அதி-வலது மோடி அரசாங்கத்தின் பாகிஸ்தான் மீதான ஆத்திரமூட்டும் தாக்குதலுக்கு இந்தியாவின் எதிர்க்கட்சிகள் ஆதரவளிக்கின்றன

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் ஆத்திரமூட்டும், சட்டவிரோத இராணுவ பிரச்சாரமான 'ஆபரேஷன் சிந்தூர்', தெற்காசியாவின் பகைமை அணு ஆயுத நாடுகளை முழுமையான போரின் விளிம்பிற்கே கொண்டு வந்துள்ளது.

அமெரிக்க ஏகாதிபத்தியத்துடனான இந்தியாவின் சீன-விரோத போர் கூட்டணியால் துணிச்சலடைந்துள்ள, அதி-வலது பாரதிய ஜனதா கட்சி (பாஜக) அரசாங்கம், இந்திய மற்றும் பாகிஸ்தான் முதலாளித்துவ வர்க்கங்களுக்கு இடையிலான பிற்போக்கு மூலோபாய மோதலில் விளையாட்டின் 'விதிகளை மாற்ற' முயற்சிக்கின்றது.

பஞ்சாப்பிற்குள் இந்தியத் தாக்குதல்கள் மற்றும் எல்லை தாண்டிய பாரிய ஆட்டிலறித் தாக்குதல்கள் உட்பட நான்கு நாட்கள் நடந்த வான்வழிப் போரின் பின்னர், கடந்த சனிக்கிழமை ஒரு போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. ஆனால் இரு தரப்பினரும் தொடர்ந்து போர் மிரட்டல்களை பரிமாறிக் கொள்ளும் அதே நேரம், போரில் தங்கள் எதிரியை விட சிறப்பாக செயல்பட்டதாக பெருமை பேசிக் கொள்வதுடன் மற்றும் ஆக்ரோஷமான வகுப்புவாதத்தால் தூண்டப்பட்ட தேசியவாதத்தைக் கிளறிவிடுகிறார்கள்.

செவ்வாய்க்கிழமை, 13 மே 2025 அன்று, இந்தியாவின் அக்னூர் செக்டரில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டில் உள்ள கோட்மைரா கிராமத்திற்குத் திரும்பிய ஒருவர் தனது சேதமடைந்த வீட்டை பார்வையிடுகிறார். [AP Photo/Channi Anand]

திங்கட்கிழமை மாலை, நாட்டு மக்களுக்கு உரையாற்றிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா, ஆபரேஷன் சிந்தூரை 'தற்காலிகமாக மட்டுமே நிறுத்தி' வைத்துள்ளது என்று வலியுறுத்தினார். போர் நிறுத்தத்தைத் தொடர்ந்து, விரைவில் மூன்றாவது நாடொன்றில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும் என்ற அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோவின் கூற்றுகளை மோடியும் ஏனைய இந்திய உயர் அதிகாரிகளும் நிராகரித்துள்ளனர். சர்ச்சைக்குரிய காஷ்மீரில் ஏப்ரல் 22 அன்று நடந்த கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலுக்கு ஒரு துளி ஆதாரத்தையும் வழங்காமல் பாகிஸ்தானைக் குற்றம் சாட்டிய பின்னர், இந்தியா எடுத்த அனைத்து 'பதிலடி' நடவடிக்கைகளும் எதிர்வரும் காலத்திற்கும் நடைமுறையில் இருக்கும் என்று புது தில்லி வலியுறுத்துகிறது. இவற்றில் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் இந்தியா பங்கேற்பதை நிறுத்தி வைத்ததும் அடங்கும். இது தண்ணீர் பற்றாக்குறையால் அவதிப்படும் பாகிஸ்தான், அதன் விவசாயத்தில் 80 சதவீதத்திற்கு நீர்ப்பாசனம் செய்யவும் மற்றும் அதன் மின்சார உற்பத்தியில் பெரும்பகுதிக்கும், மேலும்

தண்ணீரைப் பெற முடியாதபடி அச்சுறுத்துகிறது.

எதிர்காலத்தில் நடைபெறும் எந்தவொரு பேச்சுவார்த்தையும், பயங்கரவாதத்திற்கு பாகிஸ்தான் ஆதரவு கொடுப்பது மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள ஆசாத் காஷ்மீர் உட்பட சர்ச்சைக்குரிய காஷ்மீர் முழுவதும் புதுதில்லியின் இறையாண்மைக்கான உரிமைகோரல் தொடர்பான இந்தியாவின் கோரிக்கைகள் பற்றியதாக மட்டுமே இருக்கும் என்று, மோடி திங்கட்கிழமை தேசிய அளவில் ஒளிபரப்பான தனது உரையில் உறுதியளித்தார்.

ஒரு பேரழிவு தரும் அணு ஆயுத மோதலாக மாறக்கூடிய ஒரு முழுமையான போர் அச்சுறுத்தல் நிலைமையிலும், இந்தியாவின் அனைத்து எதிர்க்கட்சிகளும் 'தேசத்தைப் பாதுகாத்தல்' என்ற பெயரில் மோடி தலைமையிலான பாஜக அரசாங்கத்தின் பின்னால் அணிதிரண்டுள்ளன. பாகிஸ்தானுக்கு எதிரான அதன் மீலேச்சத்தனமான நிலைப்பாட்டை ஆதரிக்கும் அவை, இந்திய இராணுவத்தின் வலிமையை தூக்கிப்பிடிப்பதில் அதனுடன் அணிசேர்ந்துள்ளன. இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பிற்போக்கு மூலோபாய மோதலும், இந்திய கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரில் வெகுஜன அதிருப்தியும், இஸ்லாமாபாத்தின் சூழ்ச்சிகள் மற்றும் தீய செயல்களால் மட்டுமே ஏற்படுகின்றன என்ற புதுதில்லியின் கட்டுக் கதையை அவை அனைத்தும் ஊக்குவிக்கின்றன.

சமீப காலம் வரை முதலாளித்துவ வர்க்கத்தின் விருப்பமான தேசிய அரசாங்கக் கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சி, மோடியை வலதுபுறத்தில் இருந்து தாக்கி வருகிறது. மே 10 போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதில் அமெரிக்க தலையீடு மிக முக்கியமானது என்று பெருமையாகக் கூறிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ரூபியோவின் கருத்துகளை சுட்டிக்காட்டிய எதிர்க் கட்சிகள், போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதன் மூலம் பாஜக அரசாங்கம் அமெரிக்க அழுத்தத்திற்கு அடிபணிந்ததாக குற்றம் சாட்டியுள்ளதுடன், இரு நாடுகளும் இணங்கவில்லை என்றால் அவற்றுடனான வர்த்தகத்தை நிறுத்தி வைப்பதாக வாஷிங்டன் அச்சுறுத்தியதாகவும் கூறுகின்றன.

ஸ்ராலினிச நாடாளுமன்றக் கட்சிகள், குறிப்பாக ஒரு விஷமத்தனமான வகிபாகத்தை ஆற்றுகின்றன. அவர்கள் இந்து மேலாதிக்க பாஜக மற்றும் மோடி அரசாங்கத்தினதும் கடுமையான எதிர்ப்பாளர்களாக கூறிக் கொள்கிறனர். இந்து அதி-வலதுசாரிகளை எதிர்த்துப் போராடுதல் என்ற பெயரில், அவர்கள் பல தசாப்தங்களாக வர்க்கப் போராட்டத்தை அடக்கி, போர்க்குணமிக்க தொழிலாளர்களையும் சோசலிச எண்ணம் கொண்ட இளைஞர்களையும் காங்கிரஸ் கட்சிக்கும், வலதுசாரி இன-பிராந்தியவாத மற்றும் சாதி-வாதக் கட்சிகளுக்கும் பின்னால் கட்டிவைத்து வருகின்றனர்.

மேலும், அவர்கள் அனைவரும் இஸ்லாமாபாத்தை 'ஆக்கிரமிப்பாளர்' என்று முத்திரை குத்துவதில் அரசாங்கத்திற்கு தங்கள் ஆதரவை வழங்கியுள்ளனர். பாகிஸ்தான் மீது ஏவுகணைகள் மற்றும் பீரங்கி குண்டுமழை பொழிவதில் இராணுவத்தின் 'தொழில்திறைமைக்காக' இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அல்லது சிபிஎம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் (சிபிஐ) அதைப் பாராட்டின.

கடந்த மூன்று வாரங்களாக மோடி அரசாங்கம் தூண்டிவிட்ட போர் நெருக்கடி முழுவதும் பாகிஸ்தானை விட இந்தியாவின் முன்னுரிமையை வலியுறுத்துவதிலும், உள்நாட்டில் சர்வாதிகாரத்தையும் வகுப்புவாத பிற்போக்கையும் ஊக்குவிப்பதிலும், எதிர்க்கட்சிகள் அதற்கு ஆதரவளித்துள்ளன.

உண்மையில், எதிர்க்கட்சிகளை 'தேச விரோதிகள்' என்றும் பாகிஸ்தான் மற்றும் சீனாவை சமாதானப்படுத்துபவர்கள் என்றும் பொதுவாக முத்திரை குத்தும் பாஜக, சமீபத்திய நாட்களில் அதன் உறுதியான ஆதரவிற்காக மீண்டும் மீண்டும் எதிர்க் கட்சியை பாராட்டியுள்ளது.

ஏப்ரல் 22 அன்று நடந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் பொறுப்பேற்க வேண்டும் என்று உடனடியாக அறிவிப்பதில் காங்கிரஸ் மற்றும் அதன் இந்தியா (இந்திய தேசிய மேம்பாடு உள்ளடக்கிய கூட்டணி-INDIA) கூட்டணியின் பங்காளிகள் அனைவரும் அரசாங்கத்தின் முன்மாதிரியைப் பின்பற்றினர். தாக்குதல் நடந்த 24 மணி நேரத்திற்குள் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் இந்தியாவின் பங்கேற்பை நிறுத்தி வைப்பது உட்பட, அரசாங்கம் அறிவித்த ஆத்திரமூட்டும் 'பழிவாங்கும்' நடவடிக்கைகளை அனைவரும் ஆதரித்தனர். பாகிஸ்தானுடன் இரண்டு அறிவிக்கப்பட்ட போர்கள், பல அறிவிக்கப்படாத போர்கள் மற்றும் ஏராளமான எல்லை மோதல்கள் நடந்த போதிலும், 65 ஆண்டுகளில் தில்லி இதற்கு முன்பு சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் இருந்து விலகி இருந்ததில்லை. இதேபோல், பயங்கரவாதத்தை ஒடுக்குதல் என்ற பெயரில், வலைவீசித் தேடுதல்கள், பெருமளவிலான கைதுகள், வீடுகளை இடிப்பது மற்றும் பிற கூட்டுத் தண்டனைகள் உட்பட அரசாங்கமும் பாதுகாப்புப் படைகளும் இந்தியக் கட்டுப்பாட்டில் உள்ள ஜம்மு-காஷ்மீரில் நடத்தி வரும் அடக்குமுறை பிரச்சாரத்தை வெளிப்படையாக ஆதரித்துள்ளனர் அல்லது மௌனமாக இருந்து வந்துள்ளனர்.

மற்றும், எதிர்க்கட்சிகள் அனைத்தும் 'ஆபரேஷன் சிந்தூரைப்' பாராட்டியுள்ளன. மே 6-7 இரவு இந்திய ஏவுகணைகள் பாகிஸ்தானின் பஞ்சாபி மையப்பகுதி உட்பட பாகிஸ்தானுக்குள் உள்ள ஒன்பது நகரங்கள் மற்றும் கிராமங்களில் உள்ள இலக்குகளைத் தாக்கியதாக அரசாங்கம் அறிவித்த உடனேயே காங்கிரஸ் கட்சியின் செயற்குழு அதன் 'முழு ஆதரவையும்' அறிவித்தது. காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், 'எங்கள் ஆயுதப் படைகளைப் பற்றி நாங்கள் பெருமைப்படுகிறோம். ஜெய் ஹிந்த்! (இந்தியாவுக்கு வெற்றி)' என்று பதிவிட்டுள்ளார்.

ஒன்றன்பின் ஒன்றாக எதிர்க்கட்சித் தலைவர்களால் இதேபோன்ற கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டதுடன், அடுத்து வரும் நாட்களில் மோதல் அதிகரிக்கும் நிலையில் அவை அவற்றைத் தொடரக்கூடும். இரு நாடுகளும் மற்றொன்றின் 'சிவப்பு கோடுகள்' என்று தாம் அறிந்ததை மீறி இராணுவத் தளங்களையும், இறுதியில் ராவல்பிண்டியில் உள்ள பாகிஸ்தானின் தேசிய இராணுவத் தலைமையகத்துடன் இணைக்கப்பட்ட விமானத் தளத்தையும் குறிவைத்தன.

'நமது படைகளுக்கும், சீருடையில் உள்ள ஒவ்வொரு துணிச்சலான வீரருக்கும் மரியாதை செலுத்துகிறோம். இந்தியா உங்களை நினைத்து பெருமை கொள்கிறது' என்று ஆம் ஆத்மி கட்சித் தலைவரும், டெல்லியின் முன்னாள் முதல்வருமான கெஜ்ரிவால் எழுதினார். கடந்த சனிக்கிழமை தனது தமிழ்நாடு மாநில அரசு நடத்திய ஆபரேஷன் சிந்தூர் ஆதரவு பேரணியில் பேசிய முதலமைச்சரும் திமுக தலைவரும், ஸ்ராலினிச சிபிஎம் மற்றும் சிபிஐயின் நெருங்கிய கூட்டாளியுமான மு.க. ஸ்டாலின், 'இந்தக் கூட்டம் ஒவ்வொரு தமிழரின் உணர்வுகளையும் பிரதிபலிக்கிறது - ஒப்பிடமுடியாத துணிச்சலுடன் நாட்டின் இறையாண்மையை தொடர்ந்து பாதுகாக்கும் இந்திய ராணுவத்திற்கு நமது ஆழ்ந்த மரியாதையும், நன்றியுணர்வும் மற்றும் ஒற்றுமையையும் வெளிப்படுத்துகிறோம்,' என்று அறிவித்தார்.

கடந்த வியாழக்கிழமை பாஜக அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், மிகப்பெரிய ஸ்ராலினிசக் கட்சியான சிபிஎம் உட்பட எதிர்க்கட்சித் தலைவர்கள் கடமை உணர்வுடன் கலந்து கொண்டனர். பஹல்காமில் பயங்கரவாதத் தாக்குதல் நடந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு, ஏப்ரல் 24 அன்று நடைபெற்ற இதேபோன்ற கூட்டத்தில் செய்ததைப் போலவே, அவர்கள் அரசாங்கத்திற்கு முழு ஆதரவையும் வழங்கினர்.

'இந்த நெருக்கடியான நேரத்தில், நாங்கள் அரசாங்கத்துடன் இருக்கிறோம்,' என்று காந்தி கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் கூறினார். மாவோவாத சிபிஐ-எம்எல் (விடுதலை) உட்பட அனைத்து நாடாளுமன்ற ஸ்ராலினிசக் கட்சிகளாலும் பகிர்ந்துகொள்ளப்பட்ட காங்கிரசின் ஒரே புகார், எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கமளிக்கும் பொறுப்பை உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் பிறரிடம் விட்டுவிட்டு, மோடி தனிப்பட்ட முறையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்பதுதான்.

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான முழுமையான போரானது தெற்காசிய மக்களுக்கும் உலக மக்களுக்கும் ஏற்படுத்தக்கூடிய அச்சுறுத்தலை எதிர்க் கட்சிகள் அலட்சியப்படுத்துவதும், அவர்களின் போர்வெறி நிலைப்பாடும், இந்திய முதலாளித்துவத்தின் ஈவிரக்கமற்ற பிரதிநிதிகளாகவும் அதன் அரசின் பாதுகாவலர்களாகவும் அவர்களின் வர்க்கப் பங்கை எடுத்துக்காட்டுகிறன.

இந்து பலசாலியான மோடியால் வழிநடத்தப்பட்டு, ஆழமான வர்க்கப் பிளவுகளால் பிளவுபட்டுள்ள நிலையிலும்கூட, அவர்கள் அனைவரும் இந்த அரசை, ஜனநாயகத்தின் ஊற்றாகவும், 'மக்களை வென்றெடுத்துள்ளதாகவும்' தூக்கிப் பிடித்து வருகின்றனர்.

உண்மையில், இது, முதலாளித்துவ ஆட்சியை உறுதிப்படுத்தவும், முந்தைய தசாப்தங்களில் தெற்காசியாவை உலுக்கிய வெகுஜன ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்தை நசுக்கவும், இந்த துணைக்கண்டத்தை 1947-48 இல் வகுப்புவாத அடிப்படையில் பிரித்து, அப்பட்டமாக ஒரு முஸ்லிம் பாகிஸ்தானையும் ஒரு இந்து இந்தியாவையும் உருவாக்கிய, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துடனான ஒரு பிற்போக்கு ஒப்பந்தத்தின் மூலம் நிறுவப்பட்ட ஒரு அரசாகும்.

சுதந்திர நாடாக இருந்த 78 ஆண்டுகளில் சுமார் 55 ஆண்டுகள் இந்தியாவின் ஆளும் கட்சியாக, இருந்த காங்கிரஸ் கட்சி, காஷ்மீரில் போர், சூழ்ச்சி மற்றும் வெகுஜன அடக்குமுறை மூலம் இந்திய முதலாளித்துவத்தின் மூலோபாய போட்டியாளரான பாகிஸ்தான் சமதரப்புடன் பகைமையை அர்ப்பணிப்புடன் பேணி வந்துள்ள அதே வேளை, உள்நாட்டில் இந்து வலதுசாரிகளுடன் இணக்கத்துடன் கூட்டுச் சூழ்ச்சியில் ஈடுபட்டு வந்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் தலைமையில், இந்தியா கூட்டணியானது அமெரிக்க ஏகாதிபத்தியத்துடனான இந்தியாவின் 'பூகோள மூலோபாய' கூட்டாண்மையை முழுமையாக ஆதரிக்கிறது. உண்மையில், ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா புதிய காலனித்துவ கொள்ளையடிப்பு மற்றும் ஆக்கிரமிப்பு போர்களை நடத்திய வேளையிலும், ஒபாமாவின் கீழ் 'ஆசியாவில் முன்நோக்கி' என்ற பெயரில், பெய்ஜிங்குடனான போருக்குத் தயாராவதற்காக அதன் உலகளாவிய இராணுவ வளங்களை மீண்டும் பயன்படுத்தத் தொடங்கியபோதும், காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தால் அமெரிக்காவுடன்ன இந்த கூட்டாண்மை தொடங்கிவைக்கப்பட்டது.

2019 இல், இந்திய கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரில் புல்வாமா இராணுவத் தளத்தின் மீதான தாக்குதலைத் தொடர்ந்து, துணைக்கண்டத்தை போரின் விளிம்பிற்கே தள்ளிய, மோடி பாகிஸ்தான் மீது நடத்த உத்தரவிட்ட 'முற்றுகைத்' தாக்குதல் குறித்து காங்கிரஸ் கட்சித் தலைமை சில சந்தேகங்களை வெளிப்படுத்தியது. பாஜக இந்த சம்பவத்தை தனது மறுதேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்க இழிவாகப் பயன்படுத்தியது. அதே ஆண்டின் பிற்பகுதியில், ஒரே இரவில் தனது நிர்வாக உத்தரவு மூலம் அரசாங்கம் இந்தியாவின் ஒரே பெரும்பான்மை முஸ்லிம் மாநிலமான ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு தன்னாட்சி அந்தஸ்தைப் பறித்து, அதை மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் கீழான ஒரு யூனியன் பிரதேசமாகக் குறைத்த, மோடியின் அரசியலமைப்பு சதித்திட்டத்தை காந்தியும் காங்கிரசும் எதிர்ப்பதாகக் கூறிக்கொண்டனர்.

இந்தியா-பாகிஸ்தான் உறவுகளின் இயக்கவியலை மாற்றி, இந்தியாவை பிராந்திய மேலாதிக்க சக்தியாக நிலைநிறுத்த மோடி மேற்கொள்ளும் மிகவும் ஈவிரக்கமற்ற முயற்சிக்கு காங்கிரஸ் தலைமைத்துவம் கொடுக்கும் முழு ஆதரவானது, தீவிரமடைந்து வரும் முதலாளித்துவ நெருக்கடியின் தாக்கத்தின் கீழ், முழு ஆளும் வர்க்கமும் அதன் அனைத்து அரசியல் பிரதிநிதிகளும் கூர்மையாக வலது நோக்கி மாற்றமடைந்துகொண்டிருப்பதை குறிக்கிறது.

எப்போதும் போல், ஸ்ராலினிஸ்டுகளின் வகிபாகமானது ஆளும் வர்க்கத்தின் நடவடிக்கைகளுக்கு இடதுசாரி முகத்தை உருவாக்கிக் கொடுப்பதும், தொழிலாளர்கள் மற்றும் உழைப்பாளர்களின் எதிர்ப்பை அதன் கட்சிகள் மற்றும் நிறுவனங்களுக்குப் பின்னால் திருப்பிவிடுவதுமே ஆகும்.

பாகிஸ்தான் மீதான பாஜக அரசாங்கத்தின் தாக்குதலை ஆதரிப்பதன் மூலம், ஸ்ராலினிஸ்டுகள் இந்து மேலாதிக்க தீவிர வலதுசாரிகளுக்கு ஊக்கமளித்து, இராணுவ-பாதுகாப்பு ஸ்தாபனத்துடன் கூட்டணி வைத்து, பாகிஸ்தானுடனான அதன் மோதலில் ஆளும் வர்க்கம் முன்னெடுக்கும் கொள்ளையடிக்கும் பொருளாதார மற்றும் புவிசார் மூலோபாய நலன்களை மூடிமறைப்பதில் அதற்கு உதவியுள்ளனர்.

மே 7 அன்று வெளியிடப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் குறித்த சிபிஎம் அரசியல் குழுவின் அறிக்கை, பல தசாப்தங்களில் பாகிஸ்தான் மீதான மிகப்பெரிய இந்திய தாக்குதலுக்கு முழு ஆதரவை வழங்கியது. அரசாங்கத்தின் நிலைப்பாட்டை கிட்டத்தட்ட வார்த்தைக்கு வார்த்தை மீண்டும் கூறிய அந்த அறிக்கை, 'இந்திய ஆயுதப் படைகளால் பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மற்றும் உள்கட்டமைப்பை அழிக்கும் நோக்கத்துடனேயே நடத்தப்பட்டது' என்று அறிவித்தது. ஆயுதப் படைகளின் கூற்றுப்படி, இந்தத் தாக்குதல்கள் கவனமாக திட்டமிடப்பட்டு, அளவிடப்பட்டு மற்றும் தீவிரப்படுத்தாத வகையில் முன்னெடுக்கப்பட்டவை.'

'பாகிஸ்தானிய இராணுவ சொத்துக்களைத் தவிர்ப்பது மற்றும் பயங்கரவாத உள்கட்டமைப்பில் மட்டுமே கவனம் செலுத்துவது போன்ற இலக்கு வைக்கப்பட்ட தாக்குதல்களின் தன்மை, முழு அளவிலான மோதலைத் தூண்டாமல் பொறுப்புக்கூறலுக்கு முன்னுரிமையளித்து, அளவீடு செய்யப்பட்ட மற்றும் விரிவாக்கப்படாத அணுகுமுறையை நிரூபிக்கிறது' என்று சிபிஐ தனது செய்திக்குறிப்பில் வலியுறுத்தியது.

இந்தியாவில் உள்ள தொழிலாளர்கள் தங்கள் அரசாங்கத்தையும் ஆளும் வர்க்கத்தையும், அவர்களின் இராணுவ நடவடிக்கைகளையும், சூழ்ச்சிகளையும், போர் வெறியையும் உறுதியாக எதிர்க்க வேண்டும். ஏகாதிபத்தியம், போட்டி தேசிய முதலாளித்துவ வர்க்கங்களின் ஊழல் ஆட்சி மற்றும் அவற்றின் வகுப்புவாத அரசு அமைப்புக்கு எதிரான பொதுவான போராட்டத்தில், தெற்காசிய ஐக்கிய சோசலிச அரசுகளுக்காக பாகிஸ்தானின் தொழிலாளர்கள் மற்றும் உழைப்பாளர்களுடன் தங்கள் வர்க்க ஐக்கியத்தை நிலைநாட்ட வேண்டும்.

இதற்கு சிபிஎம் மற்றும் ஏனைய போலி 'கம்யூனிஸ்ட்' கட்சிகளுக்கு எதிராக ஒரு ட்ரொட்ஸ்கிச, அதாவது உண்மையான சோசலிச அனைத்துலகவாத தொழிலாள வர்க்கக் கட்சியைக் கட்டியெழுப்புவது அவசியமாகும். பல தசாப்தங்களாக அவை இந்திய அரசியல் ஸ்தாபனத்தின் ஒரு பகுதியாக செயல்பட்டு வருகின்ற அதே நேரம், 1917 அக்டோபர் புரட்சியால் நிறுவப்பட்ட தொழிலாளர் அரசுக்குள் அதிகாரத்தைக் கைப்பற்றிக்கொண்டு, இறுதியில் முதலாளித்துவத்தை மீட்டெடுத்து சோவியத் ஒன்றியத்தைக் கலைத்துவிட்ட சலுகை பெற்ற அதிகாரத்துவத்தால் உருவாக்கப்பட்ட தேசியவாத-ஸ்ராலினிச மார்க்சியத் திரிபுகளையே பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

Loading