முன்னோக்கு

வாகனத்துறை தொழிலாளி ரொனால்ட் ஆடம்ஸ் சீனியரின் மரணம் குறித்த சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியின் விசாரணையை ஆதரியுங்கள்!

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

ரொனால்ட் ஆடம்ஸ், சீனியர் [Photo by Adams Family]

உலக சோசலிச வலைத் தளம் தொழிலாளர்களை இதுபற்றிய தகவல்களுடன் முன்வருமாறும் இந்த விசாரணைக்கு ஆதரவளிக்குமாறும் கேட்டுக் கொள்கிறது. உங்கள் கருத்துக்களை எங்களுக்கு அனுப்ப இந்தக் கட்டுரையின் இறுதியிலிருக்கும் படிவத்தை நிரப்பவும்.

ரொனால்ட் ஆடம்ஸ் சீனியரின் (Ronald Adams Sr.) முற்றிலும் தடுக்கக்கூடிய மரணம் குறித்து சாமானிய தொழிலாளர்களின் தலைமையில் ஒரு சுயாதீனமான விசாரணைக்கு சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணி விடுத்த அழைப்பை சோசலிச சமத்துவக் கட்சியும் உலக சோசலிச வலைத் தளமும் ஆதரிக்கின்றன.

ரொனால்ட் ஆடம்ஸ் சீனியர், 63 வயதான இயந்திரம் பழுதுபார்ப்பவர், ஏப்ரல் 7, 2025 அன்று தென்கிழக்கு மிச்சிகனில் உள்ள ஸ்டெல்லாண்டிஸின் டண்டீ இயந்திர வளாகத்தில் நசுங்கி இறந்துள்ளார். ஆரம்ப அறிக்கைகளின்படி, 7300வது பிரிவில் ஒரு சினடிக் கழுவும் இயந்திரத்தை இயங்கவைக்கும் பணியின்போது அதிகாலையில் அவர் கொல்லப்பட்டார். அப்போது அவரின் தலைக்கு மேல் இருந்த ஒரு பழுதூக்கி இயந்திரம் எதிர்பாராத விதமாக அவரைக் குத்தியதில், அவரது மேல் உடற்பகுதி ஆபத்தான முறையில் நசுங்கியது.

ஆடம்ஸ் பரவலாக மதிக்கப்படும் மற்றும் நேசிக்கப்படும் மனிதராக இருந்தார். அவரது விதிவிலக்கான திறமைக்காக மட்டுமல்லாமல், பாதுகாப்பிற்கான அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்காகவும் ஆலை முழுவதும் அறியப்பட்டவராக இருந்தார். சக ஊழியர்களால் “ஆலையின் பாதுகாவலர்” என்று குறிப்பிடப்பட்ட ஆடம்ஸ் அவரைச் சுற்றியுள்ளவர்களின் நம்பிக்கையைப் பெற்றிருந்தார்.

ஆடம்ஸ்சின் மரணம் பாரிய துயரத்தை குடும்பத்துக்கு விட்டுச் சென்றுள்ளது. அவர் ஷமீனியா ஸ்டீவர்ட்டின் அன்புக் கணவராகவும், 10 குழந்தைகளின் தந்தையாகவும், 11 பேரக்குழந்தைகளின் தாத்தாவாகவும், அவரது சமூகத்தில் உள்ள பல இளைஞர்களுக்கு வழிகாட்டியாகவும் பயிற்சியாளராகவும் இருந்தார். அவரது மரணம் ஒரு குடும்பத்தையும், அவர் பணிபுரிந்த பணியிடத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அதே நேரத்தில், அவரது சக ஊழியர்களும் அன்புக்குரியவர்களும் உண்மையையும் பொறுப்புக்கூறலையும் கோருவதற்கு ஒன்றுபட்டுள்ளனர்.

ஆடம்ஸ் இறந்து ஐந்து வாரங்களுக்கும் மேலாகியும், ஸ்டெல்லாண்டிஸ், ஐக்கிய வாகனத்துறை தொழிலாளர்கள் சங்கம் (UAW) மற்றும் மிச்சிகன் தொழில்சார் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிர்வாகம் (MIOSHA) ஆகியவை இந்தப் பேரழிவு ஏன் நிகழ்ந்தது என்பதற்கு எந்த விளக்கத்தையும் வழங்கவில்லை. பதில்களை விட இன்னும் அதிகமான கேள்விகள் உள்ளன: இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களில் பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் பணிகளின் போது அபாயகரமான மூலங்களிலிருந்து தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்கான சாதனம் கைவிடப்பட்டிருந்ததா? இதற்கு முன்பு கேன்ட்ரி பழுதூக்கி செயலிழந்து இருந்ததா? ஊழியர்கள் பற்றாக்குறை, வேலையை விரைவுபடுத்தும் கோரிக்கைகள் அல்லது செலவுக் குறைப்பு நடவடிக்கைகள் இந்த அபாயகரமான சம்பவத்திற்கு பங்களிப்பு செய்ததா? எந்த குறிப்பிட்ட பாதுகாப்பு மீறல்களோ அல்லது அமைப்பு ரீதியான தோல்விகளோ இந்த சம்பவம் நிகழ்வதற்கு அனுமதித்து இருந்தனவா?

உலக சோசலிச வலைத் தளம் தாக்கல் செய்த தகவல் சுதந்திரச் சட்டத்தின் கோரிக்கையை, மிச்சிகன் தொழில்சார் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிர்வாகம், பொது வெளிப்படுத்தல் அதன் விசாரணையில் தலையிடும் என்று கூறி கடந்த புதன்கிழமை நிராகரித்திருந்தது. எந்தவொரு “வெளிப்புற தலையீடும்” சாட்சியத்தையும் விசாரணையின் நேர்மையையும் சமரசம் செய்யக்கூடும் என்று MIOSHA நிர்வாகத்தின் கடிதம் கூறியது.

உண்மையில் இது ஒரு வெளிப்படையான மூடிமறைப்புக்கான ஒரு தீவிர அறிகுறியாகும். இது பெருநிறுவன மற்றும் தொழிற்சங்க அதிகாரிகளை விசாரணையிலிருந்து பாதுகாக்கும் முயற்சியாகும். அதேவேளையில், அவர்கள் இந்த சம்பவத்துக்கு பொறுப்பானவர்களை விடுவிக்க ஒரு கண்துடைப்புக்கு தயாரிப்பு செய்கிறார்கள்.

பணியிட இறப்புக்களை விசாரிக்கும் முறையான பொறுப்பை MIOSHA நிர்வாகம் கொண்டுள்ளது என்றாலும், அது பெருநிறுவனங்களுடன் நெருக்கமான உறவுகளைப் பராமரிக்கும் ஒரு அரசு எந்திரத்திற்குள்ளேயே செயல்படுகிறது. உண்மையை வெளிக்கொணரவும் மற்றும் இதற்குப் பொறுப்பானவர்களை பொறுப்புக்கூற வைக்கவும், ஆடம்ஸின் மரணம் குறித்த விசாரணையை சாதாரண தொழிலாளர்களே மேற்கொள்ள வேண்டும்.

ஒரு சுயாதீன விசாரணைக்கு ஆதரவான மற்றொரு வலுவான வாதம், ஆரம்பத்தில் இருந்தே பெருநிறுவன-அரசு மூடிமறைப்பில் ஒரு பங்காளியாக செயல்பட்டுவரும் UAW தொழிற்சங்க எந்திரத்தின் பங்கு ஆகும். ஆடம்ஸின் மரணத்திற்குப் பிறகு மூன்று வாரங்களுக்கும் மேலாக UAW அமைதியாக இருந்து மெளனம் காத்தது.

இதன் பின்னர், ஏப்ரல் 28 தொழிலாளர் நினைவு தினத்தன்று, நிறுவனம் சமூக ஊடகங்களில் ஒரு மேலோட்டமான படத்தை வெளியிட்டு கொல்லப்பட்ட தொழிலாளர்களில் ஆடம்ஸை பட்டியலிட்டது. அவர் ஒரு கேன்ட்ரி பழுதூக்கி இயந்திரத்தினால் நசுக்கப்பட்டதாகவும், மேலும், இந்த “சம்பவம்” கூட்டு “UAW-ஸ்டெல்லாண்டிஸ் சுகாதார மற்றும் பாதுகாப்புத் துறையால்” விசாரிக்கப்பட்டு வருவதாகவும் சுருக்கமாக நிறுவனம் குறிப்பிட்டது.

இது, ஸ்டெல்லாண்டிஸ் நிர்வாகிகள் மற்றும் UAW-ஸ்டெல்லாண்டிஸ் துறை இயக்குனர் கெவின் கோடின்ஸ்கி ஆகியோரின் கூட்டுக் கருத்துகள் இடம்பெற்ற ஒரு காணொளியும் இடம்பெற்றிருந்தது. அதில் அவர்கள், பாதுகாப்பான முறையில் பணியிடத்தை பராமரிப்பதற்கான அவர்களின் “கூட்டு முயற்சிகளை” பாராட்டினர். அதே நேரத்தில், தொழிலாளர்களின் பாதுகாப்பற்ற செயல்களே விபத்துக்களுக்குக் காரணம் என்று குற்றம் சாட்டினர். அப்போதிருந்து, UAW தொழிற்சங்க எந்திரம் குற்ற உணர்ச்சியுடன் மௌனம் காத்து வருகிறது.

முற்றிலும் பெருநிறுவன நலன்களுடன் பிணைந்துள்ள ஐக்கிய வாகன தொழிலாளர்கள் சங்கத்தை கட்டுப்படுத்தும் அதிகாரத்துவத்தினர் இதற்கு ஏதும் செய்யப் போவதில்லை.  பல தசாப்தங்களாக, தொழிற்சங்க எந்திரம் “போட்டித்தன்மை” என்ற பெயரில் வேலைநிறுத்தங்களை ஒடுக்குவதற்கும், வேலைநீக்கங்களைத் திணிப்பதற்கும், ஊதியங்கள் மற்றும் சலுகைகளை வெட்டுவதற்கும் வாகனத்துறை நிறுவனங்களுடனும் அடுத்தடுத்து வந்த ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி நிர்வாகங்களுடனும் கைகோர்த்து வேலை செய்துள்ளது. ஒரு “சீர்திருத்தவாதி” என்று ஊடகங்களால் புகழப்படும் ஐக்கிய வாகன தொழிலாளர்கள் சங்கத்தின் இப்போதைய தலைவர் ஷான் ஃபெயின், இதே பெருநிறுவன-சார்பு நிகழ்ச்சிநிரலை முன்னெடுத்து வருகிறார்.

இது எந்தத் தொழில் துறையாக இருந்தாலும், ஒவ்வொரு தொழிலாளியும் நன்கு அறிந்த ஒரு அனுபவம் ஆகும். இது, பெருநிறுவன நிர்வாகத்தாலும், புகார்களைப் புறக்கணித்து காயங்கள் மற்றும் இறப்புகளை மறைக்கும் தொழிற்சங்க எந்திரத்தாலும் செயல்படுத்தப்படும் தொடர்ச்சியான புறக்கணிப்பு, அலட்சியம் மற்றும் பாதுகாப்பற்ற நிலைமைகளாகும்.

AFL-CIO தொழிற்சங்கத்தின் கூற்றுப்படியே, அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் 140,000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அபாயகரமான வேலையிட நிலைமைகளால் இறக்கின்றனர். இதில், 5,000 க்கும் அதிகமானவர்கள் அதிர்ச்சிகரமான காயங்களாலும், எஞ்சியவர்கள் புற்றுநோய், சுவாச நோய் மற்றும் இதய செயலிழப்பு போன்ற தொழில்சார் நோய்களாலும் இறக்கின்றனர். இது, அமெரிக்காவின் தொழில்துறை படுகொலை கூடங்களில் ஒவ்வொரு நாளும் 380 க்கும் மேற்பட்ட தடுக்கக்கூடிய இறப்புகளைக் குறிக்கிறது. இருப்பினும், 1,800க்கும் குறைவான மத்திய மற்றும் மாநில அரசு ஆய்வாளர்கள் 11 மில்லியன் பணியிடங்களை மேற்பார்வையிடும் நிலையில், ஒவ்வொரு 85,000 தொழிலாளர்களுக்கும் ஒரு ஆய்வாளர் மட்டுமே உள்ளார்.

சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் கிட்டத்தட்ட 3 மில்லியன் தொழிலாளர்கள் வேலை தொடர்பான காயங்கள் மற்றும் நோய்களால் இறக்கின்றனர் என்று மதிப்பிடுகிறது. இவற்றில் சுமார் 330,000 பேர்கள் அதிர்ச்சிகரமான காயங்களுக்கு உள்ளாகின்றனர். அதே நேரத்தில், 2.6 மில்லியனுக்கும் அதிகமானவை புற்றுநோய், இரத்த ஓட்ட செயலிழப்பு மற்றும் சுவாச நோய் போன்ற நாள்பட்ட தொழில்சார் நோய்களால் ஏற்படுகின்றன. உலகளாவிய இறப்பு எண்ணிக்கை 2000 க்குப் பின்னர் இருந்து 12 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரித்து வருகிறது.

பெருநிறுவனங்களும் அரசாங்கங்களும் மனித உயிர்களை விட இலாபங்களுக்கும் “வணிக தொடர்ச்சிக்கும்” முன்னுரிமை அளித்து வருகின்ற நிலையில், தொழிற்சாலைகள், பண்டகசாலைகள், பள்ளிகள், அலுவலகங்கள் மற்றும் இறைச்சி வினியோக ஆலைகள் என வேலையிடங்கள் எங்கிலும் மிக வேகமாக பரவி வரும் கோவிட்-19 ஆல் கடந்த ஐந்து ஆண்டுகளில் உயிரிழந்த மில்லியன் கணக்கான மக்கள் இந்த அதிர்ச்சியூட்டும் எண்ணிக்கையில் சேர்க்கப்படவில்லை.

தொழிலாளர்களின் அடிப்படை பாதுகாப்புகளை இல்லாதொழிப்பதற்கும் முதலாளித்துவ செல்வந்த தன்னலக்குழுவிற்குள் செல்வத்தைப் பாய்ச்சுவதற்கும் ஆளும் வர்க்கத்தின் ஒரு பெரும் தாக்குதலுக்கு மத்தியில் ஆடம்ஸின் மரணம் நிகழ்ந்துள்ளது. ட்ரம்ப் நிர்வாகம், தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிர்வாகத்தை (OSHA) அகற்றி, பில்லியனர் எலோன் மஸ்க்கிடம் அதன் மேற்பார்வையை ஒப்படைத்துள்ள அதேவேளையில், மருத்துவக் கவனிப்பு, சமூகப் பாதுகாப்பு மற்றும் கல்வி ஆகியவற்றை “வரலாற்றிலேயே மிகப் பெரிய நெறிமுறை தளர்வு பிரச்சாரம்” என்ற பதாகையின் கீழ் வெட்டி, பெரும் செல்வந்தர்களுக்கு 4.5 ட்ரில்லியன் டாலர் வரி விலக்குகளுக்கு நிதியாதாரம் வழங்க 880 பில்லியன் டாலர் சமூக வெட்டுக்களுக்கு அழுத்தமளித்துள்ளது.

இந்த தாக்குதல் பல தசாப்த கால இருகட்சி வர்க்க யுத்தத்தின் உச்சக்கட்டமாகும். ஜனநாயகக் கட்சியினர் மற்றும் குடியரசுக் கட்சியினர் இருவருமே செல்வவளத்தை அடிமட்டத்தில் இருந்து மேல்மட்டத்திற்கு வரலாற்றுரீதியில் கைமாற்றுவதற்கு தலைமை தாங்கியுள்ளனர். 1975 க்குப் பின்னர் இருந்து, 79 ட்ரில்லியன் டாலர்கள் அடிமட்ட 90 சதவீதத்தினரிடம் இருந்து உயர்மட்ட 1 சதவீதத்தினருக்கு உறிஞ்சப்பட்டுள்ளது, அவர்கள் இப்போது மிக வறிய 20 சதவீதத்தினரை விட 139 மடங்கு அதிகமாக சம்பாதிக்கின்றனர். கடந்த ஆண்டு தான், 19 பணக்கார குடும்பங்கள் அவர்களின் செல்வத்தை 1 ட்ரில்லியன் டாலருக்கும் அதிகமாக அதிகரித்தன.

ரொனால்ட் ஆடம்ஸின் மரணம் குறித்த உண்மையை தொழிலாள வர்க்கம் மட்டுமே வெளிக்கொணர முடியும். சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணி (IWA-RFC) தொடங்கிய இந்த முன்முயற்சி, தொழிலாளர்கள் அன்றாடம் முகங்கொடுக்கும் சுரண்டல் மற்றும் அபாய நிலைமைகளுக்கு ஒரு இன்றியமையாத மற்றும் அவசியமான விடையிறுப்பாகும். IWA-RFC விளக்குவது போல்:

இன்னொரு மூடிமறைப்பு இருக்கக் கூடாது. உண்மையை வெளிக்கொணரவும், முறையான பாதுகாப்பு மீறல்களை அம்பலப்படுத்தவும் மற்றும் எதிர்கால உயிரிழப்புகளைத் தடுக்கவும் ஸ்டெல்லாண்டிஸ், ஐக்கிய வாகனத்துறை தொழிலாளர் சங்க (UAW) எந்திரம் மற்றும் அரசு அதிகாரிகளிடம் இருந்து சுயாதீனமான ஒரு விசாரணை இன்றியமையாததாகும். அது Dundee தொழிலாளர்கள், இதர ஆலைகளில் உள்ள வாகனத்துறை தொழிலாளர்கள், பாதுகாப்பு வல்லுனர்கள் மற்றும் தகுந்த அறிவுடைய ஏனையவர்களிடம் இருந்து சாட்சியங்களை சேகரிக்க வேண்டும். இதுபோன்றவொரு தொழிலாளர்களின் விசாரணை, தொழிற்சாலைகளில் பாதுகாப்பு மற்றும் உற்பத்தி நிலைமைகள் மீது சாமானிய தொழிலாளர்களின் உண்மையான மேற்பார்வைக்கான அடித்தளத்தை அமைப்பதற்கு மிக முக்கியமானதாகும்.

இந்த விசாரணை ஒரு பரந்த போராட்டத்தின் ஈட்டிமுனையாக இருக்க வேண்டும். பெருநிறுவனங்கள், அரசு மற்றும் அவற்றைப் பாதுகாக்கும் தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கம் ஒரு நனவுபூர்வமான, ஒழுங்கமைக்கப்பட்ட சக்தியாக தலையீடு செய்ய வேண்டும்.

உலக சோசலிச வலைத் தளமும் சோசலிச சமத்துவக் கட்சியும், வாகனத்துறை தொழிலாளர்களையும் வட அமெரிக்கா மற்றும் சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கத்தின் அனைத்து பிரிவுகளையும் IWA-RFC இன் விசாரணையை ஆதரிக்குமாறும், வாகனத் தொழில்துறையை தொழிலாளர்களின் ஜனநாயக கட்டுப்பாட்டின் கீழ் ஒரு பொது நிறுவனமாக மாற்றுவதற்கான போராட்டத்தில் இணையுமாறும் வலியுறுத்துகின்றன.

ஆடம்ஸின் மரணத்தைச் சுற்றியுள்ள சூழ்நிலைகள் பற்றிய தகவல்களைக் கொண்ட தொழிலாளர்கள் அல்லது விசாரணைக்கு தன்னார்வமாக முன்வர விரும்பும் தொழிலாளர்கள் கீழே உள்ள படிவத்தை நிரப்ப வேண்டும். உண்மையை அம்பலப்படுத்துவதற்கும், உயிர்களைப் பாதுகாப்பதற்கும், தொழிலாளர்களின் அதிகாரத்தின் அடித்தளமாக சாமானிய தொழிலாளர் குழுக்களைக் கட்டியெழுப்புவதற்குமான போராட்டத்தை ஆதரியுங்கள்.

Loading