வரலாற்று முன்னோக்கில் இந்தியாவில் 1983ம் ஆண்டு இடம்பெற்ற நெல்லி வகுப்புவாதப் படுகொலை

பிப்ரவரி 18, 1983 அன்று, நாற்பத்தியிரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், வடகிழக்கு இந்திய மாநிலமான அசாமில் உள்ள நெல்லி கிராமத்தில் நிகழ்ந்த படுகொலையானது, உழைக்கும் மக்கள் எதிர்கொண்டுள்ள உண்மையான பிரச்சினைகளில் இருந்து கவனத்தை திசை திருப்பி பிரித்து வைப்பதற்காக, ஆளும் தட்டுக்கள் வகுப்புவாத மற்றும் இனப் பிளவுகளை சூழ்ச்சியுடன் கையாளுவதன் விளைவு என்பதை தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.

ஏகாதிபத்திய உலகப்போர், சர்வாதிகாரம், பாசிசம், இனப்படுகொலை, வறுமை, வேலையின்மை, சமூக சமத்துவமின்மை ஆகியவை, மனித குலத்துக்கு அச்சுறுத்தல் விடுத்துவரும் நிலைமையில், தொழிலாள வர்க்கத்தைப் பொறுத்தவரை நெல்லிப் படுகொலையை நினைவுகூருவது என்பது வெறுமனே ஒரு துன்பியலான விடயம் அல்ல. மாறாக, ஒரு அவசியமான வரலாற்றுப் படிப்பினையாக இருக்கிறது: அதாவது இன, மத, மொழிகளைக் கடந்து தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதன் மூலமாக மட்டுமே, போர், ஒடுக்குமுறை மற்றும் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு அடிப்படைக் காரணமான முதலாளித்துவ அமைப்பு முறையை தூக்கி வீச முடியும்.

இன்று, நெல்லிப் படுகொலைக்கு இட்டுச் சென்ற பிரச்சினைகள் — அதாவது வெளிநாட்டவர் விரோதம், வகுப்புவாதம், இனவாதம், தேசியவாதம் மற்றும் புலம்பெயர்ந்தோரை பலிகடாவாக்குதல் — உலகெங்கிலும் ஆளும் வர்க்கத்தினாலும், ஸ்தாபனக் கட்சிகளாலும் இயல்பாக்கப்படுகின்றன. ஆதலால், அனைத்து வகையான பாகுபாடு மற்றும் அடிப்படை ஜனநாயக உரிமைகளுக்கு எதிரான தாக்குதல்களை எதிர்த்துப் போராடுவது தொழிலாள வர்க்கத்திற்கு இன்றியமையாத பணியாக ஆகியுள்ளது. இந்தக் கட்டுரையின் உள்ளடக்கம் இதற்கான தெளிவான பதிலாக உள்ளது. இக்கட்டுரையானது ஆங்கிலத்தில் மார்ச் 13, 2024 அன்று வெளியிடப்பட்டது. இப்போது தமிழில் முதல்முறையாக வெளியிடப்படுகிறது.

***

நாற்பத்தியொரு ஆண்டுகளுக்கு முன்பு, பிப்ரவரி 18, 1983 அன்று, வடகிழக்கு இந்திய மாநிலமான அசாமில் உள்ள நெல்லி என்ற குக்கிராமத்திலும் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பதினான்கு கிராமங்களிலும் இருந்த அப்பாவி வங்காள மொழி பேசும் முஸ்லீம்களை இலக்கு வைத்து ஒரு காட்டுமிராண்டித்தனமான படுகொலைகள் நடத்தப்பட்டது. இந்தியாவின் தற்போதைய ஆளும் கட்சியான இந்து மேலாதிக்கவாத பாரதீய ஜனதா கட்சி (பா.ஜ.க) முக்கிய பங்குவகித்த நெல்லி படுகொலை, மிகவும் வறிய அகதிகள் மற்றும் வங்கதேசத்திலிருந்து புலம்பெயர்ந்தவர்கள் உட்பட “சட்டவிரோத வெளிநாட்டவர்களை”, இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட வகுப்புவாத தூண்டுதலின் விளைவாக ஏற்பட்டதாகும்.

பிப்ரவரி 2, 1983 அன்று தொடங்கிய வகுப்புவாத படுகொலைகள் மேலும் அடுத்து வந்த இரண்டு வாரங்களுக்கு நீடித்தது. அது பிப்ரவரி 18 அன்று நெல்லியில் அவற்றின் கோரமான உச்சக்கட்டத்தை அடைந்தது. நெல்லி படுகொலை பற்றிப் பின்னர் அறியவந்திருப்பதன் மூலம் கொல்லப்பட்டவர்களின் அதிகாரபூர்வ மதிப்பீடு 2,191 ஆகும். அதிகாரபூர்வமற்ற மதிப்பீடுகளின்படி இறப்பு எண்ணிக்கை 10,000 யும் தாண்டியுள்ளன. வகுப்புவாத இரத்தக்களரியின் விளைவாக, மேலும் 300,000 முஸ்லீம், இந்து, கிறிஸ்தவ விவசாய மற்றும் கிராமப்புற உழைக்கும் குடும்பங்கள் உள்நாட்டிலேயே அகதிகளாக்கப்பட்டனர். இந்தத் துன்பவியலால் பாதிக்கப்பட்டவர்கள் சிதிலமடைந்த முகாம்களில் தங்க வைக்கப்பட்டதுடன், பலர் உணவு மற்றும் சுத்தமான தண்ணீர் பற்றாக்குறையால் மேலும் துன்பங்களை அனுபவிக்கத் தள்ளப்பட்டனர்.

தெற்காசியாவின் 1947 வகுப்புவாதப் பிரிவினை மற்றும் நெல்லிப் படுகொலை

1947ல் இந்திய துணைக்கண்டத்தை பெயரளவிற்கு மதச்சார்பற்ற இந்தியா என்றும் பாகிஸ்தானை “இஸ்லாமிய குடியரசு” என்றும் வகுப்புவாத முறையில் பிளவுபடுத்தியதன் இறுதி விளைவாகப் பார்ப்பதன் மூலம் மட்டுமே நெல்லியில் இடம்பெற்ற படுகொலை சம்பவத்தைப்  புரிந்து கொள்ளமுடியும். இருபதாம் நூற்றாண்டின் முதல் பாதியில், தெற்காசியா மாபெரும் வெகுஜன ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டத்தால் ஆடிப்போயிருந்தது. ஆனால், தொழிலாள வர்க்கம் மற்றும் விவசாயிகளின் மத்தியில் அதிகரித்து வந்த கிளர்ச்சியைக் கண்டு நடுங்கி, “மகாத்மா” காந்தி மற்றும் ஜவஹர்லால் நேருவின் முதலாளித்துவ இந்திய தேசிய காங்கிரஸ், அதன் சொந்த மதச்சார்பற்ற ஜனநாயக வேலைத்திட்டத்தை காட்டிக்கொடுத்ததுடன், இந்தியாவிலிருந்து வெளியேறும் பிரித்தானிய காலனித்துவ பிரபுக்கள் மற்றும் வலதுசாரி வகுப்புவாத முஸ்லீம் லீக்குடன் “அதிகார மாற்றத்திற்காகவும்” மற்றும் வகுப்புவாத ரீதியாக வரையறுக்கப்பட்ட இரண்டு அரசுகளை உருவாக்குவதற்காகவும் ஒரு உடன்படிக்கையை  வேகமாக முன்னெடுத்தது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் என்ற இரட்டை அரசுகள் 1947 ஆகஸ்ட் 14 மற்றும் 15 இல் அதிகார பூர்வமாகப் உருவாக்கப்பட்டபோதும் கூட, முஸ்லீம் லீக், காங்கிரஸ், இந்து மகாசபை மற்றும் சீக்கிய அகாலி தள அரசியல்வாதிகளால் தூண்டிவிடப்பட்ட மிகப்பெரும் வகுப்புவாத வன்முறையால் மில்லியன் கணக்கான மக்கள் தங்களை தாங்களே வேரோடு பிடுங்கி எறிவதற்கு நிர்பந்திக்கப்பட்டனர். முஸ்லீம்கள் வட இந்தியாவை விட்டு பாகிஸ்தானுக்கும், இந்துக்களும் சீக்கியர்களும் பாக்கிஸ்தானை விட்டு இந்தியாவுக்கும் உயிர்தப்பி ஓடினர்.

பிரிவினை என்பது பொருளாதார மற்றும் வரலாற்று தர்க்கத்தை மீறி, பல்வேறு இன-மொழி குழுக்களைப் பிளவுபடுத்திய ஒரு வரலாற்றுக் குற்றமாகும். இன்று தெற்காசிய மக்களை ஓர் அணுஆயுத பேரழிவால் மனிதப் படுகொலையைக் கொண்டு அச்சுறுத்துகின்ற ஒரு பிற்போக்குத்தனமான புவிசார் அரசியல் போட்டிக்கு வழிவகுத்திருக்கிறது. அத்துடன் உலக மக்கள்தொகையில் கால் பகுதியினரின் தாயகமாக உள்ள ஒரு பிராந்தியத்தின் மீது ஏகாதிபத்தியம் அதன் மேலாதிக்கத்தைத் தக்க வைத்துக்கொள்வதற்கான ஒரு வழிமுறையாகவும் இது செயல்பட்டு வருகிறது.

பாகிஸ்தான் பிறப்பில் ஒரு கோரமான மற்றும் நிலைத்துநிற்க முடியாத அரசியல் அமைப்பாக உருவாக்கப்பட்டிருந்தது. நாட்டின் மேற்குப் பகுதியில் பஞ்சாபி ஆதிக்கம் செலுத்தும் உயரடுக்கு  மிகவும் வறிய வங்காள மக்கள் நிறைந்த கிழக்கு பாகிஸ்தானுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் அரசியல் மற்றும் பொருளாதார அதிகாரத்தை ஏகபோக உரிமையைக் கொண்டிருந்தது. அது 2,200 கிலோமீட்டர் (1,365 மைல்கள்) நீளத்துக்கு இந்திய நிலப்பரப்பிலிருந்து பிரிக்கப்பட்டது. பாகிஸ்தானின் அரசியல் நிறுவனங்களைச் சீர்திருத்துவதற்கான ஒரு கால் நூற்றாண்டு கால தோல்வியுற்ற முயற்சிகளுக்கும் பின்னர், அதிகரித்துவந்த மிருகத்தனமான ஒடுக்குமுறையையும் எதிர்கொண்ட பின்னர், கிழக்கு பாகிஸ்தானின் மக்கள் கிளர்ச்சி செய்தனர், இது 1971 இல் இரத்தக்களரி நிறைந்த உள்நாட்டுப் போருக்குப் பிறகு வங்கதேசம் என்ற நாடு உருவாவதற்கு வழிவகுத்தது.

சுதந்திரத்திற்குப் பின்னர், இந்தியாவை ஒரு இந்து ராஷ்டிரம் அல்லது இந்து அரசாக அறிவிக்க வேண்டும் என்று பாஜக அரசியல் முன்னோடிகளான இந்து மகாசபை, ஜனசங்கம் மற்றும் ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கம் (ஆர்எஸ்எஸ்) ஆகியவற்றின்  கோரிக்கைகளை காங்கிரஸ் கட்சி நிராகரித்தது. இந்தியப் பிரிவினையை அமுல்படுத்துவதில் இந்துத்துவ வலதுசாரிகளுடன் அவர்கள் உடந்தையாக இருந்ததைப்போலவே, பின்னர் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து இந்து வலதுசாரிகளுடன் ஒத்துழைத்தும், தன்னை மாற்றிக் கொண்டும் வந்தது. 1947க்குப் பிந்தைய தசாப்தங்களில் சமூக அதிருப்தி அதிகரித்திருந்த நிலையில், வெகுஜன மக்கள் எதிர்கொண்ட எரிந்துகொண்டிருந்த சமூக மற்றும் ஜனநாயக பிரச்சினைகள் எதையும் தீர்ப்பதற்கு சுதந்திரமான முதலாளித்துவ ஆட்சியின் தோல்வி வெளிப்பட்டதும், காங்கிரஸும் அதன் முதலாளித்துவ எஜமானர்களும் தொழிலாள வர்க்கத்திடமிருந்து வந்த எதிர்ப்புகளைத் திசைதிருப்புவதற்காக வகுப்புவாத “பிரித்தாளும்” அரசியலை அதிகளவில் கையாண்டனர்.

இந்த உள்ளடக்கத்திற்குள்ளாக, ஸ்டாலினிச கம்யூனிஸ்ட் கட்சிகள் தொழிலாள வர்க்கத்தை முதலாளித்துவ அமைப்புமுறையின் கட்சிகளுக்குள் அரசியல்ரீதியாக அடிபணியச் செய்திருந்த நிலைமைகளின் கீழ், 1980 முதல் பாஜகவில் ஒழுங்கமைக்கப்பட்ட இந்து மேலாதிக்கவாத வலதுசாரிகளுடன், பல்வேறுவகையான இன-பேரினவாத மற்றும் பிரத்தியேகவாத அரசியல் வடிவங்களும் வளர்ச்சியடைந்தன.

ஒரு கொடூரமான குற்றம்

இந்திய துணைக் கண்ட பிரிவினைக்குப் பிறகு நடந்த மிகப்பெரும் முஸ்லிம்கள் மீதான  படுகொலையாக நெல்லி படுகொலைகள் நடத்தப்பட்டிருக்கிறது. அசாமிய இன-பேரினவாதிகள், பாஜக தலைவர்கள் மற்றும் அதன் செயற்பாட்டாளர்கள் மற்றும் பாஜகவை நிறுவிய இந்து மேலாதிக்கவாத “கலாச்சார மறுமலர்ச்சி” அமைப்பான ஆர்எஸ்எஸ் ஆகியோரால் படுகொலைகள் தூண்டிவிடப்பட்டன. மேலும், ஆர்எஸ்எஸ், இன்றும் பாஜகவுக்குத் தலைமை உறுப்பினர்களை வழங்கும் முக்கிய அடித்தள அமைப்பாகவும் செயற்படுகிறது. 2002 குஜராத் முஸ்லிம் எதிர்ப்பு படுகொலையைத் தூண்டியதற்கும் அதனைக் கண்காணித்ததற்கும் பொறுப்பாக இருந்த நிலையில், குஜராத் முதலமைச்சராக பதவி வகித்த காலத்தில் தேசிய அளவில் முதன்முதலாக முக்கியத்துவம் பெற்ற நரேந்திர மோடி, இந்தியாவின் தற்போதைய பிரதமராகவும், இந்துத்துவாவின் வலிமையான வடிவத்தை முன்னெடுத்துள்ள ஒருவராகவும், ஆயுள் முழுவதும் ஆர்எஸ்எஸ் உறுப்பினராகவும் உள்ளார். 

நெல்லி படுகொலை சம்பவத்தின்போது, உள்ளூர் இந்து-அசாமிய கிராமவாசிகள் நாட்டுத் துப்பாக்கிகள் (கையால் தயாரிக்கப்பட்ட சாதாரண துப்பாக்கிகள்) மற்றும் கத்தி ஆயுதங்களுடன்  வங்காள-முஸ்லீம் மக்களின் கிராமங்களைச் சுற்றிவளைத்து தாக்கினர். அவர்கள் எதிரில் வந்த அனைவரையும் கண்மூடித்தனமாகக் கொன்றனர். உள்ளூர் அரசாங்கமும் போலீஸ் அதிகாரத்துவமும் இவ்வாறான படுகொலை நடக்கும் என்று முன்கூட்டியே எச்சரிக்கப்பட்டிருந்த போதிலும், அதைத் தடுத்து நிறுத்த அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்தப் படுகொலையில் தூண்டவிடப்பட்டவர்களில் வறிய நிலையில் வாழும் திவா (Tiwa) பழங்குடியின மக்களும் அடங்குவர். கடனின் காரணமாகவோ அல்லது நகரமயமாக்கலை எளிதாக்குவதற்காக அரசாங்கத்தால் கட்டாயப்படுத்தப்பட்டு விற்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டதாலோ இவர்கள் தங்கள் பாரம்பரிய நிலங்களில் பெரும்பகுதியை இழந்திருந்தனர். வங்காள முஸ்லீம் ஆண்கள் நான்கு இளம் திவா பெண்களைக் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக வதந்திகளைப் பரப்பியதன் மூலம் நெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராம மக்களுக்கு எதிராக அவர்கள் தூண்டிவிடப்பட்டனர். இரண்டாவதாக, முன்னாள் பழங்குடி குழுவான கோச் (Koch) இன உறுப்பினர்களும் இந்தப் படுகொலை சம்பவத்தில் பங்கு பெற்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் இந்து மதத்திற்கு மாற்றப்பட்டவர்கள். பல தசாப்தங்களாக, ஆர்எஸ்எஸ் மற்றும் இந்து வலதுசாரிகள் ஒட்டுமொத்த பல்வேறு பழங்குடியின மக்களை இந்து சாதிகளில் (castes) தங்கள் வகுப்புவாத செயற்பாட்டின் ஒரு பகுதியாக அவர்களைச் சேர்ப்பதில் கணிசமான சக்தியைச் செலவிட்டுள்ளனர்.

நெல்லி படுகொலை சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களில் அசாமில் பல தலைமுறைகளாக வாழ்ந்தவர்களும் அடங்குவர். மேலும், கண்மூடித்தனமான வகுப்புவாத சீற்றம் கட்டவிழ்த்து விடப்பட்டதால் சில முஸ்லிம் அல்லாத வங்காளிகளும் இதில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

வங்காளிகள் நீண்டகாலமாக அசாம் மாநிலத்தில் வாழ்ந்து வருகின்றனர் என்பதையும், இந்தியாவின் நான்காவது அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமும், அசாமின் மேற்கு அண்டை மாநிலமான மேற்கு வங்காளத்தின் மக்களைப் போலவே பங்களாதேஷ் மக்களும் அதே மொழியையும் கலாச்சாரத்தையும் பகிர்ந்து கொண்டிருக்கின்றனர் என்பதையும் இங்கு சிறப்பாக வலியுறுத்தவேண்டிய தேவையிருக்கிறது.

“வெளிநாட்டவர்-எதிர்ப்பு” போராட்டத்தில் இன-தேசிய பிரத்தியேகவாதமும் வகுப்புவாதமும்

அசாம் நீண்ட காலமாகப் பல்வேறு மொழிகளைப் பேசும் பல இனக்குழுக்களுக்கு தாயகமாக இருந்து வருகிறது. 1826 ஆம் ஆண்டில், முதல் ஆங்கிலேய-பர்மியப் போரில் பர்மா (மியான்மர்) தோற்ற பிறகு, ஆங்கிலேயர்கள் அசாமை பர்மாவிடமிருந்து கைப்பற்றினர்.

அந்த காலத்தில், அது வங்காள பிரெசிடென்சி (ராஜதானி) ஆட்சியில் சேர்க்கப்பட்டது. பின்னர் இது ஒரு மாகாணமாக மறுபெயரிடப்பட்டது. காலப்போக்கில், பிரித்தானிய காலனித்துவவாதிகள், கல்வியறிவு பெற்ற வங்காளிகளை, முக்கியமாக இந்துக்களை, உள்ளூர் அரசாங்க நிர்வாகத்தில் பணியமர்த்தினர். அசாமிய உயர்குடியினர் இந்த நிர்வாகப் பணிகளை விரும்பினர்.

பிரித்தானிய இந்தியா (இடது) மற்றும் நவீன இந்தியாவின் அரசியல் வரைபடம். பிரித்தானிய இந்தியப் பேரரசின் வரைபடத்தில் 500 க்கும் மேற்பட்ட காலனித்துவ சார்பு “மன்னர்கள் அரசு அல்லது சமஸ்தானம்” பெரும்பாலானவை இல்லை. [Photo by Irrationality of Internal and External Boundaries (1900 to Present) [Courtesy: Gandhi-Luthuli Documentation Centre]

1835 ஆம் ஆண்டு தொடங்கி பிரித்தானிய தோட்ட உரிமையாளர்களால் அசாமின் மேல் பகுதியில் விரிந்த தேயிலைத் தோட்டங்களை நிறுவியதைத் தொடர்ந்து, மத்திய மாகாணங்கள், ஐக்கிய மாகாணங்கள் (உத்தரப் பிரதேசம்) மற்றும் மெட்ராஸ் பிரெசிடென்சி (ராஜதானி) ஆட்சி ஆகியவற்றில் அதிக மக்கள் தொகை கொண்ட பகுதிகளைச் சேர்ந்த ஒப்பந்தத் தொழிலாளர்கள் இந்தத் தேயிலைத் தோட்டங்களில் உண்மையில் அடிமைகளாக வேலை செய்வதற்காக அசாமுக்கு குடிபெயர தீவிரமாக ஊக்குவிக்கப்பட்டனர்.

19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அசாமின் மேல் பகுதியில் நிலக்கரி மற்றும் பெட்ரோலியம் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பிரித்தானிய காலனித்துவவாதிகள் வங்காளம், பீகார், உத்தரபிரதேசம் மற்றும் வேறு சில மாநிலங்களில் இருந்தும் அதிக தொழிலாளர்களுக்கு ரயில் கட்டணங்களை வழங்குவதன் மூலம் குடியேற ஊக்குவித்தனர்.

இதன் விளைவாக, அசாம் இறுதியில் மிகவும் மாறுபட்ட இன மற்றும் கலாச்சார குழுக்களின் தாயகமாக மாறியது. இந்த நேரத்தில் சமவெளி மற்றும் காடுகளில் வாழ்ந்த பழங்குடியின மக்களுக்கும், தேயிலைத் தோட்டங்களில் பணியமர்த்தப்பட்ட புலம்பெயர்ந்த ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கும் இடையே கடுமையான மோதல்கள் எதுவும் நடைபெறவில்லை. உண்மையில், அவர்களில் பெரும்பாலோர் அசாமிய மொழியையும் கலாச்சாரத்தையும் கூட ஏற்றுக்கொண்டனர்.

20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், “அசாமிய அடையாளம்” என்ற இயக்கம் உருவாகத் தொடங்கியது. கல்வி பெற்ற வங்காள இந்துக்கள் அரசு நிர்வாகத்தில் மேலாதிக்கம் செலுத்தியதால், அசாமியர்களுக்கு பொருளாதார வாய்ப்புகள் குறைவாகவும், அரசியல் புறக்கணிப்பு ஏற்பட்டதாகவும் அந்த இயக்கம் வங்காளிகளை குற்றம் சாட்டத் தொடங்கியது.

அந்தக் காலத்திலும், பிரிவினைக்குப் பிறகும், அசாமிய உயரடுக்கு தங்களுடைய வங்காள-இந்து மேல்தட்டு  போட்டியாளர்களுக்கு எதிராக, வங்காள முஸ்லீம் விவசாயிகளின் ஆதரவைப் பெறுவதில் சில வெற்றிகளைப் பெற்றனர்

1970களிலும் இன்றும், அசாம் நடுத்தர வர்க்க மக்களுக்குப் பொருளாதார வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே இருந்தன. ஏனெனில் மாநிலத்தின் பொருளாதார பின்தங்கிய நிலை, காலனித்துவ ஆட்சியின் மரபு மற்றும் இந்தியாவின் தாமதமான முதலாளித்துவ வளர்ச்சி ஆகியவை இதற்குக் காரணமாக இருந்தன.  இயற்கை வளங்களில் செழிப்பாக இருந்தபோதிலும், இந்திய அரசாங்கம் எந்தவொரு நிலையான தொழில்துறை வளர்ச்சியையும் இங்கு மேற்கொள்ளவில்லை. இதனால் மாநிலம் வறுமை மற்றும் பற்றாக்குறையில் சிக்கித் தவிக்கிறது. சமகால அசாமில், 4.4 மில்லியன் மக்கள் மட்டுமே நகர்ப்புறங்களில் வசிக்கின்றனர். அதே நேரத்தில் கிராமப்புற மக்கள் தொகை 27 மில்லியனாக இருக்கிறது.

பாஜக மற்றும் “அசாம் இயக்கம்”

பாகிஸ்தானிய இராணுவ பயங்கரவாதத்திலிருந்து தப்பியோடி வந்த வங்காள அகதிகளின் வருகை மற்றும் வங்கதேசத்தில் நடந்த அடுத்தடுத்த எழுச்சிகளுடன், அனைத்து அசாம் மாணவர் சங்கம் (AASU) மற்றும் அனைத்து அசாம் மக்கள் போராட்ட சங்கம் (AAGSP) தலைமையிலான “அசாம் இயக்கம்” அதை தங்கள் பிரச்சாரத்தின் முக்கிய இலக்காகக் கொண்டன. இந்த “சட்டவிரோத வெளிநாட்டவர்கள்” வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டு வங்கதேசத்துக்கு நாடு கடத்த வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்தனர்.

வங்கதேசத்தின் மக்கள் தொகை பெரும்பான்மை முஸ்லிம்களாக இருந்தபோதிலும், பாகிஸ்தானிய இராணுவத்தின் கொடூரங்களைத் தவிர்க்க இந்தியாவிற்கு தப்பிச் சென்ற அகதிகளில் பெரும்பாலானோர் இந்துக்கள் ஆவார்கள். காரணம், பாகிஸ்தானிய அதிகாரிகள் இந்துக்களை குறிப்பாக இலக்காகக் கொண்டனர். இதன் மூலம், வங்கதேசத்தின் விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக முஸ்லிம் வகுப்புவாத பிற்போக்குத்தன உணர்வுகளைத் தூண்டி, ஜமாத்-இ-இஸ்லாமி உட்பட இஸ்லாமிய அடிப்படைவாத சக்திகளை அவர்கள் இயக்க முயன்றனர்.

1983 ஆம் ஆண்டின் முற்பகுதியில் பரவலான சாலை மற்றும் இரயில் மறியல் போராட்டங்களின் விளைவாக உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டபோது “அசாம் இயக்கம்” அதன் போராட்டம் வலுவாக உணர்ச்சியூட்டப்பட்டதால்  உச்சத்தை எட்டியது. 1983 பிப்ரவரி 14  முதல் 21 வரை மாநில சட்டமன்றத் தேர்தல்களை நடத்த இந்திரா காந்தியின் தலைமையின் கீழ் மேற்கொள்ளப்பட்ட காங்கிரஸ் கட்சியின் தீர்மானத்தை எதிர்ப்பதே இந்தப் போராட்டங்களின் நோக்கமாக இருந்தது.

ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கமும் (ஆர்எஸ்எஸ்) மற்றும் பாஜக வும் கூட “வெளிநாட்டவர்களுக்கு” எதிராக அனைத்து அசாம் மாணவர் சங்கம் (AASU) மற்றும் அனைத்து அசாம் மக்கள் போராட்ட சங்கம் (AAGSP) அமைப்புகளால் ஏற்கனவே உருவாக்கப்பட்ட நச்சுத்தனமான சூழலில், குறிப்பாக ஒரு முஸ்லீம்-விரோத கிளர்ச்சியை நடத்தின. ஆர்எஸ்எஸ் அனைத்து அசாம் மாணவர் சங்கத்துக்குள் (AASU) ஊடுருவியது, இது பின்னர் அந்த அமைப்பிற்குள் பிளவுக்கு வழிவகுத்தது.

இன-பேரினவாத அசாமிய கிளர்ச்சிக்கு மிகப்பெருமளவில் முஸ்லீம்-விரோத வகுப்புவாத தன்மையை அதிகரிப்பதில் இந்து வலதுசாரிகளின் பங்களிப்புகள் மிகத் தீவிரமாக இருந்தன.

இந்த நேரத்தில் தயாரிக்கப்பட்ட ஒரு அரசாங்க மதிப்பீட்டு அறிக்கையானது, “ஆர்எஸ்எஸ் கூறுகளின் தொடர்பும் மற்றும் பல இடங்களில் கிளர்ச்சி ஆகியவையும் தேர்தலுக்குச் சற்று முன்னர் அல்லது தேர்தலுக்குப் பிறகு உடனடியாகத் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடிய பகுதிகளில் அதிக வகுப்புவாத கலவரங்கள் ஏற்படுவதற்கான வலுவான சாத்தியக்கூறுகளை கொண்டிருந்தன” என்று குறிப்பிட்டுள்ளது.

2000 ஆம் ஆண்டில் பில் கிளிண்டனுடன் பாஜக தலைவர் வாஜ்பாய்

அந்த நேரத்தில் பாஜக தலைவராகவும் 1996ல் சிறிது காலமும், 1998-2004 வரை இந்தியாவின் பிரதம மந்திரியாகவும் இருந்த அடல் பிகாரி வாஜ்பாயி, நெல்லி படுகொலை சம்பவத்திற்கு சற்று முன்னர் நடந்த ஒரு பிரச்சாரக் கூட்டத்தில் ஒரு கொலைகளைச் செய்யக்கூடிய வன்முறையைத் தூண்டும் உரையை நிகழ்த்தியுள்ளார். பின்னர் 1990கள் மற்றும் 2000 களில் இந்திய பெருநிறுவன ஊடகங்களால் ஒரு “மிதவாதி” ஒரு “தாராளவாதி” என்று அதிகமாகப் புகழப்பட்ட இந்த பரம-பிற்போக்குவாதி, அந்த உரையின் போது பின்வருமாறு கூறியுள்ளார்:

“வெளிநாட்டவர்கள் இங்கு வந்துள்ளனர், அரசாங்கம் எதுவும் செய்யவில்லை. அவர்கள் பஞ்சாபுக்குள் வந்திருந்தால், மக்கள் அவர்களைத் துண்டு துண்டாக வெட்டி எறிந்திருப்பார்கள். [அழுத்தம் சேர்க்கப்பட்டது]

பின்னர் நடத்தப்பட்ட பல்வேறு பத்திரிகையாளர்களின் அடுத்தடுத்த புலனாய்வுகளின்படி, பாஜக, ஆர்எஸ்எஸ் மற்றும் அனைத்து அசாம் மாணவர் சங்கம் (AASU) ஆகியவற்றுக்கு இடையிலான ஒரு கூட்டுச் சதி நெல்லி படுகொலை சம்பவத்தைத் தூண்டுவதில் முக்கிய பங்குவகித்தது என்பதை வெளிப்படுத்தியுள்ளன.

குறிப்பாக, இந்தக் காலகட்டத்திற்குப் பிறகுதான், முஸ்லிம்-விரோத வகுப்புவாதத்தின் விதைகள் இந்திய முதலாளித்துவ அரசியலுக்குள் விதைக்கப்படத் தொடங்கின.

மிகவும் பிரபலமான 1984 சீக்கிய-எதிர்ப்புக் கலவரங்கள், 1992 இல் பாபர் மசூதி இடிப்பு, மற்றும் 2002 குஜராத் படுகொலைகள் உட்பட, இந்தியாவில் நடந்த ஏராளமான வகுப்புவாத கொடூரங்கள் நடந்ததைப் போலவே, நெல்லிப் படுகொலை சம்பவத்தைத் தூண்டி அதற்கு ஏற்பாடு செய்ததற்கு முக்கியமாகப் பொறுப்பான எவரும் இதுவரை அவர்களின் குற்றங்களுக்காக தண்டிக்கப்படவில்லை.

1970களின் நடுப்பகுதி வரை இந்திய அரசியலில் ஆதிக்கம் செலுத்திய காங்கிரஸ் கட்சி, அதன் பின்னர் நாடு முழுவதும் மற்றும் அசாமிலும் மெதுவாக அரசியல் வீழ்ச்சி அடையத் தொடங்கியது. இது ஒரு முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது; காரணம், 1975 முதல் 1977 வரை பிரதமர் இந்திரா காந்தி, தொழிலாளர், விவசாயிகள் மற்றும் மாணவர்களின் எதிர்ப்பால் ஏற்பட்ட எழுச்சிக்குப் பதிலாக, சர்வாதிகார “அவசரகால ஆட்சி”யை அமல்படுத்தினார்

1985 அசாம் ஒப்பந்தம்

1983 அசாம் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. ஆனால், தேர்தலைப் புறக்கணித்த அனைத்து அசாம் மாணவர் சங்கம் (AASU) மற்றும் அனைத்து அசாம் மக்கள் போராட்ட சங்கம் (AAGSP) ஆகியவை அரசியல் ரீதியாக வலுப்பெற்றன.

அதனைத் தொடர்ந்து, 1984 அக்டோபரில் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்ட பின்னர் அப்பதவிக்கு வந்த பிரதமர் ராஜீவ் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் தேசிய அரசாங்கம், அசாம் அரசாங்கமான, அனைத்து அசாம் மாணவர் சங்கம் (AASU) மற்றும்  அனைத்து அசாம் மக்கள் போராட்ட சங்கம் (AAGSP) ஆகியவற்றுடன் பிற்போக்குத்தனமான “அசாம் உடன்படிக்கையில்” கையெழுத்திட்டது.

இந்த ஒப்பந்தத்தின் கீழ், அசாமிய மாணவர் சங்கம் (AASU) மற்றும் அனைத்து அசாம் மக்கள் போராட்ட சங்கம் (AAGSP) ஆகியவற்றின் இனவெறி  பிரச்சாரத்திற்கு இணங்கி, இந்திய அரசாங்கமானது 1971 மார்ச் 24-க்கு பிறகு இந்தியாவுக்குள் வந்த அனைத்து அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோர்களை உடனடியாக அடையாளம் காணவும், நாடு கடத்தவும் ஒப்புக் கொண்டது. இந்த தேதியானது வங்கதேசம் தனது சுதந்திரத்தை அறிவிப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாகும். ஜனவரி 1, 1966 (உட்பட) முதல் மார்ச் 24, 1971 (நள்ளிரவு வரை) வரை அசாமிற்கு வந்த அனைத்து நபர்களின் பெயர்கள் 10 ஆண்டுகளுக்கு (1995 வரை) தேர்தல் பட்டியலில் இருந்து நீக்கப்படும், ஆனால் அவர்கள் குடியுரிமை உரிமைகளை வைத்திருக்கலாம் என்று இந்த ஒப்பந்தம் குறிப்பிடுகிறது.

அசாம் ஒப்பந்தத்தின் கீழ், “பொருத்தமான இடங்களில் சுவர்கள், முட்கம்பி வேலிகள் மற்றும் பிற தடைகள் போன்ற பௌதீக தடைகளை அமைப்பதன் மூலம் “ஊடுருவலுக்கு” எதிராக சர்வதேச எல்லையைப் பாதுகாக்க இந்திய அரசாங்கம் ஒப்புக்கொண்டது.

1985 டிசம்பரில், அதாவது ஒப்பந்தம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நான்கு மாதங்களுக்குப் பிறகு, புதிய மாநிலத் தேர்தல்கள் நடத்தப்பட்டு, “அசாம் இயக்கத்தின்” தலைவர்களால் உருவாக்கப்பட்ட அசாம் கண பரிஷத் (அசாம் மக்கள் கவுன்சில்) முன்னாள் அனைத்து அசாம் மாணவர் சங்கத்தின் (AASU) தலைவரான பிரபுல்ல குமார் மகந்தாவை முதலமைச்சராகக் கொண்டு ஆட்சிக்கு வந்தது.

ஸ்டாலினிச இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் (சிபிஎம்) மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) ஆகியவை பேரினவாத மற்றும் பிற்போக்குத்தனமான அசாம் உடன்படிக்கைக்கு தங்கள் முழு மனதுடன் ஆதரவை வழங்கின.

அசாம் ஒப்பந்தத்தைத் தொடர்ந்து 2003 இல் வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட மோசமான தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) கொண்டுவரப்பட்டது. இதன் கீழ், இந்தியாவில் உள்ள ஒவ்வொரு நபரும் தங்கள் குடியுரிமையை “நிரூபிக்க” வேண்டும். தவறினால் அவர்கள் “சட்டவிரோத குடியேறியவர்களாக” கருதப்படுவார்கள். 2013-14 ஆம் ஆண்டில், அசாமின் அப்போதைய காங்கிரஸ் கட்சி தலைமையிலான மாநில அரசாங்கம் இதுபோன்ற பதிவேட்டைத் தொடங்கிய இந்தியாவின் முதல் மற்றும் ஒரே அரசாங்கமாக மாறியது, ஆனால் பாஜக, “சட்டவிரோத” முஸ்லீம் புலம்பெயர்ந்தோருக்கு எதிராக நடந்து வரும் போராட்டத்தின் ஒரு பகுதியாக, தேசிய அளவில் அவ்வாறு செய்ய பலமுறை உறுதியளித்துள்ளது.

கடந்த நான்கு ஆண்டுகளாக, 2019 டிசம்பரில் மோடி அரசாங்கத்தால் வெளிப்படையான முஸ்லீம் விரோத சட்டமாக இது ஏற்றுக்கொள்ளப்பட்டு, குடியுரிமை திருத்தச் சட்டத்துடன் (CAA) பிணைக்கப்பட்டுள்ளது. இது முதல் முறையாக மதத்தை இந்திய குடியுரிமையை வழங்குவதற்கான அளவுகோலாக மாற்றியது.  குடியுரிமை திருத்தச் சட்டத்தின் (CAA) கீழ், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் இருந்து குடியேறிய முஸ்லிம்களைத் தவிர, 2015 க்கு முன்னர் இந்தியாவுக்குள் நுழைந்த அனைத்து புலம்பெயர்ந்தோருக்கும் குடியுரிமை வழங்கப்படவிருக்கிறது.

இதற்கிடையில், அசாமில், புது டெல்லியுடன் இணைந்து செயல்படும் மாநிலத்தின் ஆளும் தற்போதைய பாஜக அரசாங்கம் தேசிய குடிமக்கள் பதிவேட்டினை (NRC) முழுமையாக செயல்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் விளைவாகச் சுமார் 2 மில்லியன் மக்கள் நாடற்றவர்களாக ஆக்கப்பட்டுள்ளனர். இதில் மில்லியன் கணக்கானவர்கள் அசாமில் அல்லது பிரித்தானிய காலனித்துவ இந்தியாவிலேயே பிறந்திருந்தாலும் கூடத் தங்கள் குடியுரிமையை “நிரூபிக்க” அவர்களால் முடியவில்லை. அவர்களில் பெரும்பான்மையானவர்கள் வங்காள மொழி பேசும் முஸ்லிம்கள் மற்றும் வாழ்வாதாரத்திற்காக வறிய விவசாயத் தொழிலாளர்களாக உள்ளனர். மோடி அரசாங்கம் இந்த நிராதரவான பாதிக்கப்பட்டவர்களை புதிதாக கட்டப்பட்ட பல தடுப்பு முகாம்களில் தூக்கி எறிந்துள்ளது. இந்த முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சுகாதார வசதியின்மையால் அல்லது தற்கொலை காரணமாக இறந்துள்ளதாக கூறப்படுகிறது.

இருப்பினும், போதுமான வங்காள மொழி பேசுபவர்கள் வெளியேற்றப்படாமலிருப்பதாக அசாமிய இன-பேரினவாதிகளிடமிருந்து புகார்கள் வந்துள்ளன.

நெல்லி படுகொலை சம்பவமும் அசாமில் நடந்து வரும் இன-வகுப்புவாத மோதல்களும், வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் இப்போது 10 மாதங்களாக நடந்து வரும் இரத்தக்களரியைப் போலவே, அங்கு 200 க்கும் அதிகமான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் பத்தாயிரக் கணக்கானவர்கள் அவர்களின் வீடுகளில் இருந்து விரட்டப்பட்டுள்ளனர். இது பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் “பிரித்தாளும்” கொள்கைகளை நிலைநிறுத்தி மேலும் நிறுவனமயப்படுத்தி வந்துள்ள இந்திய முதலாளித்துவத்தின் பிற்போக்குத்தனமான தன்மைக்கு சான்றாக உள்ளன.

இந்தியாவை ஒரு இந்து மேலாதிக்கவாத அரசாக மாற்றுவதற்கான பாஜக வின் உந்துதல் இதில் முழுமையாக வெளிப்பட்டிருக்கிறது. கடந்த ஜனவரியில் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ஒரு இந்து தேசியவாத கோயிலை மோடி திறந்து வைத்த போது, இந்திய பெருநிறுவனங்களால் வெளிப்படையாக ஆசீர்வதிக்கப்பட்ட இந்த அரசு, அனைத்து “மதச்சார்பற்ற” எதிர்க்கட்சிகளாலும் கோழைத்தனமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இந்திய தொழிலாள வர்க்கமானது தெற்காசியாவில் உள்ள அனைத்து உழைக்கும் மக்களின் ஐக்கியப்பட்ட இயக்கத்தை அபிவிருத்தி செய்வதன் மூலம்தான் அதன் அடிப்படை ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளைப் பாதுகாக்க முடியும். ஆளும் வர்க்கத்தால் தூண்டிவிடப்படும் அனைத்து தேசிய, வகுப்புவாத, இன-மொழி மற்றும் சாதி பிளவுகளுக்கு எதிராகவுள்ள, இது போன்றவொரு இயக்கம்தான் முதலாளித்துவத்தை தூக்கிவீசி தெற்காசிய ஐக்கிய சோசலிச அரசுகளை நிறுவுவதை அதன் மூலோபாய இலக்காகக் கொண்டிருக்கும். அது ஏகாதிபத்தியத்தையும் மற்றும் முதலாளித்துவம் வரலாற்றுரீதியில் வேரூன்றியுள்ள போட்டி தேசிய அரசுகளின் காலாவதியாகிவிட்ட அமைப்புமுறையையும் இல்லாதொழிக்கும் நோக்கத்துடன் உலகத் தொழிலாள வர்க்கத்தை நோக்கியதாக இருக்க வேண்டும்.

Loading