காஸா மீதான இஸ்ரேலின் இனச் சுத்திகரிப்புக்கு ஸ்டார்மர், மக்ரோன் மற்றும் கார்னேயின் "எதிர்ப்பின்" மோசடி

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

காஸா மற்றும் மேற்குக் கரை நிலைமை குறித்து இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் கனடா வெளியிட்ட கூட்டறிக்கை, பாலஸ்தீனியர்கள் மீதான இஸ்ரேல் மேற்கொண்டுவரும் இனப்படுகொலைக்கான எதிர்ப்பு அல்ல. மாறாக இது, பிரதமர்கள் சேர் கெய்ர் ஸ்டார்மர், மார்க் கார்னே மற்றும் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் ஆகியோர் பாரிய படுகொலை மற்றும் இன சுத்திகரிப்புக்கு தங்களது சாக்குபோக்கை வழங்குவதற்கான ஒரு முயற்சியாகும்.

காஸா அழிக்கப்பட்டு, பல பத்தாயிரக் கணக்கானவர்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில், பெஞ்சமின் நெதன்யாகுவின் அரசாங்கத்துடன் பத்தொன்பது மாதங்கள் கூட்டுச் சேர்ந்து செயல்பட்ட பிறகு, மக்ரோன், ஸ்டார்மர், மற்றும் கார்னே ஆகிய மூன்று தலைவர்களும், இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதை கடுமையாக எதிர்க்கும், சிடுமூஞ்சித்தனமான மற்றும் பயனற்ற பிரகடனத்தை வெளியிட்டுள்ளனர். 

பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் (இடது) மற்றும் உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி (வலது) ஆகியோருடன் இங்கிலாந்து பிரதமர் சேர் கெய்ர் ஸ்டார்மர் (நடுவில்) லங்காஸ்டர் ஹவுஸில் ஐரோப்பிய தலைவர்கள் உச்சி மாநாட்டை நடத்துகிறார், மார்ச் 2, 2025 [Photo by Simon Dawson/No 10 Downing Street/Flickr / undefined]

“விரிவாக்கம்” என்று நுட்பமாக இவர்கள் குறிப்பிடுவது என்னவென்றால், காஸாவைக் “கட்டுப்பாட்டில் எடுத்து” அதன் இனச் சுத்திகரிப்பு பணியை நிறைவு செய்வதாக நெதன்யாகு அளித்த உறுதிமொழிக்கு ஏற்ப, இரண்டு மில்லியன் பாலஸ்தீனியர்களை நிரந்தரமாக நாடுகடத்துவது அல்லது மரணம் என்ற தேர்வுக்கு விட்டுச் செல்வதாகும்.

இவர்கள் விடுத்த கூட்டு அறிக்கையானது, காஸாவில் “சகிக்க முடியாத” மனிதத் துயரங்கள் மீது அதிர்ச்சியையும் சீற்றத்தையும் வெளிப்படுத்துவதாக பாசாங்கு செய்வதுடன், இஸ்ரேல் “காஸாவிற்குள் ஒரு அடிப்படை அளவு உணவை” அனுமதிப்பது “முற்றிலும் போதுமானதாக இல்லை” என்று விவரிக்கிறது. மேலும், அரசாங்கம் “காஸாவில் அதன் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்திவிட்டு, மனிதாபிமானக் கோட்பாடுகளுக்கு ஏற்ப உடனடியாக மனிதாபிமான உதவிகளை காஸாவிற்குள் நுழைய அனுமதிக்க வேண்டும்” என்று அழைப்பு விடுக்கிறது. இல்லையெனில், அது “சர்வதேச மனிதாபிமான சட்டத்தை மீறும் அபாயம்” உள்ளது என்று எச்சரிக்கிறது.

இஸ்ரேலின் கொலைகார நடவடிக்கைகளுக்கான நன்கு தேய்ந்து போன சாக்குப்போக்குகளின் நீண்ட பட்டியலானது, உண்மையிலேயே சர்வதேச சட்டத்தை சுக்குநூறாக தகர்த்தெறிந்துள்ளன. “அக்டோபர் 7, 2023 முதல் ஹமாஸ் மிகவும் கொடூரமாக பிடித்து வைத்திருக்கும்” மீதமுள்ள பணயக்கைதிகளை விடுவிக்க வேண்டும் என்றும், இது ஒரு “கொடூரமான தாக்குதல்” என்றும் அந்த அறிக்கை கூறுகிறது. மேலும், “பயங்கரவாதத்திற்கு எதிராக இஸ்ரேலியர்களைப் பாதுகாக்கும் இஸ்ரேலின் உரிமையை நாங்கள் எப்போதும் ஆதரித்து வருகிறோம்” என்றும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

அதிகபட்சமாக தங்கள் கூச்சலிடும் குரலை எழுப்பி, மூன்று தலைவர்களும் தற்போதைய “இராணுவ விரிவாக்கத்தை” “முற்றிலும் பொருத்தமற்றது” என்று விவரிக்கின்றனர். மேலும் “நெதன்யாகு அரசாங்கம் இந்த மோசமான நடவடிக்கைகளைத் தொடரும் வரை நாங்கள் காத்திருக்க மாட்டோம் என்றும் கூறினர். இஸ்ரேல் புதுப்பிக்கப்பட்ட இராணுவத் தாக்குதலை நிறுத்தி, மனிதாபிமான உதவி மீதான அதன் கட்டுப்பாடுகளை நீக்காவிட்டால், பதிலுக்கு மேலும் உறுதியான நடவடிக்கைகளை எடுப்போம்” என்றும் அவர்கள் கூறினார்.

இந்த “ஸ்தூலமான நடவடிக்கைகளின்” உறுதியான தன்மையைப் பொறுத்தவரை அந்த அறிக்கை, “மேற்குக் கரையில் குடியேற்றங்களை விரிவுபடுத்தும் எந்தவொரு முயற்சிக்கும்” எதிராக “இலக்கு வைக்கப்பட்ட தடைகளை” மட்டுமே குறிப்பிடுகிறது. மாறாக, காஸா மற்றும் அதன் நிரந்தர இணைப்பு பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.

இந்த சூழ்நிலைகளின் கீழ், ஒரு சாத்தியமான பாலஸ்தீனிய அரசை ஆதரிப்பது மற்றும் “இரண்டு-அரசு தீர்வுக்கான பாதை” என்ற பெயரளவிலான மறுபிரகடனம் என்பது மூடிமறைக்கப்படுகிறது.

இவை அனைத்தும், “அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து”, பாலஸ்தீன அதிகாரசபை மற்றும் பிற பிராந்திய பங்காளிகளுடன் இணைந்து போர்நிறுத்தத்தை உறுதி செய்வதற்கும், “காஸா மீதான ஹமாஸின் கட்டுப்பாட்டை” முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு ஆதரவாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

இஸ்ரேலின் பிரதான இராணுவ ஆதரவாளரும் காஸா மீது அமெரிக்க கட்டுப்பாட்டை வைத்திருக்க விரும்புபவருமான வருங்கால ஃபியூரர் (நாஜித் தலைவர்-Führer) டொனால்ட் ட்ரம்ப் தொடங்கி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் காஸா மீது மரணத்தையும் அழிவையும் பொழிந்தபோது, ​​அவர்களுடன் தங்கள் கூட்டுச் சதித்திட்டத்தை ஆழப்படுத்திய அரபு சர்வாதிகாரிகள் வரை நீண்டு செல்லும் போக்கிரிகளின் காட்சியகம் இங்கே அடையாளம் காணப்படுகிறது.

“முழு வெற்றி” எட்டப்படும் வரை இஸ்ரேல் தொடர்ந்து போரிடும் என்று பெருமைபீற்றிய நெதன்யாகு, இவர்களின் கடிதத்திற்கு விடையிறுத்ததில் ஆச்சரியம் எதுவும் இல்லை. அமெரிக்காவின் இதேபோன்ற  “அழுத்தம்” போருக்கு முன்பு தினசரி அனுப்பப்பட்டதில் 2 சதவீதத்திற்கும் குறைவான ஒன்பது லாரி உதவிகளை மட்டுமே அவரை அனுமதிக்கும்படி கட்டாயப்படுத்தியது என்றும், இது காஸாவின் வேண்டுமென்றே மற்றும் தொடர்ச்சியான பஞ்சத்தில் எந்த விளைவையும் ஏற்படுத்தாது என்றும் அவர் விளக்கியிருந்தார்.

இஸ்ரேலின் “உலகின் மிகச்சிறந்த நண்பர்கள்” என்று அவர் விவரித்த பெயரிடப்படாத “செனட்டர்கள்” நெதன்யாகுவிடம், “பசி, பாரிய பட்டினி பற்றிய காட்சிகளை நாம் ஏற்க முடியாது. அதை நம்மால் தாங்கிக் கொள்ள முடியாது. நாங்கள் உங்களுக்கு ஆதரவளிக்க முடியாது” என்று கூறினார்கள்.

பாசிசக் கசாப்புக் கடை கொலைகாரர்களை தனது உள்நாட்டு பார்வையாளர்களாகக் கொண்டிருப்பதற்காக நெதன்யாகு இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் கனடாவுக்கு எதிராக சீறக்கூடும். ஆனால், இஸ்ரேலின் சிறந்த நண்பர்களான ஸ்டார்மர், மக்ரோன் மற்றும் கார்னே ஆகியோர், நெதன்யாகுவின் இனப்படுகொலை ஆட்சியை தொடர்ந்து ஆதரிப்பார்கள். இந்த மூன்று நாடுகளிலும், இஸ்ரேலுக்கான ஆதரவு, இனப்படுகொலையை எதிர்ப்பவர்களை “யூத எதிர்ப்பாளர்கள்” என்று கண்டனம் செய்வதோடும், அரசால் அவர்கள் துன்புறுத்தப்படுவதோடும் இணைந்துள்ளது. 

இங்கிலாந்து பிரதமர் சேர் கெய்ர் ஸ்டார்மர் கனடாவின் பிரதமர் மார்க் கார்னேயை 10 டவுனிங் தெருவில் இருதரப்பு கூட்டத்தில் சந்திக்கிறார், மார்ச் 17, 2025 [Photo by Lauren Hurley/No 10 Downing Street / CC BY-NC-ND 4.0]

இந்த மூவரும் “பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம்” என்று உறுதியளித்துக் கொண்டிருந்த அதேவேளை, காஸாவிலுள்ள மத்திய கான் யூனிஸ் நகரம் முழுவதையும் ஒரு “போர் மண்டலமாக” அறிவித்து, அனைத்து குடிமக்களையும் வெளியேறுமாறு உத்தரவிட்டு இஸ்ரேல் அதன் வான்வழி குண்டுவீச்சைத் தொடர்ந்தது.

100 லாரி உதவிப் பொருட்களை அனுப்புவதற்கு அனுமதி பெற்றுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை கூறியது —போருக்கு முந்தைய தொகையில் ஐந்தில் ஒரு பங்கு— ஆனால், இந்த நடவடிக்கையில் அதன் ஊழியர்கள் கொல்லப்படலாம் என்றும், அடுத்த இரண்டு நாட்களில் காஸாவில் 14,000ம் குழந்தைகள் இறக்கக்கூடும் என்றும் ஐ.நா எச்சரித்துள்ளது.

மட்டுப்படுத்தப்பட்ட உதவிகளை வழங்குவது அவசியமான தீமை என்று கூறிய தீவிர வலதுசாரி நிதி அமைச்சர் பெசலெல் யோயல் ஸ்மோட்ரிச், இது இஸ்ரேலுக்கு சாதகமாக மாற்றப்படலாம் என்று கூறினார். இது, இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் காஸா பிரதேசத்தைக் “கைப்பற்றவும், சுத்தப்படுத்தவும், தக்கவைக்கவும், ஹமாஸை அழிக்கவும்” அனுமதிக்கும். “இந்த வழியில், காஸா பகுதியில் எஞ்சியிருப்பதும் அழிக்கப்பட்டு வருகிறது... [பாலஸ்தீன] மக்கள் தெற்கு காஸா பகுதியை அடைவார்கள், அங்கிருந்து, கடவுளின் உதவியுடன், ஜனாதிபதி ட்ரம்பின் திட்டத்தின்படி, மூன்றாம் நாடுகளுக்குச் செல்வார்கள்” என்று ஸ்மோட்ரிச் குறிப்பிட்டார்.

இஸ்ரேலின் “தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்வதற்கான உரிமையை” தனது தாரக மந்திரமாக ஆக்கிக் கொண்டு, இனப்படுகொலை கூட நடக்கவில்லை என்பதை மீண்டும் மீண்டும் மறுத்த பிறகு, கடந்த ஜூலை மாதம் ஆட்சிக்கு வந்த பிரித்தானிய பிரதமர் ஸ்டார்மர், காஸா இனப்படுகொலையின் மிகவும் வெளிப்படையான மற்றும் நிலையான பாதுகாவலராக இருந்து வருகிறார்.

கடந்த வாரம், F-35 போர் விமானங்களுக்கான பாகங்களை ஏற்றுமதி செய்ய அனுமதிக்கும் அதன் சிறப்பு ஏற்பாடுகளை ஆதரித்து இங்கிலாந்து அரசாங்க வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் வாதிட்டனர். காஸாவில் இனப்படுகொலை நடைபெறுவதை பெரும்பாலும் மறுப்பதன் அடிப்படையில், இந்த விமானங்கள் இஸ்ரேலுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

மே 13 அன்று, பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் இஸ்ரேலிய தூதரகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு இரகசிய கூட்டத்தில், பிரிட்டனின் பாதுகாப்பு கொள்முதல் மற்றும் தொழில்துறை மந்திரி மரியா ஈகிள், ரோயல் விமானப்படை உளவு விமானங்கள் காஸா மீது வேவு பார்க்கும் பணிகளை பறக்கவிட்டிருப்பது குறித்து பெருமையடித்துக் கொண்டார். மே 19 அன்று, காஸாவில் இஸ்ரேல் இனப்படுகொலை செய்கிறதா என்று ஸ்கை நியூஸால் நேரடியாகக் கேட்கப்பட்டபோது, ஸ்டார்மர் இதற்கு பதில் கூற மறுத்துவிட்டார்.

காஸா குறித்த நாடாளுமன்ற விவாதத்தில் இருந்து ஸ்டார்மர் விலகி, இங்கிலாந்து / ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக ஒப்பந்தத்தின் நன்மைகள் குறித்து கலந்துரையாடுவதற்கு லிட்ல் பல்பொருள் அங்காடிக்குச் சென்றார். வெளியுறவு மந்திரி டேவிட் லாமி இஸ்ரேலுடனான வர்த்தக பேச்சுவார்த்தைகளை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்தார். ஆனால், பாலஸ்தீன நிர்வாக செய்தி ஊடகம் இஸ்ரேலுக்கு அதிக ஏற்றுமதி தடை செய்யப்படுமா என்று கேட்டதற்கு பதிலளித்த டவுனிங் தெரு செய்தித் தொடர்பாளர், “நாங்கள் எப்போதும் அத்தகைய ஏற்பாடுகளை பரிசீலனையில் வைத்திருக்கிறோம்” என்று மட்டுமே கூறினார்.

ஏகாதிபத்திய அரசாங்கங்கள் மீது அழுத்தம் கொடுப்பதன் மூலம்தான் இனப்படுகொலையைத் தடுக்க முடியும் என்று போலி இடது போக்குகள் மீண்டும் வலியுறுத்துவதை இவை எதுவும் தடுக்கவில்லை.

பிரிட்டனில், போரை நிறுத்து என்ற கூட்டணி “நெதன்யாகுவுக்கு ஆதரவான ஏகபோக நிறுவனத்தில் விரிசல்கள் ஏற்படத் தொடங்கியுள்ளதாகவும்”, ஸ்டார்மர் அரசாங்கம் “அணுகுமுறையை மீண்டும் நிலைநிறுத்த வேண்டும்” என்றும், மேலும் “நெதன்யாகுவுக்கான விமர்சனமற்ற ஆதரவு நீடிக்க முடியாதது என்பதை டொனால்ட் ட்ரம்ப் கூட உணர்ந்திருப்பதாக தெரிகிறது” என்றும் எழுதியது.

“காஸாவில் இஸ்ரேலின் கொடூரத்தின் அளவு, மனித உரிமைகள் மீதான அவர்களின் பாசாங்குத்தனத்தை அம்பலப்படுத்துவதாக அஞ்சும் மேற்கத்திய தலைவர்களை உலுக்கி வருவதாகவும்” இது “பாலஸ்தீன இயக்கத்திற்கு அழுத்தத்தை அதிகரிக்க ஒரு வாய்ப்பை” வழங்குகிறது என்றும் சோசலிச தொழிலாளர் கட்சி எழுதியது. இந்த நிலையில், பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் கனடா வெளியிட்ட அறிக்கை “பாலஸ்தீன ஒற்றுமை இயக்கத்தின் அழுத்தத்தால்” அடையப்பட்ட வெற்றிகளுக்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.

இது ஒரு ஆபத்தான பொய். பாலஸ்தீனியர்களின் தலைவிதி பற்றி ஏகாதிபத்திய அரசியல்வாதிகள் பாசாங்குத்தனமான அறிக்கைகளை வெளியிடுவதற்கு பொதுமக்களின் அழுத்தம் ஊக்கமளிக்கலாம். ஆனால், அது இனப்படுகொலையையும், அதில் அவர்களின் உண்மையான நடைமுறை பங்கேற்பையும் முடிவுக்குக் கொண்டுவரப் போவதில்லை.

இதனால்தான், “காஸாவில் ஏகாதிபத்தியம் அதன் இறுதி தீர்வைத் தொடங்குகிறது” என்று மே 20 அன்று, WSWS ஆசிரியர் குழு வெளிட்ட அறிக்கையானது, ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலான படுகொலைகளிலிருந்து பெற வேண்டிய மையப் பாடத்தை பின்வருமாறு அடையாளம் காட்டியது. “ஏகாதிபத்திய சக்திகள் அல்லது சர்வதேச சட்ட நிறுவனங்களுக்கு முறையீடு செய்வதன் மூலம் காஸா இனப்படுகொலையை தடுத்து நிறுத்துவது சாத்தியமற்றது. காஸாவில் படுகொலையை நிறுத்துவதற்கான ஒரே வழி தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதே ஆகும். காஸா இனப்படுகொலைக்கு எதிரான போராட்டமானது, வர்க்கப் போராட்டத்தின் விரிவாக்கம் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் உரிமைகளைப் பாதுகாப்பதில் தங்கியுள்ளது.”

Loading