மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
“நிதிப் பிரபுத்துவமே சட்டங்களை இயற்றியது; அது அரசின் நிர்வாகத் தலைமையில் இருந்தது; ஒழுங்கமைக்கப்பட்ட அனைத்துப் பொது அதிகார நிறுவனங்களையும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது. அது நடப்பு சமூக நிலைமைகள் மற்றும் பத்திரிகைகளின் வழியாகவும் பொதுஜனங்களின் கருத்தின் மீது ஆதிக்கம் செலுத்தியது. மீண்டும் மீண்டும் அதே விபச்சாரம், அதே வெட்கமற்ற மோசடி, அதே செல்வவெறி—இவைகள் அரச நீதிமன்றம் முதல் ‘கஃபே போர்ன்’ எனப்படும் (சூதாட்ட கூடாரங்கள், விபச்சார விடுதிகள், ஊழலால் அழுகிய குடிவெறி மையங்கள், மற்றும் பிற கிரிமினல் இடங்கள்) வரை, சமூகத்தின் அனைத்து பகுதிகளிலும் நிகழ்ந்தன. இவைகள் பொருள் உற்பத்தியின் மூலமாக செல்வத்தை திரட்டுவதற்கு மாறாக, ஏற்கெனவே பிறர் உழைப்பால் உருவான செல்வத்தை அபகரிப்பதன் மூலமாகவே செழித்தன. முதலாளித்துவத்தின் சட்டங்கள் கூட தமக்குள்ளே ஒவ்வொரு கணமும் தொடர்ந்து மோதுவதும், ஒரு கட்டுப்பாடற்ற, ஆரோக்கியமற்ற இச்சைப் பசியின் வெளிப்பாடாக, குறிப்பாக, முதலாளித்துவ சமூகத்தின் மேல் தட்டில் தன்னைத் தானே வெளிப்படுத்திக் கொண்டது, சூதாட்டத்தால் பெறப்பட்ட செல்வம் இயல்பாகவே அதனுடைய திருப்தியை நாடும் இன்பங்கள், அழுக்கு விருப்பங்களாகவும் (crapeleaux), பணம், ஊழல் மற்றும் இரத்தம் ஆகியவற்றுடன் பிரிக்க முடியாதபடி கலந்து காட்சி தந்தது. இந்த நிதிப் பிரபுத்துவமானது அதன் செல்வக் கையகப்படுத்தும் முறையிலும் அதன் இன்ப நாட்டங்களிலும், முதலாளித்தவ சமூகத்தின் உயர் மட்டத்திலுள்ள லும்பன்பாட்டாளியின் (கழிசடைபாட்டாளியின்) மறுபிறப்பே தவிர வேறு எதுவுமல்ல.”
விஞ்ஞானபூர்வ சோசலிசத்தின் ஸ்தாபகரான கார்ல் மார்க்ஸ், பிரான்சில் வர்க்கப் போராட்டங்கள் 1848-1850 (The Class Struggles in France, 1848-1850), என்ற நூலில் மேற்குறிப்பிட்டவாறு எழுதினார். ஏனைய பல துறைகளைக் குறித்து ஆய்வு செய்தது போலவே, மார்க்ஸ் அவரது காலத்தில் முதலாளித்துவ சமூகத்தின் இழிபுகழ் குறித்த ஒரு கடுமையான விமர்சனத்தை மட்டும் வழங்கவில்லை, மாறாக இன்றும் முதலாளித்துவ அரசியலுக்குப் பின்னால் உந்து சக்தியாக இருக்கும் ஒரு சமூக-பொருளாதார அமைப்புமுறையாக முதலாளித்துவத்தின் அடிப்படைப் போக்குகள் குறித்த ஒரு பகுப்பாய்வையும் வழங்கினார். பிரான்சில் 1848 புரட்சிக்கு முந்தைய காலகட்டத்தைப் போலவே, டொனால்ட் ட்ரம்ப், பாசிச ஒட்டுண்ணிகளான அவரது குடும்பம் மற்றும் மோசடியாளர்கள் இவர்களின் உருவத்தில், முதலாளித்துவ சமூகத்தின் உயர் மட்டத்தில் ” செல்வக் குவிப்பிற்காக அனைத்து வகையான குற்றச்செயல்களும் மீண்டும் மீள்எழுவதைக் காண்கிறோம்.
ட்ரம்ப் குடும்ப ஊழல் என்பது தொடர்ச்சியாக, முதன்மையான அரசியல் குற்றவியல் நிலையாகவே தொடர்கிறது. டிரம்பின் முதலாவது ஆட்சிக் காலத்தில், பெருநிறுவனங்களும் வெளிநாட்டு அரசாங்கங்களும் அவரது குடும்பச் சொத்துகளை நேரடியாகச் செழிப்பாக்கும் வகையில், ‘வணிக அடையாளமிடப்பட்ட’ அவரது ஹோட்டல்கள் மற்றும் ஓய்விடங்களை பின்வாசல் வழியாக பயன்படுத்தின. அத்தோடு வெளிப்படையான இவ்வகைச் செயற்பாடுகளுக்கு அப்பாற்பட்டபடி, அவரது மருமகனான ஜாரெட் குஷ்னரின் பன்னாட்டு ஒப்பந்தங்கள் மற்றும் நிதிநிலைச் செயல்பாடுகள் வழியாக, மேலும் பெரிய அளவில் செல்வம் குவிக்கப்பட்டது. சவுதி அரச குடும்பமும் வளைகுடா ஷேக்குகளும் மட்டும் அவரிடம் “முதலீடாக” ஒரு பில்லியன் டாலர்களுக்கும் அதிகமான தொகையை முதலீடு செய்தனர். இவைகள் அனைத்தும், ட்ரம்ப் குடும்பத்தின் அரசியல் அதிகாரத்தை தனிநலச் செல்வச் குவிப்பிற்கான கருவியாக மாற்றிய மோசடியையும், தற்போதைய அமெரிக்க முதலாளித்துவ ஆட்சி அமைப்பின் சீரழிவையும் அம்பலமாக்குகின்றன.
எவ்வாறாயினும், கடந்த நவம்பரில் ட்ரம்ப் மீண்டும் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதும், ஜனவரி 20 அன்று வெள்ளை மாளிகைக்குத் திரும்பியதும் இன்னும் மோசமான பணப் பேராசையின் ஆட்சியோடு சேர்ந்தே வந்தது. சில மதிப்பீடுகளின்படி, தேர்தலுக்குப் பிறகு ட்ரம்ப் குடும்பத்தின் செல்வம் இரட்டிப்பாகியுள்ளது. மிகக் குறைந்த விளம்பரமும் வாடிக்கையாளர் அடிப்படையும் உள்ளவையாக இருந்த போதும், அவரது சமூக ஊடக நிறுவனமான ட்ரூத் சோஷியல் (Truth Social) இன் பங்குகளின் விலை உயர்ந்துள்ளது. தனது பாசிச நிர்வாக உத்தரவுகளின் பிரதிகள் முதல் பைபிள்கள், கோல்ப் கிளப்புகள், கிட்டார்கள் என அவரது வணிக அடையாளமிடப்பட்ட (branded) பொருட்கள் விற்பனையில் அவர் பெருமளவு பணம் சம்பாதித்துள்ளார். வெள்ளை மாளிகையில் மூன்றாவது பதவிக்குப் போட்டியிடுவதை அரசியலமைப்பு தடை செய்திருந்த போதும், தனது எதிர்கால அரசியல் பிரச்சாரங்களுக்கு நிதியளிக்க, ட்ரம்ப் பல்வேறு அரசியல் நடவடிக்கை குழுக்களுக்காக $500 மில்லியன் டாலர்களை நன்கொடை வடிவில் குவித்துள்ளார்.
ஆனால் ட்ரம்ப் குடும்பம் கிரிப்டோ நாணய (cryptocurrency) சந்தையில் ஆழமாக குதித்ததன் ஊடாக, பிரமாண்டமாகக் குவிக்கப்பட்ட செல்வத்துடன் வேறு எந்த ஊழலையும் ஒப்பிட முடியாததாக உள்ளது. இந்த முயற்சியின் மையக் கட்டமைப்பாகவே அவர்களுக்குச் சொந்தமான 60 சதவீத பங்குகளை கொண்ட வேர்ல்ட் லிபர்ட்டி ஃபைனான்சியல் (World Liberty Financial) என்ற புதிய நிறுவனத்தை நிறுவினர். இந்த நிறுவனத்தை, ட்ரம்பின் மகன்களான டான் ஜூனியரதும் எரிக்கினதும் மேற்பார்வையோடு, ட்ரம்பின் மத்திய கிழக்கு தூதுவரான பில்லியனர் ஸ்டீவ் விட்காப்பின் மகன் சாக் விட்காஃப் இணைந்து இயக்குகிறார். வேர்ல்ட் லிபர்ட்டி தற்போது, ட்ரம்பின் அரசியல் கட்டுப்பாட்டின் கீழுள்ள கூட்டாட்சி நிதி அமைப்புகளால் “ஒழுங்குபடுத்தப்படுகிறதென” கூறப்படும், நிதி மோசடி திட்டங்களை முன்னெடுக்கும் நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து செயல்படுகிறது.
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பு, வேர்ல்ட் லிபர்ட்டி நிறுவனமானது அதிக ஆர்வத்தை ஈர்க்கவில்லை. ஆனால், ட்ரம்பின் வெற்றிக்குப் பிறகு, $WLFI எனப்படும் அதன் கிரிப்டோ நாணயத்தின் மதிப்பு 1.1 பில்லியன் டாலர்களாக உயர்ந்தது. போர்ட்யூன் மற்றும் ஃபோர்ப்ஸ் (Fortune and Forbes) பத்திரிகைகள் வெளியிட்ட மதிப்பீடுகளின்படி, ட்ரம்ப் குடும்பத்தின் மொத்த கிரிப்டோ சொத்து மதிப்பு 2.9 பில்லியனிலிருந்து 6.2 பில்லியன் டாலர்களுக்கும் இடையில் இருப்பதாகக் காட்டுகின்றன.
வேர்ல்ட் லிபர்ட்டி நிறுவனம் பற்றிய நீண்ட அறிமுகக் கட்டுரையில், நியூயார்க் டைம்ஸ் பின்வருமாறு எழுதியது:
பெரும்பாலும் ட்ரம்ப் குடும்ப நிறுவனத்திற்குச் சொந்தமான இந்த நிறுவனம், நவீன அமெரிக்க வரலாற்றில் முன்னுதாரணத்தை காட்ட முடியாத விதத்தில், தனியார் நிறுவனத்திற்கும் அரசாங்க கொள்கைக்கும் இடையிலான எல்லையை அகற்றி, பல நூற்றாண்டுகள் பழமையான ஜனாதிபதி விதிமுறைகளை அழித்துள்ளது.
திரு. ட்ரம்ப் இப்போது ஒரு பெரிய கிரிப்டோ நாணய வியாபாரி மட்டுமல்ல; அவர் தொழில்துறையின் சிறந்த கொள்கை வகுப்பாளரும் ஆவார். இதுவரை, தனது இரண்டாவது பதவிக்காலத்தில், ட்ரம்ப் தனது ஜனாதிபதி அதிகாரங்களை தொழில்துறைக்கு —சில சந்தர்ப்பங்களில், தனது சொந்த வணிகத்திற்கு—பயனளிக்கும் வகையில் பயன்படுத்தியுள்ளார். இருப்பினும், அவர் பல ஆண்டுகளாக கிரிப்டோ நாணயங்களை போதைப்பொருள் வியாபாரிகள் மற்றும் மோசடி செய்பவர்களின் புகலிடமாகக் கருதி இழிவுபடுத்தியிருந்தார்.
சாதகமான ஒழுங்குமுறை சார்ந்த முடிவுகளுக்கும் மற்றும் ஜனாதிபதியின் மன்னிப்புகளுக்கும் பிரதிபலனாக, ட்ரம்புக்கு வெறுமனே மறைமுகமாக இலஞ்சம் கொடுப்பதற்கு நிகராக பெரும் செல்வந்தர்கள் வேர்ல்ட் லிபர்ட்டி நிறுவனத்தை பயன்படுத்தியுள்ளனர். சுவரில் ஒட்டப்பட்ட வாழைப்பழத்தை சித்தரிக்கும் “கலைப்படைப்புக்கு” 6.2 மில்லியன் டாலர்கள் செலுத்தியதற்காக முன்னர் அறியப்பட்ட சீன கிரிப்டோ நாணய கோடீஸ்வரர் ஜஸ்டின் சுன், 75 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள $WLFI ஐ வாங்கியுள்ளார். அதன்பிறகு, இப்போது ட்ரம்ப் நியமித்த ஒருவரின் தலைமையில் செயல்படும் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம், சுன் நிறுவனத்திற்கு எதிரான மோசடி வழக்கு நடவடிக்கைகளை நிறுத்துமாறு கூட்டாட்சி நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டது. வேர்ல்ட் லிபர்ட்டியின் கிரிப்டோ பங்குதாரரான எதீனா லேப்ஸின் ஆர்தர் ஹேய்ஸ், 2022 இல் வங்கி இரகசியச் சட்டத்தை மீறியதற்காக குற்றத்தை ஒப்புக்கொண்டார். ட்ரம்ப் மார்ச் 27 அன்று ஹேய்ஸுக்கு முழு மன்னிப்பு வழங்கினார்.
ட்ரம்ப் தொழில்துறைக்கு சாதகமான தொடர்ச்சியான கொள்கைகளை ஏற்றுக்கொண்டிருந்தாலும் கூட, ட்ரம்பிற்கு தனிப்பட்ட முறையில் இலாபம் ஈட்டித்தரும் வேர்ல்ட் லிபர்ட்டியுடன் குறைந்தது ஐந்து கிரிப்டோ நாணய நிறுவனங்கள் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன. இதில் அமெரிக்க கருவூலம், தொழில்துறையில் முன்னணி வகிக்கும் பிட்காயின் (Bitcoin) மற்றும் டெதர் (Tether) உள்ளிட்ட கிரிப்டோ நாணயங்களின் இருப்பை கூட்டாட்சி உருவாக்கும் என்ற அறிவிப்பும் அடங்கும். இந்த அறிவிப்புக்குப் பிறகு, டெதரின் விலை 13 சதவீதம் உயர்ந்தது. வேர்ல்ட் லிபர்ட்டியில் உள்ள டெதரினானது அதனுடைய சொந்த பங்குகளில் 33 மில்லியன் டாலர்கள் இலாபத்தை ஈட்டியது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இந்தப் பங்கு தொடர்பான ட்ரம்பின் முடிவு 33 மில்லியன் டாலர்களை அவரது சொந்தப் பாக்கெட்டிற்கு கொண்டுவந்தது.
ட்ரம்ப் தனது இரண்டாவது ஆட்சியில் அதிகாரம் மற்றும் செல்வத்திற்காக வெட்கமற்று விலைக்கு வாங்குதல்கள் புதிய உச்சத்துக்கு அழைத்துச் சென்றது “மீம்காயின்” (“memecoins”) எனப்படும் கிரிப்டோ நாணயங்களின் வெளியீட்டின் மூலமாகும். இந்த கிரிப்டோ நாணயம் என்பது ஒரு நகைச்சுவை, வாசகம் அல்லது குறிப்பிட்ட நபரின் பிரபலத்துடன் இணைக்கப்பட்ட, உள்ளார்ந்த மதிப்பின்றி தோன்றும் டிஜிட்டல் நாணயங்கள் ஆகும். அனைத்து கிரிப்டோ நாணயங்களும், மதிப்பு எதையும் பிரதிநிதித்துவப்படுத்தாத, வெறும் கணினி நிரல்களால் உருவாக்கப்படும் டோக்கன்களாகும். அவை அதிக அளவிலான மின்சார சக்தியை பயன்படுத்தி கணக்கீட்டு செயல்முறைகள் வழியாக உருவாகின்றன. அதன் விளைவாக, சமூக வளங்களின் ஒரு முக்கியமான பகுதி முழுமையாக வீணடிக்கப்படுகிறது. இவை சந்தையில் ஊக வணிகங்களை ஊக்குவிக்கும் கருவிகள் மட்டுமே. பெரும்பாலானவை எளிய பொன்சி மோசடி மாதிரியாக செயல்படுகின்றன: அதாவது புதிய முதலீட்டாளர்களால் விலை உயர்த்தப்படுகின்றது; விலை உயர்வது வரை இன்னும் புதிய முதலீட்டாளர்கள் நுழைகின்றனர். ஆனால், அந்த வெறித்தனமான வாங்கும் சுழற்சி நிறைவடையும் தருணத்தில், அது நாற்காலிகளற்ற இசை விளையாட்டைப் போல முடிகிறது. மதிப்பானது பூஜ்ஜியத்தை நெருங்குகிறது; இறுதியில் வைத்திருப்பவர்கள் அனைத்தையும் இழக்கிறார்கள்.
ட்ரம்ப் தனது பதவியேற்புக்கு முன்னதாக $TRUMP மற்றும் $MELANIA ஆகிய இரண்டு மீம்காயின்களை வெளியிட்டார். அவரின் உள்வட்டத்தினர் அவற்றை மலிவாக, சில்லறைகளுக்கு வாங்கி, பின்னர் அதன் விலை 7,000 டாலர்களுக்கும் அதிகமாக உயர்ந்தபோது அவற்றைப் பணமாக்கினர். மே 8 இல் வெளியிடப்பட்ட ஒரு பகுப்பாய்வில், வாஷிங்டன் போஸ்ட் இவ்வாறு தெரிவித்தது: “கிட்டத்தட்ட 67,000ம் புதிய கிரிப்டோ நாணயக்காரர்கள் ட்ரம்பின் மீம்கிரிப்டோ திட்டத்தில் பந்தயம் கட்ட தங்கள் டெபிட் கார்டுகளை பயன்படுத்தினர். … இதுவரையில், இது ஒரு மிகப்பெரிய தோல்வியாகும்.” ட்ரம்புக்கு தனிப்பட்ட முறையில் ஆதாயமளிக்கும் கொள்முதல்களில் 15 மில்லியன் டாலர்களை முதலீடு செய்த சிறிய முதலீட்டாளர்களில், 80 சதவீதமானவர்கள் பணத்தை இழந்தனர், 3 சதவீதம் பேர் மட்டுமே ஆதாயம் அடைந்தனர். தனது இந்த ஏமாளி ஆதரவாளர்களைப் பலியாகக் கொடுத்தது பற்றியும், விலை ஏற்ற இறக்கம் குறித்தும் ஞாயிற்றுக்கிழமை NBC செய்தியாளர் ட்ரம்ப்பிடம் கேட்டபோது, “நான் அதைப் பார்க்கக்கூட இல்லை” என்று அலட்சியமாக பதிலளித்தார்.
எவ்வாறிருப்பினும், பெரு முதலீட்டாளர்களின் விடையிறுப்பு குறித்து ட்ரம்ப் கவலை கொண்டிருந்தார். ஏப்ரல் 23 அன்று தனது மீம்காயின்களை அதிக அளவில் வைத்திருப்பவர்களுக்கு மே 22 அன்று ஒரு சிறப்பு “காலா இரவு விருந்து” என்ற ஒரு சிறப்பு நிகழ்வில் விருந்தளிப்பதாக அறிவித்தார். ஒரு சலசலப்புக்குப் பிறகு, அந்த இடம் வெள்ளை மாளிகையில் இருந்து புளோரிடாவில் உள்ள அவரது மார்-அ-லாகோ எஸ்டேட்டுக்கு மாற்றப்பட்டது. இதனால், நான்கு நாட்களில் மீம்காயின்களின் விலை 69 சதவீதம் உயர்ந்தது.
ஜனாதிபதிக்கான அணுகலை விற்பதானது, அரசியலமைப்பின் ஊதிய விதியை மீறுவதாகும் என்று வர்ணனையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஆனால், டரம்பின் முதல் பதவிக் காலத்தில் இந்த விவகாரம் தொடர்பாக அவருக்கு எதிரான வழக்கை ஒரு கீழ் உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. ஆனால், ட்ரம்ப்பின் இரண்டாவது பதவிக்காலத்தில் அப்பட்டமாகவுள்ள சுய-செழிப்பூட்டலுக்கு எதிராக வாஷிங்டனில் உத்தியோகபூர்வமாக எந்தவொரு முணுமுணுப்பும் எழவில்லை.
இரண்டு மாதங்களுக்கு முன்பு, மார்ச் 6 அன்று, கனெக்டிகட் மாநிலத்தைச் சேர்ந்த ஜனநாயகக் கட்சி செனட்டர் கிறிஸ் மர்பி, ட்ரம்பின் ஊழல் தொடர்பான ஆதாரங்களைச் செனட்டில் விரிவாக வெளியிட்டார். இருப்பினும் அவரது கட்சியின் சக உறுப்பினர்கள் அதில் ஆர்வமின்றி இருந்தனர். பெருநிறுவன ஊடகங்கள் பெரிதாகவே அதைக் குறிப்பிடவில்லை. வெள்ளை மாளிகை எத்தகைய பதிலையும் இதற்கு அளிக்கவில்லை. முன்னைய ஜனாதிபதிக் காலங்களில் இது போன்ற ஒரு தகவல் பெரும் ஊடக சலசலப்பையும் பதவி நீக்கத்திற்கான அழைப்புகளையும் ஏற்படுத்தியிருக்கும்.
கடந்த ஜூலையில், ட்ரம்ப் எதிர் அமெரிக்கா என்னும் வழக்கில் உச்ச நீதிமன்றம் அதன் தீர்ப்பை வழங்கியது. எந்தவொரு அமெரிக்க ஜனாதிபதியும் தனது கடமைகளின் ஒரு பகுதியாக மேற்கொள்ளும் செயல்களுக்காக, வழக்குத் தொடருவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறார் என்று தீர்ப்பு அறிவித்தது. மன்னிப்புகளை வழங்குவது அல்லது ஒழுங்குமுறை அமைப்புகளுக்கும் அமெரிக்க கருவூலத்திற்கும் உத்தரவுகளை அனுப்புதல், பல்லாயிரக்கணக்கான டாலர்களை தனிப்பட்ட இலாபமாக ஈட்டுதல் போன்ற நடவடிக்கைகளுக்கு இது பொருந்தும். இதன் விளைவாக தனிநபர் இலாபமாக பல மில்லியன்கணக்கான டாலர்கள் ஈட்டப்படுகிறது. நலன் முரண்பாடு விதிகள் ஜனாதிபதிக்கு பொருந்தாது.
மேலும், ட்ரம்பின் நிர்வாக உத்தரவு 14178 இன் கீழ், போதைப்பொருள் விற்பனையாளர்கள் அல்லது பயங்கரவாதிகளால் பணமோசடி செய்வது தொடர்பானவையைத் தவிர, மற்றவர்கள் மீது “டிஜிட்டல் சொத்துக்கள்” தொடர்பான குற்றவியல் வழக்குகளைத் தொடர வேண்டாம் என்று நீதித்துறையானது வழக்கறிஞர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் மூலம், அமெரிக்க ஜனாதிபதி, இயல்பாகவே, அந்த விதிவிலக்கு பட்டியலில் உள்ளவராகக் கருதப்படுகிறார்.
கடந்த வாரம், உலகின் பணக்கார எண்ணெய் ஷேக் ராஜ்ஜியங்களில் ஒன்றான ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அரசு முதலீட்டு நிறுவனமானது, வேர்ல்ட் லிபர்ட்டி ஃபைனான்சியல் நிறுவனம் வெளியிட்ட புதிய கிரிப்டோ நாணயத்தை வாங்குவதற்கு 2 பில்லியன் டாலர்களை முதலீடு செய்வதாக அறிவித்தது. இந்த ஒப்பந்தம் துபாயில் சாக் விட்காஃப் என்பவரால் அறிமுகப்படுத்தியபோது, எரிக் ட்ரம்ப் அவருடன் இருந்தார். அதே நாளில், பைடென் நிர்வாகத்தால் கட்டுப்படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவில் பயன்படுத்தப்படும் என்விடியா சிப்ஸ்களை (Nvidia chips) ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு விற்பனை செய்வதற்கான கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து ட்ரம்ப் நிர்வாகம் பரிசீலித்து வருவதாக ப்ளூம்பெர்க் நியூஸ் செய்தி வெளியிட்டது.
அமெரிக்காவில் ஊழல் மோசடிகளுக்கான நீண்ட வரலாறு உள்ளது. நூற்றாண்டுக்கு முன்னரே மார்க் டுவைன், “அமெரிக்காவில் தனிச்சிறப்புடைய குற்றவியல் வர்க்கம் ஒன்றும் இல்லை—காங்கிரசைத் தவிர,” என்று புகழ்பெற்ற முறையில் குறிப்பிட்டார். 1920களின் தொடக்கத்தில், எண்ணெய்க் குத்தகைகளை இலாபகரமாகப் பெற இலஞ்சம் கொடுக்கப்பட்டதன் அடிப்படையில் பரபரப்பை ஏற்படுத்திய டீபாட் டோம் (Teapot Dome) ஊழல் வழக்கு, உள்துறை அமைச்சர் ஆல்பர்ட் ஃபால் சிறைக்கு அனுப்பப்பட்டதில் முடிந்தது. சிறைத் தண்டனையை அனுபவித்த முதல் அமெரிக்க அமைச்சரவை உறுப்பினராக அவர் வரலாற்றில் பதிவாகினார். ஊழலுக்காக கைது செய்யப்பட்டு, வழக்குத் தொடுக்கப்பட்டு, தண்டனை பெற்ற காங்கிரஸ் உறுப்பினர்கள் மற்றும் செனட்டர்களின் பட்டியல் மிக நீளமானதுதான்; இது இருகட்சிக்குள்ளும் மையமாகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டில் ஜனநாயகக் கட்சி செனட்டர் பாப் மெனண்டெஸ் தங்கக் கட்டிகள் மற்றும் இலஞ்ச வருமானங்களை தனது வீட்டில் பதுக்கி வைத்திருந்ததற்காக தண்டிக்கப்பட்ட நிகழ்வில் இது உச்சநிலையை எட்டியது.
ஆனால், ட்ரம்ப்பின் ஆட்சியானது ஒரு புதிய கட்டத்தைக் குறிக்கிறது. இது பில்லியனர்களின், பில்லியனர்களால், பில்லியனர்களுக்காக நடத்தப்படும் அரசாங்கம் என்றும், அதன் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ளவும், அது பிரதிநிதித்துவப்படுத்தும் வர்க்கத்தை வளப்படுத்தவும் மிகவும் இழிவான மற்றும் ஜனநாயக விரோத முறைகளைப் பயன்படுத்துகிறது என்றும் நாங்கள் கூறியுள்ளோம்.
உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவர் டேவிட் நோர்த் எமது மே தினப் பேரணியில் கீழ்வருமாறு கூறினார்:
மோசடியின் துர்நாற்றம் வீசும் சாணக் குவியலின் மேல் வெள்ளை மாளிகை மிதக்கிறது. ஒரு மோசமான ஏமாற்றுக்காரரும் தலைசிறந்த ஏமாற்று வித்தகருமான ட்ரம்ப், ஒரு குற்றவியல் தன்னலக்குழுவின் உருவகமே தவிர வேறொன்றுமில்லை.