முன்னோக்கு

ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலியப் போருக்கு ஐரோப்பிய சக்திகள் உடந்தையாகச் செயற்படுகின்றன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஜூன் 12, 2025 வியாழக்கிழமையன்று, உக்ரேனின் கியேவில் உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடனான சந்திப்பின் போது ஜேர்மன் பாதுகாப்பு அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ் (வலதுபுறத்தில் இருப்பவர்) பேசுகிறார். [AP Photo/Evgeniy Maloletka]

அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது குண்டுத் தாக்குதல் நடத்தி மத்திய கிழக்கு முழுவதையும் தீக்கிரையாக்கிய நிலையில், ஐரோப்பிய சக்திகள் உடந்தையர்களாக செயற்படுகின்றனர். “பதட்டத்தைக் குறைத்தல்” மற்றும் “இராஜதந்திரத் தீர்வு” என்ற போர்வையில், ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புக்கு தெஹ்ரான் முழுமையாக நிபந்தனையின்றி சரணடைய வேண்டும் என்று அவர்கள் கோருகின்றனர்.

இந்த நிகழ்வுகள் ஒரு மாஃபியா திரைப்படத்தை நினைவூட்டுகின்றன. இஸ்ரேல் ஈரானுக்கு எதிராக ஆத்திரமூட்டப்படாமலேயே தாக்குதலை நடத்தியது; அது தொழில்துறை வளங்கள் மற்றும் நகரங்களை குண்டுவீசித் தாக்கியது மற்றும் உயர் பதவியிலுள்ள அரசியல்வாதிகள், விஞ்ஞானிகள், அதிகாரிகளை திட்டமிட்டு கொன்றது. அமெரிக்கா அட்லாண்டிக் பெருங்கடலைக் கடந்து மூலோபாய குண்டுவீச்சு விமானங்களைக் கொண்ட படையை அனுப்பி, ஈரானின் அணுசக்தி நிலையங்களை அழித்துவிட்டது. ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் அவரது போர் செயலாளரான பீட் ஹெக்செத்தும், ஈரான் தானாக முன்வந்து சரணடையாவிட்டால் நாட்டை முற்றிலுமாக அழிப்போம் என குண்டர்கள் மொழியில் அச்சுறுத்தியுள்ளனர். ஐரோப்பிய சக்திகள் வழக்கறிஞராக நடித்து, கொல்லப்படாமல் இருக்க வேண்டுமானால் தெஹ்ரான் தானாக முன்வந்து தற்கொலை செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றனர்.

ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்குப் பதிலளிக்க ஜேர்மன் சான்சலர் பிரீட்ரிக் மெர்ஸ், பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் மற்றும் பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ஆகியோர் ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டனர். அந்த அறிக்கையில் சர்வதேச சட்டத்தை மீறும் இந்த தாக்குதலுக்கு எவ்விதமான விமர்சனமும் இடம்பெறவில்லை. அவர்கள் அமெரிக்க நடவடிக்கையை தெளிவாக வரவேற்கவில்லை என்றாலும், அந்தக் கூட்டு அறிக்கையானது தாக்குதலுக்கு ஒப்புதல் அளிக்கும் செயலாகவே புரிந்து கொள்ள முடியும்.

ஈரான் மீதான தாக்குதலை நியாயப்படுத்த இஸ்ரேலும் அமெரிக்காவும் பயன்படுத்தும் சாக்குப்போக்கை அவர்கள் இவ்வாறு ஆதரிக்கிறார்கள்: “ஈரான் ஒருபோதும் அணு ஆயுதத்தை வைத்திருக்க முடியாது, இனி பிராந்தியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்க முடியாது என்பதில் நாங்கள் தொடர்ந்து தெளிவாக இருக்கிறோம்.” ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்பஹானில் உள்ள அணுசக்தி நிலையங்கள் மீதான அமெரிக்க இராணுவத் தாக்குதல்கள் குறித்து அவர்கள் கருத்து தெரிவிக்கையில்: ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதை தடுப்பதே எங்கள் நோக்கமாக உள்ளது. இஸ்ரேலிய அரசால் திட்டமிட்டு கொலை செய்யப்பட்ட தலைமை பேச்சுவார்த்தையாளர் கொல்லப்பட்ட பின்னணியில்,”அதன் அணுசக்தி திட்டம் சம்பந்தப்பட்ட அனைத்து கவலைகளையும் நிவர்த்தி செய்யும் ஒரு உடன்படிக்கைக்கு இட்டுச் செல்லும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட வேண்டும்” என்று அவர்கள் கோருகின்றனர்.

திங்கட்கிழமை பிற்பகுதியில் கத்தாரில் உள்ள அமெரிக்க இராணுவத் தளத்தின் மீது ஈரான் பல ஏவுகணைகளை வீசிய பின்னர், அவர்கள் மேலும் அமெரிக்க தாக்குதல்களை ஆதரிப்பார்கள் என்பதை ஒருவர் உறுதியாக நம்பலாம். கத்தாருக்கு முன்கூட்டியே எச்சரிக்கப்பட்டு ஏவுகணைகள் இடைமறிக்கப்பட்டதால், அவை எந்த சேதத்தையும் ஏற்படுத்தவில்லை. மெர்ஸ், மக்ரோன் மற்றும் ஸ்டார்மர் ஆகியோர் ஈரானிடமிருந்து வரும் தாக்குதல் “விரிவாக்கத்தை” மட்டுமே எதிர்க்கின்றனர், ஆனால் அது அமெரிக்காவிலிருந்தோ இஸ்ரேலிலிருந்தோ வந்தபோதும், அதற்கு எந்த எதிர்ப்பையும் அவர்கள் முன்வைக்கவில்லை.

பேர்லின், பாரிஸ் மற்றும் லண்டன் ஆகியவை அமெரிக்காவின் தாக்குதலுக்கு ஆதரவு தெரிவித்தாலும், அதனால் அவர்கள் வாஷிங்டனுடன் எந்த முரண்பாடும் இல்லை என அர்த்தமில்லை. மத்திய கிழக்கில் மூலோபாய மோதல் பெரிதாகிப் பேரழிவாக மாறி, முழு உலகப் பொருளாதாரத்தையும் படுகுழியில் தள்ளக்கூடும் என்ற அச்சம் ஐரோப்பிய தலைநகரங்களில் உள்ளது, குறிப்பாக ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியைத் தடுக்கும் அச்சுறுத்தலைச் செயல்படுத்தினால், அது உலகின் எண்ணெய் விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கு கொண்டு செல்லப்படுவது தடைப்படும்.

நான்கு நாட்களுக்கு முன்பு, இஸ்ரேலும் அமெரிக்காவும் முன்னெடுக்கின்ற வன்முறை ஆட்சி மாற்றம் ஈரானில் “குழப்பத்திற்கு” வழிவகுக்கும் என ஜனாதிபதி மக்ரோன் எச்சரித்தார். “இன்றைய மிகப்பெரிய தவறு என்னவென்றால், இராணுவ வழியிலேயே ஈரானில் ஆட்சி மாற்றத்தை முயற்சிப்பதுதான்,” என்றும், “2003 இல் ஈராக்கில் செய்யப்பட்டதும், கடந்த ஒரு தசாப்தத்தில் லிபியாவில் நடந்ததுமே ஒரு நல்ல தீர்வாக இருந்ததா? எவரும் அதை நம்பவில்லை!” என்றும் அவர் கூறினார்.

ஈரான் மீதான இஸ்ரேலிய மற்றும் அமெரிக்கத் தாக்குதல் ரஷ்யாவிற்கு எதிரான தங்கள் போர் பிரச்சாரத்தை மேலும் இழிவுபடுத்தும் என்று ஐரோப்பிய அரசாங்கங்களும் அஞ்சுகின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக, ரஷ்ய ஜனாதிபதி புட்டின் உக்ரேனுக்கு எதிராக “சர்வதேச சட்டத்திற்கு முரணான ஆக்கிரமிப்புப் போரை” நடத்துவதாக அவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால், சர்வதேச சட்டத்திற்கு முரணாக ஆக்கிரமிப்புப் போரை யாராவது நடத்துகிறார்கள் என்றால், அது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல்தான் என்பதில் எந்த ஐயமும் இல்லை. சர்வதேச சட்ட வல்லுநர்கள் பெரும்பாலும் இதை ஏற்கின்றனர்.

ஆனால் போரின் குற்றகரத் தன்மை வெளிப்படையானது மற்றும் ஐரோப்பிய அரசாங்கங்கள் பேரழிக்கு அஞ்சினாலும், அவை எந்தவித தயக்கமும் இல்லாமல் ஆக்கிரமிப்பாளர்களுடன் இணைந்து செயல்படுகின்றன. இதை மட்டும் பார்த்தாலே இது தந்திரோபாய பிரச்சினைகள் பற்றியது அல்ல, மாறாக அடிப்படை ஏகாதிபத்திய நலன்கள் பற்றியது என்பது தெளிவாகிறது.

ஜேர்மன் பாதுகாப்பு அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ், ஞாயிற்றுக்கிழமை மாலை ARD தொலைக்காட்சியில் இதை சுருக்கமாகக் கூறினார்: “நியாயபூர்வமா அல்லது சட்டபூர்வமா என்பது நுணுக்கமான ஆனால் முக்கியமான வேறுபாடாகும்.” ஈரான் மீது குண்டுவீச்சு போன்ற இலக்கை ஜேர்மன் அரசாங்கம் “நியாயபூர்வமானது” எனக் கருதும்போது, அது சட்டத்தையும் அதன் சட்டபூர்வத்தன்மையையும் முழுமையாக புறக்கணிக்கிறது.

ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் ஆகியவை ட்ரம்பின் ஆக்கிரோஷமான அணுகுமுறையை மனஅமைதியுடன் ஏற்க முடியாமல் இருக்கலாம்; ஆனால் போரின் கொள்ளையிலிருந்து பங்கு பெறுவது அவர்களுக்குத் தார்மீகமோ சட்டரீதியிலோ உள்ள எந்த மனக்கசப்புகளையும் விட முக்கியமானதாகும். 34 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த முதல் ஈராக் போருக்குப் பிறகு மத்திய கிழக்கை அடிமைப்படுத்தும் நோக்கில் நடத்தப்படும் போர்களில் அவர்கள் தொடர்ந்து பங்கேற்று வந்துள்ளனர். 2001இல் ஆப்கானிஸ்தான் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்காக, நேட்டோவின் கூட்டு பாதுகாப்பு விதியை அவர்கள் பயன்படுத்தினர்.

2003 ஆம் ஆண்டு இரண்டாவது ஈராக் போரின் போதும், 2011 ஆம் ஆண்டு லிபியப் போரின் போதும், பிரான்ஸ் மற்றும் ஜேர்மனியுடன் சில சமயங்களில் கருத்து வேறுபாடுகள் இருந்துள்ளன. இருப்பினும், ஜேர்மன் அரசாங்கம் அமெரிக்காவை எதிர்க்கும் அளவுக்குச் செல்லவில்லை அல்லது ஜேர்மனியின் ராம்ஸ்டீனில் உள்ள இராணுவத் தளத்தைப் பயன்படுத்துவதைத் தடைசெய்யக்கூடச் செல்லவில்லை, இது போர் முயற்சிகளுக்கு முக்கியமானதாக இருந்தது.

பிரிட்டன் எப்போதும் அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளியாக செயல்பட்டு வருகிறது. இப்போது கூட, ஈரான் மீதான தாக்குதலுக்குப் பிறகு பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், ட்ரம்பிற்கு தனது ஆதரவை உறுதி செய்ய அழைப்புவிடுத்தார். இது வணிகச் செயலாளர் ஜோனாதன் ரெனால்ட்ஸ் பத்திரிகைகளுக்கு உறுதியளித்தபடி, “அமெரிக்காவுடன் நட்பு கொள்வது” பற்றியது அல்ல, மாறாக “பிரிட்டன் நலன்களைப் பாதுகாப்பது” பற்றியதாக இருக்கிறது என்றார்.

அமெரிக்காவுடன் சேர்ந்து, ஜேர்மனியானது இஸ்ரேலின் மிக முக்கியமான ஆதரவாளராக உள்ளது. காஸாவில் அதன் போர்க் குற்றங்கள் இருந்தபோதிலும், அது நெதன்யாகு ஆட்சிக்கு உறுதியான விசுவாசமாக உள்ளது, மேலும் அதன் எதிரிகளை “யூத எதிர்ப்பாளர்கள்” என்று கூறி துன்புறுத்துகிறது. இஸ்ரேல் “நம் அனைவருக்காகவும் மோசமான வேலையைச் செய்கிறது” என்று கூறியபோது, பேர்லினுக்கும் ஜெருசலேமுக்கும் இடையிலான உறவை சான்சலர் பிரீட்ரிக் மெர்ஸ் பொருத்தமாக அது விவரித்தது.

நேற்று, ஹேக்கில் நேட்டோ உச்சிமாநாடு தொடங்கியது, இதில் ட்ரம்ப் உட்பட 32 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் அல்லது அரசாங்கத் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். இராணுவச் செலவினங்களை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 சதவீதமாக அதிகரிப்பதில் கவனம் செலுத்தப்படுகிறது, இது முந்தைய நேட்டோ இலக்கான 2 சதவீதத்தை விட இரண்டரை மடங்கு அதிகம் ஆகும். இந்தப் பாரிய ஆயுதவள அதிகரிப்பானது ஐரோப்பிய நேட்டோ உறுப்பினர்கள் அணு ஆயுத வல்லமை கொண்ட ரஷ்யாவிற்கு எதிராக மூன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்குள் போரை நடத்த உதவும் நோக்கம் கொண்டதாக இது இருக்கிறது.

ஐரோப்பியர்களின் முதன்மை இலக்குகள், உக்ரேனில் போரை ஆதரிப்பதற்கு அமெரிக்காவை தொடர்ந்து உறுதியளிப்பதும், ட்ரம்ப் ரஷ்யாவுடன் ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதைத் தடுப்பதும் ஆகும். இதற்கு ஈடாக, மத்திய கிழக்கில் அமெரிக்காவின் தாக்குதலுக்கும் சீனாவை சுற்றி வளைப்பதற்கும் அவர்கள் இன்னும் வலுவான ஆதரவை வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதலாம் மற்றும் இரண்டாம் உலகப் போர்களுக்கு முந்தைய காலத்தில் நிகழ்ந்ததைப் போலவே, ஒரு விபரீதமான முடிவை மற்றொரு விபரீதமான முடிவைத் தொடர்ந்து, அனைத்து ஏகாதிபத்திய சக்திகளும் போரின் சுழற்சிக்குள் தொடர்ந்து ஆழமாக இழுக்கப்பட்டன. இன்று மீண்டும், அவை மனிதகுலத்தின் உயிர்வாழ்வையே அச்சுறுத்தும் ஒரு பேரழிவை நோக்கிப் பாய்கின்றன.

காலாவதியான முதலாளித்துவ அமைப்புமுறையின் தீர்க்க முடியாத நெருக்கடியே அவர்களை இயக்குகிறது — அதாவது பில்லியன் கணக்கான தொழிலாளர்களை ஒரே பூகோள உற்பத்தி செயல்முறையில் ஒன்றிணைக்கும் உலகளாவிய உற்பத்தி முறையும், தேசிய-அரசு அமைப்புமுறையும் தனியார் சொத்துடமை என்பவற்றை அடிப்படையாகக் கொண்ட முதலாளித்துவ அமைப்புமுறையுடனான அதன் இணக்கமின்மைமே இதற்குக் காரணமாகின்றன. 1914 ஆண்டு மற்றும் 1939 ஆண்டைப் போலவே, இந்த நெருக்கடிக்கு தீர்வாக, முதலாளித்துவத்தினர் உலகை வன்முறையுடன் மறுபகிர்வு செய்ய முயலுகின்றனர்.

முதலாளித்துவத்தைப் பாதுகாக்கும் எந்தவொரு கட்சியும் இந்த நெருக்கடியிலிருந்து ஒரு வழியை வழங்கும் என்று எதிர்பார்ப்பது ஆபத்தானது. ட்ரம்பின் குடியரசுக் கட்சியினர் போன்ற வலதுசாரி தீவிரவாதிகளாக இருந்தாலும் சரி, அமெரிக்க ஜனநாயகக் கட்சியினர் மற்றும் மக்ரோன் போன்ற “மையவாதிகளாக” இருந்தாலும் சரி, ஸ்டார்மரின் தொழிற் கட்சி மற்றும் ஜேர்மனியின் சமூக ஜனநாயகக் கட்சி (SPD) போன்ற சமூக ஜனநாயகக் கட்சியினராக இருந்தாலும் சரி, அவர்கள் அனைவரும் போர், மறு ஆயுதமயமாக்கல் மற்றும் இராணுவவாதத்தை ஆதரிக்கின்றனர் மற்றும் அவர்களுக்கு எதிரான சமூக மற்றும் அரசியல் எதிர்ப்பை அடக்குகிறார்கள்.

போர் மற்றும் இராணுவவாதத்திற்கு எதிரான ஒரே யதார்த்தமான மூலோபாயமானது, முதலாளித்துவ எதிர்ப்பு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் சர்வதேச தொழிலாளர் வர்க்கத்தை அணிதிரட்டுவதாகும். இதற்கான நிலைமைகள் தற்போது உருவாகி உள்ளன. ஈரான் மீது நடத்திய கொடூரமான தாக்குதல், காஸாவில் நடக்கும் இனப்படுகொலைக்கு எதிரான போராட்டங்களை மீண்டும் எழுச்சி செய்ய வைத்திருக்கிறது; இதற்காக பல்லாயிரக்கணக்கானோர் வீதிகளில் குதித்துள்ளனர். மேலும் பல தொழிலாளர்கள், போரின் செலவுகளை தங்களால் பூர்த்தி செய்ய வேண்டிய சமூக வெட்டுக்கள் மற்றும் பணிநீக்கங்களுக்கு எதிராக போராடி வருகின்றனர்.

ஆனால் இந்த இயக்கத்திற்கு ஒரு முன்னோக்கும் அரசியல் தலைமையும் தேவையாக இருக்கிறது. ஆளும் வர்க்கமானது எதிர்ப்பை உள்வாங்கி கட்டுப்படுத்தி அவற்றை தகர்க்க, ஆளும் வர்க்கம் போலி இடது கட்சிகளை நம்புகிறது.

ஜேர்மனியில், இடது கட்சி இராணுவவாதத்தையும் ஜேர்மனியின் தீவிர வலதுசாரி AfD கட்சியையும் விமர்சித்ததால் ஆதரவைப் பெற்றுள்ளது. ஆனால் மத்திய கிழக்கில் போர் குறித்த அதன் நிலைப்பாடு கூட்டாட்சி அரசாங்கத்தின் நிலைப்பாட்டிலிருந்து சிறிதும் வேறுபடுவதில்லை. அரசாங்கத்தைப் போலவே, அது ஈரானின் அணுசக்தி திட்டத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், இராணுவ வழிமுறைகள் மூலம் அல்லாமல் இராஜதந்திர ரீதியாக இதை அடைய முடியும் என்றும் கூறுகிறது.

பிரான்சில், அடிபணியா பிரான்ஸ் (La France insoumise) கட்சித் தலைவரான ஜோன்-லூக் மெலன்சோன், ட்ரம்ப் மற்றும் நெதன்யாகுவை எதிர்க்குமாறு ஜனாதிபதி மக்ரோனிடம் வேண்டுகோள் விடுக்கிறார். இது பிரான்சின் நலன்களுக்காகவே என்று மக்ரோனை நம்ப வைக்க அவர் இவ்வாறு முயற்சிக்கிறார்:

உள்ளடக்கம் எவ்வளவு கொடூரமாக இருந்தாலும், ஒருவேளை அதன் காரணமாகவே, நம் நாடு அதன் நன்கு புரிந்துகொள்ளப்பட்ட மகத்துவத்தையும் செல்வாக்கையும் நிரூபிக்க ஒரு வாய்ப்பு உள்ளது. பிரான்ஸ் இந்தக் கொடிய இரட்டையருடன் சேர மறுக்க வேண்டும். அது அமைதி மற்றும் சர்வதேச சட்டத்தின் கொடியை உயர்த்திப் பிடித்தால், அதன் வார்த்தை எல்லா இடங்களிலும் விடுதலை மற்றும் ஆதரவாகப் பெறப்படும்.

என்ன ஒரு பரிதாபகரமான கேலிக்கூத்து! அமெரிக்கா, ஜேர்மனி மற்றும் பிரிட்டனைப் போலவே பிரான்சும் ஒரு ஏகாதிபத்திய சக்தியாகும், அதன் பின்னால் காலனித்துவ குற்றங்களின் இரத்தக்களரிப் பாதை உள்ளது - வியட்நாம் முதல் அல்ஜீரியா, கொங்கோ வரை, ஒரு சிலவற்றைக் குறிப்பிடலாம். செல்வந்தர்களின் ஜனாதிபதியான மக்ரோன் அமைதியையும் சர்வதேச சட்டத்தையும் நிலைநிறுத்துவார் என்று எதிர்பார்ப்பது அரசியல் ஏமாற்றுத்தனத்தின் உச்சம் ஆகும்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் அதன் பிரிவுகளான சோசலிச சமத்துவக் கட்சிகளும், ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்திற்காகப் போராடும் ஒரே அரசியல் போக்காகும். இந்தக் கட்சிகளை நிறுவுவது போர் மற்றும் முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்தில் மிக முக்கியமான பணியாகும்.

Loading