மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
1830 புரட்சியின் தோல்வியைத் தொடர்ந்து ஜூலை முடியாட்சியின் கீழ் பிரெஞ்சு நிதியியல் பிரபுத்துவம் எவ்வாறு செல்வத்தைக் குவித்தது என்பதை விவரித்து, கார்ல் மார்க்ஸ் பிரான்சில் வர்க்கப் போராட்டங்கள் என்ற நூலில், “முதலாளித்துவ சமூகத்தின் உச்சத்தில்... பணமும், இரத்தமும், அழுக்கும் கலந்துள்ளது” என்று எழுதினார். கடந்த செவ்வாயன்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்காவின் நிதிய தன்னலக்குழுவின் முன்னணி தலைவர்களுடன் சவுதி கொடுங்கோலன் மற்றும் கசாப்புக் கடைக்காரரான பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் தர்பாரில் அணிவகுத்து நின்ற ஆபாசமான காட்சியைக் கருத்தில் கொள்ளும்போது, மார்க்ஸின் விளக்கம் நினைவுக்கு வருகிறது.
முகமது பின் சல்மான், 2024 ஆம் ஆண்டில் பதிவான 338 மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களின் தலைகளை வெட்டுவதற்கு இன்னும் வாளைப் பயன்படுத்தும் ஒரு அரை நிலப்பிரபுத்துவ மதவாத விவகாரங்களுக்கு தலைமை தாங்குகிறார். அரசியல் நடவடிக்கைகளுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு எதிராக நாட்டின் அதிகாரிகள் பரவலான துஷ்பிரயோகங்களில் ஈடுபட்டுள்ளனர். இதில் குற்றச்சாட்டு அல்லது விசாரணை இல்லாமல் நீண்ட காலம் தடுப்புக்காவலில் வைத்திருப்பது, சித்திரவதை மூலம் பெறப்பட்ட ஆதாரங்களைப் பயன்படுத்துதல், சட்ட உதவி மறுக்கப்படுதல் மற்றும் உரிய நடைமுறை மற்றும் நியாயமான விசாரணைக்கான உரிமைகளை மீறுதல் ஆகியவை அடங்கும்.
இஸ்தான்புல்லில் உள்ள சவூதி அரேபியாவின் துணைத் தூதரகத்தில் 2018 ஆம் ஆண்டில் அதிருப்தி சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகியை கொலை செய்ய உத்தரவிட்டதற்காக சல்மான் என்றென்றும் இழிபுகழ் பெற்றவராக இருப்பார். சல்மானின் உத்தரவின் பேரில், குண்டர்கள் முன்னாள் வாஷிங்டன் போஸ்ட் கட்டுரையாளரின் உடலை ஒரு ரம்பத்தால் வெட்டிக் கொன்று, கொடூரமான அரசு கொலையின் அனைத்து தடயங்களையும் அகற்றினர்.
உலகின் மிகப் பெரிய செல்வந்தரான எலோன் மஸ்க், OpenAI இன் தலைமை நிர்வாக அதிகாரியான சாம் ஆல்ட்மன் மற்றும் மேம்பட்ட சிப் தயாரிப்பாளரான என்விடியாவின் தலைமை நிர்வாக அதிகாரி ஜென்சென் ஹுவாங் போன்ற ட்ரம்ப் மற்றும் அவரது நிர்வாகத்துடன் இணைந்த பில்லியனர்கள், தங்களுக்கும் தங்கள் வணிக நடவடிக்கைகளுக்கும் பணம் சம்பாதிப்பதற்காக முதன்மையாக இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். நியூ யோர்க் டைம்ஸ் குறிப்பிட்டதைப் போல, “சந்தை மதிப்பின் அடிப்படையில் 10 மிகப்பெரிய அமெரிக்க நிறுவனங்களின் நான்கு பிரதிநிதிகள் உள்ளடங்கலாக” தொழில்நுட்ப நிறுவனங்கள், வங்கிகள், நுகர்வோர் குழுக்கள் மற்றும் பிற தொழில்களின் நிர்வாகிகள் பங்கேற்பாளர்களில் அடங்குவர்,
அடுத்த நான்கு ஆண்டுகளில் அமெரிக்காவில் 600 பில்லியன் டாலர்களை முதலீடு செய்வதாக சவுதி அளித்த வாக்குறுதியை புகழ்ந்த ட்ரம்ப், ரியாத்திற்கு 142 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள இராணுவ உபகரணங்களை விற்பனை செய்வதாக குறிப்பிட்டார். ரியாத்தின் கடினமான வரவு-செலவு திட்ட சூழ்நிலை காரணமாக, தொடர்ந்து குறைந்துவரும் எண்ணெய் விலைகள் காரணமாக, பல பொருளாதார வல்லுநர்கள், இந்த எண்ணிக்கையை மிகவும் சந்தேகத்திற்குரியதாகக் கருதுகின்றனர். தனது சர்வாதிகார ஆட்சிக்கு எதிரான மக்கள் எதிர்ப்பை ஒடுக்கவும், தனது பிராந்திய போட்டியாளர்களுக்கு எதிராகப் போரை நடத்தவும், சல்மான் சந்தேகத்திற்கு இடமின்றி வாஷிங்டன் வழங்கிய போர் விமானங்கள், ஏவுகணைகள் மற்றும் பிற தாக்குதல் ஆயுதங்களை நிலைநிறுத்துவார்.
வணிக பரிவர்த்தனைகளுக்கு அப்பால், ட்ரம்பும் ஏனைய அமெரிக்க தன்னலக்குழுக்களும், சவூதி விருந்தோம்பல்களில் அன்பான உற்சாகத்தைக் கண்டனர் என்பதில் சிறிதும் சந்தேகம் இருக்க முடியாது. அராஜகம் மற்றும் மிருகத்தனத்தில் சல்மானுக்கு போட்டியாக அமெரிக்காவில் ஒரு சர்வாதிகாரத்தை நிறுவ அவர்கள் விரும்புகிறார்கள் என்பதை, வெள்ளை மாளிகைக்கு திரும்பியதிலிருந்து ட்ரம்ப்பின் நடவடிக்கைகள் எடுத்துக் காட்டுகின்றன.
ட்ரம்ப் அமெரிக்க அரசியலமைப்பை ரத்து செய்வது, கிட்டத்தட்ட ஆணை மூலம் மட்டுமே தீர்ப்பளிப்பது, குடியேறியவர்களை வதை முகாம்களுக்கு நாடு கடத்துவது, காஸா இனப்படுகொலையை எதிர்த்துப் போராடும் மாணவர்களைக் கைது செய்ய உத்தரவிடுவது குறித்தும் பரிசீலித்து வருகிறார்.
இஸ்ரேலின் பிரதம மந்திரி பென்ஜமின் நெதன்யாகு கூறியதைப் போல, காஸாவில் பாலஸ்தீனியர்கள் மீதான இனப்படுகொலையில் இஸ்ரேல் தனது “இறுதி நகர்வுகளை” மேற்கொள்ள ட்ரம்ப் ஊக்குவித்துள்ளார். மேலும் 2015 இல் தொடங்கி ஆறு ஆண்டுகள் சவூதி விமானத் தாக்குதல்களின் போது சீரழிக்கப்பட்ட வறிய நாடான யேமன் மீதான தொடர்ச்சியான குண்டுவீச்சுத் தாக்குதலுக்கு 1 பில்லியனுக்கும் அதிகமான டாலர்களை அவர் செலவிட்டுள்ளார்.
நவீன-கால அமெரிக்க நிதியியல் பிரபுத்துவம் ஒரு சர்வாதிகாரத்தை, தன்னலக்குழுக்களால் ஆதரிக்கப்படும் ஒரு அரசாங்கத்தை விரும்புகிறது. ஆகவே, அது தொழிலாள வர்க்கத்தின் மீதான சுரண்டலை அதிகரிப்பதன் மூலமாகவும், பொருளாதார அழுத்தம் மற்றும் ஏகாதிபத்திய போர் மூலமாகவும், இதர நாடுகளின் ஆதார வளங்களைக் கைப்பற்றுவதன் மூலமாகவும் சமூகத்தின் செல்வ வளத்தைக் கொள்ளையடிக்கிறது.
இந்த அபிவிருத்தி அமெரிக்காவில் அதன் கூர்மையான வெளிப்பாட்டை எடுக்கும் அதேவேளையில், பயங்கரமான சமூக சமத்துவமின்மையை ஏற்படுத்திவரும் உலக முதலாளித்துவத்தின் தீர்க்க முடியாத நெருக்கடிக்கு, அனைத்து ஏகாதிபத்திய மையங்களிலும் ஆளும் வர்க்கத்தின் அத்தியாவசியமான பிரதிபலிப்பாக இது உள்ளது. இது உலகை மீண்டும் பங்கிடுவதற்காக, பெரும் வல்லரசுகளை ஒருவருக்கு எதிராக ஒருவரை நிறுத்துகிறது.
ஒரு பாசிச சர்வாதிகாரத்தை ஸ்தாபிப்பதற்கான ட்ரம்ப்பின் முயற்சிக்கு தன்னலக்குழுக்களில் நிலவும் பரந்த ஆதரவுக்கான விளக்கத்தின் ஒரு குறிப்பிடத்தக்க பகுதி, பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான பரந்த இடைவெளியாகும். மூன்று பணக்கார அமெரிக்கர்கள் இப்போது பாதி ஏழை மக்களை விட அதிக செல்வத்தை வைத்திருக்கிறார்கள்.
தன்னலக்குழுவின் அனைத்து மோசமான பண்புகளும் - அதன் லாப வேட்கை, சுய விளம்பரம், பொய் மற்றும் ஏமாற்றுதல், அனைத்து சட்டக் கட்டுப்பாடுகளையும் புறக்கணித்தல், மற்றும் மதிப்பிட முடியாத தனிப்பட்ட ஊழல் - ட்ரம்பில் குவிந்துள்ளன. மத்திய கிழக்கிற்கான அமெரிக்க ஜனாதிபதியின் நான்கு நாள் விஜயமானது, நிதியியல் ஊகவணிகம் மற்றும் அப்பட்டமான மோசடி மூலமாக ட்ரம்பும் அவர் குடும்பமும் தங்களை செழிப்பாக்கிக் கொள்வதற்கு பெருமளவில் வாய்ப்புகளைக் கொண்டிருப்பதாக பிரதான முதலாளித்துவ வெளியீடுகள் கூட ஒப்புக்கொள்கின்றன. கோல்ஃப் மைதானங்கள், ஹோட்டல்கள், பிற சொத்து மேம்பாடுகள் மற்றும் டிஜிட்டல் நாணயம் ஆகியவற்றில் முதலீடுகள் என்பன, தற்போது சவுதி அரேபியாவிலிருந்து கத்தாருக்கும், இன்று ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு ட்ரம்ப் செல்லும்போது விவாதத்திற்குரிய தலைப்புகளாக இருக்கும்.
எல்லாவற்றிற்கும் மேலாக, கத்தாரின் அரச குடும்பத்திடமிருந்து 450 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஆடம்பர போயிங் 747-8 ஜெட் விமானத்தின் “பரிசை” ட்ரம்ப் பெற்றுக் கொள்வார். இது ட்ரம்ப் ஜனாதிபதியாக இருக்கும் காலத்திற்கு ஏர் ஃபோர்ஸ் ஒன் ஆக மாற்றப்படும். அவர் பதவியில் இருந்து விலகியதும், விமானம் அவரது ஜனாதிபதி நூலகத்திற்கு நன்கொடையாக வழங்கப்படும்.
இதுபற்றி சி.என்.என் குறிப்பிடவேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டது:
டொனால்ட் ட்ரம்ப் இந்த வாரம் சவுதி அரேபியா, கத்தார் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு அமெரிக்க ஜனாதிபதியாக மட்டுமல்ல, மாறாக உலகின் அந்த பகுதியில் வணிக சாம்ராஜ்யம் தொடர்ந்து விரிவடைந்து வரும் ஒரு குடும்பத்தின் பிதாமகராகவும் பயணம் செய்கிறார்.
சல்மானின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள சவுதி அரேபியாவின் இறையாண்மை செல்வ நிதியம், ட்ரம்பின் மருமகன் ஜெராட் குஷ்னரால் தொடங்கப்பட்ட ஒரு தனியார் பங்கு நிறுவனத்தில் 2 பில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ளது. தனது முதல் பதவிக்காலத்தில் ட்ரம்பின் ஆலோசகராக பணியாற்றிய அவர், இன்று அவருக்கு முறைசாரா முறையில் ஆலோசனை வழங்குகிறார். கத்தாரில், ட்ரம்ப்பின் முத்திரை குத்தப்பட்ட கோல்ஃப் மைதானத்தை அமைக்கும் ஒரு திட்டத்திற்கு, கத்தாரின் இறையாண்மை செல்வ நிதியம் நிதியளிக்கிறது.
அண்டை நாடான ஓமனில், அரசாங்கத்திற்கு சொந்தமான சுற்றுலா நிறுவனம் கடந்த ஆண்டு ட்ரம்ப் அமைப்புடன் கூட்டுச் சேர்ந்து, கோல்ஃப் மைதானம் மற்றும் ஆடம்பர மாளிகைகளுடன் கூடிய விடுமுறை உல்லாச விடுதிகளை உருவாக்கியது. ட்ரம்பின் மகன்களான எரிக் மற்றும் டொனால்ட் ஜூனியர், இந்த ஒப்பந்தத்தைக் கொண்டாட கடந்த கோடையில் ஓமானின் பட்டத்து இளவரசருடன் உணவருந்தினர்.
சுல்தான்களின் ஆட்சி, தற்போது அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளில் ஒரு இடைத்தரகராக செயல்பட்டு வருகிறது. அதன் அணுசக்தி திட்டத்தை கைவிட்டு வாஷிங்டன் ஆதிக்கம் செலுத்தும் மத்திய கிழக்கை ஏற்றுக்கொள்ளுமாறு கட்டாயப்படுத்துவதற்காக, தெஹ்ரானில் உள்ள முதலாளித்துவ-மதகுரு ஆட்சியின் மீது ட்ரம்ப்பின் “அதிகபட்ச அழுத்தம்” மீண்டும் தொடங்குவதன் மூலம் இது வகைப்படுத்தப்பட்டுள்ளது.
ட்ரம்பும் மற்றும் அவரது பரிவாரங்களின் விஜயத்தின் போது, ஜனாதிபதியின் மாஃபியா போன்ற “அமைப்புக்கான” தனியார் வணிக ஒப்பந்தங்களை பேச்சுவார்த்தைகளுடன் இணைத்து, எண்ணெய் வளம் மிக்க மற்றும் புவிசார் மூலோபாய ரீதியாக முக்கியமான மத்திய கிழக்கில் அதன் சவாலுக்கிடமற்ற மேலாதிக்கத்தை பலப்படுத்த அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இடைவிடாத உந்துதலை முன்னேற்றுவார்கள். சுமார் 10,000 சிப்பாய்களைக் கொண்ட அப்பிராந்தியத்தில் மிகப்பெரிய அமெரிக்க இராணுவத் தளத்தைக் கொண்டுள்ள சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் கட்டார் ஆகியவை ஒரு “புதிய மத்திய கிழக்கை” ஸ்தாபிப்பதில் முக்கிய பிராந்திய கூட்டாளிகளாக வாஷிங்டனால் பார்க்கப்படுகின்றன. சியோனிச ஆட்சியால் பாலஸ்தீனியர்களை ஒழித்தல், தெஹ்ரானில் ஆட்சி மாற்றம் மற்றும் சீனாவின் வளர்ந்து வரும் பொருளாதார மற்றும் இராஜதந்திர செல்வாக்கை மாற்றுவது ஆகியவற்றின் அடிப்படையில் வாஷிங்டன் இதை அடிப்படையாகக் கொள்ள விரும்புகிறது.
“உற்பத்தியின் மூலமாக அல்ல, மாறாக ஏற்கனவே இருந்த மற்றவர்களின் செல்வத்தை பைக்குள் போட்டுக்கொண்டதன் மூலமாக” தன்னை வளப்படுத்திக் கொண்ட “நிதிய பிரபுத்துவத்தின் பல வருட வெட்கமற்ற களியாட்டங்களுக்குப்” பிறகு, 1848 ஆம் ஆண்டு, ஒரு புரட்சிகரமான ஆண்டாக, பிரெஞ்சு மக்களின் கூக்குரல், “பெரிய திருடர்கள் ஒழிக! பெரிய கொலையாளிகள் ஒழிக!” என்பதாக இருந்தது என்று மார்க்ஸ் குறிப்பிட்டார்.
2025 இல், ட்ரம்ப் நிர்வாகத்திற்கும் அதை ஆதரிக்கும் நிதியியல் தன்னலக்குழுவுக்கும் எதிராக மிகப் பெரியளவில் ஒரு புரட்சிகர இயக்கம் கொதித்துக் கொண்டிருக்கிறது.
பொருளாதார சூறையாடல் மற்றும் ஏகாதிபத்தியப் போர் மூலம் சந்தைகள், மூலப்பொருட்கள் மற்றும் உழைப்பைக் கைப்பற்றுவதற்கான அதன் பைத்தியக்காரத்தனமான உந்துதலில் இருந்து பிரிக்க முடியாததாக இருக்கும் ஆளும் உயரடுக்கின் குற்றகரமான சுய-செல்வக் கொழிப்பு, அமெரிக்க மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஒரு பாரிய இயக்கம் வெடிப்பதற்கான நிலைமைகளை உருவாக்குகிறது. தன்னலக்குழுக்களின் சொத்துக்களை பறிமுதல் செய்வதும், ஏகாதிபத்திய போருக்கு முற்றுப்புள்ளி வைப்பதும், சோசலிசத்திற்கான போராட்டத்தின் மூலமாக சமூகத்தின் பரந்த நிதி மற்றும் சடரீதியான ஆதாரவளங்களை மறுபகிர்வு செய்வதுமே அதன் பிரதான பணிகளாக இருக்கும்.