முன்னோக்கு

ட்ரம்ப் "சிரிய புரட்சியை" அரவணைக்கிறார்: ஏகாதிபத்திய ஆதரவு போலி இடதுகளின் திவால்நிலை

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் (இடது) மற்றும் சிரிய ஜனாதிபதி அஹ்மத் அல்-ஷரா (வலது) மே 14, 2025

அமெரிக்க ஜனாதிபதியும் வருங்கால சர்வாதிகாரியுமான டொனால்ட் ட்ரம்ப் கடந்த புதன்கிழமை காலை ரியாத்தில் சிரியாவின் தலைவர் அகமது அல்-ஷராவை (Ahmed al-Sharaa) சந்தித்தார். அந்த சந்திப்பின் போது ட்ரம்ப், ​​அல்-கொய்தாவின் துணை அமைப்பாக உருவான ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாமின் (Hayat Tahrir al-Sham) தலைவரை ஒரு “இளம், கவர்ச்சிகரமான நபர், கடினமான மனிதர், வலுவான கடந்த காலம். மிகவும் வலுவான கடந்த காலம். ஒரு போராளி” என்று பாராட்டினார்.

ஒரு சில மாதங்களுக்கு முன்பு வரை, சிரியாவில் ஆட்சி மாற்றத்திற்கான அமெரிக்க ஆதரவிலான போரின் ஆரம்ப கட்டங்களின் போது, அல்-கொய்தாவுடன் இணைந்த அல்-நுஸ்ரா முன்னணியின் அப்போதைய தலைவராக இருந்த அல்-ஷராவைப் பிடிப்பதற்காக அமெரிக்க அரசாங்கம் 10 மில்லியன் டாலர் வெகுமதியை அறிவித்திருந்தது. லெபனான் மற்றும் ஈரானில் உள்ள அதன் கூட்டாளிகள் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதலின் சுமையின் கீழ், சிரிய ஆட்சியின் வீழ்ச்சியை சாதகமாக்கிக் கொண்டு, அவரது இஸ்லாமியவாத படைகள் டிசம்பரில் பஷர் அல்-அசாத்தை தூக்கியெறிந்த போது அனைத்தும் மாறியது.

அசாத் ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக முதலில் திணிக்கப்பட்ட சிரியா மீதான அதன் முடக்கும் தடையாணைகளை அமெரிக்கா நீக்கும் என்ற அவரது அறிவிப்பைத் தொடர்ந்து அல்-ஷராவுக்கான ட்ரம்பின் பாராட்டு வந்தது. இந்த நடவடிக்கை பில்லியன் கணக்கான டாலர்கள் முதலீட்டிற்கு வழி வகுக்கிறது, முதன்மையாக சவுதி அரேபியா மற்றும் பிற சர்வாதிகார வளைகுடா முடியாட்சிகள் மற்றும் துருக்கியிலிருந்து, ஈரானுக்கு எதிரான ஒரு அரணாக சிரியாவின் புதிய ஆட்சி வலுப்படுத்தப்படுகிறது.

இந்த அபிவிருத்திகள், ஒரு தொகை ஏகாதிபத்திய-சார்பு, போலி-இடது அரசியல் கட்சிகளால் அண்மித்து 15 ஆண்டுகளாக உலகெங்கிலும் ஊக்குவிக்கப்பட்டு, இட்டுக்கட்டப்பட்ட “சிரிய புரட்சிக்கு” ஒரு பொருத்தமான மகுடத்தை வழங்குகிறது.

பிரான்சின் புதிய முதலாளித்துவ-எதிர்ப்புக் கட்சி (NPA - Nouveau Parti anticapitaliste), பப்லோவாத வெளியீடான International Viewpoint, மற்றும் அமெரிக்காவை மையமாக கொண்ட சர்வதேச சோசலிச அமைப்பு (ISO - International Socialist Organization) போன்ற குழுக்கள் —இது பின்னர் அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்டுகளாக தன்னை கரைத்துக் கொண்டது— “சிரிய புரட்சி” என்றழைக்கப்படுவதை ஊக்குவிப்பதற்கான முயற்சிகளுக்கு தலைமை கொடுத்தன. 2011 தொடங்கி, அவர்கள் சிரியாவில் அமெரிக்க ஆதரவுபெற்ற மத அடிப்படைவாதக் குழுக்களின் தலைமையிலான உள்நாட்டுப் போரை, மேற்கத்திய ஆதரவிலான பென் அலி மற்றும் முபாரக்கின் ஆட்சிகளை தூக்கிவீசிய துனிசிய மற்றும் எகிப்திய தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர எழுச்சிகளுடன் தவறாக சமப்படுத்தினர்.

“சிரியப் புரட்சியின்” உண்மையான தன்மையை உலக சோசலிச வலைத் தளம் அம்பலப்படுத்தியது. ஆஸ்திரேலிய சோசலிச மாற்றுக் கட்சியின் தலைவர் கோரி ஓக்லி 2012 இல் கூறியது போல், இது “உள்ளுணர்வான ஏகாதிபத்திய-எதிர்ப்பு” (knee-jerk anti-imperialists) என்பதன் வெளிப்பாடாகும் என்பதே இந்த அமைப்புகளின் மற்றும் சர்வதேச அளவில் உள்ள மற்றவர்களின் நிலைப்பாடாக இருந்தது. அப்போது NPA இன் ஒரு முன்னணி அங்கத்தவராக இருந்த ஜில்பேர்ட் அஷ்கார், போர் மூலோபாயம் குறித்து விவாதிக்க 2011 இல் சிஐஏ ஆதரவிலான சிரிய தேசிய கவுன்சிலை சந்தித்தது குறித்து 2011 இல் பெருமைபீற்றினார். லண்டனில் உள்ள கீழைத்தேய மற்றும் ஆபிரிக்க ஆய்வுகள் பள்ளியில் (School of Oriental and African Studies de Londres) பேராசிரியராக ஒரு பதவியை வகிக்கும் அஷ்கார், பின்னர் பிரிட்டிஷ் இராணுவத்தின் கலாச்சார பாதுகாப்பு நிபுணர்களின் கிளர்ச்சி எதிர்ப்பு பிரிவில் விரிவுரையாற்றினார்.

2013 இல், அமெரிக்காவை தளமாகக் கொண்ட சர்வதேச சோசலிச அமைப்பு “சிரிய புரட்சியுடன் ஐக்கியம்” என்ற தலைப்பில் ஒரு அறிக்கையை வெளியிட்டு, “சிரியாவில் இடம்பெறும் சண்டை பிராந்திய மற்றும் உலகெங்கிலும் சுதந்திரத்திற்கான போராட்டத்தின் ஒரு விரிவாக்கமாகும்” என்று அறிவித்தது. அதே ஆண்டு, முன்னாள் கிழக்கு ஜேர்மனியின் ஸ்ராலினிச அரசுக் கட்சியிலிருந்து தோன்றிய ஜேர்மனியின் இடது கட்சி, அசாத்தை வீழ்த்துவதற்கு அவசியமான வாஷிங்டனின் “இராணுவத் தாக்குதலை நடத்த வேண்டிய கடமையை” வலியுறுத்திய சிரிய “எதிர்க்கட்சி” மைக்கேல் கிலோவுடன் தொடர்ச்சியான சந்திப்புகளை நடத்தியது.

அந்த சமயத்தில், சிரியா மீது வான்வழித் தாக்குதல்களைத் தொடங்குவது குறித்து விவாதித்து வந்த ஒபாமா நிர்வாகம், இறுதியில் அதற்கு பதிலாக சன்னி மற்றும் குர்திஷ் எதிர்ப்புக் குழுக்களுக்கு ஆயுதமளிப்பதையும், ISISஐ எதிர்த்துப் போராடுகிறோம் என்ற சாக்குபோக்கின் கீழ் அதற்கடுத்த ஆண்டில் சிரியா மற்றும் ஈராக் மீது குண்டுவீச்சைத் தொடங்குவதையும் தேர்ந்தெடுத்தது. ஜேர்மனியின் இடது கட்சி அசாத்தை நிராயுதபாணியாக்க இராணுவக் கப்பல்கள் அப்பிராந்தியத்தில் நிலைநிறுத்தப்படுவதை ஆதரித்ததுடன், குர்திஷ் தேசியவாதிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பிராந்தியங்களை ஜனநாயகத்தின் முன்மாதிரிகள் என்று பாராட்டியது.

2016 இல், இடது கட்சியுடன் அணிசேர்ந்துள்ள தவறாக பெயரிடப்பட்ட ரோசா லுக்செம்பேர்க் அறக்கட்டளை (Fondation Rosa Luxemburg), ரோஜாவாவில் புரட்சி (வடகிழக்கு சிரியாவில் குர்திஷ் பிராந்தியங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பெயர்) என்று தலைப்பிட்ட ஒரு புத்தகத்தை வெளியிட்டது. அதில் அவை, “உலகளாவிய மக்களின் அழுத்தத்தின் கீழ் அமெரிக்கா தலைமையிலான கூட்டணியால் சிரியா மீது நடத்தப்பட்ட விமானத் தாக்குதல்களுக்கு நன்றி” என்று அவர்கள் குறிப்பிட்டனர். இந்த “அடிமட்ட ஜனநாயகத்தின்” தலைவர்கள், ஏகாதிபத்திய சார்பு HTS ஆட்சியின் கட்டுப்பாட்டின் கீழ், தங்கள் இராணுவப் படைகளை அரசுடன் ஒருங்கிணைக்க முன்னாள் ஜிஹாதிஸ்ட் அல்-ஷராவுடன் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஒரு ஒப்பந்தத்தை முடித்தனர்.

அதே ஆண்டு, போலி இடது அமைப்புகள், ஒபாமா நிர்வாகத்தின் போது அமெரிக்கா மற்றும் ரஷ்யாவின் மத்தியஸ்தத்தில் சிரியாவில் ஒரு தற்காலிக போர்நிறுத்தத்தைக் கண்டிக்கும் பிரச்சாரத்தைத் தொடங்கின. அஷ்கார், ISO இன் ஆஷ்லி ஸ்மித் உடன் சேர்ந்து, “சிரிய ஆட்சி விமானப்படை பலத்தைப் பயன்படுத்துவதை கட்டுப்படுத்தும் தகைமை கொண்ட விமான-எதிர்ப்பு ஏவுகணைகளை அதன் எதிர்த்தரப்புக்கு வழங்கி” ரஷ்யாவுடன் முழு அளவிலான மோதலில் ஈடுபட வெள்ளை மாளிகை உற்சாகம் இல்லாமல் இருப்பதற்கு கண்டனம் தெரிவித்தார்.

அசாத் “சிவப்புக் கோடுகளை” கடக்கும் போதெல்லாம், “அசாத்தை வீழ்த்துவது மட்டுமல்லாமல், பரந்த எழுச்சியை அச்சுறுத்தும் நடவடிக்கையை எடுப்பதற்குப் பதிலாக, ரஷ்யாவுடன் ஒப்பந்தங்களைச் செய்ய அமெரிக்கா விரும்பியது” என்று ஸ்மித் எழுதினார்.

முன்னாள் அல்-கொய்தாவின் ஆயுததாரி அல்-ஷரா கடந்த டிசம்பரில் அசாத் ஆட்சி நொறுங்கியதன் மத்தியில் டமாஸ்கஸுக்கு தனது HTS படைகளை வழிநடத்திய நிலையில், பப்லோவாதிகளும் ஏனைய போலி-இடது சக்திகளும் ஏகாதிபத்தியவாதிகளுக்கு அடிப்படையில் அரசாங்க ஆலோசகர்களாக தொடர்ந்து சேவையாற்றி வந்தன. அசாத்தின் வீழ்ச்சி, காஸாவில் பாலஸ்தீனர்களுக்கு எதிரான அமெரிக்க-ஆதரவிலான இஸ்ரேலிய இனப்படுகொலை மற்றும் லெபனான் மீதான காட்டுமிராண்டித்தனமான குண்டுவீச்சு ஆகியவற்றில் இருந்து பிரிக்கவியலாததாக இருந்தது. இது ஹிஸ்புல்லாவை பலவீனப்படுத்தி, அசாத்தை ஆதரித்துவந்த ஈரான் இராணுவப் படைகளை அப்பகுதியில் நிலைநிறுத்துவதைத் தடுத்தது.

இது டிசம்பர் 11 அன்று, “கடந்த வெள்ளிக்கிழமை முதல் நடந்த அற்புதமான வரலாற்று நிகழ்வுகளைக் கவனிக்கும்போது, ​​முதலில் நினைவுக்கு வந்தது நிம்மதியும் மகிழ்ச்சியும்தான்” என்று அஷ்கார் அறிவித்தல் விடுப்பதை நிறுத்தவில்லை.

மொரேனோவாத சர்வதேச தொழிலாளர் கழகம்—நான்காம் அகிலம் (LIT-CI) “சிரியப் புரட்சி 13 ஆண்டுகால போராட்டத்திற்குப் பின்னர் சர்வாதிகாரத்தைத் தோற்கடித்துள்ளது” என்று பிரகடனம் செய்தது. “உள்ளுணர்வு ஏகாதிபத்திய-எதிர்ப்பு” என்ற வார்த்தையை உருவாக்கிய ஓக்லி, “ஒரே இரவில், சிரியா மத்திய கிழக்கில் மிகவும் சர்வாதிகார நாடாக இருந்து சுதந்திரமான நாடாக மாறிவிட்டது” என்று உற்சாகமாகக் கூறினார்.

அலவைட்டுகள் மற்றும் பிற சிறுபான்மையினர் மீண்டும் மீண்டும் படுகொலை செய்யப்பட்டதன் மூலமாக, HTS ஆட்சியின் உண்மையான குணாம்சம் அம்பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், கடந்த மார்ச்சில் அரசு ஆதரவிலான வன்முறை வெறியாட்டத்தில் 1,700 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது— சிரியா மீதான ஏகாதிபத்திய மேலாதிக்கத்திற்கான போலி-இடது பிரச்சாரகர்கள் அதன் “புரட்சிகர” முகத்திரையைத் தொட விரைந்துள்ளனர். கடந்த டிசம்பரில் HTS ஆட்சிக்கு வந்த உடனேயே ஆஸ்திரேலியாவின் சோசலிஸ்ட் மாற்றீடு கட்சி ஒரு நிருபரை சிரியாவிற்கு அனுப்பியது, அங்கு அவர் “சுதந்திர சிரியாவிற்குள் நுழைவதன்” மகிழ்ச்சியைப் பற்றி பரவசத்துடன் எழுதினார்.

அல்-ஷராவை ட்ரம்ப் பகிரங்கமாக அரவணைத்தமை, ஒரு வெற்றிகரமான “புரட்சி” மற்றும் “சுதந்திர சிரியா” குறித்த அவர்களின் உளறல்களுடன் ஒட்டுமொத்த போலி-இடதுகளும் நடத்தும் வஞ்சகத்தின் அளவை எடுத்துக்காட்டுகிறது. இனப்படுகொலை செய்யும் சியோனிச ஆட்சியுடன் உறவுகளை இயல்பாக்கிக் கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்து மத்திய கிழக்கில் ஏகாதிபத்தியவாதிகளின் புதிய கூட்டாளிக்கு அமெரிக்க ஜனாதிபதி விரிவுரை வழங்கியதுடன், சிரியாவில் இருந்து “வெளிநாட்டு பயங்கரவாதிகளை” வெளியேற்ற அல்-ஷரா இன்னும் கூடுதலாக செய்ய வேண்டுமென கோரினார். இது, ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை மற்றும் அதனுடன் இணைந்த போராளிகள் குழுக்களைக் குறித்த பிழைக்கிடமற்ற குறிப்பாகும்.

“போலி-இடது” என்ற வார்த்தையின் பயன்பாடு ஒரு எளிய பாணியிலான விளைவு அல்ல. இது ஏகாதிபத்தியத்தின் முகவர்களாக செயல்படும் பிற்போக்குத்தனமான நடுத்தர வர்க்க அமைப்புகளின் ஒரு துல்லியமான குணாம்சப்படுத்தலாகும். இந்த அமைப்புகள் உயர்மட்ட நடுத்தர வர்க்கத்தின் தனிச்சலுகை கொண்ட சடரீதியான நலன்களுக்காக பேசுகின்றன. இந்த அமைப்புக்களின் வர்க்க நலன்கள் ஏகாதிபத்தியப் போர் மற்றும் கொள்ளையுடன் இணக்கமாக மட்டுமல்லாமல், அதைச் சார்ந்தும் உள்ளன. இது சிரியாவில் ஏகாதிபத்திய ஆட்சி மாற்ற நடவடிக்கையையும் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போரையும் அவர்கள் ஏன் ஆதரிக்கிறார்கள் என்பதை தெளிவாக்குகிறது.

சிரியாவில் ஏகாதிபத்திய ஆதரவிலான ஆட்சி மாற்றத்திற்கான போலி-இடதுகளின் ஆதரவானது, இந்த அரசியல் போக்கிற்கும் அதன் முன்னோடிகளுக்கும் எதிராக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு பல தசாப்தங்களாக நடத்திய போராட்டத்தின் வரலாற்று முக்கியத்துவத்தை வெளிப்படுத்திக் காட்டுகிறது.

போலி-இடதுகளுக்குள் ஒரு முக்கிய இடத்தை ஆக்கிரமித்துள்ள பப்லோவாத அமைப்புகள், தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர தகைமையை வெளிப்படையாக நிராகரித்ததன் அடிப்படையில், 1953 இல் மிஷேல் பப்லோ தலைமையிலான ட்ரொட்ஸ்கிச இயக்கத்தில் ஏற்பட்ட ஒரு பிளவுடன் காண முடியும். முதலாளித்துவத்தின் கீழ் தொழிலாள வர்க்கமே பிரதான புரட்சிகர சக்தி என்ற மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸால் ஸ்தாபிக்கப்பட்ட சோசலிசக் கோட்பாட்டைக் கைவிட்டு, பப்லோவாதிகள் சோவியத் ஒன்றியத்தில் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் பிரிவுகள், முன்னாள் காலனித்துவ நாடுகளில் முதலாளித்துவ தேசியவாத இயக்கங்கள், மற்றும் ஏகாதிபத்திய மையங்களில் சமூக ஜனநாயகவாதிகள் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தினரின் பிரிவுகளில் புதிய கூட்டாளிகளைத் தேடினர்.

நீண்டகாலத்திற்கு முன்னரே சோசலிச அரசியலுடனான அத்தனை உறவுகளையும் துண்டித்துக் கொண்டு, சிதைந்து வரும் உலக முதலாளித்துவ கட்டமைப்பிற்குள் தங்களின் சடரீதியான தனிச்சலுகைகளை கட்டுப்பாடின்றி பின்தொடர்வதை நோக்கி திரும்பியுள்ள பப்லோவாதிகளும், அதனுடன் இணைந்த அமைப்புகளும் இப்போது ஏகாதிபத்தியத்தின் நேரடி சேவகர்களாகவும் ஒத்துழைப்பாளர்களாகவும் அம்பலப்பட்டு நிற்கின்றனர்.

மத்திய கிழக்கிலும் ஏனைய இடங்களிலும் ஏகாதிபத்திய யுத்தம் மற்றும் நவகாலனித்துவ ஆதிக்கத்திற்கு எதிராக போராட விரும்பும் உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் புத்திஜீவிகள் எதிர்கொள்ளும் தீர்க்கமான பணி, பப்லோவாதம் மற்றும் திருத்தல்வாதத்தின் அனைத்து வடிவங்களுக்கும் எதிராக, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு உலக சோசலிசப் புரட்சி வேலைத்திட்டத்திற்கான போராட்டத்தில் வென்றெடுத்த முக்கிய படிப்பினைகளை கிரகித்துக்கொள்வதாகும்.

கொடூரமான காலனித்துவ ஆதிக்கம் மற்றும் இனப்படுகொலையின் மிருகத்தனமான வடிவங்களை மீண்டும் உயிர்ப்பிக்கும் ஏகாதிபத்திய சக்திகள் உலகை மீண்டும் மறுபங்கீடு செய்வதற்காக இறங்கியுள்ளன. இந்த சூழலில், ஏகாதிபத்திய சக்திகளுக்கும் ஏகாதிபத்தியப் போருக்கும் சமரசமற்ற எதிர்ப்பு, “ஜனநாயக” அல்லது “புரட்சிகர மாற்றத்தின்” பெயரில் ஏகாதிபத்தியம் அல்லது பிற பெரும் சக்திகளுடன் கூட்டணிகளைத் தேடும் முதலாளித்துவ மற்றும் குட்டி முதலாளித்துவ சக்திகளின் அனைத்துப் பிரிவுகளிலிருந்தும் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்திற்கான போராட்டம் ஆகியவை இந்தப் படிப்பினைகளில் உள்ளடங்கி உள்ளன.

ஏகாதிபத்திய போர் மற்றும் சர்வாதிகாரத்திற்கு எதிரான ஒரு வெற்றிகரமான போராட்டத்திற்கு, ஒரு சோசலிச மற்றும் சர்வதேசிய வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஏகாதிபத்திய மையங்களிலும் முன்னாள் காலனித்துவ நாடுகளிலும் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதற்கு அவசியமான புரட்சிகர தலைமையாக, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவையும் அதனுடன் இணைந்த சோசலிச சமத்துவக் கட்சிகளையும் கட்டியெழுப்புவது மிகவும் அவசியமாகும்.

Loading