இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
இந்த உரையை மே 3 சனிக்கிழமை நடைபெற்ற சர்வதேச மே தினம் 2025 இணையவழி பேரணியில் சோசலிச சமத்துவக் கட்சியின் (இலங்கை) பொதுச் செயலாளர் தீபால் ஜயசேகர, சோசலிச சமத்துவக் கட்சியின் (இலங்கை) மத்திய குழு உறுப்பினர் எம். தேவராஜா ஆகியோர் வழங்கினர்.
தோழர்களே, நண்பர்களே, ஏப்ரல் 22 அன்று இந்தியக் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரில் நடந்த ஒரு கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலுக்கு பாகிஸ்தானே காரணம் என்று இந்தியா குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து இந்தியாவும் பாகிஸ்தானும் விரைவாக போரை நோக்கி நகர்கின்ற நிலையில், தெற்காசியா புவிசார் அரசியல் பதட்டங்களின் சுழலுக்குள் இழுக்கப்படுகிறது.
1947 முதல் இரண்டு அணு ஆயுத நாடுகளும் ஏற்கனவே மூன்று போர்களை நடத்தியுள்ள போதிலும், இப்போது அவற்றின் கசப்பான போட்டியானது சீனாவுக்கு எதிரான அமெரிக்காவின் போர் தயாரிப்புகளுடன் ஆபத்தான முறையில் பின்னிப் பிணைந்துள்ளதுடன், ஒரு பரந்த மோதல் வெடிப்பதற்கான அச்சுறுத்தலைக் கொண்டுள்ளது. பாகிஸ்தான் பெய்ஜிங்குடன் இணைந்திருக்கும் அதே வேளை, இந்தியாவானது தெற்காசியாவில் வாஷிங்டனின் மூலோபாய பங்காளியாகும்.
முதலாளித்துவத்திற்கும் போர் அபாயத்திற்கும் முடிவுகட்டுவதற்காக, சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஒருங்கிணைந்த ஒரு போர் எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டியெழுப்புவதன் ஒரு பகுதியாக, தெற்காசியா முழுவதும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை அணிதிரட்டுவதற்கான முயற்சிகளை சோசலிச சமத்துவக் கட்சி இரட்டிப்பாக்குகிறது.
போர் உந்துதலைத் தூண்டிவிட்டு வரும் முதலாளித்துவத்தின் பூகோள நெருக்கடியும், முதலாளித்துவ ஆட்சியின் ஆழமடைந்து வரும் நெருக்கடியும் வர்க்கப் போராட்டத்தின் எழுச்சியும் இலங்கையில் கூர்மையான வடிவத்தை எடுக்கின்றன. 2022 இல், அரசாங்கம் கடன்களைத் திருப்பிச் செலுத்தத் தவறியமை, பேரழிவு தரும் சமூக நெருக்கடியைத் தூண்டியது. இதனால் மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் வீதிகளில் இறங்கிப் போரடினர். ஜனாதிபதி நாட்டை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டார். இந்த நிலையில், அரசியல் ஸ்தாபனத்தால் வெகுஜன ஆதரவு இல்லாத ரணில் விக்ரமசிங்க பதவியில் அமர்த்தப்பட்டதோடு அவர் கடுமையான சிக்கன நிபந்தனைகளுடன் சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெறுவதற்கு பேச்சுவார்த்தை நடத்தினார்.
கடந்த ஆண்டு, தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் எதிர்ப்பைக் கட்டுப்படுத்த விக்ரமசிங்கவால் முடியாது என்பது நிரூபிக்கப்பட்டதால், ஆளும் வர்க்கம், ஆழமாக மதிப்பிழந்த பாரம்பரியக் கட்சிகளை ஓரங்கட்டிவிட்டு, மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) மற்றும் அதன் தேர்தல் முன்னணியான தேசிய மக்கள் சக்தி பக்கம் திரும்பியது. ஒருபோதும் அதிகாரத்தில் இருக்காத ஜே.வி.பி., சர்வதேச நாணய நிதியத்தின் திட்ட நிரலை திணிப்பதற்கான அதன் உறுதிப்பாட்டை பெருவணிகங்களுக்கு சமிக்ஞை செய்து, தன்னை நாட்டின் மீட்பராக விளம்பரப்படுத்திக் கொண்டு, மக்களின் துன்பத்துக்கு முடிவுகட்டுவதாக உறுதியளித்ததன் மூலம் ஆட்சியைப் பிடித்தது.
அதன் வெற்றியை அரசியல் ஸ்தாபனம் உலகளவில் வரவேற்றது. சர்வதேச ஊடகங்கள் ஒரு 'இடதுசாரி' மற்றும் 'மார்க்சிய' கட்சி ஆட்சியைக் கைப்பற்றியதாக அறிவித்தன. ஜே.வி.பி. சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளைகளை ஈவிரக்கமின்றி திணிக்கும் என்றும், எந்தவொரு எதிர்ப்பையும் அடக்குவதற்கு பொலிஸ்-அரசு நடவடிக்கைகளை நாடத் தயங்காது என்றும் சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே எச்சரித்தது.
சிங்கள பேரினவாதத்தில் மூழ்கியிருந்த ஜே.வி.பி., நீண்ட காலத்துக்கு முன்பே அதன் சோசலிச வாய்வீச்சைக் கைவிட்டுவிட்டது. அதன் ஏகாதிபத்திய எதிர்ப்பு வாய்ச்சவடால்கள் அமெரிக்க தூதரகத்தில் நடந்த தனிப்பட்ட பேச்சுவார்த்தைகளால் பதிலீடு செய்யப்பட்டுள்ளன. 1980களின் பிற்பகுதியில் இந்திய-இலங்கை ஒப்பந்தத்திற்கு எதிரான அதன் வலதுசாரி, தேசபற்று பிரச்சாரத்தில் சேர மறுத்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் அரசியல் எதிரிகளை பாசிச முறையில் படுகொலை செய்த மிலேச்ச நடவடிக்கையை நாங்கள் நினைவுபடுத்தினோம்.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பதவியேற்றதும், ஜே.வி.பி./என்.பி.பி. கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் நிராகரித்தார். நிதியமைச்சராக, இந்த ஆண்டு அவரது வரவு செலவுத் திட்டமானது, அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை விரைவில் விற்பனை செய்தல், தொழிலாளர்கள் மீது அதிக வரிகளை சுமத்துதல். சுகாதாரம் மற்றும் கல்வக்கான செலவுகளை கடுமையாக வெட்டுதல் உட்பட சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கைகளை ஒன்றுவிடாமல் கடைபிடித்தது. தொழில்கள், ஊதியங்கள் மற்றும் வேலை நிலைமைகள் அனைத்தும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனர் ஜோர்ஜீவா, திசாநாயக்கவுக்கு, 'திரு. ஜனாதிபதி, சபாஷ்! என் இதயம் உங்களுடன் இருக்கிறது!' என்று செய்தி அனுப்பியதில் ஆச்சரியமில்லை.
தொழிலாளர் வர்க்கம் தங்கள் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் அழிக்கப்படுவதை அப்படியே ஏற்றுக்கொள்ளாது. பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் மற்றும் அரசு சுகாதார ஊழியர்கள் மத்தியில் ஏற்கனவே போராட்டங்கள் தலைதூக்கி வருகின்றன. அரசாங்கம் ஏற்கனவே பொலிஸ் வன்முறையை நாடுவதன் மூலம் பதிலளித்துள்ளது. டிரம்பின் வரி விதிப்புகள் மீண்டும் இலங்கை பொருளாதாரத்தை வீழ்ச்சிக்குள் தள்ள அச்சுறுத்துவதால், இந்த வர்க்கப் போராட்டம் நிச்சயமாக அதிகரிக்கும்.
இந்த தீவில் நடக்கும் நிகழ்வுகள் தெற்காசியா மற்றும் உலகளவில் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் விஷயங்களுக்கு ஒரு முன்னோடியாகும். ஆளும் வர்க்கங்கள் பாசிச மற்றும் சர்வாதிகார ஆட்சி வடிவங்களுடன் கூர்மையாக வலது நோக்கி நகர்ந்து வருகின்றன. சர்வதேச தொழிலாள வர்க்கம் அதன் நலன்களுக்காகப் போராட அதன் சொந்த சுயாதீன அமைப்புகளை உருவாக்க வேண்டும்.
2022 வெகுஜன எழுச்சியின் போது, தீவு முழுவதும் உள்ள வேலைத் தளங்கள், குடியிருப்பு பகுதிகள் மற்றும் கிராமப்புறங்களிலும் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் தொழிலாளர்களை ஒன்றிணைத்து, சுயாதீன நடவடிக்கைக் குழுக்களை அமைத்து, அதன் பிரதிநிதிகளை அடிப்படையாகக் கொண்ட, தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற வெகுஜனங்களது ஜனநாயகத்துக்கும் சோசலிசத்துக்குமான மாநாட்டிற்கு நாங்கள் அழைப்பு விடுத்தோம். முதலாளித்துவ வர்க்கத்திற்கு அதன் சொந்த அரசாங்கமும் அரசு எந்திரமும் உள்ளன. தொழிலாள வர்க்கமும் கிராமப்புற மக்களும் நமது சொந்த மூலோபாயத்தைப் பற்றி கலந்துரையாடுவதற்கு, திட்டமிடுவதற்கு மற்றும் செயல்படுத்துவதற்கும் நமது சொந்த அரசியல் மையத்தைக் கொண்டிருக்க வேண்டும்.
அத்தகைய மாநாட்டிற்கான சோசலிச சமத்துவக் கட்சியின் போராட்டம் இன்று மிகவும் அவசரமானதாகும். முதலாளித்துவ ஆட்சியைத் தூக்கியெறிந்து தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தை நிறுவுவதற்காக, ஒரு சக்திவாய்ந்த சோசலிச இயக்கத்தில் தொழிலாள வர்க்கத்தையும் கிராமப்புற ஏழைகளையும் இளைஞர்களையும் சுயாதீனமாக அணிதிரட்டுவதற்கு இது ஒரு வழிமுறையாகும். தெற்காசியாவிலும் சர்வதேச அளவிலும் சோசலிச குடியரசுகளின் ஒன்றியத்தின் ஒரு பகுதியாக ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசுக்காக நாங்கள் போராடுகிறோம்.
இலங்கை மற்றும் தெற்காசியாவில் உள்ள தொழிலாளர்கள், இளைஞர்கள், கிராமப்புற உழைப்பாளிகள் மற்றும் சோசலிச எண்ணம் கொண்ட அறிவுஜீவிகளை இந்த தீர்க்கமான அரசியல் போராட்டத்தில் எங்களுடன் இணையுமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.
ஏப்ரல் 20 அன்று 85 வயதில் காலமான மூத்த ட்ரொட்ஸ்கிசத் தலைவர் தோழர் நந்த விக்ரமசிங்கவுக்கு அஞ்சலி செலுத்துவதுடன் நாங்கள் முடிக்கிறோம். நமது சர்வதேச இயக்கம் முழுவதும் தோழர் விக்ஸ் என்று அறியப்பட்ட அவர், 1968 இல் சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடியான புரட்சிகர கம்யூனிஸ்ட் கழகத்தின் ஸ்தாபக உறுப்பினராக இருந்தார். அவரது வாழ்க்கை, தெற்காசியாவில் லியோன் ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சி கோட்பாட்டிற்கான கட்சியின் அனைத்து அரசியல் போராட்டங்களையும் உள்ளடக்கியதாகும். அது வரவிருக்கும் புரட்சிகர காலத்திற்கு அத்தியாவசியமான படிப்பினைகளை வழங்கும்.
நன்றி