிரதேசத்தில் ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளரான பிரான்செஸ்கா அல்பானீஸ், GHF இன் நடவடிக்கைகள் “மனிதாபிமான உருமறைப்பு” மற்றும் “இந்த இனப்படுகொலையின் ஒரு அத்தியாவசிய தந்திரோபாயம்” என்று முன்னர் அறிவித்திருந்தார்.