பாகிஸ்தான் மீதான மோடி அரசாங்கத்தின் தாக்குதலுக்கும் முஸ்லிம்-விரோதத்தை தூண்டுவதற்கும் எதிராக இந்தியத் தொழிலாளர்களும் மாணவர்களும் பேசுகின்றனர்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

கடந்த வாரம், இந்தியாவும் பாகிஸ்தானும் விரைவில் ஒரு அணு ஆயுத மோதலாக விரிவடைந்திருக்கக் கூடிய ஒரு முழுமையான போரின் விளிம்பிற்கே வந்தன.

ஏவுகணைத் தாக்குதல்கள், விமானத் தாக்குதல்கள் மற்றும் எல்லை தாண்டிய தாக்குதல்கள் உட்பட நான்கு நாட்கள் நடந்த தீவிரமான மோதல்களின் பின்னரே ஒரு நிலையற்ற போர் நிறுத்தம் எட்டப்பட்டது.

இரு தரப்பினரும் போர் நிறுத்தத்தை மீறியதாகவும், பொதுமக்களையும் மதத் தலங்களையும் வேண்டுமென்றே குறிவைத்ததாகவும் மாறி மாறி குற்றம் சாட்டி வருவதால், பதட்டங்கள் அதிகமாகவே உள்ளன.

நரேந்திர மோடி மற்றும் அவரது இந்து மேலாதிக்க பாஜக தலைமையிலான இந்திய அரசாங்கம், “ஆபரேஷன் சிந்தூர்” என்று அழைக்கப்படும் பாகிஸ்தானுக்கு எதிரான அவர்களின் இராணுவப் பிரச்சாரம் 'தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது” என்று வலியுறுத்துகிறது. விரைவில் பதட்டத்தைத் தணிக்கும் பேச்சுவார்த்தைகள் நடக்கலாம் என்ற பரிந்துரைகளை அவர்கள் பொய்யாக்குகின்றனர். இஸ்லாமாபாத்துடன் கலந்துரையாட புது தில்லி தயாராக உள்ள ஒரே விஷயம், “பயங்கரவாதத்திற்கு” பாகிஸ்தான் ஆதரவளிப்பது பற்றியதும் பிரிக்கப்பட்ட காஷ்மீரின் ஒரு பகுதியை பாகிஸ்தான் இந்தியாவுக்கு திருப்பி கொடுக்க வேண்டும் என்ற தில்லியின் கோரிக்கைகளைப் பற்றியதும் மட்டுமே என்று மோடி கடந்த திங்கட்கிழமை நாட்டுக்கு ஆற்றிய உரையில் வலியுறுத்தினார்.

போருக்கு எதிரான எந்தவொரு எதிர்ப்பையும் மோடி அரசாங்கம் கடுமையாக ஒடுக்குகிறது. தமிழ்நாட்டில் உள்ள SRM பல்கலைக்கழகத்தில், உதவிப் பேராசிரியரான லோரா எஸ்., சமூக ஊடகங்களில் ஆபரேஷன் சிந்தூரை விமர்சித்தமைக்காக வேலை இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். சுதந்திர பத்திரிகையாளர்கள் கைது செய்யப்படுவதை எதிர்கொள்வதுடன் சிவில் உரிமைகள் தாக்கப்படுகின்றன.

ஆனால் மேற்பரப்பிற்குக் கீழே, குறிப்பாக தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் விமர்சனக் குரல்கள் வளர்ந்து வருகின்றன. அவர்கள் அனைவரும் பரந்த வேலையின்மை, உயர்ந்து வரும் விலைவாசி உயர்வு மற்றும் மோசமடைந்து வரும் வாழ்க்கை நிலைமைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் உட்பட, பல மாநிலங்களில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் உலக சோசலிச வலைத் தள செய்தியாளர்களிடம் பேசினார்கள். அவர்கள் போருக்கு எதிரான தங்கள் கோபத்தையும் எதிர்ப்பையும் வெளிப்படுத்தினர்.

தமிழ்நாட்டில் உள்ள ரெனால்ட் நிசான் தொழிற்சாலையில் பணிபுரியும் தனேஷ்:

இந்தப் போரினால் சாதாரண மக்களுக்கும் சாதாரண தொழிலாளர்களுக்கும் எந்தப் பயனும் இல்லை. இது இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரு நாடுகளிலும் சாதாரண மக்களின் பல உயிர்களையும் சொத்துக்களையும் அழிக்க மட்டுமே வழிவகுக்கும். அமெரிக்கா, ரஷ்யா மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் போரை நடத்த அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகள் உள்ளன. போர் உபகரணங்களால் தொழிலாள வர்க்கத்திற்கு எந்தப் பயனும் இல்லை, அவை முற்றிலும் அழிவுகரமானவை.

மோடி அரசாங்கம் எப்போதும் இந்த பயங்கரவாதத் தாக்குதல்களை அதன் சொந்த தேர்தல் நோக்கத்திற்காகப் பயன்படுத்த முயற்சிக்கின்றது. இதை நாம் முந்தைய சம்பவங்களிலும் பார்த்திருக்கிறோம். புல்வாமா தாக்குதல் [ஜம்மு மற்றும் காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் 2019இல் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்] ஒரு உதாரணம்.

உண்மையில், தங்கள் சொந்த நோக்கங்களுக்காகப் பயன்படுத்திக்கொள்ள அரசாங்கத்தால் இது வேண்டுமென்றே நடக்க அனுமதிக்கப்பட்டுள்ளது என்று நான் சொல்வேன். உள்துறை அமைச்சர் அமித் ஷா உடனடியாக பயங்கரவாதத் தாக்குதல் நடந்த இடத்திற்குச் சென்றார். மணிப்பூர் வன்முறை நடந்தபோது அவர் என்ன செய்துகொண்டிருந்தார்? [2023 இல் இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் நூற்றுக்கணக்கான பொதுமக்களைக் கொன்ற இன-வகுப்பு மோதல்களை மோடியின் பாஜக தூண்டியது]. அவர் அங்கு போகவே இல்லை.

இந்திய மற்றும் பாகிஸ்தான் தொழிலாளர்களுக்கு இடையே ஒரேமாதிரியான உணர்வும் ஒற்றுமையும் இருப்பதாக நான் நம்புகிறேன். ஆனால் அவர்களை ஒன்றிணைக்க ஒரு தலைமை இருக்க வேண்டும். தொழிலாளர்கள் மேல் ஆதிக்கம் செலுத்தும் அதிகாரப்பூர்வ தலைமை இப்போது முற்றிலும் போலியானதாக இருப்பதோடு காட்டிக்கொடுப்பதாகவும் நான் உணர்கிறேன்.

உலக சோசலிச வலைத் தளமும் அதன் கருத்துக்களும் உண்மையானவை என்று நான் உணர்கிறேன். இந்திய மற்றும் பாகிஸ்தான் மற்றும் உலகளாவிய தொழிலாளர்களின் ஒற்றுமைக்கான அதன் அழைப்பை நான் முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன். WSWS இன் கருத்துக்கள் சக்திவாய்ந்தவையாக நான் நம்புகிறேன். இருப்பினும், எனது ஒரே கவலை அது பரந்த மக்களைச் சென்றடைய வேண்டும் என்பதே. அதற்கான நடவடிக்கைகளை நாம் எடுக்கவேண்டும்.

சென்னையில் ஒரு ஐடி தொழிலறிஞரான செனிபன்:

பஹல்காமில் பயங்கரவாத அமைப்புகள் (ஏப்ரல் 22 அன்று) செய்த அட்டூழியங்களை நான் சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிக்கிறேன். என்றாலும், எந்தவொரு பகுத்தறிவுள்ள நபரும் மிகவும் ஆத்திரமூட்டும் தேசபக்தியையோ அல்லது ஒரு முழு நாட்டிற்கும் எதிராக பேரழிவுதரும் போரை நடத்துவதை நியாயப்படுத்தவோ அல்லது ஆதரிக்கவோ மாட்டார்.

பஹல்காம் சம்பவம் வேண்டுமென்றே பொதுமக்களை குறிவைத்து நடத்தப்பட்ட ஒரு இரக்கமற்ற பயங்கரவாதச் செயலாகும். இருப்பினும், ஒரு அரசாங்கம் அத்தகைய துயரத்தை ஒரு தேசபக்திவெறியைத் தூண்டுவதற்குப் பயன்படுத்திக் கொள்ளக்கூடாது, மேலும், பாகிஸ்தானுக்கு எதிராக திசைதிருப்பும் ஆக்கிரமிப்புப் போரை நடத்த ஒரு போர்வெறி பிரச்சாரத்தைத் தூண்டுவதற்கு அதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தக் கூடாது.

ஒரு சக தொழிலாளி மற்றும் மார்க்சிய மாணவன் என்ற முறையில், பயங்கரவாத நடவடிக்கைகளுடன் எந்த வகையிலும் தொடர்பில்லாத அப்பாவி உழைக்கும் மக்களின் உயிர்களைப் பறிக்கும் இந்திய மற்றும் பாகிஸ்தான் அரசாங்கங்களின் அழிவுகரமான நடவடிக்கைகளை நான் கடுமையாகக் கண்டிக்கிறேன்.

இந்த சம்பவம் ஒரு வெகுஜன போர் எதிர்ப்பு மற்றும் முதலாளித்துவ எதிர்ப்பு இயக்கத்தை கட்டியெழுப்புவதற்கான போராட்டத்தின் ஒரு பகுதியாக இரு நாடுகளிலும் உள்ள தொழிலாளர்களின் ஐக்கியப்பட்ட போராட்டத்திற்கு அழைப்பு விடுக்க பயன்படுத்தப்பட வேண்டும்.

ஏகாதிபத்தியப் போருக்கு எதிராகவும் உலக சோசலிசத்திற்காகவும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியப்பட்ட போராட்டங்களுக்கான பிரச்சாரத்தை தீவிரப்படுத்த, உழைக்கும் மக்களும் இளைஞர்களும் WSWS உடன் கைகோர்க்க வேண்டிய அவசரத் தேவையை இந்த முன்னேற்றங்கள் வலியுறுத்துகின்றன.

6 மே 2025 செவ்வாய், இந்தியக் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள ஒரு சந்தையில் இந்திய படையினர் கடமையில் இருந்த போது. [AP Photo/Mukhtar Khan]

அகிலன், ஒரு தொழில்துறை தொழிலாளி:

ஏப்ரல் 22 அன்று, பஹல்காம் தாக்குதல், பலர் வருகை தரும் ஒரு பிரபலமான சுற்றுலாத் தலத்தில் நடந்தது. 2019 ஆம் ஆண்டு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை உறுதி செய்யும் அரசியலமைப்பின் 370வது பிரிவை ரத்து செய்த பிறகு, இந்திய ஆளும் பாஜக அரசு, ரத்தின் பின்னர் காஷ்மீர் 'சுதந்திரமாகவும்' பாதுகாப்பான இடமாகவும் மாறியதாகக் கூறியது.

ஆனால், அது இந்திய ஆளும் உயரடுக்கின் பிரச்சாரம் ஆகும். அங்கு அதிக இராணுவப் படைகள் நிலைகொண்டுள்ள போதிலும், நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர் என்பது, இந்திய அரசாங்கம் காஷ்மீர் மக்களையும் சுற்றுலாப் பயணிகளையும் பாதுகாக்கவில்லை என்பதை நிரூபித்தது. பாஜக வேண்டுமென்றே தாக்குதலை நடக்க அனுமதித்ததன் மூலம், தங்கள் அரசியல் நலனுக்காக அதைத் சுரண்டிக்கொள்ளவும், வேலையின்மை, வேலை இழப்பு, பணவீக்கம் மற்றும் அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடியிலிருந்து இந்தியமக்களின் கவனத்தைத் திசை திருப்பிவிடவும் முடியும்.

அத்தோடு, பாஜக, பஜ்ரங் தளம் [பாஜகவுக்கு நெருக்கமான ஒரு வன்முறை இந்து-மேலாதிக்க அமைப்பு] மற்றும் சிவசேனா [பாசிச மராத்தி பிராந்திய அரசியல் கட்சி] போன்ற இந்துத்துவ சக்திகள் பயங்கரவாத தாக்குதலுக்கு முஸ்லிம்களை பொறுப்பாக்குகின்றன. இந்த இந்துத்துவ சக்திகள் மக்களிடையே முஸ்லிம் வெறுப்பைத் தூண்ட முயற்சிப்பதால் முஸ்லிம் மக்கள் தாக்கப்பட்டுள்ளனர், அவர்களின் கடைகள் தாக்கப்பட்டுள்ளன.

ஆனால், கொல்லப்பட்ட கடற்படை அதிகாரி வினய் நர்வாலின் மனைவி, முஸ்லிம்களைத் தாக்கவோ, முஸ்லிம் வெறுப்பைப் பரப்பவோ வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். தாக்குதல் நடந்த அன்று, காஷ்மீர் பொதுமக்கள் மட்டுமே பயங்கரவாதிகளிடமிருந்து தங்களைப் பாதுகாத்ததாகவும், இராணுவமோ அல்லது காவல்துறையோ அங்கு வந்து அவர்களுக்கு உதவவில்லை என்றும் பல சுற்றுலாப் பயணிகள் கூறினர். இது காஷ்மீர் பொதுமக்களின் சகோதரத்துவத்தைக் காட்டுகிறது.

இந்த பாசிச பாஜக அரசாங்கத்திற்கும் போருக்கும் எதிராக நிற்க, இந்தியாவில் தொழிலாள வர்க்கத்தைத் தவிர வேறு எந்த முற்போக்கான சக்தியும் இல்லை. இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் உள்ள தொழிலாள வர்க்கமும் மாணவர்களும் இந்தப் போரை எதிர்க்க ஒன்றுபட வேண்டும் என்பதுடனும், இந்த ஆபத்தான போரில் ஈடுபட்டுள்ள அந்தந்த நாடுகளையும் எதிர்க்க வேண்டும் என்பதுடன் நான் உடன்படுகிறேன்.

மோடி அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட போர் வெறி பிரச்சாரத்தை ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒரு மருத்துவ பிரதிநிதி எதிர்த்ததோடு தற்போதைய மோதலின் வேர்களை சுட்டிக்காட்டினார்: “இந்தோ-பாகிஸ்தான் மோதல் 1947 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தால் காங்கிரஸ் கட்சி மற்றும் முஸ்லிம் லீக்குடன் இணைந்து உருவாக்கப்பட்ட வகுப்புவாதப் பிரிவினையில் வேரூன்றியது [அப்போதைய பிரிட்டிஷ் இந்தியாவை முஸ்லிம் பாகிஸ்தான் மற்றும் இந்து இந்தியாவாகப் பிரித்தது],” என அவர் நினைவூட்டினார்.

கொல்கத்தாவைச் சேர்ந்த தொழிலாளி ஆகாஷ் தேவ் கூறியதாவது:

இரு நாடுகளிலும் உள்ள பெரும்பான்மையான குடிமக்கள் வேலையின்மை, சொற்ப ஊதியம், தோல்வியுற்ற சுகாதார அமைப்பு மற்றும் போதிய கல்வி இன்மை போன்றவற்றால் அன்றாட உயிர்வாழ்விற்காக தொடர்ந்து போராடிவருகின்றனர். அவர்களின் கஷ்டங்கள் முடிவற்றதாகத் தெரிகிறது. இந்தப் போர் அவர்களின் துன்பத்தை மேலும் ஆழமாக்குவதை மட்டுமே செய்யும், இது தொழிலாள வர்க்கத்தையும் ஏழைகளையும் பாரபட்சமின்றி பாதிக்கும்.

தேசிய பாதுகாப்பு மற்றும் தேசத்தைப் பாதுகாத்தல் என்ற பெயரில், ஆளும் வர்க்கம் தேசப்பற்றைத் தூண்டிவிடுகின்றது. கோவிட்-19 நெருக்கடியின் போது, உயிர்களைக் காப்பாற்றுவதை விட முழு அடைப்பை தவிர்ப்பதற்காக முன்னுரிமை அளித்த அதே ஆளும் வர்க்கம்தான் இது. அவர்களின் கொள்கைகள் இறுதியில் முதலாளித்துவ உயரடுக்கிற்கே பயனளித்த அதே நேரம், மில்லியன் கணக்கானவர்கள் இந்த பொறுப்பற்ற முடிவுகளால் பாதிக்கப்பட்டு இறந்தனர்.

உலகளவில், வளர்ந்த நாடுகளாக இருந்தாலும் சரி, வளரும் நாடுகளாக இருந்தாலும் சரி, மக்களின் நலனை மேம்படுத்துவதில் எப்போதும் நிதி பற்றாக்குறை இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும், போர் மற்றும் அழிவு என்று வரும்போது, வளங்களுக்கு ஒருபோதும் பற்றாக்குறை இருக்காது. போர் பேரழிவை மட்டுமே கொண்டுவருகிறது, தொழிலாள வர்க்கமும் ஏழைகளும் மிகப்பெரிய சுமையைச் சுமக்கிறார்கள் என்பதை வரலாறு காட்டுகிறது. தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போரை எதிர்க்கவும் அமைதியைக் கோரவும் ஒன்றுபட வேண்டும்.

ஓய்வுபெற்ற தொலைத்தொடர்பு ஊழியரான நாச்சியப்பன், மோடி அரசாங்கத்தின் போர் வெறி பிரச்சாரத்தை கடுமையாக விமர்சித்து கூறினார்: “பயங்கரவாதிகள் அப்பாவி மக்களைக் கொன்றனர். இருப்பினும், மோடி அரசாங்கம் நடந்துகொள்வது சரியான வழி அல்ல. பாகிஸ்தான் அரசாங்கம் இந்தியாவிற்குள் ஏவுகணைகள் அல்லது ட்ரோன்களை அனுப்பும்போது, இந்தியாவில் உள்ள அப்பாவி மக்கள் துன்பப்படுவார்கள், அதே போல்தான் மறுபக்கமும். இந்திய அமைச்சர்களும் அரசியல்வாதிகளும் பாகிஸ்தானை அழித்து பாகிஸ்தானுக்குள் ஏவுகணைகளை ஏவுவது பற்றிப் பேசும்போது, சாதாரண அப்பாவி மக்களே துன்பப்படுவார்கள், சில இராணுவ சிப்பாய்களும் மரணிக்கலாம்.

“ஒரு தொழிலாளியாக, தொழிலாளர்களின் வாழ்க்கையையும் நலன்களையும் பாதிக்கும் எந்தவொரு நடவடிக்கையையும் நான் எதிர்க்கிறேன். இரு நாடுகளிலும் உள்ள தொழிலாளர்களின் வர்க்க ஒற்றுமையை நான் ஆதரிக்கிறேன்.”

தமிழ்நாட்டின் உதவி திரைப்பட இயக்குனரான ஷியாம் கூறியதாவது:

பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை பாசிச பாஜக பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறது. 2019 இல் பாஜக நிர்வாகம் 370 வது பிரிவை ரத்து செய்தபோது, காஷ்மீரிகள் மட்டுமல்ல, ஒவ்வொரு இந்தியரும் இப்போது காஷ்மீரில் நிலத்தை சொந்தமாக்கிக் கொள்ளலாம் என்று கூறியது. இந்தத் தாக்குதல் குறித்து பாஜக தலைவர்களின் வெறித்தனமான பேச்சுகள், இஸ்ரேல் பாலஸ்தீனத்தில் செய்வதை இந்தியா காஷ்மீரில் சாதிக்கவேண்டும் என்ற சியோனிசத்துடனான அவர்களின் சித்தாந்த கூட்டணியை அம்பலப்படுத்துகின்றன.

மிகவும் இராணுவமயமாக்கப்பட்ட மண்டலமாகவும், சுற்றுலாப் பயணிகளுக்கு பாதுகாப்பானதாகவும் பெருமையாக கூறப்பட்ட காஷ்மீரிலேயே இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. பாஜக அரசாங்கத்தால் பாதுகாப்பைப் பராமரிக்க முடியவில்லை என்றால், மோடி குற்ற உணர்ச்சியுடன் அதிகாரத்திலிருந்து வெளியேற வேண்டும்.

'பாசிசத்தின் முக்கிய அங்கமான முஸ்லிம் வெறுப்பை வளர்ப்பதன் மூலம், மக்களை ஒரு பாசிச சக்தியாக பெருமளவில் ஒழுங்கமைக்க பாஜக முயற்சிக்கிறது' என ஷ்யாம் மேலும் கூறினார்.

மோடியின் கீழ், இந்தியா இஸ்ரேலுடன் நெருக்கமான இராணுவ-பாதுகாப்பு கூட்டாண்மையை உருவாக்கியுள்ளது. மேலே உள்ள படத்தில், இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி (வலது), இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோர் இந்தியாவின் புது தில்லியில் 15 ஜனவரி 2018 அன்று ஒரு கூட்டத்திற்கு முன்னதாக ஊடகங்களுக்கு முன் தோன்றிய போது [AP Photo/ingen opphavsmann]

இந்திய குடிமைப் பணி (ICS) தேர்வுக்கு படிக்கும் மாணவி அபிஷேகா பிரியன்:

இந்தப் போர் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அரசாங்கங்களுக்கும் இந்த நாடுகளின் ஆளும் உயரடுக்கினருக்கும் மட்டுமே சேவை செய்கிறது. இதற்கும் சாமானிய மக்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

இந்தோ-பாகிஸ்தான் போர் இந்து மற்றும் முஸ்லிம் மக்களுக்கு இடையிலான போராகப் பார்க்கப்படும் வகையில் தவறாக உருவாக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசாங்கத்திற்கு இந்திய மக்கள் மீது எந்த அக்கறையும் இல்லை. இந்த இந்திய-பாகிஸ்தான் போர் இதை நமக்கு மேலும் தெரியப்படுத்துகிறது.

பாஜக தலைமையிலான அரசாங்கம் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்பு, பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரிப்பு, அதிர்ச்சியூட்டும் வேலையின்மை விகிதம் போன்றவை ஊடாக மக்கள் மீது ஒரு கண்ணுக்குத் தெரியாத போரை நடத்திவருகிறது. சரியான கல்வி மற்றும் பொது சுகாதாரம் கிடைக்காது. இந்த அமைதியான போரில் நாம் அனைவரதும் கழுத்து நெரிக்கப்படும் அதே நேரம், அதானி, அம்பானி மற்றும் பிற இந்திய முதலாளிகள் பாகிஸ்தானுடனான இந்தப்போரை பயன்படுத்தி நம்மை மேலும் மிதிப்பார்கள்.

[பாகிஸ்தானுக்கு எதிரான] இந்தப் போர், ஏழை இந்திய மக்களின் சமூக கோபத்தைத் திசைதிருப்புவதற்கான ஒரு மூடிமறைப்புதான். இந்திய மக்கள் எதிர்கொள்ளும் சமூகப் பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதில் தனது இயலாமையை மூடிமறைக்க பாஜக அரசாங்கம் இந்தப் போரை தொடங்கியுள்ளது.

இந்தப் போரில் இந்தியா மற்றும் பாகிஸ்தானின் அப்பாவி மக்கள் கொல்லப்படும் போது, இந்தப் போரை எந்தநாட்டிற்கும் கிடைத்த வெற்றியாகக் கொண்டாட முடியாது. ஆனால், இந்திய அரசு வழக்கமாக கிரிக்கெட் போட்டிகளை நடத்துவது போல, இந்தப் போரைப் பயன்படுத்தி தேசியவாத வெறியைத் தூண்ட முயற்சிக்கின்றது. இரு நாட்டு முதலாளித்துவவாதிகளின் இந்தப் போரை நான் எதிர்க்கிறேன், இது இந்திய மக்களிடையே பிளவை ஏற்படுத்தவும் முஸ்லிம் வெறுப்பைப் பரப்பவும் பயன்படுகிறது.

Loading