மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
கடந்த பிப்ரவரியில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், “அமெரிக்கா காஸா பகுதியை கையகப்படுத்தும்” என்றும், எஞ்சியுள்ள கட்டிடங்களை தரைமட்டமாக்கி “சமப்படுத்தும்” என்றும், பாலஸ்தீன மக்களை “இதர நாடுகளுக்கு” மாற்றும் என்றும் அறிவித்தார். அந்த நேரத்தில், அமெரிக்க மற்றும் சர்வதேச ஊடகங்கள் இரண்டுமே ட்ரம்பின் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான எந்த சாத்தியக்கூறும் இல்லாத ஒரு “விசித்திரமான” திட்டம் என்று நிராகரித்தன.
இஸ்ரேலிய அரசாங்கம் ட்ரம்பின் திட்டத்தை மரணகரமான தீவிரத்துடன் அணுகியுள்ளது. இன ரீதியாக சுத்திகரிக்கப்பட்ட காஸாவுக்கான ட்ரம்பின் “தைரியமான தொலைநோக்குப்” பார்வையை பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பாராட்டினார். கடந்த மாதம் வாஷிங்டனில் நடந்த சந்திப்பின் போது ட்ரம்ப், “நாங்கள் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறோம் “ என்று கூறினார்.
கடந்த திங்களன்று, நெதன்யாகு அரசாங்கம் காஸாவில் இனச்சுத்திகரிப்பின் இறுதிக் கட்டத்தின் தொடக்கத்தை நடைமுறையளவில் அறிவித்தது. பாலைவனத்தின் ஊடாக பலவந்தமாக மக்களை கொண்டு செல்வதற்கு அல்லது கடல் வழியாக நாடுகடத்தப்படுவதற்கு ஒரு முன்னோடியாக, ஒட்டுமொத்த காஸா பகுதியையும் முழுமையாக இராணுவ ஆக்கிரமிப்பு செய்வதும், ஆயுதமேந்திய காவலின் கீழ் சித்திரவதை முகாம்களில் மக்களை பாரியளவில் அடைத்து வைப்பதும் இந்த திட்டத்தில் உள்ளடங்கி உள்ளது.
இந்த சித்திரவதை முகாம்களில் தனியார் அமெரிக்க பாதுகாப்பு ஒப்பந்ததாரர்கள் பணியமர்த்தப்படுவார்கள். இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் பட்டினி உணவு விநியோகத்தை மேற்பார்வையிடும். இந்த வாரம் ராய்ட்டர்ஸ் வெளியிட்ட ஒரு செய்தியின்படி, அமெரிக்காவும் இஸ்ரேலும் காஸாவை நிர்வகிக்க ஒரு அமெரிக்க அதிகாரியின் தலைமையில் ஒரு “இடைக்கால அரசாங்கத்தை” அமைப்பது குறித்து தீவிரமாக விவாதித்து வருகின்றன.
ஐரோப்பாவிலிருந்த யூதர்கள் மீது இனப்படுகொலைகளை மேற்கொள்வதற்காக நாஜிக்கள் பாவித்த வார்த்தையான “இறுதித் தீர்வை” எதிரொலித்து நெதன்யாகு “இறுதி நகர்வுகளைத் தொடங்குவதற்கான நேரம் இது” என்று அறிவித்தார். அடுத்த நாள், நிதி மந்திரி பெசலெல் ஸ்மோட்ரிச் இஸ்ரேலிய அரசாங்கத்தின் திட்டத்தின் பொருளை பின்வருமாறு விளக்கினார்:
ஒரு வருடத்திற்குள், ... காஸா முற்றிலுமாக அழிக்கப்படும், பொதுமக்கள் தெற்கே ஒரு மனிதாபிமான வலயத்திற்கு அனுப்பப்படுவார்கள் ... அங்கிருந்து அவர்கள் மூன்றாம் நாடுகளுக்கு அதிக எண்ணிக்கையில் செல்லத் தொடங்குவார்கள்.
பாலஸ்தீனிய மக்களை பலவந்தமாக இடம்பெயரச் செய்வதற்கான இயங்குமுறை பாரிய பட்டினி போடுவதாக இருக்கும். தேசிய பாதுகாப்பு மந்திரி இட்டாமர் பென்-க்விர் தெளிவுபடுத்தியதைப் போல, “இஸ்ரேலிய இராணுவத்தாலோ அல்லது சிவில் சமூகத்தாலோ மின்சாரம் அல்லது பிற உதவிகள் அனுமதிக்கப்படமாட்டாது”.
மார்ச் 2 அன்று, காஸா பகுதிக்குள் நுழையும் அனைத்து உணவு, தண்ணீர் மற்றும் மின்சாரத்திற்கும் இஸ்ரேல் முற்றிலுமாக தடை விதித்தது. இதன் விளைவாக, காஸாவின் சமூக சமையலறைகளில் பெரும்பாலானவை பொருட்கள் பற்றாக்குறையால் மூடப்படும் கட்டாயத்திற்கு உட்பட்டுள்ளன. மேலும் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக நோயாளிகள் 80 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரித்துள்ளனர். முற்றிலுமாக மனிதனால் உருவாக்கப்பட்ட பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட மெலிந்த, பட்டினியால் வாடும் குழந்தைகளின் கொடூரமான படங்கள் பரவி வருகின்றன.
யூரோ-மெட் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் சட்டத் துறையின் இயக்குநர் லாமா பஸ்தமி பின்வருமாறு விளக்கினார்:
காஸாவில் பட்டினிபோட்டு வதைக்கும் குற்றம் பட்டப்பகலில் முழுமையாக அரங்கேறி வருகிறது; அதை நிரூபிக்க விசாரணைக் குழுக்களோ அல்லது நீதிமன்றத் தீர்ப்புகளோ தேவையில்லை. இஸ்ரேல் இரண்டு மாதங்களுக்கும் மேலாக பேரழிவிற்குள்ளான பகுதிக்குள் நுழையும் அனைத்து வழிகளையும் மூடி, உணவு, மருந்து மற்றும் பொருட்கள் நுழைவதை முற்றிலுமாக தடை செய்துள்ளது என்பதை கவனத்தில் கொள்வது போதுமானது - இது பொறுப்புக்கூறல் குறித்த அச்சமின்றி இஸ்ரேலிய அதிகாரிகளால் வெளிப்படையாக ஒப்புக் கொள்ளப்பட்ட நன்கு நிறுவப்பட்ட யதார்த்தமாகும். மக்கள் மற்றும் குழந்தைகளின் மெலிந்த உடல்கள், தொண்டு நிறுவனங்களின் சமையலறைகளில் அன்றாடம் பல்லாயிரக்கணக்கானவர்கள் வரிசையில் நிற்பது, மற்றும் பசி, ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் அதனுடன் தொடர்புடைய நோய்களால் அதிகரித்து வரும் இறப்பு எண்ணிக்கை என காஸா குற்றத்தின் கொடூரத்தின் மறுக்கவியலாத ஆதாரங்களால் நிரம்பியுள்ளது.
இரண்டு மில்லியன் மக்களை திட்டமிட்டு பட்டினி போடுவது, ட்ரம்ப் நிர்வாகத்தின் முழு ஆதரவுடன் மட்டுமல்ல, மாறாக ஜனநாயகக் கட்சியின் முழு ஆதரவுடனும் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஏப்ரலில், செனட் சபையிலுள்ள ஜனநாயகக் கட்சியினர் இஸ்ரேலுக்கு அமெரிக்க ஆயுதங்கள் அனுப்புவதற்கான எந்தத் தடைகளையும் விதிப்பதற்கு எதிராக பெருமளவில் வாக்களித்தனர்.
நெதன்யாகு அரசாங்கத்தை விமர்சிப்பவராக அடிக்கடி சித்தரிக்கப்படும் பேர்ணி சாண்டர்ஸ், “இஸ்ரேலுக்கு தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ள உரிமை உண்டு” என்று மீண்டும் மீண்டும் அறிவித்துள்ளார். கடந்த பிப்ரவரி, காஸாவில் ஒரு இனப்படுகொலை நடப்பதை மறுத்த அவர், “என்ன இனப்படுகொலை? அந்த வார்த்தையைப் பற்றி நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்” என்று அலட்சியமாக பதிலளித்தார்.
இந்த வாரம் ஐரோப்பாவில் இரண்டாம் உலகப் போர் முடிவடைந்ததன் 80வது ஆண்டு நிறைவையும், நாஜி ஜேர்மனி சரணடைந்ததையும் குறிக்கிறது. செம்படை கிழக்கு ஐரோப்பாவின் சித்திரவதை முகாம்களை விடுவித்து முன்னேறிய நிலையில், ஆறு மில்லியன் ஐரோப்பிய யூதர்களை படுகொலை செய்த —இரகசியமாக நடத்தப்பட்ட— ஒரு பாரிய நிர்மூலமாக்கும் நடவடிக்கையின் பெரும் ஆதாரங்களை அது வெளிப்படுத்தியது.
நூரெம்பேர்க் தீர்ப்பாயத்தில் நாஜி தலைவர்கள் மீதான வழக்கு விசாரணையைத் தொடங்கி வைத்து, நீதிபதி ரோபர்ட் ஜாக்சன் அறிவிக்கையில், மூன்றாம் குடியரசின் நாஜிக்கள் மேற்கொண்ட குற்றங்கள் “மிகவும் திட்டமிடப்பட்டவை, மிகவும் கொடூரமானவை, மிகவும் பேரழிவுகரமானவை, அவை புறக்கணிக்கப்படுவதை நாகரிக சமூகத்தால் பொறுத்துக்கொள்ள முடியாது, ஏனென்றால் அவை மீண்டும் மீண்டும் நிகழ்வதை அனுமதிக்க முடியாது” என்றார்.
மறுக்க முடியாத உண்மை என்னவென்றால், இதேபோன்ற குற்றங்கள் மீண்டும் மீண்டும் செய்யப்படுகின்றன - இந்த முறை உலகின் முழுப் பார்வையில். தங்கள் அட்டூழியங்களின் அளவை மறைக்க முயன்ற நாஜிக்களைப் போலல்லாமல், இஸ்ரேல் உலகத்தின் கண்களின் முன்னால் வெளிப்படையாக செயல்படுகிறது. ஆயினும்கூட, “சர்வதேச சட்டம்” என்று அழைக்கப்படும் நிறுவனங்கள் - ஐக்கிய நாடுகள் பொதுச் சபை, சர்வதேச நீதிமன்றம், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் - வாக்கெடுப்புக்கு வாக்கெடுப்பை, தீர்ப்புக்கு மேல் தீர்ப்பை வழங்கிய போதிலும், அதனால் இனப்படுகொலையை தடுத்து நிறுத்த முடியவில்லை.
சமீபத்திய தசாப்தங்களில், ஏகாதிபத்திய சக்திகள் யூகோஸ்லாவியா மீதான குண்டுவீச்சில் இருந்து உக்ரேன் போரில் ரஷ்யாவைக் கண்டனம் செய்வது வரையில், உலகெங்கிலும் இராணுவத் தலையீடுகளை நியாயப்படுத்த போர்க் குற்றங்கள் குறித்த குற்றச்சாட்டுக்களை கையிலெடுத்துள்ளன. எவ்வாறிருப்பினும், இன்று அமெரிக்கா பகிரங்கமாக ஒரு இனப்படுகொலை மற்றும் இனச்சுத்திகரிப்பு தாக்குதலை, அது மற்றவர்கள் மீது சுமத்தும் குற்றச்சாட்டை விஞ்சும் அளவிற்கு ஊக்குவித்து வருகிறது. அது முற்றிலும் தண்டனையிலிருந்து விலக்கீட்டுரிமையுடன் ஒரு அப்பட்டமான குற்றவியல் கொள்கையைப் பின்பற்றி வருகிறது.
இனச் சுத்திகரிப்பு மற்றும் பாரிய பட்டினியை அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் பகிரங்கமாக தழுவியிருப்பது, காஸா இனப்படுகொலைக்கு எதிரான போராட்டங்கள் “யூத-எதிர்ப்புவாதத்தால்” உந்தப்படுகின்றன என்ற கூற்றை அம்பலப்படுத்தியுள்ளது. இந்த அரக்கத்தனமான பொய் போராட்டக்காரர்களை குற்றவாளிகளாக சித்தரிக்க பயன்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் போலீசாரால் தாக்கப்பட்டு பெருமளவில் கைது செய்யப்பட்டுள்ளனர். மாணவர் விசா வைத்திருப்பவர்கள், அவர்களது குடியிருப்புக்களில் இருந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர் மற்றும் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
காஸா இனப்படுகொலை ஒன்றரை ஆண்டுகளாக நடந்து வருகிறது. அந்த நேரத்தில், மில்லியன் கணக்கான மக்கள் நெதன்யாகு அரசாங்கம் மற்றும் அதன் ஏகாதிபத்திய ஆதரவாளர்களின் குற்றவியல் நடவடிக்கைகளை எதிர்த்து போராடியுள்ளனர். இந்தப் போராட்டங்கள், அதன் பங்கேற்பாளர்களின் இதயப்பூர்வமான விருப்பங்களையும் மீறி, கொள்கையை மாற்றுவதில் தோல்வியடைந்துள்ளன.
சில படிப்பினைகளைப் பெற வேண்டும். காஸா இனப்படுகொலை என்பது தவறான கொள்கைத் தேர்வுகளால் ஏற்பட்ட தற்செயலான நிகழ்வு அல்ல. ஏகாதிபத்தியப் போரின் உலகளாவிய வெடிப்பின் ஒரு பகுதியாக, ஏகாதிபத்திய சக்திகள் வேண்டுமென்றே பட்டினி, இனச் சுத்திகரிப்பு மற்றும் பாரிய படுகொலைகள் ஆகியவற்றை வெளிப்படையாக அரவணைப்பதை இது குறிக்கிறது.
சீனாவிற்கு எதிரான அமெரிக்க போர் தயாரிப்புகளின் ஒரு மத்திய கூறுபாடாக, ஏகாதிபத்திய மேலாதிக்கத்தின் கீழ், முன்னாள் வெளியுறவுத்துறை செயலர் கொண்டலீசா ரைஸிடம் இருந்து நெதன்யாகு கடன் வாங்கிய வார்த்தையைப் பயன்படுத்தினால், இது ஒரு “புதிய மத்திய கிழக்கு” உருவாக்கத்தின் ஒரு பகுதியாகும்.
காஸா இனப்படுகொலை வெளியுறவுக் கொள்கையில் மட்டுமல்ல, உள்நாட்டுக் கொள்கையிலும் ஒரு முன்னுதாரணத்தை அமைக்கிறது. ட்ரம்ப் நிர்வாகம், உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்களுடன் சேர்ந்து, பாரிய படுகொலைகள், தடுப்புக்காவல், சித்திரவதை மற்றும் கடிவாளமற்ற காட்டுமிராண்டித்தனம் ஆகியவற்றை மேற்கொண்டுவரும் நெதன்யாகு அரசாங்கத்தின் மூலோபாயத்தை, உள்நாட்டில் அவர்களின் சொந்த நடவடிக்கைகளுக்கான ஒரு முன்மாதிரியாக பார்க்கிறது.
புதிய மூலோபாயம் தேவை. சமீபத்திய மாதங்களில், தொழிலாள வர்க்கத்தின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான ட்ரம்ப் நிர்வாகத்தின் தாக்குதல்களுக்கு எதிரான பாரிய போராட்டங்களில் மில்லியன் கணக்கானவர்கள் பங்கெடுத்துள்ளனர். 100,000 க்கும் மேற்பட்ட கூட்டாட்சி அரசு தொழிலாளர்களை ஏராளமான பணிநீக்கம் செய்தல், சமூகப் பாதுகாப்பு மீதான தாக்குதல்கள், பொதுக் கல்வியை தகர்த்தல், நாடு முழுவதும் வேலைகள் மற்றும் வாழ்க்கைத் தரங்களை பேரழிவிற்கு உட்படுத்தும் அச்சுறுத்தலைக் கொண்ட ஒரு உலக வணிகப் போரைத் தூண்டுதல் ஆகியவற்றிற்கு அங்கே பிரமாண்டமான எதிர்ப்பு உள்ளது.
தொழிலாள வர்க்கத்தின் சமூக மற்றும் பொருளாதார உரிமைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டத்தை, ஏகாதிபத்திய போர் மற்றும் காட்டுமிராண்டித்தனத்திற்கு எதிரான போராட்டத்துடன் ஐக்கியப்படுத்த வேண்டும். காஸா இனப்படுகொலையை எதிர்க்கும் போராட்டத்தை, தொழிலாள வர்க்கத்தின் சமூக உரிமைகளைப் பாதுகாக்கும் போராட்டத்துடன் ஐக்கியப்படுத்தி, தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவது இதற்கு அவசியமாகும்.
உலக சோசலிச வலைத் தள எழுத்தாளர் ஜோன் ஷாவூல் இந்த ஆண்டு சர்வதேச மே தின பேரணியில் குறிப்பிட்டதைப் போல, “மில்லியன் கணக்கானவர்கள் பாலஸ்தனீயர்களைப் பாதுகாக்க ஆர்ப்பாட்டத்தில் அணிதிரண்டுள்ளனர். ஆனால், எந்தவொரு ஏகாதிபத்திய சக்திக்கோ அல்லது முதலாளித்துவ அரசாங்கத்திற்கோ தார்மீக முறையீடுகள் செய்வதன் மூலமாக வெற்றிபெற முடியாது. தொழிலாள வர்க்கத்தை நோக்கியும் வர்க்கப் போராட்ட வழிமுறைகள் மற்றும் அரசியலை நோக்கியும் அவர்கள் திரும்ப வேண்டும்.”
காஸா இனப்படுகொலையை நிறுத்துவதென்பது முதலாளித்துவத்திற்கு எதிராகவும், சோசலிசத்திற்காகவும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் அரசியல் தாக்குதலுடன் பிரிக்கவியலாதவாறு பிணைந்துள்ளது.